டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியரும், புரட்சிகர சனநாயக முன்னணி என்ற இயக்கத்தின் வழியே சனநாயகத்தின் குரலினை ஓங்கி ஒலித்துவரும் பேராசிரியர் சாய்பாபாவின் வீட்டை, கடந்த 12 செப்டம்பர் 2013 ஆம் தேதி மகாராஸ்டிரா மாநில போலீசார் முற்றுகையிட்டு சோதனை செய்தனர். அச் சமயம் அவரின் வீட்டிலிருந்த அவரின் இளவர் மகள் மற்றும் அவரின் கார் ஓட்டுனர் ஆகியோர் தனித்தனி அறைகளில் சில மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டனர். பேராசிரியர் சாய்பாபா வீட்டில் திருட்டு பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்த ஒரு தேடுதல் ஆணை (Search warrant) மகாராஸ்டிரா மாநிலம் கச்சிரோலி மாவட்டம், அகிரி நீதித்துறை நடுவரிடமிருந்து பெற்று வந்து சோதனை மேற்கொண்ட‌து மகாராஸ்டிரா காவல் துறை. நக்சல்பாரி வேட்டையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை சோதனை முடிவில் பேராசிரியர் சாய்பாபாவின் கணினி, பென்டிரைவ் மற்றும் சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அந்த ஆவனங்கள் குறித்து எந்த குறிப்பாணையும் சாய்பாபாவுக்குத் தரவில்லை.

பேராசிரியர் சாய்பாபா போலியோ பாதிப்பால் 90 சதவிகிதம் கால்கள் ஊனமுற்றவர். சக்கர நாற்காலியின் உதவியில் செயல்படுபவர். ஏழை மக்கள் மீதான அரசின் பல்வேறு அடக்குமுறைகளை கேள்வி எழுப்பி வருபவர்.
கடந்த ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மகாராஸ்டிரத்தின் 27 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கான கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் குரலை நசுக்குவது, மாவோயிஸ்ட் செயல்பாடுகளினை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி என முடிவு செய்திருந்தனர். பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்ட் எதிர்ப்பு காவல் நடவடிக்கையான பச்சை வேட்டையினை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் ஹெம் மிஸ்ரா, பத்திரிக்கையாளர் பிரசாந்த் ராகி ஆகியோர் மனித உரிமை செயல்பாடுகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நிலையில் அவர்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டதை சாய்பாபா கடுமையாக கண்டித்தார். எனவே, காவல்துறையின் அடக்குமுறைகள் சாய்பாவினை நக்சல்பாரி ஆதரவாளர் என்ற வகையில் சிறைபடுத்தும் முயற்சிகளில் ஒன்று என்றே கருதத் தோன்றுகிறது.

சனநாயக சக்திகளின் குரல்வளைகளை நசுக்கும் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளில் ஒன்று சாய்பாபாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை. மேலும் அவர் டெல்லியிலோ அல்லது நாக்பூரிலோ காவல்துறையினரின் விசாரணையினை எதிர்கொள்ளவும் உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த அடக்குமுறையினை மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) வன்மையாக கண்டிக்கின்றது. சனநாயக சக்திகளை வேட்டையாடுவது மற்றும் அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்து வாயடைக்கச் செய்வதையும் கைவிட வேண்டுகின்றது.

- வீ.சுரேஸ். தேசிய செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும்
பிரபாகர் சின்கா, தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்

Pin It