தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கிய கடல் கனிம மணல் கொள்ளை குறித்த ஆரவாரம் இன்னும் அடங்காத சூழலில், தமிழக அரசு அந்த ஆய்வுக் குழுவின் அறிக்கையை நாட்டு மக்களின் பார்வைக்கு திறந்த வெளிப்புத்தகமாக இன்று வரை வைக்காதபோதே, மேலும் நான்கு மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆய்வுகளின் இறுதியாக, அரசின் கனிம மணல் கொள்கை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்து விட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வில் கண்ட முறைகேடுகளின் அடிப்படையில், எந்த நடவடிக்கைகள் எடுக்காத சூழலில், அரசு மீண்டும் உள்நோக்கத்துடனே செயல்படுவது போலத் தோன்றுகிறது. தமிழக அரசு அமைத்த ஆய்வுக்குழு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கடலோர கிராமங்களுக்கும் கட்டாயமாக வரவேண்டும். (இடிந்தகரை, கூத்தென்கழி, உவரி உட்பட), போராட்டக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தக் கிராமங்களுக்கு வருவதை தவிர்க்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் மக்கள் ஆய்வுக்குழுவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கையில், ஆனால் இங்கே நடப்பதோ!

கனிம மணல் கொள்ளை நடந்த தடயங்கள் முற்றிலும் அழிப்பு !

கடலோரங்களில் கனிம மணல் கொள்ளை நடந்த தடயங்களை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். (மணல் மேடுகள், மணல் குன்றுகள் அழிக்கப்பட்ட சுரங்கக் குழிகள் மூடப்பட்டு, நிரப்பப்பட்டுவிட்டன, அவைகள் அனைத்தும் சமதலங்கலாக மாற்றப்பட்டுவிட்டன. கடலோரத்தில் பசுமைவனச்செடிகள் நட்டுவைக்கபட்டுள்ளன. கடலுக்குள் கொட்டப்பட்ட நச்சுக் கழிவுகள் காணாமல்போயின. கடல்நீரை உறிஞ்சுவதற்கு அமைக்கப்பட்ட குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு பயன்படுத்தப்பட்ட குழாய்கள் இருந்த தடயங்கள் என்று எதுவும் இன்று இல்லை). கனரக ஊர்திகள் மாயமாகிப்போய் வேறு சில கனரக சரக்குந்துகள் நள்ளிரவுகளில் அவர்களின் ஆலைகளுக்குச் சென்று மிச்சம்மீதி இருக்கும் கொள்ளையை எடுத்து நள்ளிரவிலே, ஊர் உறங்கும்போது பதுக்கிவருகின்றன. அரசே, மணல் கொள்ளையர்களுக்கு போதுமான காலக்கெடு கொடுத்து அரசு ஆய்வுக்குழு வருமுன் தடயங்களை அழித்துவிட அனைத்து உதவிகளையும், பாதுகாப்புகளையும் செய்து வருகிறார்கள்.

கடல் கனிம மணல் நிறுவன அதிபர் வி. வைகுண்டராஜன் மகனின் திருமணம் சென்னையில் நிம்மதியாக, ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன், அரவணைப்பில் நடந்து முடிந்த பிறகு, அந்த வார இறுதியில் திசையன்விளை கீரைக்காரன்தட்டு கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடந்து முடிந்த மறுநாள் தான் தமிழக முதல்வர் அரசு அமைத்த ஆய்வுக்குழுவை அழைத்து, அவர்கள் தயாரித்து வைத்திருந்த அந்தக் குழுவின் ஆய்வு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு, வி.வைகுண்டராஜன் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம், அவர் தலைமறைவு என்று சொல்லி சில ஊடகச்செய்திகள் முகநூல் வழியாக வந்த பிறகு தான், ககன்தீப்சிங்பேடி தனது திருத்திய, முதல்வரின் ஆலோசனைகள் அடங்கிய, திருத்தப்பட்ட அறிக்கையை முதல்வரிடம் ஒப்படைக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமீறல்கள், முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்படும் அந்த அறிக்கை, இன்றுவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை. அது அரசின் இரகசிய அறிக்கையாகவே இன்றுவரை உள்ளது. அரசின் பதுங்குக்குழியில் அது உறங்கிக்கொண்டிருப்பது என்பது கொலை செய்தவர்கள், பாலியல் வன்முறை செய்தவர்கள் அந்தத் தடயங்களை அவசரஅவசரமாக அழிக்க அரசே காலக்கெடு கொடுத்துள்ளது போலாகும்.

நெல்லை மாவட்டக் கடலோரங்களில் தான், இந்த மணல் மாபியாக்களின் கொட்டத்தை முற்றிலும் பார்க்கமுடியும். இங்கே இருந்த மணல் வளங்களிலே தான் இவர்கள் வளர்ந்து கொழுத்தார்கள். ஊடகத்துறையில் பங்குதாரர்களாக மாறினார்கள். கல்வித்தந்தையர்களாக மாறினார்கள். அரசையே, காவல் துறையையே நீதித்துறையையே, ஆளும்வர்க்கத்தையே தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டார்கள். அவர்கள் அந்த செல்வாக்குப் பெற்றதற்கு காரணமாக இருந்தது இந்த நெல்லை மாவட்ட கடற்கரையோரங்கள்தான். இவர்கள் கொழுத்துப்போன வரலாறுகள் குறித்த முதல்கட்ட ஆய்வே இந்த நெல்லை மாவட்ட கடற்கரை மண்ணில் இருந்துதான் தொடங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு ஏதோ நாடகமாடி மக்களை ஏமாற்றி, தடயங்களை முற்றிலும் அழிக்க துணைசென்று, யாரை திருப்திபடுத்தவோ, எதற்காகவோ இங்கே இந்த சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றி வருகிறது. 

நெல்லைக் கடலோரத்தை கலவர பூமியாக்கத் துடிக்கும் மணல் கொள்ளையர்கள்;

தூத்துக்குடி மாவட்டத்திலும், இந்த மணல் கொள்ளையினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் பிறசமூகத்தைச் சார்ந்த ஏதுமறியா, இந்த பிரச்சனைகளுக்கு தொடர்பே இல்லாத மக்களுக்கு, பணம் கொடுத்து, உணவுப் பொட்டலங்கள் கொடுத்து, மதுவகைகள் பருகச்செய்து பெருங்கூட்டமாக அழைத்து வந்து கடல் கனிம மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக ஊடகங்களில் பேட்டியும், அரசு குழுவிடம் மனுக்களும் கொடுத்தார்கள். அதுபோல, தற்போது, திருநெல்வேலி மாவட்டத்திலும், தன் கையை வைத்து தன் கண்களையே குத்துவதுபோல, நெல்லை மாவட்டக்கடற்கரை கிராம மீனவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி, அவர்களில் சிலருக்கு பணம் கொடுத்து, மாதச்சம்பளம் கொடுத்து, மணல் ஆலைகளினால் வளர்த்தெடுக்கப்பட்ட, ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சிறு குழுவினர், இப்போது, இந்த அரசு அமைத்திருக்கிற ஆய்வுக்குழு நெல்லை மாவட்டத்திற்கு வருமுன்னரே, இந்தப் பகுதிகளில் அச்சத்தையும், பீதியையும் உண்டாக்கி, இரத்தக்களறியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அப்படி ஓன்று அல்லது பல நிகழ்வுகளை நிகழ்த்திவிட்டால், சட்டம் ஒழுங்கைக் காரணங்காட்டி, அந்தப் பகுதி கலவரப்பகுதியாக மாறிவிட்டது. ஆய்வுக்குழு அங்கே சென்றால், ஆய்வுக்குழுவிற்கு பாதுகாப்புத்தர முடியாது என்று ஆய்வுக் குழுவை, அந்த மணல் கொள்ளையை நேரடியாக பார்வையிடாமல், அந்தக் குழுவை, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலே முடக்கிவிடலாம். கூடவே, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தையும் காரணங்காட்டி, கனிம மணல் ஆய்வுக் குழுவை நெல்லையிலே முடக்கி, ஆய்வை முடித்துக் கொள்ள வைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கலவரத்தை தூண்டத் தொடங்கி இருக்கிறார்கள். அதன் வெளிபாடுதான், வெள்ளோட்டம் தான் இடிந்தகரையில் கடந்த 19.09.2013 அன்று இரவு இரு குடும்பங்களுக்குள் நடந்த வெட்டுக்குத்துச் சண்டையின் தொடக்கம்.

ஒரே கல்லில் இரு மாங்காய்களைப் பறித்துவிடலாம் என்றத் திட்டம் தான் உளவுத்துறையின் திட்டம். கடல் மணல் கொள்ளைக்கு எதிராக கிளம்பும் சக்திகளையும், மக்களின் எழுச்சிகளையும் தடுத்து, ஆய்வுக்குழுவையும் தடுத்து, தங்களது மணல் கொள்ளையைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தீட்டிய திட்டம் தற்போது உளவுத்துறையின் கைங்கரியத்தால், இடிந்தகரையில் பிள்ளையார்சுழி போடப்பட்டு, இந்தக் குடும்பச்சண்டையில் இழித்தவாயர்களான போராட்டக்குழுவையும் இணைத்து, மக்களை துன்புறுத்தி போராட்டத் திற்கு நிதி பிரித்ததாக பொய்வழக்கு திருத்தி புனைந்து, ஊருக்குள் இருக்கும் பழைய கட்சி மனப்பான்மையை தூண்டிவிட முயற்சிக்கும் அனைத்து சதிவேலைகளும் தற்போது இடிந்தகரையில் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

ஆய்வுக்குழுவிற்கு பின்னணியில் முகத்திரை அணிந்து மறைந்து நிற்கும் அணுசக்தித் துறை.

தமிழக அரசு அல்லது தமிழக அரசு அதிகாரிகளின் மறைமுக ஆதரவோடு தான், மத்திய உளவுத்துறையின் மெகா திட்டத்தில் தான், இது நாள் வரை கிடப்பில் போடப்பட்டிருந்த கடல் கனிம மணல் கொள்ளைப் பிரச்சனை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மீனவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக கூடங்குளம் அணுஉலைப் பிரச்சனைக்கு எதிராக போராடி வருகிறார். அவர்களது ஒற்றுமையை, நாம் பல உத்திகளைக் கையாண்டும், வீழ்த்த முடியவில்லையே என்று அங்கலாய்க்கும் மத்திய, மாநில உளவுத்துறைகள், தமிழக அரசும், முதல்வரை பெங்களூரு வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள, மத்திய அரசோடு கொஞ்சம் இணக்கம் காட்டவும், தேர்தலுக்கான நிதியை மத்திய, மாநில கட்சிகள் இந்தக் கடல் மணல் கொள்ளையர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும், தற்போது தமிழகத்தின் ஆளும் கட்சிக்கு மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற வெறுப்பைச் சமாளிக்கவும், சரி செய்யவும் “வந்தால் மலை, போனால் தலைமுடி” என்கிற அடிப்படையில் தற்போது, தங்களது இறுதிக்கட்ட சதிவேலைகளில் இறங்கி இருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுஉலையை மத்திய அரசால் இயக்க முடியாமல் திணறிக்கொண்டு, விழிபிதுங்கிக் கொண்டு இருக்கும் போது, போராடுகின்ற மக்களின் அழுத்தத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல், முடங்கிப்போன அணுஉலையின் உண்மை நிலை குறித்து வெளியே சொல்ல முடியாமல் அல்லல்பட்டு, அசிங்கப்பட்டு, அதை இயக்கிவிட்டதாக சொன்னாலும், அதை எவரும் நம்பத்தயாராக இல்லாத சூழ்நிலையில், அதை இயக்க இன்னும் காலக்கெடு நீட்டிக்க முடியாது, அப்படி செய்தால், தங்களது குட்டுக்கள் எல்லாம் அம்பலம் ஆகிவிடும், இது அணுசக்தித்துறைக்கு, மத்திய அரசுக்கு அது பெரிய அவமானம் என்று கருதுவதாலும். இந்த கூடங்குளம் அணுஉலைப் பிரச்சனையில் தாங்கள் முற்றிலும் தோற்றுப்போய்விட்டோம் என்று மக்கள் நம்பத் தொடங்கிவிட்டால், இனி இந்தியாவில், இந்திய அரசு வேறு எங்கும் அணுஉலைகள் தொடங்க முடியாமல், காலூன்ற முடியாமல் போய்விடும் என்று கருதுவதால், கடல்மணல் கொள்ளையை முன்னிறுத்தி, மக்களை விலைபேசி, மக்களை அச்சுறுத்தி, பழைய குடும்பப்பகைகளைத் தூண்டிவிட்டு, ஆயுதங்கள் வழங்கி, நாட்டுவெடிகுண்டுகளை காவல்துறையின் அனுமதியுடன், ஒத்துழைப்புடன் தயாரித்துக் கொடுத்து, இறுதிக்கட்ட சதிராட்டத்திற்கு அணியமாகிவிட்டார்கள்.

இடிந்தகரையில் வெற்றிகரமாக அரங்கேற்றிய பிறகு, அடுத்ததாக, இதே பார்முலாவை, தற்போது கூட்டப்புளி கிராமத்திலும், சில நபர்களை விலைக்கு பேசி விட்டு, இடிந்தகரையைப் போன்றே, அங்கே இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் குடும்பப்பகையை கையில் எடுத்து, புகையவிட்டு, அவர்களை சீண்டிவிட்டு, தற்போது கூட்டப்புளியிலும் இரத்தக்களறி ஏற்பட கொம்பு சீவிவிட்டு சென்றிருக்கிறார்கள் கம்பெனிகளின் கைத்தடிகள். அதே பழைய பகை ஒன்றைத்தான், தற்போது மணல் கம்பெனியின் ஆலை இருக்கும் இடமான, அதிகமாக சுரங்கங்கள் தோண்டி, அதிகக் கனிம மணல் வெட்டி எடுத்த கிராமமான தோமையார்புரத்திலும், இப்படியான பழைய சிக்கலை இழுத்துவிட்டு, ஒரு மோதல் போக்கை உண்டுபண்ணி இருக்கிறார்கள். ஆகவே, தோமையார் புரத்திலும் இப்படி ஒரு வகையான அமைதியின்மையை, பிளவுபட்ட மனநிலையை உருவாக்கி விட்டிருக்கிறார்கள். எல்லா கிராமங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்த ஒரே பார்முலாதான் கடைபிடிக்கப்படுகிறது.

துண்டாடப்பட்ட கடலோரக் கிராமங்கள்.

திருநெல்வேலி மாவட்டக் கடலோர கிராமங்களில் உள்ள கடல் கனிம மணல் குன்றுகளை அத்துமீறி, சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததனால்தான், இவர்கள் பெரிய கொள்ளையர்களாக, கோடிகளில் புரள்பவர்களானார்கள். பெரிய ஜாம்பவங்களாக உருமாறினார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, ஆகிய இரண்டு சிறு கிராமங்களும் வெளியே வந்து கடல் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக சாட்சியம் கூற ஒருபோதும் வாய்ப்பே இல்லை. ஆகவே, கம்பெனிக்காரர்கள் அந்த இரு கிராமங்கள் குறித்து கவலைகொள்ளத் தேவையே இல்லை.

அடுத்ததாக இருக்கும், உவரி என்ற பெரிய கிராமம் மீனவர் அரசியலுக்கு பெயர் போன கிராமம், அங்கே சொல்லத் தேவையே இல்லை. தமிழக ஆளும் கட்சியின் கைப்பாவைகள், அடாவடிப் பேர்வழிகள், கம்பெனிகளின் நேரடி முகவர்கள் என்று சொல்லுகின்ற தாதாக்கள் நிறைந்த ஒரு புண்ணிய கிராமம், அங்கே கடல் மணல் கொள்ளையினால், ஊரே கடலுக்குள் போனாலும், புண்ணிய கோடி அந்தோணியார் கோவிலுக்கே அழிவு வந்தாலும், கடல் மணல் கொள்ளைக்கு எதிராக வாயே திறக்காத ஊர்தான் உவரி. ஆகவே, அந்தக் கிராமம் இந்தக் கொள்ளை குறித்து மௌனித்தே, மரணித்தே போகும். தற்போது இந்த கிராமத்தில் இருக்கும் தலைவர்கள் கனிம மணல் நிறுவனங்களால் எங்களுக்கு எந்தப் பாதிப்புகளும் இல்லை என்றும், அவைகளினால் தான் நாங்கள் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நேரடி சாட்சியம் கூறிவிட்டு வந்தவர்கள் இவர்கள்.

கூத்தென்கழி கிராமத்தை சொல்லவே வேண்டாம். 1980களின் இறுதியில் மணல் கொள்ளையர்கள் இந்த நெல்லை கடற்கரை மண்ணை மிதிக்க, அவர்களுக்கு பக்கபலமாக இருந்து, அவர்களுக்காகப் போர் புரிந்து, எதிரியின் ஆநிரைகளைக் கவருவது போல, அரசு நிலங்களை, மக்களின் நிலங்களைக் கைப்பற்றி, அவர்களின் எல்லைகளைக் காத்த காவலாளிகள். இன்று வரையும் சில பலரும் சேவகர்களாக இருந்து வருகிறார்கள். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யக்கூடாது என்கிற மனசாட்சி உறுத்தலுடன் விசுவாசமாக இருந்து கவுரமாக வலம் வருகிறார்கள். உடல் மண்ணுக்கு உயிர் வி.விக்கு என்று சில பலர் உயில் கூட எழுதி வைத்திருக்கிறார்கள். வெளியே முழக்கமும் இடுகிறார்கள். இன்னும் சிலர் முகவரி இல்லாத மொட்டைக் கடிதாசிகளை தென்மண்டல கனிம தொழிலாளர்கள் நல சங்கம் என்று பெயர் வைத்து ஊர்பேர் தெரியாதபடி கண்டனக்கடிதங்கள் அல்லது ஆதரவு மனுக்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடற்கரை கிராமம் ஒவ்வொன்றிலும் சமுதாயத் தலைவர்கள் என்கிற போர்வையில் சுற்றிவரும் பல பெருசுகளும் அண்ணாச்சிகளின் வீட்டு வைபவங்கள், கல்வி நிறுவனங்களின் நிகழ்வுகள் மற்றும் அனைத்து நல்ல காரியங்களிலும் கைநனைத்துக் கொள்பவர்களே இந்தச் சிறு கூட்டத்தினர்! இதில் விதிவிலக்கானவர்கள், நடுநிலைவாதிகள் என்று இந்தத் தீய சக்திகளுக்கு கொஞ்சம் அஞ்சுவாழ்பவர்கள் என பல நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள். இவர்களையும் வைத்துதான் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கிறது. பல தடைக்கற்களைத் தாண்டியும் வந்திருக்கிறது.!

பெருமணல் கிராமம் ஏற்கெனவே, மணல் கொள்ளையை எதிர்த்து போராடி, இழப்பைச் சந்தித்த சிறு கிராமம். சிறு கிராமம் என்றால் அச்சுறுத்துவதற்கு, மிரட்டுவதற்கு, விலைபோவதற்கு எளிது. ஆகவே, 1996 கார்னட் மணல் எடுப்பு தடுப்புப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தக் கனிம மணல் பிரச்சனையில் இருந்து இன்னும் அவர்கள் மீண்டு எழுந்தபாடில்லை. அந்த போராட்டப் பாதிப்பு நினைவுகளில் இருந்து மீண்டுஎழுந்து வருவதென்பது அவர்களுக்கு பெரும் முயற்கொம்பே! பெருமணல் என்றால், மணல் கொள்ளை போகும் இடம் எதுவெனில், பஞ்சல் கடற்கரைக் கிராமம். அங்கே தான், அன்று காணக்கூடிய அளவில், மணல் தேரிகள், மணற்குன்றுகள் இருந்தன. இங்கே தான் கடல்ஆமைகள் பெருமளவில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் களமாக, கருவறையாக இருந்தது.

கடல் மணல் குன்றுகள், கடற்கரையின் அருமை, அதன்தேவை மனிதர்களுக்கு மட்டுமல்ல, கடல்வாழ் உயிரினங்களுக்கும் சொந்தம் என்பதை இதன் மூலம் ஒருவர் உணர்ந்து கொள்ளலாம். கடற்கரை அவர்களின் சந்ததிகளுக்கும் தேவை என்பதை புரிந்து கொள்ளலாம். கூட்டப்புளி, பெருமணலின் துன்பத்தில் அன்றே அதிகம் பங்கெடுத்த பெரிய கிராமம். அதன் பிறகு, அவர்கள் மீண்டு எழுந்தாலும், மீண்டும் மீண்டும், அதே சிக்கல் தொடர்பாக 1999ஆம் ஆண்டில் ஊரில் பல பிளவுகள், மோதல்கள், இழப்புகள் (உயிர்ப்பலிகள் - கொலைகள்) அங்கேயும், கடல் மணல் கனிமப் பிரச்சனையில் ஊரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கின்றன. ஏனெனில், கூட்டப்புளி ஊருக்கு கிழக்குப் பகுதியிலும்,மேற்குப் பகுதியிலும் கடல் மணல் கொள்ளையர்கள் அதிக அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இடியாத கிராமத்தை இடித்துவிடப் பார்க்கும் சில புல்லுருவிகள்.

கூடங்குளம் அணுஉலைப் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இடிந்தகரை கிராமத்தை பல இடர்பாடுகள் சந்தித்திருக்கின்றன, அவைகளை ஏற்படுத்தியவர்கள் தாங்கள் நினைத்த கனவு நிறைவேறாத காரணத்தால் தவிடுபொடியானார்கள். சில தனிநபர்களின் சில்மிசங்கள், சில சமூக அமைப்புகளின் ஊசலாட்டங்கள் மற்றும் பேரங்கள், சில அரசியல் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் திரிபுவாதங்கள், சாதி, மத பிரிவினைவாதங்கள். சில உளவுத்துறை மற்றும் காவல்துறை கயவாளிகளின் ஊடுருவல்கள், அரசின் இலவசங்கள், கையூட்டுத் திட்டங்கள், ஆசைவார்த்தைகள், ஊராட்சி மன்றத் தலைவர்களின் விலைபோன நிகழ்வுகள், அரசின் கொலைவெறித் தாக்குதல்கள், அரசின் அடக்குமுறைகள், கைது நடவடிக்கைகள், சிறைக்கொட்டடித் துன்பங்கள், அலைக்கழிப்புகள், உயிர்த் தியாகங்கள், பெரும் பொருளாதார இழப்புகள், அடிப்படை வசதி மறுப்புக்கள், ஒட்டுக்கேட்டல்கள், ஊர்க்கட்சி மனப்பான்மைகள், ஒரே தெருவிற்குள் பிளவுகள், சண்டைகள் எல்லாம் அரங்கேறி, அவைகள் எல்லாம் தோற்றுப்போய் நிற்கும் வேளையில், இன்று இறுதிக் கட்டமாக, கடல் கனிம மணல் கொள்ளையர்களின் சட்டைப் பைகளுக்குள் கடைசியாக ஒளிந்து கொண்டு வந்து நிற்கிறது இந்திய அணுசக்தித்துறை மற்றும் மத்திய, மாநில அரசுகள்.

சொல்லப்போனால், அணுஉலை எதிர்ப்பில் இது இறுதியான உச்சகட்டப் போராகவே மாறிவிட்டது. இதில் வெற்றி பெறப் போவது யார் என்ற ஒரு உச்சநிலைக்கு வந்திருக்கிறது இடிந்தகரை கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம். இங்கே, இந்த இறுதிக்கட்டப் போரில், ஆளும் கட்சியைச் சார்ந்த சார்ந்த சிலர் “தென்மண்டல நாட்டுப்படகு மீனவர் சங்கம் என்கிற அடிப்படையில் செயல்பட்டு, கடல் மணல் கொள்ளையர்களின் பினாமிகளாய் செயல்படும் சிலர், கனிம மணல் பிரச்சனை தொடர்பாக, அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களில் இவர்கள் தான் அவர்களின் பி.ஆர்.ஓ.க்கள். கண் தெரியாத குருடர்களுக்கு வழிகாட்டும் குருட்டு வழிகாட்டிகள். இவர்கள் தான் அவர்களின் ஊடகத் தொடர்பாளர்கள், இவர்களின் எசமானர்கள் குறித்து, ஏதாவது அவர்களின் அட்டூழியங்கள் குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டால், இவர்களால் அவற்றை தாங்கிக் கொள்ள முடியாது. உடனே, மறுப்புச் செய்தி கொடுப்பார்கள். மாவட்ட ஆட்சியர்களிடம் சென்று மனுக்களும் கொடுப்பார்கள். காவல் துறையின் துணையுடனும், தனித்தும் சென்று வாதாடுவார்கள், அப்பாவிகளையும், சில கூலிக்கு மாரடிக்கும் கைக்கூலிகளையும் அழைத்துச் செல்வார்கள்.

இடிந்தகரையில் இவர்கள் தொடங்கி வைத்திருக்கின்ற இந்த நெருப்பு உடனே அணையுமா! அல்லது பற்றி கொழுந்து விட்டு எரியுமா? எரிந்து முற்றிலும் அது சாம்பலாகிப் போகுமா? அந்த வேள்வியில் இருந்து மக்கள் பிழைத்துக் கொள்வார்களா? இந்தப் சதிப்பொறியை முறியடித்து மக்கள் தப்பித்துக் கொள்வார்களா? மாறாக பொறியிலே சிக்கி மாண்டு போவார்களா? அல்லது அந்த சதியிலே வெந்து போவார்களா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். சில கிரிமினல்களை மற்றும் கடல் மணல் கொள்ளையர்களுக்கு சில பினாமிகளாக செயல்படும் கைத்தடிகளையும் கையில் எடுத்துள்ள உளவுத்துறைகள் இரட்டை சதம் அடிக்கக் காத்திருக்கிறன.

கனிம மணல் கொள்ளையர்களுக்கு அரசுகளின் கடைக்கண் பார்வை

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி எந்த குற்றவியல் நடவடிக்கையோ அல்லது தண்டனையோ இன்று வரை கனிம மணல்கொள்ளையர்கள் மீது எடுக்கப்படவில்லை. இது தவிர, மீண்டும், இந்த கனிம மணல் கொள்ளையர்கள் கடந்த 20.09.2013 அன்று மீண்டும் 13,000 மெட்ரிக் டன் கனிம மணலை தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்தி ஏற்றுமதி செய்துள்ளனர். இதையும், அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தான் அதிகப்படியான மணல் குவாரிகள், குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 53 குவாரிகளில், 51 குவாரிகள் வி.வி. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது, அதில் அண்மையில் 750 ஏக்கர் அதாவது 300 கெக்டர் நிலம் வி.வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டு மொத்த கனிம மணல் கொள்ளையும் திருநெல்வேலி மாவட்டத்தில்தான், இத்தகைய சட்ட விரோத, தேசவிரோத நிறுவனங்களால் கடந்த முப்பது ஆண்டுகளாக, அரசுத்துறை நிறுவனங்களின் ஆதரவோடு மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு கொள்ளைபோய்க் கொண்டிருக்கிறது என்பது இன்றைய தமிழக அரசுக்கு நன்கு தெரியும். இது தவிர, கடந்த 2007 ஆம் ஆண்டு டாட்டா நிறுவனம் டைட்டானியம் எடுப்பதற்கு இராதாபுரம், சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் சுரண்டுவதற்கு இந்தப் பகுதிக்கு வந்தபோது, டாட்டா கம்பெனியை இன்றைய தமிழக அரசியல் கட்சிகளின் துணையுடன் எதிர்த்து டாட்டா நிறுவனத்தை, அடித்து விரட்டியது வி.வி. குழுமம்தான். இந்தியப் பெருமுதலாளி டாடாவிற்கே டாட்டா காட்டினார்கள்.

டாடா ஏற்படுத்த நினைத்த டைட்டானியம் தொழிற்சாலையை, அந்தத் டைட்டானியம் கனிமத் தொழிலை இந்த மணல் கொள்ளையர்களே இன்று கையில் எடுத்து, அவர்கள் குழுமமே இப்போது தொடங்கி விட்டது. அதற்கு பொது விசாரணைக் கூட்டம் நடக்கும் போது, சில அனைத்துலக மீனவப் பாரம்பரிய சமூகப் போராளிகளே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆதரவுக்கரம் நீட்டிவிட்டு சென்றார்கள். இவர்கள் முன்னதாகவே, இந்த மீனவ சமுதாயத்தை நம்பி பாராளுமன்றக் களம் கண்டவர்கள். பின்னர், மணல் அண்ணாச்சி ஆசியுடன் கரகாட்டக்காரனை தங்களின் பாராளுமன்றத் தொகுதி பிரதிநிதியாக வெற்றிபெற வைக்க அரும்பாடுபட்டு மீனவர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றுக் கொடுத்துவிட்டு அண்ணாச்சிகளின் ஆசிர்வாதம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வரலாற்றுப் சமுகப் போராளிகள்”, இவ்வளவு களேபரத்திற்குள்ளும் இன்னும் வாய்பேசாமல் இருப்பதன் மர்மம் என்ன? என்பதை எவரும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை.

பல நேரங்களில் ஒட்டுமொத்த மீனவச் சிக்கல்களையும் அன்றே குத்தகைக்கு எடுத்து தீர்த்துவிட்டதாக அல்லது அன்றே அவற்றிற்காக போராடியதாக உரிமம் கொண்டாடும் சிலர், இந்தக் கடல் கனிம மணல் கொள்ளை குறித்து ஏன் பேசவில்லை என்று இந்த விவரமில்லாத ,பாமர மீனவர்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை. ஊடகங்களில் நேர்முகங்கள் கொடுக்கவில்லை. எல்லாமுமே புரியாத புதிராகவே உள்ளன.

கனிம மணலுக்காக சிறப்புப் பொருளாதார மண்டலம்.

தற்போது கரைகடந்த கடல் மணல் கொள்ளையர்கள், கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில், இராதாபுரம் தாலுகா திருவம்பலப்புரத்தில் சுமார் 166.66 ஹெக்டேர் பரப்பளவில், சுமார் 871 கோடி முதலீட்டில், சுமார் 8,250 திறமை, தகுதி நிறைந்த நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 15,900 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிட்டு கடலோர கனிம மணல் கொள்ளைக்காக, அதாவது டைட்டானியம் கனிமத்திற்காக, ஒரு சிறப்புப் பொருளாதாரமண்டலம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறார்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால், அவர்களுக்கு நிலம், நீர், காற்று, மின்சாரம், எல்லாமே இலவசம்தான். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றாலே அங்கே அன்னியர் எவரும் உள்ளே பிரவேசிக்கக் கூடாது என்பது தான் அதன் எழுதப்பட்ட, எழதப்படாத சட்டம். அவர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெறுவார்களாம், பின்னர், அவர்களே அனல்மின் நிலையம் மற்றும் காற்றாலைகள் மூலம், டர்பைன்களை இயக்கி மின் உற்பத்தி செய்து கொள்ளப்போகிறார்களாம். வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆலையின் பயன்பாட்டிற்குத் தேவையான குடிநீரை போதுமான அளவு உறிஞ்சி எடுத்துக் கொள்வார்களாம். இப்போது புரிகிறதா, கூட்டுக்குடிநீர் திட்டம், கூடங்குளம் பகுதியில் 13 ஊராட்சிகளுக்கு தாமிரபரணித் திட்டம், அல்லது கன்னடியன் கால்வாய்த் திட்டம் என்பதெல்லாம் யாருக்காக? அரசுகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது தீராத பாசமா? மக்களுக்கு எப்படியாகிலும் தண்ணீர் கொடுக்க வேண்டும், அவர்களின் தாகம் தீர்க்க வேண்டும் என்று சிந்தித்து கவலைப்பட வேண்டிய சனநாயகக் கடமையா? எல்லாம் தங்களை வாழவைக்கும் இந்த முதலாளி வர்க்கத்திற்கு தொண்டு செய்யவே, இப்படி கூச்சல் போடுகிறார்கள். ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்.

காலப்போக்கில், கடல் நீரை குடிநீராக மாற்றும் உப்பகற்றி ஆலை ஒன்றையும் கடலோரக் கிராமத்தில் அமைத்துக் கொள்வார்களாம். பின்னர் ஆலைக்கழிவுகளை ஒரு இடத்தில் கொட்டி வைத்து அதை சுத்தம் செய்ய ஒரு சுத்திகரிப்பு ஆலை ஒன்றையும் வைத்துக் கொண்டு ஒரு சொட்டு கழிவுநீர் கூட ஆலையில் இருந்து வெளிவராதபடி பார்த்துக் கொள்ளவார்களாம். என்னே அற்புதமான திட்டம், தொழிற்நுட்பம். அப்போது தெரியும், ஏன் இந்தப் பைத்தியக்கார, அறிவில்லாத, மூர்கத்தனமான மீனவர்கள் அன்றும்’, இன்றும் போராடினார்கள் என்று நாளைக்கு சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பகுதி மக்களுக்கு தெரியவரும்!

கடல் கனிம மணல் ஆய்வுக்குழுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே முடக்கத் திட்டம்!

"மக்கள் அச்சத்திலும், பீதியிலும் இருக்கிறார்கள். ஊருக்குள் நாட்டு வெடிகுண்டுகளுடன், பயங்கர ஆயுதங்களுடனும் மணல் கம்பெனி எதிர்ப்பாளர்கள் சுற்றி வருகிறார்கள். எப்போது சண்டைகளைத் தூண்டலாம், மக்களைத் துண்டாடலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஊர் ஊராக அலைந்து திரிகிறார்கள். இரவும் பகலும் கண்விழித்து சாமச்சேட்டைகள் செய்து வருகிறார்கள்" என்று உண்மையத் திரித்து பொய் சொல்லி அரசை மிரட்டிவிடலாம், இப்படி தவறான செய்திகளைப் பரப்பி ஆய்வுக் குழு கிராமங்களுக்கு வருவதை தடுத்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால், இங்கே நடப்பதோ வேறு!

அரசு ஆய்வுக் குழு வருமுன்னரே, மக்களை பீதியில், அச்சத்தில் எப்படி உறைய வைக்கலாம். அவர்களுக்குள் பயங்கர மோதலை எப்படி உருவாக்கலாம் என்று திட்டமிட்டே கலவரங்கள் கடல் மணல் நிறுவனங்களின் ஆதரவாளர்களால் தூண்டப்படுகின்றன. மக்கள் எவரும் நேரடியாக வந்து அரசு குழுவினரைச் சந்தித்து விடக்கூடாது, சாட்சியம் சொல்லிவிடக் கூடாது, ஆதாரங்களைக் தோண்டிக் கண்டு பிடித்து காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக மணல் கொள்ளையர்கள் மக்களை அச்சுறுத்துதல், பணம் கொடுத்தல், சாராயம் வாங்கிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளைக் கனகச்சிதமாக செய்து வருகிறார்கள்.

அதனால், போர் உத்திக்காக, இரண்டு எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்வதற்குப் பதிலாக, கூடங்குளம் அணுஉலைப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்த பின்னரே, ஆய்வுக்குழு நெல்லை மாவட்டம் வரட்டும் என்று கோரிக்கை வைக்கலாமா என்று சிந்தித்து போராடும் மக்கள் தான் தீர்மானம் இயற்றவேண்டும். அதுவரை, தூத்துக்குடியில் நடந்த முறைகேடுகளுக்காக முதலில் மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடையுங்கள். அவர்களின் சொத்து உடைமைகளைப் பறியுங்கள்! அவர்களுக்கு, உறுதுணையாக இருந்த, இன்றும் துணைபோகும் அரசு அதிகாரிகளை, காவல்துறை அதிகாரிகளை அவர்களைப் போன்று அதே சட்டத்தின் கீழ் சிறையில் அடையுங்கள்.! அப்போது தான் நீதி வெல்லும்! மணல் ஏற்றுமதிக்கும் முழுமையான தடை போடுங்கள்! அந்தத் தண்டனை முடிந்த பிறகு, பிற மாவட்ட ஆய்வுகள் குறித்து, அதற்குப் பின்னர் சிந்தித்து முடிவெடுக்கலாம்.! என்று மக்கள்தான் நன்கு சிந்தித்து முடிவு எடுத்து அரசுக்குக் கோரிக்கை வைக்கவேண்டும்.

இறுதியாக,

முதல் வெற்றிக்காக (அணு உலைப் போராட்டத்திற்காக) முடிந்தால், தேவையென்றால் இன்னும் காத்திருக்கலாம். அரசு நினைப்பது போல, போராடுகின்ற மக்களும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் பறிக்க நினைப்பது அது முதலுக்கே முடிவு கட்டுவதுபோல ஆகி விடும். எடுத்தக் கதையை முடிக்க முதலில் வழிதேடப் பார்க்கலாம். இல்லையெனில், கவுரமாக, போராடும் தளத்தை மாற்றிக்கொள்ளலாம், போராட்ட வடிவத்தையும் மாற்றிக் கொள்ள வழிதேடலாம். ஏதோ இந்த இரு பிரச்சனைகளும் கடற்கரை மீனவ மக்களின் சிக்கல்கள் என்று இன்னும் கருதிக் கொண்டு, பலரும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்தப் பார்வை பிறருக்கு தற்போது இல்லாவிட்டாலும், இவைகள், கடலோர சமூகங்களின் உடனடி சிக்கல்கள் என்பதைக் கூட உணராமல் வாழ்வதுதான் ஜீரணிக்க முடியவில்லை. இவர்கள் நாளை வருந்திப் பயனில்லை.

அணுஉலைப் போராட்ட வெற்றிக்காக பொறுமையோடு இதுநாள் வரையிலும் உழைத்த மக்கள்தான், இன்னும் அமைதியாக, விவேகமாக, சாமர்த்தியமாக காய்கள் நகர்த்தவேண்டும். இந்த இரண்டு சிக்கல்களுக்குமே வெளியில் இருந்து வேறு அரசியல் அழுத்தங்கள் கொடுத்தால் மட்டுமே, நாம் இவற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு செல்ல முடியும். இத்தகைய அரசியல் செயல்பாடுகள் மட்டுமே, இந்தப் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லமுடியும். இல்லையென்றால், போராடும் மக்களுக்கு இவைகள் தாங்க முடியாத வரலாற்றுச் சுமைகளாக, வடுக்களாக மாறிவிடும்.

கூடங்குளம் இன்னொரு தருமபுரி மாதிரி ஆகிவிடக்கூடாது. அத்தகைய சூழ்ச்சிகளுக்கு எவரும் பலியாகி விடக்கூடாது. அணுசக்தித்துறை தன்னுடைய படுபயங்கர தோல்வியை, ஊழலை மறைக்க எதற்கும் அணியமாய் இருக்கிறது. இறுதிக்கட்டத்தில், எதையும், எவரையும் பயன்படுத்தி வெற்றிபெற நினைக்கும். ஆனால், வரலாற்றுப் போராட்டம் நடத்திய மக்கள் வெற்றி பெற வேண்டும். மக்கள் சக்தி வெல்லவேண்டும்.! .இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி, மக்கள் வெல்லப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை. கூடங்குளம் அணுஉலை ஒருபோதும் இயங்கப் போவதில்லை என்பதே அறிவியல் ஆதார உண்மை.

- ம.புஷ்பராயன், அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு.

Pin It