ஒரு முன்மாதிரியற்ற வரலாற்றை நாம் மறக்கும்பொழுது, அது மீண்டும் நம்முடைய வாழ்க்கையில் நிகழும். அதனால், வரலாற்றைப் பற்றிய பார்வையில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பது மேலைநாட்டு அறிஞர் ஒருவரின் கூற்றாகும்.
காந்தி பிறந்த மண்ணில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக, மிகப்பெரும் கலவரம் சங்பரிவார்களால் 2002ம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,50,000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இந்த நிகழ்வு ஒட்டுமொத்த உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவைப் பற்றிய தவறான புரிதலை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. மாவட்ட அதிகாரமும் காவல் துறை நிர்வாகமும் கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது. கூடுதலாக அவர்களும் கலவரத்தில் பங்கு எடுத்துக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு டி.ஜி. விபூதி நாராயணராய், 1995ம் ஆண்டு ‘வகுப்புக் கலவரங்களில் போலீஸின் நடுநிலைமை’ குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டார். எந்தக் கலவரத்தையும் 24 மணி நேரத்திற்குள் அடக்கிவிட முடியும் என்றும், அதற்கு மேல் கலவரம் நீடிப்பது என்பது போலீஸும், அரசும் விரும்பினால் மட்டுமே சாத்தியம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார்.
ஆனால், குஜராத்தில் இரண்டு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடத்தப்பட்டது. இந்த கலவரத்தை, மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு தலைமையேற்று நடத்தியது. மாநில முதல்வராக இருந்து பிரதமராக மாறுவதற்கு குஜராத் கலவரம் மோடிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்தக் கொடூரமான வரலாற்றை நாம் மறந்து விட்டோம். ஆனால், குஜராத்தில் உள்ள கலவரத்தில் பாதிக்கப்பட்ட எவராலும் இதை மறக்க முடியாது.
ஏனென்றால், இன்னும் அவர்களுக்கான நீதியோ, மறுவாழ்வு திட்டமோ, கலவரக்காரர்களுக்கு தண்டனையோ என்று எந்த நிகழ்வுகளும் முழுமை பெறவில்லை என்று சொல்லலாம்.
கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் வீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் பெண்களின் பெயர்களை கூறி, நான்தான் இவளை கற்பழித்தேன் என்று கிண்டல் செய்யும் காட்சிகள் குஜராத்தில் அன்றாட நிகழ்வுகளாகும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், வீடுகளை இழந்த மக்களும், அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலும் இன்னும் இருக்கின்றது.
இந்த நிகழ்வுகளை நாம் மறந்தோமானால், நம்முடைய வாழ்க்கையிலும் இது ஒரு நாள் நிகழும். சங்பரிவார்களின் உண்மை முகத்தை மக்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஃபாசிசத்தை இந்தியாவிலிருந்தே துடைத்தெறிய வேண்டும்.
சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிரõக நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலைகளுக்குப்பிறகு, இந்தியாவில் இந்த நிகழ்வுகள் குறைந்துள்ளதா என்று பார்த்தால், அதிகரித்துள்ளது என்றே சொல்ல முடியும். அதன்பிறகு அஸ்ஸலாம் கலவரம், முஸஃபர் நகர் கலவரம், காந்தாமல் கலவரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். தற்பொழுது, ஆட்சியில் இருக்கும் மோடியின் சமூக, வரலாற்று, கலாச்சார மற்றும் கல்விசார் துறைகளை சங்பரிவார்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர்.
குஜராத்தின் தற்போதைய நிலையைப்பற்றி அங்குள்ள பாரதிய முஸ்லிம் மஹிளா அந்தோலன் அமைப்பின் நிறுவனர் ஷக்கியா சோனம் குறிப்பிடும்பொழுது, 14 ஆண்டுகளை கடந்தும் குஜராத் கலவரத்தில் உயிர்ப்பிழைத்த மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் இந்துத்துவா அடிப்படைவாத அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டனர். கலவரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பியோடி அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த அகதி முகாம்கள் கூட அரசுகளால் ஏற்படுத்தப்பட்டதல்ல. பெரும்பாலான அகதிகள் முகாம் கபரஸ்தானம், தர்ஹாக்களும், திறந்தவெளி மைதானங்களும் தான் அவர்களுக்கு புகலிடமாக இருந்து வருகின்றது. அடிப்படை தேவைகளான குடிநீர், சிறுநீர் கழிப்பிடம், போர்வைகள், உணவின்றி மிகவும் கஷ்டப்பட்டனர்.
இந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் அரசு முறையாக உதவிகளை செய்து கொடுக்கவில்லை. முஸ்லிம் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தான் இன்றும் உதவி செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடும் வழங்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுவதற்கும், வெளியே÷றிய மக்களை மீள்குடியேற்றுவதிலும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீடுகளையும், சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு அற்பத் தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தேதி வரை உயிர் பிழைத்தவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை அல்லது மறுகட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றார்.
குஜராத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் தலைவர் செட்ரிக் பிரகாஷ் அவர்கள் கூறும்பொழுது, சுதந்திர இந்தியாவில் 2002 குஜராத் இனப்படுகொலை என்பது இரத்தக் கறை படிந்த நிகழ்வாகும். இதில், வருந்தத்தக்க ஒரு நிகழ்வு என்னவென்றால், கொலை செய்தவர்கள், கற்பழிப்பு செய்தவர்கள், தீ வைத்தவர்கள், கொள்ளையடித்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றனர். உண்மைக் குற்றவாளிகள் ஒரு சில பேர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் இன்று வீதியில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சில முஸ்லிம்கள் இன்றும் நீதிக்காகவும், உண்மைக்காகவும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உண்மைகளை ஒருபோதும் மூடி மறைக்க முடியாது. பன்மைச்சமூகமாக வாழும் நாம் நீதித்துறை நீதியின் பக்கம் நிற்க முயல வேண்டும். ஊடகத்துறை உண்மையை உரைக்க வேண்டும். சிவில் சமூகம் பாசிச மற்றும் அடிப்படைவாத சக்திகளை எதிர் கொள்வதற்கு தைரியமாக இருக்க வேண்டும். அதுவே, இனியொரு குஜராத் நிகழ்வுகளை நாம் வராமல் தடுக்க முடியும்.
குஜராத்தில் சமூக செயற்பாட்டாளர் திரேந்திரா பந்தா என்பவர் கூறும்பொழுது, 2002 குஜராத் இனப்படுகொலை என்பது மறக்க முடியாத ஒன்றாகும். சங்பரிவார்கள் ஹிந்து ராஷ்ட்ராவை அமைப்பதற்கான சோதனைக்கூடமாக குஜராத்தைப் பயன்படுத்தினர். இந்தியாவின் மிகப்பெரும் அடிப்படைவாதிகள் சங்பரிவார்கள்தான். 2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள், 20072008ல் காந்தமாலில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள், 2014ல் முஸஃபர் நகரில் மீண்டும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள்.
2016ல் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? முற்போக்குச் சிந்தனையாளர்களும், தலித்துகளும், நாத்திகர்களும், பகுத்தறிவுவாதிகளும் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் தேசியவாதம் என்கிறார்கள். நாட்டின் மதச்சார்பற்ற தன்மையையும், ஜனநாயக முறையையும் பிரமாணியத்துவமாக மாற்ற நினைக்கிறார்கள். இதை தொடங்கியும் விட்டார்கள். பல்கலைக்கழகங்கள், ஊடகத்துறை, அதிகாரத்துறை, காவல்துறை மற்றும் நீதித்துறையும் காவிமயமாகி கொண்டிருக்கின்றது.
இவர்களுக்கு எதிராக பேசவும், சிந்திக்கவும், எழுதவும் தொடங்கும் பொழுது தேசவிரோதிகளாக மாற்றப்படுவார்கள். ஆனால், நாம் உறுதியாக நின்று போராட வேண்டும். குஜராத் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
குஜராத் கலவரம் நடைபெற்று 14 வருடங்கள் கழித்து நாம் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை திரும்பிக் பார்க்கின்றோம். இந்த 14 வருடத்தில் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகள் ஏதும் குறைந்துள்ளதா என்று பார்த்தால், அதில் நமக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனென்றால், குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது, அதை வேடிக்கைப் பார்த்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கின்றார். அதனுடைய விளைவுகள் ஜனநாயக மரபுகளும், மதச்சார்பற்ற தன்மைகளும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றது. ஜனநாயகம், மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை, நல்லிணக்கம், சகிப்பின்மை போன்றவைகள் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் அச்சத்துடனும், பயத்துடனுமே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் களையப்பட வேண்டும் என்றால், நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.