அவர் அஞ்சல் துறையில் அஞ்சல் பிரிப்பாளராக பணிபுரிந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஒய்வு பெற்று விட்டார். வழக்கறிஞராக பதிவு செய்து விட்டு, உயர்நீதிமன்றத்திற்கும் ஶ்ரீபெருமந்தூர் நீதிமன்றத்திற்கும் நடைபயின்று கொண்டிருக்கிறார். அவர் சில நாட்களுக்கு முன் தனது நண்பரைப் பார்க்க அஞ்சல் பிரிப்பகத்திற்கு சென்றார். உடன் வேலை பார்த்தவர்கள், நண்பர்கள் அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த ஒரு சக ஊழியர் வந்து கை குலுக்கி விட்டு,

“என்ன ஏ.கே.47.. சவுக்கியமா.. ?” என்றார்.

சட்டென அவர் முகம் சுருங்கி விட்டது. அந்த சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்து போய் விட்டது. அந்த குற்ற வழக்கில் தீர்ப்பு வந்து விடுதலையாகி ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனாலும் மெத்தப் படித்த ஆங்கில மேதாவி அரசு உயர் அதிகாரிகள் செய்த சிறிய ஆங்கில மொழிபெயர்ப்புக் கோளாறு இன்னும் ‘விடாது கருப்பு’ மாதிரி தொடர்ந்து கொண்டிருக்கிறது!

1988ஆம் ஆண்டில் ஒருநாள் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் ஒருவன் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்து கொண்டு திரிந்து கொண்டிருந்தான். போலிசார் அவனை விரட்டிச் சென்றனர். ஓடினான் ….ஓடிக் கொண்டே இருந்தான்… நடப்பதற்கே சிரமப்படும் கால் ஊனமான அவனை போலீசார் விரட்டி விரட்டிப் பிடித்தனர். இது பத்திரிகையில் வந்த ரீல்.. ஆனால் உண்மையான செய்தி…

வீட்டிலிருந்த அவனை காவல்துறையினர் பிடித்துச் சென்று ஒரு பெரிய குற்ற வழக்கில் பொய்யாக கோர்த்து விட்டனர். இதெல்லாம் சாதாரணமாக தமிழ்க காவல்துறை செய்வது தானே.. இதைப் போய் எழுத வந்து விட்டாய் என்று வழக்கறிஞர் நண்பர்கள் சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது.

அதற்குப் பிறகு நடந்தது பற்றித்தான் இந்த கட்டுரை!

அது ஆங்கில மொழியாக்கத்தினால் வந்த சிக்கல்! 160 பிரிவு அறிக்கையிலும் மகஜரிலும் “ஏ.கே. 47 துப்பாக்கியினுடைய குண்டுகள் கைப்பற்றப்பட்டன” என்று வழக்கை காவல்துறையினர் புனைந்து விட்டனர். அந்த காவல்துறை அதிகாரி அஞ்சல் துறை அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “உங்கள் துறையில் பணிபுரிபவர் குற்றஞ் சாட்டப்பட்டு சிறையில் உள்ளார். அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுங்கள்” என்பது அந்த கடிதத்தின் சாரம்.

இதை அந்த காவல் அதிகாரியோ (டி.எஸ்.பி) அல்லது அவருக்கு கீழுள்ள காவலர்கள் தமிழில் எழுதி இருந்தால் இயல்பான கருத்துப் பரிமாற்றம் நடந்திருக்கும். இங்கு ஆட்சி மொழி, நிர்வாக மொழி ஆங்கிலம் என்பதால் இந்த அதிகாரிகள் தங்கள் அதிகார மேன்மையை பறைசாற்றவோ அல்லது ஆங்கில மேதாவிகள் என்பதை நிரூபிக்கவோ ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கடிதம் அனுப்புகின்றனர். “ஏ.கே.47 துப்பாக்கியிலுள்ள குண்டுகள்” என்பதை ஆங்கில மொழியாக்கம் செய்கையில் “Bullets of A.K 47” என்று செய்திருக்க வேண்டும். ஆனால் நமது காவல்துறை நண்பர்கள் A.K 47 Bullets என்று மொழிபெயர்த்து கடிதத்தில் எழுதி அனுப்பி விட்டனர். இதை அஞ்சல் துறை அதிகாரி தங்கள் ‘ஆங்கிலப் புலமையை’ பயன்படுத்தி “AK 47 and Bullets” என்று புரிந்து கொண்டார்! அதன் பிறகு இந்த இரு துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பல கடிதப் போக்குவரத்துகளில் “AK 47 and Bullets” என்பது ஒரு சிறிய மாற்றம், அதாவது “S” என்ற எழுத்தைப் போகிற போக்கில் சேர்த்துக் கொண்டனர். “AK 47 and Bullets” என்பது “A.K 47S and Bullets” என்று மாறி, பல ஏ.கே.47 துப்பாக்கிகள் என்ற அர்த்தத்தில் புதிய பரிமாணத்தை அடைந்தது. இதை கண், காது, மூக்கு வைத்து கீழே கசிய விட்டனர் அஞ்சல் துறை அதிகாரிகள். கற்பனை விரிந்து பறந்தது!!

இப்பொழுது சாப்பாட்டு மூட்டையுடன் அலுவலகத்திற்கு கால்கள் தாங்கி தாங்கி வரும் அவரை “இந்தத் தோளில் ஒரு துப்பாக்கி…. இடுப்பில் ஒரு துப்பாக்கி… முதுகில் ஒரு துப்பாக்கி …” என்று சகஊழியர்கள் பய – பக்தியிடன் கற்பனை கலந்து பார்த்தனர்; கிசுகிசுத்தனர்

ஆனால் இந்த ஏ.கே.47 துப்பாக்கிகள் கதையெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிய வருவதற்குள் 14 ஆண்டுகள் ஓடி விட்டது. 14 ஆண்டுகள் கழிந்தும் தற்காலிக வேலைநீக்கத்தை அஞ்சல் துறை அதிகாரிகள் ரத்து செய்ய வில்லை. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு போட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு எதிர் தரப்பு வழக்கறிஞர் அளித்த பதில் ஆவணங்களில் 'குண்டுகள்' என்பது “AK 47 துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள்” ஆங்கில மொழியில் நடந்த கடிதங்கள் பரிவர்த்தனைகளில் அவதாரம் எடுத்துள்ளதை கண்டு அதிர்ந்து போனார்! பின்பு நீதிமன்றத்தில் எல்லா ஆவணங்களையும் படித்து, மகஜரில் போடப்பட்டுள்ளது 'துப்பாக்கி ரவைகள் மட்டும்தான்' என்று அவரின் வழக்கறிஞர் நீதிபதிக்கு எளிதாகப் புரிய வைத்தார். ஆனால் பல ஆண்டுகளாக பரபரப்புடன் பரப்பப்பட்டதைத் திரும்ப பெற முடியுமா என்ன? சக ஊழியர்களுக்கும்… போலீஸ்காரர்களுக்கும் கூட அவர் ஒர் ‘பெரிய பயங்கரவாதியாக’ தெரிகிறார்.. அவருடன் ஒட்டிக் கொண்ட “ஏ.கே.47..” ஒட்டிக்கொண்டதுதான்…. எளிதாக போக மறுக்கின்றது.

குண்டர் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற தடுப்பு காவல் சட்டங்களை காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் நடைமுறைப்படுத்தும்பொழுது, குற்றப்பத்திரிக்கையை தமிழிலும், அதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்திலும் வழங்குகிறார்கள். இந்த இரண்டு அறிக்கைகளிலும் மொழி பெயர்ப்பு காரணங்களால் சிறிய வேறுபாடுகள் இருப்பினும் நீதிபதிகள் “அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்தி செய்யவில்லை( Non-application mind in this case)“ என்று கூறி தடுப்பு காவல் வழக்குகளை ரத்து செய்வது உயர்நீதி மன்றத்தில் அடிக்கடி நடைபெறுவதாகும். இதற்கு காரணமாக இருப்பது உயர்நீதிமன்ற மொழியாக ஆங்கிலம் இருப்பதாகும். ஜெயலலிதா-சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் வழக்கை இழுத்தடிப்பதற்காக ஆங்கிலத்தில் இருந்த குற்ற அறிக்கையை தமிழில் வேண்டும் என்று வழக்கு தாக்கல் போடப்பட்டது. பின்பு ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்கள் மொழி பெயர்த்து அளிக்கப்பட்டது. இப்படி காவல்துறைக்கும், நீதிமன்றங்களுக்கும் ஆங்கிலம் பெரும் சுமையாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் உள்ள மக்கள் தங்களுக்கான உரிமைகளில் நியாயம்-நீதியைப் பெற நீதிமன்றங்களை நாடும் பொழுது, அவர்களுக்குப் புரியும்படியாக தமிழ் மொழியில் ஆவண-கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவது தான் சரியானதாகும். இல்லையெனில், மேல் குறிப்பிட்ட வழக்கில் நடந்தது போல் தவறுகளும் அநீதிகளும் எளிதாக, தாராளமாக நீதிமன்றங்களில் நாள்தோறும் நடைபெறும்!! குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர் மட்டுமல்ல… குற்றம் சாட்டுபவராக உள்ள காவல்துறையினரும் இந்த ஆங்கில மொழியால் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. கீழ்மட்டத்திலுள்ள காவலர்களும், அதிகாரிகளும்தான் குற்றங்களை பதிவுசெய்பவர்களாகவும், அதற்கான ஆவணங்களைத் தயாரிப்பவர்களாகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழில் படித்தவர்கள். தமிழில்தான் சரளமாக,தெளிவாக ஆவணங்கள் அவர்களால் தயார் செய்ய முடியும். தங்கள் ஆய்ந்தறிந்த உண்மைகளை தமிழில்தான் காவலர்கள் பருண்மையாக எடுத்துச் சொல்லவும் முடியும். அந்தந்த தேசிய இனங்களின் மொழிகளில் வழக்குகள் நடந்தால்தான் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அடுத்தடுத்த குற்றங்களைத் தடுக்க முடியும். இல்லையெனில் கையால் சோற்றை எடுத்து நேரிடையாக வாயில் கொண்டு போவதற்குப் பதிலாக தலையைச் சுற்றி கொண்டுபோய் சாப்பிட்ட மாதிரியாகவே முடியும்!!

ஆங்கிலத்தில் பேசினால் போலிஸ்காரர்கள் சல்யூட் அடிப்பார்கள்… ஆங்கிலத்தில் பேசுபவர்கள் குற்றம் செய்யமாட்டார்கள் என்று போலிஸ்காரர்கள் நினைக்கிறார்கள்.. ஆங்கிலம் பேசினால் போலிஸ்காரர்கள் மரியாதை தருவார்கள் …என்பது போன்ற தமிழ்நாட்டில் நிலவும் பொது கருத்தாங்களுக்கும் பின்னுள்ள உளவியல் என்ன? தமிழ்நாட்டின் காவல்துறை ஆவணங்கள், காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையிலான ஆவணங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் முழுமையாக நடைபெற்றால் மேற்சொன்ன உளவியல் சிக்கலின் அடித்தளத்தை நீக்க முடியும். அது வரையில் ஆங்கிலம் பேசும் குற்றவாளிகளிடம் தமிழக போலிஸ்காரர்கள் அசிங்கபடுத்தப்படுவது, ஆங்கிலம் பேசி தப்பிவிடுவது போன்ற சினிமா நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெறவே செய்யும்.

“சட்டங்கள் தெரியாது… புரியவில்லை” என்பதால் தனது குடிமக்களை மன்னிக்க முடியாது என்பதை ‘சட்டமாகச்’ சொல்லும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும், அதை நடைமுறைப்படுத்தும் இந்திய, தமிழக நீதிமன்றங்களும் அந்த சட்டங்களை மீறுகின்ற குடிமக்களையும், அதனால் பாதிக்கப்படும் குடிமக்களையும், தெரியாத சட்டத்திற்கு அவர்களுக்குப் புரியாத மொழியில் வழக்காடுவது எந்த விதத்தில் சட்டமாகும்? இயற்கை நீதியாகும்?.

எனவே தமிழ்நாட்டில் கீழ்மை நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை தமிழ்மொழியை வழக்காடு மொழியாக, நீதி மன்றங்களின் நிர்வாக மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டியது சட்டபடியான நீதியும், இயற்கையான சமூக நீதியும் மட்டுமல்ல சனநாயக வழிமுறையும் ஆகும். அதுவே சட்ட ஒழுங்கினைப் பாதுகாக்கும் சனநாயக நெறிமுறையாகும்.

- கி.நடராசன்

Pin It