எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் ஒருவன் தப்பும் தவறுமாக தமிழில் பேச முயன்றுவிட்டாலே தமிழ் வளர்ந்து விட்டதாக நினைத்து வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் தமிழர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலும் உணர்ந்து கொண்டதாகவே கருதுகிறேன். என் சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதமாகவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. யின் சமீபகால செயல்பாடுகளும் அமைந்து வருகிறது. எந்த சூழலிலும், எந்த முகமூடியோடும் தமிழகத்திற்குள் காலூன்ற முடியாமல் திணறும் சங்பரிவார் கும்பல் தமிழகத்தை நோக்கி வேகமாக காய் நகர்த்தி வருகிறது. அதற்காக அவர்கள் தற்போது எடுத்திருக்கும் ஆயுதம் தான் தமிழ். அதனால் தான் திருச்சி இளந்தாமரை மாநாட்டில் மலைக்கோட்டை என்பதை 'மலை கொட்டை' என்று மோடி தமிழை கொலை செய்ததற்கே 'மோடி தமிழில் பேசினார் ... தமிழ் வாழ்க!' என்று முகநூலில் பதிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழர்கள் இருக்கும் வரை மோடி மஸ்தான்கள் அல்ல, கேடி மஸ்தான்களே தமிழர்களை வீழ்த்திவிடுவார்கள். வெளிநாட்டுக்காரன் ஒருவன் தமிழ்நாட்டில் வந்து பிச்சை எடுக்கவேண்டும் என்றால் தமிழில் தான் பிச்சை எடுக்க வேண்டும். அப்போது தான் அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்துகொண்டு பிச்சை போடுவார்கள். இதுவே வெளிநாட்டிலோ அல்லது வெளிமாநிலத்திலோ சென்று அந்தந்த மொழியில் பிச்சை கேட்டால் அந்தந்த மொழிக்காரன் எவனும் தம் மொழி வளர்வதாக எண்ணி பெருமை கொள்ளமாட்டான். ஆனால் தமிழன் மட்டும் பெருமை கொள்கிறான். இது எந்த மாதிரியான தமிழ் பற்று என்று புரியவில்லை.

narender_modi_rss_640

தலைப்பு திசை மாறுவதாக உணர்கிறேன் மன்னிக்க... என் சந்தேகத்தை நாடாளுமன்றத்தில் பேசிய உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி தருண் விஜயின் பேச்சும், திருச்சி இளந்தாமரை மாநாட்டின் தீர்மானங்களும் உறுதி செய்கின்றன. அந்நிகழ்வுகள் தான் நம்மை எச்சரிக்கின்றன..

தமிழை இரண்டாவது தேசிய மொழி ஆக்குங்கள் :

'இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழும் நம்மில் பலரும், ஒருவிதமான அகங்காரத்திலேயே இருந்துவிட்டோம். அதனால்தான் நம் சொந்த நாட்டில் பேசப்படும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் அருமை பெருமைகளையும் அறிந்துகொள்ளவில்லை. ஏழு கடல்களையும் மலைகளையும் தாண்டி தமிழ் மொழியின் தாக்கம் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. நம் நாட்டில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய தமிழ் மொழிக்கு, உரிய மதிப்பையும் உயரிய நிலையையும் நாம் கொடுக்கத் தவறி விட்டோம். அதனால், இப்போதாவது விழித்துக்கொள்வது நல்லது. இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழைப் போதிக்கும் திட்டங்களை நாம் வகுத்தாக வேண்டும். தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்' என்று தமிழ் மீதான திடீர் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யும், இந்திய அரசால் நான்குமுறை தடை செய்யப்பட இயக்கமான ஆர்.எஸ்.எஸ் சை சேர்ந்தவருமான தருண் விஜய். பி.ஜே.பியை சேர்ந்த ஒருவர், அதுவும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தமிழின் பெருமைகளை இப்படி உயர்த்தி பேசி இருப்பதால் உலக தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை உண்டாகிவிட்டதாக சிலர் பெருமை பேசுகிறார்கள். அவருக்கு வாழ்த்து செய்தியை அனுப்புகிறார்கள்.

இந்த தருண் விஜய், இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஹிந்தி மொழி ஆலோசனை குழுவில் இவர் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ வார இதழான 'பாஞ்ஜன்யா' வின் ஆசிரியராக 1986 முதல் 2008 வரை இருந்திருக்கிறார். 'இந்து - இந்தி - இந்தியா' என்ற கொள்கையை தாங்கி கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸில் முக்கிய பங்காற்றிய தருண் விஜய்க்கு திடீர் என்று தமிழ் காதல் வருவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வியில் தான் இந்துத்துவவாதிகளின் சூட்சமம் அடங்கியிருக்கிறது. இதை தான் தமிழ் பார்ப்பன ஊடகங்கள் வானளாவ புகழ்ந்து பேசுகிறார்கள். 'ஆர்.எஸ்.எஸ். காரரே தமிழின் பெருமைகளை பேசுகிறாரே, தமிழ் வாழ்க' என்று சிலாகித்து எழுதுகிறார்கள். ஒருவேளை நாளைக்கே ராஜபக்சே தமிழ்தான் உலகிலேயே சிறந்தமொழி, தமிழை உலகத்தின் முதல் மொழியாக அறிவிக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டால் ராஜபக்சேவுக்கே தமிழ்ப் போராளி, பட்டம் கொடுத்து விடுவார்கள் போலிருக்கு.

பி.ஜே.பி இளந்தாமரை மாநாட்டு தீர்மானம் :

இலங்கையில் சமீபத்தில் நடந்த வடக்கு மாகாண தேர்தலில் ஆட்சி அமைக்க தேர்வு பெற்றுள்ள விக்னேஸ்வரனுக்கு இம்மாநாடு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைய உள்ள அரசின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு பணிகளை விரைவாக செய்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்வது. இலங்கையில் 13–வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

கச்சத்தீவு நமது சொத்து. கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா, இந்திராகாந்தியால் தாரைவார்த்தபோது வாஜ்பாய் பாராளுமன்றத்தில் அதை எதிர்த்தார். கச்சத்தீவில் நமக்கு உள்ள உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது. தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ். க்கு திடீர் தமிழ்ப்பாசம் ஏன்?

தமிழக அரசியல், மற்றும் சமூகத்தை பொருத்தமட்டில் பெரியார் ஒரு சகாப்தம். அவரை கடந்து தமிழக வரலாற்றை தீர்மானிப்பதே கடினம் என்பது போல அவரின் உழைப்பும், சமூகத்திற்காக தன் மொத்த வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்ட சமூக பொறுப்புமே அதற்கு காரணம். இந்நாட்டில் எத்தனையோ மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட முசாபர் கலவரம் கூட அதற்கு சாட்சி. ஆனால் தமிழகத்தில் அப்படி எவ்வித அசாம்பவிதங்களும் நடந்ததே கிடையாது. அந்த அளவுக்கு இங்கே இந்து - முஸ்லிம் ஒற்றுமை பேணப்பட்டு வருகிறது. ஆரியப்புளுகுகளையும், மனுதர்மத்தையும் நாறு நாராக கிழித்து தொங்கப்போட்டவர்கள் இருவரே. ஒருவர் புரட்சியாளர் அம்பேத்கர், மற்றொருவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அதோடு மட்டுமின்றி கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து இந்தியாவிலேயே போராட்டம் வெடித்தது தமிழகத்தில் மட்டும்தான். அதை வீரியத்தோடு முன்னெடுத்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியார் பிறந்த மண்ணுக்கு இந்துத்துவவாதிகளால் அவ்வளவு எளிதில் கால்வைத்து முடியுமா? அதற்குத்தான் தேவைப்படுகிறது இந்த தமிழ் முகமூடி.

modi_327பல ஆண்டுகளாக தமிழகத்தில் எப்படியாவது ஒரு அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும் என்ற பா ஜ கவின் கனவு இன்று வரை நினைவேறாமலேயே இருந்து வருகிறது . தமிழகத்தில் நடந்த சில தேர்தல்களில் திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்த பிறகும் தங்களுக்கான ஒரு நிரந்தரமான வாக்கு வங்கியை உருவாக்க முடியாத சூழலில் ,பா ஜ க வினர் தங்களை தமிழ் மொழி மீது அக்கறை கொண்டவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். NCERT பாட புத்தகத்தில் தமிழக மாணவர்களையும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்று இருந்த கார்ட்டூன் தொடர்பாக பா ஜ க , அல்லது அதன் தோழமை இந்து அமைப்புகள் மேற்கொண்ட போராட்டங்கள் என்ன ? அதோடு மட்டுமின்றி தமிழ் , தமிழ் தேசியம் என்ற பெயரில் சில தமிழ் அமைப்புகள் பெரியாருக்கு எதிரான கருத்துகளை தமிழ்நாட்டில் பரப்புரை செய்ததின் விளைவு தான் , பெரியாரிய எதிர்ப்பு கொள்கை கொண்ட பா. ஜ. க இப்போது இந்துதுவதிற்கு வலுசேர்க்க தமிழ் முகமுடியை அணிந்து கொள்ள துடிக்கிறது.

எந்த காலத்திலும் ஈழத்தமிழர்கள் பற்றியோ, தமிழக மீனவர்கள் பற்றியோ கவலை கொள்ளாத பி.ஜே.பி இன்று தன்னுடைய மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் தீர்மானம் நிறைவேற்றுகிறது என்றால் அதன் தமிழர்ப் பாசத்திலும், தமிழ்க்காதலிலும் உள்ள உள்ளரசியலை நாம் உற்று நோக்கத்தான் வேண்டும். வட மாநிலங்களிலே காங்கிரசுக்கு நிகராக உள்ள பி.ஜே.பி தென் மாநிலங்களில் கால் பதிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழகத்திற்குள். அருகிலே இருக்கும் கர்நாடகாவில் கூட பி.ஜே.பியால் ஆட்சி அமைக்க முடிகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு MLA சீட் கூட வாங்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் காங்கிரசும், பி.ஜே.பி யும் ஒரு மொழி ஆட்சி கொள்கையை கொண்டவர்கள். ஆனால் திராவிட இயக்கங்களால் தமிழகத்தில் மாநில சுயாட்சி உரிமை முழக்கம் உருவானது. ஈழம் பற்றி எரிந்துகொண்டிருந்த போதே, தமிழகம் ஈழத்தமிழர்களுக்காக கொதித்தெழுந்த போதே எவ்வித சிறு சலசலப்பையும் காட்டாமல் மவுனம் காத்துக் கொண்டிருந்த பி.ஜே.பி இன்று ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறது என்பது ஏமாற்றுவேலை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? தமிழகத்தில் உருவாக்கி இருக்கும் காங்கிரசுக்கு எதிரான மனோநிலையை அறுவடை செய்ய பி.ஜே.பி முயல்கிறது என்பதை தவிர இதற்கு வேறேதும் காரணமிருக்க முடியாது.

கடந்த காலங்களில் தமிழகத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியின் ஆதரவோடு தான் மத்தியில் ஆட்சி அமைந்திருக்கிறது. தமிழகத்தில் செல்லாக்காசான பி.ஜே.பி.யோடு கூட்டு சேர திராவிடக் கட்சிகள் எதுவும் தயாராக இல்லாத நிலையில், தமிழ்தேசியம் பேசும் சிலர் காங்கிரஸ் எதிர்ப்பில் பி.ஜே.பி யை முன்னிறுத்த துணிவதை பி.ஜே.பி யும், ஆர்.எஸ்.எஸ்சும் வெகுவாக ரசிக்கிறார்கள். இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் இயக்கங்கள் தமிழகத்தில் தம் கிளையை தொடக்கி கொள்ளவும், தென் மாநிலத்தில் குறிப்பாக மதக்கலவரம் அற்ற தமிழகத்தில் பிரிவினை உணர்வை தூண்டி அதன் மூலம் தன்னுடைய பாரத கொள்கையை விரிவாக்கி கொள்ள முயல்கிறது. காங்கிரசின் இரண்டகத்தால் தமிழகம் கொதித்தெழும் போதெல்லாம் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் பி.ஜே.பி தலைவர்கள், காங்கிரஸ் எதிர்ப்பை பி.ஜே.பி ஆதாரவாக மாற்ற முயன்றதை தவிர தமிழர்களின் நலன்களுக்காக சிறு துரும்பையும் அவர்கள் கிள்ளிப் போட்டதில்லை. அதே போல தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே தமிழக பிரச்சனையை கூட்டாக முன்வைக்கும் போதே அல்லது நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சனை எழும் போதே அதை அவர்கள் 'காங்கிரஸ் எதிர்ப்பு தங்களுக்கு சாதகம்' என்றளவிலே கையாண்டு வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானாலும், அரசியல் கட்சி தொடங்க வேண்டுமானாலும் 'தமிழ், தமிழர் உரிமை' என்பதை பெயரளவிலாவது கொண்டிருக்கவில்லை என்றால் அவர்களால் இங்கே கட்சி நடத்த முடியாது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேட முனைபவர்களுக்கு கூட 'தமிழ் தேசிய போராளி' பட்டம் கொடுக்கிறார்கள் தமிழர்கள். 'என்னதான் ஒருவன் சாதி வெறியனாக இருந்தாலும், மத வெறியனாக இருந்தாலும் அவன் தமிழ் மொழியை உயர்த்திப் பேசினாலோ, ஈழத்தமிழர்களுக்காக அறிக்கை கொடுத்துவிட்டாலோ அவன் புனிதனாகிவிடுகிறான்'. இது தமிழகத்தின் சாபக்கேடு. இந்தி மொழிக் கொள்கையிலோ, மூன்று தமிழர்கள் தூக்குதண்டனை விவகாரத்திலோ, கூடங்குளம் அணுஉலை விவகாரத்திலோ, முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற தமிழர்களின் இத்யாதி, இத்யாதி பிரச்சனைகள் எதிலும் காங்கிரசுக்கும், பி.ஜே.பிக்கும் ஒரே பார்வை தானே ஒழிய வேறல்ல. இந்தியாவில் பி.ஜே.பியை ஆட்சிக்கு கொண்டுவர, மோடியை முன்னிறுத்துகிறார்கள். ஆனால் மோடியோ 'நான் ஒரு இந்து தேசியவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்' என்கிறார். இந்து தேசிய பெருமை பேசிக்கொண்டு தமிழகத்தில் கால்வைக்க மோடிக்கோ, அவரது அல்லக்கைகளுக்கோ துணிவில்லை. அதனால் தான் அவர்கள் தமிழ், தமிழ்தேசிய பெருமை பேசிக்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனையாளர் தோழர் வே.மதிமாறன் அவர்களிடம் கேட்டதற்கு 'தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேரெதிர் கொள்கையை கொண்டுள்ள பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இந்துமதத்தை தீவிரமாக தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதும், அம்பேத்கரே ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு வந்திருக்கிறார் என்று புளுகுவதும், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அம்பேத்கர் மீது கொண்டுள்ள அபிரிமிதமான நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை தன்வயப்படுத்தும் யுக்தியை போல, தமிழர்கள் தமிழ் மொழி மீது வைத்திருக்கும் பற்றை பயன்படுத்தி தமிழகத்திற்குள் நுழையும் சந்தர்ப்பவாத முயற்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. இன்று தருண் விஜய் தமிழை உயர்த்தி பேசிவிட்டார், மோடி தமிழில் பேசிவிட்டார் என்று பெருமை கொள்பவர்கள் மோடி சமஸ்கிருதம் கலக்காத தூயத்தமிழில் சிறுபான்மை பெண்களின் வயிற்றை கிழித்து வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கொல்வோம், பாபர் மசூதியை இடித்ததை நியாயப்படுத்தி ராமருக்கு கோவில் கட்டுவோம், இந்தியாவை இந்து தேசமாக அறிவிப்போம்' என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?' என்று எதிர் கேள்வி எழுப்புகிறார்.

மோடி மஸ்தான் வித்தைக்காரர்கள் எதையும் செய்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தீவிர பார்ப்பனிய கண்ணோட்டம் கொண்டவர்கள் தமக்கு உடன்பாடில்லாத கொள்கையை கூட தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துவார்கள் என்பதையே இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்...

உணர்ந்து கொள்ளுவார்களா தமிழர்கள் ???

- தமிழன் வேலு

Pin It