இதயத்
தணல் சூட்டில்
தமிழுக்குக் கவிதைகளைச்
சுட்டெடுத்துக் கொடுத்தவனே!
ஒளிச்சத்து
நிரம்பிய உன் கவிதை
வெளிச்சத்தில்
புலிகளாயினர்
புழுக்களாய் நெளிந்த தமிழர்கள்!
பரணி நகங்கள்
பாத விரல்களில்
கள ஈட்டிகள்
கண் இமைகளில்
சிந்துக்குத் தந்தை
வழியில் பாதம் பதித்தாய்!
பகுத்தறிவு தந்தை
பெரியாரிடம்
வந்து சேர்ந்தாய்!
தமிழ்க் கவிஞனாக
இருந்த உன்னைத்
தமிழர் கவிஞராக்கியவர்
தந்தை பெரியார்!
தமிழியக்கத்திற்குத்
தொட்டில் கட்டத்
தூக்குக் கயிறுகளைத்
தூக்கிக் கொடுத்தனர் பகைவர்
தூக்கி வந்தனர் தமிழர்!
அறுந்து விழட்டும் - இந்த
அயோக்கியத்தனம் என்று
வார்த்தைகள் கைகளில்
வாள்களைக் கொடுத்தவனே!
உன்னை
பிரின்ஸ்டன் பல்கலைக்
கவிதை-கவிதை இயல் கலைக்களஞ்சியம்
ஓரம்கட்டியது.
கப்பலைக் கவிழ்க்கலாம்-
கடலை எவன் கவிழ்த்துப் போடுவான்?
வடமொழி வாணனின்
முடமான கட்டுரையில் - உனக்கு
இடமில்லாமல் போனது-
களங்கம் உனக்கில்லை-
அந்தக்
களஞ்சியத்திற்குத்தான்.
ஆனாலும்
அதட்டிக் கேட்க முடியாதபடி
தமிழன் உதடுகளை
தைத்து வைத்தது எது?
உன் பெயரில்
ஒரு பல்கலைக்கழகம்
ஓர் ஓலை போக்க முடியாதா?
உன் பெயரில்
விருதளிக்கிறது தமிழக அரசு-
விடப்பட்டது எப்படி என்று - ஒரு
வினாப் புறப்பட என்ன தடை?
முந்தாநாள்
ஒரு மூடன்
நெரூதாவுக்கும் உனக்கும்
நெருக்கம் இருக்கிறது
என்று நான்
எழுதியதும்-
காகிதத்தில்
கசாப்புக்கடை திறந்து
வெட்டுகிறான்!
உள்ளூர்க் கவிஞன்
உலகக் கவிஞனோடு ஒப்பாவது எப்படி!
எந்த நாட்டிலும்
பூக்களைக் கறுக்க
வசந்தமே நெருப்பை மூட்டாது!
நாள்களின் கழுத்தை ஒடித்துக்
காலம்
ஒரு போதும் இரத்தம் பருகாது!
இங்கே தான்
வெறும் வாளியான அறிவாளித்
தமிழன்
வஞ்சக நரிகளிடம் இரவல் வாங்கிய
நெஞ்சங்களோடு
உனக்கு எதிரியாய்
தமிழுக்கு எதிரியாய்
கறுப்பு வெள்ளைக்
கடற்பறவைத்
தமிழை அடைகாத்து
ஆங்கிலத்தில் பொரித்தபோது
உன்னைக்காணோம்.
பறக்க முடியாத
பறவை அதனால்
உன் பரம்பரையைப்
பார்க்கமட்டும் எப்படி முடியும்?
நேற்று ஒருவன் சொல்கிறான்
கயமை கக்கும் கட்டுரையில்
திராவிடம்
உன்னைத் தூக்கிப் பிடித்ததால்
பிச்சமூர்த்திகள்
பிரபலமாகவில்லையாம்!
திராவிட இயக்கம்
தூக்கிப் பிடித்ததால்தான்
உன் பெயர்
உலக அரங்கில் உச்சரிப்பாகவில்லை
என்ற உண்மை-
நுனிப்புல்மேயும் இந்த
விமர்சன ஆடுகளுக்கு
விளங்குமா?
இப்படித்தான்
ஊரை நோக்கிய
பாதைகளே,
ஊரின் மார்பைக் கொத்தும்
பாம்புகளாக மாறியதுபோல்
எத்தனையோ பேர்!
உலகத்தைச் சுடர வைத்த
எங்கள்
உள்ளூர் விளக்கே!
இன்னும் எத்தனையோ
சொல்ல வேண்டும்!
இன்னும் எத்தனையோ
வெல்ல வேண்டும்!