எல்லா அருவிகளும் சாக்கடையில் கலக்குமா என்று நமக்குத் தெறியாது ஆனால் இந்த அருவி இன்று சாக்கடையில் கலந்து தமிழ்நட்டையே நாறடித்துக்கொண்டு இருக்கின்றது. காந்திய மக்கள் இயக்கம் என்று பெயர் வைத்து இயக்கத்தை ஆரம்பித்த போதே நாம் சந்தேகித்தோம் இறுதியில் இது சாக்கடையில் தான் போய் கலக்கும் என்று. தமிழ் நாட்டில் மோடியின் கொள்கை பரப்புச்செயலாளராக அவதாராம் எடுத்திருக்கும் மணியன் அவர்கள் ஜீனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரையைப் பார்த்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட விக்கித்துப்போய் இருப்பார்கள்.

பார்ப்பன பாசிச கும்பலின் வரலாற்றுப் புரட்டுகளை எல்லாம் விஞ்சும் அளவிற்கு பல பொய்யான தகவல்களை சொல்லி ஒரு நான்காம்தர எழுத்தாளனை விட கேவலமாக அவதாரம் எடுத்திருக்கிறார் மணியன் அவர்கள். காந்தியின் மீது மணியனுக்கு வேண்டுமானால் பெரும் பற்று இருக்கலாம் அவர் வரிந்து கொண்ட கொள்கைகளுக்காக, ஆனால் மற்றவர்களும் அவரைப் போலவே காவிமனம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அவர் எப்படி நினைக்கலாம்?

“மதம் இல்லாமல் அரசியல் இல்லை. மதமற்ற அரசியல் ஒரு மரணப்பொறி. ஏனெனில் அது ஆன்மாவைக் கொன்றுவிடுகிறது" என்று காந்தி முதலில் கூறியதாகவும் பின்நாளில் “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதத்தையும் அரசியலையும் தனித்தனியாக பிரித்து வைப்பேன். என் மதத்துக்காக உயிரையும் தருவேன். அது என் சொந்த விவகாரம், ஆனால் மதத்தைப் பொருத்தவரை அரசுக்கு எந்தவொரு வேலையும் இல்லை” என்று மாற்றிக் கொண்டதாகவும் மணியன் கூறுகிறார். ஆனால் காந்தியின் ராமராஜ்ஜியம் என்பது அடிப்படையில் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறையே ஆகும்.

“நான் என் நாட்டைவிடவும் என் மதத்தை அதிகப் பிரியமாக மதிக்கிறேன். எனவே முதலில் நான் ஒர் இந்து, பிறகுதான் நான் ஒரு தேசியவாதி" என்று காந்தி கூறுகிறார். காந்தியின் குரலும், மோடியின் குரலும், மணியனின் குரலும் ஒரே திசையில் ஒலிப்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். இந்துத்துவ வெறியர்கள் எப்போதும் அரசியலில் நேர்மையைக் கடைபிடிப்பது கிடையாது மோடிக்காக டி.ஜி. வன்சாராவும், மாயபென் கோத்னானியும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அதுபோலேவே காரியம் முடிந்தவுடன் காந்தியையும் அவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

காந்தி எப்படி ஏகாதிபத்தியத்தியன் கைக்கூலியாக செயல்பட்டு இந்திய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பை மடைமாற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தாரோ அதே போல மணியனும் முற்போக்காளர்கள் மத்தியில் உள்ள மோடி மீதான வெறுப்பை மடைமாற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறார்.

“தான் நேரடியாக ஈடுபடவில்லை என்று மோடி மறுத்தாலும் அவரது ஆட்சியில் நிகழ்ந்த அந்த அநாகரிகப் படுகொலைகளுக்கு அவர்தான் பொறுப்பேற்றாக வேண்டும். இந்த பாவத்தை வாழ்நாளில் இன்னொரு முறை நான் செய்யமாட்டேன் என்று முஸ்லிம் சமுதாயத்திடம் மோடி மன்னிப்பை வேண்டுவதுதான் நியாயம். பல்வேறுபட்ட சமயங்களைக் கொண்ட இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் அமர அப்போதுதான் மோடிக்கு முழுத்தகுதி வாய்க்கும்” என்று தன்னுடைய அவாவை வெளியிடுகின்றார் மணியன் அவர்கள்.

மோடியை மன்னித்தால் அவருக்கு பிரதமராகும் தகுதி வந்துவிடும் என்றால் நீங்கள் ஏன் மன்மோகன் சிங்கை மன்னிக்கக்கூடாது? அப்புறம் சோனியா, ராகுல் காந்தி வகையறாக்களையும் உங்களுடைய மேலான கருணையினால் மன்னிக்கலாமே!

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிருக்கு ஒரு மன்னிப்பு சரிசமமான விலை என்றால் நாம் ஏன் தற்கொலை செய்துகொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளுக்காக மன்மோகனுக்கு அப்படியொரு வாய்ப்பை வழங்கக்கூடாது மணியன் அவர்களே! உங்களை மன்னிப்பு வழங்கத் தடுப்பது எது மணியன் அவர்களே? உங்களின் அறம் சார்ந்த சிந்தனையா? அல்லது சுயநலம் சார்ந்த சிந்தனையா?

ஒரே மன்னிப்பு அனைத்து அயோக்கியத்தனங்களையும் புனிதப்படுத்திவிடும் என்றால் அந்த மன்னிப்பு எவ்வளவு அற்புதமானது மணியன் அவர்களே!

“இரண்டு சுயநல திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்பது என்னுடைய லட்சியம்" என்று பிரகடனம் செய்யும் மணியன் அவர்களே! நீங்கள் பாஜகவுடன் கூட்டணியில் சேர்க்க விரும்பும் ம.தி.மு.க, தே.மு.தி.க போன்றவை சுயநலம் இன்றி மக்களுக்கு சேவை செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் என்று நீங்கள் கூறினால் இந்தக் கட்சிகள் எந்த சூழ்நிலையில் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன என்று விவரம் தெரிந்தவர்கள் காறி உமிழமாட்டார்களா மணியன் அவர்களே!

மணியன் அவர்கள் இத்தோடு நின்று விடவில்லை. தன்னுடைய காவி முகமூடியை மறைப்பதற்காக நேதாஜியையும் துணைக்கழைக்கிறார். "ஹிட்லருடன் நேதாஜி நேசக்கரம் நீட்டியபோது ஜெர்மனியும், இத்தாலியும், ஜப்பானும் என்ன செய்கின்றன என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. என் கவலை முழுவதும் இந்தியா….இந்தியா மட்டுமே என்றார். அதையே நான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன்” என்கிறார். இதற்குப் பெயர் மாற்றிச் சொல்வதல்ல; புரட்டிச் சொல்வது. நேதாஜி ஹிட்லரையும் முசோலினியையும் அழைத்துவந்து நீங்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யுங்கள். ஒரே ஒரு மன்னிப்பு மட்டும் கேளுங்கள். உங்களை இந்தியப் பிரதமராக நாற்காலில் உட்காரவைக்க ஊர் ஊராக சென்று நான் பிரச்சாரம் செய்கிறேன் என்று பேசவில்லை. இந்தியாவை ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கு இராணுவ உதவி மட்டுமே கேட்டார்.

ஒருவேளை மணியன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். காக்கி டவுசர்களையும் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தையும் ஆரம்பித்ததற்கான அடிப்படை நோக்கம் ஒன்றென குழப்பிக் கொண்டாரா என்று நமக்குத் தெரியவில்லை.

இடதுசாரிகளால் மூன்றாவது அணி அமைக்க முடியாது, காங்கிரசு கண்டிப்பாக வரக்கூடாது, ஊழல்கறை படிந்து இருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக இருந்தாலும் பாஜகவே அடுத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூச்சமில்லாமல் பேசுகிறார் மணியன் அவர்கள். மணியனால் மாற்று அரசியலை முன்னிலைப்படுத்த முடியாமல் போனதற்குக் காரணம் அவர் காந்திய சிந்தனைகளால் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டிருப்பதே ஆகும்.

நேருவுக்கு காந்தியைப் பற்றி பிரான்சஸ் கன்தர் எழுதியது நமக்கு நினைவுக்கு வருகிறது. "சாராம்சத்தில் அறிவற்றவர்- அறிவியல், உணவு, பாலியல், கல்வி, கிராமத்திற்குத் திரும்புதல் போன்ற விசயங்கள் மீதான அவர் கருத்துக்கள் பைத்தியக்காரத்தனமானவை. மற்றவர்களிடம் அதைப் படிக்கத் தந்தால் கொட்டாவிதான் வரும்." பாஜகவைப் பற்றியும் மோடியைப் பற்றியும் மணியன் கூறுவது நமக்கும் அந்த உணர்வையே தருகின்றது.

மணியன் கூற வருவதை அவருடைய ஆசான் காந்தி அவர்கள் அன்றே கூறிவிட்டார். "இம்சையை நேருக்கு நேர் எதிர்கொள்வதில்தான் உண்மையான அகிம்சை அடங்கியிருக்கின்றது. பசுக்களுக்கு நுண்ணறிவைத் தர முடிந்தால், அத்தகைய பசுக்கள் போதிய எண்ணிக்கையில் புலியின் கைக்குள் அகப்படும்படிச் செய்தால் பசு இறைச்சியை உண்பதில் புலி ஆர்வம் இழந்துவிடும்; தன் இயல்பை மாற்றிக் கொண்டுவிடும்”.

இங்கே பசு என்ற இடத்தில் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளையும், புலி என்ற இடத்தில் மோடியையும் பெயர் மாற்றிக்கொண்டால் மணியனின் உண்மையான முகத்தை நீங்கள் தரிசனம் செய்யலாம்.

Pin It