நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றிலேயே முதன் முறையாக, ஆர்.எஸ்.எஸ் தலைமையின் வழிகாட்டலில் இயங்கும் பாரதீய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு இந்தியக் குடிமகன் என்ற வகையில், "ஜனநாயகத்தை மதித்து, எல்லா மக்களையும் அரவணைத்து நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் வகையில் சட்டப்படியான ஆட்சி நடத்த" வாழ்த்துவோம்.

modi rss 620

பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள இவ்வெற்றியினை "இந்தியாவின் வெற்றி" என நரேந்திர மோடியும் வெற்றியின் க்ரெடிட் மோடிக்குச் சென்றுவிடக்கூடாது என்ற பதைபதைப்பில் மோடிக்கு எதிரான அத்வானியின் அணியில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் "பா.ஜ.கவின் வெற்றி" எனவும் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தனர். அதே சமயம், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான வன்முறை சித்தாந்தத்தைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டலில் இயங்கும், மனிதாபிமானம் சிறிதும் இன்றி குஜராத்தில் இரத்த வெறியாட்டம் போட்ட மோடியினை அதிகாரத்துக்கு வரவிட்டுவிடக் கூடாது என தேர்தலுக்கு முன்னர் தீவிரமாக இயங்கிய இந்திய தேசப்பற்றுமிக்க, வன்முறை, அராஜக கட்சிகளுக்கு எதிரான மதச்சார்பற்றவர்களிடம் பா.ஜ.கவின் இவ்வெற்றியின் மூலம் ஹிந்துத்துவம் வெற்றியடைந்து விட்டதோ என்றொரு எண்ணமும் ஏற்பட்டுள்ளது.

இவற்றையும் தாண்டி, "காசுக்கு விலைபோகும் ஊடகங்களின் வெற்றி", "இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடிக்க நாக்கைத் தொங்கவிட்டுக் காத்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் வெற்றி" (தேர்தல் ரிசல்ட் வெளியாகிக்கொண்டிருந்த அன்றைய ஒருநாள் மட்டுமே அம்பானிக்கு பில்லியன்கள் லாபம் கிடைத்தது) என பல வெற்றி வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும். ஆனால் உண்மையில் நடந்தது இந்திய ஜனநாயகத்தின் படுதோல்வியே! இதனைப் புரிந்துகொள்ள தேர்தல் முடிவுகளைச் சற்று ஆழமாக உற்றுநோக்குவோம்.

சுமார் 125 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இத்தேர்தலில் ஓட்டளிக்க உரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை: சுமார் 834,652,998 பேர்.

இவர்களில் பல்வேறு காரணங்களுக்காக ஓட்டளிக்காமல் இருந்தோர் 33.6 சதவீதம் பேர். அதாவது சுமார் 554,209,591 பேரே வாக்களித்தனர்.

இவ்வாக்குகளில் பா.ஜ.க வென்ற தொகுதிகளில் பெற்ற வாக்குகள் 171,657,549. அதாவது 31 சதவீதம்!

இந்த 31 சதவீத வாக்குகளில் பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பிற கட்சிகளின் வாக்குகளும் அடங்கும் என்பதைக் கவனிக்க வேண்டும். அதே சமயம் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் பா.ஜ.கவின் ஓட்டுகள் அக்கட்சிகளுக்கும் கிடைத்துள்ளதால், இந்த 31 சதவீத ஓட்டுகள் முழுமையாக பா.ஜ.கவுக்கே கிடைத்த ஓட்டாக எடுத்துக்கொள்வோம்!

அப்படி எனில், தேர்தலில் வாக்களித்தோரில் சுமார் 69 சதவீத மக்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தமாகிறது. ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் கணக்கிலெடுத்தால் இது சரியான கணக்கல்ல!

ஓட்டளிக்க உரிமைபெற்ற 834,652,998 பேர்களில் வெறும் 171,657,549 பேர் மட்டுமே பா.ஜ.கவுக்கு ஓட்டளித்துள்ளனர் என்று கணக்கிடவேண்டும். இதுவே சரியான கணக்கு. இந்த அடிப்படையில் நாட்டில் ஒட்டுமொத்த மக்களில் வெறும் 20 சதவீத மக்கள் மட்டுமே பா.ஜ.கவை ஆதரித்துள்ளனர் என்று அர்த்தம்!

இந்த 20 சதவீத ஆதரவினைப் பெற, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாமல் இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் முதன்முறையாக சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய முழுநேர ஊழியர்களைப் பா.ஜ.கவுக்காக தேர்தல் பணியாற்ற களமிறக்கியுள்ளது. இது பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவர் தொலைக்காட்சி விவாதமொன்றில் எதேச்சையாக தம்மை அறியாமல் வெளிப்படுத்திவிட்ட சிறு உண்மை மட்டும்தான். முழு நேர ஊழியர்களே அவ்வளவு பேர் எனும்போது, பகுதி நேர ஊழியர்கள் எத்தனை பேர் களமிறங்கியிருப்பர் என்று நாமே கணக்கிட்டு கொள்ளவேண்டும்.

இதுவன்றி, பா.ஜ.கவின் தொண்டர்கள், அதன் ஆதரவு கட்சிகள் என மிக விரிவானதொரு பட்டாளம் பா.ஜ.க வெற்றிக்காக தேர்தல் பணியாற்றியுள்ளது. முழு நேர ஊழியர் ஒருவருக்கு மாத ஊதியம் குறைந்தது 10,000 ரூபாய் எனக் கணக்கிட்டால்கூட 600 கோடி ரூபாய் தேர்தல் பணி செய்ய ஊழியர்களுக்காக ஒரு மாதம் ஊதியமாக மட்டும் பா.ஜ.க செலவழித்துள்ளது. இதுதவிர பகுதி நேர ஊழியர்களுக்கு, பிற தேர்தல் பணி தொண்டர்களுக்கு, விளம்பரம் செய்ய கார்ப்பரேட் ஊடகங்களுக்கு என மொத்தம் எத்தனை லட்சம் கோடிகள் இறக்கியிருக்கும் என கணக்கிட்டு கொள்வோம்.

கடந்த 2009 தேர்தலைவிட இத்தேர்தலில் சுமார் 10 சதவீத வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. அதேநேரம், சுமார் 10 கோடி புதிய வாக்காளர்கள் இம்முறை அதிகரித்துள்ளனர். இந்தப் புதிய இளையதலைமுறை வாக்குகளைக் கவர்வதில் சோஷியல் மீடியா முதலான நவீன தகவல்தொடர்பு சாதனங்களைப் பிற கட்சிகளைவிட பா.ஜ.க தெளிவாக திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ஆக மொத்தம், கடந்த 2009 தேர்தலுடன் ஒப்பிடும்போது இத்தேர்தலில் சுமார் 10 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் மட்டும் பா.ஜ.க கூடுதல் பெற்றுள்ளது உண்மை. ஆனால் அந்த ஓட்டுகளில் பெரும்பாலானவை, குஜராத்தில் ஏழை மக்கள் அனுபவிக்காத இல்லாத வளர்ச்சியைப் பொய்யாக விளம்பரப்படுத்தியதில் கவரப்பட்ட புதிய தலைமுறையின் ஓட்டுகளே! நாட்டில் நடத்தியுள்ள குண்டுவெடிப்புகள், கலவரங்கள் முதலான ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து எதுவும் அறியாத புதிய இளையத்தலைமுறை மக்களை இத்தனை கோடி ரூபாய்ச் செலவழித்து வளர்ச்சி எனும் மாயை மூலம் கவர்ந்திழுத்துள்ளனர்.

அது மட்டும் அல்லாமல், வாக்கு இயந்திரத்தில் செய்துள்ள குளறுபடிகள் (தேர்தலுக்கு முன்னர், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.கவுக்கு மட்டுமே வாக்குகள் விழும்படி செட் செய்திருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தேர்தல் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்ததும் அவருக்குக் காவல்துறை பாதுகாப்பு இப்போதும் கொடுக்கப்பட்டுள்ளதும் ஊடகங்களில் ஏற்கெனவே வெளியான செய்திகள் http://webarchive.inneram.com/news/india/5716-vote-for-only-bjp.html), வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளை மொத்தமாக கைப்பற்றி பா.ஜ.கவுக்கு ஒட்டுமொத்த வாக்குகளையும் போடவைத்தது (தற்போது இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன) போன்ற சட்ட விரோத செயல்களும் நடந்துள்ளன.

https://www.youtube.com/watch?v=ZlCOj1dElDY#t=378

எனினும் நாட்டில் ஒட்டுமொத்தமாக 20 சதவீத வாக்குகள் மட்டுமே பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது என்பதை ஊன்றி கவனிக்க வேண்டும். அதாவது நாட்டில் 80 சதவீத மக்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமையில் செயல்படும் பா.ஜ.கவை நிராகரித்துள்ளனர். இதன் அர்த்தம், ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறை சித்தாந்தத்தை நாட்டின் 80 சதவீத மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிறது. ஆதரித்துள்ள 20 சதவீத மக்களில்கூட, ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மை முகத்தை அறியவரும் புதிய தலைமுறை மக்கள் அதனை நிராகரிக்கத் தொடங்குவர்! அதிலும் குறிப்பாக, இனியுள்ள 5 ஆண்டுகளில் ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக அல்லாமல் ஹிந்துத்துவாவின் அஜண்டாவை நடைமுறைபடுத்துவதில் மோடி கவனம் செலுத்துவாரேயானால் வளர்ச்சி என்ற மாயையால் கவரப்பட்ட ஓட்டுளும் அடுத்தத் தேர்தலில் மாயமாகும்!

http://www.youtube.com/watch?v=OVuVIFejhVk&feature=youtu.be

எனவே, நாட்டின் மிகப்பெரும்பான்மையான மக்கள் நிராகரிக்கும், எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கீழான பா.ஜ.கவின் இவ்வெற்றியானது எப்படி இந்தியாவின் வெற்றியாகும்? எப்படி இந்திய ஜனநாயகத்தின் வெற்றியாகும்?

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=h2pY5gUl68k

ஜனநாயகத்தின் அடிப்படையே பெரும்பான்மையின் அடிப்படையிலானது எனும்போது, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து முடிந்துள்ள 2014 தேர்தல் இந்திய ஜனநாயகத்தின் படுதோல்வியாகவே கருதப்படவேண்டும்... இதற்கு முந்தைய தேர்தல்கள் போன்றே!

http://www.youtube.com/watch?v=-r2I_hKcoL8&feature=youtu.be

இந்நிலையில், பா.ஜ.கவின் இவ்வெற்றியினைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பதும் அர்த்தமற்றது! ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிரான மதச்சார்பற்ற மக்கள் கவலை கொள்வதும் அர்த்தமற்றதே!

20 சதவீதத்துக்கு எதிரான 80 சத வாக்குகளைச் சிதறடிப்பதில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த வெற்றியும் அந்த 80 சதவீத வாக்குகளை இந்தியாவுக்கு எதிரான ஹிந்துத்துவத்துக்கு எதிராக ஒன்றிணைப்பதில் மதச்சார்பற்ற சக்திகள் தோல்வியடைந்ததுமே பா.ஜ.கவின் வெற்றிக்கான அடிப்படை!

பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ள இந்த 20 சதவீத மக்களில் அப்பாவிகளாக ஏமாந்துபோயுள்ள மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மை நிறத்தைப் புரியவைக்கும் வகையிலான திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதோடு, பா.ஜ.கவை நிராகரித்துள்ள இந்த 80 சதவீத மக்களையும் ஒன்றிணைப்பதில் மதச்சார்பற்ற சக்திகள் கவனம் செலுத்தினால், இந்திய நாட்டின் மிகப்பெரும் அபாயமாக நாட்டு தந்தை மகாத்மா காந்தியால் சுட்டிக்க்காட்டப்பட்ட இந்தத் தேச விரோத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்தும் அதன் செல்லப்பிள்ளையான பா.ஜ.க முதலான வன்முறை அமைப்புகளிடமிருந்தும் தோல்வியடைந்துவிட்ட இந்திய ஜனநாயகத்தை மீட்டுவிட முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!

- அபூ சுமையா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It