இந்த நாடு பிரிட்டிஷ் ஏகாதியபத்தியத்திடமிருந்து காந்தியின் அறவழிப் போராட்டங்கள் மூலம் விடுதலை பெற்றது. அறவழிப் போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்ற இந்தியாவில் உள்ள அரசு அறவழிப் போராட்டாங்களுக்கு மதிப்பளிக்கும்; அதன் மூலம் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்களில் பல பிரிவினரும், தலைவர்களும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல அறவழிப் போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.

காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக் கொள்ளும் இங்குள்ள ஆட்சியாளர்கள் உண்மையில் அறவழிப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கின்றார்களா?

சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை நீக்கக் கோரி மணிப்பூரில் இரோம் சர்மிளா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய கோரிக்கைக்கு இந்த ஆட்சியாளர்கள் இதுவரை ஒரு சிறிதும் செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாகத் தற்கொலை முயற்சி என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, தொடர்ந்து அரசுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அந்தப் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்து விட்டனர். கடைசியில் அவரை ஒரு கேலிக்குரியவராக ஆக்கிவிட்டார்கள்.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்திற்குத் துணை போன நாடு ஜப்பான். ஆனால் அந்த நாடு கூட இன்று மக்களின் அறவழிப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, தனது நாட்டில் உள்ள அனைத்து அணு உலைக் கூடங்களையும் மூட முடிவு செய்துள்ளது. ஆனால் அஹிம்சை வழியில் வந்த நாயகர்களாகக் கட்டிக் கொள்ளும் இங்குள்ள ஆட்சியாளர்களோ கூடங்குள அணு உலைக்கு எதிராக பல்லாண்டுகளாக மக்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டங்களைக் கடுமையாக அடக்கி வருகின்றனர். போராடும் மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அவர்களது வாயை அடைக்க முயல்கின்றனர். பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் பூண்டோடு அழிக்கும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான புளுட்டோனியத்தைப் பெறுவதற்காக நாடு முழுவதும் அணு உலைகளைத் திறக்க மும்முரமாக முயன்று வருகின்றனர்.

காந்தியின் அறவழிப் போராட்டங்களுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே அடிபணிந்து நாட்டை விட்டு வெளியேறியது விட்டது என்று நமது மக்களுக்கு வரலாறு கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அறவழியில் ஆட்சியைக் கைப்பற்றியதாகக் கூறிக்கொள்ளும் இங்குள்ள ஆட்சியாளர்களோ மக்களுடைய அறவழிப் போராட்டங்களுக்கு மதிப்புக் கொடுப்பதும் இல்லை; அவற்றைக் கண்டு அஞ்சுவதுமில்லை; மாறாகக் கடுமையாக அவற்றை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். அப்படியானால் மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் உயர்ந்த மாண்பு அந்நிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்தது. ஆனால் அத்தகைய உயர்ந்த மாண்பு இன்றைய இந்திய ஆட்சியாளர்களிடம் ஒரு சிறிதும் இல்லை எனப் பொருள் கொள்ளலாமா?

காந்தியின் அறவழிப் போராட்டங்களுக்குப் பயந்து அந்நிய ஏகாதிபத்தியம் தனது காலனி ஆதிக்கத்தையும், சுரண்டலையும் விட்டுக் கொடுத்துவிட்டு வெளியேறி விட்டது என்பதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது?

உண்மையில் காந்தியின் அறவழிப் போராட்டங்களுக்குப் பயந்தோ அல்லது அவற்றிற்கு உயர்ந்த மதிப்பளித்தோ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெளியேறவில்லை. மாறாக அப்பொழுது நாடு முழுவதும் மக்களிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்டு அஞ்சியே பிரிட்டன் வெளியேறியது என்பதுதான் உண்மை.

நமது மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்து அந்நிய ஏகாதிபத்தியம் விரட்டி அடிக்கப்பட்டால் ஆட்சியதிகாரம் பரந்துபட்ட உழைக்கும் கைகளில் சென்று விடும் என இங்கிருந்த பெருமுதலாளிகளும், ஜமீன்தார்களும் அஞ்சினர். எனவே மக்கள் போராட்டங்களைத் தமது கட்டுக்குள் வைத்துக் கொண்டு, அவற்றை வைத்து ஏகாதிபத்தியத்தை மிரட்டி ஆட்சியதிகாரத்தைத் தாம் அடையத் திட்டமிட்டனர். அதற்கு ஏதுவாக அமைந்ததுதான் காந்தியின் தலைமையும் அவருடைய தலைமையிலான அறவழிப் போராட்டங்களும்.

காந்தி ஒரு ‘அவதார புருஷர்’, ‘இந்திய மக்களுக்குச் சுதந்திரம் வாங்கித் தரவே அவதாரம் எடுத்தவர்’, ‘மகாத்மா’, என்றெல்லாம் அவரைச் சுற்றி மாபெரும் பிம்பங்களைக் காங்கிரஸ் கட்சி கட்டி எழுப்பியது. அன்று மக்கள் மத்தியில் நிலவிய குறைந்த கல்வியறிவு, பின்தங்கிய மற்றும் பிற்போக்கான கலாச்சாரங்களின் ஆதிக்கம், காங்கிரசுக்கு ஆதரவான ஊடகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றின் காரணமாகக் காந்தியைச் சுற்றிக் கட்டப்பட்ட பிம்பங்கள் விசுவரூபம் எடுத்தன. காந்தி மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவரானார். (இன்றைய மாறுபட்ட வரலாற்றுச் சூழலில் அத்தகைய பிம்பங்களைக் கட்டமைக்க முடிவதில்லை என்பதற்கு அண்மைய எடுத்துக்காட்டு அன்னா ஹசாரே. அவரைச் சுற்றி காந்தி போன்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க செய்யப்பட்ட முயற்சி பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது. இன்னொரு எடுத்துக்காட்டு நரேந்திர மோடி. அவரைச் சுற்றி ஒரு பிம்பத்தைக் கட்டியமைக்கச் செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியும் அதே வேகத்தில் உடைக்கப்படுகிறது.)

காந்தியின் உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு, ஒத்துழையாமை, வரி கொடா இயக்கம் போன்ற அறவழிப் போராட்டங்கள் அனைத்தும் மக்களின் போராட்ட உணர்வுகளுக்குப் பெரும் வடிகாலாய் அமைந்தன. அதே சமயத்தில் மக்களின் போராட்டங்கள் தமது கட்டுப்பாட்டை மீறிப் போய்விட்டால் அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு மாபெரும் ஆபத்தாகப் போய்விடும் எனப் பிரிட்டிசாரை மிரட்டுவதற்கான செயல் யுக்தியாகவும் அவற்றைக் காந்தி கையாண்டார். மக்களின் போராட்டங்கள் காந்தியின் தலைமையையும் மீறி எழுச்சி பெற்றபோதேல்லாம் காந்தி அவருடைய அறவழிப் போராட்டங்களையும் கூடக் கைவிட்டார். ‘மக்கள் இன்னும் சுய-ராஜ்யம் அடைவதற்குப் பக்குவப்படவில்லை’, ‘சுய-ராஜ்யம் எனது மூக்கில் நாறுகிறது’ என்றெல்லாம் கூறி மக்களது எழுச்சிமிகு போராட்டங்களைக் காந்தி இழிவுபடுத்தினார்.

அப்பொழுது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியபத்தியத்திற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று, காந்தியின் தலைமையிலான அறவழிப்போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்குவது; இரண்டாவது, காங்கிரசின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது.

முதலாவது வழியில் காந்தியின் அறவழிப் போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கினால் அது மக்களின் எழுச்சிமிகு போராட்டங்களுக்கு வழி வகுத்துவிடும். அப்பொழுது மக்கள் கையில் அதிகாரம் சென்று விடும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் தமது ஆட்சியதிகாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் தொழிற்துறை, பெரும் தோட்டத்தொழில்கள், வணிகம் ஆகியவற்றில் தாம் வைத்துள்ள அனைத்து உரிமைகளையும், மூலதனங்களையும் இழந்து விட்டு அந்நாட்டு முதலாளிகள் வெறுங்கையுடன் தமது நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.

காந்தியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் இரண்டாவது வழியில் சென்றால், இந்தியாவில் உள்ள தனது ஆட்சியதிகாரத்தை மட்டும்தான் இந்தியப் பெரும் முதலாளிகளுக்கும், ஜமீந்தார்களுக்கும் பிரிட்டிஷார் விட்டுத் தர வேண்டியிருக்கும். மற்றபடி இந்தியாவில் உள்ள தமது மூலதனங்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும், தமது சுரண்டலையும் தொடர முடியும்.

காந்தியின் அறவழிப் போராட்டங்களுக்குப் பயந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் “பணிந்து” போனதன் காரணம் இதுதான். மற்றபடி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அறவழிப் போராட்டங்களை மதிக்கும் உயர்ந்த பண்பெல்லாம் எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை.

இப்பொழுது உள்ள ஆட்சியாளர்களுக்கு அவ்வாறு பயந்து பணிந்து போகக் கூடிய நிர்ப்பந்தங்களை அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் ஏற்படுத்த வேண்டுமானால் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். மாபெரும் மக்கள் இயக்கம் எதுவுமில்லாமல் தனி நபர்களால் நடத்தப்படும் உண்ணாவிரதம் போன்ற அறவழிப் போராட்டங்களால் இலட்சியத்தை அடைய முடியாது. அவை வெறும் அடையாளப் போராட்டங்களாகவே தொடரும்.

Pin It