சங்க காலப் பெண்கள் இல்லறம் சிறக்க மாண்புடன் வாழ்ந்து வந்தனர். குடும்பம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றில் பெண்களின் கருத்துகளுக்கு மதிப்பிருந்தன. பெண்கள் போற்றப்பட்டனர். குடும்பத்தின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் பெண்களே முக்கியக் காரணம் என எண்ணினர். பெண்குழந்தைகளைப் பெற்றெடுப்பதை வரமாகக் கொண்டிருந்தனர். அதற்காக, கடவுளுக்குப் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும் வேண்டிக்கொண்டதை,

குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள் (பா. 257.) என்னும் ஐங்குறுநூற்றுப் பாடல் வழியாக அறியமுடிகிறது. காரணம் அன்றைய கால கட்டத்தில் பெண்ணை மணமுடிக்க பொன்னும் பொருளும் அளவற்றுக் கொடுத்துக் கொண்டனர். ஏனெனில், ஆண், பெண் சமூக உறவுநிலையென்பது சுமுகமாகவும் மேன்மைப் பொருந்திய பெண்ணைத் தமக்குத் துணையாகக் கொண்டு ஊரார் போற்றும்படி வாழ்க்கை மேற்கொள்வதையும் ஆண்கள் தம் தலையாயக் குறிக்கோளாகக் கருதினர். இதற்கு பின்வரும் தொல்கபிலரின் பாடலான,

 நல்லோள் கணவன் இவனெனப்
 பல்லோர் கூறயாம் நாணுகஞ்சிறிதே(குறுந். 14.)என்பது தக்கச் சான்றாக விளங்குகின்றது.

அதுபோல், அக்காலப் பெண்கள் கல்வி மற்றும் கேள்விகளில் தலைசிறந்து காணப்பட்டுள்ளனர். ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், ஓளவையார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார் என எண்ணற்ற பெண்கவிஞர்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வியறிவு, கவிபுனையும் திறன், நுட்பமாகச் சிந்தித்து வளரும் பகையினைத் தணித்து நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வித்திட்ட பாங்கு போன்றவை நினைத்தற்குரியவை எனலாம். மேலும், பெண் மதிக்கப்பட்டதன் விளைவாக, அவளுக்குப் பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. தம் நுண்ணுணர்வுகள், ஆசைகள், விருப்பு, வெறுப்புகள் முதலியவற்றை வெளிப்படையாகத் தம் பாடல்கள்வழி வெளிக்காட்டியுள்ளது கண்கூடு.

 கிழவன் சேட்புலம் படரின் இழையணிந்து
 புன்தலை மடப்பிடிப் பரிசிலாகப்
 பெண்டிரும் தம்பதம் கொடுக்கும்(புறம். 151. )

 பெருந்தலைச் சாத்தனாரின் மேற்சுட்டப்பெற்ற பாடலின் மூலமாக, இரவலர்களுக்கு வாரிக் கொடையளிக்கும் உரிமையைப் பெற்றிட்ட புரவலர்களாகப் பெண்கள் திகழ்ந்ததை உணரவியலும். எனவே, ஆடவரின் எழுதுகோல்களும் தூரிகைகளும் பெண்ணை நன்குத் திறம்பட நல்ல பெண்ணாக வடிவமைப்பதைப் பெரும்பணியாகக் கொண்டிருந்தாலும் பெண்கள் மறுபுறம் போற்றிப் பாதுகாக்கப்பட்டனர். அதேசமயம், பெண்ணை வலுக்கட்டாயமாக உடைமையாக்கி நுகர முனைந்திடுவோர் அரசராக இருப்பினும் துணிந்து மகற்பாற் மறுத்தல் நிகழ்ந்துள்ளது. உண்மையில் சங்க காலம் என்பது மண்ணையும் பெண்ணையும் ஒருங்கே காத்து நல்வழியில் நடத்த முயன்ற பொற்காலமாகும். அண்மையில் நாடெங்கிலும் பெண்களுக்கெதிராக நடைபெறும் பாலியல் சார்ந்த வன்கொடுமைகளைக் கண்ணுற்று மிகுந்த துயரப்படும் வேளைகளில் மீளவும் அப்பொற்காலம் மலர மனம் ஏங்கித்தவிக்கத்தான் செய்கின்றது. புலருமா அப்பொழுது?

- முனைவர் மணி.கணேசன், மன்னார்குடி-614001, பேச:9442965431. 

Pin It