தமிழீழத்திற்கான கோரிக்கைகள் தமிழகத்தில் வந்தபோது மாணவர்களும் இளைஞர்களும் கடந்த ஆண்டு வீறு கொண்டு எழுந்தனர். தமிழீழம் என்ற வார்த்தையையே கேட்கவும், பேசவும் விரும்பாத ஜெயலலிதா பொது வாக்கெடுப்பிற்கும், பொருளாதாரத் தடை கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களுக்காக தமிழகம் கொதித்தெழுந்தது. 2014க்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க நிலைமைகள் அப்படியே மாறியது, மாற்றப்பட்டது.

Modi and Jayalalitha

ஆம் எந்தப் பார்ப்பனிய ஏகாதிபத்திய இந்திய தேசிய அதிகார மையத்திற்கு எதிராக தமிழக இளைஞர்களும் மாணவர்களும் போராடினார்களோ அவர்களை மோடி வித்தை காட்டி ஏமாற்றிவிட்டது ஆளும் வர்க்கம்.

அனைத்து முற்போக்குத் தத்துவங்களும், அரசியலும், அதன்பாற்பட்ட நடைமுறைகளும் சமூக வளர்ச்சியை நோக்கியே இருக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் தமிழ் மண்ணில் வீரியமாக செயல்பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களின் விடாப்பிடியான கருத்தியல் மற்றும் களப் பணிகளால் மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் சமூகம் எதிர் கொண்டுள்ள மொத்தத் தேவையை நிறைவு செய்யும் வகையில் இவ்வமைப்புகளின் பங்களிப்பு இல்லை. இந்தச் சூழலை பயன்படுத்தி காலத்தால் பின்தள்ளப்பட வேண்டிய பார்பனிய, ஏகாதிபத்திய கருத்தியல்களும், நடைமுறைகளும் சமூகத்தில் புதிய வடிவில் உருப்பெருகின்றன.

இன்றைய தமிழ்ச்சமூகத்தின் தேவை படித்து முடித்துவிட்டு வெளியில் வரும் இளைஞர்களுக்கு வேலை; வேளாண்மைக்குத் தேவையான பாசனத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்; தொழில்துறைக்கும் மக்களுக்கும் போதுமான மின்சாரம்; அத்தோடு ஊழலற்ற நிர்வாகம் என்பதாக உள்ளது.

மக்களுக்கான அடிப்படை வசதிகளை பார்ப்பனிய நில உடைமை, ஏகாதிபத்திய சக்திகளும் அதன் முகவரான காங்கிரசு கட்சியும் செய்து கொடுக்கவில்லை. மாறாக மக்களின் வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களும் பார்ப்பனிய நில உடைமை சக்திகளும் சூறையாடுவதற்கு பாதுகாப்பாக இருந்து வருகின்றன.

இந்த நிலைமையை மாற்ற வேண்டிய பொது உடமை இயக்க வழிவந்த சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் தமிழக்த்தில் திமுக அதிமுகவின் தொங்கு சதைகளாகவே மாறிவிட்டன.

பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளும் மொத்த நிலைமைகளை மாற்றியமைக்கும் செயல்திட்டம் கொண்டவைகளாக இல்லை. அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியை நாடாளுமன்ற சமரசவாத அரசியல்களுக்கும், திமுக, அதிமுக கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகள் பலியிட்டு விட்டன.

சமூக அறிவியலான மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனைகளைப் பற்றி நிற்பதாக முழங்கிக் கொண்டுள்ள இந்திய மா.லெ. இயக்கங்களும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்படும் தேசிய இன மக்களையும் அணிதிரட்ட முடியாமல் தேங்கி நிற்கின்றன.

இந்தியக் கட்டமைப்பை மிகச்சரியாக வரையறுத்து மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துக்களை உள்வாங்கி செயல்திட்டம் வகுத்து 1992களில் இந்தியப் பொதுடமை இயக்கத்தின் வழிவந்த இ.பொ.க.மா.லெ. இய‌க்கத்தின் நீட்சியாக தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி தோழர் கார்முகில் தலைமையில் தொடங்கியது. மிகச்சரியான அரசியல் தத்துவ நிலைப்பாடுகளை கொண்டிருந்தபோதும் அமைப்புத்துறை நெருக்கடி காரணமாக புரட்சிகர அரசியல் அரங்கில் தேக்கம் நிலவுகிறது.

ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை பேரவலத்திற்கு ஆளாகியுள்ளது. புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் ஏற்பட்ட பெரும்தேக்கம் சமுதாயத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப 'மோடி' என்னும் ரட்சகரை அடையாளம் காட்டுகிறது ஆளும் வர்க்கம். பன்னாட்டு நிறுவனங்களின் பொருள் சந்தைப்படுத்தலுக்கான யுக்திகளைப் பயன்படுத்தி மோடி என்ற பிம்பம் சர்வ ரோக நிவாரணியாகக் காட்டப்பட்டுள்ளது.

மிக நுட்பமாக பார்ப்பனியமும், ஏகாதிபத்தியமும், நில உடமை சக்திகளும், கார்பரேட் குழுமங்களும் திட்டமிட்டு மக்களை ஏமாற்றியுள்ளனர்.

டெல்லியில் கதர் போய் காவி வந்தாலும், தமிழகத்தில் அம்மாவும், அய்யாவும் மாறி, மாறி வந்தாலும் எவ்வித மாற்றமும் வரப்போவதில்லை!

2014 நாடாளுமன்றத்தேர்தல் ஒரு புதிய பரிமாணம் பெற்றுள்ளது. தமிழகத்தின் 4கோடி வாக்காளர்களுக்கும் இரண்டே நாளில் 100 ரூபாய் நோட்டுகளாக பணம் பட்டியல் வைத்து வினியோகம் செய்யப்பட்டடது. 3000 கோடி ரூபாய் ஜெயலலிதாவிடமிருந்து வந்துள்ளது. இறுதியிலும் இறுதியாக வாக்குரிமையை வணிகப்பண்டமாக மாற்றி விட்டனர்.

தமிழர் நலன், சமூக நீதி, தமிழீழ அதரவு, ஊழலற்ற ஆட்சி போன்ற சவடால்களுக்கு இனி வேலை இல்லை. அதிகம் இறைப்பவன் அதிகம் பொறுக்கிக் கொள்ளலாம். பணம் உள்ளவன் ஓட்டை வாங்கி நாட்டைச் சூறையாடலாம்.

இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு என்ன? மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய, தமிழ்த் தேசிய அமைப்புகள் செய்யத் தவறியது என்ன?

தமிழ்ச் சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.

குறிப்பு:

தமிழ் சமூக நலனில் அக்கறைகொண்டு அதிலுள்ள சிக்கல்களை முன்வைத்து விவாதிக்க நான் விரும்புகிறேன். மாறாக திருப்பூர் குணா அல்லரசியமாக விவாதத்தை திசை திருப்புகிறார். த.நா.அ.கு - இ.பொ.க(.மா.லெ) வாக செயல்பட்ட காலத்தில் 1986களில் அமைப்புடன் எனது செயல்பாடுகளை இணைத்துக் கொண்டவன். கட்சி ஈரோடு மாவட்டத்தில் உழவர்கள் நடுவில் செயல்படத் தொடங்கியபோது சென்னிமலைப் பகுதியில் தோழர்களோடு இணைந்து பணிசெய்து அமைப்பையும் விரிவுபடுத்தினோம் எங்களையும் அரசியல், தத்துவார்த்த வழியில் வளர்த்துக் கொண்டோம். அப்படி உருவான தோழர்களில் ஒருவர்தான் முகிலன்.

இவ்வாறான எனது செயல்பாடுகளில் எனது பலம் பலவீனங்களை குழு செயல்முறையின் மூலம் கற்றுக்கொண்டேன்.இப்படி இருக்க எனது செயல்பாட்டில் உள்ள நிலையை நான் தன்னாய்வாக முன்வைத்ததை குணா புரிந்துகொள்ளாமல் எனது குறைபாட்டிற்கு தோழர் கார்முகிலின் அணுகுமுறை தான் காரணம் என்று ஏதோ உளறுகிறார். குணாவின் பொறுப்பற்ற செயல்பாட்டிற்கு இந்த ஒரு அணுகுமுறையே சான்று.

மேலும் தோழர் கார்முகில் அவர்களோடு பத்தாண்டு காலம் உடனிருந்து செயல்பட்டவன் நான். என்னைப் பற்றி நான் சொல்வதையே திரித்து தோழர் கார்முகிலோடு இணைத்து அவதூறு செய்கிறார் குணா. தோழர் கார்முகில் இந்தியப் புரட்சிகர இயக்கத்திற்கு செய்துள்ள கோட்பாட்டு பங்களிப்பை கட்சி வெளியிட்டுள்ள ஆவணங்கள் பறை சாற்றுகின்றன.

வரும் தொடரில் அவற்றை பட்டியல் செய்து நான் முன்வைக்க உள்ளேன். அது வரை குணா பொறுமையாக இருக்க வேண்டும்.

- கி.வே.பொன்னையன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It