நரேந்திர மோடி என்ற பிம்பத்தை சந்தைப்படுத்தியதன் மூலம் பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீள முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்துத்துவ கோட்பாட்டின் எழுச்சி நாயகனாக சங் பரிவார கும்பல்களின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களால் கடைவிரிக்கப்படும் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ஆளுமையை கூர்மையான கத்தியால் குதறி ஆய்வு செய்தால் மோடி இத்தனை வருடங்கள் உழைத்தது இந்துத்துவ கோட்பாட்டின் மேம்பாட்டிற்காகவா அல்லது வேறு காரணத்திற்காகவா என்பது தெளிவாகப் புரியும். மோடி குறித்த நுண்ணிய ஆய்வு தற்போது கண்டிப்பாக தேவைப்படுகிறது. அத்தனை பேரையும் ஈர்க்கும் விதத்தில் விதவிதமான ஆடைகள், காலணிகள், வாசனை திரவியங்களுடன் மீடியாக்களின் முன்னால் அவதார புருஷனாக காட்சியளிக்கும் இந்த மாவீரனின் உள் செயல்பாடு என்பது முடை நாற்றம் அடிக்கும் சாக்கடையை விட மோசமானது.

modi rajnathsingh 400தற்போது நடந்து முடிந்திருக்கும் மக்களவைத் தேர்தல் மிகவும் வினோதமாக உள்ளது. இதை ஜனநாயக ரீதியான தேர்தல் என்று கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்கை பதிவு செய்த வாக்காளர்களில் 31 சதவீத வாக்காளர்கள் மட்டுமே நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர். மிக அற்பமான இந்த வெற்றி மோடி ஊதுகுழல் மீடியாக்களால் மிகப் பிரம்மாண்ட வெற்றியாக வர்ணிக்கப்படுகிறது. 19.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள காங்கிரஸின் சாதாரண தோல்வி படு தோல்வியாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதைப்போன்று தலித் மற்றும் சிறுபான்மையினரின் அதிக வாக்குகள் பெற்றுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சி 4.1 சதவீத வாக்குகள் பெற்றும் ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. இதை எப்படி ஜனநாயகம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

வெறும் 17 கோடி மக்களின் ஆதரவைப் பெற்ற ஒருவர் 120 கோடி மக்களின் பிரதமர் என்றால் இந்த ஜனநாயக பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது? இந்த தேர்தல் முறையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இப்படி போலியான வெற்றியின் மூலம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மோடியின் பரிவாரங்களுக்கே தெரியாது, மோடியின் உட்கூறுகள். இந்த இடத்தை அடைவதற்காக மோடி தனது 15 வயது முதல் எப்படி எல்லாம் காய் நகர்த்தி வருகிறார் என்று சங்க பரிவார தொண்டர்கள் நிதானமாக திறந்த மனதுடன் ஆய்வு செய்தால் மோடி என்ற பிம்பம் வெறும் "பில்டப்பு" தான் என்று தெளிவாக புரிய வரும்.

தாமோதர்தாஸ் மூல் சந்த் மோடிக்கும் ஹீரா பென்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக இந்த 'அவதார புருஷன்' குஜராத் மாநிலம் வட் நகரில் ஜெனித்தார். கஞ்ச்சி என்ற அடிமட்ட சாதியைச் சேர்ந்த நரேந்திர மோடியின் குடும்பத்தார் தாவர எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுப்பட்டு வந்தனர். அவரது தந்தை வட்நகர் ரயில் நிலையத்தில் ஒரு டீக்கடை வைத்திருந்தார். அந்த டீக் கடையில் தந்தைக்கு உதவியாக இருந்த மோடி வட் நகர் பகவத் ஆசார்யா நாராயண சார்யா உயர் நிலைப்பள்ளி என்ற இந்துத்துவ கோட்பாட்டை போதிக்கும் பள்ளியில் பள்ளிப்படிப்பை துவக்கினார்.

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே மோடி தன்னை முன்னிலைப் படுத்துவதில் அதிக முக்கியத்துவம் எடுத்துக்கொள்வார். பள்ளியில் நடக்கின்ற நாடகங்கள் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடையே தன்னை ஒரு ஹீரோவாக முன்னிலைப்படுத்தி கொள்வார். மோடிக்கு 13 வயதில் ஜசோதா பென் சிமன்லால் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

1958ம் ஆண்டு ஒரு தீபாவளி தினத்தன்று தனது பள்ளி ஆசிரியரின் அறிவுரைப்படி ஆர்.எஸ்.எஸ்-ல் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு ஷாகாக்களுக்கு தொடர்ச்சியாக செல்ல ஆரம்பித்த மோடி சிறு வயதிலேயே சிறுவர்களுக்கான பொறுப்பாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருமணமான பெண்ணுடன் இணைந்து வாழ குடும்பத்தார் வற்புறுத்தவே தனது 18வது வயதில் திடீரென மாயமானார். பின்பு தனது 20வது வயதில் வீடு திரும்பினார். அப்போதும் வீட்டார் இல்லற வாழ்க்கையில் ஈடுபட வற்புறுத்தவே வீட்டைவிட்டு வெளியேறி ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் தங்க ஆரம்பித்தார். வயிற்றுப் பிழைப்பிற்காக வட் நகர் கீதா கோயில் அருகே சைக்கிளில் டீ விற்க ஆரம்பித்தார். அப்போது ஷாகா முடித்து வருபவர்களுக்கு இவராகவே சென்று டீ வழங்குவார். இதைப்போன்று அப்பகுதிகளில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சென்று டீ வழங்கி தன்னை அனைத்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடமும் மறக்கமுடியாத அளவிற்கு அறிமுகப்படுத்திக் கொள்வார்.

பின்பு இவர் டீ விற்று கஷ்டப்படுவதைப் பார்த்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மோடியை மாநில ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் உதவியாளராக நியமித்தனர். தான் நினைத்தது நிறைவேறிய சந்தோஷம் மோடிக்கு. இலவசமாக கொடுத்த டீ க்களுக்கு பலன் கிடைத்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. மோடியின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு இதுதான் நுழைவாயில். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மோடி தனக்கான இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வலுவான மவுன காய் நகர்த்தல்களை துவக்க ஆரம்பித்தார்.

மாநில ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்திற்கு வருகின்ற தலைவர்களுக்கு எடுபிடி வேலைகளை செய்து அவர்களது மனதில் தனது இருப்பை வலுப்படுத்தி கொண்டார். நாட்கள் செல்ல செல்ல தானும் ஒரு தலைவராக வரவேண்டும் என்றால் ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரில் நடக்கும் ஒரு மாத பொறுப்பாளிகளுக்கான பயிற்சி முகாம்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதை அறிந்த மோடி தானாகவே அந்த முகாமில் கலந்து கொள்ள உயர்மட்ட தலைவர்களிடம் அனுமதி வாங்கி கலந்து கொண்டார். தனது 23வது வயதில் பொறுப்பாளிகளுக்கான பயிற்சி முகாமை நிறைவு செய்தார். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பின்பு மோடிக்கு பொறுப்புகள் தேடி வர ஆரம்பித்தன.

ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவ அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் பிரச்சாரராக (முழு நேர ஊழியன்) நியமிக்கபட்டார். ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து அதனுடைய கிளை பிரிவுகளுக்கு பிரச்சாரராக நியமிக்கப்படுபவர்கள் மிகவும் ரகசியமாக வேலை செய்ய வேண்டும். ஆனால் "பில்டப்" மோடியால் அது முடியாத காரியம். ரகசியமாக வேலை செய்தால் மக்கள் மத்தியில் எப்படி பிரபலமாக முடியும். இதனால் ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டையும் மீறி மோடி செயல்பட ஆரம்பித்தார். ஆனால் அதை யாரும் கண்டுக்கொள்ள வில்லை. மோடியின் அப்போதைய அலப்பறைக்கு ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால் இந்திராகாந்தியின் அவசர நிலை பிரகடனத்தின் போது ஆர்.எஸ்.எஸ். சார்பாக நாடு முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றன. அதே போன்ற ஒரு கூட்டம் புல்லாபாய் பகுதியில் நடைபெற்றது. அப்போது வெளியில் அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சாதாரணமான தொனியில் பேசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்த மோடி உடனே மேடையில் ஏறி மைக்கைப் பிடுங்கி மிகவும் ஆவேசமாக பேச ஆரம்பித்தார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் உரத்த சப்தத்தில் கரவொலி எழுப்பவே மோடி தனக்கான அடுத்த கட்ட காய் நகர்த்தலுக்கான துவக்கத்தை சரியாக துவங்கிய மகிழ்ச்சியில் அகமகிழ்ந்து கொண்டார்.

மோடியின் இந்த செயல்பாட்டிற்கு அல்லது அலப்பறைக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்தாலும் தொண்டர்கள் மோடிக்கு ஆதரவாக இருந்ததால் மோடியை ஆர்.எஸ்.எஸ் தலைமையால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அது முதற்கொண்டு மோடியிடம் ஆர்.எஸ்.எஸ். தோற்று வருகிறது.

மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு பெறவேண்டும் என்றால் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் வரவேண்டும் என்பதை உணர்ந்த நரேந்திர மோடி அதற்காக ஆர்.எஸ்.எஸ். வழங்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பொறுப்பாளிகளுக்கான பயிற்சி முகாம்களை விரைவாக முடித்தார். இந்த பயிற்சி முகாம்களை முடித்த மோடிக்கு மீண்டும் பொறுப்புகள் தேடி வர ஆரம்பித்தன. 1978ல் ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கிய பொறுப்பாக கருதப்படும் பிராந்த் பிரச்சாரக் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்பின் படி குஜராத்தில் உள்ள ஆறு மாவட்டங்கள் முழுமையாக மோடியின் கீழ் வந்தது. ஆறு மாவட்டங்களில் உள்ள ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஹெச்பி முதற்கொண்டு அனைத்து சங்க பரிவார அமைப்புகளின் மேற்பார்வையாளராக செயல்படக்கூடிய இந்த பொறுப்பை தனது கையில் வைத்து கொண்டு தனது வளர்ச்சிக்கான திட்டமிடுதலை வேகப்படுத்தினார்.

1981ம் ஆண்டு தனது 31வது வயதில் குஜராத் மாநிலத்தின் பிரச்சாரக் என்ற உயர் பதவி மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்-ஆல் வழங்கப்பட்டது. குஜராத்தில் உள்ள அனைத்து சங்க பரிவார அமைப்புகளும் மோடியின் கீழ் வந்தது. ஆர்.எஸ்.எஸ்-ல் பல்வேறு உயர் பதவிகள் வழங்கப்பட்டாலும் மோடிக்கு அரசியல் மீதான ஆசைதான் அதிகரித்திருந்தது. இதற்காக பல்வேறு காய்களை நகர்த்திய மோடிக்கு 1987ம் ஆண்டு பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளராக பொறுப்பு கிடைத்தது. இந்த பொறுப்பிற்காக காத்துக்கிடந்த மோடி வெளியே காட்டிக்கொள்ளாமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தான் விரும்பிய பொறுப்பு கிடைத்ததும் பாஜகவில் மோடி வேகமாக செயல்பட ஆரம்பித்தார். குஜராத் மாநில பாஜகவை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் சங்க பரிவார தொண்டர்களிடம் தன்னை ஒரு வீரனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் 1985ம் ஆண்டு நடைபெற்ற இந்து முஸ்லிம் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி இந்துமக்களைத் தூண்டி விட்டு 285 பேரின் மரணத்திற்கு காரணமானார். இதைப் போன்று குஜராத்தில் தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக உருவகப்படுத்துவதற்காக மோடி தலைமையில் 1990வது ஆண்டு மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் மிகப் பெரிய இந்து முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன‌. இதில் 800க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கலவரங்களின் மூலமாக குஜராத்தில் உள்ள சாதாரண இந்துமக்கள் மனதிலும் தன்னை இந்து மதத்தைப் பாதுகாக்க வந்த அவதார புருஷனாக மோடி காட்டிக்கொண்டார்.

மேலும் இந்து முஸ்லிம் இனங்களிடையே விரிசலை வலுப்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ்-ஆல் 1987ல் நடத்தப்பட்ட நியாய யாத்திரை, 1989ல் நடத்தப்பட்ட லோக் சக்தி ரத யாத்திரை, 1990 நடத்தப்பட்ட அத்வானி தலைமையிலான அயோத்தி ராமர் கோவில் ரதயாத்திரை, 1991ல் முரளி மனோகர் ஜோஷியால் கன்னியாகுமரியில் துவக்கப்பட்ட ரதயாத்திரை போன்ற யாத்திரைகளில் பல்வேறு பொறுப்புகளை கேட்டுப்பெற்று தன்னை தேசிய தலைவர்களுக்கு இணையாக மோடி காட்டிக்கொண்டார்.

கலவரங்கள், ரதயாத்திரைகள் மூலமாக சங்க பரிவார தொண்டர்களின் உள்ளத்தில் மாவீரன் என்ற பெயரை எளிதாக மோடியால் பெற முடிந்தது. ஆனால் இவ்வளவு கபளிகரங்களிலும் மோடியின் உடலில் ஒரு கீறல் கூட ஏற்பட்டதில்லை என்பதை சங்க கும்பல்கள் யோசித்தது இல்லை. இதைத் தொடர்ந்து குஜராத்தில் முக்கிய பாஜக தலைவர்களான கேசுபாய் பட்டேல், சங்கர் சிங் வகேலா போன்ற முக்கிய தலைவர்களுக்கு இணையாக மோடி உருவெடுக்க ஆரம்பித்தார்.

(பாஜகவில் அமைப்புச் செயலாளர் பொறுப்பு என்றால்) கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ற்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டியவர். பல நேரங்களில் அதைவிடுத்து கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டதால் கட்சிக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. அவர் கடும் உழைப்பாளிதான். ஆனால் தான் உண்டு தனது வேலை உண்டு என்று அமைதியாக இருந்து விட மாட்டார். ஒரு அமைப்பு செயலாளருக்கு இருக்க வேண்டிய தன்னடக்கம் அவரிடம் இல்லை. கேசுபாய் பட்டேல் மற்றும் வகேலாவிற்கு சமமாக தான் கருதப்பட வேண்டும் என மோடி நினைத்ததாக அப்போதைய பாஜகவின் பொதுச் செயலாளர் கோவிந்தாச்சார்யா கூறுகிறார்.)

அரசியலில் மிகவும் தத்துப்பிள்ளைகளாக இருந்த பாஜக நிர்வாகிகளுக்கு மோடியின் முயற்சி வியப்பை ஆழ்த்தியது. 1995 வது ஆண்டில் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் 1.5 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி மோடி தலைமையில் வழங்கப்பட்டு அவர்கள் களமிறக்கப்பட்டனர். இந்தத் தேர்தலில் 182 சட்டமன்றத் தொகுதிகளில் 121 இடங்களை பாஜக கைப்பற்றியது. இத்தேர்தல் வெற்றி மோடியின் வெற்றியாகவே அப்போது பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக முதல்வரான கேசுபாய் பட்டேலுடன் மோடி அதிக நெருக்கமானார். மோடியின் சுய தம்பட்டம் குறித்து அறிந்து வைத்திருந்த குஜராத்தின் முக்கிய பாஜக தலைவரான வகேலாவை ஓரங்கட்ட மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வகேலா குறித்து கேசுபாய் பட்டேலிடம் பல்வேறு அவதூறுகளைப் பரப்பி உயர் மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை வகேலா கட்சிக்கு எதிரானவர் என்ற மன நிலையை உருவாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த வகேலாவும் மோடி, கேசுபாய் பட்டேலுக்கு எதிராக ஒரு அணியைத் திரட்டினார். தனக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களை திரட்டி ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதைத் தொடர்ந்து வாஜ்பாய் நேரடியாக தலையிட்டு வகேலாவை சமாதானப்படுத்தினார். கேசுபாய் பட்டேலை பதவியில் இருந்து இறக்கி சுரேஷ் மேத்தாவை முதல்வராக்கினார். பிரச்சினைக்கு முக்கிய காரணகர்த்தாவான மோடியை வாஜ்பாயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொண்டர்களின் முழு ஆதரவும் மோடிக்கு இருந்ததால் மோடியின் மீது ஒழுக்க ரீதியான நடவடிக்கை எடுக்காமல் பிரச்சினையை எப்படியாவது ஓய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தலைமை மோடியை குஜராத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய செயலாளர் என்ற பொறுப்பை வழங்கியது. பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், சண்டிகார், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மோடியின் கீழ் வந்தது.

மோடியின் எதிரியான வகேலா பல்வேறு தோல்விகளை சந்தித்து இறுதியாக கட்சியிலிருந்தே வெளியேறினார். இது மோடிக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு மோடி புது டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை காரியாலயத்தில் தங்க ஆரம்பித்தார். அங்கு வருகின்ற முக்கிய ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்களுடன் அதிக நேரம் தனது தேசிய அக்கறை குறித்தும் இந்துத்துவம் மீதான ஆழமான ஈடுபாடும் குறித்தும் தம்பட்டம் அடிப்பார். வகேலா பாஜகவை விட்டு பிரிந்த பின்பு மோடி மீது பாஜக தலைவர்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது.

1998ம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி கட்டிலில் ஏறியது. இதைத் தொடர்ந்து மிகுந்த தேசபக்தராக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மோடிக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் பாஜகாவிலேயே மிக உயர்ந்த பதவியான தேசிய அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த பொறுப்புதான் பாஜகவிற்கும் ஆர்.எஸ்.எஸ்-ற்குமான இணைப்பை வலுப்படுத்தக் கூடியது. இந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு சங்க பரிவார தொண்டர்களிடையே அதிக செல்வாக்கு உண்டு. திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்தியல் கோட்பாடுகளை பாஜக மூலமாக நாட்டுமக்களுக்கு எந்த சந்தேகமும் வந்து விடாமல் நிறைவேற்ற வேண்டும். ஆனால் மோடியால் அப்படி இருக்க முடியுமா? அப்படி இருந்தால் மோடியின் எதிர்கால அரசியல் என்னாவது? நாட்டுமக்களிடம் "பிலிம்" காட்டினால்தானே தனக்கு வாழ்க்கை என்பதை நன்றாகப் புரிந்து வைத்து கொண்ட இந்த பச்சை அரசியல்வாதி 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது தேவையில்லாமல் மீடியாக்களின் முன்னால் தோன்றி வீராவேசப் பேட்டிகள் கொடுத்து மக்கள் முன்னால் பிரபலமாக ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில் குஜராத்தில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின. பாஜகவை எதிர்த்து வகேலா அமைத்த அரசு கவிழ்ந்து கேசுபாய் பட்டேல் முதல்வரானார். பின்பு நடைபெற்ற இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக படுதோல்வியை சந்தித்தது. மேலும் கட்ச் பகுதியில் நடந்த பூகம்பத்தைத் தொடர்ந்து பாஜக அரசு முறையாக புனரமைப்பு பணிகளில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இதை எதிர்பார்த்திருந்த மோடிக்கு குஷியோ குஷி.

நீண்ட நாட்களாக தனது உள்ளத்திலேயே மறைத்து வைத்திருந்த முதல்வர் கனவை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி தனது சாணக்கிய வேலையை துவக்கினார். புது டெல்லியில் உள்ள பாஜக முக்கிய தலைவர்களிடம் கேசுபாய் பட்டேல் குறித்து தாறுமாறான அவதூறுகளை அவிழ்த்து விட துவங்கினார். மேலும் குஜராத் குறித்த தனது அக்கறையை ஒவ்வொரு தலைவர்களிடமும் கக்கிக்கொண்டே இருந்தார். குருட்டு நம்பிக்கையில் இயக்கத்தை நடத்தும் காவி அல்லக்கைகளுக்கு மோடியின் தந்திரத்தை கணிக்க முடியாதது அவர்களது நுண்ணறிவு பலவீனத்தை காட்டுகிறது.

மேலும் பல்வேறு முக்கிய பத்திரிக்கைகளில் கேசுபாய் பட்டேலுக்கு எதிராக செய்தி வெளியிடச் செய்தார். அவுட்லுக் குழும தலைவர் வினோத் மேத்தா தனது சுய சரிதையில் மோடி தன்னை அவுட் லுக் அலுவலகத்தில் சந்தித்து குஜராத் அரசை மோசமாகக் காட்டும் சில ஆவணங்களைக் கொடுத்தார் என்கிறார். எப்படி இருக்கிறது இந்த மாவீரனின் இயக்க செயல்பாடும் கொள்கை கோட்பாடும்! மோடியின் சித்து வேலைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. மோடி சென்றால்தான் குஜராத் சிறப்படையும் என்ற பொய் நம்பிக்கையை ஒட்டுமொத்த பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் மனதில் பதிய வைத்து அவர்களின் தலையில் மிளகாய் அரைத்தார் மோடி. பின்பு பாஜக மூத்த தலைவர்களால் குஜராத்தின் முதல்வராக பொறுப்பேற்க அனுப்பி வைக்கப்பட்டார்.

தனது எண்ணம் நிறைவேறிய சந்தோஷத்தில் தனியாக மோடி பலமுறை துள்ளி குதித்திருக்க வேண்டும். ஆனால் மோடி முதல்வர் ஆவதை குஜராத்தில் உள்ள பாஜகவின் முக்கிய தலைவர்களான சஞ்சய் ஜோஷி, ஹரேன் பாண்டியா, கோர்த்தன் ஜடாபியா போன்ற தலைவர்கள் விரும்ப‌வில்லை. ஏனென்றால் மோடியின் அனைத்து சித்து வேலைகளையும் பதவி வெறியையும் அவர்கள் நன்றாக உணர்ந்து வைத்திருந்தார்கள்.

2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் குஜராத்தில் உள்ள பெருவாரியான பாஜக நிர்வாகிகளின் எதிர்ப்பையும் மீறி முதல்வராக பொறுப்பேற்றார். குஜராத்தில் உள்ள முக்கிய பாஜக நிர்வாகிகள் மோடிக்கு கட்டுப்பட மறுத்தனர். தான் தேசிய தலைமையால் அனுப்பி வைக்கப்பட்டவன்; ஆகையால் எனக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என மோடி அடிக்கடி பாஜக நிர்வாகிகளை மிரட்டி வந்தார். என்றாலும் மோடி மீது பாஜகவினர் கடுப்பாகவே இருந்தார்கள். இதனால் மோடியால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒட்டுமொத்த சங்க பரிவார தொண்டர்களுக்கும் மோடியின் மீது ஒரு வித சந்தேகம் இருந்து வந்தது.

இத்தருணத்தில்தான் மோடி முதவராக பொறுபேற்ற 4 வது மாதத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நிகழ்கிறது. முஸ்லிம்கள் 58 ராம பக்தர்களை எரித்துக் கொன்று விட்டார்கள் என்ற அவதூறு வேகமாக பரப்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து மிகப்பெரிய இந்து முஸ்லிம் கலவரம் உருவாகிறது. இந்த கலவரத்தில் மோடி முழுமையாக சங்க பரிவார கும்பல்களுக்கு உதவியாக இருந்து தான் இந்துக்களைப் பாதுகாக்க வந்த மாவீரன் என்ற பட்டத்தை அனைத்து சங்க பரிவார தொண்டர்கள் மத்தியிலும் நிலை நிறுத்திக் கொண்டார்.

மோடி எப்படி தம்பட்டம் அடித்தாலும் மோடி குறித்த உண்மையான பிம்பத்தை சங்க பரிவார தொண்டர்களிடம் தொடர்ந்து உரையாடி வந்தவர்கள் குஜராத் மாநில உள் துறை இணை அமைச்சர் ஜடாபியா, வருவாய்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, பாஜக தேசியச் செயலாளர் சஞ்சய் ஜோஷி. இதில் ஜடாபியா 2002ம் ஆண்டிலேயே பாஜக அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். ஹரேன்பாண்டியா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சஞ்சய் ஜோசி ஒரு இளம்பெண்ணுடன் இருப்பதைப் போன்று சி.டி.வெளியாகி அவமானப்படுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். பின்பு அந்த சி.டி பொய்யானது என நீதிமன்றத்தில் நிரூபணமானது.

இவ்வளவு கீழ்த்தரமான அரசியலை நடத்திதான் மோடியால் இந்தப் பதவிக்கு வர முடிந்தது. மோடி தன்னை ஒரு சர்வாதிகாரம் படைத்தவராகவே கருதுகிறார். அவரிடம் ஆர்.எஸ்.எஸ், பாஜக கேள்வி கேட்பதை கூட அவர் விரும்பவில்லை. அவர் கேள்விக்கு அப்பாற்பட்ட அவதார புருஷனாக தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறார். இவரைக் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டதால்தான் அத்வானி எவ்வளவோ முயற்சித்து பார்த்தார். ஆனால் அத்வானியின் முயற்சி பலிக்கவில்லை. மோடியை எதிர்த்த அத்வானி மிக மோசமான நிலையில் ஓரங்கட்டப்பட்டு விட்டார். கொள்கை கருத்தியல்களை பேசி வரும் ஆர்.எஸ்.எஸ், பாஜக உட்பட சங்க பரிவார கும்பல்கள் மோடி என்ற ஒற்றை மனிதரிடம் அத்தனை கொள்கைகளையும் அடகு வைத்து விட்டது. தற்போது நடந்து முடிந்த தேர்தல் மோடிக்கானது. இந்தத் தேர்தலின் வெற்றி மோடிக்கான வெற்றி என்ற மோடியின் முழக்கங்கள் இந்துத்துவ கருத்தியலின் அஸ்தமனத்திற்கு முகமன் கூறி அழைக்கிறது.

- ஷாகுல் ஹமீது

(இந்த கட்டுரை தி கேரவன் என்ற இதழில் வினோத் ஜோஸ் என்பவர் எழுதிய தி எம்பெரர் அன் கிரவுண்ட் என்ற நீண்ட கட்டுரையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விரிவாக படித்து கொள்ளலாம் http://www.caravanmagazine.in/reportage/emperor-uncrowned)