தோழர் கி.வே.பொன்னையன் பதில் சொல்ல வேண்டும்!

"குணா முன் வைக்கின்ற சில கருத்துக்களில் எனக்கு உடன் பாடுள்ளது. ஆனால் அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப்போராட்டம் என்பதற்கும் கட்சியை கட்டமுடியாமல் த.நா.மா.லெ.க. இருப்பதற்கும் உறவு இருப்பதாக நான் கருதவில்லை. மாறாக அரசியல் போராட்டமே நடத்தாமல் ஒரு கட்சி 22 ஆண்டுகளாக முடங்கி இருந்ததால் சமூகத்தின் இயக்கத்தை விட்டே துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுத் தொகுப்பு என்று சொல்லப்பட்டது, குட்டி முதலாளியப் போக்கிற்கு முடிவு கட்டுவது என்று சொல்லப்பட்டது... எனது கேள்வி எவ்வித சமூக இயக்கமும் இல்லாமல் புரட்சிக்கான ஊழியர்கள் எங்கிருந்து வருவார்கள்? கட்சியின் செயல் முடக்கம்தான் புதிய சக்திகளையும், புதிய சமூக நிலைமைகளயும் உள் வாங்க முடியாததற்குக் காரணமோ எனக் கருதுகிறேன். எனது கருத்தை கட்சியின் மீது விமர்சனம் வைப்பவர்கள் வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்க பயன் படுத்துங்கள். த.நா.மா.லெ.க.வும் ஒரு திறந்த விவாதம் நடத்தலாம் என்று கருதுகிறேன்." என்று கூறிய தோழர் கி.வே. பொன்னையன் "த.நா.மா.லெ. கட்சியின் அரசியல், அமைப்பு, வரலாறு பற்றிய விவாதம்" என நான்கு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இந்த நான்கு கட்டுரைகளிலும் அவர் சொல்லிய 22 ஆண்டுகளாக த.நா.மா.லெ.க. செயல் முடக்கமாகிக் கிடப்பது குறித்தோ, கட்சி கட்ட முடியாமல் போனது குறித்தோ ஒரு வரி கூட விவாதிக்கவில்லை. மாறாக தோழர் கார்முகில்தான் மா.லெ. இயக்கங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த இடது தீவிரவாதத்தையும், இடது சந்தர்ப்பவாதத்தையும் தீர்த்து வைத்தார் என்றும், 2000 ஆண்டு வரலாறுடைய சாதிய சிக்கலுக்கு தீர்வளித்தார் என்றும், தேசியம் பற்றிய அறிவில்லாத புரட்சிகர இயக்கங்களின் சூனியவாதத்தைக் களைந்தார் என்றும் தனிநபர் துதிப்பாடலை நிரப்பியுள்ளார்.

எங்களுடைய கேள்வி இதுதான் - எல்லாவற்றையும் காகிதத்தில் அடைத்து முடித்துவிட்ட தோழர் கார்முகிலின் ஏட்டுச்சுரைக்காயால் நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் சாதியப் பிரச்சினையும், தேசியப் பிரச்சினையும் தீர்ந்து விட்டதா?

தோழர் கார்முகிலின் மதிப்புமிக்க கோட்பாடுகளால் தமிழ்நாட்டு மக்களின் சின்ன துன்பமாவது தீர்க்கப்பட்டிருக்கிறதா?

ஒருவர் தனது கருத்துகளை எழுதி வைத்துக்கொண்டு இதுதான் உலகத்தில் சிறந்தது என்று சொல்வதுதான் புரட்சிகர கட்சியைக் கட்டுவதற்கான வழியா?

மக்களைத் திரட்டுகிற புரட்சிகர மக்கள்திரள் பாதையைக் கண்டுப்பிடித்து விட்டேன் என்ற தோழர் கார்முகில் தேறவே முடியாமல் போனது எப்படி?

தேறவே முடியாதென தோழர் கார்முகிலால் சாபமிடப்பட்ட அன்றைய மக்கள் யுத்தக்குழு, இன்றைய மாவோயிஸ்ட் கட்சி அவர்களது நிலைப்பாட்டுக்கு உரிய இடங்களைத் தேர்வு செய்துத் தேறியது எப்படி?

அரசியல் போராட்டம்தான் முதன்மையானது என முடிவெடுத்து 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் என்ன அரசியலை முறியடித்து என்ன அரசியலை நிறுவியிருக்கிறீர்கள்?

உங்களது அரசியல் நிலைப்பாட்டால் முறியடிக்கப்பட்டு எத்தனை அமைப்புகள் காணாமல் போயிருக்கின்றன?

எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு சொல்லிவிட்ட தோழர் கார்முகில் தன் கட்சியைக் கட்டுவதற்கோ, குறைந்தபட்சம் அதற்கு தலைமைக்குழுவைக் கட்டுவதற்கோ சொல்லுகிற தீர்வு என்ன?

தோழர் கார்முகிலோடு செயல்பட வருகிற அனைவருமே அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாதவார்களாகவும், அறிவு குறைப்பாடுடையவர்களாகவும் இருப்பதாக அறிக்கை வழி சொல்கிறீர்களே அது எப்படி?

தோழர் கார்முகில் மட்டுமே புரட்சிகர சக்தி; மற்றவர்கள் அனைவரும் பிற்போக்கு சக்திகள் என இரண்டரை ஆண்டுகள் இடைவெளியில்லாமல் கட்சி ஊழியர்கள் முழுமூச்சாக விவாதம் நடத்தி முடிவெடுத்த அனுபவத்தொகுப்பு அறிக்கை எங்கே?

த.நா.மா.லெ.க-வில் பகுதிநேரம் மற்றும் முழுநேர ஊழியனாக 14 ஆண்டுகள் உழைத்த எனக்கும், என்னைப் போன்ற எண்ணற்றத் தோழர்களுக்கும் இது போன்ற கேள்விகள் இன்னமும் உள்ளன. மேலிருந்து சின்ன சுற்றறிக்கை கூட 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடையாது. தோழர் கார்முகில் தவிர ஏனைய அனைவருமே பகுதி சார்ந்த ஆதரவாளர்களின் பங்களிப்பிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் மைய லெவி, சிறப்பு நிதி என கணிசமான தொகை பல ஆண்டுகளாக பெறப்படுகிறது. அந்தப் பணத்தை என்ன செய்கிறார்கள்? அந்தப் பணம் என்ன செய்யும்? எனக் கேள்விகள் பல உள்ளன. அவையெல்லாம் பின்னர் பார்ப்போம். முதலில் மேற்கூறியவைகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It