முன்னெழுத்திடுதல் [இனிசியல்] பற்றி விவாத அரங்கிற்கு கொண்டுவரவேண்டிய தேவையை கடந்த சில நாட்களில் நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுட்டின.

 1, தோழர்கள் உதயகுமார், ஜெனிபர் [திருச்சி ம.ச.கு.க. அமைப்பாளர்கள்] இணையின் குழந்தையின் [இளவேனில் மலரவன்] பிறப்பு சான்றிதழில் தாயின் [ஜெனிபர்] பெயரை மட்டுமே முன்னெழுத்திடுவதென கட்சியின் வழிகாட்டுதலை ஏற்று முடிவு செய்துள்ளனர்.

 2, கடந்த வாரம் வாக்காளர் அட்டை பதிவு செய்தேன். [எனக்கு சமூக வேர்கள் இல்லை என்று தொடர்ந்து அரசும், 'q'பிரிவு போலீசும் கவலைப்படுவதால்]. அதில் தந்தை, தாய், கணவர் என்று மூன்று தேர்வுகள் இருந்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில்,'முன்னெழுத்து' பற்றி சுமார் கடந்த 25 ஆண்டுகளாகவே புரட்சிகர முகாமில் தீவிர விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆண்டாண்டு காலமாக இருக்கும் தந்தை அடையாளத்தை நிராகரிப்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆனால், மாற்று என்ன? என்பதுதான். நடைமுறையில் ஒத்த தன்மையில் இல்லை என்றே சொல்லலாம். அது;

 1,ஆண் ,பெண் இரண்டு பேரும் எதிரெதிர் பெயரை [கணவன் மனைவி பெயரையும், மனைவி கணவன் பெயரையும்] முன்னெழுத்தாக போடுவது, குழந்தைகளுக்கு இருவர் பெயரையும் குறிப்பது.

 2, தாய், தந்தை இருவர் பெயரையும் அனைவருக்கும் குறிப்பது.

 3, தாய் பெயரை மட்டுமே அனைவருக்கும் குறிப்பது.[இக்கருத்தை என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே வலியுறுத்தி வருகிறோம்].

 முதல் மற்றும் இரண்டாவது கருத்தியர்களின் தர்க்கம், இரண்டு பேரும் சமம் என்பதே சனநாயகமாகும் என்பதையே மீண்டும் மீண்டும் முன் வைக்கின்றனர்.

 மூன்றாமவர்களைப் பொருத்தவரை, தாயின் அடையாளமே முதலாவதும் அடிப்படையானதுமாகும். அதுவே குழந்தைக்கான புற உறவின் இயல்பான அடையாளமாகும். இரண்டையும் சமப்படுத்துவது பூரண சமத்துவப் பார்வையாகும் என்று தர்க்கமிடுகின்றனர். மேலும், குழந்தையை அடையாளபடுத்துவது தாயின் முழுமுற்றான உரிமை என்பது எனது திட்டவட்டமான கருத்தாகும்.

 இவைகள் கலங்கலாக தனிப்பட்டும் அமைப்பிலும் நடைமுறையாகி கொண்டிருந்த நிலையிலேயே நாங்கள் 'பொடா' சட்டத்தில் சிறைபட்டோம். நீண்ட விவாதத்தில் சிறை அமைப்பு தாய் பெயரை மட்டுமே முன்னெழுத்திடுவது என்றும் தந்தை பெயரையும் இணைப்பது என்ற சிலரின் கோரிக்கையை விதிவிலக்காக அனுமதிப்பது என்றும் இறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாகவே மக்கள் சனநாயக குடியரசுக்கட்சி தன்னுடைய அமைப்பு விதிகளிலேயே சாதிமறுப்பு போன்று முன்னெழுத்திடுவதையும் குறிப்பிட முடிவு செய்துள்ளது.

 இந்நிகழ்வுப் போக்கிலேயே மேற்குறிப்பிட்ட நிகழ்வும் நடந்து உள்ளன. தோழர்கள் உதயகுமார், ஜெனிபர் இருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

 தேவகி துரைசிங்கவேல் என்பதையே சுருக்கி தேவ.துரை என்று பயன்படுத்தி வருகிறேன் [தேவ என்பதை கிருத்துவ தன்னார்வக்குழுவை சேர்ந்தவன் என்று கருதி வலைத்தள தாக்குதல் என்ற கேலி கூத்தும் நடந்தது].

 என்னடா ஒரு எழுத்திற்கு இந்த கதை அளக்கிறானே என்று கருத வேண்டாம்.

 ஆணாதிக்கத்தின் முக்கிய ஆதாரமான தந்தைவழி குடும்பத்தின் அடையாளமே இம்முன்னெழுத்திடுதலாகும்.

 முற்போக்கு, புரட்சிகர முகாம்களில் சாதி மறுப்பையும், தாய்பெயர் முன்னெழுத்திடுதலையும் வேகமாக செயல்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

- தேவ.துரைசிங்கவேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It