தமிழினப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்து!
 
கொழும்பில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டைத் தடுத்து நிறுத்து!
 
கொழும்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதே!
 
தமிழினப் படுகொலைகளை மூடி மறைக்க துணை நிற்காதே!
 
என்ற கோரிக்கை முழக்கங்களுடன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தோழர் தியாகு, கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் "வெற்றி அல்லது வீரச்சாவு" என்ற முழக்கத்துடன் சாகும் வரை பட்டினிப் போரை நடத்தி வருகிறார்.
 
1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பெயரால் வடக்கு கிழக்கு மாகாண சபையே தீர்வென்று இந்திய அரசு திணித்தது. கடந்த மாதம் இலங்கையின் வட மாகாண சபை தேர்தல் நடந்து முடிந்து விட்டதையடுத்து, தமிழர் வாழ் பகுதிகளில் சனநாயகத்தை நிறுவி விட்டோமென்றும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் அங்கு நடந்த தமிழினப் படுகொலையை மூடி ம‌றைத்து விட‌லாமென்றும் சிங்க‌ள‌ அர‌சும், இந்திய‌ அர‌சும் திட்ட‌மிட்டு காய்க‌ளை ந‌க‌ர்த்தி வ‌ருகின்ற‌ன.

2009 ஆம் ஆண்டு போருக்கு பின், தமிழக மக்களிடம் ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு நிச்சயம் பெருகியிருக்கிறது. இன்றைய சூழலில், இனப்படுகொலை நாடான‌ இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் இந்திய அரசை நோக்கி முன் வைத்திருக்கின்றன. அ.தி.மு.க‌ , தி.மு.க‌., ம‌.தி.மு.க, சி.பி.ஐ., விடுத‌லை சிறுத்தைக‌ள், பா.ம‌.க‌, ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் க‌ட்சி, எஸ்.டி.பி.ஐ. தே.மு.தி.க‌.,ஆகிய‌ அனைத்து க‌ட்சிக‌ளும் ம‌ற்றும் பா.ஜ‌.க‌ போன்ற‌ க‌ட்சிக‌ளும், காங்கிர‌சில் இருக்கும் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராசன் ஆகியோரும் இக்கோரிக்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாடோடு தான் இருக்கின்றனர் .அது மட்டுமின்றி, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு பிறகு, புதிய எழுச்சியாக மாணவர் சமூகமும் இக்களத்தில் இணைந்திருக்கிறது.
 
காவல் துறை அனுமதி மறுத்தும் தமிழக உயர்நீதிமன்றம் தோழர் தியாகுவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இசைவளித்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பொது இடங்களில் இப்படியான பட்டினிப் போராட்டங்கள் நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்றதில்லை. தொடக்கமே வெற்றிக்கான முகாந்திரத்துடன் களமிறங்கியிருக்கும் தோழர் தியாகுவின் இப் போராட்டம் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை தோற்றுவிக்கத் தான் போகிறது.
 
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து இந்திய அரசை மறிப்பது அல்லது தன் உயிரை தமிழ்ச்சமூகத்திற்கு கையளிப்பது என்ற இரண்டே முடிவுகளை நோக்கித் தான் தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியிருக்கிறது. வழக்கமான‌ பட்டினிப் போராட்டங்களைப் போல் ஒரு அடையாளப் போராட்டமாக‌ தியாகுவின் இப்போராட்டம் முடிவடையப் போவதில்லை.காவல்துறையால் கைது செய்யப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாலும் அங்கிருந்து தனது உணவு மறுப்பு போராட்டத்தை தொடர்வதென தோழர் தியாகு முடிவு செய்திருக்கிறார். அடையாளப் போராட்டங்களை மட்டுமே நடத்திப் பழகிப் போன‌ ந‌ம‌க்கு, இந்த‌ அக்டோப‌ர் மாத‌ இறுதியில், இரண்டில் ஒரு செய்தியை மட்டுமே எதிர்நோக்க விருக்கிறோம்.அதில் ஒன்று இப்போராட்டத்தின் வெற்றி அல்லது தோழர் தியாகுவின் வீர‌ச்சாவு. இரண்டில் எதுவாக இருப்பினும் தமிழகத்தின் 21 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் அது ஒரு புதிய துவக்கமாக இருக்கப் போகின்றது.
 
ஒட்டு மொத்த தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இக்கோரிக்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாடுடன் இருக்கும் சாதகமான இப்புறச்சூழலை பயன்படுத்தி, நீதியை வென்றெடுப்பதில் முனைப்புடன் செய‌ல்ப‌ட‌ வேண்டும். போராடினோம், கலைந்து செல்வோம், அதன் மூலம் முன்னகர்த்துவோம் என்ற வழமையான சித்தாந்தங்களை ஊடறுத்து, இக்கோரிக்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு அர‌சிய‌ல் இய‌க்க‌ங்க‌ளும் ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளும் முற்போக்கு சனநாயக சக்திகளும் த‌ங்க‌ள‌து முழு ப‌ல‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி, போராட வேண்டும். சிறுதுளி பெருவெள்ள‌ம் என்று சிற்சில வெற்றிகளை குறிக்கோளாக்காமல், க‌ண்முன்னே திர‌ண்டிருக்கும் சூழ‌லை ப‌ய‌ன்ப‌டுத்தி வெற்றி ஒன்றே ந‌ம‌து ஒரே இல‌க்கு என்று காட்டாற்று வெள்ள‌மாக‌ அணிதிர‌ள்வோம்.
 
வெற்றி நம் அருகிலிருக்கிற‌து! வ‌ர‌லாறு ந‌ம் ப‌க்கமிருக்கிற‌து!
 
- சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்.

Pin It