மேலப்பாளையத்தினுள் நுழையும் போது காலம் செய்த மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. தெருக்களில் ஆங்காங்கே நடக்கும் கட்டிட வேலைகள், வீடுகளை புதுப்பிக்கும் பணிகள், நாகரீகமாக டைல்ஸ் பதிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த வீடுகள், எந்த மாறுதலும் இன்றி இடை இடையேத் தென்படும் வீடுகள் வறுமையைக் கோடிட்டுக் காட்டும் இருண்ட வீடுகள் என்று முகம் மாறி காட்சியளித்தாலும் அவர்களின் ஒட்டு மொத்த பொருளாதார நிலை பெரிய அளவில் மேம்பட்டதாகத் தெரியவில்லை.

பீடித் தட்டுகளுடன் தென்படும் மக்கள், சுற்றிய பீடிகளை கணக்குக் கொடுக்க முக்காடிட்டும் புர்கா அணிந்தபடியும் செல்லும் பெண்களின் வரிசை, குறுக்கும் நெடுக்கும் ஓடி விளையாடிக் களிக்கும் சிறுவர், சிறுமிகள், வாசலில் அமர்ந்து அழலாமா வேண்டாமா என்று யோசித்தபடி நாம் உற்றுப்பார்த்ததும் சிரிக்கும் குழந்தைகள் என்று மேலப்பாளையத்தின் வீதிகள் கலகலப்பாகவே விளங்குகிறன.

முஸ்லீம் மக்கள் குறித்த பொதுமக்களின் பார்வையும் இன்று சற்று மாறுதலடைந்து வருகின்றதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் சரிக்குச் சரியாக சந்தைகளில் பேருந்து நிறுத்தங்களில் பிரதான சாலைகளில் அனைத்து மக்களும் கலந்து சென்று வருவது மனதிற்கு சந்தோஷத்தைத் தருகிறது.

மகிழ்ச்சியான மனநிலையின் ஊடே கடந்து செல்லும் பொழுது ஊடகங்களில் திரும்பவும் கடந்த பத்து நாட்களாகத் தென்படும் செய்திகள் மனத்தினுள் ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. பெங்களுர், குண்டுவெடிப்பு சென்னை நெல்லையில் ஆறு பேர் கைது! அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற மாலை முரசின் செய்தி ஏப்ரல் – 23.

பெங்களுர் குண்டு வெடிப்பில் கைதான 3 தீவிரவாதிகளும் பெங்களுரில் போலீஸ் காவல் (மாலைமுரசு ஏப்ரல் 24 தலைப்புச் செய்தி) : தமிழ் ஆங்கில ஊடகங்களின் பரபரப்பான செய்திகள் வழி மேலப்பாளையத்தில் உள்ள கைது செய்யப்பட்ட 3 நபர்களின் உறவினர்களைச் சந்திக்கச் சென்ற பொழுது தான் காவல்துறையின் மனித உரிமை மீறல் அடக்குமுறை திரும்பவும் தொடங்கி விட்டதை அறிய நேர்ந்தது. மொத்தம் ஏழு நபர்கள் முறையே திருநெல்வேலி (கிச்சான் புகாரி, ஷாலி) சென்னை (ரசூல் மைதீன், பீர் மொய்தீன், பஷீர், சலீம் பாஷா) பெங்களுர் (ஆலியப்பா) இல் இருந்து விசாரணை என்று கூட்டிச் செல்லப்பட்டு அதன் பின்பு போலீசாரின் புனைவுகள் சாதாரண நபரால் கற்பனை செய்யப்பட முடியாதவை.

மேலப்பாளையம் மக்களின் போராட்டங்களின் விளைவாக ரசூல் மைதீன், சலீம் பாஷா, ஆலியப்பா ஆகியோர் வழக்கின்றி திரும்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலப்பாளையத்தில் திரும்பவும் காவல்துறை தனது அத்துமீறலைத் துவக்கி விட்டது. பெங்களுர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மேலப்பாளையம் அப்பாவி மக்களைச் சேர்த்து மறுபடியும் முஸ்லிம் மக்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. இன்று தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு போன்ற வன்முறைகள் எதுவும் நிகழாத சூழலில் பெங்களுர் குண்டு வெடிப்பிற்கு தென் தமிழகத்தின் ஓரத்தில் ஏற்கெனவே ஊடகங்களாலும் காவல்துறையாலும் கலவர புமியாகச் சித்தரிக்கப்பட்ட மேலப்பாளையத்தை இணைத்துள்ளது.

மேலப்பாளைய மக்கள் தங்கள் உறவுகளுக்குள்ளேயும், ஊருக்குள்ளேயும் மண உறவுகளை வைத்துக் கொள்வர். மேலப்பாளையம் கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் முஸ்லீம் இளைஞர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக, பிறந்த மண்ணே பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலையில் சென்னை போன்ற நகரங்களுக்கு பிழைப்புத் தேடிச் சென்ற குடும்பத்தில் உள்ள மாப்பிள்ளையைப் தனது மகளுக்குப் பார்ப்பதற்காக ரசூல் மைதீன் என்பவரும், அவரது தங்கை கணவர் பஷீர் (30) என்பவரும் சென்னைக்கு 18.04.2013 அன்று கிளம்பி 19.04.2013 அன்று சென்னை சென்றனர். மாப்பிள்ளைக்கு ஞாயிறு அன்று விடுமுறை என்பதால் ஞாயிறு அன்று மாப்பிள்ளை வீட்டைச் சென்று பார்ப்பது என்று முடிவு, செய்து பெங்க;ரில் தேயிலைத் தூள் வியாபாரம் செய்து வரும் அவருடைய மைத்துனர் பீர் மொய்தீன்(39) என்பவரையும் சென்னைக்கு அழைக்கிறார் ரசூல் மைதீன். சென்னை வந்த மூவரும் 20.04.2013 அன்று மதியம் 3.00 மணியளவில் சென்னை தி.நகர் போத்தீஸில் A/C மெக்கானிக்காக வேலை செய்யும் ரசூல் மைதீன் சித்தி மகனான சலீம் பாஷா (21) என்பவரை போத்தீஸ் கடைக்குச் சென்று சந்தித்து மாப்பிள்ளை வீட்டைக் காணப் போகும் போது உடன் வருவதற்காக அழைக்கச் செல்கின்றனர்.

சலீம் அவர்களை வரவேற்று டீ வாங்கிக் கொடுத்துவிட்டு வழியனுப்புவதற்காக வரும்பொழுது இவர்கள் நால்வரும் போத்தீஸ் கடை வாசலில் வைத்து காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு உங்களை விசாரணக்கு கூட்டிக் கொண்டு போகிறோம் என்று சொல்கின்றனர். உடனே சலீம் பாஷா தனது மொபைலை எடுத்து கடை ஓனரிடம் பேச முற்படும்பொழுது, உடனே காவல்துறையினர் அவரது மொபைலை பிடுங்குவதுடன், அனைவரது மொபைல்களையும் வாங்கி போலிஸ் வாகனத்தில் ஏற்றி பீச் ரோடு கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ரசூல் மைதீன் “எங்களை பீச் ரோடு கமிஷனர் அலுவலகத்திற்கு மூன்றாவது தளத்திற்கு கொண்டு சென்றவுடன் உயரதிகாரி வந்து எங்களிடம் என்ன குற்றம் பண்ணினீங்க என்று கேட்டார். எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொன்னோம். கையிலிருந்த பணம், பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி வைச்சிக்கிட்டு தெரியாதுன்னா என்ன அர்த்தம், இவ்வளவு பெரிய ஊரிலே உங்க நாலு பேரை மட்டும் எப்படி புடிச்சோம். ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றீங்க, என்ன செஞ்சிங்கன்னு சொல்லுங்க என்றார். நாங்க திரும்பவும் எதுவுமே தெரியாது, பொண்ணுக்கு மாப்பிள்ளை வீடு பார்க்கத்தான் வந்தோம்னு சொன்னோம்.

எனக்கு மொபைல் போன் வைக்கிற பழக்கம் கிடையாது. எப்படி போன் இல்லாமல் இருப்ப, நாங்க பிடிச்சதும் போனைத் தூக்கிப் போட்டிட்டியா என்று ஒரு அதிகாரி கேட்டார். ஐயா, நான் போனைத் தூக்கிப் போட்டாலும் என் நம்பர் மத்தவங்க போன்ல இருக்கனுமே, நான் நிஜமாகவே போன் வைச்சிக்கிறதில்லை, யார்கிட்டனாலும் கேளுங்கன்னு சொன்னேன். வீட்டு அட்ரஸ் சொல்லச் சொன்னாங்க, சொன்னோம். திரும்பவும் என்ன பண்ணினிங்க என்று கேட்டார்கள். நாங்க எதுவும் பண்ணலை, எதுவும் தெரியாதுன்னு சொன்னேன். மேலப்பாளையத்தில் உள்ள ஆட்கள்ன்னு சொல்லி ஒவ்வொரு பெயரா சொல்லி தெரியுமான்னு கேட்டாங்க. அவங்க எல்லாம் வேறத் தெருக்காரங்க, எங்களுக்குத் தெரியாது சார்னு சொன்னோம். திரும்பத் திரும்ப மேலப்பாளைய ஆட்கள்னு ஒவ்வொரு பேராச் சொல்லிக் கேட்டாங்க. ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணிக்கு பீர் மைதீன் நம்பர்ல இருந்து சம்பந்தக்காரங்க வீட்டுக்கு போன் போட்டு எங்களுக்கு 4 நாள் வேலையிருக்கு, அதனால் 4 நாள் கழிச்சி மாப்பிள்ளை பார்க்க வருவோம் என்று தகவல் சொல்லச் சொன்னாங்க. அதே மாதிரி சொன்னோம். என் மச்சான்கள பத்தி கேட்டாங்க.

பஷீர், பீர் மொய்தீன் ரெண்டு பேரும் என் தங்கச்சிகளை கட்டுனதால் சொந்தம். நாங்க அவர்களை விசாரித்துதான் பொண்ணு கொடுத்தோம். அவங்க எந்த தப்புக்கும் போரவுங்க இல்லைன்னு சொன்னேன்.

எங்க ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக கூப்பிட்டு விசாரிச்சாங்கள். நாங்க நல்லபடியாக கேட்கிறோம், என்ன தப்பு செஞ்சிங்கண்னு சொல்லுங்கன்னு கேட்டாங்க, நாங்களும் எதுவும் பண்ணலை சார்னு சொன்னோம். எதுவும் சொல்லலைனா அப்புறம் எங்க கவனிப்பு மாறும். கரண்ட் வைப்போம்னு மிரட்டினாங்க, திரும்பவும் எங்க அட்ரஸ் தகவல் வாங்குவாங்க. அடுத்த ஷிப்டு ஆட்கள் வந்து அவர்களும் இதே கேள்விகளை கேட்டு பதில் சொல்லலைன்னு மிரட்டு வாங்க. இப்படி மாறி மாறி ஒரு 40 பேர் வந்து என்கிட்ட கேட்டிருப்பார்கள். என்னையோ, சலீமையோ அடிக்கலை. பீர் மொய்தீன், பஷீர் ரெண்டு பேரையும் போலிஸ் அடிச்சிருக்கும் போல. எங்ககிட்ட எதுவும் சொல்லலை. ஆனால் வந்து இடுப்புல, கைல, கால்ல வலிக்குதுன்னு முனங்கிக் கிட்டே பரிதாபமாக, சோர்வாக இருப்பார்கள்.

திங்கள் கிழமை காலைல முதலில் 4.30 மணிக்கு பஷீரைக் கூப்பிட்டுப் போனார்கள். இரவு 9.30 மணிக்கு பீர் மைதீனைக் கூப்பிட்டுட்டு போனாங்க. பிறகு அவர்கள நாங்க பார்க்கலை. ஒரு 12 மணிக்கு கிட்ட எங்க கிட்ட ஒரு பேப்பர்ல நாங்க கர்நாடகாவைச் சேர்ந்த பெங்களுர்ஸ்பெஷல் டீம் உங்களை விசாரணைக்கு கூப்பிட்டு போனாம். உங்களை நல்லபடியாக நடத்தினோம், அடிக்க வில்லை, திரும்பவும் உங்கள் உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டோம் என்று எழுதி எங்களிடம் (ரசூல் மைதீன், சலீம் பாஷா) கையெழுத்து வாங்கிக் கொண்டு எங்கள் சம்மந்தக்காரர் வீட்டில் கொண்டு போய் விடும் பொழுது இரவு 12.45 தாண்டி விட்டது. வண்டியில் திரும்பி வரும் பொழுது பஷீர், பீர் பற்றி விசாரிச்சோம். அவர்களும் எதுவும் பண்ணவில்லை, விட்டுவிடுங்கன்னு கேட்டோம். நீ பதில் சொல்லிட்டு வந்தமாதிரி அவனும் வருவான், முழு உண்மையைச் சொன்னதும் உன்னை மாதிரி அனுப்பிவிடுகிறேன் என்று சொன்னாங்க.

அப்புறம் டி.வி. நியுல்ல பார்த்துத்தான் அவங்களை எதற்கு அரெஸ்டு பண்ணியிருக்காங்க என்று எங்களுக்குத் தெரியும்.

அப்புறம் நேத்துதான் (24.04.2013) பீர் மைதீன் மச்சான் ஆலியப்பாவை பெங்க;ர்ல வைச்சி போலிஸ் கூட்டிட்டுப் போயிட்டு என்று சொன்னாங்க

எங்களுக்கு எதுவும் தெரியாது நாங்க எந்த தப்பும் பண்ணவில்லை. இதுவரை நிழலுக்கு கூட போலீஸ் வாசலை மிதிக்க வில்லை. என்னமோ நடக்குது.

சலீம் பாஷா (21)

நான் பத்தாவது வரை ஹைகிரவுண்டு M.O.P. பள்ளியில் படிச்சேன். பிறகு ITI A/C மெக்கானிக் முடித்துவிட்டு ஜங்சன்ல ஒரு கடைல வேலை பார்த்தேன். அப்ப எங்க பீர் மச்சான் தேயிலை வியாபாரம் செய்ய பெங்க;ருக்கு ஆள் வேனும்னு கூட்டிட்டு போனார்.(தேயிலை நிறுத்து, எடை போட, பார்சல் போடுவது போன்ற வேலைகள்) 4 மாதம் இருந்தேன். பின்பு திரும்பவும் ஜங்சன் கடையில் வேலை பார்த்தேன். இப்பத்தான் 10 மாசமாக சென்னை போத்தீஸில் மெக்கானிக்காக சேர்ந்தேன். நிம்மதியாக வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறப்போதான் இந்தச் சிக்கல் வந்திருச்சி.

ஊரில் (மேலப்பாளையம்) உள்ளவங்க பேரைச் சொல்லது செய்யதலி தெரியுமா, கிச்சான் புகாரி அவரைத் தெரியுமா என்று கேட்டாங்க. உங்க மச்சான்களுக்கு அவர்களைத் தெரியுமா? தொடர்பு இருக்கான்னு கேட்டாங்க. எனக்கு யாரையும் தெரியாது, அக்காக்களை கட்டினதாலே சொந்தம். அவங்களும் எந்தத் தப்பும் பண்றவங்க இல்லை. நாங்க அவங்களை விசாரித்துதான் பொண்ணு கொடுத்தோம்னு சொன்னோம். பெங்க;ர்ல என்ன வண்டி வச்சிருக்காங்க என்று கேட்டாங்க. இரு சக்கர வாகனம் எங்க பதிவு செய்திருக்காங்கன்னு கேட்டாங்க.

எங்க மச்சான் பெங்களுர்ல ரேசன் கார்டு வச்சிருக்கார். அதுல எந்தப் பொருளும் வாங்க முடியாது. ID மாதிரி வைச்சிக்கலாம். அதை வைச்சி கர்நாடக Registration ல வண்டி பிசினஸ்க்காக வாங்கியிருக்காங்கன்னு சொன்னேன்.

நீ பெங்களுர்போனியா? இப்ப இல்லன்னாலும் முன்னாடி பார்சல் மாதிரி ஏதாவது கொண்டு போய் கொடுத்தியான்னு கேட்டாங்க. நான் எதுவும் கொண்டு போனதில்லே சார்னு சொன்னேன்.

என்னை திங்கட்கிழமை நடு இராத்திரி எழுதி வாங்கிட்டு விட்டுட்டாங்க. மறுநாள் போத்தீஸ் போய் MD யை பார்த்தேன். அங்கு 2,3 மாதம் கழித்து என்னை வந்து பாருன்னு சொன்னார். நான் ஊருக்குக் கிளம்பி வந்துட்டேன். கடைக்குப் போயிட்டு திரும்பும்போது திரும்பவும் போலீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க, விசாரணைன்னு சொன்னாங்க. சார் எல்லாம் கேட்டுட்டுதானே விட்டிங்கன்னு சொன்னேன். சும்மா விசாரிச்சிட்டு நானே பஸ் ஏத்தி விடுறேன்னு சொன்னாங்க. எனக்கு பயமா இருந்தது. Cell Switch off பண்ணிட்டு ஊருக்கு வந்துட்டேன். எங்க வீட்ல என்கிட்டயிருந்து போன் வரவில்லைன்னு தெரிஞ்சு கடைக்கு போன் போட்டுட்டாங்க. கடை வாசலில் இருந்து CC காமெரா மூலமாத்தான் எங்களை போலீஸ் கூட்டிட்டுப் போகுதுன்னு தெரிஞ்சு போத்தீஸ் கடை நிர்வாகத்தினர்தான் மறுநாள் காலையில் வீட்டில் உள்ளவங்களுக்கு தகவல் சொல்லித்தான் எங்க வீடுகளுக்குத் தெரியும். போலீஸ் எங்களைப் பத்தி தகவல் எதையும் எங்கள் வீடுகளுக்கு கொடுக்கவில்லை.

பெங்களுர்ல போய் பீர் மொய்தீனின் தங்கச்சி மாப்பிள்ளை ஆலியப்பாவை போலீஸ் பிடிச்சிட்டு, அங்க அவர் கூட இருந்த அமீர்னு (மேலப்பாளைய ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்தவர்) ஒருத்தர்கிட்ட தான் பஷீர், பீர் மொய்தீன் இருவரையும் இன்னென்ன பிரிவில் கைது செய்திருக்காங்க என்று லட்டர் கொடுத்து விட்டது போலீஸ்.

ஆலியப்பா(28) த/பெ. பீர் மைதீன்

ஆலியப்பா பெங்களுரில் பிஸ்கட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நண்பர்களுடன் பெங்களுரில் அறையெடுத்து வசித்து வருகிறார். இவருடன் அறையில் பீர் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். பீர் மொய்தீன் மனைவியோட அண்ணன் மகள் திருமண விஷயமாக சென்னைக்குப் போன இடத்தில் போலீஸ் கைது செஞ்சுட்டாங்க. அவங்க பீர் மொய்தீன் தங்கி இருந்த இடத்திற்கு வந்து ஆலியப்பாவை விசாரணைக்கு சொல்லி இரவு 10.45 (23.04.2013) அன்று கூட்டிட்டுப் போனதாகவும் போலீஸ் கூடவே ரூமில் இருந்து காலைல அவரைக் கூட்டிட்டு போனதாகவும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆலியப்பாவின் மனைவி நிறை மாதக் கர்பிணி. தனது கணவருக்கு 23.04.2013 அன்று மாலையில் இருந்து நடு இரவு வரை போன் செய்ததாகவும் பதில் இல்லை. மறுநாள் மாலையும் தொடர்ந்து போன் செய்தும் எந்தத் தகவலும் இல்லை. பின்பு அங்குள்ளவர் போன் செய்து விசாரணனைக்கு என்று கூட்டிச் சென்றிருக்கிறார். விசாரித்து விட்டு விட்டுவிடுவோம் என்று கூறிச் சென்றதாக போன் செய்திருக்கிறார்கள். ஆலியப்பா மனைவி நிறைசூலியாக கண்ணீர்ருடன் பரிதவித்துக் காத்திருக்கிறாள். கல்யாணம் முடிந்து 5 வருடங்களாகின்றன. வெளிநாட்டில் இரண்டு வருடம் இருந்து 4 மாத விடுமுறையில் விசாவுடன் வந்தவரை குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வேண்டாம், இங்கேயே ஏதாவது தொழில் செய்வோம் என்று இருந்தவர், தொழில் சரியாக அமையவில்லை என்று இரண்டு மாதங்களாகவே ஏற்கெனவே பெங்களுரில் பார்த்து வந்த பிஸ்கட் வியாபாரத்தைச் செய்யலாம் என்று பெங்களுர் சென்றதாக ஆலியப்பாவின் வயதான தாயார் தெரிவிக்கிறார்.

கிச்சான் புகாரி (39) - ஷாலி

கிச்சான் புகாரி கோயம்புத்தூர் குண்டு வழக்கில் 1998ல் கைது செய்யப்பட்டு 10 வருடங்கள் சிறையில் இருந்து 2008 ல் வெளிவந்தார். வெளிவந்தவர் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகியாக இருக்கிறார். அதன் மூலம் பொருள் வசூல் செய்து சிறையில் வாடும் மக்களின் வழக்குகளை கவனித்து வருகிறார். இவர் மேல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. நபிகளை இழிவு படுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொழுது நடைபெற்ற பஸ் உடைப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் வாய்தாவிற்காக கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்திருக்கிறார். செவ்வாய் காலை திருநெல்வேலி வந்துவிட்டதாக போன் வரவும், அவரது நண்பரும் அவருடன் பணிபுரிபவருமான ஷாலி என்பவர் அதிகாலைத் தொழுகைக்காக மசூதிக்குச் சென்று விட்டுப் பின்னர் கிச்சான் புகாரியை அழைத்து வருவதற்காக புதிய பேருந்து நிலையம் சென்றார். அங்கு வைத்து இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

கிச்சான் புகாரியின் நண்பர் சாகுல் ஹமீது இது குறித்து விளக்கும்போது காலையிலேயே அவர் திருநெல்வேலி வந்துவிட்டேன் என்று போன் செய்ததும் வழக்கம் போல ஷாலி கூப்பிடப் போனார். இரண்டு பேரும் வரவே இல்லை. வாய்தாவுக்கு கோர்ட்க்குத்தான் வரணும்னு 10 மணிக்கு கோர்ட்டுக்கு போனேன். அங்கதான் இரண்டு பேரையும் Special Team பிடிச்சிட்டதாகச் சொன்னாங்க. ஆனால் போலீஸ் கிட்ட இருந்து எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. பெங்களுர்ல இருக்கார்ன்னு பத்திரிக்கையில வந்தது வைச்சி கிச்சான் புகாரி அம்மா பெங்களுர்போயிருக்காங்க.

15 நாட்களுக்கு முன்னால திரும்பவும் வழக்குத் தொடர்பாக ஒரு அதிகாரி நீ எல்லா வழக்கையும் உடைச்சிட்டு வந்துவிட்டு வந்துட்ட மத்தவங்களுக்கு வேற கேஸ் நடத்தற இல்லை, எப்படியும் இன்னும் ஒரு வாரத்தில் ஏதாவது கேஸில் உன்னை மாட்ட வைக்கிறேன்னு மிரட்டினதா சொன்னார். சிறையில் இருந்து வந்ததில் இருந்து அவர் அமைதியாகத்தான் இருந்தார். சிறுபான்மையினர் உதவி அறக்கட்டளை வைச்சி சிறையிலுள்ள மக்கள் வழக்குகளுக்காக பெரியவர்களிடம் பண உதவிகள் பெற்று வழக்குகளை கவனித்து வந்தார். அவரது மனைவி கோயம்புத்தூர் பக்கத்தில் உள்ளாங்க. இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும் குழந்தைகளை இங்க பார்க்க முடியலைன்னு மனைவி அவங்கம்மா வீட்டில் இருந்துட்டாங்க. கிச்சான் புகாரி மாதத்திற்கு ஒரு தடவை இரண்டு தடவை வாய்தாவிற்கு என்று வந்து கொண்டிருந்தார். மாட்டுச் சந்தையை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்வதால் இங்கு வந்து போய்க்கொண்டு இருந்தார்.

அவர் கூட கைது செய்யப்பட்ட ஷாலி கிச்சான் புகாரிக்கு உதவியாக மாட்டுச் சந்தையில் வேலை பார்ப்பதுடன் இங்குள்ள நபர்களிடம் பண வசூல் செய்து அறக்கட்டளைக்குத் தரும் வேலையையும் செய்து வந்தார்.

திருநெல்வேலியில் வைத்து கிச்சான் புகாரியுடன் கைது செய்யப்பட்ட அவரை பிஜேபி தலைவர் தாக்கப்பட்ட வழக்கில் நாகர்கோவில் பார்வதியாபுரத்தில் அவரைக் கைது செய்ததாக அவரது வீட்டிற்கு நாகர்கோவில் காவல்துறை அதிகாரியினர் தகவல் கொடுத்து இருக்கின்றனர். அவருக்கு ஜாமின் போடுவதற்கான முயற்சிகளை செய்யுமாறு கூறியுள்ளனர்.

பெங்களுரில் குண்டு வெடிப்பை மேலப்பாளையத்துடன் தொடர்புப் படுத்த ஏதேனும் ஒரு சம்பவம் காவல் துறைக்குத் தேவைப்பட்டிருக்கிறது. ரசுல் மைதீன் அவர்களின் மகள் திருமண ஏற்பாடுகளுக்காக தனது பெங்களுரில் உள்ள உறவினரிடம் கொண்ட டெலிபோன் உரையாடல் எடுத்துக் கொள்ளப்பட்டு சரளமான புனைவுகளைக் கொண்டு காவல்துறை அவர்களை தீவிரவாதியாகச் சித்தரித்துள்ளது என்றே அறிய முடிகிறது.

கோயமுத்தூர் குண்டு வெடிப்பில் 130 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட கிச்சான் புகாரி(39) சிறையிலிருந்து வெளிவந்தவுடன் சிறுபான்மையினர் உதவி அறக்கட்டளை ஒன்றினை நிறுவி முறையான விசாரணையின்றி சிறையில் வாடி வரும் முஸ்லீம் சிறைவாசிகளை வெளியில் கொண்டு வர சீரிய முயற்சிகளை செய்து வருகிறார்.

இவர் கொடையாளிகளை அணுகி பண உதவி பெற்று டெல்லி வரை சென்று சுப்ரீம் கோர்ட்டு வழக்குரைஞர்களை அமர்த்தி முஸ்லீம் சிறைவாசிகளின் நலனுக்காக சிறப்பாகவே பணி செய்து வருவதை அனைத்துத் தரப்பு மக்களின் வாக்குமூலங்களும் உறுதி செய்கின்றன.

இன்று கல்வி நிலையிலும் மேலப்பாளையம் மக்களிடம் எழுச்சி தென்படுகிறது. 2004 ல் துவங்கப்பட்ட அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பெண் கல்வியில் சிறப்பான இடத்தை வகிக்கிறது. 150 பெண்களுடன் தொடங்கப்பட்ட இக் கல்லூரியில் இன்று 700 மாணவியர் பயில்கின்றனர். 40 முதல் 50 சதவிதத்தினர் மேலப்பாளைய முஸ்லீம் பெண்களே. குறிப்பிடும் எண்ணிக்கைணில் இன்ஜீனியரிங் கல்லூரியிலும் இரண்டு பெண்கள் சட்டம் பயின்றும் வருகின்றனர்.

பெண் கல்வி முன்னேற்றம் முஸ்லீம் மக்களிடம் தொடர்ந்து வரும் விழிப்புணர்வு பிரச்சாரம் போன்றவை வாசலில் வந்து போராடா விட்டாலும் போராட்டங்கள் குறித்து அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர் என்பதே உண்மை. முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளுக்ச் செல்லும் பொழுது பக்கத்து வீட்டு நபர்கள் நம்மை மிரட்சியாக கவனித்து உள்ளே சென்று விடுவர்.

பாதிக்கப்பட்ட வீடுகளிலும் ஆண்களே நம்மிடம் (எழுத்தாளர் பெண்ணாக இருந்தாலும்) பேசுவர். வயதான பெண்கள் தங்கள் வேதனைகளை பகிர்ந்து கொள்வர். மற்ற பெண்கள் உள்ளறையில் மறைந்து இருப்பதுடன் நமது பேச்சிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். டீயோ கலரோ சிறுவர்கள் / ஆண்கள் மூலம் வரும். இன்று வீட்டிற்கு அருகில் செல்லும் போது நமக்கு வழிகாட்டுகின்றனர் பெண்கள் விபரங்களைக் கூறுகின்றனர். பெண்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு பாதிப்புகளை கூறுகின்றனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளில் பெண்கள் பிரிவை துவங்கியிருப்பதுடன பெண்களை களப் பணியிலும் ஈடுபடுத்துகின்றனர். பெண்களும் முஸ்லீம் சமுகம் தொடர்பான விவரங்களையும் தாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் கோரிக்கைகளை உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதனை உணரத் தொடங்கியுள்ளனர். இது ஒரு முன்னேற்ற நிலையாகும்.

மேற்கண்ட நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுதும், மேலப்பாளைய மக்களிடம் முக்கிய பிரமுகர்களிடம் தகவல்களைச் சேகரித்ததன் தொடர்ச்சியாக தெரிய வந்த தகவல்கள்.

கடந்தமுறை காவல்துறையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாரிடம் சென்று முறையிடுவது என்பதே பிரச்சனையாக இருந்தது. காவல் துறையினரிடம் சென்று கேட்க பயம் ஏனெனில் அறியாமையினாலும் படிப்பறிவு இன்மையினாலும் காவல் நிலையம் என்றும், சாதாரண மக்கள் நுழையக் கூடாத இடம் என்றும் காவலர்களை கண்டாலே மனிதனுள் நடுக்கம் கொள்ளும் நிலை. படித்தவர்கள், வசதியானவர்களுக்கும் கூட காவல் நிலையம் என்பது மிரட்சி தரும் இடமே.

இந்தச் சூழலில் பெரிய மனிதர்கள் மற்றும் ஜமா- அத் பெரியவர்கள் கூட காவல் துறையினரிடம் போய் பேசப் பயந்து காவல் துறை கேட்பதைக் கொடுத்து தங்கள் பிள்ளைகளை வசதிபடைத்தவர்கள் காப்பாற்றிக் கொண்டனர். இயலாதவர்கள் தங்கள் பிள்ளைகளை காவல்துறையினரும் ஊடகங்களும் தீவிரவாதி என்று முத்திரை குத்த செய்வதறியாது ஒரு பிள்ளையைக் காவல் துறையினரிடம் கொடுத்து விட்டு அடுத்த பையனையாவது தீவிரவாத முத்திரை தாக்காமல் இருக்கப் போராடிய பெற்றோர் என்ற நிலை இருந்தது.

இந்த போராட்டங்கள் தனிநபர்களாக நாம் போராடினால் எந்தப் பலனும் இல்லை. இயக்கமாக ஒன்று சேர வேண்டிய விஷயத்தினை இம்மக்களுக்கு நன்றாகவே புரிய வைத்து விட்டது என்றே கூற வேண்டும்.

1998-2002 வரையான போலீஸ் அத்துமீறல்களை தனிநபர்களாக எதிர் கொள்ள முடியாத இம் மக்கள், தங்கள் இளைஞர்கள் தங்களது உரிமைகளுக்காக இயக்கமாவதை வரவேற்கவே செய்தனர். இன்று மனித நேய மக்கள் கட்சி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ கட்சி, மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய யுனியன் முஸ்லீம், இந்திய தவ்ஹீத் ஜமாத் போன்ற பல அமைப்புகள் அரசியல் கட்சிகளாகவும் மக்களுக்கு இடையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றனர். தங்களது உரிமைகளை, நலன்களை போராடியே பெற முடியும் என்பதை உணர்ந்து இருக்கின்றனர்.

இன்றைய பிரச்சனையிலும் கூட பல இயக்கங்களுக்குப் பின்னால் இம்மக்கள் திரண்டலும் இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து “இஸ்லாமிய கூட்டமைப்பு” நிறுவி கடந்த 27.04.2013 அன்று மேலப்பாளையத்தில் முழுமையான கடையடைப்பை நடத்தி பெரிய அளவில் தர்ணா போராட்டத்தை நடத்திக் காட்டியுள்ளனர். அடிப்படையிலான தௌகீத் இயக்கம் இன்று பல்வேறுபட்ட இயக்கங்களாக உருவாகிப் பிரிந்து செயல்பட்டாலும் தங்களது பொதுவான பிரச்சனையில் ஒன்றிணைந்து செயல்படும் விதம் போற்றுதலுக்குரியது. அந்த வகையில் தமிழ்நாட்டு சமூக / அறிவியல் இயக்கங்கள் இதனை முன்னுதாரணமாக எடுத்து செயல்பட்டால் தமிழக மக்களின் விடிவு வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

தொடர்ந்த போராட்டங்கள் மற்றும் இவர்களின் வாக்குகளை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் கணக்குகள் இன்று இவர்களுக்கு ஒதுக்கீட்டைப் பெற்று தந்துள்ளன. இட ஒதுக்கீட்டின் அளவினை அதிகரிக்கச் செய்ய தொடர்ந்து இவர்கள் போராட்டம் நடைபெற்றாலும் இடஒதுக்கீடு பெரிய நம்பிக்கையை இவர்களிடம் விதைத்துள்ளது என்பது உண்மை.

முஸ்லீம் மக்கள் தங்களது தனிப்பட்ட உரிமைகளுக்காக மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு ஒன்றிணைந்து போராட்டத்தினை வலிமையாக முன்னெடுக்கின்றனர். இன்றைய முஸ்லீம் இளைஞர்கள் குறிப்பாக மேலப்பாளையம் இளைஞர்கள் தங்கள் எல்லைகளை கடந்து பொதுவான பிரச்சனைகளுக்காகவும் இன்று போராடத் தலைப்படுகின்றனர்.

ஈழப்பிரச்சனை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, மரண தண்டனை ஒழிப்பு, முல்லைப் பெரியார், காவிரி நதி நீர்ப் பிரச்சனைகளில் மற்ற சமூக அரசியல் இயக்கங்களுடன் இணைந்து போராடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக முஸ்லீம் மக்கள் குறித்த பார்வை இன்று பெரும்பான்மை மக்களிடம் மாறி வருதல் என்பது நல்ல அறிகுறியாக உள்ளது. முஸ்லீம் மக்களைத் தனிமைப்படுத்தி பார்க்கும் பார்வை என்பது மாறி வருகிறது என்பது தான் யதார்த்தம். ஏனெனில் முஸ்லீம் மக்கள் குறித்தும், மதம் குறித்தும் இந்துத்துவா சக்திகள் கட்டியெழுப்பிய கற்பிதங்களே இவர்களை நம்மிடமிருற்து அன்னியப்படுத்தியது. சின்னைய்யா, மாமா, தாத்தா, மாமி என்று உறவுகளால் பிணைக்கப்பட்டிருந்தவர்கள் தாமே நாம் எல்லோரும். இந்த மாற்றம் இந்துத்துவா சக்திகளை பயப்படுத்தியது என்பதே உண்மை.

மீண்டும் முஸ்லீம் மக்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியை காவல் துறை உதவியோடு வெகு சிறப்பாக துவங்கியுள்ளனர் என்பதினை உணர முடிகின்றது.

Pin It