உள்ளூர் செலவானிக்கே சிங்கி அடித்துக் கொண்டிருக்கும் நம்மையும் அந்நிய செலவானி பற்றி பேச வைத்துள்ள மர்மமான முறையில் தேர்தலில் வெற்றி பெற்ற ப.சிதம்பரமுக்கும், தேர்தலில் போட்டியிடாத மக்களிடம் இருந்து ஒரு ஒட்டு கூடப் பெற்றிடாத மண்மோகனுக்கும் இந்த சிகரெட் அட்டை சமர்ப்பணம்.

"யாரும் தங்கம் வாங்காதீர்கள், தங்கம் என்பது இரும்பு போல் ஒரு சாதாரண பொருளாக நினைக்க வேண்டும்" என கிலோ கணக்கில் வரதட்சணை புழக்கம் இருக்கும் கானாடுகாத்தானில் பிறந்த சிதம்பரம் கூறுகிறார்.

சரி, ஏதோ மாதச் சம்பளம், வியாபாரம், விவசாயம் பார்க்கும் சாதாரண மக்கள் நாங்கள் எல்லாம் தங்கம் வாங்குவதை விட்டுவிடுகிறோம். இதனால் உங்கள் அரசு சேமிக்கும் அந்நிய செலவானி அதிகமா? இல்லை, கோடி கோடியாகக் கொட்டி மத்திய அரசு வாங்கும் ஆயுதங்கள், அணுவுலைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள், மின்னனு சாதனங்களால் ஏற்படும் இழப்பு அதிகமா?

நடிகர் ரஜினிகாந்தின் "விக்" அவர் சண்டைக் காட்சிகளில் பறக்கும் போது அவரின் தலையை விட்டு பறக்காமல் இறுக்கமாக ஒட்டியே இருக்கும். ஆனால் நீங்கள் ரஸியாவில் இருந்து வாங்கும் "மிக்" விமானங்கள் விபத்து நடக்காத வருடம் ஒன்று உள்ளதா? தொடர்ந்து மிக் வாங்கப்படும் ரகசியம் என்ன? ஆயிரமாயிரம் பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட இந்த நாடு, அதற்கு இணையான விமானத்தை தயாரித்து பிற நாடுகளுக்கு விற்பனை செய்திருக்க வேண்டாமா?

திவாலாக இருக்கும் துணிக்கடைக்கு தீ வைத்து விட்டு காப்பீட்டு பணத்தை வாங்கி எப்படி முதலாளி அடுத்த தொழில் துவங்குவாரோ, அதே போல் 400 கோடி ரூபாய்க்கு பராமரிப்புப் பணி நடந்ததா இல்லையா எனத் தெரியாத நீர்மூழ்கிக் கப்பலை ஆழ்கடலில் வெடிக்கவிட்டதன் நோக்கம், எவன் போய் உள்நீச்சல் அடித்து கருப்புப் பெட்டியை எடுப்பான் எனும் தைரியமா? சிறு கப்பலில், படகில் வந்து நம் மீனவரைத் தாக்கும் எதிரியை எதிர்க்க வக்கில்லாத இந்த நாட்டிற்கு எதற்கு பங்களா நாய்க்குட்டி மாதிரி நீர் மூழ்கிக் கப்பல்?

தயாரித்த மின்சாரத்தை மற்றொரு இடத்திற்க்கு கொண்டு செல்லும்போது ஏற்படும் இழப்பு (Transmission Loss) என்பது இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் 27% என இருக்கிறது, ஆனால் இங்கே பொருளாதாரப் போரையும், அங்கே ஆயுதப் போரையும் செய்யும் அமெரிக்காவில் 6%, இங்கிலாந்தில் 8%, ஆஸ்திரேலியாவில் 5%. ரஸியாவில் 10% அதாவது நம்மிடம் இருக்கும் ஓட்டைப் பானையை அடைக்க எந்த தொழில்நுட்பமும் வழங்காமல், அதிக திறனுடன் புதிய புதிய அணுவுலைகளை நம்மிடம் விற்று அவர்கள் காசு பார்க்கிறார்கள். மோர் விக்கும் ஆயாவுக்கு தெரிவது கூட இந்தப் பொருளாதார மேதை ஐய்யாக்களுக்கு தெரியவில்லையா? அணுவுலை கட்டும்போது ஒரு கமிசன், யூரேனியம் வாங்கும்போது ஒரு கமிசன், அதை மூடும் போது ஒரு கமிசன் என கமிசனின் அட்சயப் பாத்திரம் அணுவுலை தான் அரசுகளுக்குப் பிடிக்கும். ஒரு முறை மட்டும் கமிசன் கிடைக்கும் சூரிய, காற்றாலை மின் திட்டங்களில் கவனம் இருக்காது.

கோதுமைக்கும், அரிசிக்கும் மாற்றாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்த (ஈரான், ஈராக்) நாடுகளிடம் தைரியமாக வாங்காமல், அமெரிக்காவிற்க்கு பயந்து டாலரைக் கொடுத்து வாங்கும் வீரம் மிக்க அரசு தான் பா.ஜக, காங்கிரஸ் அரசுகள். அதான் எத்தனால் கலந்த பெட்ரோல் வந்தால் இறக்குமதி கம்மியாகுமே என்கிறீர்களா? விவசாயமே பார்க்க வேண்டாம் என்கிறார் செவ்வாய் கிரகத்தின் பிரதமர் மன்மோகன். பின்ன ஏத்தனால் எங்க இருந்து வரும்?

நம்மிடம் இருக்கும் அமெரிக்க டாலர் அளவைக் கூட்ட, அந்நிய நேரடி முதலீட்டை அனைத்து துறைகளிலும் கொண்டுவர வேண்டும். அப்போது தான் டாலரில் முதலீடு நமக்குக் கிடைக்கும் என ஐயா சொல்கிறார். இது போன்ற ஒரு வாழை மட்டை ரக பொருளாதாரப் புரிதல் எவருக்கும் இருக்க முடியாது. அவர்கள் பணத்தைப் போடுவது உங்களின் பிச்சை பிக்சட் டெபாஸிட் திட்டங்களில் அல்ல, இலாபம் கிடைக்கும் தொழில்களில். ஒரு ரூபாய் முதலீடு செய்யும் எவனும் பத்து ரூபாய் லாபம் பார்க்கத்தான் செயல்படுவான். அவனின் லாபப் பணத்தை வேறு வழிகளில் அவனின் நாட்டிற்கு எடுத்துப்போவான்.. அப்போது உங்களின் முகத்தை எங்கே வைப்பீர்கள்? இலாப பணத்தை தாங்கள் எடுத்துச் செல்ல எந்த நிபந்தனையும் இருக்கக் கூடாது என அவன் சொல்லும் அடிமை சாசனத்தில் கையெழுத்து போட்டுத் தானே முதலீடுகளை வர வைக்கிறீர்கள்?

சுதேசி எனும் சொல் நினைவில் இருக்கிறதா? தூத்துக்குடி சிதம்பரம் ஐயாவும், வடநாட்டு காந்தியும் இந்த நாடு பொருளாதார அடிமையாக இருக்கக் கூடாது, நமக்குத் தேவையான பொருள்களை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என செயல்படுத்தியது தான் சுதேசி இயக்கம். எங்க ஊரில KFC வந்துடுச்சுனு பெருமையா சொல்லும் சமூகம் இருக்கும் நாட்டில் இதைச் சொல்வது கடினமாக இருக்கிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விளையும் அநேக மூலிகைகள் மற்றும் பிற விவசாய விளை பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகி, மருந்து மாத்திரைகளாக திரும்ப இங்கே அனுப்பப்பட்டு விற்பனை ஆகின்றன.

பெயரில் TVS, HCL என இருந்தாலும் கணினி, கைபேசி, மின்னனு சாதனங்கள் அனைத்தும் இறகக்குமதி தான் செய்யப்படுகின்றன.

விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டும் எனச் சொன்ன செவ்வாய் கிரகத்தின் பிரதமர் மண்மோகன், வெங்காய விலை அதிகமானவுடன் பிற நாடுகளில் இருந்து கப்பல் கப்பலாக வெங்காய இறக்குமதி செய்தார் நினைவில் இருக்கிறதா?

குஜராத் என்றால் தொழில் வளர்ச்சி!!! அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளின் புதிய செல்லப் பிள்ளை மோடி, இந்தியா எனும் இந்தச் சந்தையை கூறு கட்டி புதிய நிறுவங்களுக்கு விற்பனை செய்வதில் மண்மோகன், சிதம்பரம் கும்பலுக்கு சற்றும் குறையாத ஆள்.

ஆக இவர்கள் நடத்துவது அரசாங்கம் அல்ல, வெறும் கமிசன் மண்டி.

2000 ரூபாய்க்கு தீபாவளி துணி எடுக்கும் போது ஒரு நூறு ரூபாய்க்கு Co-Optexஇல் இரு கைத்தறி துண்டுகளை வாங்குங்கள், எங்கோ ஒரு ஏழை நெசவாளன் வாழ்வான்.

- தமிழ்நுட்பத் தம்பி கார்த்திக் - மதுரை.

Pin It