கிழக்கைத் தின்று
வளர்கிறது மேற்கு!
செம்பு, பித்தளை, மண் பாண்டங்களை
தின்று தீர்த்தது
அலுமினியமும் எவர்சில்வரும்

பருத்தியைத் தின்று தீர்த்தது
டெர்லினும் பாலிஸ்டரும்

களி கூழ் கஞ்சி வகைகளை
தின்று தீர்த்தது
பரோட்டா சப்பாத்தி

அமுதம் கறந்த பசுக்களைத்
தின்று தீர்த்தது
'ஜெர்ஸி'

பழங்களின் கொட்டைகளைத்
தின்று தீர்த்தது
'சீட்லெஸ்'

வேளாண்மையையும் கால்நடைகளையும்
தின்று தீர்த்தன
பசுமை வெண்மை புரட்சிகள்

சாணம் மெழுகிய தரைகளை
தின்று தீர்த்தது
டைல்ஸ்சும் மொசைக்கும்

வாழ்க்கைக் கல்வியை
தின்று தீர்த்தது
மெக்காலே கல்வி

எண்ணையும் எழுத்தையும்
தின்று தீர்த்தது
கைப்பேசியும் கணினியும்

'கூலிக்கு மாரடிக்கும்'
கூட்டமாயினர்
கலைஞர்கள்

மொழி, இனம், தேசம், மானம்
எல்லாவற்றையும் தின்று தீர்த்தது
இந்திய மயம், உலக மயம்

எல்லாம் போனபின்பும்
எதற்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?
தின்ன...பேண.....!