சாதிவெறி பா.ம.கவின் தோற்றமும், வளர்த்துவிட்ட பின் நவீனத்துவவாதிகளும்’ என்ற நமது முந்தைய கட்டுரையில் சாதி சங்கமாக இருந்த வன்னியர் சங்கத்தை பாமக என்ற அரசியல் கட்சியாக வளர்த்து விடுவதென்பது அரசுக்கு அவசியமாக இருந்தது என்பதையும், அரசுக்காக பா.ம.கவை வளர்த்து விடுகிற வேலையை பின்நவீனத்துவவாதிகள் செய்தார்கள் என்பதையும் நாம் கூறியிருந்தோம். நமது குற்றச்சாட்டை மிக மேலோட்டமாக அ.மார்க்ஸ் கும்பல் மறுத்துள்ளது.

சாதி அமைப்பான வன்னியர் சங்கம், பா.ம.க என்ற அரசியல் கட்சியாக வளர்வதை அரசு விரும்பியது. அரசுக்கு பா.ம.க உடனடித் தேவையாகவும், நீண்டகாலத் தேவையாகவும் இருந்தது. உடனடித் தேவை நக்சல்பாரி இயக்கங்களுக்கு மாற்று என்பதாகும். அதனை காடுவெட்டி குரு முதல் வன்னியத் தலைவர்கள் பெரும்பாலானோர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்றனர். (அந்த வகையில் குரு முதலானோர் பின்நவீனத்துவவாதிகளை விட நேர்மையானவர்கள்) இந்த நக்சல்பாரி இயக்கங்களுக்கு மாற்று என்ற அரசின் உடனடித் தேவைக்குத்தான் பா.ம.கவுக்கு முற்போக்கு சாயம் தேவைப்பட்டது. அரசின் அந்தப் பணியை அரசின் கைக்கூலிகளான பின்நவீனத்துவவாதிகளே செய்தனர் என்பதே நமது குற்றச்சாட்டு.

பின்நவீனத்துவவாதிகள் அரசின் கைக்கூலிகள் என்பதற்கு நாம் ஏற்கனவே 'மக்கள் தலித் இயக்கங்களும் -ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களும்' என்ற கட்டுரையில் ஆணித்தரமாகக் கூறியுள்ளோம். நமது குற்றச்சாட்டை எந்தவித ஆதாரத்தின் அடிப்படையிலும் மறுக்காமல் மிக மேலோட்டமாக மறுக்கும் பின்நவீனத்துவவாதிகளின் தற்போதைய முயற்சி கூட அரசைப் பாதுகாக்கும் முயற்சியே ஆகும்.

பா.ம.க–வை எந்த உள்நோக்கத்துடனும் தாங்கள் வளர்த்து விடவில்லை என்று பின்நவீனத்துவவாதிகள் கூறுவதென்பது, பா.ம.க –வை அரசும் வளர்த்து விடவில்லை என்று மறைமுகமாக சொல்வதாகும். ஆக அரசுக்கு எந்த திட்டமிட்ட நடவடிக்கையும் கிடையாதென மக்களை நம்பவைக்கும் மோசடியாகும் இது. மக்களின் உணர்வுகளையும், போராட்டத்தினையும் மழுங்கடிக்க போலியான இயக்கங்களை அரசே திட்டமிட்டு உருவாக்கும் அல்லது தனக்குத் தோதாக உருவாகும் இயக்கங்களை அரசு ஊக்குவிக்கும் என்பது ஊரறிந்த இரகசியம். காங்கிரசுக் கட்சியே இவ்வாறு உருவாக்கப்பட்டதுதான். இன்றைக்கும் தமிழ் நாட்டில் மேலெழும் ஈழம் முதலான தேசிய கோரிக்கைகளுக்காக அரசு சில இயக்கங்களையும், தலைவர்களையும் திட்டமிட்டு வளர்த்து விடுகிறது. ஒப்புக்கு இவர்களை கைது செய்து தியாகிகளாகவும், வீரர்களாகவும் ஆக்குகிறது. கூடவே ஊடகங்களில் பிரபலப்படுத்தச் சொல்லி அரசே நிர்பந்திக்கிறது. இதன் மூலம் சரியான இயக்கங்கள் மக்களிடம் சென்றடையாமல் தடுக்கப்படுகிறது. போலிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

இவ்வாறு அரசின் திட்டமிட்ட நடவடிக்கைக்கு உளவுத்துறை, கைக்கூலி தத்துவ – அரசியல் (பின்நவீனத்துவவாதிகளைப் போல்) வியாக்கியானர்கள், இவர்களுக்கிடையே இணைப்பு பாலமாக செயல்படும் (ஈழப்பிரச்சினையில் ம.நடராசன் போன்ற) அரசியல் தரகர்கள், இதற்காக பயன்படுத்தப்படும் பணம், போதை, பெண்கள் என ஆயிரம் நடவடிக்கைகள் இருப்பதை பின்நவீனத்துவவாதிகள் மறைக்கிறார்கள். தங்களை அப்பாவியாக காட்டிக் கொள்வதன் மூலம் தங்களது எசமானனான அரசை மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார்கள்.

அ.மார்க்ஸ் தொடங்கி ராஜன்குறை கிருஷ்ணன், சுகுமாறன், சுகுணாதிவாகர், கவின்மலர் என அனைவரும் நமது குற்றச்சாட்டை மொட்டையாக மறுத்துள்ளார்கள். அவர்களது கருத்துகளைத் தொகுத்தால்,

1. ஒரு கட்சியை வளர்த்து விடுமளவிற்கு நிறப்பிரிகை குழுவிற்கு வலிமையில்லை.

 2. ராமதாஸை அப்போது நம்பினோம். அவர் எங்களிடம் நடித்தார் என்று நினைக்கவில்லை. அவர் அப்போது சரியாக இருந்தார், இப்போது இல்லை.

 3. பின்நவீனத்துவவாதிகளை காரணமாகக் கூறி மா.லெ. அமைப்புகளின் பலவீனத்தை மறைக்க முயல்கிறோம்.

 என்று கூறியுள்ளனர். எப்படியோ, பா.ம.கவிற்கு கொள்கைப் பின்புலமாக இருந்தார்கள் என்பதை முகநூல் பின்னூட்டங்களில் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த மறுப்புகளில் உண்மை உண்டா என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நிறப்பிரிகை குழுவிற்கு அவ்வளவு வலிமையில்லை

நிறப்பிரிகை குழுவில் இருந்த அ.மார்க்ஸ் போன்றவர்கள் சொந்தமாக எதுவும் சிந்திக்கவோ, செய்யவோ கையாலாகாதவர்கள்; நோட்ஸ் வாத்திகள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்களுக்கென்று சொந்த பலமில்லை என்பதும் தெரியும். ஆனால், இவர்கள் அரசின் அடியாள் படை; கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆளும் வர்க்கங்களுக்கு உதவினார்கள் என்பதே கட்டுரையின் மையப்பொருள். ஆளும்வர்க்கங்களோடு இவர்களுக்கு உள்ள தொடர்புகளில் ஒன்றிரண்டை இப்போது பார்ப்போம்.

 ஜி.சுகுமாறன் புதுவையில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு என்ற ஒரு என்.ஜி.ஓ. நடத்தி வருகிறார். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். (G.sugumaran vs General secretary, Rue suffren writ petition no 25078/2007). இந்த வழக்கில் புதுச்சேரி சேம்பர் ஆஃப் காம்ர்ஸ்க்கு 1966லிருந்து தேர்தல் நடத்தவில்லை; அதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்; சொஸைடி சட்டப்படி அது பதிவு செய்யப்பட்டுள்ளது ரத்து செய்யப்பட வேண்டும்; தற்போது பொறுப்பில் இருக்கும் இருவர் நீக்கப்பட வேண்டும்; அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

எதிர்மனுதாரர்கள் “சுகுமாறனுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சேம்பர் ஆஃப் காமர்ஸால் வெளியேற்றப்பட்ட ஒருவருக்காகத்தான் சுகுமாறன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்” என்று கூறியிருந்தனர். அந்த ஒருவர் புதுச்சேரி முன்னாள் சாபாநாயகரும் சேம்பர் ஆஃப் காமர்ஸின் முன்னாள் பொருளாளருமான திரு பாக்கியம் என்று கருதும் வகையில் அவர்களது வாதங்கள் இருந்தன.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் “சுகுமாறன் தூய்மையான கரங்களுடன், தூய்மையான மனதுடன், தெளிந்த நோக்குடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவரது வழக்கில் பொதுநல நோக்கம் எதுவும் இல்லை” என்று கூறி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு ரூபாய் 5000 செலவுத் தொகையும் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் தனது மனித உரிமைப் பணிகள் என்று சுகுமாறன் ஒரு பட்டியல் கொடுத்திருந்தார். அதை மாண்பமை நீதிமன்றம் catalogue என்று கூறியுள்ளது (http://indiankanoon.org/doc/704829/).

Writ petitioner, who comes to the Court for relief in public interest must come not only with clean hands like any other writ petitioner, but also with a clean heart, clean mind and clean objective. On the contrary, it is obvious, as aforesaid, the petitioner has come to Court with oblique motive by suppressing the material facts, which is impermissible in law.

31. A writ remedy is an equitable one. A person approaching a superior Court must come with a pair of clean hands. He not only should not suppress any material fact, but also should not take recourse to the legal proceedings over and over again which amounts to abuse of process of law. (See : Udyami Evam Khadi Gramodyg Welfare Sanstha v. State of UP, 2008 (2) LW 490)

32. In the result, we find that the petition filed by the petitioner as a pro bono publico, is nothing but an abuse of process of law with oblique motive. The petition is liable to be dismissed and it is accordingly dismissed with a cost of Rs.5000/-. The connected miscellaneous petitions in M.Ps. Nos.1 to 5 are consequently dismissed.

தான் தாக்கல் செய்த மற்ற வழக்குகளை தனது வலைத் தளத்தில் போட்டுக் கொள்ளும் சுகுமாறன் இந்த வழக்கைப் பற்றி மட்டும் மூச்சு விடவில்லை. சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்பது வணிகர்களுக்கான ஒரு அமைப்பு. பெரும் செல்வாக்கு உள்ளவர்களே இதன் பொறுப்பாளர்களாக முடியும். இத்தகைய அமைப்பில் யார் தலைவராக வர வேண்டும் என்று யோசிப்பது ப.சிதம்பரம் போன்றவர்களின் வேலை. அந்த வேலையை சுகுமாறன் ஏன் செய்ய வேண்டும்? இந்த அமைப்புக்கும் சுகுமாறனுக்கும் என்ன உறவு? தனது மனித உரிமைச் சாதனைகளை(?) சேம்பர் ஆஃப் காமர்ஸுடனான வழக்கில் பட்டியல் போட்டுக் காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன?

சேம்பர் ஆஃப் காமர்ஸில் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஒரு குழுவிற்கு ஆதரவாக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார் சுகுமாறன். அதற்குத் தனது மனித உரிமை முகமூடியைப் பயன்படுத்தியுள்ளார்.

அ.மார்க்ஸ் குழுவிலுள்ள லீனா மணிமேகலை, டாடா நிறுவனத்திற்காக பிரச்சாரப் படம் இயக்கிக் கொடுத்ததையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். (http://www.vinavu.com/2012/06/18/silence/)

அ.மார்க்ஸ் இலங்கை படுகொலையை எதிர்த்த தமிழுணர்வாளர்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே பகைமை உருவாக்கும் வேலையை வெளிப்படையாகவே செய்தது எல்லோரும் அறிந்ததுதான். கருணா அம்மான், டக்ளஸ் சித்தப்பா வரை அவரது தொடர்புகள் நீள்வது ஒன்றும் ரகசியமில்லை. ராஜன் குறையின் பார்ப்பன இந்துத்துவ அரசியலை தெரிந்து கொள்ள இவர்கள் நண்பரான ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘கட்டித் தழுவி கழுத்தை நெறிக்கும் கபடம்’ என்ற கட்டுரையைப் படியுங்கள். பரதேசி படம் குறித்த அவரது பர்வையும் கூட இந்துத்துவப் பார்வைதான். முற்போக்குவாதிகளின் மீது இந்துத்துவ சாயம் பூசுவதற்காக முஸ்லிமாக நடித்தவர் சுகுணா திவாகர். இன்று அ.மார்க்ஸுக்கு வரிந்து கட்டி எழுதும் கவின்மலர், ஷோபாசக்தி தலித்தாக நடித்ததற்கு உதவி செய்தவர். ரவிக்குமார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

இன்றும் இவர்கள் ஆளும் வர்க்கத் தொடர்புகளுடன் தான் இருக்கிறார்கள். அன்றும் இப்படித்தான் இருந்தார்கள். முற்போக்கு முகமூடி போட்டுக் கொண்டே ஆளும் வர்க்கங்கள் ஏவியதைச் செய்யக் கூடியவர்கள்தான் இவர்கள். இவர்களது மனித உரிமை பிஸினஸ் எப்படி ஆளும் வர்க்க சேவை செய்யக் கூடியதாக உள்ளது என்பது குறித்து எனது அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

ராமதாஸ் அப்போது நல்லவராக இருந்தார்

'ராமதாஸ் எங்களிடம் நடித்தார் என நாங்கள் நம்பவில்லை' என்று அ.மார்க்ஸ் கூறியுள்ளார். அதாவது சாதி ஒழிப்பு போன்றவற்றில் உண்மையிலேயே பா.ம.க நம்பிக்கை கொண்டிருந்தது, எனவே அந்தக் கட்சியை நம்புவதற்கும் ஆதரிப்பதற்கும் அடிப்படை இருந்தது என்பது இதன் பொருள்.

1987ல் பா.ம.க வன்னியர் சங்கமாக இருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டது. ஏராளமான குடிசைகள் எரிக்கப்பட்டன. 4000 குடிசைகள் என்றெல்லாம் கணக்குகள் சிலர் கூறுகின்றனர்.

1991 மே மாதத்திலேயே பா.ம.கவையும் அதற்கு ஆதரவாக இருக்கும் பின்நவீனத்துவ வாதிகளையும் அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் கட்டுரை வெளியிட்டுவிட்டது. அக்கட்டுரையில் ராமதாஸ் ‘வன்னியர் ஆண்ட பரம்பரை, பல்லவ குலம்’ என்று பெருமையடித்துக் கொண்டதும், வன்னிய இளைஞர்கள் அக்கினிக் குண்டம் சின்னம் பொறித்த வன்னியர் சங்கக் கொடிகள்,  பனியன்களுடன் பா..ம.க வேலை செய்வதும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினப்புரட்சி நாளேட்டில் அய்யா அவர்களின் ஆசியோடு நடைபெறும் வன்னியர் சாதித் திருமண விளம்பரங்களும், வன்னியர் சங்கத்தின் வாழ்த்துக்களும் இடம்பெற்றுள்ன என்று கட்டுரை கூறுகிறது. தற்போது திரும்பவும் இக்கட்டுரை வினவில் வெளியிடப்பட்டுள்ளது. (http://www.vinavu.com/2013/05/08/post-modernists-endorsed-ramadoss/)

குமுரன் என்ற தோழர் தனது பின்னூட்டத்தில் “மக்கள் யுத்தக் கட்சியின் மக்கள் திரள் அமைப்பான மக்கள் பண்பாட்டுப் பேரவை, பின்நவீனத்துவத்தை அம்பலப்படுத்தி அப்போதே பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது; கூட்டங்கள் நடத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இத்தனைக்கும் பிறகுதான் 15.11.91 நிறப்பிரிகையில் அய்யாவின் புகழ்பாடும் அந்தப் பேட்டி வருகிறது. சாதாரணமாக தினப்புரட்சி நாளேட்டை ஒரு புரட்டு புரட்டினாலே தெரியும், அது வன்னியர் சங்கம்தான் என்பது. எனவே அய்யா மீது அப்போதே போதுமான அளவிற்கு கூர்மையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர் அப்போது நல்லவராக இருந்தார் என்பது நம் எல்லோரையும் முட்டாள்கள் ஆக்கும் முயற்சி. அய்யாவும் சரி, பின்நவீனத்துவ வாதிகளும் சரி, அப்போதும் அயோக்கியர்கள்தான்; இப்போதும் அயோக்கியர்கள்தான். இதில் சந்தேகமே இல்லை என்பதைத்தான் ‘அய்யா அப்போது நல்லவர்’ என்னும் அ.மார்க்ஸின் வாக்குமூலம் காட்டுகிறது. அவருக்கு ஏராளமான நற்சான்றிதழ்களை வாரி வழங்கிய சுகுணாதிவாகரின் பதிவும் காட்டுகிறது.( ஆமாம் அது ஏன் நீக்கப்பட்டுவிட்டது? )

 வன்னியர்கள் நக்ஸலைட்டுகள் ஆகாமல் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம் என்று காடுவெட்டி குரு கூறியுள்ளது எல்லோருக்கும் தெரியும்.

எனவே பா.ம.கவின் நோக்கம் நக்ஸல்பாரி அமைப்புகளைத் தடுத்து நிறுத்துவதுதான் என்பது பா.ம.க. பொறுப்பாளர்களுக்குத் தெரியும். இந்தக் கட்சி ஒரு பிழைப்புவாதக் கட்சி, அதை வளர்த்து விடுபவர்கள் அயோக்கியர்கள் என்பது ம.க.இ.கவிற்குத் தெரியும். பின்நவீனத்துவம் ஒரு பொதுவுடைமை விரோத இயக்கம் என்பது மக்கள் பண்பாட்டுப் பேரவைக்குத் தெரியும். இந்த பின்நவீனத்துவ கும்பலுக்கு மட்டும் தெரியவே தெரியாது, தங்களைப் பற்றிய விமர்சனங்கள் கூடத் தெரியவே தெரியாது என்பதை நாம் நம்ப வேண்டும்.

 இவர்கள் தெரிந்துதான் பா.ம.க. வை ஆதரித்தார்கள் என்பதற்கு மேலும் சில உதாரணங்கள் காட்ட முடியும்.

'அமைப்பே தேவையில்லை, தலித் தலைமை' என்றவர்கள் ஏன் பா.ம.கவுக்கு விதிவிலக்கு அளித்தார்கள்?

நிறப்பிரிகையில் வெளிவந்த பேட்டி ஒரு பிரச்சார உத்தி. அய்யாவை ஒரு முற்போக்காளராக முன்னிருத்தும் நடவடிக்கை. இந்தப் பேட்டியில் தமது கல்விக் கொள்கை கல்யாணி சொல்வதுதான் என்கிறார் ராமதாஸ். அந்தாளவிற்கு இவர்களுக்குள் ஆழமான உறவுகள் இருந்துள்ளன. இதெல்லாம் ஓரிரு நாளில் நடக்க முடியுமா என்ன? இவர்கள் பா.ம.கவுடன் உறவு கொண்டிருந்ததைப் பற்றி 1991 மே மாதத்திலேயே புதிய ஜனநாயகம் கூறுகிறது. எனவே அதற்கும் முன்னிருந்தே இவர்களுக்குள் உறவுகள் இருந்திருக்க வேண்டும்.

எனவே திண்டிவனம் பஸ்ஸ்டாண்டில் பின்நவீனத்துவவாதிகள் நின்று கொண்டிருந்தபோது ராமதாஸ் வந்தார். காது குடைவதற்கு வைத்திருந்த பேப்பரைக் கொண்டு ஒரு பேட்டி எடுத்தோம் என்பதெல்லாம் காது குத்தும் வேலைகள்.

வன்னியர் தலித்துகளின் கோரிக்கைகளை யாரும் கண்டு கொள்ளாததால்தான் அந்த அமைப்புகள் தோன்றின என்று கூறும் சுகுமாறன் கட்டுரையின் முடிவில் ஒரு பல்டியடித்து “ரஷ்யா, சீனா வீழ்ச்சிக்குப் பிறகு அரசைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. சிவில் சமூகத்தின் கருத்து மிகவும் முக்கியம்…  மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரைக் கடந்து சார்த்தர், கிராம்ஷி, அல்தூஸர் ஆகியோரின் சிந்தனைகள் வெளிச்சம் பெற்றன. பெரியார் மீதான புதிய வாசிப்பு தோன்றியது. இந்தச் சூழலில்தான் அடையாள அரசியல் உலகெங்கும் புத்துயிர்ப்புப் பெற்றது. அதன் அங்கமாக இது போன்ற தலித், வன்னியர் அமைப்புகள் முன்னிலை பெற்றன” என்கிறார். அடையாள அரசியலுக்காக இங்கே பிரச்சாரம் செய்தது யார்? எவாஞ்சலிக்கல் சர்ச்சும், தலித் ஆதார மையமும், பின்நவீனத்துவ வாதிகளும் அல்லவா?

மார்க்சிய, லெனினிய அமைப்புகளின் பலவீனத்தை மறைக்கும் முயற்சியா?

மா.லெ. அமைப்புகளின் பலவீனம் என்று சொல்லப்படுவதைப் பொருத்தவரை, பலவீனத்தைக் கடந்து முன்னேறும் அமைப்புகளே நிலைத்து நிற்கும்; மற்றவை அழியும். மார்க்சிய லெனினிய அமைப்புகள் இவர்களை உரிய காலத்தில் இனங்கண்டு கொண்டன. அமைப்புகளின் நிலைபாடு சரியென்று வரலாறு நிரூபித்துள்ளது.

அதுசரி. அவை பலவீனமாக இருந்தன என்பதற்காக இவர்கள் அரசுடன் சேர்ந்து ஒரு சாதி வெறி அமைப்புக்கு புரட்சிகர அமைப்பு என்ற முகமூடி அணிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியுமா? பொதுவுடைமை எதிர்ப்பு, மக்கள் விரோத பணி செய்ததை மன்னித்துவிட முடியுமா?

கௌதம சன்னாவின் மறுப்பு

பின்நவீனத்துவ மொக்கைகளைப் போலல்லாமல் தோழர் கௌதம சன்னாவின் கட்டுரை அரசியல் பேசக்கூடியதாகவும் விவாதத்திற்கு இடமளிப்பதாகவும் உள்ளது. தலித் அரசியல், போர்டு பவுண்டேஷனில் இருந்து அல்ல; அம்பேத்கரிலிருந்தும், அயோத்திதாச பண்டிதரிலிருந்தும் தொடங்குகிறது என்று சன்னா கூறியுள்ளார்.

தலித் மக்களின் போராட்ட அரசியல் மதுரை வீரனிலிருந்தும், அதற்கு முன்பு காத்தவராயன், நந்தனாரிலிருந்தும் தொடங்குகிறது என்று நாங்கள் கூறுகிறோம். இந்தியாவில் வர்க்கப் போராட்டம் நடக்கவில்லை என்பது பின்நவீனத்துவ அரசியல். ஒருநாளும் தலித்துகள் அடக்குமுறைகளை அமைதியாக சகித்துக் கொள்ளவில்லை என்பது மார்க்சிய அரசியல். கட்டுரையில் போர்டு பவுண்டேஷன் முன்னிருத்திய தலித் அரசியல் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பிருந்த தலித் அரசியல் பற்றிய வகுப்பு அத்தனை அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

கௌதம சன்னா தனது கட்டுரையில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் தலித் அரசியலில் ஈடுபாடு காட்டின என்ற அம்சத்தை எளிதாகக் கடந்து செல்கிறார். எனவே தலித் அரசியல் குறித்த விரிவான விவாதத்தில் ஈடுபடுவதற்கு முன் இத்தகைய சக்திகள் குறித்தும் கீழ்க்கண்ட வேறு சில விஷயங்கள் குறித்தும் அவரது கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

1. கௌதம சன்னா தனது கட்டுரையில் தன்னை மார்க்சிய மாணவனாக கூறிக்கொள்கிறார். ஆனால் தற்போது இணைய தளத்தில் காணக் கிடைக்கும் ஒரு புகைப்படம் அவரது மார்க்சியப் போர்வையை உருவி விடுகிறது. பவுத்த மதத்துக்கு மதம் மாறும் ஒரு நிகழ்ச்சியில் சன்னா பிரசங்கம் செய்கிறார். கூடவே பவுத்த காவி யூனிபார்மில் ஒரு துறவியும் உள்ளார்.

மதத்திற்கும், மார்க்சியத்திற்கும் என்ன தொடர்பு? பவுத்த மதம் எந்தவிதத்தில் சாதிய இழிவைப் போக்க உதவும்? இது குறித்து அனுபவத் தொகுப்பு என்ன?

2. "மகா போதி சொஸைட்டி, சங்கரக்ஷிதாவின் தீன்ரத்னா புத்திஸ்ட சொஸைட்டி போன்ற அமைப்புகள் அதிகார மையத்திற்கு உதவுகின்றன. தீன் ரத்னா அமைப்பு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது. புத்த மதமே ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் மதம்தான்” என்ற விமர்சனங்களுக்கு பதில் என்ன?

3. சாதி ஒழிப்பிற்கான விடுதலைச் சிறுத்தைகளின் திட்டம் என்ன? அது எந்த விதத்தில் இதற்கு முன் வைக்கப்பட்ட திட்டங்களில் இருந்து மறுபட்டது?

4. சாதியம் பற்றிய புரிதல், புரிதல் என்கிறீர்களே அது என்ன? தங்களது புரிதலையும் நடைமுறையையும் பற்றி சற்று விரிவாகக் கூறுங்கள்?

 5. தலித் ஆதார மையம், அதற்கு ஆதாரமாக இருக்கும் எவாஞ்சலிக்கல் சர்ச், அதற்கு ஆதாரமாக இருக்கும் ஏகாதிபத்தியம் இவை குறித்து தங்கள் கருத்து என்ன?

6. மார்க்சிய அமைப்புகளின் போதாமை குறித்துப் பேசும் தாங்கள், அதைவிட அதிகமாக தலித் இயக்கங்கள் பிளவுண்டு கிடப்பதையும், ஒரு அடி கூட முன்னேற முடியாமல் முட்டுச் சந்தில் சிக்கித் தவிப்பதையும் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

7. அப்பட்டமான பார்ப்பனிய நிறுவனமான ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்திற்கு தங்கள் தலைவர் திருமாவளவன் விஜயம் செய்ததையும், ஒற்றைக் காலில் நின்று போஸ் கொடுத்ததையும் எப்படிப் புரிந்து கொள்வது?

8. சிதம்பரம் கலவரத்திற்குப் பின்பு திருமாவளவன் இக்கலவரத்திற்கு காரணமானவர்களுடன் எக்காலத்தும் கூட்டு இல்லை என்றார். எந்த அரசியல் பொருளாதார ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? மீறப்பட்டது?

9. இடதுசாரிகளிடம் எப்போதும் தலித் பிரச்சினையைப் பிறரால் புரிந்துகொள்ள முடியாதென சீறும் நீங்கள், இராமதாசு - கருணாநிதி போன்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்பியது எப்படி?

10. இன்றைக்கும் தலித் மக்கள் மீது இடைவிடாத வன்முறைகள் தொடரும்போது வன்முறையை எதிர்கொள்கிற திட்டம், நடைமுறை, அதற்கான அமைப்பு வடிவம் வேண்டுமா? வேண்டாமா?

இப்படியான இன்னும் பல விசயங்களை நாம் திறந்த மனதுடன் விவாதிப்போம். ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களுக்கும், மக்கள் தலித் இயக்கங்களுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்வோம். ஏனென்றால் சமூக நெருக்கடிகள் மீண்டும் மக்கள் போராட்டங்களை பெரிய அளவில் முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது. அது சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் கோருகிறது. சாதி ஒழிப்பை உயிராகக் கொண்டவர்கள் புரட்சிகர இயக்கங்களை கட்டி வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். இனி எங்களுக்கு வாய்ச் சவடால்காரர்கள் தேவையில்லை என்பது தான் இவ்விவாதங்களைத் தூண்டியிருக்கிறது.

 இந்தப் புறநிலை எதார்த்தமே இந்த விவாதத்தை வீரியமாக்குகிறது. நாம் தொடருவோம்.

பின்நவீனத்துவம் என்பது வெறும் பேசும் பொருளல்ல

பின்நவீனத்துவத்தின் மீதான நமது விவாதம் என்பது கட்டுரை எழுதும் போட்டியல்ல. பின்நவீனத்துவவாதிகள் என்பவர்கள் சமூக விரோதிகளாவர். அவர்கள் அரசின் கைக்கூலிகள். சமூக மாற்றத்துக்கான மக்கள் இயக்கங்களை முளையிலேயே அழிப்பதற்காக அரசுடன் இணைந்து சேவகம் செய்பவர்கள். இயக்கங்களைப் பலவீனப்படுத்தி தோழர்களை வேட்டையாட அரசுக்குத் துணை நிற்பவர்கள்.

அரசு புரட்சியாளர்களை எப்போதும் கடுமையாக ஒடுக்கியும், அழித்தும் வந்திருக்கிறது. அத்தனை இழப்புகளையும் தாண்டி இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் பின்நவீனத்துவவாதிகள் தலைதூக்கிய பிறகு அரசின் ஒடுக்குமுறைக்கு ஞாயம் கற்பிக்கும் போக்கு தொடங்கியது. அரசுக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கைகள் கொச்சைப் படுத்தப்பட்டன. இந்த அ.மார்க்ஸ் கும்பல் எல்லா சமூக விடுதலை இயக்கங்களையும் தீவிரவாதிகளாகவே சித்தரிக்கின்றனர். ஈழ விடுதலை இயக்கத்தையும் இப்படித்தான் கொச்சைப் படுத்தினர். அதன் மூலம் அரசு வன்முறையை - இன அழிப்பை ஞாயப் படுத்தினர்.

இவர்கள் இப்போது முசுலீம் மக்களிடையே புகுந்துள்ளனர். முசுலீம் சமூகம் அரசின் திட்டமிட்ட தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் - பொருளாதார நெருக்கடியை மூடி மறைக்க இந்திய அரசும், உளவுத்துறையும் 'முசுலீம் பயங்கரவாதம்' எனும் திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன. இதற்காக அப்பாவி முசுலீம் இளைஞர்கள் குறிவைத்து வேட்டையாடப் படுகின்றனர். இதனை எதிர்கொள்கிற முசுலீம் சமூகம் உடனடியாக சமூக மாற்றத்துக்கான இயக்கங்களுடனும், மக்கள் திரளினரோடும் கூட்டு சேர வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால் அ.மார்க்ஸ் கும்பல் இந்த ஒற்றுமைக்கு எதிராக வேலை செய்கிறது. ஈழத்தில் முசுலீம்களுக்கும் ஈழப்போராளிகளுக்கும் இருந்த முரண்பாடுகளை இங்குள்ள முசுலீம்களிடத்தில் ஊதிப் பெருக்குகிறார்கள். அப்படியான முரண்பாடுகள் இங்கு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்கு மாறாக அது போன்ற முரண்பாடுகள்தான் இங்கும் வரும் என பீதியூட்டுகின்றனர். முசுலீம் சமூகம் பிற இயக்கங்களோடும், மக்களோடும் ஒற்றுமை அடைவதை இவர்கள் தடுக்கின்றனர். இவ்வாறு முசுலீம் மக்கள் மீதான அரசின் அடக்குமுறையை எளிதாக்குகின்றனர்.

இதுபோல மக்களைப் பிளவுபடுத்துவதிலும், இயக்கங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதிலும் இப்போதும் பின்நவீனத்துவவாதிகள் தீவிரமாகவே செயல்படுகின்றனர். அதனால் அரசின் நீண்டகாலத் தேவைகள் ஈடேறுகின்றன. மக்களின் வாழ்வாதாரங்களை எளிதாக அரசால் கையகப்படுத்த முடிகிறது. இதோ இன்று தஞ்சை மண்டலத்தில் 1,70,000 ஏக்கர் நிலம் மீத்தேனுக்காகவும், நிலக்கரிக்காகவும் கையகப்படுத்தப்படுகிறது. நாமக்கல், சேலம் மாவட்டங்கள் பிளாட்டினத்துக்காக ஆக்கிரமிக்கப்பட உள்ளன. தமிழக கடற்கரைகள் அனைத்தும் அணு உலைகளுக்காகவும், அனல் மின்நிலையங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தேனி நியுட்ரினோ ஆய்வுக்காக அபகரிக்கப்படுகிறது. மிகமிக ஆபத்தாக ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு என எந்த நீர்நிலைகளிலும் உள்ள ஒரு சொட்டு தண்ணீர் கூட எந்த மக்களுக்கும் உரிமை இல்லை என சட்டமாக்கப்படுகிறது.

மக்களின் வாழ்வை அடியோடு அழிக்கும் அரசின் மேற்கூறிய செயல்கள் நடக்கும் போது மக்களின் கவனத்தை திசை திருப்ப பின்நவீனத்துவவாதிகளால் வளர்த்துவிடப்பட்ட பா.ம.க சாதிய மோதலை திட்டமிட்டு உருவாக்குகிறது. பின்நவீனத்துவவாதிகள் எதுவுமே நடக்காதது போல் அலட்சியத்துடன் அலைகின்றனர். அரசு தனது காரியத்தை எளிதாக சாதிக்கிறது.

ஆகவே பின்நவீனத்துவவாதிகள் கடந்த கால கெட்ட கனவுகளல்ல - நிகழ்கால அபாயம்; எதிர்கால பெருங்கேடு. இவர்கள் எதிரிகள் என்று உணர்ந்ததாலேயே நாம் போராடுகிறோம். நம்மோடு உண்மையை உணர்ந்த ம.க.இ.க, மக்கள் பண்பாட்டுப் பேரவையினர், ம.ஜ.இ.க போன்ற அமைப்புகள் பின்நவீனத்துவத்தை எதிர்க்கின்றனர். முகநூலில் பாரதிதம்பி போன்ற தோழர்கள் துணை நிற்கின்றனர்.

இன்னும் கூட பின்நவீனத்துவம் எத்தகைய எதிரி என உணராத நமது நல்ல நண்பர்களும் உள்ளனர். அ.மார்க்ஸ் கும்பலை ஆதரிப்பது என்பது அரசின் அடக்குமுறைக்குத் துணை போவதென உணராத தோழமை அமைப்புகளும் உள்ளன. இந்த நிலை மாறி அரசின் கைக்கூலிகளான பின்நவீனத்துவவாதிகள் தனிமைப்படுத்தப்படும் வரை நமது போராட்டம் தொடரும்.

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It