இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலை நடந்த இலங்கையில் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெறப்போவது மோசமான ஒரு முன்னுதாரணமாகும். அம்மாநாடு அங்கு நடைபெற்றால் ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்த மனித குலப் பகைவன் மகிந்த ராஜபக்சே காமன்வெல்த் நாடுகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தலைவராக இருப்பார் என்பது மனித குல வரலாற்றில் இதுவரையிலும் நடந்தேறாத அதிசயங்களில் ஒன்றாக அமையும். வன்னிப் பெரு நிலப்பரப்பில் 2008 - 2009 ஆண்டுகளில் போர் நடைபெற்ற போது பாதுகாப்பு வளையங்கள் என்று சிங்கள அரசே அறிவித்து, அப்பாவித் தமிழர்களை அங்கு வரவைத்து கொத்துக்குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் போன்று தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை வீசி, பச்சிளங்குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் அப்பாவித் தமிழ் மக்கள் என்று சகட்டு மேனிக்கு கொத்துக் கொத்தாக கொலை செய்த ஒரு இனவெறி அரசு காமன்வெல்த் நாடுகளுக்கு தலைமையேற்க முடியுமெனில், இதைவிட மனித உரிமைகளை அவமானப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

thiyagu_640

 போர் முடிந்த பின் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை ஆடு மாடுகள் போல இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வதை முகாம்களில் அடைத்து வைத்து, நாஜி முகாம்களைப் போல தமிழினத்தையே அழிக்கத் துணிந்த இலங்கையில் உச்சிமாநாடு நடைபெற்றால் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அம்மாபாதகச் செயல்களை அங்கீகரிப்பதாகாதா? போரின் போது சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப்புலிகள் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் இளம் பெண்களையும் மிருகத்தனமாக சித்திரவதை செய்து, சர்வதேச மனித உரிமைச் சாசனங்களால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அத்தனையும் காலில் போட்டு நசுக்கிய செயல்களை இந்த நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளுகின்றனவா?

போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கழிந்தாலும் தமிழீழப் பகுதிகளில் வசிக்கும் தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் கொடூரமான பாலியல் ரீதியாக சித்திரவதைகளுக்கு உள்ளாகி, எவ்வாறு ஒவ்வொரு நாளும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனா் என்பதை நியூயார்க் நகரில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட அதிர்ச்சியான அறிக்கையைப் படித்தோருக்கு, அங்குள்ள இன்றைய கொடூரமான நிலைமை புரியும். .

இப்போது முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களையும், அவா்களது வணிகத் தளங்களையும், முஸ்லிம் கலாச்சாரப் பண்பாடுகளையும் சிங்கள வெறியர்கள் மகிந்தாவின் அரவணைப்பில் தாக்கத் தொடங்கியுள்ளனா். அண்மையில் கொழும்பில் நடந்த தாக்குதல்கள் இதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இதைக் கண்டித்து மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த ‘டைம்’ ஆங்கில ஏடு கூட சிங்கள வெறிகொண்ட புத்தபிக்குகளின் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்த செய்திகளைத் தாங்கி வந்ததால் அந்த ‘டைம்’ ஏட்டை இலங்கை முழுவதிலும் தடை செய்தனா் ராஜபக்சே சகோதரர்கள். இவா்களது இனவெறிக்கும், சகிப்பின்மைக்கும் இது மற்றோர் எடுத்துக்காட்டு மட்டுமல்ல காமன்வெல்த் கூட்டமைப்பின் சாசனம் வலியுறுத்தும் பேச்சு உரிமையை காமன்வெல்த் நாடுகளுக்கு தலைமை தாங்கவிருக்கும் இலங்கை பேணிய இலட்சணமாகவும் அமைந்துள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுகளை உலகு தழுவிய அளவில் மனித உரிமைக் குழுக்களும் இப்போது எழுப்பத் தொடங்கியுள்ளன. இவற்றிலிருந்து விடுவிக்கப்படாதவரை காமன்வெல்த் மாநாட்டை நடத்திட இலங்கைக்கு எந்தவித தார்மீகத் தகுதியும் இல்லை. காமன்வெல்த் நாடுகள் என்பது அரசுகளின் - ஆளும் வா்க்கங்களின் கூட்டமைப்பாக இருக்க முடியாது. மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட, இவற்றை வளா்த்தெடுக்கக் கூடிய அரசுகளின் கூட்டமைப்பாக - அப்படிப்பட்ட நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டமைப்பாகவே இருக்க முடியும். அவ்வாறு அல்லாமல், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும், சிறுபான்மை இனங்களைத் திட்டமிட்டு அழித்தொழிக்கும், மத வழிப்பாட்டுத் தலங்களையும், சிறுபான்மையினா் வசிப்பிடங்களையும் கொலைவெறி கொண்டுத் தாக்கும் இரத்தக் காட்டேறிகளும், கயவா்களும் எப்படி காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடியும்?

இலங்கையில் நவம்பா் மாதம் நடைபெறப் போகும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது மட்டுமல்ல, நம்முடைய கோரிக்கை. இனப்படுகொலை நடந்த இலங்கையில் இம்மாநாடு நடைபெறக் கூடாது. காமன்வெல்த் கூட்டமைப்பின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து இலங்கையை தகுதி நீக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் முழக்கமாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் உணர்வாக இருக்கும் இந்த முழக்கத்தைத் தீர்மானமாக நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடனடியாக கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடர்ச்சியாக 7வது நாளாக பட்டிணிப் போராட்டம் நடத்தி வரும் தோழர் தியாகு அவர்கள் தன் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

- எம். எச். ஜவாஹிருல்லா ச.ம.உ.
மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம்
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Pin It