eelam refugee camp

1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகள் அமைப்பின் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் அவர்கள் தடையை நீடிப்பதற்கு புலிகளமைப்பு இந்தியாவில் ஈடுபடும் குற்றச்செயல்களை உளவுத்துறை நீதிமன்றத்தில் சமர்பிக்கிறது. இப்படி இவர்கள் சமர்பிப்பதர்க்காகவே சிறப்பு முகாம்கள் எனும் சித்ரவதை கூடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

1993 ஆண்டு செங்கல்பட்டு சிறப்புமுகாமும், 2008 ஆம் ஆண்டு பூந்தமல்லி சிறப்புமுகாமும் தொடங்கப்பட்டது. ஏற்கனவே கிளை சிறைகளாக இருந்த இடங்களே பின் முகாமாக மாற்றப்பட்டது. 1993 ஆண்டு முதல் இலங்கைக்கு பொருட்கள் கடத்தினார்கள் என்று குற்றம்சாட்டப்படுபவர்களும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களில் கியூ பிரிவின் பார்வையில் சந்தேகத்துக்கு இடமானவர்களும் அங்கிரிந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 96 பேரும், பூந்தமல்லியில் 30 பெரும் அடைக்கப்பட்டிருந்தனர். இப்படி கைது செய்யப்படும் யாரும் இந்தியாவில் விடுதலை செய்யப்படுவதில்லை.வழக்கு நடத்த வசதியுள்ளவர்கள் வழக்கு முடிவுற்ற பின் ஏதாவது வெளிநாட்டிக்கு விசா அனுமதி கிடைத்தால் நேரடியாக விமானநிலையத்தில் விடுவிக்கப்படுவர், விசா கிடைக்காதவர்கள் மீளவும் இலங்கைக்கே நாடு கடத்தப்படுவர். வழக்கு நடத்த வசதி இல்லாதவர்கள் நிலை மிக மோசம் அவர்களாக விடுவிக்கும் வரை முகாமிலேயே தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டனர். தமிழகத்தில் இருக்கும் வழக்கறிஞர் புகழேந்தி, வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, வழக்கறிஞர் பகவத்சிங், வழக்கறிஞர் சந்தோஸ் போன்ற சில வழக்கறிஞர்களே இவர்களுக்காக வாழக்காடி வந்தனர்.

இப்படி நாடுகடத்தப்படும் நடவடிக்கையை தகர்ப்பதற்காக தான் முதன்முதலில் 2009ஆம் ஆண்டு 6 ஆம் மாதத்திற்கு பின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருப்பவர்களில் 60 பேர் உண்ணாவிரதம் தொடங்கினர் 7 நாட்கள் தொடர்ந்த இந்த உண்ணாவிரதத்தின் இறுதியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முகாமில் இருப்பவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்ற உடன்படிக்கையை ஏற்படுத்தி தந்தார். இந்த உண்ணாவிரதத்தின் இறுதியில் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். இப்படி இவர்கள் விடுவிக்கப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் கியூ பிரிவு போலீசார் அரசாங்கத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிவந்தனர். இப்படி இவர்கள் அரசாங்கத்தின் வாக்குறுதியை நடைமுறைபடுத்தாததை கண்டித்து செங்கல்பட்டில் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இப்படி உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவல்துறையினரை தாக்க முயன்றார்கள் என்று பொய்யான குற்றம் சுமத்தி இரவோடு இரவாக 200 காவல்துறையினர் முகாமிற்குள் நுழைந்து உண்ணாவிரதம் இருந்தவர்களின் கைகால்களை முறித்தனர். இந்த உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்த முக்கியமான 15 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 43 நாட்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் செங்கல்பட்டு முகாமிற்கு செல்ல மறுத்து வழக்கறிஞர் புகழேந்தியின் ஊடாக வழக்கு பதிவு செய்து பின் பூந்தமல்லி முகாமிற்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையில் சிவகரன் என்பவர் இந்த முகாம் வாழ தகுதியற்றது என்று வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் முகாமை பார்வையிட்ட நீதிபதிகள் இந்த முகாம் மனிதர்கள் வாழ தகுதியற்றது என்று அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்து இந்த முகாமில் இருந்த அனைவரும் செங்கல்பட்டு முகாமிற்கு மாற்றப்பட்டனர். ஆனாலும் இந்த விவரம் தெரியாத புதிதாக கைது செய்யப்படுபவர்கள் மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு வந்தனர். 01.02.2011 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் இருந்த 9 பேர் உண்ணாவிரதம் தொடங்கி பின் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.பின் பழையபடி மீண்டும் யாரும் விடுவிக்கப்படவில்லை 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முகாமில் இருந்த ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றபின் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 1

9.04.2012 அன்று வழக்கு பதிவு செய்து ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செயயப்படாமல் வைக்கப்பட்டிருந்தவர்கள குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் தங்கள் வழக்கை விரைவாக முடிக்கவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர் புகழேந்தி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இவர்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் இவர்கள் 23 ஆம் நாள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

பின் 15.04.2012 செங்கல்பட்டு முகாமில் விடுதலையை வலியுறித்தி 21 நாள் உண்ணாவிரதம் இருந்தனர் இறுதியில் கியூ பிரிவு சூப்ரண்டன்ட் சம்பத்குமார் கொடுத்த வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டது இதன் இறுதியில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்..ஆனாலும் இவர் தந்த வாக்குறுதி அடிப்படையில் அடுத்தடுத்து யாரும் விடுவிக்கப்படாததால் செந்தூரன் என்பவர் அடுத்தடுத்து இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தார். இப்படி தொடர்ச்சியான உண்ணாவிரதத்திற்கு பின் 20 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மேலே குறிப்பிட்டுள்ள உண்ணாவிரதங்களை தவிர்த்து மேலும் பல உண்ணாவிரதங்கள் இடையிடையே நடைபெற்று இதன் மூலம் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாம்களில் உண்ணாவிரதம் இல்லாமல் இதுவரை யாரும் விடுவிக்கப்பட்டதில்லை என்பதே வரலாறு.
கடந்த 2012 டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரம் பொழிச்சலூரில் விடுதலைபுலிகள் என்ற பொய் குற்றச்சாட்டில் உதயதாஸ், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் என்ற 4 ஈழ இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டப்படி அகதியாக தம்மை சங்கர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்துக்கொண்டு அமைதியான முறையில் நான்கு வருடங்களாக தமிழகத்தில் வாழ்க்கை நடத்திவந்த இவர்களை கடந்த டிசம்பர் மாதம் கியூ பிரிவு போலீசார் விடுதலைபுலிகள் என்று குற்றம் சாட்டி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து எந்த வித ஆயுதங்களோ இல்லை வெடிபொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை மாறாக வெடிகுண்டுகள் செய்வது தொடர்பான புத்தகங்களை வைத்திருந்தார்கள் என்ற ஒன்றுக்கும் உப்புபெறாத குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்து வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறை இவர்களை புழல் சிறையில் அடைத்தது.

இந்நிலையில் இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டு வெளிவந்த இவர்களை சிறை வாசலிலேயே கைது செய்த கியூ பிரிவினர் அவர்களை பூந்தமல்லி சிறப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்தது

இதில் சுரேஷ்குமார் என்ற இளைஞருக்கு இடுப்புக்கு கீழ் செயல்படாது என்பது வேதனைக்குரிய செய்தியாகும். 

சுரேஷ்குமாரால் அடுத்தவர்களின் உதவியில்லாமல் சுயமாக எந்த வேலையையும் செய்ய முடியாது. சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் அவரால் நகரக்கூட முடியும். ஆனால் பூந்தமல்லி சிறப்புமுகாமில் சம தரை இல்லாமல் சிமண்ட் தடுப்புகள் அதிகம் இருக்கும் காரணத்தால் இவரால் தனது சக்கர நாற்காலியை கூட பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருக்கிறார். மேலும் கால்கள் செயல்படாத இவரால் சாதாரண கழிவறையை பயன்படுத்த முடியாது மேற்கத்திய கழிவறையை தான் பயன்படுத்த முடியும். நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட ஒரு மாற்று திறனாளியை அடிப்படை வசதி கூட இல்லாத இந்த முகாமில் அடைக்கப்பட்டது தமிழகத்தில் இருக்கும் ஈழ இளைஞர்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு மாற்று திறனாளியை கைது செய்தால் அவரது உதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது சட்ட விதிமுறையாகும். ஆனால் சுரேஷ்குமாருக்கு இதுவரை யாரும் உதவிக்கு நியமிக்கப்படாததால் தனது சக முகாம் வாசிகளின் உதவியுடன் வாழ்கிறார்.

இந்நிலையில் பூந்தமல்லி சிறப்புமுகாமில் இருந்த அனைவரும் கடந்த பிப்ரவரி 25 ம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக திருச்சி சிறையினின் உள் புதிதாக ஒரு முகாம் உருவாக்கப்பட்டு. அங்கு அடைக்கப்பட்டனர். இதே போல் ஜூன் 11 ம் தேதி செங்கல்பட்டிலுள்ள சிறப்புமுகாம் எந்தவித முன்னறிவிப்புமின்றி செய்யாறு கிளை சிறையிர்க்கு மாற்றப்பட்டுள்ளது.

தேவரூபன் எனும் 27 வயது வாலிபர் கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறப்புமுகாமில் எந்தவித வழக்குகளுமின்றி அடைக்கபட்டுள்ளார். விடுதலை எப்போது என்றே தெரியாத இவர் தன்னை விடுதலை செய்யக்கோரி கடந்த ஜூன் 10ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தார்.
அப்பொழுது காவல் துறையினர் இவரை மிரட்டி உண்ணாவிரதத்தினை கைவிடவைத்தனர். இதில் மனமுடைந்த தேவரூபன் அளவுக்கதிகமான தூக்கமாத்திரகளை உட்கொண்டு மயங்கி சரிந்த அவரை காப்பாற்ற திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்….

சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றபட்ட இவர் மீண்டும் திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட இருந்த நிலையில் தாசில்தாரை காணவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை ஏற்காத காவல்துறை ஆய்வாளர் நீலகண்டன் "ஈழ நாயே நீ கூப்பிட்டா தாசில்தார் வரணுமா" என்று தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடித்து கழுத்தை பிடித்து முகாமிற்குள் தள்ளினார். இதனால் மனமுடைந்த தேவரூபன் கையினை அறுத்துக்கொண்டும் கழுத்தை அறுத்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தேவரூபனுக்கு எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் அளிக்காமல் செத்தால் சாகட்டும் என்று காவல்துறை ஆய்வாளர் நீலகண்டன் கூறினார்.இதனால் தேவரூபனுக்கு சிகிச்சை அளிக்க கோரி நீலகண்டனுடன் சந்திரகுமார், ஈழநேரு, தர்மராஜா, உமாரமணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாட்சா ஆகிய 6 பேரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட நீலகண்டன் இவர்கள் 6 பேர் மேல், தேவரூபனை சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்ததாக, தன்னை கற்கள் கொண்டு தாக்கியதாக பொய் புகார் பதிவு செய்தார். இந்த பொய் புகாரின் அடிப்படையில் சந்திரகுமார், ஈழநேரு, தர்மராஜா, உமாரமணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பார்த்தா ஆகியவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த முகாமை பொறுத்தவரை குற்றம் சுமத்தப்படுபவர்கள் வழக்கு இல்லாமலும், அப்படியே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலுமே இருக்கிறார்கள்.இரண்டு மூன்று வருடங்களுக்கு பின் கியூ பிரிவினர் கைது செய்யப்பட்டவர்களிடம் உங்கள்மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்போகிறோம் அப்படி தாக்கல் செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டால் 2 அல்லது 3 ஆண்டுகள் நீங்கள் சிறையில் இருக்க நேரிடும் மாறாக நாங்கள் உங்கள் மேல் சுமத்தும் குற்றங்களை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டால் நீங்கள் முகாமில் இருந்த காலத்தையே தண்டனைகாலமாக குறிப்பிட்டு உங்களை விடுவித்துவிடுவோம் என்று பேச்சுவார்த்தை நடத்துவர் பெரும்பாலானோர் மேலும் பல ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடுமோ என்று பயந்து நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.இப்படி இவர்கள் வாயாலேயே குற்றங்களை எற்றுக்கொல்பவர்களின் வழக்குகளை காரணம் காட்டி தான் இன்றுவரை உளவுத்துறையினர் புலிகள் மீதான தடையை நீடித்துவருகின்றனர். இப்படி இவர்கள் சுமத்தும் குற்றங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்னுமும் இந்த முகாம்களில் விடுதலையின்றி இன்றுவரை முகாமிலேயே இருக்கின்றனர்.

புலிகள் மீதான தடையை நீடிப்பதர்க்காகவே நடத்தப்படும் இந்த முகாம் இருக்கும் வரை. புலிகள் மீதான தடை நீக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. இந்தியா புலிகள் மீதான தடையை நீக்கிக்கொண்டால் அடுத்தது மற்ற நாடுகள் நம் மீதான தடையை நீக்கிவிடும். இப்படி நம் தமிழீழத்தின் பயணத்தில் பெரும் தடையாக இருக்கும் இந்த முகாம்களை மூடும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

- கார்த்திக், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It