பல வருடங்கள் கழித்து சொந்த கிராமத்திற்கு செல்வது என்பது தனி சுகம்தான். சிதிலமடைந்து போன எத்தனையோ எத்தனையோ ஞாபகங்கள் மீண்டும் நம் முன்னால் வரும்போது வசந்தமான அந்த பழைய நினைவுகளில் லயித்துப் போகிறோம். 14 வருடங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த எனக்கு மீண்டும் எனது சொந்த கிராமத்திற்கு செல்கின்ற வாய்ப்பு கிடைத்தபோது ஏற்பட்ட சந்தோஷத்திற்கும் உற்சாகத்திற்கும் அளவே இல்லை.

Rubber Estate

கன்னியாக்குமரி மாவட்டத்தின் வேளி மலை அடிவாரத்தில் ரப்பர் தோட்டங்களாலும் பழமையான மரங்களாலும் நீர் நிலைகளாலும் சூழ்ந்த மணலிக்கரை என்ற கிராமம்தான் எனது சொந்த ஊர். செழிப்பான‌ பகுதி. ஊரைச் சுற்றி ரப்பர்மரங்களின் வாசம், மரங்களிலிருந்து விழுகின்ற ரப்பர் காய்களின் சப்தம், வெயில் காலத்தில் இலைகள் உதிர்ந்து ஒவ்வொரு மரங்களும் உராயும்போது ஏற்படுகின்ற கூச்சல் என அத்தனையும் சுகமானதுதான்.

சீலாந்தி மரங்களின் உச்சியில் ஏறி இருந்து கொண்டு இரவு நேரத்தில் கத்தி, ஊர்ப் பெண்களை பயமுறுத்துவது, அரசுப் பள்ளியில் உள்ள மாமரங்களில் மாங்காய் திருடுவது, இடியப்பக்காரி பெத்தாவிற்கு(பாட்டி) சொந்தமான அயனி, ஆத்திசக்கை மரங்களில் பழங்களைத் திருடிவிட்டு, சப்தம் போடும் பெத்தாவை பட்டப்பெயர் கூறி கூச்சலிட்டு செல்வது என ஒவ்வொரு நிமிடங்களும் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்த நாட்களை எப்படித்தான் மறக்கமுடியும்? வீட்டுக்குத் தெரியாமல் குளக்கரையில் மீன்பிடிக்கச் செல்வது, திருட்டு தம் அடிப்பது, சானலில் குதித்து நீச்சல் பழகியது என அத்தனை நினைவுகளும் சுகமாக என் நினைவுகளில் சுழன்று கொண்டிருந்தன.

அந்த ஊரில் மூன்று புட்டுக்கடைகள் இருந்தன. காலை 4 மணி முதற்கொண்டே அந்த கடைகள் திறந்திருக்கும். மலைகளுக்கும், ரப்பர் தோட்டங்களுக்கும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும். அந்த கடைகளின் கண்ணாடியிலான அலமாரிகளில் இருக்கும் புட்டு, பயிறு, பப்படத்தின் வாசம் சாலையின் பல்வேறு முனைகளிலும் வீசிக்கொண்டே இருக்கும். காலை சுபுஹ் தொழுகைக்காக உம்மா என்னையும் தம்பிமார்களையும் எழுப்பி விடும்போது வாப்பாவும் உடன் எழுந்து எங்களை புட்டுக்கடைக்கு அழைத்துச் சென்று சம்பா மற்றும் பச்சரிசியிலான புட்டுடன் பயிறு, பப்படத்தையும் குழைத்து என்னக்கும் தம்பிமார்களுக்கும் உருண்டை பிடித்துத் தருவதை வாங்கி உண்ணும்போது ஏற்படுகின்ற சந்தோஷம், ருஷி இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை. நானும் தமிழகம், கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். வித விதமான உணவகங்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் எனது வாப்பாவின் கையால் வாங்கித் தின்ற புட்டு உருண்டைகளைப் போன்ற சுவையை இதுவரை வாழ்க்கையில் ருஷித்தது கிடையாது. இனியும் அப்படிப்பட்ட ஒரு உணவை வாழ்க்கையில் உண்ண முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

ஒரு பனி விழுந்து கொண்டிருந்த அதிகாலை நேரத்தில் ஊருக்கு வந்து சேர்ந்தேன். எப்போதும் வீசிக்கொண்டிருந்த புட்டு வாசம் எங்கும் வீசவில்லை.

விடியற்காலையிலையே கூடும் மக்கள் கூட்டத்தையும் காணவில்லை. புட்டுக்கடைகள் எல்லாம் சபர்மா கடைகளாக மாற்றப்பட்டிருந்தன. எங்களது ஊரைச் சுற்றி இருந்த ரப்பர் தோட்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு பிளாட் போடப்பட்டிருந்தன. நாங்கள் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த ஏராளமான பழைய‌ மரங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு புதிய புதிய வீடுகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நாங்கள் நீச்சலடித்து ஆடிப் பாடிய குளம் வற்றிப்போய் பாசி பிடித்து இருந்தது. சானலில் தண்ணீர் வரத்து இல்லாததால் மிகவும் வறண்டு போய் இருந்தது. அழகிய இளம்பெண்ணைப் போன்று காட்சியளித்த எங்கள் ஊர் தற்போது கைம்பெண் கோலம் பூண்டு தக்காண பீட பூமியைப் போன்று காட்சியளித்தது.

இனி எங்களது இளம் பிள்ளைகள் எந்த குளத்தில் நீச்சல் பழகுவார்கள், எந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடப்போகிறார்கள், எந்த தோட்டத்தில் விளையாடி கழிக்கப் போகிறார்கள்? எல்லாமே கடந்த 14 ஆண்டுகளில் தலைகீழ் விகிதமாக மாறிப் போனது. உலக மயமாக்கல் என்ற சாத்தான் எனது அழகிய கிராமத்தை அழித்து விட்டது. வியர்க்க வியர்க்க அரசுப் பள்ளி மைதானத்தில் கபடியும் கிளியாம்பிள்ளையும் கிரிக்கெட்டும் விளையாடிக்கொண்டிருந்த எங்களது இளைஞர் சமுதாயம் தடம் தெரியாமல் மாயமாகி உள்ளது. எந்த விதமான இயற்கை சூழலும் இல்லாததால் பேஷ் புக்கிலும் ஸ்மார்ட் போன்களிலும் எங்களது இளம்பிள்ளைகள் மனிதத்தின் குறுகிய தன்மையோடு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையின் அழிவு மனித சமூகத்தின், கலாச்சாரத்தின் அழிவாக எனது கிராமம் எஞ்சி நிற்கிறது. வீர விளையாட்டுக்களில் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இளம்பிள்ளைகள் 5க்கு 4 சைஸ் ரூமில் உலகத்தை மறந்து தொலைக்காட்சிகளிலோ, கணிப்பொறிகளிலோ, ஸ்மார்ட் போன்களிலோ சுருங்கிப் போய் உள்ளனர். காடுகளை, இயற்கையை, மலைகளை அழிக்கும் இந்திய முதலாளிகளுக்கு எதிரான ஒரு வீரியமான போராட்டம் தேவை என நான் பத்திரிக்கைத் துறைக்கு முதலில் காலடி எடுத்து வைத்தபோது என்னுடன் பணியாற்றிய, நக்சல் சித்தாந்தத்தை உள் வாங்கிய ஒரு தோழர் கூறிய போது எனக்கு நகைப்பாக இருந்தது. இப்போது எனது கிராமம் இயற்கை திருடிகளால் அழிந்த போதுதான் எவ்வளவு வீரியமாக இந்த போராட்டங்கள் தொடர வேண்டும் எனத் தோன்றுகிறது.

உலக மயமாக்கலால் அழிந்து போனது இயற்கை மட்டுமல்ல மீண்டு வரமுடியாத அளவிற்கு இந்தியாவின் கிராமங்களும்தான். ஒட்டுமொத்த தமிழனும் இயற்கை சுரண்டலுக்கு எதிராக அணி திரளாவிட்டால் நமது சந்ததிகள் தாமிரபரணியும், காவேரியும், மேற்குத் தொடர்ச்சிமலையும் எந்த நாட்டில் இருந்தது எனக் கேட்பார்கள்.

- ஷாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It