ராஜபக்ஷே என்பது எதிர்காலத்தில் ஒரு கொடூரத்தின் குறியீடாக கருதப்படப் போகிறது என்பதை யாரேனும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு... நரகாசுரன் இறந்தது போல், ராவணன் இறந்தது போல் எதிர்காலத்தில் ராஜபக்ஷேவின் இறப்பு தமிழ் பேசும் பல கோடி மக்களால் கொண்டாடப்பட போகிற ஒரு விஷயமாக மாறப்போகிறது என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே. அன்றைய தினம் உங்களுக்கு பலரால் இனிப்புகள் வழங்கப்படலாம். (சுகர் போன்ற வியாதிகளை சுட்டிக்காட்டி மறுத்து விடாதீர்கள்).

pon radhakrishnanநடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் சுத்தமாக துடைத்தெறியபட்டதற்குரிய காரணங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். காங்கிரஸ் என்ற ஒரு காது கேட்காத பழுதடைந்த கருவி எதற்காக (தமிழகத்தில் மட்டும்) போட்டியிடுவதற்குக் கூட பயந்து துடைத்தெறியப்பட்டதோ, அதே காரணத்துக்காகத்தான் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் இரண்டில் ஒன்றான தி.மு.க. கட்சியும் துடைத்தெறியப்பட்டது. இரண்டு கட்சிகளும் மக்களால் தூக்கியெறியப்பட்டதற்கு காரணம் ஒரே விஷயம்தான். இதுபோன்ற சமயத்தில் தாங்கள் கன்னியாகுமரி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் மக்கள் தங்கள் மீது வைத்திருந்த தனிப்பட்ட மரியாதை காரணமாக இருக்கலாம்.

ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வெளியிட்ட முதல் அறிக்கையே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல் உள்ளது. காங்கிரஸ் பாடிய அதே பல்லவிக்கு புதிய வர்ணம் அடிக்க முயலும் உங்களுடைய முயற்சி எந்த அளவுக்கு சரியானதாக இருக்கும் என்று சற்று விவாதித்து பார்த்திருக்கலாம். மக்களின் உணர்வுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது - "உங்களுக்கெல்லாம் ராஜதந்திர அறிவு பத்தாது, தலைவர்களாகிய நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.... அதுதான் உங்களுக்கு நல்லது...." - என்பது போன்ற கண்ணோட்டைத்தையே தருகிறது. உங்களிடமிருந்து தலைமைக்கு ஆதரவான (அதைத் தவிர வேறு எதை எதிர்பார்ப்பது) உறுதியான பதில்கள் வந்து விட்டதால், சில கேள்விகளை கேட்க வேண்டியதிருக்கிறது.

சாதாரண கேள்விகள் தான் என்றாலும், சில பதில்கள் உங்களிடமிருந்தே வெளிப்பட வேண்டும் என்பதால் கேட்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

1. திருடன் கையிலேயே கொத்து சாவியை கொடுக்க வேண்டும் என்பது எந்த அளவுக்கு சரியான கண்ணோட்டமாக இருக்கும்...

ஏற்கெனவே ஒரு இனத்தையும், அவர்களது பொருளாதாரத்தை அழித்து, அவர்களை வேலிகட்டி ஒரு வரையறைக்குள் வைத்து வதைத்து.... சுனாமியில் தொலைந்து போனவர்களைப் போல், திடீர் திடீர் என காணாமல் போனவர்களைப் பற்றி விவரம் தெரியாமல்.... இருக்கிறார்களா, இறந்து போனார்களா? கொல்லப்பட்டார்களா? என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாமல்....என இவை அத்தனையையும் திட்டமிட்டு செயல்படுத்தி வரும் ஒருவன் கையில், அதே இனத்தை வாழ வைப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு கேட்டு செயல்படுத்தி விடலாம் என்று நினைப்பது (மானம் மரியாதையற்ற செயல் என்பது ஒருபுறம் இருக்கட்டும்) எந்த அளவுக்கு சரியான செயலாக இருக்கும்??? இதற்குப் பெயர் தான் ராஜதந்திரம் என்றால், அது 23ம் புலிகேசியின் ராஜதந்திரத்தை விட எந்த அளவுக்கு மேலானது??? "டேய் திருடா திருடா.... திருடியதையெல்லாம் எல்லாம் இருந்த இடத்திலேயே திருப்பிக் கொண்டுபோய் வைத்து விடு, வேண்டுமென்றால் நானும் கொஞ்சம் தருகிறேன்" என்று கூறும் இந்த ராஜதந்திரம் இதுவரை வரலாற்றில் கேள்விப்படாத விஷயமாக இருக்கிறது. இது ஏதேனும் புதுவிதமான கண்டுபிடிப்பா???

2. மழையில் நனையும் ஒரு ஆட்டுக்காக என்றேனும் ஒரு ஓநாய் உண்மையாக கண்ணீர் வடிக்குமா?

அண்டை நாட்டுடன் நல்லுறவு என்ற கண்ணோட்டம், அண்டை நாட்டுடன் நல்லுறவு கொள்ள விரும்பும் நாட்டுடன் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு அடிப்படையான எதிர்பார்ப்பு என்பதால், ஒரு நாட்டின் குடிமக்களாகிய தமிழர்கள் ஏன் எதிர்பார்க்கக் கூடாது? நல்லுறவு என்பது நரித்தனமாக இருக்கக் கூடாது என்பதை ஏன் சுட்டிக்காட்டக் கூடாது? ஓநாய் என்றுமே ஆடு மழையில் நனைவதை நினைத்து வருந்தப்படப் போவதில்லை. நீங்கள் கூறுகிறீர்கள் இந்த ஓநாயைத் தொடர்ந்து வற்புறுத்தினால், மழையில் நனையும் ஆடுகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் என்று. இது ஓநாயுடனான பழைய கட்சியின் பேச்சுவார்த்தையைப் போல அல்ல, இது புத்தம் புதிது. நியூ வெர்சன் ஆஃப் டாக்கிங் என்று கூறுகிறீர்கள்....(நீங்கள் கூறிய ராஜதந்திர நடவடிக்கை என்ற வார்த்தை நிச்சயமாக அந்த ஓநாயின் காதுகளுக்கு சென்றிருக்கும் அல்லவா? ஒருவேளை இதைக் கேட்டு அது சிரித்திருக்குமோ?... ராஜதந்திரம் என்ற வார்த்தையை குத்தகைக்கு எடுத்தவர்கள் போல் பேசுகிறார்களே.... எங்களுக்கெல்லாம் அது தெரியாதா... என்று ஊளையிட்டு அசிங்கப்படுத்தியிருக்குமோ?)

3. தேர்தலுக்கு முன் இப்படி பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தால் பேசியிருப்பீர்களா? மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பதில் கூற முடியுமா?.

அ. ஆம்

ஆ. இல்லை

இ. பதில் கூற விரும்பவில்லை

உங்கள் பதில் ஆம் என்றிருந்தால், நீங்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் போயிருக்கலாம்.

இனிமேல் என்ன செய்ய முடியும் என்கிற தைரியத்தில் தானே உங்களுக்கு எப்படியெல்லாம் தோன்றுகிறதோ, அப்படியெல்லாம், இந்த மக்கள் எதைக் கூறினாலும் (ராஜதந்திரம் போன்ற கூத்துகளை) நம்புவார்கள் என்கிற கண்ணோட்டத்தில் பேசியிருக்கிறீர்கள். இது போன்ற நிகழ்வுகளை பழைய பார்த்திபன் படத்திலிருந்து பார்த்துப் பார்த்து புளித்து விட்டது.

ஆனால் நீங்கள் 2வது பதிலை தேர்ந்தெடுத்திருந்தால் நியாயமாகவும், சரியானதாகவும் இருந்திருக்கும்.

நீங்கள் 3வது பதிலை தேர்ந்தெடுத்திருந்தால். 5 வருடங்களை முடித்துவிட தயாராகி விட்டீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

4. உங்கள் மகனோ, மகளோ, அல்லது உங்கள் நெருங்கிய உறவினர்களோ யாரேனும், இலங்கையில் நடைபெற்ற இறுதிச் சண்டையின் போது பாதுகாக்கப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்குள் இருந்திருக்கும் பட்சத்தில், உங்களுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்.?

இது ஒரு கற்பனைதான்... மனிதாபிமானம் என்றால் என்ன? என்ற ஒரு கேள்வி ஒரு வாரப்பத்திரிகையில் கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதில், அடுத்தவர்களுடைய நிலையை தன்னுடைய நிலையில் வைத்து சிந்தித்துப் பார்ப்பதுதான் மனிதாபிமானம் என்று அச்சிடப்பட்டிருந்தது. அத்தகைய ஒரு சூழ்நிலையை உங்கள் கற்பனைக்கு கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.

உங்கள் உறவுகளில் யாரேனும் ஒருவர் அநியாயமாக இலங்கைப் போரின் நடுவே சிக்கிக்கொண்டிருக்க நேர்ந்திருந்தால்... அநியாயமாக உயிரிழக்க நேர்ந்திருந்தால்.... அங்கே அநியாயமாக யாரும் உயிரிழக்கவில்லை என்று சொல்லிவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கப்பட்ட கேள்விதான் இது. அநியாயமான உயிரிழப்பை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

சிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்ற திரைப்படம் யூதர்களின் அநியாயமான அழிவைப் பற்றிய ஒரு ஆவணத் தன்மையுடன் கூடிய திரைப்படம். கருப்பு வெள்ளை திரைப்படமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும், ஆனால், படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் ஒரு குழந்தையின் உடை சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும். ஒரு புத்தகத்தில் முக்கியமான வரிகளை சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டு காட்ட விளைவது போல், படத்தின் உச்சக்கட்ட காட்சி இது என்பதை குறிப்பிட்டு காட்டுவதற்காகவே படத்தின் இயக்குநர் ஸ்பீல்பெர்க் அந்த குறியீட்டை பயன்படுத்தியிருப்பார்.

ஒரு குழந்தை தன் உயிருக்குப் பயந்து, தன்னைக் காத்துக் கொள்வதற்காக தெருத்தெருவாக ஓடி, ஒரு சர்ச்சுக்குள் சென்று பிரார்த்தனை செய்யும் ஒரு மரப்பலகைக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்ளும். இதை விட ஒரு மோசமான சூழ்நிலை பூமியில் நிகழப் போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்ட காட்சி இது.

அது போன்ற பல காட்சிகளை இலங்கையில் மிகச்சாதாரணமாக பார்த்து விட்டு கொட்டாவி விட்டுக்கொண்டு திரிந்தவர்கள் தான் நம் மத்திய அரசியல்வாதிகள். குண்டு போடப்படுவதைப் பார்த்து பதுங்கு குழியில் ஒழிந்து கொண்டிருக்கும் குழந்தைகள் கதறி அழுவதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் நாம்.

அந்த பதுங்குக் குழிகளுக்குள் உங்களது,... நமது குழந்தைகளை வைத்து ஒரு நிமிடம் பார்க்க நேர்ந்தால்.... பதறும் மனதுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? அப்படியொரு மனநிலையை விட்டு வெளியில் இருப்பதால் தான் இப்படியொரு கேள்வியை கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இவற்றையும் தாண்டி பல்வேறு கொடூரங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட முடியாத விஷயம். இப்படிப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறைவேற்றிய ஒரு கொடூரக் குறியீடு எப்படி வரவேற்கப்படக்கூடிய ஒன்றாக இருக்க முடியும்.

5. யாசகம் பெற்றுத்தான் உரிமைகள் பெற வேண்டும் என்பதுதான் இறுதியான தீர்வா?

ராஜபக்ஷே இறந்த பின்னும் இலங்கையும் இருக்கப் போகிறது, இலக்கையில் உள்ள தமிழ் இனமும் நீடித்திருக்கப் போகிறது. இன்னும் 10 வருடங்களோ, 15 வருடங்களோ இருக்கப் போகிற ஒரு கொடூரத்தின் குறியீட்டிடம் யாசித்துத்தான் தமிழினத்தை வாழ வைக்க வேண்டும் என்ற தங்களுடைய கண்ணோட்டத்திற்குப் பெயர் தான் ராஜதந்திரமா? (இத்தகைய ராஜதந்திரத்திற்கு பிரமாதமான குப்பைத் தொட்டி ஒன்று காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கிறது. அதையே தாங்களும் உபயோகித்துக் கொள்ளலாம்). இந்தியா ஒரே நாடாக என்றுமே இருந்ததில்லை. தமிழ்நாட்டின் உணர்வுகள் என்றுமே அண்டை மாநிலங்களை தோல் அளவு கூட பாதித்ததில்லை. நமக்கான நியாயத்தை நாமே தேடிக் கொள்ள வேண்டும். அதற்கு ஒற்றுமையான குரல் தேவை. வரலாற்றை சற்று திரும்பிப் பாருங்கள் எந்த இனமும் முழுவதுமாக அழிக்கப்பட்டு போனதில்லை. எந்த இனத்தையும் ஒரு தனி மனிதனோ, ஒரு கும்பலோ, ஒரு அரசோ முழுவதுமாக அழித்து விட்டு போனதில்லை. எல்லா இனங்களும் சிறப்பாக மீண்டு எழுந்துள்ளன. வரலாற்றின் நீண்ட நெடிய அடக்குமுறை வரலாற்றை கவனித்துப் பார்த்தால் ராஜபக்ஷே போன்றவர்கள் வெறும் ஒரு புள்ளிதான். அவர்களை கடந்து வரலாறு நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது. அதற்கான நீண்ட நெடிய சாத்தியங்களும், காலமும், தெம்பும் இங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்குள் ராஜதந்திரம் என்ற பெயரில் ஒரு கொடூரத்தின் குறியீட்டிடம் சென்று காலில் விழுந்துவிட வேண்டிய அவசியம் இல்லை.

6. நீங்கள் மக்களின் உணர்வுகளை கட்சிக்குத் தெரிவிப்பவரா? இல்லை கட்சியின் உணர்வை மக்களுக்குத் தெரிவிப்பவரா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் என்பவர் மக்களுக்குத்தான் முதல் உரிமையாளராக இருக்கிறார். மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பவராகத்தான் ஒரு தலைவர் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படையாக இருப்பதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் மக்களுக்கு சமாதானம் சொல்பவராக மாறிப்போனால் மக்கள் என்னதான் செய்ய முடியும். தேர்ந்தெடுக்கும் வரை ஒருமாதிரியாகவும், தேர்ந்தெடுத்தபின் வேறு மாதிரியாகவும் பேசுவது மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கும் செயல் மட்டுமல்ல, கோபத்துக்குள்ளாக்கும் செயலும் கூட... கட்சியை எப்பொழுதும் இரண்டாம் இடத்தில் வைத்து, மக்களை... அவர்களின் உணர்வுகளை.... முதலிடத்தில் வைப்பதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும். நீங்கள் கட்சியின் உணர்வுகளை மக்களுக்குத் தெரிவிப்பவராக இருந்தால் கட்சியின் அடிவருடியாக கடைசி வரை வாழலாம். இல்லை மக்களின் உணர்வுகளை பேராண்மையோடு கட்சிக்குத் தெரிவிப்பவராக இருந்தால், மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மக்கள் தலைவனாக விளங்கலாம். நீங்கள் அடிவருடியா?... மக்கள் தலைவனா? என்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பெண்கள் எனப் பாராமல் கொலை செய்யத் துணிந்த... போர்க்காலங்களில் பாதுகாப்புப் பகுதி எனக் குறிப்பிடப்பட்ட இடங்களில் குண்டு வீசி அழிக்கத் துணிந்த... நடுநிலையான உலக நாடுகளின் பத்திரிகையாளர்களை, மருத்துவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்த... இன்றுவரை ஐ.நா.வின் நடுநிலையான விசாரணையை ஏற்க பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிற... தனது நாட்டிற்குள் தொலைந்து போனவர்கள் குறித்து பதில் சொல்லத் திராணி இல்லாத... ஒரு மூன்றாம் தர மனிதனிடம் ராஜ தந்திர நடவடிக்கைகள் என்பது செல்லரித்துப் போன பழைய முயற்சி என்பது கடைக்கோடி மனிதனுக்கும் தெரியும் என்பதால், குறைந்த பட்சம் செய்தியாளர்களிடம் அந்த வார்த்தையை உபயோகிக்காமலாவது இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

- சூர்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It