19-9-2013 காலை சுமார் பத்து மணி அளவில் பார்வையற்ற சகோதரர்கள் 4 ஆம் நாளும் தம் ஞாயமான கோரிக்கைகளை முன் வைத்து கண்ணகி சிலை அருகே தங்கள் அஹிம்சை வழியிலான போராட்டத்தைத் தொடர்ந்தனர். கோரிக்கைகள்:

1. காலியாக உள்ள 350 பார்வையற்றோருக்கான ஆசிரியர் பணி இடங்களை நிர‌ப்புதல்,

2.  tet மற்றும் t r b தேர்வு மதிப்பெண்களை பார்வையற்றோருக்கு 150 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களாக கொள்ளுதல், 

3. பார்வையற்றோருக்கு மடிக் கணினி வழங்கக் கோருதல் ஆகிய 3 கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் தொடர்ந்தது.

பார்வையற்றோர் தங்கள் வாழ்வியல் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் போராட்டக் குழுவினரை கலைந்து செல்லக் கோரினர். அப்போது பார்வையற்ற தோழர்கள் சில கோஷங்களை எழுப்பியதைக் காரணமாகக் கொண்டு போலீசார் அவர்களை தடியடிக்கு உட்படுத்தினர். குறிப்பாக ராதிகா, அனிதா, திருநாவுக்கரசு, சரவணன், ராஜவேலு என்போர் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். பார்வையற்றோரை அடித்தது மட்டுமல்லாமல் பெண் காவலர்கள், பெண் தோழர்களை பூட்ஸு காலால் உதைத்ததும், போராட்டக் களத்திலிருந்தோரை பந்துகளை தூக்கி எறிவது போல காவலர் வேனில் தூக்கி எறிந்த‌தும் குண்டாந்தடிகளால் பார்வையற்றோரின் மண்டைகளை உடைத்து ரத்தம் வெள்ளமாக பெருகும்படி செய்த‌துமான நிகழ்ச்சிகள் நமக்கு வெள்ளையரின் காலத்தை நினைவுபடுத்துகின்றன‌. காவலரின் இத்தகைய கொடுங்கோன்மை சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறதே! போராட்ட களத்திலிருந்த பார்வையற்றோர் காவலர்களுக்கு கைப் பந்தாகவும் கால் பந்தாகவும் அல்லவா தோன்றுகின்றனர்? காவலரின் இந்த அராஜகப் போக்கை கண்டிப்பவர் யார்? கைது செய்யப்பட்ட பார்வையற்ற தோழர்கள் நாகேஷ் பூங்கா அருகிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நண்பகலில் அடைத்து வைக்கப்பட்டன‌ர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த உண்ணாவிரதம் இருந்த தோழர்களை அழைத்து வந்து அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து அவர்கள் அந்த பொட்டலங்களை வாங்குவதைப் போல உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட முயற்சித்த‌னர் காவல் துறையினர். காவலரின் அநாகரிகமான இந்த செயல்பாடு மிகுந்த வேதனைக்கு உரிய நிகழ்வாகும். இவ்வாறெல்லாம் புகைப்படம் எடுத்துக் காட்டுவதன் மூலம் போராட்டத்தை திசை திருப்புவதும், உண்ணாவிரதம் இருப்போரைக் கொச்சைப்படுத்துவதுமான காவலர்களின் செயல்களில் எந்த நாகரிகமும் இல்லை. மாலை 5 மணிக்கு பின்பு உண்ணாவிரதம் இருந்த தோழர்களைத் தவிர மற்ற தோழர்கள் விடுவிக்கப்பட்ட‌னர். காயம் அடைந்த பார்வையற்ற தோழர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவும் இல்லை. ரத்தம் வழியும் நிலையிலிருந்த தோழர்களின் நிலை குறித்த முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் உண்ணாவிரதம் இருந்த தோழர்களை வழக்கம்போல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஒரு நாடகத்தை நடத்திவிட்டு காவலர்கள் வண்டலூர், மதுராந்தகம் என பல இடங்களுக்கு அவர்களை அலைக்கழித்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் மதுராந்தகம் மருத்துவமனைக்கு முன் இரவு 12 மணிக்கு விட்டுச் சென்றதுமான நிகழ்ச்சிகள் நமக்கு பாரதியின் “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்ற கவிதை வரிகளைத்தான் நினைவூட்டுகின்றன‌.

இன்றைய முதலமைச்சர் அவர்கள் 1994 ஆம் ஆண்டு வரலாறு காணாத வகையில் முதல்முதலில் 50 பார்வையற்றவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணி வாய்ப்பு அளித்தமையும் 2005 ஆம் ஆண்டிலும் 150 பார்வையற்றோருக்கு பணி வாய்ப்பு அளித்தமையும் உண்மையில் மதித்துப் போற்றத்தக்க செயல்பாடாகும். ஆனால் இம்முறை மௌனம் காப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. பார்வையற்ற தோழர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்திய நிகழ்வு முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லையா? அல்லது கல்வி அமைச்சரின் கவனத்துக்கு எட்டவில்லையா? கேளுங்கள் தரப்படும் என்ற மொழிக்கு ஏற்ப பார்வையற்ற தோழர்கள் தம் ஞாயமான உரிமையை கேட்கின்றனர். கிடைத்த பரிசோ மண்டை உடைப்பும், பூட்ஸு கால் உதையும். இரு முறைகளும் பார்வையற்ற தோழர்களுக்கு பணி வாய்ப்பளித்த அரசாங்கம் இம்முறையும் பார்வையற்றோருக்கு கண் திறக்குமா? அன்பு தமிழ் உள்ளங்களே பார்வையற்றோரின் உரிமைக்கு குரல் கொடுங்கள். உணர்வுக்கு மதிப்பளியுங்கள்.

- ஆம்பூர் முகிலன்

Pin It