மதச்சார்பின்மை சென்னை பல்கலைகழக வளாகத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் கட்சி, நரேந்திரமோடி சென்னை பல்கலைகழக வளாகத்தில் உரையாற்ற அனுமதித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய அரசியலிலே அழிக்க முடியாத தழும்பாக குஜராத் கலவரம் மாறிவிட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பல்வேறு வகுப்புவாத நீரோட்டங்களையும் தோற்கடித்து நமது மூதாதையர்கள் பாதுகாத்துவந்த மதச்சார்பின்மை பாரம்பரியத்தின் முறிவாகவும் முடிவாகவும் அது காட்சி தருகிறது.

நமது மதச்சார்பின்மை மரபுக்கெதிராக குஜராத் கலவரத்திற்கு முன்னால் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் குஜராத் கலவரத்தின் போதுதான் இப்படி நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் முதல் முறையாக நியாயப்படுத்தப்பட்டன, புகழப்பட்டன. அப்பாவி முஸ்லீம்களின் இறந்த உடல்களின் மீது ஏறி நின்றுகொண்டு இதை நியாயப்படுத்திய கொடுங்கோலன்தான் மோடி. இவர்தான் முஸ்லீம் மக்கள் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதையும், முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதையும் நியாயப்படுத்தினார். கடைசியாக முஸ்லீம் மக்களுக்கு மறக்கமுடியாத ஒரு பாடம் கற்று கொடுத்துள்ளோம் என்றும் பெருமைப்பட்டுக் கொண்டார்.

இந்த குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்து உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. எந்த காவி பயங்கரவாதச் சக்திகள் மோடிக்குப் பின்னால் இருக்கின்றனவோ அதே சக்திகள்தான் காந்தியின் கொலையாளிகளுக்குப் பின்னாலும் இருந்தன.
சில மாதங்களுக்கு முன்னால் உலகப்புகழ்பெற்ற அறிவுஜீவி டாக்டர் அமினா வதூத் அவர்கள் வழமையான சொற்பொழிவாற்ற சென்னை பல்கலைகழகத்திற்கு வரவிருந்த நேரத்தில் அவருடைய உரையில் சிலர் மனம் புண்படலாம் என்று அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அதே பல்கலை கழகத்தில் கடைந்தெடுத்த வகுப்புவாதியான மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
 
மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மக்கள் கட்சியின் சார்பில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருமதி. வாசுகி, திரு. மதிவாணன் இருவரும் சென்னை பல்கலைகழக மாணவர்களே அமைதியாக இருக்கும்போது ஒரு கட்சி ஏன் கேள்வி கேட்கிறது என்று கூறி, இந்த பொதுநல வழக்கை ஏற்க முடியாது என்று அறிவித்து விட்டனர். உண்மை என்னவெனில் சென்னை பலகலைகழக மாணவர்கள் மோடியின் வருகையைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள் என்பது நீதிபதிகளுக்குத் தெரியவில்லையா அல்லது தெரியாதது போல் நடந்து கொண்டார்களா என்பது மோடிக்கும், ஜெ.வுக்கும் தான் வெளிச்சம்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, தமிழக அரசு, நீதிமன்றம், காவல்துறை உள்ளிட்ட அனைத்துமே மதச்சார்புடையவை என்பது மட்டுமல்லாமல் இந்திய அரசியல் சாசனத்தின் நீதிமான்களாக கருதப்படும் நீதிபதிகளின் மூளைக்குள்ளும் மதம் எனும் விஷம் பரவிக்கிடக்கிறது என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது. மேலும், மோடியின் வருகைக்காக அரசு செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், செலவும் அவரின் மீதான பிம்பத்தை ஊதிப் பெருக்கி இருக்கிறது.

மக்கள் இயக்கங்கள் நடத்தும் நிகழ்சிகளுக்கு அனுமதி தர மறுக்கும் இந்த அரசுகள் மதவாத இயக்கங்கள், மக்கள் விரோத இயக்கங்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரமாண்ட வரவேற்புக்கும் அனுமதி அளித்துவிடுகிறது. இறுதியில் இத்தனை ஏற்பாடுகள், இத்தனை செலவுகள் செய்த பிறகு தடுப்பது என்பது இயலாத காரியம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறது. ஆளும் அரசு தன்னுடைய தனிப்பட்ட கருத்தையே மக்களின் பொதுக்கருத்தாக மாற்ற முயல்கிறது. மக்கள் இயக்கங்கள் சட்ட ரீதியான போராட்டங்களை நம் அரசுகளுக்கு எதிராக முன்னெடுப்பது போதாது என்பதனையும், மக்களை அணிதிரட்டி தீவிரமான மக்கள் போராட்டங்களை இந்த பிற்போக்கான மதவாதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு அணிதிரண்டு போராட வேண்டும் என்பதனையும் இத்தகைய தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையினை நிறைவேற்ற தமிழ்நாடு மக்கள் கட்சி தன்னுடைய கொள்கையில் உறுதி பூண்டுள்ளது.
       
தமிழ்நாடு மக்கள் கட்சி, 8939313369

Pin It