இலங்கையில் ஜூன் மாதம் 15 ஆம் நாள், முஸ்லிம்கள் மீது சிங்கள பேரினவாத அமைப்பான பொது பல சேனாவினர் தாக்குதல் நடத்தி நான்கு பேரை கொலை செய்தனர். பலர் தாக்கப்படனர். பள்ளிவாசல்கள் சேதமடைந்தன. இலங்கையில் இனச் சுத்திகரிப்பு செய்து சிங்களவர்க்கு மட்டுமே இலங்கை சொந்த பூமி என்பதான கோட்பாட்டை நிறுவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இச்சம்பவம் குறிப்பாக தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள முஸ்லிம் அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. தமிழ் காட்சி ஊடகங்களும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான மதவன்முறையை விவாதமாக்கின. அதில், இந்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்யாதது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது. பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி நேரடியாக தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் பேசப்பட்டது. ராஜ்பக்சேவின் உருவ பொம்மையை தமிழகத்தில் செருப்பால் அடித்த்தற்காக கொழும்பில் வழக்குப் போட முடியாது. தமிழகத்திலும் வழக்குப் பதியப்படாது என்பதால் வசதியாக அடிக்கலாம் என்பதாக ஆர்ப்பாட்டங்களின் செயல்கள் இருக்கின்றன.

ஆனால், கண்டிக்கப்படாத, ஊடகங்கள் மக்களின் கவனத்துக்கு கொண்டு போகாத முஸ்லிம்களுக்கு எதிரான மத வன்முறைகள் கடந்த மாதம் குஜராத்திலும், மகாராஷ்டிராத்திலும் நடந்தன. மோடி பிரதமராக பதவியேற்றத்தை இந்து அமைப்புகள் கொலை வெறியோடு கொண்டாடிய நிகழ்வுகள் “நாகரிகம்” கருதி அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கப்படாத எடுத்துக் கொள்ள வேண்டும் போல. கடந்த மே 24 ஆம் நாள், பாரதீய ஜனதா முழுபலத்துடன் மத்திய அரசை கைப்பற்றியது. அன்றைய தினம் நரேந்திரமோடி பாரதத்தின் பிரதமராக பொறுப்பேற்றார். மறுநாள் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதும் அவர்கள் உடைமைகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன தொடர்ந்து மகாராஷ்ட்ராவிலும் வகுப்பு கலவரம் நடந்தன. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் இச்சம்பவங்களை வெளியிடக் கூடாத பட்டியலில் சேர்த்து விட்டன. குறிப்பாக, புனேயில்,மொஹ்சின் ஷேக் என்ற பொறியாளர் கொல்லப்பட்டதை The Hindu மற்றும் Times of India நாளிதழ்களை தவிர வேறு எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை.

ஜூன் 2 ஆம் நாள் மாலை,முகநூல் வழியாக முஸ்லிம்களுக்கு எதிரான கலவர நெருப்பை கொழுத்திப் போடும் படங்கள் வெளியாயின. பால் தாக்கரே மற்றும் மராட்டியர்கள் கொண்டாடும் மராட்டிய சிவாஜி இருவரையும் கேலி செய்யும் படியான படங்கள் அவை. முகநூல் வழியாக வெளியிடப்பட்டு பின்னர் அலை பேசிகளின் whatsup மூலம் காட்டுத்தீயென பரவிய. போது, அப்படங்கள் புனே நகரத்தில் ஒரு கலவரத்துக்கான காலை ஊன்றி நின்றன. புனே நகரம் தீவிர வகுப்புவாதிகளின் செல்வாக்கு நிறைந்த பகுதி கொந்தளிப்புடன் ஒரு கூட்டம், தீடிரென கிளம்பி முஸ்லிம்களின் வணிக தலங்கள் வழிபாட்டு தலங்களை தாக்கினர். வாகனங்களுக்கு தீவைத்தனர்.

புனே நகரின் உள்ளுர் பள்ளிவாசலில் தொழுகையின் தலைவர் (இமாம்), ‘ மாலை தொழுகை முடிந்தவுடன் சீக்கிரமாக வீடு போய் சேருங்கள்’ என்று அச்சத்துடன் இளைஞர்களிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார். இந்த எச்சரிக்கையை உள்வாங்கியவாறு 26 வயதான மொஹ்சின் ஷேக் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டார். நூறு மீட்டர் தூரமே சென்றிருந்த நிலையில், இந்த ராஷ்டிர சேனா என்ற வகுப்புவாத அமைப்பினர் மொஹ்சின் ஷேக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். ஆக்கிமட்டை, கிரிக்கெட் மட்டை,இரும்பு தடிகள் கொண்டு மொஹ்சின் தலையில் பலமாக தாக்கினர். உறைந்த சிமெண்ட் கட்டிகளையும் கொண்டு தாக்கினர். இந்த தாக்குதலில் மொஹ்சின் கொல்லப்பட்டார். First wicket விழுந்தது என்று கொலையாளிகள் அலைபேசிவழியாக குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டாடினர்.

சோலாப்பூரைச் சேர்ந்த மொஹ்சின், அவர் குடும்பத்தில் சம்மாதிக்கும் ஒரே நபர். அவர் வைத்திருந்த தாடி, தொப்பி அவரது சமய அடையாளத்தை வெளிப்படுத்தியதால் கொலைக்கு ஆளாகிவிட்டார்.மொஹ்சின் ஒரு முஸ்லிமாக தோன்றியது தான் அவரது குற்றம். ஒரு தனிநபருக்கு எதிரான வன்முறை அவர் சார்ந்த சமூகத்தின் மீதான வெறுப்பால் உண்டானது.

இந்த கொலை ஏன் நமது மனசாட்சியை உலுக்க வேண்டும்? எங்கெல்லாம் மதசிறுபான்மையாரும் இதர சிறுபான்மைமையாரும், பலவீனமான மக்களும் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் மத வன்முறைகளும் திட்டமிட்ட தீவைப்புகளும் தூண்டப்பட, எப்போதும் அற்பமான பிரச்சனைகள் போதுமானதாக அமையும் ஒரு நாட்டில், நிச்சயமாக நம், இதுபோன்ற பயங்கரங்களின் நிழலின் கீழே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சில மாதங்களுக்கு முன்னர், Nido Taniam என்ற அருணாச்சலப்பிரதேச மாணவன் எக்காரணமுமின்றி சில விசமிகளால் தில்லியில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டான். இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் இளைஞர்கள். அவனது தோற்றம் பார்க்க பிடிக்காமல் கொன்று விட்டதாக கொலையாளிகள் சொன்னது தான் கொடுமை. இன்று உருவங்களும் தோற்றங்களும் கொல்லப்படுபவதற்கான அடிப்படைக்காரணங்களாகி விட்டன. இது போன்ற கொலைகள் நாட்டின் மதச்சாற்பற்ற கட்டமைப்பை துருப்பிடிக்கச் செய்யும். இதுபோன்ற கொலையாளிகள் வன்மையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமூக வலைதளங்கள் முழுவதிலும் இதுபோன்ற வெறுப்பை துண்டும் குற்றச் செயல்கள் பரந்து விரிந்து செல்வது நம்மை எச்சரிக்கிறது. இன்று கூட்டு வன்முறையை உருப்படுத்தும் சக்திமிக்க களமாகிய சமூக வலைதளங்கள் இருப்பது மறுக்கமுடியாதது.வெறுப்பையும் (hate) ஆத்திரத்தையும் (Intolerance) ஊக்குவிக்கும் மேடையை இந்த சமூக வலைதளங்கள் அமைத்துக் கொடுக்கின்றன. தொடர்புகளை இணைத்துக் கொடுக்கின்றன. இறுக்கமான கோட்பாடுகளை மேலெடுத்துச் செல்லும் கருத்துகளை தீய சக்திகளுக்கு அமைத்துக் கொடுக்கிறது. எளிதில் மனக் கொந்தளிப்பு அடையும் இளைஞர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மூர்க்கமான நேயர்களை ஒருங்கிணைத்து தருகிறது.

இழிவூட்டும் முகநூல் பதிவுக்கும் மொஹ்சினுக்கும் சற்றும் தொடர்பில்லை யென்றாலும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதில் மாநில அரசு அடைந்த தோல்விக்கு பதிலாக மொஹ்சின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. உண்மையான குற்றவாளிகளை அரசு இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறது

சமூக வலைதளங்கள் வழியாக கலவரத்தை தூண்டிவிடுவது, அல்லது வெறுப்பு பிரச்சாரத்தை விரட்டிச் செல்வது எளிய காரியமாக இருக்கிறது. கடந்த வருடம் உத்தரப் பிரதேசத்தின் முசப்பர்நகர் கலவரங்கள் பெரிதாக, உருதிரிக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்கள் ஊடாக பரவியதுதான் காரணமாக இருந்தது. எதிர் காலத்தில் இதுபோன்ற வெறுப்பை தூண்டும் செயல்களுக்கு சமூக வலைதளங்கள் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது.

புனே விசயத்தில் உண்மையான குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கவில்லை யென்றால் இதற்கு காரணமானவர்களை அது இன்னும் பலப்படுத்தும். ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியபோதே பதட்டத்தை குறைப்பதில் காவல்துறை விரைவாக செயல்பட்டிருந்தால் மொஹ்சின் பாதுகாக்கப்பட்டிருப்பார் என கருத தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

புனேயில் உடனடியாக கலவரச் சூழல் உருவாக்க கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் பலவீனமாக இருந்தன. காவல்துறை சூழ்நிலையின் தீவிரத்தை மிகக் குறைவாகவே மதிப்பிட்டிருந்த்து மொஹ்சின் கொல்லப்பட்டு ஐந்து நாட்கள் கழித்தும் கூட, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு படக்கருவியில்(CCTV) இருந்த படங்களை காவல்துறை பெற்றிருக்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட அது திடமான ஆதாரமாக இருந்திருக்கும்

ஒரே மாதிரியாக செயல்படும் தாக்குதல் முறை கையாளப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். வன்முறை இயல்பாக தோன்றியதா என்ற சந்தேகத்தை இது இன்னும் அதிகப்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களின் தோற்றம் ஒரே விதமானது. அவர்கள் அனைவரும் நீளமான தாடி வைத்தும், தலையில் தொப்பி அணிந்தும் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தலையில் அடித்து தாக்கப்பட்டிருந்தனர். அவர்களை கொல்ல வேண்டும் என்பதுதான் தாக்கியவர்களின் எண்ணம். இந்த வன்முறையின் வெறியாட்டம் முஸ்லிம் இளைஞர்களை அச்சத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவர்களில் சிலர் வெளியில் வரும் போது தாடியை எடுத்தும் தொப்பியை நீக்கியும் விட முடிவெடுத்து விட்டனர். வன்முறைக்கு மேலும் இறையாகாமல் இருக்க இதுவே அவர்களுக்கு சிறந்த வழியாக தெரிகிறது.

இந்த பிரச்சனை மிக அதிகமாகவே அரசியலாக்கப்பட்டு விட்டது. இந்த மதவெறி காய்ச்சல் நரேந்திரமோடி அதிகாரத்திற்கு வந்த பிறகு பரவியதாக தேசிய வாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்ட்ர உள்துறையை கையிலெடுத்த நாள் முதல் அது வன்முறையை சந்தித்து வருவதாக பா.ஜ.க மற்றும் சிவசேனா குற்றம் சாட்டுகின்றன. ஆனால, மொஹ்சின் கொலை செய்யப்பட்டு ஒருவார காலமான பிறகும் மும்பையின் மேயரோ மாவட்ட ஆட்சியரோ, அறிக்கையோ கண்டனமோ தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக எந்தவொரு அரசியல்வாதியும் அங்கு செல்லவில்லை. அதை ஒரு கொலை சம்பவமாகவே காவல்துறை நடத்துகிறது. ஆனால் இது மோசமானதொரு சட்டம் ஒழுக்கு பிரச்சனைமட்டும் தானா?

இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகம் கொள்ளப்படும் இந்து ராஷ்டிர சேனா அமைப்பை தடை செய்வது குறித்து மாநில அரசு இப்போது ஆலோசித்து வருகிறது. மொஹ்சின் கொலையில் அவ்வமைப்புக்கு இருக்கும் தொடர்பும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ராஷ்ட்ர சேனாவை தொடங்கிய அதன் தலைவர் தனஞ்செய் தேசாய் மீது ஏற்கெனவே 23 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இச்சம்பவத்துக்குப் பின் அவர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார். முஸ்லிம்களை வதைக்கும் வண்ணம் வெறுப்பை தூண்டும் பேச்சுகளை பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. ஐந்து வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து பணத்தை வாங்கி செயல்படும் இந்த ராஷ்ட்ர சேனா முஸ்லிம்களை விஷப்பாம்பாக பார்க்க வேண்டும் என்று நச்சுப்பிரச்சாரம் செய்து வருகிறது. அவ்வமைப்பை தடை செய்ய மாநில அரசு ஏன் இத்தனை காலம் காத்திருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற மதவெறுப்பு தூண்டும் அமைப்புகள் தாராளமாக செயல்படுகின்றன. கர்நாடகத்தில் ரண்வீர் சேனா, தமிழகத்தில் இந்து முன்னனி,இந்து மக்கள் கட்சி என்றும் தலைமை, பெயர், அமைப்பு, நிர்வாகம் எல்லாம் தனித்தனியாக இருந்தாலும் அவர்களின் அடிப்படை நோக்கம் முஸ்லிம் வெறுப்பு, முஸ்லிம் எதிர்ப்பு மட்டுமே. கோயில் நிலங்களை மீட்பது, பாதுகாப்பது இந்து மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது, உள்ளூர் கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவது என்று பெரும்பான்மை மக்களை ஈர்ப்பதெல்லாம் சிறுபான்மையர்க்கு எதிராக அடர்த்தியான கலவரத் திரட்சியை உருவாக்கும் நோக்கத்திற்காகத்தான். கோயில்வளாகங்களில் காவல்துறையின் அனுமதியோடு அல்லது கண்டு கொள்ளப்படாமல் கம்பு சுற்றுதல் உள்ளிட்ட பயிற்சிகள் எடுக்கின்றனர்.வடமாநிலங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கின்றனர் உ.பி யில் முக்திவாஹினி என்ற பெண்கள் அமைப்பு இளம் பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கிறது. குஜராத்தில் அரசு அனுமதியோடு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சிகளில் முஸ்லிம்கள் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை என்பதில் இருந்து இது ஒரு திட்டமிட்ட முன்னேற்பாடு என்பதை ஊகிக்கலாம். முஸ்லிம்கள் இதுபோன்ற நடவடிக்கைகளுடன் ஒரு அமைப்பை நடத்துவதாக இருந்தால் அவ்வமைப்பு பயங்கரவாத முத்திரையுடன் உடனே தடை செய்யப்படும். அவ்வமைப்பினர் காலவரையற்ற சிறை வாழ்க்கைக்கு அனுப்பப்படுவார்கள்.

தீவிரத்தனம் கொண்ட இந்து அமைப்பினர் செய்யும் கலவரங்களில் பாதிக்கப்படுபவர்கள் தலையிலும், கைகளிலும் கம்பால் அடிபடிவதையும் அவர்கள் தயார் செய்யும் கம்பு பயிற்சி தொண்டர் படையையும் ஒரு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பலமான செய்தியை தேசத்திற்கு சொல்ல அனைத்து சமூகங்களையும் சார்ந்த முரட்டு அமைப்புகளை தடை செய்ய வேண்டும். கடந்த வருடம் தில்லி உயர் நீதிமன்றம் வழிகாட்டியவாறு வெறுப்பு பேச்சுக்களை தடைசெய்யும் சட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதை செய்வதை காட்டிலும், காவல்துறை திரனின்றி காணப்படுவதாகவும், நீதிமன்றம் தாமதமாக நீதி வழங்குவதாகவும் சொல்வது எளிதாக இருக்கிறது. தாக்கப்படும் போது, சட்டம், காவல்,நீதி பொதுமக்கள் என்று யாரும் உதவிக்கு இல்லாததன் அடையாளம் தான் மொஹ்சினின் மரணம்.

(உமர் ரஷிதீன், Curbing hate crimes (The Hindu June 19,2014) என்ற கட்டுரையைத் தழுவி...)

Pin It