வில்லன் இல்லாத வாழ்க்கையை இந்தியன் எப்போதுமே ரசித்தது கிடையாது. எதிர்மறை கதாபாத்திரத்தை வீழ்த்தும் வீரத்தைப் போற்றுவது இந்தியர்களின் டி.என்.ஏ.-வில் கலந்துவிட்ட ஓர் அம்சமாகும். இதனால் தான் இதிகாசம் காலம் தொட்டு இப்போது வரை கதாநாயகர்களை வழிபடும் மனோபாவம் இந்தியர்களிடம், மற்ற நாட்டு மக்களைவிட அதிகமாக இருக்கிறது.

Modi and Advaniவில்லனை வீழ்த்தும் தந்திரம் தெரிந்தவன் இந்தியனுக்கு தலைவனாகிறான். வீழ்த்துகிறவன் அல்ல. வரலாற்றுப் பக்கங்களில் உள்ள பண்டைய கால போர்க் களங்கள் இதற்கு உதாரணங்களாகும். இதனை நாம் தற்போது இந்திய சினிமாவில் காணலாம்.

நாடு பிடிக்கும் போர்கள் இப்போது இல்லை என்பதால், நாட்டைக் காக்க கதாநாயகர்கள் தோன்றுகிறார்கள். நாட்டைச் சீரழிக்கும் கயவர்கள், நாட்டைச் சுரண்டுபவர்கள், லஞ்சம், ஊழலில் திளைத்திருப்பவர்கள் தான் இப்போது வில்லன்கள்... இவர்களை அடித்து, உதைத்து நாட்டைத் திருத்துபவன் தான் கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறான். சுருக்கமாகச் சொல்வதென்றால் நமது ஷங்கர் பட கதாநாயகனை இதற்கு ஒப்பிடலாம்.

இந்த உத்திதான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கடைபிடிக்கப்பட்டது. ஷங்கர் திரைப்படம் அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஏறக்குறைய ஒரு வருடமாக இந்தப் படத்தை ஓட்டியது.

தேசத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் தீய சக்திகளை அழிக்க அவதாரமெடுத்த நரேந்திர மோடி என்ற பிம்பத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள், முப்பரிமாண நேரலை ஒளிபரப்பு என பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.

வளமான தேசம் குறித்த சித்திரத்தை முன்னிறுத்தி சாதாரண, மத்திய தர வர்க்க இந்திய பிரஜைகளிடமும், பயங்கரவாத பீதியைக் கிளப்பி மேட்டுக்குடி வர்க்கத்திடமும் ஒரே சமயத்தில் ஆதரவு திரட்டப்பட்டது. வளமான தேசம் என்பதை விளக்குகையில், தேசத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சி தடையாக இருப்பதாகவும், பயங்கரவாதத்தை பழி தீர்க்க குஜராத் இனப்படுகொலை நல்ல முன்மாதிரியாகவும் முன் வைக்கப்பட்டது.

இதே போன்றதொரு தேர்தல் உத்தி முன்பு ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியால் கையாளப்பட்டுள்ளது. 80-களின் இறுதியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் இந்துத்துவ சக்திகளால் உக்கிரமாக மேற்கொள்ளப்பட்டது. திறமையின்மையால் நாடு அழிவுப்பாதைக்கு சென்று விடும்; திறமையானவர்களை ஓரம் கட்டவே இட ஒதுக்கீடு பயன்படும் என தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரம் சாதாரண, மத்திய தர வர்க்க இந்திய பிரஜைகளிடம் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேசமயம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் மேட்டுக்குடி மக்களிடம் கிடைத்த ஆதரவை, இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த பயன்படுத்திக் கொண்டது சங்கப்பரிவாரம். அதாவது அத்வானியின் ரத யாத்திரை மூலம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான எழுச்சி மடைமாற்றம் செய்யப்பட்டு, பாபரி மசூதி இடித்து தகர்க்கப்பட்டது. முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்பின் அடையாளம் தான் பாபரி மசூதி என பிரச்சாரம் செய்யப்பட்டது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம், பாபரி மசூதிக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில் பாரதிய ஜனதாக் கட்சி அரசியல் அரங்கில் பிரதான சக்தியாக முன்னுக்கு வந்தது. இப்போது போலவே அப்போதும், அத்வானி ஓர் அவதாரமாக முன்வைக்கப்பட்டார். ஆனால் இந்த அளவுக்கு அப்போது ஊடகங்களின் செல்வாக்கு இல்லை என்பதால், மோடியைப் போல அத்வானியால் சர்வதேச புகழை அடைய முடியவில்லை.

1991-ம் ஆண்டு நடைபெற்ற 10-வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெற்றது. (9-வது மக்களவைக்கான தேர்தல் 1989-ம் ஆண்டு நடைபெற்றது) 11.36 சதவீதமாக இருந்த பாஜக-வின் வாக்கு வங்கி 20.11 சதவீதமாகியது. அதாவது இரண்டே ஆண்டுகளில் அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 8.75 வீதம் உயர்ந்தது. (பாஜக இப்போது மாதிரி மிகப் பெரிய வெற்றியை அப்போது பெற்றிருக்கும்; ஆனால் தேர்தலின் போதே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் காங்கிரஸ் வெற்றி பெற்றது)

தற்போது நடைபெற்ற தேர்தலிலும் பாஜக இதே மாதிரி, வாக்கு வங்கி சதவீதத்தை விரைவாக உயர்த்திக் கொண்டுள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 18.8 சதமாக இருந்த அந்தக் கட்சியின் வாக்கு வங்கி, இப்போது 31 சதமாக உயர்ந்துள்ளது.

இவற்றை எல்லாம் வெறுமனே எண்ணிக்கையில் பார்க்கக் கூடாது. சாமியார்களின் கூடாரம், சங்கமாக வளர்ந்து சர்க்காராக உருவெடுத்துள்ளதன் பின்னால், இந்தியாவில் இந்துத்துவம் எந்தளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தத் தேர்தலில் குஜராத்(26), ராஜஸ்தான்(25), கோவா(2), டெல்லி(7), உத்தரகாண்ட்(5) மற்றும் ஹிமாச்சல பிரதேசம்(4) ஆகிய 6 மாநிலங்களிலும், அந்தமான்(1), தாதர்(1), டாமன்&டையூ(1) மற்றும் சண்டிகர்(1) ஆகிய 4 யூனியன் பிரதேசங்களிலும் பாஜக, அனைத்து தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இந்த 10 பிரதேசங்களிலும் அந்தக் கட்சி 73 தொகுதிகளை கைப்பற்றியது.

இதற்கு இணையாக நாட்டின் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் 71 தொகுதிகளில் பாஜக வென்றது. இதுதவிர அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 67(84) தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் அசாதாரணமான வெற்றியை ஈட்டியதற்கான காரணம் சில மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது, சில மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது.

குறிப்பாக குஜராத்தில் அக்கட்சி அடைந்த வெற்றியை, சர்வாதிகாரத்துக்கு ஜனநாயகத்தில் கிடைத்த வெற்றியாகக் கொள்ளலாம். பொதுவாக ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்குகள், தோல்வியடைந்த வேட்பாளர், மற்ற வேட்பாளர்கள் ஆகியோரின் மொத்த வாக்குகளை விட குறைவாகவே இருக்கும். சில நட்சத்திர வேட்பாளர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் தோல்வியடைந்த வேட்பாளர், மற்ற வேட்பாளர்கள் ஆகியோரின் மொத்த வாக்குகளைக் கூட்டினாலும் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இப்படி ஒரு வெற்றியைப் பெற்றிருப்பது சாதனையாகக் கூட இருக்கலாம்.

குஜராத்தில் யாரும் வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை. மோடி என்ற ஒற்றை மனிதனுக்கே வாக்களித்திருக்கின்றனர். இதனால் தான் ஜனநாயகத்தில் சர்வாதிகாரிக்கு கிடைத்த வெற்றி என்கிறோம். ஆம், சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உள்ள ஆர்.எஸ்.எஸ். இதனாலேயே நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்தது.

ஆர்.எஸ்.எஸ். ஆட்சி செய்யும் குஜராத்திலும், பாஜக ஆட்சி செய்யும், ஆட்சி செய்த மாநிலங்களிலும் இந்துத்துவ ஃபாசிஸம் வேரூன்றியுள்ளதன் அளவிற்கேற்ப தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இந்துத்துவ ஃபாசிஸம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கு அசீமானந்தாவின் வாக்குமூலம் சிறந்த சான்றாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அந்தமானுக்கு முழு நேர ஊழியராக அனுப்பப்பட்ட அசீமானந்தா பழங்குடிகள் மத்தியில், இந்துத்துவ ஃபாசிஸத்தை போதித்தார். அங்குள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் பாரம்பரியமாக காங்கிரஸ் வெற்றி பெற்று வந்த நிலையை மாற்றி, அதனை பாரதிய ஜனதா வசமாக்கினார். இந்துத்துவத்தை நிலைநாட்டுவதில் அரசியலும் ஒரு பகுதி என்கிறார் அசீமானந்தா. அந்தமானை விட்டு அவர் வந்த பின்னரும், அவர் ஊன்றிய இந்துத்துவ நச்சு விதை எப்படி விருட்சமாக வளர்ந்துள்ளது என்பதற்கு அவரது வாக்குமூலமே சான்று:

"சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பெண் தன் குழந்தைக்கு பால் கேட்டு வந்தாள். எங்கள் ஆட்கள் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மூன்று நாட்களாக குழந்தை எதுவும் சாப்பிடவில்லை. இப்போது பால் கொடுக்காவிட்டால் செத்துவிடும் என்று அவள் மன்றாடினாள். போய் சுவாமிஜியிடம் கேள் என்று என்னிடம் அவளை அனுப்பினார்கள். அவர்கள் சொன்னதுதான் சரி என்று அவளிடம் சொன்னேன். உனக்கு இங்கே பால் தர முடியாது என்று கூறிவிட்டேன்"

அசீமானந்தா அந்தமானிலிருந்து குஜராத்தின் டாங்க்ஸ் மாவட்டப் பழங்குடிகளிடம் சங்கப் பணியாற்ற அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கும் இந்துத்துவத்தை நடைமுறைப்படுத்திய அசீமானந்தா, கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரங்களை அரங்கேற்றுகிறார். அப்போது முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் அசீமானந்தாவுக்கு போதிய ஆதரவுக் கரம் நீட்டவில்லை. அந்நேரம் நரேந்திர மோடி குஜராத் முதல்வராவதற்காக 'கீழறுப்பு' வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மோடி தன்னிடம் பகிர்ந்து கொண்டதை அசீமானந்தா பதிவு செய்கிறார்:

"கேசுபாய் உங்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு தெரியும். ஆனால் சுவாமிஜி, நீங்கள் செய்யும் வேலையோடு ஒப்பிட எதுவும் இல்லை. நீங்கள் செய்வதுதான் அசல் வேலை. இப்போது நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று தீர்மானமாகிவிட்டது. நான் வந்ததும் உங்கள் வேலையை நானே செய்வேன். எல்லாம் சுலபமாகிவிடும்."

மோடி முதல்வரான பின் நடைபெற்ற கலவரத்தில், பன்ச்மகால் மாவட்டத்தில் இருந்த முஸ்லிம்களைத் துடைத்தெறியும் வேலையை அசீமானந்தா முன்னின்று நடத்தியுள்ளார். (இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் இந்துத்துவ சக்திகளுக்கு தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அசீமானந்தா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இணையத்தில் அவரது ஒப்புதல் வாக்குமூலம் கிடைக்கிறது. வாசகர்கள் படிக்கவும்)

இப்படி ஆயிரக்கணக்கான அசீமானந்தாக்கள் முழு நேர ஊழியர்களாக நாடு முழுவதும் விரவிக் கிடக்கிறார்கள். குஜராத் முதல்வராக இருந்து அசீமானந்தாவுக்கு செய்ததை, இனி இந்தியப் பிரதமராக தேசம் முழுவதும் உள்ள அசீமானந்தாக்களுக்கும், அமீத்ஷாக்களுக்கும் மோடி செய்வார். குறிப்பாக பாஜக ஆளும், ஆட்சி செய்த மாநிலங்களிலும், கூட்டணி கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இந்துத்துவத்தின் வளர்ச்சி இனி விஸ்வரூபமெடுக்கும்.

ஷங்கர் பட நாயகன்கள் எப்படி திரையில் ஊழலுக்கு எதிராக கொதித்தெழுந்து விட்டு, நிஜ வாழ்க்கையில் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறார்களோ, அதே போலத்தான் மோடியின் செயல்பாடுகளும் அமையும். ஏற்கனவே ஐந்து ஆண்டுகால வாஜ்பாய் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க ஓர் அமைச்சகமே செயல்பட்ட முன்னோடி மோடிக்கு முன்னால் உள்ளது. மோடி ஒன்றும் முதலாளித்துவ எதிரி கிடையாது. சொல்லப்போனால் முதலாளிகளாலேயே மோடி பிரதமராகியிருக்கிறார். ஃபாசிஸமும் முதலாளித்துவமும் வேறு வேறு அல்ல. ஃபாசிஸம் என்பது அழுகும் நிலையில் உள்ள முதலாளித்துவம் (Fascism is Capitalism in decay) என லெனின் கூறுவது நினைவு கூரத்தக்கது.

மற்றபடி, நரேந்திர மோடி பாப்பனர் கிடையாது என்பதால் அவர் ஆட்சியில் நீடிக்க ஆர்.எஸ்.எஸ். விடாது என சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டாம். ஆட்சியாளராக பார்ப்பனர் தான் இருக்க வேண்டும் என மனு கூறவில்லை. இந்துத்துவம் முன்னிறுத்தும் மகோன்னத ஆட்சியாளர்களான ஒளரங்கசீப்பை எதிர்த்த சத்திரபதி சிவாஜியும், அக்பரை எதிர்த்த ராணா பிரதாப் சிங்கும் பார்ப்பன‌ர்கள் அல்ல.

- இயக்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It