இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவாகவே உள்ளது. அது காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டராகட்டும், பாரதீய ஜனதாவின் தொண்டராகட்டும் இடதுசாரிக் கட்சிகளின் தோழர்கள் ஆகட்டும் ஏனைய பிற பிராந்தியக் கட்சிகளின் தொண்டர்களாகட்டும் இந்தியாவின் மூலை முடுக்குகளில் வாழும் கட்சி அறியா சாமானியன் ஆகட்டும் நாட்டில் மழை பெய்யவில்லை என்றோ, புயல் மழை கண்டோ, விலைவாசி உயர்வு கண்டோ ஏதேனும் ஒரு வகையில் நாட்டைப் பற்றி கவலைப்படுபவனாகவே இருக்கிறான்.

பஞ்ச பாண்டவர்கள், மனைவி உட்பட எல்லா உரிமைகளையும் சூதில் இழந்து நின்ற வேளையில் மானபங்கம் செய்யப்பட்ட பாஞ்சாலிக்கு காவலனாய் பரந்தாமன் வந்தான்; துன்பப்படும் மக்களை ரட்சிக்க ஏசு பிரானும், துயருற்ற மக்களின் குறை களைய நபிகளும் அவதரித்து மக்களைக் காப்பாற்றினார்கள் என்ற பழங்கதைகளை நம்பி வாழ்கின்ற மக்களுக்கு யாராவது ஒரு அவதார புருசன் தோன்றி இந்த தேசத்தினைக் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கையே ஆறுதலை வழங்கி கடும் அல்லலுக்கு இடையிலும் அவனது அயராத உழைப்பினை உறுதிப்படுத்துகிறது.

Manmohan Singh & Modi

மத்தியிலே ஆளுகின்ற காங்கிரஸ் அரசு தான் கொண்ட கொள்கைப் பிடிப்பினால் எந்த அன்னியரின் சுரண்டலை முன்னூறு ஆண்டுகாலம் போராடி துரத்தினோமோ அந்த சுரண்டலை அனுமதிக்கும் போக்கினைத் தொடர்ந்து வரும் நிலையில் மக்கள் நலத் திட்டங்கள் முடக்கப்பட்டு பெரு முதலாளிகளின் லாப அளவை அதிகரிக்கின்ற அரசின் சூழ்ச்சியினை உணர்ந்த மக்களின் கோபத்தை ஆட்சியாளர்களின், தற்போதைய பொருளாதாரக் கொள்கையிலிருந்து மாற்றி தனி நபர்கள் மீது திணித்து, அதே கொள்கைகளை அதி தீவிரமாக அமுல்படுத்திட ஆள் பிடிக்கும் வேலையினை முதலாளித்துவ ஊடகங்கள் மிகத் திறனாக செய்து வருகின்றன.

இன்று நாடு இருக்கும் நிலையில் நாட்டைப் பாதுகாக்க கூடிய சர்வ வல்லமை மிக்கவராக இந்துக்களுக்கு பரந்தாமன் போல, கிருஸ்துவர்களுக்கு பரமபிதா போல, இஸ்லாத்திற்கு கிடைத்த நபி போல இன்றைய ஊடகங்கள் ஊதித்தள்ளும் பலூனாக மோடி முன்னிருத்தப்படுகிறார். எடுத்துக்காட்டாக உத்தர்காண்ட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க நமது ராணுவ வீரர்கள் உயிரைப் பண‌யம் வைத்து போராடிக் கொண்டிருக்கையில், மோடி தமது படையுடன் சென்று 15000பேரைக் காப்பாற்றினார் என்று ஊதித் தள்ளின. அத்தகைய முதலாளித்துவ ஊடகங்கள் வாங்கிய காசுக்கு மேல் கூவி விட்டு பின்னர் சமாளித்துக் கொண்டு, தவறான செய்தி என பின் வாங்கியது அறிந்ததே.

இத்தகைய தனிநபர் சாகசக் கதைகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கையில் இந்தியாவில் மோடி ஆளும் மாநிலமான குஜராத்தை ஏதோ சொர்க்க பூமிபோல சித்தரிக்கும் வேலைகளும் அங்கே மக்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வது போலவும், குஜராத் மாநிலம் இந்தியாவின் மிக முன்னேறிய வசதிபடைத்தவர்களின் மாநிலமென்றும் முன் மாதிரி என்றும் குஜராத்தை முன்னேற்றியதைப்போல இந்தியாவை முன்னேற்றிட மோடிதான் சரியான மனிதர் என்றும் சமூக ஊடகங்களும் இணையதள பக்கங்களும் செய்திகளை நிரப்புகின்றன.

2002ல் மிகப்பெரிய மனிதப் படுகொலை நடந்த மாநிலம் இன்றைக்கு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்றால் நடந்த விசயங்கள் இட்டுக்கட்டப்பட்டவையா? மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, கார்ப் பயணத்தில் சக்கரத்தில் அடிபடும் நாய்க்குட்டியோடு ஒப்பிட்ட மனிதர் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதன் மர்மம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தேடி பயணிப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது.

சமீபத்தில் இந்திய தேசம் முழுமைக்கும் உள்ள மாநிலங்களின் நிலை குறித்த ரகுராம்ராஜன் குழு அறிக்கையில் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இடம்பெறவில்லை. கல்வி, சுகாதாரம், குழந்தை இறப்பு விகிதம் போன்ற சமூக நல மேம்பாட்டில் கூட குஜராத் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது.

குஜராத்தில் 45 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளில் 1000ற்கு 45 குழந்தைகள் இறந்து விடுகின்றன. அதே போல ஐந்து வயதுக்கு உட்பட்ட 1000 குழந்தைகளுக்கு 60 குழந்தைகள் இறந்து விடுகின்றன. ஒவ்வொரு 10000 பிரசவத்திற்கும் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 148 ஆக உள்ளது என சுகாதாரத் துறையின் பின்னடைவு குஜராத்தில் கவனிக்கப்படாத விசயமாக உள்ளது.

"பலவீனமான கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளைக் கொண்டுள்ள குஜராத் வளமான மாநிலமாக உள்ளது" என முரண்பாடான புன்னகையோடு கூறுகிறார் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அப்துல் சூட். புராணங்களின் பூமி என்றழைக்கப்படும் குஜராத் மண் இன்று தனி நபர் புகழ்பாடும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக பாரதீய ஜனதாவின் தலைவர்கள் மெனக்கெடுவதுடன் APCO WORLD WIDE என்ற நிறுவன‌ம் உலகம் முழுமைக்கும் மோடியை வளர்ச்சியின் நாயகன் “விகாஷ் புருஷ்” என்று பிரச்சாரம் செய்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு காரணம் ஜெர்மனி மீது ஹிட்லர் கொண்ட பாசம் தான் என்ற கோயபல்சின் பணியினை அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டாயத்தின் பேரில் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

குஜராத் குறித்த வெற்றிச்சரித்திரம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் வேகமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மோடி இனி குஜராத்துக்கு செய்யவேண்டியது ஏதுமில்லை; அங்கு அனைத்தும் செய்து முடித்தாகி விட்டது போன்ற கருத்துக்கள் மேற்சொன்ன நிறுவனங்கள் மற்றும் நபர்கள் வழியாக தொடர்ந்து பரப்பப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் பரிவாரங்களும் முழங்குவதுபோல குஜராத் இந்தியாவின் முன்னேறிய மாநிலம் என்பது வெளிவந்து கொண்டிருக்கும் விவ‌ரங்களில் தெரியவில்லை. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழைந்ததும் தனது அடித்தளத்தினை நிறுவி ஒட்டு மொத்த இந்தியாவையும் வளைத்தது இம்மண்ணில் அது ஏற்படுத்திய உட்கட்டமைப்புகளால் தான். அத்தகைய 400 ஆண்டு கால வளர்ச்சி தான் தொடர்ந்து இன்றைக்கு வரைக்கும் குஜராத்தின் வளர்ச்சிக்கான காரணியாக இருந்துள்ளது என்கின்ற விசயங்களோடு, இன்றைக்கு வளர்ச்சி என்று சொல்லுகிற விசயங்கள் உண்மையில் மோடியின் சாதனை அல்ல. இவர்கள் வளர்ச்சி என்று மார் தட்டுகிற வளர்ச்சியும் கூட ஏழைகளின், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தினையும் ஏற்படுத்திடவில்லை.

குஜராத் வளர்ச்சி என்பது, அங்கு வசிக்கும் தலித்துகள், பெண்கள் மற்றும் ஆதிவாசிகளின் வளர்ச்சியில் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. குஜராத்தில் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் குறித்த ஆய்வு இந்த இரு துறைகளில் மோடி அரசாங்கம் தோல்வியடைந்தது என குறிப்பிடுகிறது.

மாணவர்கள் தொடர்ந்து படிப்பதில் குஜராத் மாநிலம் தேசிய அளவில 18ஆவது இடத்தில் இருப்பதாக UNDP புள்ளி விபரம் கூறுகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் தொடர்ந்து கல்வி பயிலாமல் இடைநிற்கும் அளவு 57.9 சதவீதமாக உள்ளது வளர்ச்சியின் அடையாளமில்லை.

தொழிலாளர் சீர்திருத்தம் மற்றும் உரிமைகள் போன்றவற்றிற்கு எதிராக செயல்படும் மோடி அரசு, கார்ப்பரேட் சீர்திருத்தக் கொள்கைகளை வேகமாக அமுல்படுத்துகிறது. பெரும்பான்மையான பகுதிகளில் துவங்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்க நடைமுறைகளைத் தடுத்து தனது எஜமான விசுவாசத்தினைக் காட்டியுள்ளது.

200ஆம் ஆண்டில் குஜராத்தில் தொழில் முதலீடு 66ஆயிரம் கோடியாக இருந்தது 2010ல் 240000 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 22 சதவீது வளர்ச்சி ஆகும். ஆனால் வேலை வாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்தள்ளது என்கிற புள்ளி விபரம் குஜராத்தின் வளர்ச்சி சாமானியர்களுக்கானது அல்ல என்பதற்கு உதாரணமாகும்.

இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் இந்தியாவின் முக்கியமான 20 இந்திய மாநிலங்களில் மிகவும் கீழான நிலையில் உள்ள குஜராத் கிராமப்புற ஆண்களின் கூலி அளவில் 14 ஆவது இடத்திலும், பெண்களின் கூலி அளவில் தேசிய அளவில் 9ஆவது இடத்திலும் உள்ளது.

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதாக மார் தட்டும் மோடி அரசாங்கத்தின் நிர்வாகத்தில் 2012 ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் மட்டும் ஆறுமாத காலத்தில் 40 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அரசின் அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு குறு விவசாயிகளை வஞ்சித்து விட்டு கார்ப்பரேட் விவசாயத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை சாதனையாக ஏற்க முடியாது. நிலமில்லாதவர்களுக்கு வழங்கவேண்டிய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவன‌ங்களுக்கு அடிமாட்டு விலைக்கு வழங்கப்பட்டது. இதில் வன உரிமை சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு நிலங்கள் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டதுடன் பட்டா கோரி விண்ணப்பிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் 1.20 இலட்சம் மனுக்கள் காரணமின்றி தள்ளுபடி செய்யப்பட்டதுடன் மனுக்களை மறு பரிசீலனை செய்திட உயர் நீதி மன்றம் உத்தரவிட வேண்டியிருந்தது.

காங்கிரஸ் அரசாங்கம் ஊழலில் திளைப்பதாக கூப்பாடு போடும் பாரதிய ஜனதாவும் அதன் ஊடகங்களும் ஊழலில் திளைக்கும் குஜராத்தின் அவலங்களை நினைப்பதே இல்லை.

CAG அறிக்கையில் 2011-12 நிதியாண்டில் கார்ப்ரேட்டுகளுக்கு அதரவாக 1275 கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ள மோடி அரசின் செயல் சந்தேகத்துக்கிடமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மோடி அரசால் அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ போன்ற நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் தனது பெரும்பான்மையினைப் பயன்படுத்தி இந்த அறிக்கையினை வெளிவராமல், விவாதிக்கப்படாமல் கவன‌மாக பார்த்துக்கொண்டது மோடி அரசு.

அதானி நிறுவணத்திற்கு அபராத தொகை தவிர்ப்பு 160 கோடி, அதே நிறுவன‌த்திற்கு சதுர மீட்டருக்கு ரூ 1500 பெறுமான நிலங்களை ரூ 1லிருந்து ரூ32 வரை விற்று அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது. வஜிரா பகுதியில் எஸ்ஸார் குழுமம் 7,24,687 சதுர மீட்டர் நிலத்தினை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததை சலுகை விலையில் அவர்களுக்கே விற்பனை செய்தது. அணு ஆற்றல் உற்பத்தி ஆலை அமைத்திட லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவன‌த்திற்கு சலுகை காட்டியதால் அரசுக்கு 128.7 கோடி இழப்பும், பரோடா மாவட்டத்தில் நிலம் ஒதுக்கியதால் 79.11 லட்சம் இழப்பும் ஏற்படுத்தியது. டாடா நானோ குழுமத்திற்கு சதுர மீட்டர் ரூ10000 பெறுமான நிலத்தினை சதுர மீட்டர் ரூ900க்கு ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்ப்படுத்தியது என மோடி அரசின் ஊழல் பட்டியல் நீளுகிறது.

2006ஆம் ஆண்டில் போர்பந்தர் நீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாபு போக்கிரியாவை தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டுள்ள மோடி ஊழலை ஒழிக்கப் போவதாக பேசுவது விந்தையாக உள்ளது.

ஜியோ குளோபல் நிறுவன‌த்திற்கும் GSPC நிறுவன‌த்திற்குமான உடன்பாட்டின் மூலம் வழங்கப்பட்ட எரிவாயு வயல்கள் ஒதுக்கீட்டில் முதலமைச்சர் அலுவலகமே சம்மந்தப்பட்டுள்ளதாக CAG தெரிவிக்கிறது.

மோடியின் மிகப்பெரிய சாதனையாக பேசப்படுவது குஜராத்தின் மின் உற்பத்தி. குஜராத் மிகை மின் மாநிலம் என்று பெருமிதம் பேசும் அளவிற்கு நிலைமை அங்கில்லை. இன்றைக்கும் 60 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார இணைப்பே வழங்கப்படவில்லை. மின் கட்டணத்தைப் பொருத்த வரையில் தமிழகம் மற்றும் டெல்லியை விட அதிகம். குஜராத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ3.20 (முதல் 50 யூனிட்களுக்கு) ஆனால் தமிழகத்தில் 1.00(முதல் 100 யூனிட்களுக்கு). மிகை மின் மாநிலம் என்றால் விலை குறையவேண்டும் இல்லையா? ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு என்று அரசிடம் இருந்து யூனிட் ரூ 2.50க்கு மின்சாரத்தை வாங்கும் அதானி நிறுவன‌த்திடம், மோடி அரசு யூனிட் 13 ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்குகிறது.

இந்தியாவின் மிக அதிகமாக கடன் வாங்கிய மாநிலங்களில் 3ஆவது இடம்,

தனி நபர் வருமானத்தில் 10ஆவது இடம்,

சிறப்பான வளர்ச்சியில் 9 ஆவது இடம்,

எழுத்தறிவில் 18ஆவது இடம்,

கழிப்பறை இல்லா வீடுகள் 61 சதவீதம்,

சாலை பராமரிப்பில் 11ஆவது இடம்,

தொழிலாளர் ஊதியத்தில் 14 ஆவது இடம்,

மனித வள மேம்பாட்டில் 14 ஆவது இடம்,

பசியால் வாடும் மக்களில் 13ஆவது இடம்

என அனைத்து துறைகளிலும் பின்தங்கியுள்ள மோடியின் நிர்வாகம் குறித்த முதலாளித்துவ ஊடகங்களின் தகவல்கள் உண்மையானவை அல்ல என்பதையும் அவை திட்டமிட்ட இட்டுக்கட்டல் என்பதையும் உணரவேண்டிய நேரமிது.

 இவை, குஜராத் போன்ற வளர்ச்சி வேண்டும் என்று விரும்புகிற மக்களின் நம்பிக்கைக்குரிய நிகழ்வுகளாக இருக்க முடியாது. இவை வளர்ச்சிக்கான அடையாளங்களாக நாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

கோத்ராவில் 2002ஆம் ஆண்டில் நிகழ்ந்த ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வரலாறு காணாத வன்முறை, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த மோடியும் பிரதமர் நாற்காலியில் ஒட்டியிருந்த வாஜ்பாயும் மௌனம் காத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களை, குழந்தைகளை, ஆண்களை கேட்பாரற்ற அநாதைகள் போல வெட்டிச்சாய்த்த, பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிகழ்வுகள் பல்வேறு சுயாதீன குழுக்களின் ஆய்வில் வெளியிடப்பட்டதும் பத்திரிக்கைகளில் செய்தியாக வந்தமையும் இன்று திட்டமிட்டு மறக்கடிக்கப்படுகிறது. பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வன்புண‌ர்ச்சி செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டனர். எரிப்பது என்பது வன்புணர்ச்சியின் இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளது என 03.01.2003நாளிட்ட பிரண்ட் லைன் ஏடு தெரிவித்தது.

ஆனால், பாரதிய ஜனதாக் கட்சியும் மோடியும் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புச் சம்பவம் தீவிரவாதிகளால் முன்னமே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்று பரப்புரை செய்து கொண்டிருக்கும் சமயத்திலேயே அவரின் உள்துறை அமைச்சர் ஜோர்தான் ஜடாபியா இது பாகிஸ்தானின் பங்குடன் நடைபெற்றது என்ற கருத்தை வேண்டுமென்றே வெளியிட்டார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினை திட்டமிட்ட வெறிச்செயல் என்று வருணித்த பாரதிய ஜனதா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் ஆதரவோடு நடத்தப்பட்ட தாக்குதல்களை “இந்துக்களின் எழுச்சி” என்றது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன்கள், டிரக்குகள், வன்முறைக்கு வினியோகம் செய்யப்பட்ட கத்திகள் மற்றும் ஆபத்தான வேதிப்பொருட்கள் எவ்வாறு திட்டமிடப்படாமல் வினியோகம் செய்யப்பட்டது என்பதும், கேஸ் சிலிண்டர்கள் கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட விதமும் தன்னிச்சையாக நடந்ததாக இருக்கவில்லை

2002ல் நடைபெற்ற மதக்கலவரம் மட்டுமே மோடி கொலைவெறி கொண்ட இந்துத்துவா கும்பலின் செயல் வீரர் என்று சொல்வதற்கான காரணமாக இருக்கவில்லை. 2009ல் உச்ச நீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு குல்பர்க் சொசைட்டி படுகொலை உள்ளிட்ட முக்கியமான ஒன்பது வழக்குகளை விசாரிப்பதற்காக அமைத்தது. அக்குழு குல்பர்க் படுகொலை சம்பவத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இர்பான் ஜாப்ரி உள்ளிட்ட 69பேர் அடித்து பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என்கிறது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அமிக்கஸ் கூரியே கொடுத்த அறிக்கையில் மோடியை குற்றவாளியாக சேர்ப்பதற்கு முதல் கட்ட ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார்.

கலவர காலத்தில் மோடி கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட காவல் துறை அதிகாரி சஞ்சய் பட் நிர்வாக முறைகளை முடக்கி வைத்திடும் வேலையினைத்தான் மோடி செய்தார் என தெரிவிக்கிறார். அயோத்தியா மாபியாக்களுக்கு கர சேவகர் குழுக்களை திரட்டும் போதே உளவு அமைப்புகள், மத ரீதியான திரட்டல்கள் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்த தகவல்களை மோடி தலைமையிலான அரசு கண்டும் காணாமல் விட்டது எதார்த்தமானது அல்ல.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினைத் தொடர்ந்து கர சேவை குழுக்களினால் மத ரீதியாக‌ முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டும் கோசங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. கலவரம் துவங்கிய பிறகு மோடி, அரசு அதிகாரிகளை அழைத்து பேசும்முன்னரே விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பட்டீலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என தொலைபேசிப் பதிவுகள் காட்டுகின்றன. குஜராத்தில் உள்ள கோத்ரா பகுதி மத ரீதியாக பதட்டமான பகுதி என எல்லா நிலை அலுவலர்களுக்கும் தெரியும். ஆனால் மாநில உளவுப்பிரிவின் தகவல்கள் அனைத்தையும் மோடி நிராகரித்தார்.

இப்படி மதக் கலவரம் உண்டாகும் சூழலினை வளர்த்தெடுத்த மோடி கும்பல் ரயில் பெட்டி எரிந்ததில் இறந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் கலவரத்தைத் தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பிய விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பாட்டீலிடம் ஒப்படைத்தது. மிகவும் உணர்ச்சிகரமான இந்த நிகழ்வில் இறந்தவர்களின் உடல் மீதான பிரேதப் பரிசோதனை மத உணர்வினைத் தூண்டும் வகையில் திறந்த வெளியில் ரயில்வே பிளாட்பாரத்தில் வெறியூட்டப்பட்ட மக்கள் கூட்டத்திற்கு முன்னர் நிகழ்த்தப்பட்டதன் மூலம் அப்பகுதியில் வாழும் இந்துக்களை மன ரீதியாக முஸ்லிம்களுக்கு எதிராக தயார் படுத்தியதுடன், கலவரக்காரர்களை வெறியூட்டப் பயன்படுத்தினார்.

ரயில் எரிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்கள் அலகாபாத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதுடன் வழியெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தினைத் தூண்டிட ஏதுவாக இறந்த உடல்கள் பயன்படுத்தப்பட்டன‌.

கலவரம் நடந்த காலத்தில் குஜராத்தில் மூர்க்கத்தனமான பேரணிகள் நடத்தப்பட்டது. இந்து அமைப்பினர்களின் போராட்டத்தினை மோடியின் பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக ஆதரித்தது. நிர்வாகத்தினை முடக்கி வைத்து கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது.

ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தளம் மற்றும் அதன் முன்ணனி அமைப்புகள் கடந்த காலங்களில் கக்கி வந்த “முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்” என்பது போன்ற வெறிபிடித்த வாசகங்கள், இரத்தத்தினை உறைய வைக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கான திட்டம் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதையே காட்டுகிறது.

பல்வேறு தீய செயல்களை செய்து உலக மக்களின் மனதில் கொடுங்கோலனாக பதிவாகியுள்ள அடால்ப் ஹிட்லர் தான் செய்த யூத இன அழிப்பும், உலக ஆக்கிரமிப்பு அடாவடிகளும் ஜெர்மானிய மக்களின் நன்மைக்கே என சாயம் பூசினாலும் அவனது கொடும் செயல்களுக்காக இன்றும் உலக மக்களின் முன்பாக ஜெர்மனி தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது. ஹிட்லரின் நடவடிக்கைகளை ஆதரித்து அசுர பிரச்சாரம் செய்த கோயபல்சின் பொய்யுரை உலக மக்களின் முன் வெளிச்சத்திற்கு வந்ததைப்போல இன்றைக்கு பாரதிய ஜனதா மற்றும் முதலாளித்துவ ஊடகங்களின் பொய்யுரைகள் வெளிச்சத்திற்கு வரும் காலம் தொலைவில் இல்லை. ஹிட்லரின் இன அழிப்பைப் போல மோடியின் சிறுபான்மையின விரோத செயல்கள் உலக அளவில் இந்திய தேசத்திற்கு அவமானத்தினை உருவாக்கிடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குள்ளது.

மத துவேச நடவடிக்கைகளுடன், கல்வி, சுகாதார துறைகளில் பின்னடைவு, கார்ப்ரேட் ஆதரவு நிலை, தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு எதிரான நிலைபாடு, இயற்கை வளங்களை தனியாருக்கு கொள்ளை லாபத்திற்கு தாரைவார்ப்பது, ஊழல் என திளைக்கும் மோடியும் அவரது பரிவாரங்களும் காங்கிரஸ் அரசாங்கம் முன்மொழிந்த மக்கள் விரோத உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை, பென்சன் நிதிச் சட்டத்தை, அணுசக்தி உடன்பாட்டை மற்றும் பொதுத்துறைகள் விற்பனையை ஆதரித்து வருகின்ற‌ன. கார்ப்பரேட்கள் முன்மொழியும் டர்பன் அணியா மன்மோகன் சிங்தான் மோடி என்பதையும், இனியும் மன்மோகன் சிங் என்ற வேசம் கலைந்த குதிரை மீதமர்ந்து சவாரி செய்து மக்களை ஏமாற்ற முடியாது என்ற பெரு முதலாளிகளின் மாற்றுதான் மோடி என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

- வீரக்கடம்பன், குஜிலியம்பாறை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It