சிறிய அளவிலான மக்கள் நலன்கள், பெரிய அளவிலான மக்கள் நலன்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம்

நீதிபதி பி.சதாசிவம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பொறுப்பிற்கு வந்துள்ளவர். தமிழர்களுக்கு இது பெருமைதான்.

சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் ஆறுகளிலும், கடற்கரையிலும் மணல் அள்ளக்கூடாது என்று தேசிய பசுமைத் தீர்பாயம் அண்மையில் ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் கட்டிட திறப்பு விழா ஒன்றில் 18.10.2013 அன்று கலந்து கொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “சில நீதிமன்றங்களும், சில தீர்ப்பாயங்களும் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு முழுமையான 100 சதவீதம் தடை விதித்து இருப்பது வருந்தத்தக்கது” என்று வருத்தப்பட்டுள்ளார்.

100 சதவீதம் தடை விதிக்கப்படவில்லை. இப்போதும் பல இடங்களில் மணல் அள்ளப்பட்டுக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கையில் சுற்றுசூழல் அனுமதி பெறாமல் மணல் அள்ளக்கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளதை தவறு என்கிறார் போல தலைமை நீதிபதி.

"நானும் காவேரிக் கரையில் பிறந்து வளர்ந்தவன். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஆற்றில் தண்ணீரே இருக்காது. மணல்தான் இருக்கும். குறைந்த பட்சம் 3 அடி முதல் 5 அடி வரை அந்த மண்ணை அகற்றாவிட்டால், தண்ணீர் வரும்போது வெள்ளம் வீணாக கடலுக்குத்தான் போய்ச் சேரும்” என்று கூறியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

கடலுக்கு செல்லும் நீர் வீணாகப் போய் சேருவதில்லை. கடலுக்குள் ஒரு இயற்கை உலகம் இருக்கிறது. கடல் வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. கடல் சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நன்னீர் குறிப்பிட்ட அளவிற்கு கடலில் போய் சேர வேண்டும். இல்லையெனில் உயிரினங்கள் அழியும். புவி வெப்பம் அதிகமாகும். மழைப் பொழிவு குறைந்துவிடும். அமிலத்தன்மை அதிகமாகி பேரழிவுகள் ஏற்படும். இவையெல்லாம் சிறு வயதில் பாட புத்தகங்களில் கூட இருக்கிறது.

அப்படி இருக்கையில் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறுவது போல கடலுக்கு செல்லுகின்ற நீர் வீணாகச் செல்வதில்லை. யாருக்கும் பயன்படாமல் வேண்டுமானால் செல்லக் கூடும்.

”நானும் காவேரிக் கரையில் பிறந்து வளர்ந்தவன்” என்று பெருமை பேசும் நீதிபதி அவர்கள், அந்தக் காவேரி ஆறு சூறையாடப்பட்ட போது, அளவுக்கு மீறி மணல் கொள்ளை நடந்த போது, இயற்கை வளங்கள் சுரண்டப்படும் போது, எங்கு, எப்போது குரல் கொடுத்தார் என்பது தெரியவில்லை.

ஆற்றிலும், கடற்கரையில் 3 அடி அளவில் மணல் அள்ளும்போது பிரச்சனை ஏற்படவில்லை. 50 அடி, 60 அடி என்று ராட்சத இயந்திரங்கள் கொண்டு சூறையாடப்படும் போதுதான் பிரச்சனை. திருச்சி முக்கொம்பு அருகே காவேரி ஆற்றில் இன்றும் தண்ணீருக்குள் இருக்கின்ற மணலை ரத்தம் சொட்ட, சொட்ட சுரண்டுவது போல அள்ளுகின்றனர்.

நீதிபதி அவர்கள் அந்த இடத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றால் சாலைகளில் நீர் வடிந்தவாறே செல்லுகின்ற மணல் லாரிகளைப் பார்த்திருக்கலாம்.

தமிழ்நாட்டின் தேவைகளைத் தாண்டி கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினம், தினம் மணல் ஏற்றிச் செல்லப்படுவதால்தான் பிரச்சனையே. இயற்கை வளங்களை விற்றுத்தான் அந்நியச் செலவாணி ஈட்ட வேண்டும்; பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும் என்று சில தனி நபர்களின் நலனுக்காக அரசு நினைக்கும் போது, சூழல் விதிகளும், இயற்கை நலன்களும் கடுகளவும் கூட மதிக்கப்படாது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

அப்படியே விதி மீறியவர்களுக்கு, சூழலை சீரழித்தவர்களுக்கு அரசும், நீதித்துறையும் என்ன தண்டனை கொடுத்தார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் அவர்கள் செய்த தவறுக்கு ரூ.100 கோடி வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். தவறுகளை உடனே சரி செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் தான் வகுத்தது உச்சநீதிமன்றம். இயற்கையின் இழப்பிற்கு, மனித வாழ்வின் சிதைவிற்கு கைமாறு கிடைத்ததா? நிவாரணம் கிடைத்ததா? என்றால் இல்லை.

மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள், “சுற்றுச்சூழல் பாதுகாப்பும், வளர்ச்சியும் சம நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோன்ற சூழ்நிலையில் சிறிய அளவிலான மக்கள் நலன்கள், பெரிய அளவிலான மக்கள் நலன்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

இதில் சுற்றுச்சூழலை முழுமையாக அழித்துவிட்டு, இயற்கையை சிதைத்துவிட்டு வளர்ச்சிக்காக திட்டமிடும் போதுதான் சிக்கலே உருவாகிறது.

அது மலைப் பகுதியாகட்டும், கடல்பகுதியாகட்டும், சமவெளிகளில் உள்ள விவசாய நிலங்கள் ஆகட்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரசின் எந்த விதிமீறல்களையும் வளர்ச்சிக்காக திட்டமிடுபவர்களும், செயல்படுத்துபவர்களும், கண்காணிப்பவர்களும் கண்டுகொள்வதே இல்லை.

வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என்று சில பல தனியார் முதலாளிகளின், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் வளர்ச்சிதான் முன்வைக்கப்படுகிறதே தவிர, ஒருபோதும் சாமானிய மக்களின் உரிமைகள் பற்றியோ, அந்த மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரம் பற்றியோ, ஒட்டுமொத்த நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றியோ எவரும் கவலைப்படுவதே கிடையாது. உச்ச நீதிமன்றம் உள்பட.

அப்படி இருக்கையில் பெரிய அளவிலான மக்கள் நலனுக்காக, சிறிய அளவிலான மக்கள் நலன்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது, பலர் வாழ சிலர் அழிந்தால் பரவாயில்லை என்று எண்ணுவதைப் போல இருக்கிறது.

சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கள் வாழ்வாதாரத்தையும், உரிமையையும் இழந்தவர்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என்று ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபடத் தூண்டப்பட்டுள்ளனர்.

பல மலைவாழ் மக்களும், விவசாயப் பெருங்குடிகளும், மீனவ மக்களும் நிலங்களை இழந்து, வேலை வாய்ப்புகளை இழந்து, நாடோடிகளாக சுற்றித் திரிகின்றனர்.

இடம்பெயரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகிலேயே அதிக கொத்தடிமைகள் இருக்கின்ற நாடு என்ற பெருமையை நாம் பெற்றுள்ளோம்.

இவையெல்லாம் பலரது நலனுக்காக விட்டுக்கொடுத்த சிலரது வாழ்வின் நிலைமை.

அதைத்தான் இந்த இந்தியாவின் ஆட்சியாளர்களும், நீதித்துறையும் எதிர்பார்க்கிறதா..?

Pin It