(பிரான்ஸ் திருவள்ளுவ​ர் கலைக்கூடத்தி​ல் ஆற்றிய சொற்பொழிவி​ன் எழுத்து வடிவம்)

ka panjangam

உலகின் பல்வேறு நாடுகட்குச் சென்றதன் பயனாகவும் பிற மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றறிந்ததன் பயனாகவும் தமிழிலக்கியம், தமிழ்ப் பண்பு, தமிழ்க்கலை, தமிழ் வரலாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப் பரப்ப வேண்டும் என்று ஒரு சிறிது உணர்ந்துள்ளேன்…கொன்பூசியஸ், செனக்கா முதலிய நீதிநூல் ஆசிரியர்களை உலக மாந்தர் எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ அங்ஙனமே திருவள்ளுவரையும் அறிந்து படிக்குமாறு நாம் செய்வித்தல் வேண்டும்.

  - நூற்றாண்டு விழாக் காணும் யாழ்ப்பாணம் தனிநாயக அடிகள் (1913-1980)

கலை, இலக்கிய அழகியலின் உச்சத்தைத் தொட்டிருந்த தமிழ் இலக்கிய மரபு, பிற்காலப் பாண்டிய அரசு, டில்லியை ஆண்ட சுல்தான்களால் வீழ்ச்சியடைந்த கி.பி. 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. பல்வகைப்பட்ட தமிழ் இலக்கியங்களும் கலைகளும் திட்டமிட்டே அழித்தொழிக்கப்பட்டன. உள்நாட்டு மொழியான தமிழ் சார்ந்த அனைத்தும் தமிழ்மொழி உட்பட இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. சுல்தான் ஆட்சியைத் தொடர்ந்து தஞ்சாவூரை ஆண்ட மராட்டியர் ஆட்சிக் காலத்திலும் விஜயநகரப் பேரரசின் சார்பாகத் தமிழ் நிலத்தை ஆண்ட மதுரை நாயக்கர், தஞ்சாவூர் நாயக்கர், செஞ்சி நாயக்கர் காலத்திலும் தமிழ் நாகரிகமும் தமிழும் தன் பழைய பெருமையை அடையவே முடியவில்லை. பிறமொழியாளர்களான அவர்கள் அனைவருமே தமிழ் நிலத்தை, வளத்தை ஆக்கிரமித்தது மட்டும் அல்லாமல் தமிழ் அடையாளத்தையும் அழிக்கும் நோக்கில் சமஸ்கிருதத்தையும் தெலுங்கு மொழியையும் முதன்மை இடத்தில் நிறுத்தி வளர்த்தனர். வேற்றுமொழிக்காரர்களின் ஆதிக்கத்தினால் தமிழ்ப் புலவர்கள் தங்கள் பிழைப்பிற்காக மடாலயங்களையும் சிற்றரசர்களையும் ஜமீன்தார்களையும் புகழ்ந்து பாடிப் பிழைக்க வேண்டிய தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய தமிழ்ப் புலவர்களின் நிலையை மகாகவி பாரதியார் தன்னுடைய “சின்ன சங்கரன் கதை”யில் பதிவு செய்துள்ளார். குட்டி ஜமீன் தார்களுக்குக் கிளுகிளுப்பை ஊட்டுவதற்காகப் பாடல் கட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதைச் “சாற்றுவதும் காமக்கலை; சாதிப்பதும் போற்றுவதும் காமனடிப்போது” என எழுதினார். மேலும்,

                                புலவன் அலவன் வலவன்

                                பலகை அலகை உலகை

என்று எதுகை மோனைகளிலும் “யமகம், திரிபு, பசுமூத்தபந்தம், நாகபந்தம், ரதபந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்ப்பந்தங்கள் கட்டி அவற்றை மூடர்களிடம் காட்டி அமர்த்தனென்று மனோராஜ்யம் கொண்டனர்” என்கிறார் பாரதி.

                தமிழின் இந்த இழிநிலை இக்காலத்தில் எந்த அளவிற்குப் போய்விட்டதென்றால், தமிழ் வடமொழியிலிருந்து பிறந்தது; சமஸ்கிருதத்தில் இல்லாமல் தமிழில் மட்டும் இருக்கும் எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்து மட்டுமே தமிழ் எழுத்து; தமிழிலுள்ள மற்ற எழுத்துக்கள் எல்லாமே சமஸ்கிருதத்திற்கு உரியவை. எனவே “ஐந்து எழுத்தால் மட்டுமே ஆன ஒரு மொழியை மொழியென்று சொல்லவும் நாணுவர் அறிவுடையோர்” என்றும், தமிழில் நூற்கள் ஏராளம்; ஆனால் சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் ஒரு நூலேனும் உண்டா? என்றும் தமிழிலேயே ‘இலக்கணக் கொத்து’ நூலாசிரியர் சுவாமிநாத தேசிகர் கேட்கும் அளவிற்குத் தமிழ்மொழி தரைமட்டமாக்கப்பட்டுக் கிடந்தது. அதனால்தான்,

 “கி.பி. 14 ஆம் நூற்றாண்டும் அதற்கடுத்த இரண்டொரு நூற்றாண்டுகளும் தமிழ்நாட்டின் இருண்டகாலமென்றே சொல்லலாம்”         (அ.மு. பரமசிவானந்தம், ப. 299)

என்று எழுதினார் அ.மு.ப. 1892 ஆகஸ்டு மாத “விவேக சிந்தாமணி” இதழில் “18 ஆம் நூற்றாண்டின் தமிழ் பாஷாபிவிர்த்தி” என்ற கட்டுரை எழுதிய வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்,

“தமிழானது ஆரியர், மகம்மதீயர்கள் மூலமாய்ப் பொறுக்க முடியாத துன்பமடைந்து தன்னுருமாறி நிற்கின்றது”

எனக் குறிப்பிட்டார். இத்தகையதொரு சூழலில்தான் ஐரோப்பியர் வருகையும் கிறித்துவப் பாதிரிமார்கள் வருகையும் நிகழ்ந்தன. இவர்கள் வருகையும் இவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்புப் பணியும்தான் தமிழை மீட்டெடுத்து மீண்டும் தலைநிமிரச் செய்தன என்பது நவீனத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறாக நிற்கிறது. இனி அவற்றை விரிவாகக் காணலாம்.

II

                உலகத்தை மாற்றிய புத்தகங்கள் என்று ரூஸோவின்1 ‘சமுதாய ஒப்பந்தம்’, காரல் மார்க்சின்2  ‘மூலதனம்’ முதலிய நூல்களைச் சொல்லுவர். மார்க்சின் மூலதனம், “உலகத்தை முதலாளித்துவ நாடுகள், சோசலிச நாடுகள் என இரண்டாகப் பிளந்தே விட்டது” என்று வர்ணிப்பர். அப்படியொரு நிகழ்வு தமிழ் உலகிலும் நிகழ்ந்துள்ளது; அதுதான் வான்புகழ் வள்ளுவரின் திருக்குறள் வரவு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் அது அரங்கேறிய போது எத்தகைய பாதிப்புகளைத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதைத் திருக்குறளுக்குப் பிறகு சிலப்பதிகாரம், மணிமேகலை எனத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் வள்ளுவரின் குறளை, சிந்தனைகளைப் பயன்படுத்தியுள்ளன என்ற உண்மையைக் கொண்டு ஒருவாறு ஊகிக்க முடியும் என்றாலும் துல்லியமாக எதையும் சொல்வதற்கு ஆவணங்கள் இல்லை. ஆனால் ஐரோப்பியர் வருகையை ஒட்டி வீரமாமுனிவர் (1680-1747), எஃப்.டபிள்யூ. எல்லீஸ் ஆகியோர் முறையே இத்தாலி மொழியிலும் ஆங்கில மொழியிலும் ஏட்டில் கிடந்த திருக்குறளை மொழிபெயர்த்துப் பதிப்பித்து வெளிட்டதானது தமிழ் உலகில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. பின்காலனித்துவத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் விளைவான தமிழ் மறுமலர்ச்சிக்கான வேர் இவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்துதான் பரவியுள்ளது.

                இத்தாலியிருந்து சமயப்பணி ஆற்ற இந்தியா வந்த கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கி, தமிழ்படித்துத் தன் பெயரைத் தைரியநாதர் என்று முதலிலும் பிறகு அது தூயதமிழாக இல்லை என்று அறிந்து வீரமாமுனிவர் என்றும் மாற்றிக்கொண்டு ‘தேம்பாவணி’ உட்பட 23 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்ட நிலையிலேயே தமிழின் மறுமலர்ச்சிக்காலம் தொடங்கிவிட்டது. அவர் திருக்குறள் கருத்துக்களில் பைபிள் கருத்துக்களைக் கண்டு ஆர்வத்தோடு திருக்குறளை மொழிபெயர்க்கத் தொடங்கி (கி.பி.1730) அதன் பெருமையைத் தமிழ்நாட்டில் மீட்டெடுத்தது மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும் அவருடைய இத்தாலிய மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் திருக்குறள் முதலில் பரவியது என்பது வரலாறு.

                கி.பி. 1810ஆம் ஆண்டில் கிண்டர்ஸி என்ற ஐரோப்பியர் திருக்குறளின் சில பகுதிகளை அச்சுக்குக் கொண்டுவந்தார். கி.பி. 1812இல் எஃப். டபிள்யூ. எல்லீஸ் திருக்குறளையும் நாலடியாரையும் அச்சேற்றியதோடு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கினார். எல்லீஸ் அன்றைய சென்னை மாநிலத்தின் நிதி அதிகாரியாகவும் அக்க சாலைத் (Mint) தலைவராகவும் விளங்கியவர்; ‘சென்னைக் கல்விக்கழகம்’ என்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தைத் தொடங்கியவர். திருக்குறளின் மேல் கொண்ட பற்றினால் வள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார்; அந்நாணயங்கள் சிலவற்றை அளக்குடி ஆறுமுக சீதாராமன், ஐராவதம் மகாதேவன் ஆகிய இருவரும் கண்டெடுத்துள்ளனர். 1796இல் சென்னை அரசுத் துறைக்குப் பணியாற்ற வந்த இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த கந்தசாமி என்பார் தந்த ஏட்டின் மூலமாகத் திருக்குறளை அறிந்து பதிப்பித்துள்ளார். திருக்குறளின் மேல் அவர் எந்த அளவிற்குப் பற்றுக்கொண்டு பாழ்பட்டுக் கிடந்த தமிழ்ப்புலவர்கள் நடுவில் வளர்த்தெடுப்பதற்குப் பாடுபட்டுள்ளார் என்பதை அவர் குறித்த இரண்டு வரலாற்றுக் குறிப்புகள் புலப்படுத்துகின்றன.

                1818 இல் சென்னையில் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டின் போது வெட்டிய கிணற்றின் கைப்பிடியில் இவர் திருவள்ளுவரையும் அவர் குறளையும் பதிவு செய்துள்ளார். (இக்கல்வெட்டும் கிணறும் சென்னை இராயப்பேட்டை, பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளன.)

                சாயங் கொண்ட தொண்டியசாணுறு நாடெனும்

ஆழியி லிழைத்த வழகுறு மாமணி

குணகடன் முதலாக குடகடலளவு

நெடுநிலந் தாழ்நிமிர்ந்திடு சென்னப்

பட்டணத் தெல்லீச னென்பவன் யானே

பண்டார காரியப் பாரஞ் சுமக்கையிற்

                புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்

                தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்

                திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய

                இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

                வல்லரணும் நாட்டிற் குறுப்பு

                என்பதின் பொருளை யென்னுள்ளாய்ந்து

இவ்வாறு திருக்குறள் காட்டும் நெறியில் ஓர் ஆங்கில அதிகாரி இயங்கியதாகப் பதிவு செய்திருப்பது எந்த அளவிற்குத் திருக்குறள் அவரைப் பாதித்திருக்கிறது என்பதை அறிய உதவி செய்கிறது. இது மட்டுமல்ல தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள எல்லீஸ் கல்லறை மீது எழுதியுள்ள கல்வெட்டு இப்படிச் சொல்லுகிறது:-

                எல்லீசன் என்னும் இயற்பெய ருடையோன்

                திருவள்ளுவப் பெயர் தெய்வஞ் செப்பி

                அருங் குறள் நூலுள் அறப்பா லினுக்குத்

                தங்குபல நூல் உதாரணக் கடலைப் பெய்(து)

                இங்கிலீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்

இவ்வாறு திருக்குறளை அக்காலக்கட்டத்தில் எல்லீசு மட்டுமல்ல பல்வேறு ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் ஜெர்மானியர்களும்3 மொழிபெயர்த்து ஐரோப்பா கண்டத்திற்குத் திருக்குறளை எடுத்துச் சென்றுள்ளார்.

                ஜார்ஜ் உக்ளோ போப் (G.U.Pope- 1820-1908) 1886ஆம் ஆண்டு “The Sacred Kural of Thiruvalluvar Nayanar with Introduction, Grammar, Translation Notes, Lexicon and Concordance” – என்ற தலைப்பில் விரிவான முன்னுரையுடன் திருக்குறள் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்தார் என்பதோடு அதை இலண்டனில் வெளியிட்டுத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார் என்பதும் பெரிதும் கவனத்திற்குரியதாகும். இங்கே ஒன்றைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த அளவிற்கு ஆங்கிலேயர்கள் பலரும் திருக்குறளை மொழிபெயர்த்து ஐரோப்பாவிற்குள் எடுத்துச் சென்றாலும் 19ஆம் நூற்றாண்டில் சிப்பாய்ப் போராட்டத்திற்குப் பிறகு 1858இல் நேரடியாக ஆங்கில அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்தியக் காலனித்துவ அரசு வரும்போது கல்கத்தாவையே தலைநகரமாகக் கொண்டு ஆண்டதாலும் முதலில் ஆங்கில வழிக் கல்வியைப் பெறுவதில் முந்திக்கொண்டு அரசாங்கப் பதவிகளையும் பிடித்துக்கொண்ட சமஸ்கிருதப் பார்ப்பன‌ர்களின் செல்வாக்குக் காரணமாகவும் திருக்குறள் ஆட்சியாளர்களின் பார்வைக்குப் போகாமல் ‘மனுஸ்மிருதி’ இந்தியத் தேசத்தின் மாபெரும் அற நூலாகக் கட்டமைக்கப்பட்டு முந்திக்கொண்டது. இதன் விளைவுதான் பின்னால் ஆங்கிலேயர் ஆட்சியில் ‘இந்துச் சட்டமென’ ஒன்று புகுந்தது. ஆங்கில மொழியில் இவ்வளவு மொழிபெயர்ப்புகள் நடந்தும் அதிகார அரசு நிர்வாக எல்லைக்குள் திருக்குறளை எடுத்துச் செல்ல முடியாமல் போனது பெரிய வியப்புக்குரிய ஒன்றல்ல; அப்படித்தான் நிகழும். ஏனென்றால் இந்தியாவின் ஆதிக்க அரசியல் என்பது உயர்சாதி, சமஸ்கிருத மேலாண்மை அரசியல்தானே!

III

திருக்குறள் மொழிபெயர்ப்புகள் நடந்துகொண்டிருந்த ஒரு சூழலில்தான் இராபர்ட் கால்டுவெல்லின் (1814-1891) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Language, 1856) என்ற தமிழர்களின் இன எழுச்சிக்கு ஆதாரமாக அமைந்த நூல் வெளிவந்தது. 53 ஆண்டுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றிய கால்டுவெல்லின் இந்தப் புத்தகம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் ஆற்றிய அளவிற்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளது.

             தமிழ், கிரேக்கம் இலத்தீன் மொழிகள் போல ஒரு செவ்வியல் மொழி.

             தமிழ்ச் சொற்கள் கிரேக்கம், இலத்தீன் மொழிகளில் இடம்பெற்றுள்ளன.

             தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. எனவே தமிழ், சமஸ்கிருதத்திலிருந்து வந்தது அல்ல.

             தமிழ், சமஸ்கிருத மொழிச் சொற்களின்றித் தனித்தியங்கும் ஆற்றல் உடையது.

             தமிழிலிருந்துதான் பிற திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியன பிறந்தன.

             திராவிட மொழிகள் தெற்கில் மட்டுமல்ல, இந்தியாவின் நடுப்பகுதியிலும் இமயமலையை ஒட்டிய வடபகுதிகளிலும் பேசப்படுகின்றன.

இவ்வாறு திராவிடம், ஆரியம் என்று இனம், மொழி அடிப்படையில் இந்தியப் பெருங்கண்டத்தை அவர் தக்க சான்றுகளோடு பிரித்துப் போட்டார். இத்தகைய இவருடைய புதிய ஆராய்ச்சி முடிவுகள் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை வேகப்படுத்தின. மேலும் அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் முதன் முதலாக விரிவாகத் தமிழ் இலக்கிய வரலாற்றையும் பதிவு செய்து, திருக்குறளையும் விதந்தோதினார். ஏழு சுழல் வட்டமாகத் தமிழ் இலக்கியம் முழுவதையும் வகுத்துத் தந்தார்:-

1.            சைனமதச் சுழல் வட்டம் (கி.பி.8 - கி.பி.13)

2.            தமிழ் இராமாயணச் சுழல் வட்டம் (கி.பி. 13 நூற்.)

3.            சைவ மறுமலர்ச்சிச் சுழல் வட்டம் (கி.பி. 13 - 14)

4.            வைணவச் சுழல் வட்டம் (அதே ஆண்டுகள்)

5.            இலக்கிய மறுமலர்ச்சிச் சுழல் வட்டம் (கி.பி. 15 - கி.பி. 16)

6.            பார்ப்பன‌ எதிர்ப்புச் சுழல் வட்டம் (கி.பி. 17)

7.            தற்காலம் (கி.பி 18 முதல் 19 வரை)

இப்பகுப்பு முறை இன்றைய நோக்கில் குறையுடையதாகத் தோன்றினாலும் ஏறத்தாழ ‘வரலாற்று இருட்டில்’ கிடந்தது போலக் கிடந்த தமிழ் இலக்கியப் பரப்பில் அன்று இப்பகுப்பு முறை பெரும் வெளிச்சமாகத் தோன்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

                இதே காலத்தை ஒட்டி 1862இல் “A Comprehensive Tamil and English Dictionary” என்னும் நூலை வெளியிட்ட ஐரோப்பிய அறிஞர் எம். வின்சுலோ முன்னுரையில் கால்டுவெல் போலவே இவ்வாறு எழுதினார்:-

 “சிலர் கருதுவது போல, இந்தியாவிலுள்ள தமிழ், சமஸ்கிருதத்தின் குழந்தையன்று… ஏறத்தாழ இந்தியாவின் எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்தால் பெருவளம் பெற்றிருக்கும் போது இத்தமிழ் மொழி மட்டும் தன் இனமான திராவிட மொழிகளிலிருந்தும் கூடக் கடன் பெற இணங்கவில்லை. … இலத்தீன்  உதவியின்றி ஆங்கிலம் இயங்குவதை விடச் சிறப்பாகச் சமஸ்கிருதத் துணையின்றித் தமிழ் இயங்க முடியும் என்பது உறுதி….வட இந்திய மொழிகளை விடவும் பிற திராவிட மொழிகளை விடவும் சமஸ்கிருதச் சார்பின்றித் தமிழ் விளங்குவதற்குக் காரணம் அம்மொழிகளைப் போல இது சமஸ்கிருத பார்ப்பன‌ர்களால் மட்டுமே முதன்மையாக வளர்க்கப்படவில்லை என்பதுதான்” (M.Winslow Dictionary, 1983 (R. Print)

ஐரோப்பிய அறிஞர்களின் இத்தகைய சிந்தனை வரவு, சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீசபாஷை என்று கட்டமைத்திருந்த புனைவுகளை வீழ்த்தின. இதே காலக்கட்டத்தில்தான் 1835 இல் நடைமுறைக்கு வந்த மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலம் ஆங்கிலம் கற்ற உள்நாட்டுக் கல்வியாளர்களின் வருகையும் நிகழ்ந்தது4. கூடவே திருக்குறள் போலவே தொல்காப்பியம், சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழம்பெரும் சிந்தனைக் களஞ்சியங்களாகவும் அழகியலின் அற்புத வடிவங்களாகவும் அமைந்த சூழலில் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் புதிய வேகத்தோடு கிளம்பியது. இந்த வேகமிகு மறுமலர்ச்சி இயக்கத்திற்குச் சிந்தனைத் தளத்தில் உரமாகவும் வலுவான ஆதாரமாகவும் நின்று நிலவியது திருவள்ளுவரின் திருக்குறளாகும். திருக்குறளைச் சமஸ்கிருதவாதிகள் கொண்டாடும் வேதத்திற்கு நேரான ஒன்றாக முன்னிறுத்திய மேற்கண்ட அறிஞர்கள் பலரும், வேதத்தை விட உயர்ந்தது திருக்குறள் என்றனர். வேதத்தில் மானுடப் பொதுமை இல்லை; திருக்குறளில் இருக்கிறது. வேதத்தில் பிறப்பு அடிப்படையில் உயர்வு/ தாழ்வு இருக்கிறது. திருக்குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறது. வேதம், வைதீக மதம் சார்ந்தது; திருக்குறள் மதச் சார்பற்றது. வேதம் சடங்குகளை முதன்மைப்படுத்துகிறது. திருக்குறள் வையத்துள் வாழ்வாங்கு வாழும் மனித ஒழுக்கத்தை, மனித நேயத்தை முன்னிறுத்துகிறது. இதுபோலவே சமஸ்கிருதத்திலுள்ள மனுஸ்மிருதிக்கு எதிராகவும் திருக்குறள் முன்னிறுத்தப்பட்டது; தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இப்படி எழுதினார்:-

                வள்ளுவர் செய் திருக்குறளை

                மறுவற நன்குணர்ந்தவர்கள்

                உள்ளுவரோ மனுவாதி

                ஒரு குலத்துக்கொரு நீதி

இவ்வாறு ஆதிக்கத்திலிருந்த சமஸ்கிருத சிந்தனை மரபிற்கு மாற்றான ஓர் உரத்த சிந்தனை மரபை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை மேலெடுத்துச் செல்லத் திருக்குறள் அடிப்படையான பிரதியாக நின்று செயல்படத் தொடங்கியது.

IV

                தொடர்ந்து தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் பல்வேறு கிளைகளாகப் பிரிந்தது. ஆனால் அவை அனைத்திலும் அடிப்படையாகச் செயல்பட்டது திருக்குறள் என்பது குறிப்பிடத் தக்கது. தாழ்த்தப்பட்டோரையும் பௌத்தத்தையும் முன்னெடுத்த அயோத்திதாசரின் (1845 – 1914) திராவிட மகாசன சங்கம் சார்ந்த செயல்பாடுகளிலும் திருக்குறளே ஆதாரமான பிரதியாகச் செயல்பட்டது. அயோத்திதாசர் புத்தரின் திரிபிடகம் மாதிரி திருக்குறளைத் ‘திரிக்குறள்’ என்றே வழங்கினார். தமிழ் மண்ணின் தூய்மையான விளைச்சல் திருக்குறள் என்று கொண்டாடினார்; மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்டோருக்கான பிரதி என விளக்கினார்.

இதுபோலவே காலனித்துவத்தைப் பயன்படுத்தி எழுந்த ‘சைவசமய மறுமலர்ச்சி இயக்கமும்’ திருக்குறளைத் தங்களுக்கான ஒன்றாக அடையாளப்படுத்தியது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட பதிப்புகளில் வள்ளுவர் சைவ வேளாளர் மரபில் வளர்ந்தவர் என்ற புனைவுகள் கட்டமைக்கப்பட்டன.5

1916 இல் மறைமலையடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கமும் திருக்குறளை முன்னெடுத்துத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை வேகமாக வளர்த்தெடுக்க முயன்றது. திருக்குறளிலுள்ள வடசொற்கள் எண்ணப்பட்டன. திருக்குறள் வழங்கும் சிந்தனைகள் தமிழர்கள் சிந்தனைகள் என முன்னிறுத்தப்பட்டன.

                1925இல் காங்கிரசில் இருந்து விலகிச் சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரும் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்றுக்கொண்ட ஒரே நூல் திருக்குறள் என்பது குறிப்பிடத் தக்கது. தந்தை பெரியார் என அழைக்கப்பட்ட ஈரோடு வெங்கட்ட ராமசாமி (1879-1973) மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பார்ப்பனியத்திற்கு எதிராகவும் சமூகச் சீர்திருத்த இயக்கம் கண்டவர். எனவே இவற்றிற்கு எதிரான எதையும் சிறிதும் தயக்கமின்றித் தாக்கி வீழ்த்த முனைபவர். அந்த வகையில் தமிழிலுள்ள இலக்கியங்களையும் கடுமையாகச் சாடியவர். உங்கள் தமிழ் சாதியைக் கற்பிக்கும் தமிழ்; உங்கள் தமிழ் ஆரியத்தைச் சுமக்கும் தமிழ்; உங்கள் தமிழ் கடவுளையே பாடும் தமிழ்; உங்கள் தமிழ் புராணக் குப்பைகள் நிறைந்த தமிழ்; மூட நம்பிக்கை பொதிந்த தமிழ் என்றெல்லாம் பேசியவர்; இராமாயணத்தை எரித்தவர்.  கா. அப்பாதுரை, சாமி. சிதம்பரனார் போன்ற அவர் மதிக்கும் தமிழ் அறிஞர் பலராலும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருமையின் சின்னமாகப் போற்றப்பட்ட இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தையே ‘ஆரியக் கற்பனை’ என்றவர். அதையும் எரிக்க வேண்டும் என்று எழுதிய வாசுதேவ ஆச்சாரியார், சுப்பிரமணிய ஆச்சாரியார் ஆகியோர் கட்டுரைகளைத் தனது ‘விடுதலை’ இதழில் வெளியிட்டவர்; அத்தகைய பெரியார் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தூணாக விளங்கிய திருக்குறளைப் போற்றினார்:-

“நம் பண்டைத் திராவிடர் மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும் பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்த அறிவாளியாகக் குறிப்பிட முடியும்." (பெரியாரும் திருக்குறளும் (தொ). ப. 5)

இவ்வாறு வள்ளுவத்தை ஏற்றுக்கொண்ட பெரியார், தனது கொள்கைக்கு ஏற்பத் தான் எதிர்க்கும் கீதைக்கு மாற்றாகத் திருக்குறளை முன் வைத்தார். வர்ணாசிரமத்திற்கு எதிராகத் திருக்குறளை முன்னிறுத்திப் போராடினார். எனவே இப்படிப் பேசினார்:-

“திருக்குறள் ஆரிய தர்மத்தை - மனுதர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகவே என்னால் கருதமுடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச் செய்ய, அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்." (மேலது, பக்கம். 5-6)

தன் கலகச் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு திருக்குறளையும் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கலகப் பிரதியாகவே பெரியார் கண்டுரைத்த போது, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் திருக்குறளின் பங்களிப்பு பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது. பெண்களைக் குறித்த பார்வையில் சில குறைபாடுகள் இருந்தாலும் திருக்குறள் மானுட வாழ்வின் ஒழுக்கத்தை வலியுறுத்திய உன்னத நூல் என்றார். மேலும் மதச் சார்பற்ற நூல் என்பதை முன்னிறுத்தினார்.

“திருக்குறளைப் படித்தால் தர்மத்தின்படி நடக்க வேண்டும்; பித்தலாட்டம் செய்யமுடியாது; பித்தலாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது”

என்றும்

 “திருக்குறளை முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது எனலாம். காய்கறி, தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால் மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது?”

என்று எழுதினார். இவ்வாறு மாமிசம் என்பதை ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகப் பார்த்து வள்ளுவருக்கும் பதில் கூறியுள்ளார். இத்தகைய விவாதங்கள் தமிழ் மனப்பரப்பில் திருக்குறள் குறித்த உரையாடலை வேகமாக எடுத்துச் சென்றன.

தொடர்ந்து பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய அறிஞர் அண்ணாதுரையும் தனது கொள்கைப் பரப்பிற்குத் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டார். “திருக்குறள் – ஓர் திருப்பணி” என்ற தலைப்பில் தனது கட்சிப் பத்திரிக்கையான ‘திராவிட நாடு’ இதழில் இவ்வாறு எழுதினார்:-

“குறள் ஏந்திச் செல்வோம்; நாடு நகரமெங்கும் பட்டி தொட்டிகளில் எல்லாம் பண்பாடு எது என்பதை மக்கள் அறியச் செய்வோம். அறம் பொருள் இன்பம் என்னும் அரிய பொருளை மக்கள் உணர மட்டுமல்ல நுகரவும் பணியாற்ற வேண்டும். புதிய பணி; ஆனால் நமது பழைய பணியின் தொடர்ச்சிதான். வாழ்க வள்ளுவர்! வளர்க குறள் நெறி!”

இவ்வாறு தி.மு.க.வின் தலைமை திருக்குறளை முன்னெடுத்த போது திருக்குறள் சாதாரண பொதுமக்கள் மத்தியில் எளிமையாய்ப் பரவத் தொடங்கியது. ம.பொ.சி.யின் தமிழ்த் தேசியச் சிந்தனையும் திருக்குறளை முன்னிறுத்தியது. ஊர்தோறும், நகரம்தோறும், திருக்குறள் மன்றங்கள் தோன்றின. பள்ளிகளில், கல்லூரிகளில் திருக்குறள் மனப்பாடப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், நாடகப் போட்டிகள் எனப் பொதுமக்கள் மொழியாகத் திருக்குறள் மாறியது.       மு. வரதராசனாரின் எளிய திருக்குறள் உரை, பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், திருமண விழாவில் கட்சிக் கூட்டங்களில் பரிசாகக் கொடுக்கப்பட்டது. வ.உ.சி, திரு.வி.க, பாரதிதாசன் எனப் பலரும் திருக்குறளுக்கு உரைகண்டு கொண்டாடினர். ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் திருக்குறளுக்குத் தாங்களும் ஓர் உரை எழுதினால்தான் அவர் தமிழாசிரியர் என்று சொல்லப்படும் அளவிற்குப் பலரும் உரை எழுதிய வண்ணம் இருக்கின்றனர்.

இவ்வாறு தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தால் திருக்குறளும் திருக்குறளால் தமிழ் மறுமலர்ச்சி இயக்கமும் வளர்ந்ததன் விளைவுதான் திருவள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர்க்கான சிலைகள், பேருந்தில் திருக்குறள், பாரீஸ் போன்ற உலக நகரங்களிலும் திருக்குறளுக்கான கலைக்கூடம் எல்லாம்.

நவீன உலகத்தின் அனைத்து நாகரிகங்களின் மையமாக விளங்கும் பாரீஸ் பெருநகரில் இவ்வாறு தொடர்ந்து தமிழர்கள் ஒன்றுகூடிப் பத்து ஆண்டுகளாக திருவள்ளுவர்க்கு விழா எடுத்து வருவதும் விழா மலர் வெளியிட்டு மகிழ்வதும் பெரிதும் பாராட்டுதற்குரியன. சாதி, மதம், குலம், வர்க்கம் முதலிய பேதங்களை எல்லாம் கடந்து நாமெல்லாம் தமிழர்கள் என்று ஒன்றிணைத்துக் கட்டிப் போடுவதற்கான வேறொரு நூல் திருக்குறளைப் போல எதுவும் இல்லை.

உலகம் முழுவதிலும் பரந்து கிடக்கும் தமிழ்த் தேசிய இனம் உள்நாட்டிலும் ஈழத்திலும் நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கும் நம் நிகழ்கால வாழ்வில், திருக்குறளை முன் வைத்து நாம் வலுவாக ஒன்றிணைய வேண்டியது வரலாற்றுக் கடமையாகும். அத்தகைய கடமையை உணர்ந்து செயல்படும் பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக்கூடத்து நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனம் கலந்த நன்றி! நன்றி!

அடிக்குறிப்பு

1.            Jean – Jacques Rousseau (1712-1776)

2.            Karl herinrich Marx (1818-1883) மூலதனத்தின் முதல்பகுதி. 1867இல் வெளிவந்தது.

3.            ஆங்கிலத்தில் 1840- W.H. Drew

            1871 – C.E. Gover (selection only)

            1873 - E.J. Robinson (240)

            1875 -  E.J. Robinson (I & II)

            1885 -  Rev. J. Lazarus

            1886 - G.U. Pope….. ( இன்னும் 45 பேருக்கு மேல்)

இலத்தீன் மொழியில் (3) (1730, 1856, 1865 – ஆண்டுகளில்)

பிரெஞ்சு மொழியில் (7) (1848, 1852, 1854, 1857, 1867, 1876, 1889)

ஜெர்மன் மொழியில் (4) (1803, 1847, 1854, 1865)

(இன்னும் பின்னிஷ், பொலிஷ், ரோமன், ருசியா, செக் என்று ஐரோப்பிய மொழிகள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

4.            ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை(1832-1900), வி. கனகசபைப் பிள்ளை (1855-1906), மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை (1855 -1897), எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை (1866-1951), வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (1870-1903) முதலியோர்.

5.            “தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்து உலகஞ்ச் செய்த உயர் தவப் பயனாய்த் திருமயிலையில் ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்து ஓர் சைவ வேளாளர் மரபில் வளர்ந்து கல்வி அறவொழுக்கங்களிற் தலைநின்று மார்க்க சகாயன் என்னும் சைவ வேளாளரது அருமைத் திருமகள் வாசுகி அம்மையை மணந்து நெய்தற்றொழிலை எத்தொழிலையும் விடக் குற்றமற்ற தொழிலெனக் கொண்டு கற்புக்கரசியாகிய அவ்வம்மையாருடன் தமது இல்வாழ்க்கையைச் சிறக்க நடத்தினர் என்பர்”

(திருக்குறள் மூலம் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1924)

- பேரா. க.பஞ்சாங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It