ஆக..............

ஜெயகாந்தன் இன்னமும் இருக்கிறார் என்பதனைத் தமிழக மக்களுக்கு நினைவூட்டி இருக்கிறது ஞானபீடம். இந்த ஞானபீடம்... சாகித்ய அகாதெமி... என்பது போன்ற ஜந்துக்கள் எங்கிருக்கின்றன...? எப்படி இருக்கும்....? எப்படி இயங்கும்...? என்பது பலருக்கும் புரிபடாத சமாச்சாரங்கள்.

ஆனால் இவை எப்போது எவருக்கு விருது கொடுத்தாலும் சரி... “எப்படிக் கொடுக்கலாம் அந்த ஆளுக்கு?” என்று பாய்ந்து பிராண்டுவதற்கென்றே பல ஆசாமிகள் இருக்கிறார்கள். யாருக்குக் கொடுக்கிறார்கள் என்பதனை விடவும்... கொடுக்கிற தகுதி முதலில் அவற்றிற்கு இருக்கிறதா என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

Jayakandanசரி... நாம் ஜெயகாந்தனுக்கு வருவோம்.

இவரது எந்தப் படைப்பிற்காக இந்த விருதைக் கொடுத்திருக்கிறார்கள்.....? எந்த ஆண்டு வெளிவந்தது அது....? அது அதற்கான தகுதி உடையதுதானா....? என எவரும் முடியைப் பிய்த்துக் கொள்ள தேவையில்லை. அவரது ஒட்டுமொத்த இலக்கியச் சேவைக்காக இந்த ஞானபீடம் என மொண்ணையாக அறிவித்திருகிறார்கள்.

அறுபதுகளிலும்... எழுபதுகளிலும் வெளிவந்த அவரது படைப்புகளுக்கு எந்த விருதும் பொருந்தும் தான்... (‘படைப்பு’ என்று குறிப்பிடுவது அவரது சிறுகதைகள்.... நாவல்கள் குறித்து மட்டும்தான். அவர் கட்டுரை என்ற பெயரில் எழுதித் தள்ளிய மேட்டுக்குடியினரை நியாயப்படுத்தும் அபத்தக் களஞ்சியங்களை அல்ல.)

ஆனால்... ஈழத்தில் பல்லாயிரம் அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்த.. தமிழ்ச் சகோதரிகளையும், அன்னையர்களையும் பாலியல் வல்லுறவுகளால் காவு வாங்கிய படைக்காக வக்காலத்து வாங்கித் தமிழகமெங்கும் முழங்கிய முழக்கத்துக்காகவே நோபல் பரிசு கூட தரலாம் இவருக்கு என்பது வேறு சங்கதி.

தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியாவெங்கிலும் உழைக்கும் மக்களது கைக்கு அதிகாரம் போக வேண்டும் என அல்லும்பகலும் பாடுபடுகின்ற துக்ளக் சோ..

மூப்பனாரின் கபிஸ்தலத்து வயல்களையும்.. நிலங்களையும் தாக்கிக் கைப்பற்றி பாட்டாளி மக்களுக்குப் பகிர்ந்தளிக்க ‘நிலமீட்சிப் போர்’ நடத்திய தோழர் எம். கல்யாணசுந்தரம்... அப்போரின் வீச்சை எதிர்கொள்ள இயலாது தானே முன் வந்து நிலங்களைப் ‘பகிர்ந்தளித்த’ மூப்பனார்... சர்வகட்சிப் பிரமுகர் க. சுப்பு... போன்றவர்கள் தான் இந்தப் புரட்சியாளனின் அன்றைய ‘காம்ரேடுகள்’.

ஐம்பதைத் தாண்டிய இந்த ஓய்வூதியதாரர்கள் இணைந்திருந்த லெட்டர் பேட் அமைப்பின் பெயர்தான் ‘தேசிய தமிழ் இளைஞர் பேரவை’. இது எப்படி இருக்கு...?

சிவாஜி ‘பயணப்பட்ட’ பிறகு கிடைத்த பாரத ரத்னாவைப் போல.. ஜெயகாந்தன் உருப்படியாக எழுவதை நிறுத்தி ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்குப் பிறகு இது கிடைத்திருக்கிறதென்றால் என்ன காரணமாக இருக்கும்?

“மானுடத்தின் மீது அளவற்ற பரிவு;
மானுடத்துக்கு எதிரான எல்லா அநீதிகளையும்,
வக்கிரங்களையும் தகர்ப்பதில் கோபாவேசம்
ஜெயகாந்தனின் ஆதார பலம்” என்கிறது தினமணி

“அண்ணல் காந்தியடிகளின் நூற்றாண்டு விழா இது என்று தெரிந்திருந்தும் எனது ஸ்வதர்மத்தை இழந்து விடாமல் வழக்கம் போல் முட்டக் குடித்துவிட்டே உங்கள் முன்னால் வந்து பேச ஆரம்பிக்கிறேன். சத்தியம் பேசுவது உண்மையை மறைக்காமல் உள்ளது உள்ளபடி பேசுவது என்பது” என காந்தியின் நூற்றாண்டில் இவர் முழங்கிய முழக்கத்தை எடுத்து எழுதி அவரது சத்தியத்துக்கு சான்றிதழ் வேறு தருகிறார் நமது சின்னக்குத்தூசி.

ஜெயகாந்தன் காந்தி நூற்றாண்டுக்கு குடித்து விட்டுப் போனாரா... குடிக்காமல் போனாரா...ஜானக்ஷா குடித்தாரா... அல்லது ஓல்டு மங்க் குடித்தாரா... குடித்துவிட்டு வாந்தி எடுத்தாரா... கழுவினாரா என்பதெல்லாம் தமிழ் மக்களுக்கு தேவையற்ற செய்திகள். உலகெங்கும் அம்னஸ்டி இண்டர்நேஷனல் போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடங்கி உள்ளூர் உரிமைக் குழுக்கள் வரைக்கும் ஈழத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை... புட்டுப்புட்டு வைத்த போது இந்த வீரர் வாயில் என்ன வைத்துக் கொண்டு இருந்தார் என்பது தான்.

போதையிலாகட்டும் அல்லது தெளிந்த பிறகாகட்டும் மறந்தும் கூட அந்த ‘சத்தியங்களை’ இவர் முழங்கவில்லையே ஏன் என்பதுதான்.

ஜெயகாதனின் வார்த்தைகளில் எனக்குப் பிடித்தது “இளைஞனே! எவனிடமும் அறிவுரை கேட்காதே” என்பதுதான். ஆனால் விருது கிடைத்த அன்று ஆறுகோடித் தமிழருக்கும் ஒரு அறிவுரையை அள்ளி வீசுகிறார்.

“இந்த யுகம் இசைவு காணும் யுகம்.
இனிமேலேனும் நமக்கும் இந்தியாவிலிருக்கும்
இதர மொழிகளுக்கும் இசைவு உண்டு;
பேதமை இல்லை என்பதை உணர்வதும்
உணர்த்துவதுமே இலக்கிய தர்மம்” என்று.

‘இனிய ஜெ.கே.! உங்களை விமர்சிக்க வருத்தமாகத்தான் இருக்கிறது. முகம் தெரியாமல் உங்கள் எழுத்துகள் மீது காதல் கொண்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். ஆனாலும் ஜெ.கே. நீங்கள் இசைவு கண்டுவிட்டீர்கள்.. அது எமக்குத் தெரியும். சங்கரமடத்திலிருந்து சாகித்திய மடம் வரை... வடக்கிலிருந்து வாஷிங்டன் வரை... நீங்கள் இசைவு கண்டு விட்டீர்கள். ஆனால் அதற்காகவெல்லாம் தங்கள் மீது திணிக்கப்படும் எந்தவொரு மொழியையோ... கலாச்சாரத்தையோ... பண்பாட்டையோ... சகித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவலமான, பலவீனமான நிலையில் தமிழ் மக்கள் இல்லை என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்’.

முதல் அரசியல் சட்டத் திருத்தம் தொடங்கி, மண்டல் குழுவின் வருகை வரைக்கும்... பல்வேறு விஷயங்களில் தமிழகம்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறது. தயவு செய்து ‘அறிவுரைகள்’ எனும் பெயரில் நீங்கள் எழுப்பும் ஊளைகளைக் கொஞ்சம் நிறுத்தினால் தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

போதாக்குறைக்கு உங்களுக்கு விருது கிடைத்திருப்பது தமிழுக்குக் கிடைத்த பெருமை என்கிறார் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ கமல்ஹாசன், தமிழைப் பெருமைப்படுத்தும் தகுதி சாகித்திய அகாதெமிகளுக்கும் கிடையாது.... ஞானபீடங்களுக்கும் கிடையாது.

தமிழ் சவலைக் குழந்தை அல்ல.

எவன் வேண்டுமானாலும் தத்தெடுப்பதற்கு.

இன்றைக்குக் கிடைத்திருக்கும் விருது மொழியில்.. தத்துவத்தில்... இனத்தில்... நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து அளித்த விருது.

‘நம்மவாவை விட மத்தவா இத்தனை விசுவாசமாக இருக்கா’ என்கிற நன்றிப் பெருக்கில் கிடைத்த விருது.

ஜெயகாந்தனால் ஞானபீடத்துக்குப் பெருமை.

ஞானபீடத்தால் ஜெயகாந்தனுக்குப் பெருமை.

ஆனால்... உலக வர்த்தகக் கழகம் தொடங்கி, உள்ளூர் கழகங்கள் வரைக்கும் ஒடுக்குமுறைகளுக்கும்.. அடக்கு முறைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிற மக்களுக்கு பெருமைப்படவும் சிறுமைப்படவும் இதில் என்ன இருக்கிறது?

ஆக..விசுவாசிக்கிறவனே இரட்சிக்கப்படுவான். ஆமென்.

- பாமரன்

Pin It