அண்மைக் காலமாக ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி அரசியல் ஆய்வாளர்கள் முதல் சாதாரண மக்கள் வரை, அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அக்கறையோடு விவாதிக்கின்றனர். குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் தில்லியில் ஆட்சி அமைக்கப்பட்டப் பிறகு அரசியலில் இதுவரை அக்கறையின்றி இருந்தவர்கள் கூட அரசியலில் ஆம் ஆத்மி கட்சியின் வருகையைப் பற்றி விவாதிக்கின்றனர்.

தமிழக அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத அரசியலின் தேவையை கருதுபவர்களும், தி.மு.க மற்றும் அ.தி.மு.க மற்றும் இக்கட்சிகளின் கூட்டணி அல்லாத அரசியல் தேவையை பலரும் விவாதிக்கின்றனர்.

தமிழ்த் தேசிய அரசியல் களத்திலும், மனித உரிமைச் சார்ந்த ஜனநாயக இயக்கங்கள் மத்தியிலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய காத்திரமான விவாதம் எழுந்துள்ளது.

குறிப்பாக அணு உலை எதிர்ப்பாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும் ஆம் ஆத்மி கட்சிக்கான தமிழக ஆக்கம் பற்றிய தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.

அணு உலை எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுப.உதயகுமாரன் அவர்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிர்ஷாந்த் பூஷன் சந்தித்த பிறகு இதன் உச்சக்கட்டமாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஊர் மக்களின் கருத்தைக் கேட்டு அரசியல் களத்திற்கு இறங்குவது என தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியுடனான கலந்துரையாடலை மேற்கொள்வது எனவும் முடிவு எடுத்துள்ளது.

இன்றைய அரசியல் சூழலில் ஆம் ஆத்மியின் வருகை, பொது மக்களிடம் அக்கட்சியினர் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு, இயல்பாக அல்லது ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியல் அலை பற்றிய ஓர் அலசல் அவசியமாகிறது.

ஆம் ஆத்மி என்பது ஊழல் எதிர்ப்பு என்னும் ஒற்றை அரசியல் முழக்கத்துடன் அரசியல் களம் இறங்கியிருக்கின்ற மற்றுமொரு அரசியல் இயக்கமின்றி மாற்று அரசியலுக்கான ஒரு களம் என்றோ இன்றைய அரசியலுக்கான மாற்று என்றோ கருத முடியாது என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும், தில்லி அரசியலில் அரங்கேறிய அனுபவத்தை நாடு தழுவிய ஒன்றாக பரப்ப முடியாது என்றும் பொதுவாக ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திய இயக்கம் என்னும் வகையில் மதிக்கத்தக்கது. மாற்று அரசியலுக்கான பார்வையோ செயல்திட்டமோ அவர்களிடம் இல்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.

குறிப்பாக காசுமீரத்தைப் பற்றியோ, வடகிழக்கு மாநில சிக்கல்கள் குறித்தோ, புதிய பொருளாதாரக் கொள்கை, சாதி ஒதுக்குமுறை, பெண் அடிமைத்தனம், மொழிக் கொள்கை, ஈழத்தமிழர் சிக்கல், மீனவர் சிக்கல், நதி நீர் சிக்கல், இப்படி இந்தியத் துணைக் கண்டத்தை பீடித்துள்ள அடிப்படைச் சிக்கல்கள் பற்றி ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவுப்படுத்தப் படவில்லை என விமர்சனங்கள் நீள்கின்றன.

மற்றொரு தளத்தில் ஆம் ஆத்மி கட்சி சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கும் கட்சியின்றி வேறல்ல; காங்கிரஸ் எதிர்ப்பை மய்யமாக முன்வைத்து அரசியல் பரப்புரை செய்த இயக்கம் காங்கிரசின் தயவில் ஆட்சி கைப்பற்றியிருப்பது அதன் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் காட்டுகிறது எனவும் விமர்சிக்கப்படுகிறது.

இறுதியாக ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கும் சிலர் உட்பட பலரும் மாநில முதலமைச்சர் தெருவில் உட்கார்ந்து போராடுவது என்பது ஒரு அரசியல் அடாவடித்தனம், அராஜகம் என்றும் நிர்வாகத் திறமையற்றவரின் வெளிப்பாடு என்றும் வாதிடுகின்றனர். மேலும் மக்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க முடியாத காரணத்தால் திசை திருப்பும் முயற்சியாகவே இது உள்ளது என்றும் விமர்சிக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் இருத்தல் பற்றியும் தமிழ்த் தேசிய அரசியல் சூழலின் அதன் பொருத்தப்பாடு பற்றியும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் குடியாட்சி அமைப்புகளும் திறனாய்ந்து செயல்படுவது தேவையாகும்.

விவாததிற்கான புள்ளிகள்:

ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை கொள்கை:

  • “ஊழலற்ற, இறையாண்மையுடைய சமதர்ம, மதச்சார்பற்ற குடியரசு நாடாக இந்தியாவை மாற்றுவது”
  • மேற்படி நாட்டை உருவாக்க அவர்கள் முன்வைக்கும் அரசியல் பார்வைதான் சுயராஜ்ஜியம் என்னும் தன்னாட்சி.
  • இந்த தன்னாட்சி மலர மக்கள் அதிகாரம் நிறுவப்பட வேண்டும்.
  • மக்கள் அதிகாரம் என்பது அடிப்படை கிராமங்களிலிருந்து தொடங்கி கட்டமைக்கப்பட வேண்டும்.
  • கிராம சபைகளும், நகர மக்கள் சபைகளும் அடிப்படை நிர்வாக அமைப்புகளாக கட்டியமைக்கப்பட வேண்டும்.
  • குவிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு எல்லா அதிகாரகங்களும் மக்களுக்கே என்னும் வகையில் அதிகாரப் பரவல் யதார்த்தமாக மாற்றப்படவேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு சட்டமாக்கப்படும் பொழுதுதான் பிரதிநிதிகள் மக்கள் சேவகர்களாக செயல்படுவர்.
  • பரவலாக்கப்பட்ட மக்கள் அதிகாரம்தான் எல்லா தளங்களிலும் புரையோடிக் கிடக்கின்ற ஊழலை ஒழிக்கவல்ல மந்திரக் கோல்.

இதுதான் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பார்வை

அரசியல் என்பது அதிகாரம் பற்றியது. அவ்வகையில் ஆதிக்க சக்திகளின், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின், குவிக்கப்பட்ட அதிகாரத்தை நீக்கும் முகமாக பரவலாக்கப்பட்ட வேர்மட்ட, மக்கள் அதிகாரத்தை நிறுவதுதான் சமூக நீதிக்கும், அனைத்து மக்கள் நலனிற்கும் முன் தேவையாகும். இதுவே ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பாதை.

இதற்கு பாராளுமன்ற அரசியல் ஒரு களம். பணநாயகம் கோலோச்சும் இந்த களத்தில் இறங்கி மக்கள் அதிகாரத்திற்கான பாதையை அமைக்க முடியுமா? வேர்மட்ட மக்கள் அதிகாரத்தை முன் வைத்து பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு இதனை சாதிக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டுதான் அண்மையில் தில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி..

மக்களின் நன்கொடையை மட்டுமே தேர்தல் நிதியாகக் கொண்டு தன்னார்வத் தொண்டர்களின் படையின் தலைமையிலே வெற்றியை ஈட்டிய படிப்பினை தேர்தல் அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தையும் எதிர்பார்ப்பையும் எழுப்பியிருக்கிறது.

தில்லியில் எழுபது தொகுதிகளில் களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள் குறைகளை கேட்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்குமான தனித் தனி தேர்தல் அறிக்கையை வழங்கி தில்லி முழுமைக்குமான தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது. இது ஒரு அரசியல் சாதனை.

ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோராத நிலையில் காங்கிரசு தெரிவித்த நிபந்தனையற்ற ஆதரவின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி அமைத்திருக்கிறது. இது ஒரு ‘சந்தர்ப்பவாதமாக’ தென்பட்டாலும் மக்களின் கருத்தை ஓரளவு கேட்டறிந்து காங்கிரசுடன் எவ்வித சமரசமுமின்றி, ஆட்சி கவிழ்ந்தாலும் பொருட்டில்லை என்ற அடிப்படையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இதன் போக்கை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (ஆனால் இந்தத் தருணத்தில் தமிழக அரசியலில் மத்திய அரசில் சில நபர்களின் பதவியைக் காப்பாற்ற ஈழத் தமிழர்களின் நலனை காற்றில் பரக்கவிட்ட துரோகங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை).

தில்லி மாநில அரசிற்கு காவல் துறையை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை என்பதை உலகிற்கு பறை சாற்றிய மாநில முதல்வரின் ரயில் பவன் போராட்டம் பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இவர்கள் போராடுவதற்கு லாயக்கானவர்களே தவிர நிர்வாகத்தை திறம்பட நடத்துபவர்கள் அல்ல. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இது மக்களை திசைத் திருப்பும் முயற்சியே; தில்லியை திறம்பட நிர்வாகம் செய்ய இயலாதவர்கள் பாராளுமன்றத் தேர்தலை முன்நிறுத்தி நடத்தும் நாடகமே என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் அண்மையில் வெளிவந்த ஒரு ஊடகத் தேர்தல் கணிப்பில் தில்லி சட்ட சபைக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஆம் ஆத்மி கட்சி சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை பெற்று தில்லி சட்டசபையில் மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறும் என்று கூறுகிறது. அதே போல் தில்லி பாராளுமன்றத் தொகுதிகளில் ஏழில் மூன்றை கைப்பற்றும் என்றும் கூறுகிறது.

மாற்றம் தேவை; குறிப்பாக அரசியல் மாற்றம் தேவை; ஊழலற்ற ஆட்சி தேவை; மணல் கொள்ளை முதல் கனிம வளங்கள் வரை கொள்ளையடிக்கும் அரசியலுக்கு முடிவு தேவை; பன்னாட்டு கொள்ளையர்களுக்கு ஊழியம் செய்யும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முடிவு தேவை; சுகாதாரம், தண்ணீர், மின்சாரம், மருத்துவம், கல்வி, மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் நிர்வாகம் தேவை; பாரபட்சமின்றி சமூக நீதியைக் காக்கும் அரசாட்சி தேவை என்னும் ”மாற்றம் தேவை” என்னும் மன நிலையை பிரதிபலிக்கிறது.

தேசிய அரங்கில் காங்கிரசு, மற்றும் பா.ஜ.கவிற்கான மாற்று தேவை; தமிழக அரசியல் அரங்கில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க அணிகளை சேராத அரசியல் மாற்றம் தேவை என்னும் பொதுக் கருத்து நிலவுகிறது. இக்கருத்திற்கு ஒரு செயல் வடிவமாக ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லியில் கிடைத்த வெற்றி பிற இடங்களில் ஓர் அரசியல் அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆத் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் அண்மையில் சென்னை வந்திருந்தபோது ஈழத்தமிழர் மீது தொடுக்கப்பட்டிருப்பது ஓர் இன அழிப்பு என்றும் அணு ஆற்றலற்ற இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பின்னணியில் தமிழ்க் தேசிய இயக்கங்களும் பிற ஜனநாயக இயக்கங்களும் ஆம் ஆத்மியின் அரசியல் வருகையை கவனப்படுத்த வேண்டியுள்ளது.

அவ்வகையில் தமிழ்க் தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக, அரசியல் ஜனநாயகப்படுத்தலுக்கான ஒரு வாய்ப்பாக ஆம் ஆத்மியின் வருகையை கொள்ள முடியுமா என்ற அலசலுக்கு உட்படுத்துவது தேவை.

1975-76 இல் இந்திரா காங்கிரசின் ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக செயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் எழுந்த “முழுப் புரட்சி” என்னும் பதாகையின் கீழ் எல்லா ஜனநாயக சக்திகளும் சோசலிஸ்ட்டுகளும் அன்று ஒன்று திரண்டு ஆட்சிமாற்றத்திற்கு வித்திட்டனர். அது மீண்டும் சிதறிச் சீரழிந்துப் போனதும் வரலாறு. அதற்கு இணையான ஒரு அரசியல் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். அனைந்திந்திய அரசியல் தளத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் அரசியல் ஆளுமைகளுக்கு மாற்று தேவை.

இந்த மாற்றை ஒரு கறாரான சோசலிச, சமூக ஜனநாயக பார்வையோடல்லாமல், ஒரு தேசிய ஜனநாயகப் பார்வையில், புதிய ஏகாதிபத்திய கட்டமைப்பிற்கு எதிரான பார்வையோடு விவாதிக்க வேண்டும். தேசிய அரசியல் வரலாற்றில் “பின் தொடர்” அரசியலைப் பற்றி வந்துள்ள இடதுசாரிகள், ”மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுபோம்” என்ற முழக்கத்தின் கீழ், முன்கை எடுத்து, அரசியல் நிகழ்ச்சிப் போக்கை தாமே தீர்மானிக்கும் தலைமைப் பங்கை வகுக்க முடியுமா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் முன்வைக்க வேண்டியுள்ளது.

விவாதத்திற்கான சில முன்மொழிவுகளை இங்கே பரிசீலிக்கலாம்:

  • ஆம் ஆத்மி கட்சி அரசியல் அரங்கில் ”மாற்றம் தேவை” என்னும் பொதுக் கருத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
  • ஊழலற்ற ஆட்சி என்ற ஒற்றை முழக்கம்தான் முன்வைக்கப்படுகிறதா?
  • ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் தன்னாட்சி (சுயராஜ்ஜியம்) என்பது அதிகாரப் பரவலாக்கத்திற்கும் தேசிய இனங்களின் தன்னாட்சியை உறுதிபடுத்தவும் போதுமானதா?
  • ”அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே” என்ற முழக்கத்தை ஆத் ஆத்மி கட்சி முன்மொழியும் மக்கள் சபைகள் மூலம் சாத்தியப்படுத்த முடியுமா?
  • ஈழத்தமிழர் சிக்கல் குறித்தும் அணு உலை குறித்தும் ஆம் ஆத்மியின் அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்க வேண்டும்?
  • ஆத் ஆத்மி கட்சியின் ஸ்தாபன அமைப்பு முறை மய்யப்படுத்தப் பட்ட அதிகாரத்திற்கு மாற்றாக அமையுமா?
  • சாதாரண, சாமானியர்களின் கட்சி என்ற முறையில் ஆத் ஆத்மி கட்சி மீது தமிழக சாமானியர்கள் பற்று கொள்வார்களா?

மேலெழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆம், வாய்ப்பு உள்ளது என்றோ அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்கள் இருப்பின் அல்லது விமர்சனங்களுடனான ஒப்புதல் இருப்பின், தமிழ்த் தேசிய இயக்கங்களும் பிற ஜனநாயகச் சக்திகளும் கீழ் காணும் அணுகுமுறையை மேற்கொள்ளலாம்:

  • சில தோழர்கள் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களாகச் சேர்ந்து உடன்பாடான கொள்கைகளை வலியுறுத்தி உள்ளிருந்து செயல் படலாம்.
  • சில அமைப்புகள் நிபந்தனையற்ற தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வெளியிலிருந்து செயல்படலாம்.
  • சில அமைப்புகள் நிபந்தனையுடனான ஆதரவை நல்கி தொடர்ந்து அழுத்தக் குழுக்களாக செயல்படலாம்.

மேற்படி அணுகுமுறையை நடைமுறைப்படுத்த அரசியல் களம் காண விவாதிப்போம்; செயல்படுவோம்.

- பொன்.சந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 09443039630)

Pin It