I

                பள்ளிப் பருவத்து நினைவுகளில் அழியாமல் கூடவே தொடர்ந்து வருகின்றவைகள் என சில எல்லோருக்குள்ளும் கண்விழித்துக் கொண்டு கிடக்கும், அப்படிப்பட்ட நினைவுகளைப் பலரிடமும் கேட்டுச் சேகரிப்பதே ஒரு பேரானந்தம் தான். எனது நண்பனொருவன் செங்கோட்டையில் இருக்கிறான். குற்றால அருவியில் மல்யுத்தம் போன்று மனித மாமிசங்களின் இடிபாடுகளுக்கு நடுவில் தலையைக் காட்டிவிட்டு அவனைப் பார்க்கப் போய்விட்டேன். அவனது நினைவு மண்டலம் அதிசயத்தக்கதாக இருந்தது. ஒன்றையும் மறக்கவில்லை. அதைவிட ஒவ்வொன்றையும் நேரம் காலமெனத் துல்லியமாகக் கூறியது அதியசயமாக இருந்தது. ‘என்னென்ன அதிசயமடா ஆண்டவா’ என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். அவன் நினைவுப்படுத்திய ஒன்றை இப்பொழுது உங்களுக்குச் சொல்லுகிறேன்.

handicapped 300பெரிய சிரிப்புப் பேர்வழி அவன். அக்காலங்களில் எங்களுக்குக் கால்சட்டைதான். அதுவும் அழுக்குத் தெரியாத காக்கிக் கால்சட்டைதான். அவன் தன்னிடம் யார் வந்தாலும் உடனே ‘எங்க தரையில் படாமல் உட்கார்ந்து எழுந்திரு பார்ப்போம்’ என்பான். வந்தவன், ‘இது என்ன பிரமாதம்’ என்று உடனே அதைச் செய்வான். இவன் ‘திரும்பு பார்ப்போம்’ என்பான். ‘அடே அப்பா’ பின்னால காந்தம் எக்கச்சக்கமா இருக்கு என்று விழுந்து விழுந்து சிரிப்பான். சுற்றி நிற்கிற பசங்களும் சிரிப்பாங்க. முதன்முதலில் மாட்டிக்கிட்டவனுக்கு ஒன்றும் புரியாது. திரும்பித் திரும்பிப் பார்ப்பான். “பிளவுக்குள்ள ஒங் கால்சட்ட முழுசும் போயிட்டு பாரு” என்பான். ‘எனக்குப் பாரு!” என்று உடனே அவன் உட்கார்ந்து காட்டுவான். அவனுக்குச் சட்டை எப்பொழுதும் போல இருக்கும். அது ஒரு தந்திரம். ஒரே சிரிப்புமயம் தான். செங்கோட்டையில் சந்தித்த சிறிதுநேரத்தில் “உனக்குக் காந்தம் அதிகமாக இருந்திச்சுப்பா” என்று அவன் நாற்பது ஆண்டுகள் கழித்துச் சொன்னபோதும் ஒரே சிரிப்பு அலைகள் அந்த வீடு முழுவதும். இப்படிச் சிரிப்புக்குள் வாழச் சிலரால்தான் முடிகிறது. நான் அப்படியே அவனுக்கு நேர் எதிர்மாறான ஆளு.

                நான் அவனிடம் கேட்டேன். “நம்ம கூடப் பள்ளிக்கூடத்துக்குக் காலிரண்டும் பின்னமுற்றுப் பாரம் தரையில் உரச நொண்டி நொண்டி நடந்து வருவாரே! அவர் எப்படி இருக்கார்?”

                                ‘அவரா! கல்யாணமெல்லாம் நடந்துச்சு. ஆனா! பாரு! ஆறுமாதங்கூட வாழல. அந்தப் பொண்ணு அவங்க வீட்டுக்குத் தண்ணீ எடுத்து ஊத்தறவங்      கூட ஓடிப் போச்சு!

  ‘ஐயோ! அந்தத் துன்பம் வேறயா!

                கால்கள் சூம்பி, பின்னிக்கிடந்த அந்தச் சிவந்த மெல்லிய உடலும் அவர் ஓரெட்டு எடுத்து வைக்கப்பட்ட பாடும் என் பள்ளிப்பருவ நினைவுகளில் அழியாமல் தொடர்கிற ஒன்றாகும். எங்கள் உறவுக்காரங்க குடும்பத்திலேயும் இந்தக் கொடுமை நிகழ்ந்தது. பின்னால் ஜெயகாந்தனின் ‘நான் இருக்கிறேன்’ சிறுகதையைப் படித்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழ நேர்ந்ததற்கு இது ஒரு காரணம்.

                அந்தக் கதையை இப்பொழுது இந்தக் கட்டுரைக்காக மீண்டும் வாசித்தேன். அழுகைக்கான அறிகுறி எதுவுமே உடம்பில் தோன்றவில்லை. 1961-இல் எழுதப்பட்ட அந்தக் கதையை அப்பொழுது வாசிக்கும் போது வயது 22. எம்.ஏ.படித்துக் கொண்டிருந்தேன். வாழ்வு குறித்த கனவுகள் ததும்பிக் கிடந்த காலம். இப்பொழுது வயது 61. இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கையில் பட்ட ‘அடிகளால்’ எந்த அளவிற்கு மனம் மரத்துப் போய் விட்டது என்பதை அறிய நேர்ந்தது கொடுமை. ‘மற்றவர்களாக’ மாறிவாழ்தல் என்பது எப்படிக் காணாமல் போய்விட்டது? ஆச்சரியம்! அதனால்தான் வயதான அரசியல்வாதிகளால் இந்த அளவிற்கு மக்கள் குறித்து எந்த ஈவு இரக்கமும் இல்லாமல் பெரும் முதலாளித்துவத்திற்காக இலட்சக்கணக்கான பேர்களைச் சல்வா ஜீடும் (தூய்மை வேட்டை), பச்சை வேட்டை என்ற பேரில் சுட்டுப் புதைக்க முடிகிறதா? அல்லது பக்கத்து வீட்டில் கொன்று புதைப்பதை வேடிக்கை பார்க்க முடிகிறதா? ஜெயகாந்தனின் ‘நான் இருக்கிறேன்’ கதையில் வரும் பெரும் நோயாளிக்காரனின் உடம்பு மரத்துப் போவது போல, இந்த முதிய அரசியல்வாதிகளின் மனமும் மரத்துப் போய்விடும் போலும். இந்தக் காரணமாகத்தான் முக்கியமான பொறுப்புக்களில் இருந்து முதியவர்களை ஓய்வு என்று வீட்டுக்கு அனுப்பும் முறைமை ஏற்பட்டதோ? அப்படியென்றால் அரசியல்வாதிகளை அல்லவா முதலில் அனுப்ப வேண்டும்! அன்பை, அருளை, இரக்கத்தை இழந்த அறிவு, பாசிசத்தை நோக்கிதான் நகர்கிறது. எனவே ஒரு நாடு நலம் பெற முதலில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கடுகினும் சிறுகிய முதியவர்களை அரசியலிலிருந்து வெளியேற்றுவதுதான் எனச் சொல்லத் தோன்றுகிறது.

II

                கிரேக்கத்தில் எப்படிப்பட்ட அரசு அமைய வேண்டும் எனக் கேள்வி-பதில் அடிப்படையில் ஆராய்கிற பிளேட்டோ, தனது ‘குடியரசு’ நூலில் மனிதர்களைத் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு எனப் பிரிக்கிறார். நமது நாட்டு நால்வர்ணப் பாகுபாடு நினைவுக்கு வருகிறது. இவ்வாறு பிரிக்கிற பிளேட்டோ உடலாலும் உள்ளத்தாலும் ஊனமற்ற ஒரு சமூகத்தைக் கட்டமைப்பது குறித்துக் கனவு காண்கிறார். அப்படி ஒரு சமூகம் அமைய வேண்டுமென்றால் எல்லா வகையிலும் முழுமையான உடல்நலப் பேறு பெற்றவர்களை மட்டுமே ‘திருமணம்’ செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே ‘மறு உற்பத்தியில்’ ஈடுபட வேண்டும். அப்பொழுதூன் “வளமான குழந்தைகள்” பிறக்கும். சமூகம் சிறக்கும் என்கிறான். இதன்மூலம் நோயாளிகள், ஊனமுற்றோர் இருப்பையே ஒரத்திற்குத் தள்ளி விடுகிறார். இவராவது பரவாயில்லை. ஜெர்மன் தத்துவஞானி நீட்டே உயர்ந்த மனிதர்களை உருவாக்கும் தனது திட்டத்திற்காக, நோயாளிகள், ஊனமுற்றோர் அனைவரையும் மலை உச்சியிலிருந்து தலைகுப்புறத் தள்ளி அழித்துவிட வேண்டுமென்கிறார். மனிதாபிமானற்ற அடிமை வியாபாரத்தை ‘ஓகோ’வென்று நடத்திய ஐரோப்பிய மூளையிலிருந்து பிறந்த சிந்தனைகள் இவை. ஆனால் அத்தகைய ஐரோப்பியச் சூழலில் இருந்துதான் மார்க்சியமும் பிறந்தது. இருட்டுதானே வெளிச்சத்தைப் பெற்றெடுக்கிறது.

                ஊனமுற்றோர் என்று சொல்லக்கூடாது. “மாற்றுத் திறனாளிகள்” என்றுதான் அழைக்க வேண்டுமென அரசு ஆணை இட்டுள்ளது. பேருந்தில் அவர்களுக்கென்று ‘இருக்கைகளை’ ஒதுக்கியுள்ளது. அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ‘ஏ’-பி-பிரிவு வேலைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றம் ஆணை இட்டுள்ளது. அவர்களுக்கெனச் ‘சங்கங்கள்’ பல(?) உருவாகியுள்ளன. பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அவர்கள் நடமாடுவதற்கான மூன்று சக்கர வண்டி உட்படப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. இவை எல்லாம் மனித நேயச் சிந்தனைகளும் மார்க்சியமும் மேலெழுந்து வினைபுரிந்த 20-ஆம் நூற்றாண்டின் நன்கொடை எனச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனித சரித்திரத்தில் இந்த 20 ஆம் நூற்றாண்டில்தான் இந்த அளவிற்கு ஊனமுற்றோர் தொகையும் கூடியுள்ளது. இந்தியாவில் மட்டும் ஊனமுற்றோர் தொகை குறித்த புள்ளிவிவரம் நம்மைத் திடுக்கிட வைக்கிறது. கண் தெரியாதவர்கள் 4.005 மில்லியன். காது கேட்காதவர்கள் 3.242 மில்லியன். ஊமைகள் 1.966 மில்லியன். கண்புரை விழுந்தவர்கள் 8.939 மில்லியன். காதும் வாயும் இழந்தவர்கள் 4.482 மில்லியன். மூளை வளர்ச்சியற்றவர்கள் 20 மில்லியன். உடல் ஊனமுற்றோர்கள் 16.154 மில்லியன். ஏறத்தாழ மொத்த மக்கள் தொகையில் 100க்கு 2 பேர் (1.9%) ஏதோ ஒரு வகையில் ஊனமுற்றவர்களாக இந்தியாவில் உள்ளனர்.

இந்தத் தொகைக்கு யார் பொறுப்பு? தனிமனிதர்கள், அவர்கள் குடும்பப் பாரம்பரியம் மட்டும்தானா? இல்லை என்கிறது அறிவியல்! சமூகச்சூழலில் உள்ள பல்வேறு பெருங்கேடுகள்தான் காரணம். போதை வியாபாரம், போலி மருந்து வியாபாரம், இயற்கை உற்பத்தி அழிந்து செயற்கை உற்பத்தி, கலப்படம், போதிய சுகாதார, மருத்துவ வசதி இன்மை. கல்வி இன்மை. சுற்றுச்சூழல் கேடு. எல்லாவற்றிற்கும் மேலாக வறுமை! இந்த விலைவாசியில் ஒருநாளைக்கு 20 ரூபாய் வருமானத்தில் நாட்டின் மக்கள் தொகையில் 83.4% விழுக்காடு மக்கள் வாழ்கிறார்கள் (?). ‘அரசு’ கொடுக்கும் புள்ளிவிவரமே இவ்வாறு கூறுகிறதென்றால் நம் இருப்பு எப்படிப்பட்ட சூழலில் நடக்கிறது பாருங்கள்!

                என் பருவகாலங்களில் என்னை அழ வைத்த ஜெயகாந்தனின் அந்தக் கதைக்கு வருகிறேன். ஊருக்கு வெளியே ஒரு சத்திரம். சத்திரத்தில் ‘பெருவியாதிகாரப் பிச்சைக்காரன்’. கை விரல்களும் இல்லை. கால் விரல்களும் இல்லை. நோய் தின்று தீர்த்திருக்களிறது. இரவில் பிச்சை எடுத்து வந்ததை லயித்துச் சாப்பிடுகிறான். முடித்தவுடன் பீடியைப் பற்றவைத்துக் கொள்கிறான். மேலே நிலா. கீழே குளம். சுற்றி வயல்வெளி. “உலகம் எவ்வளவு அழகாயிருக்கு! எல்லாப் பொருளும் பார்த்தவங்க மனச சந்தோஷப்பட வைக்குது. ஆனா நான்..? என்னைப் பார்த்தவுடன் ஒவ்வொருத்தர் முகத்திலேயும் ஏற்படற மாற்றம்...” ‘இவனெல்லாம் ஏன்தான் உசிரை வெச்சிக்கிட்டு இருக்கானோ, இந்தத் தீராத நோயோட’ நினைத்துப் பார்த்துக் கொள்கிறான்.

குளத்தில் இறங்கிக் குளிக்கிறான். வானத்தைப் பார்க்கிறான். அருந்ததி நட்சத்திரம் மங்கலா தெரியுது. லேசா எழுதி கலைச்சிட்ட மாதிரி. “புள்ளி, மானத்தில இருக்கா, கண்ணுலே இருக்கான்னு கண்ணைக் கசக்கிட்டு, எங்கெயுமில்லேன்னு சொல்லிவிடுவாங்க பலபேரு... அருந்ததியைப் பார்த்தவனுக்கு ஆறு மாசத்துக்குச் சாவு இல்லேம்பாங்க..” இப்படிச் சொல்லிக் கொள்கிறான். மெயில் வர்ற ஒளி தெரியுது. ‘மணி பன்னெண்டா ஆயிருச்சு, ஆச்சரியப்பட்டுக் கொள்கிறான். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இரண்டடி உயரத்திற்கு அசைகின்ற உருவம்! ஏதாவது மிருகமா... மனித உருவமென்று அறிந்து தனது விரல்களற்ற காலால் ஓடிச்சென்று காப்பாற்றுகிறான். அவன் இடுப்புக்குக் கீழே நிற்க இயலாத வெறுங் கால்களைக் கொண்டவன் எனத் தெரிகிறது. ஊர்ந்து ஊர்ந்து ரயிலின் முன்னால் விழுந்து சாக வந்திருக்கிறான். “என்னால் எல்லாருக்கும் பாரம்! நான் வயத்திலே ஜனித்ததிலிருந்து எங்க அம்மா என்னைச் சுமந்துக்கிட்டே இருக்காங்க” ஓவென்று அழுகிறான்.

                ‘சாகப்படாது ஐயா... அதான் ஒரு நாளைக்கு எல்லாருமே சாகப் போறமே... அதுவரைக்கும் இருந்துதான் சாவமே’

சமாதானம் கூறுகிறான். அவன் சாக முடிவெடுத்த நிகழ்ச்சியைச் சொல்லுகிறான். நாட்டு வைத்தியர் நடக்க வைத்துவிடுவாரென்று பொண்டாட்டி சுகத்தோடு வாழும் தம்பியிடம் சண்டை போட்டு, அவனும் ‘நொண்டி’ன்னு சொல்லிட்டான்னு அழுது புரண்டு காசு புரட்டி பஸ்ல கூட்டிட்டு போறா அம்மா. வைத்தியர் கால பாத்திட்டு முடியாதுன்னுட்டான். “இவன் ஊரை ஏமாத்துகிற மருத்துவராம்” அம்மா தீர்ப்பு. “உன்ன வேலூர் மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போறேன்” அம்மாவின் அடுத்த முயற்சி. காலில்லை என்பதைவிட, அண்ணனும் நொண்டி என்று சொன்னதைவிட அம்மா படுற சிரமம்தான் அவனைக் கொல்லத் தொடங்குகிறது. கூடவே, திரும்புகிற பஸ்ஸில் நடந்த நிகழ்ச்சி. அம்மாவோடு பெண்கள் சீட்டில் உட்கார்ந்து கொள்ளுகிறான். பிறகு ஒரு நிறுத்தத்தில் ஏறி வந்த அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டே வந்த கண்டக்டர் இவன் காலைக் கவனிக்காமல் “இந்தாய்யா ஆம்பளே, பொம்மனாட்டி நிக்கிறாங்க இல்லே?” என்றவுடன் எழுந்து நிற்கிறான். கால்கள் நடுங்க.

                ‘ஐயா! ஐயா! “; தாயின் பரிதாபக் குரல். ஐயா! அவன் நொண்டி ஐயா! நிற்க முடியாதையா” இன்னொருத்தர் சொல்லித் தன் காதால் கேட்கப் பெறாத அந்த வார்த்தையைத் தானே சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமான சூழல. கூடவே எல்லோருடைய அனுதாபக் குரல். ஒரு நிமிடத்தில் அவன் நெஞ்சில் கனம் ஏறிவிட்டது.

                இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டே வரவர, வியாதிக்காரன் தனக்குள்ளே ஓடத் தொடங்கிவிட்டான். இவனுக்கு இன்னும் ‘வயசு’ இருக்கு, வாழ்க்கை இருக்கு... இவனுக்கினு வருத்தப்படத் தாய் இருக்கா, உறவு இருக்கு, பரிதாப்பட உலகு இருக்கு. எனக்கு யார் இருக்கா? நான் வாழணும்னு ஆசைப்படற ஜீவன் என்னைத்தவிர இன்னொண்ணு உண்டா? பஸ்ல உட்கார்ற பிரச்சன இவனுக்கு. நான் பஸ்லே ஏறத்தான் முடியுமா? அந்தச் சத்திரத்தில் அந்த இருட்டில் பக்கத்தில் படுத்திருந்தவனின் கொட்டாவிச் சத்தம் வந்தவுடன் தனது நினைவு கலைந்தவனாய், ‘தம்பி’ கால் இல்லேன்னா என்ன? கையிருக்குப்பா! கையால இந்த உலகத்தையே வளைக்கலாமே! இல்லேங்கறத்துக்காகச் செத்து இருந்தா மனுச் சாதியே பூண்டத்துப் போயிருக்கும் ரெக்கை இல்லாததனால்தான் விர்ருவிர்ருன்னு ஏரோபிளேன்லே பறக்கிறான்... இப்படிப்பல பேசிவிட்டுச் சொல்றான்.

                நீ என்னா என்னை மாதிரி தீராத நோயாளியா? நானே வாழறப்போ நீ சாகப்போறேங்கறியே... உனக்கு காலு இல்லே-அவ்வளவுதான். எனக்கு இருக்கிறதெல்லாம் கொஞ்ச கொஞ்சமாப் போயிக்கிட்டே இருக்கு. இந்தக் கையாலே முந்தா நாளு ஒரு கொழந்தையைத் தூக்கிட்டேன். கொழந்தையைத் தூக்கணும்கிற ஆசையினாலேயா தூக்கினேன்? சீ! அந்த ஆசை எனக்கு வரலாமா?

தண்டவாளத்தில் வந்து நிக்கிதே. ரயிலு வர்ற நேரமாச்சேன்னு பதறித்தூக்கிட்டேன். என் உடம்பிலே சொரணை அத்தே போச்சு. ஆனாலும் ஒரு குழந்தையைத் தூக்கறோம்கிற நெனைப்பிலேயே என் மனம் சிலிர்த்துப் போச்சு. ஆனா, ஆனா அதுக்காக அந்தப் பெத்தவங்க என்னை அடிக்க வந்துட்டாங்க தெரியுமாய்யா?

                மனுசனா பொறந்தும், மனுசனுக்குள்ள எந்தச் சொகத்தையும் எந்த உரிமையையும் அநுபவிக்கமுடியாம நான் வாழறேனே... நான் ஒரு பிசாசு மாதிரி தனியா குந்திட்டு வாழறதா நெனச்சி என்னையே ஏமாத்திக்கிறேனே”

என்று கொஞ்சமாக விம்ம ஆரம்பித்து விக்கி விக்கி அழுகிறான் வியாதிக்காரன். சிறிது நேரம் மௌனம். கொட்டாவிச் சத்தம் மீண்டும் கேட்கிறது.

                ‘தூக்கம் வருதா? படுத்துக்க ஐயா! தூங்கறது ரொம்பச் சுகம். செத்தாத் தூங்க முடியாது, கேட்டுக்க. பொழுது விடிஞ்சி பெத்த மகராசிக்குப் புள்ளையாய்ப் போய்ச்சேரு! உனக்கு நான் கடைசியாச் சொல்றது இதுதான். காலு இல்லேன்னு நெனச்சி நீ யாருக்கும் பாரமா இருக்காதே. இப்ப யாரோட துணையுமில்லாம எப்படிச் சாக வந்தியோ. அந்த மாதிரி வாழப்போ!

விடிந்தது. ஆறு மணிக்குப் போகும் பார்சல் வண்டி புகை கக்கி அழுதவாறு நின்றிருந்தது. அங்கு மனிதர்கள் மொய்த்திருந்தனர். பக்கத்துக் காலனியிலிருந்து ‘ஐயோ! கண்ணா!” என்று அலறிக் கொண்டு அம்மா ஓடிவந்தாள். அம்மா! நான் இருக்கிறேன் அம்மா! என்கிறான் மகன். பெருங்குரலில் கதறி அழுகிறான். ‘நானே இருக்கிறேன்’ என்று நோயாளி கூறியதும் நமக்குள் பரவுகிறது.

                ‘மாற்றுத் திறனாளிகளின்’ உலகத்தைத் தரிசித்த புதியதொரு அனுபவம் நம் அழுகையோடு வந்து கலக்கிறது. ஏதோ ஒரு வகையில் ஊனமில்லாதவர்கள். ஏதோ ஒரு வேளையிலாவது ஊனமில்லாதவர்கள் யார் இருக்கிறார்கள் இங்கே! கோபப்படுகிறவர்கள், பெரும்முதலாளிகள், கொடும்கஞ்சப்பிரபுகள், அடிப்படைவாதிகள் இவர்களைவிடப் பெருங்குருடர்கள் வேறு யார்?

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8 (செல்:9003037904, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It