“எழுத்தினலோ, பேச்சினலோ மட்டும் ஏகாதிபத்தியத்தை ஒரு போதும் ஒழித்துவிட முடியாது” – அமில்கர் கப்ரால்

தனித்தனி இனங்களாக வாழ்ந்தவர்களை வெள்ளையர்களின் சூழ்ச்சியினால் இலங்கை என்ற நாட்டை உருவாக்கியதன் தோற்றமே, தமிழர், சிங்கள இனப்பிரச்சனைக்கு வித்திட்ட நாளாக நாம் வரலாற்றிலிருந்து கற்றுணர முடிகிறது. அறவழியில் உருவெடுத்த போராட்டம் படிப்படியாக ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது, இப்போராட்டத்தில் இந்தியா முக்கிய பங்காற்றி வந்து கொண்டிருக்கிறது. இலங்கையைப் பணியவைக்க, தமிழர்களை தனிமைப்படுத்த மற்றும் சர்வதேச அரசியல் நீரோட்டத்தில் பங்குபெற அவ்வப்போது இந்தியா ஈழ அரசிலை கையிலெடுத்து விளையாடிய சதுரங்கத்தில் தான் பல ஆயுத குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தியாவின் கைப்பாவையாக இந்த போராளிக் குழுக்கள் செயல்படுவார்கள் என்று இந்தியா இவர்களுக்கு பயிற்சி அளித்தது. மாபெரும் அமைப்பாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் நாளடைவில் தனி ஒரு இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டார்கள். சிங்களவனுக்கு துணைபோன இந்திய ராணுவத்தையும், சிங்கள ராணுவத்தையும் ஒரு கட்டத்தில் புலிகள் இயக்கம் எதிர்த்துப் போரிட வேண்டியதாயிற்று. அன்று புலிகளுக்கு இலங்கையோடு சேர்ந்து இந்தியா என்ற இரண்டு அதிகாரப்பூர்வமான எதிரிகள் உருவானர்கள். அதே போல் தமிழ்நாட்டின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இந்திய அரசுதான் முதன்மை எதிரியாகவும் இருக்கிறது.

போராட்டத்தில் சரியான எதிரியை இனங்கண்டு அவனை எதிர்த்துப் போராடுவதுதான் நம்முடைய மாபெரும் கடமையாகவும் இருக்கிறது. ஈழப்பிரச்சனைக்கு முதன்மை எதிரியான இலங்கையை எதிர்த்துதான் புலிகள் கடுமையாகப் போராடினார்கள். வெள்ளையனிடம் அடிமைப்பட்டிருந்த போதும், தமிழகம் இந்திய விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தபோதும் தந்தை பெரியாரும், மராட்டியத்தில் டாக்டர்.அம்பேத்காரும் இந்தியாவில் இருந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவே மாபெரும் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஈழப்பிரச்சனையில் ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியும் என்ற அவருடைய நிலைப்பாட்டினை தெளிவாக வைத்தவர் பெரியார். அன்று மட்டும் அல்ல இன்றும் அதே நிலையினைத்தான் நாம் தமிழ்நாட்டில் உணர முடிகிறது.

டெசோவை நாங்கள் ஆதரிக்கின்றோமா?

பாலுக்காக அழும் ஆறுமாத குழந்தைக்கு நான் பிரியாணிதான் தருவேன் என அடம் பிடிப்பது எப்படி அபத்தமாக இருக்குமோ, அப்படி இருக்கிறது தாங்கள் முன் வைத்த வடக்கு மாகாணத் தேர்தலை ஈழத்தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது. (எங்களுக்கும் தெரியும் காமன்வெல்த் மாநாட்டை நடத்தத்தான் சிங்கள அரசு அங்கு தேர்தலை வேகவேகமாக நடத்தி முடித்தது என்று) தினம் தினம் சிங்கள ராணுவ அலுவலகங்களுக்கு சென்று தண்ணீர் முகந்துவரும் ஈழத்தமிழர்களுக்கு அல்லவா அந்தக் கோரிக்கை எழுந்திருக்கவேண்டும். ஆனால் தற்போது அங்கு நிலை அப்படி இல்லை, முழுக்க சிங்கள மயமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் சிங்களவனுக்கு மாற்றாக ஈழத்தமிழர்களுக்கு ஓர் அரசியல் வெளியும் தேவைப்படுகிறது. வடக்கு மாகாணத் தேர்தலைப் புறக்கணியுங்கள் என்பது மக்களின் கோரிக்கையாக எழவில்லை என்பதனை தாங்கள் உணராமல், நாங்கள் தனிஈழத்திற்கு எதிரிபோல் பாவிப்பதும், ஏதோ தாங்கள் ஒரு கதா போல் அறைகூவல் விடுவதும் கொஞ்சம் ஒவராத்தான் இருக்கிறது.

பொது வாக்கெடுப்பு என்பது தங்களின் கோரிக்கை மட்டுமல்ல (2009ல் முத்துகுமார் பாசறையின் சார்பிலே வைக்கப்பட்ட கோரிக்கை), டெசோவின் கோரிக்கையும் அதுதான். அப்படி என்றால் தங்களுக்கும் டெசோ அமைப்பிற்கும் தொடர்பு உள்ளது என சொல்லலாமா? தமிழ்நாடு மக்கள் கட்சி, டெசோ அமைப்புகாக மற்றும் தி.மு.க நலனுக்காக போராட்டத்தை திசை மாற்றுகிறார்கள் என ஏன் சிண்டு முடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள்?

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க கூடாது, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், இந்தியா அம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. நம் பலத்தை நாம் உணர்ந்து வேறு சில கோரிக்கைகளின் மூலமாகவும் மூல கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்பது அரசியலில் உள்ளவர்கள் அறியாததும் அல்ல. தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுபவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்து, மக்களிடம் நன்கொடைகளைப் பெற்று போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவையில்லையே.

கூட்டமைப்பில் நம்பிக்கை கொண்டவர் யார்?

கூட்டமைப்பு வேலைகளில் பங்கெடுப்பது யார்? கூட்டமைப்பு கொள்கைகளை தூக்கிப் பிடிப்பது யார்? என்ற கூட்டமைப்பு நடவடிக்கைகள் பற்றியும் நாம் இங்கு விவாதிக்க வேண்டியுள்ளது. தோழர். தியாகுவின் போராட்டம் தொடங்கும் முன்னே ஜுனியர் விகடனில் அவருடைய கட்டுரை வந்ததே, அது உங்களுக்குத் தெரியாதா? செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்க இருந்த தோழர்.தியாகு போராட்டம் தள்ளிப்போனது தெரியாதா? அப்போது கூட்டியக்கத்தைப் பற்றி எழாத கேள்விகள் ஏன் அக்டோபர் 13ஆம் தேதி எழுந்தது?

உண்மையில் உங்களுக்கு கூட்டமைப்பு மற்றும் கூட்டியக்கம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை என்பதனை அனைவரும் அறிவர். (இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கம் போராட்டதைப் பற்றி தோழர்.தியாகு அளித்த பேட்டி யூ-டுப்பில் உள்ளது, தாங்கள் அப்பேட்டியை கவனித்தீர்களானால் மேலும் தங்களுக்கு தெளிவு பிறக்கும்) அணு உலை கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தோழர்.திருமுருகன் கூட்டமைப்பு கமிட்டி முன் வைத்த வேலைத்திட்டத்திற்கு எதிராகத்தான் அவருடைய கருத்தை பதிவு செய்தார். அதிலும் குறிப்பாக அந்த அந்த இயக்கங்கள் தனித்தனியான வேலைத்திட்டத்தில் நகர வேண்டும் என பதிவுசெய்தார். எந்த கூட்டமைப்பிலே தாங்கள் முன்னின்று வேலை செய்துள்ளீர்கள். மூவர் உயிர் காப்பு போராட்டத்தில் தாங்கள் நடந்து கொண்டது யாருக்கும் தெரியாததா என்ன? அமைப்பு விரோத சிந்தனை உள்ள தங்களுக்கு எப்படி கூட்டமைப்பு வேலைகளில் இணைந்து பணிபுரிவது சாத்தியப்படும்?

கோரிக்கையை குழப்பமடைய செய்தது யார்?

அடுத்து கோரிக்கை பற்றி விவாதிப்போம், தெரிந்தோ, தெரியாமலோ ஈழம் வேறு நாட்டில் உள்ளது. தனித்தமிழீழம் என்ற முதன்மை கோரிக்கையும் தாண்டி சார்பு கோரிக்கைகள், துணைக் கோரிக்கைகள் போன்ற பல கோரிக்கைகளும் அவர்களிடம் உள்ளன. போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வாதரப் பிரச்சனைகள் ஒரு கோரிக்கையாகவும் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஒரு கோரிக்கையாகவும் உள்ளன. தனிஈழம் சர்வதேச கோரிக்கையாகவும் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் மற்ற துணைக் கோரிக்கைகளுக்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது.

அமெரிக்கா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மக்கள் கட்சி போராடியதா? இலங்கை இனப்படுகொலைநாடு என்ற தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமெனவும், அய்.நா மன்றத்திலும் தீர்மானத்தை முன் மொழிய வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு மக்கள் கட்சியின் கோரிக்கை. ஏகாதிபத்திய அமெரிக்காவின் துணை இல்லாமல், இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முடியுமா என்ற எதார்த்தமான உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. அய்.நா தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்ட நிறுவனமும் அல்ல, அங்கே யாருடைய கை ஒங்கி இருக்கிறது என்பதனை நாம் அறியாதவர்களும் அல்ல. போராடும் மக்களின் நியாங்களைப் பதிவுசெய்ய அய்.நா மன்றத்தை தாண்டி வேறு வல்லமை கொண்ட நிறுவனம் உலகில் யாரும் இன்னும் உருவாக்கவில்லை.

எதார்த்த நிலை இப்படி இருக்கும் பட்சத்தில் இலங்கையைக் கண்டித்து இந்தியா தீர்மானத்தை இயற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு மக்கள் கட்சியின் கோரிக்கை. தமிழ்நாடு மக்கள் கட்சி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மிக மோசமான விமர்சனங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கா கொண்டு வந்த அந்த படுமோசமான தீர்மானத்தையும் மிகவும் பலவீனமடையச் செய்ததில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. இப்படி பல போராட்டங்களை தாண்டி இலங்கைக்கு எதிராக நிறைவேறிய அத்தீர்மானத்தை சிறிய முன்னேற்றமாகத்தான் நாம் பார்க்கவேண்டும். அமெரிக்கா ஒரு புண்ணிய ஸ்தலம் என நாங்கள் ஒரு போதும் கருதியதும் இல்லை. மார்க்ஸைப் படித்த நாங்கள் அமெரிக்காவைப் படிக்காமல் இல்லை. தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து, இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு மக்கள் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருவது எப்படி கோரிக்கையை திசை மாற்றும் செயலாகும்?

இறுதியாக.....

தமிழ்ச்சமூகத்திற்கு தங்களை போன்ற அறிவுஜிவிகளும், மேட்டுக்குடி அரசியல் புரியக்கூடியவர்களும் நிறையவே தேவைப்படுகிறார்கள். மேட்டுக்குடிகளை எண்ணிக்கையில் அதிகமாகக் கொண்ட மே17 இயக்கம் நிச்சயம் மேட்டுக்குடியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும்; அதே நேரத்தில் மேட்டுக்குடி சிந்தனையோடு தழைக்கும் என்பதில் எங்களுக்கு எப்போதும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆகையால் தான் நம்மை அடக்கி ஆளும் வர்க்கங்களை கோபமூட்டாமல் தனியார் நிறுவனங்களுக்குப் எதிராக போராடுகிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளாதவர்களும் அல்ல.

தாங்கள் சீனாவை எதிரியாக சொல்லியதையும், இந்து பத்திரிக்கைக்கு எதிராகப் போராடியதையும், ஏர்டெல்லுக்கு எதிராக போராடியதையும், கமலஹாசனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதையும், அய்.நா.வுக்கு எதிராகப் போராடியதையும், அமெரிக்கா, பிரிட்டனுக்கு எதிராகப் போராடியதையும் நாங்கள் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளோம். அதே நேரத்தில் தமிழ்நாடு மக்கள் கட்சி ஒன்றுதான் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கும் போராட பட்டா பெற்ற கட்சி என்று நாங்கள் ஒருபோதும் பறைச்சாற்றிக் கொள்ளவில்லை. எங்கள் செயல்பாடு சரியா தவறா என்பதனை தீர்மானிப்பவர்கள் மக்களே, சரியான மக்கள் கோரிக்கையை நாங்கள் முன்னெடுக்காமல் போனால் நிச்சயம் நாங்கள் இச்சமூகத்தில் இருந்து தூக்கியெறியப்படுவோம். அதைப்பற்றி அதிகம் வருத்தப்பட வேண்டியவர்கள் நாங்களே. இனியாவது நீங்கள் எங்களுக்கு வகுப்பு எடுக்கும் வேலையையும், வாத்தியார் வேலை பார்ப்பதையும் விட்டு விடுங்கள். நாங்கள் எப்போதும் எதையும் நேர்மையுடன் உங்களுடன் விவாதிக்க தயாராக உள்ளோம். எப்போதும் தங்களை தோழமையாகவே அணுகுகிறோம்.

மே17 இயக்கத் தோழர்.பிரவீன் அவர்கள் எங்களை அதிகப்படியாக உச்சகட்டமாக மாவோஸ்டுகள், நக்ஸல்கள் (இவர்கள் எல்லாம் மக்கள் விரோதிகளா?) எனக்கூறி ஒரு அச்சத்தை உருவாக்கினார். நிச்சயம் நாளை எங்களை விடுதலைப்புலிகள் எனச் சொல்லக்கூட தயங்க மாட்டீர்கள். ஒற்றுமையால் உருவான கட்சி தமிழ்நாடு மக்கள் கட்சி. கூட்டமைப்பில் தோழமையுடன் பணிபுரிந்த இயக்கங்கள் ஒன்றிணைந்து உருவான கட்சி தமிழ்நாடு மக்கள் கட்சி. எங்களுக்கு என்று கொள்கை முழக்கம் இருக்கிறது, எங்களுக்கு என்று அரசியல் முழக்கம் இருக்கிறது. மக்களிடையே பயணிக்க பல அரங்குகளையும் பல வேலைத்திட்டங்களையும் செயல்படுத்த வேண்டிய கடமையில் நாங்கள் இன்று உள்ளோம். உங்களை ஒரு போதும் அவதூறு பேச எங்களுக்கு உரிமையில்லை, ஆனால் விமர்சனங்களைப் பதிவு செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.

வலுவிழந்த அமைப்புகளின் செயல்பாடே பல தோல்விகளுக்கு காரணம் என மாவீரன் முத்துகுமாரின் கடிதம் நமக்கு உணர்த்தியது. சீன எதிர்ப்பு, தனியார் நிறுவன எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, இங்கிலாந்து எதிர்ப்பு, அதிகாரிகள் எதிர்ப்பு, நடிகர்கள் எதிர்ப்பு என ராஜவிசுவாசம் செய்து கொண்டிருந்த தோழர்.திருமுருகன் ஈழத்தில் செஞ்சோலை சிறார்கள் சிங்களவனால் கொல்லப்பட்டப்போது எங்கிருந்தீர்கள்? திடீரென்று தங்களுக்கு 2009ல் புலிப்பாசம் பிறீட்டுக் கொண்டு வந்தது எங்களுக்கு மேலும் பல சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

மே17 இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை துவங்க விடாமல் செய்தது சீன உளவுத்துறை என்று நீங்கள் மே17 இயக்கத் துவக்கநாள் நிகழ்ச்சியில் பதிவுசெய்தீர்கள். நிச்சயம் தங்களுக்கு இந்தியாவைத் தாண்டி பெரிய எதிரிகளும், நண்பர்களும் உலகம் முழுவதும் பரவிக்கிடப்பார்கள். ஏனென்றால் நீங்கள் சர்வதேசிய அரசியல் நீரோட்டத்தில் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தந்தை பெரியாருக்கும் இந்தியாதான் எதிரி, இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களை அம்பலப்படுத்த “சாத்தனின் படைகள்” என்ற புத்தகத்தை வெளியிட்ட விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாதான் எதிரி, தமிழ்நாடு மக்கள் கட்சிக்கும் இந்திய அரசுதான் எதிரி.

தந்தை பெரியார் எரித்த இந்தியக் கொடியையும், இந்திய அரசியல் சட்டத்தையும், தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபடத்தையும் எரிக்க நாங்கள் நிச்சயம் ஒரு நாள் தயாராகுவோம். கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கூட இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி கோரிக்கை வைக்கும் போது, நீங்கள் மட்டும் வேறு பாதையில் பயணிப்பது நிச்சயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கும். அப்படி வேறு பாதையில் தாங்கள் பயணிப்பது தங்கள் விருப்பம், அவற்றை விமர்சிக்க பொதுவாழ்க்கையில் உள்ள அனைவருக்கும் பொறுப்பு உண்டு, முடிந்தால் தத்துவார்த்தரீதியாக சரியான விளக்கத்தைத் தந்து கருத்தியல் போரைத் தொடருங்கள். அதைவிட்டு, ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கும் தாங்கள் தான் கதா என்ற அதிகப் பிரசங்கிதனத்தை விட்டுத்தள்ளுங்கள்.
 
- கண்ணன், இணைச் செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி

Pin It