மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு:

வணக்கம். தியாகு-ஆகிய நான், இலங்கையில் காமன்வெல்த் - எதிர்பியக்கத்தில் உறுப்பு வகிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆவேன். காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை (CHOGM) நவம்பர் நடுவில் கொழும்பில் நடத்தக் கூடிய வாய்ப்பு குறித்து, உலகெங்கும் தமிழ் மக்கள் கிளர்ச்சியடைந்துள்ளனர் என்பது தாங்கள் அறிந்ததே. இலங்கை, இனக்கொலைத் தன்மையுள்ள போர்க்குற்றங்களுக்காகவும் மானுட விரோதக் குற்றங்களுக்காகவும் காமன்வெல்த்திலிருந்து நீக்கப்படுவதற்கே தகுதியுடையது என்பதுதான் எமது நிலைப்பாடு. தங்களின் நிலைப்பாடும் இதுவே என்பதை தாங்கள் இந்தியத் தலைமை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக அறிகிறோம்.

டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத் தீர்ப்பு, ஐ.நா வல்லுநர் குழு அறிக்கை, லண்டன் அலைவரிசை -4 ஆவணப்படங்கள் ஆகியவையும் இலங்கையின் போர்க் குற்றங்களையும் மானுட விரோதக் குற்றங்களையும் அம்பலப்படுத்தியிருந்தாலும், இலங்கை அரசும் போர்க் குற்றவாளிகளும் இன்னும் தண்டிக்கப்படவோ முறையாக விசாரிக்கப்படவோ இல்லை. இந்நிலையில், காமன்வெல்த் போன்றதொரு பன்னாட்டு மதிப்புமிக்க அமைப்பின் மாநாட்டை இலங்கை அரசின் தலைமையில் நடத்துவதன் மூலம் இனக்கொலைக் குற்றவாளி ராஜபக்சேவை குற்ற நீக்கம் செய்து புனிதனாகக் காட்டும் முயற்சியில் காங்கிரசு தலைமையிலான இந்திய அரசும் வேறு சில உலக அரசுகளும் ஈடுபட்டுள்ளன. இதையே நாம் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சிங்கள அரசையும் அதன் கொலைக் கூட்டாளிகளையும் தனிமைப்படுத்த இயலும். அதற்கான அற வலிமையும் ஆற்றலும் தமிழக மக்களுக்கும் தமிழக அரசிற்கும் உண்டு என உறுதியாக நம்புகிறேன்.

இன ஒதுக்கலை கடைபிடித்த காரணத்திற்காக 1961 முதல் 1994 வரை தென் ஆப்பிரிக்கா காமன்வெல்த்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டதும், கென் சாவோ வீவா என்ற மனித உரிமை செயற்பாட்டாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்காக, அடுத்த நாளே நைஜீரியா நீக்கி வைக்கப்பட்டதும், பர்வேஷ் முஷாரப் ஆட்சியின் போது பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டதும், இப்போதும் கூட இராணுவ ஆட்சியால் ஜனநாயகம் மறுக்கப்படுவதற்காக ஃபிஜி (Fiji) விலக்கி வைக்கப்பட்டிருப்பதும் தாங்கள் அறிந்ததே. எனவே 1971-ம் ஆண்டின் சிங்கப்பூர் சாற்றுரை, 1991-ம் ஆண்டின் ஹராரே சாற்றுரை ஆகிவற்றின்படி காமன்வெல்த்தின் அடிப்படை விழுமியங்களுக்கே தகுதியில்லாத *இலங்கையின் தலைமையில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டைத் தடுத்து நிறுத்தி இலங்கை அரசை காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும், அப்படி அம்மாநாடு இலங்கையில் நடக்குமானால் இந்தியத் தலைமை அமைச்சர் அம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்* என்ற கோரிக்கையை முதன்மையாகக் கொண்டும், தங்களின் முன் முயற்சியில் 27.3.2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைளை வலியுறுத்தி, காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை அக்டோபர் 1 முதல் உயர்நீதிமன்ற அனுமதி பெற்று நடத்தி வருகிறேன்.

அக்டோபர் 7 ஆம் நாள் நான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளேன். இங்கும் காவல்துறை மற்றும் மருத்துவர்கள் கண்காணிப்பிலும் எனது உணவு மறுப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் சனநாயக சக்திகளும் ஆதரவளித்துள்ள இப்போராட்டத்திற்கு, தமிழக அரசின் மேலான ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். வெற்றி அல்லது வீரச் சாவு என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசு இயன்றதனைத்தையும் செய்து கோரிக்கைளை வென்றெடுத்து ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உரிமையுடன்,

தோழர் தியாகு
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Pin It