தமிழ்த் தேசிய இனத்தின் தலைமைப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். தமிழுக்குத் தமிழகம் தகுவுயர்வளிக்கத் தவங்கிடந்த காலத்தில் தோன்றிய தணல்நெருப்புக் கவிஞர் அவர். அதுபோலவே காலத்தின் தேவைகருதி தமிழர்க்கு வாய்த்த கருவேழப் படைமறவர் தந்தை பெரியார். இனமானப் போரில் பெரியாரின் இடிமுழக்கக் கருத்துகளைப் பாட்டுக் கூர்வேலாய் வடித்துக் கொடுத்தவர் பாவேந்தர். சாதியயாழிப்பு, மூடநம்பிக்கையயாழிப்பு, பெண்விடுதலை, எல்லார்க்கும் எல்லாம் என்றான பொதுமைச் சமுதாய அமைப்பு உள்ளிட்ட பெரியாரின் உயர் எண்ணங்களின் வெற்றிக்கு ஓங்கிக் கூவிய புதுமைக்குயில் நம் பாவேந்தர். உண்மையான புரட்சிக்குயிலும் அவர்தான். சுப்பிரமணியர் துதியமுது பாடிக் கொண்டிருந்த பாரதிதாசனைச் சுயமரியாதைக் கவிஞராக்கியது பெரியாரின் தொடர்புதான். அதனால்தான் பெரியார் பின்வருமாறு கூறுகிறார்.

 “தோழர் பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமின்றி அவைகளைச் சமுதாயத்தில் பல வழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும் சுருக்கமாகவும் கூறவேண்டுமானால் பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி”

-பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி - முன்னுரை(முதற் பதிப்பு)

போலிச் சுதந்திரம்

எவர் ஒருவர் தாம் வாழுங்காலத்தில் அதிகமான எதிர்ப்புக் கணைகளை எதிர்கொள்கிறாரோ அவரே பிற்காலத்தில் அதிகமான மக்களால் போற்றப்படும் தலைவராகவும் மாறக் கூடும். பெரியாரின் வரலாறு நம் கண்முன் காணக் கிடைக்கும் ஒப்பற்ற சான்றாக உள்ளது.

1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக எல்லோரும் மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள். பெரியாரின் தொலைநோக்கு இதில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது. இந்தியாவில் நடந்ததாகச் சொல்லப்படும் சுதந்திரப் போராட்டம் பற்றி 1931 ஆம் ஆண்டே பெரியார் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டவராய் விளங்கினார்.

 “இது ஓர் இந்தியப் பணக்காரனும் மேல் சாதிக்காரனும் ஒருபுறமாகவும், வெள்ளைக்காரப் பணக்காரர் ஒருபுறமாகவும் இருந்து கொண்டு தங்கள் தங்கள் நன்மைக்கு என்று செய்துவரும் ஒரு போராட்டமேயாகும். அதாவது வெள்ளைக்காரப் பணக்காரன் தனது அரசாட்சி என்னும் தந்திரத்தை ஓர் ஆயுதமாகவும், இந்தியப் பணக்காரனும் மேல் சாதிக்காரனும் இந்தியப் பாமர ஜனங்களின் முட்டாள்தனத்தையும் சில மக்களின் வேலையில்லாத் தன்மையையும் இன்னொருஆயுதமாக வைத்துக் கொண்டு செய்யப்படும் யுத்தமேயாகும்” (குடியரசுத் தலையங்கம் 28.06.1931)

இப்படி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெள்ளையனுக்கும், இந்தியப் பணக்கார மேல்சாதியானுக்கும் இடையே நடந்த போராட்டமாகவே பெரியார் பார்த்தார்.

 “மற்றபடி பூரண சுதந்திரம் என்பது நம் நாட்டிலுள்ள சாதிமத வித்தியாசங்கள் நீங்கினால்தான், கிடைத்த சுதந்திரத்தை மக்கள் நலத்திற்கும், தேசநலத்திற்கும் பயன்படுத்த முடியமேயயாழிய இந்த நிலைமையில் அவனவன் சுயநலத்திற்கும், சுயசாதி நலத்திற்கும்தான் உபயோகிப்பான்” (குடியரசு 14.09.1930)

பெரியாரின் இக்கருத்தினைப் பாவேந்தர் பாரதிதாசன் தன் பாடல்கள் வழியே வெளிப்படுத்தினார்.

 “பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள்

சாதிச் சண்டைவளர்க்க தக்க இதிகாசங்கள்

கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்

கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றோர்...

நல்ல இமயம் நலங்கொழிக்கும் கங்கைநதி

வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை

செந்நெல் வயல்கள் செங்கரும்புத் தோட்டங்கள்

தின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள்

இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்

முப்பத்து முக்கோடி தேவர்கள் மொய்த்தென்ன

செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன

மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்

ஓடுவதெந்நாள் ?” என்று கேட்டார்.

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பாரதிதசான் கவிதைகள் முதல்தொகுதி)

அரசியல், பொருளியல் விடுதலைக்கு முன் நிபந்தனையாகச் சமுதாய விடுதலையை இங்கே பெரியார் முன்வைத்தார். சாதியத்தையும், சாதிய அமைப்பைச் கட்டிக்காக்கும் மத, இதிகாசப் புராணப் பொய்களையும் கல்லி எறியாதவரை இந்நாட்டில் விடுதலை என்பது முயற்கொம்பே என்பது பெரியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

 “இந்த நாட்டின் எல்லாத்துறையும் மேல் சாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் - பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டுள்ளதால் அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் இலாபம் என்று கருதி, இந்த அமைப்பின் மூலத்தில் கையே வைப்பதில்லை. அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். சூத்திரன் பறையன் என்கிற சாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காணமுடியாது என்று உறுதியாகக் கூறுவேன்”. (விடுதலை, 05.05.1953)

பெரியாரின் அழுத்தமான இந்தச் சாதியயாழிப்புக் கருத்தியல் பாவேந்தர் உள்ளத்தை ஆழமாகப் பற்றிக் கொண்டது.

 “இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”

(பாண்டியன் பரிசு)

என்று கொதித்துச் சினக்கிறார். குழந்தைகளின் தாலாட்டுப் பாடல்களில் கூடச் சாதிக் கொடுமை அவர் நெஞ்சைச் சுடுகிறது.

 “நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்

சாதிஎன்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்

கணலேற்ற வந்த களிறே”, என்று ஆண் குழந்தைçயும்,

“வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி” என்று பெண் குழந்தையையும் பார்த்துப் பாடுகிறார்.

 “சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்

தாங்கி நடைபெற்றுவரும் சண்டை யுலகிதனை

ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்

ஒழித்திடுவோம் புதியதோர் உலகம் செய்வோம்”

 (பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி) என்று அறை கூவி அழைக்கிறார்.

தமிழ்த்தேசியத்தை அரிக்கும் சாதியப் புற்றுநோய்

பார்ப்பன,மேல்சாதிச் சுரண்டலுக்கு எதிராக வாழ்நாள் இறுதிவரை போராடிய வைக்கம் வீரர் பெரியார், சூத்திர - கீழ்ச்சாதி மக்களிடையே நிலவிய ஆதிக்கச் சாதி ஆணவத்தையும் மிகக் கடுமையாகக் கண்டித்தார். ‘பறையர்’ என்கிற சாதி இழிவைத் துடைத்தெறியாமல் ‘சூத்திர’ சாதி இழிவைக் கழுவவே முடியாது என்று அவர் மிகக் காட்டமாக எச்சரித்தார்.

‘பறையர்’ என்கிற ஒரு சாதிப்பெயர், நம் நாட்டிலிருப்பதால்தான் ‘சூத்திரர்’ என்கிற ஒரு சாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. ‘பறையர்’ என்கிற சாதிப் பெயரைவிடச் ‘சூத்திரர்’ என்கிற சாதிப்பெயர் மிக இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்தீரிகளில் பதிவிரதைகளுக்கும் சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்கள் இருக்கலாம். சூத்திரச்சிகளுக்கு அப்படி இருக்க இடமே இல்லை. ஏனென்றால் ‘சூத்திரச்சி’ என்றால் ‘தாசி’ , ‘வேசி’ என்றுதான் பொருள். சூத்திரன் என்றால் தாசிமகன் வேசிமகன் என்றுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம்”

(07.04.1926 இல் காந்தி கிணறு திறப்புவிழா உரை)

பள்ளர், பறையர், சக்கிலியர் என்று சாதி இழிவு சொல்லித் தமிழ்மக்களின் ஒரு பிரிவாரை இன்னமும் தீண்டத் தகாதவர்களாய்க் கருதும் புதிய பார்ப்பனியக் காட்டுவிலங்காண்டிகளைப் பாவேந்தரும் மிக வன்மையாகக் கண்டிக்கிறார். ஆரியர்களின் சதிகாரச் சூழ்ச்சிகளை ஒப்புக் கொள்ளாத உண்மைத் தமிழர்களைத்தான் பார்ப்பனர்கள் சேரிப்பறையர் என்று நம்மிலிருந்து ஒதுக்கி வைத்தனர். உண்மையில் அவர்கள்தாம் நமக்கு உற்றார், உரம் சான்ற தமிழ்வீரர் என்று கலங்கிச் சொல்கிறார் பாவேந்தர்.

ஆரியர்தமை ஒப்பா

ஆதித்திராவிடரைச்

சேரியில் வைத்தாரடி - சகியே

சேரியில் வைத்தாரடி

சேரிப்பறையர் என்றும்

தீண்டாதார் என்றும் சொல்லும்

வீரர்நம் உற்றாரடி - சகியே

வீரர்நம் உற்றாரடீ

(சமத்துவப் பாட்டு - பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி)

தீண்டாமையின் அப்பட்டமான ஊற்றுக்கண்களாயும், ஆதிக்கச் சாதியாரின் அசைக்க முடியாத கோட்டைகளையும் தமிழகத்தின் சிற்றூர்ப்புறங்கள் இன்றளவும் திமிரோடு எழுந்து நிற்கின்றன. ஆண்டைகளில் இந்தச் சாதிக் கொட்டத்தை அடக்கப் பெரியார் ஒரு வழி சொல்கிறார்.

“கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப்பிள்ளை வேலையைப் பறையனுக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையைப் பள்ளர் சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால்தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போடவேண்டும். கணக்குப்பிள்ளை மணியம் வேலைகளை அப்படியே ஒதுக்கிவைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும். அதே மாதிரி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப் இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்குக் கொடுக்க வேண்டும். இப்படியயல்லாம் செய்தால் சமுதாயத்தில் சாதித்திமிர் ஒழிந்துபோகும்”.

(11.04.1964 இல் வில்லிவாக்கம் சாதிஒழிப்பு மாநாட்டு உரை)

பெரியாரின் இதே குரலில் தமிழர்களிடம் நிலவும் உட்கழி ஆணவப் போக்கைப் பாவேந்தரும் அம்பலப்படுத்துகிறார். என்னதான் இவர்கள் தம்மைச் சாதியால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், பார்பான் எழுதி வைத்த வர்ணவிதி சூத்திரங்களின் படி இவர்களும் தாழ்ந்தவர்களே என்று பாவேந்தர் மரண அடி கொடுக்கிறார்.

மேலாம் முதலி செட்டி

வேளாளப் பிள்ளைமுதல்

நாலாயிரம் சாதியாம்-சகியே

நாலாயிரம் சாதியாம்!

எம்சாதிக் கிவர் சாதி

இழிவென்று சண்டையிட்டுப்

பஞ்சாகிப் போனாரடி-சகியே

பஞ்சாகிப் போனாரடி!

செட்டிகோ முட்டிநாய்க்கன்

சேணியன் உயர்வென்றே

கட்டுக் குலைந்தாரடி-சகியே

கட்டுக் குலைந்தாரடி!

சேர்ந்துயர் வென்றிவர்கள்

செப்பினும் பார்ப்பனர்க்குச்

சூத்திரர் ஆனாரடி- சகியே

சூத்திரர் ஆனாரடி!

(சமத்துவப் பாட்டு: மேற்படி தொகுதி)

திராவிட இயக்கத்தின் முகாமையான கொள்கையாகப் பின்வருமாறு பொரியார் பேசுகிறார்: “திராவிடர் இயக்கத்தின் முக்கியமான கொள்கை என்னவென்றால் இந்நாட்டில் பறையன் என்றும் பார்ப்பான் என்றும், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக்காரன், என்றிருப்பதையும், சூத்திரன் பஞ்சமன் என்றிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதே ஆகும்”. (குடியரசு:8.7.1947 ).

பெரியார் சொன்ன ஒரே சமுதாய மக்கள் என்பதைத் தமிழ்த்தேசியக் கவிஞராகிய பாவேந்தர், உடலால் பலராய்க் காணப்பட்டாலும், தமிழர் உள்ளத்தால் ஒரே அடையாளமாகக் காணப்படவேண்டும் என்று துடிக்கிறார். அப்படிச் சாதி, மத வேற்றுமைகள் கடந்து தமிழர்கள் ஒன்றானால், எதிரிகளின் எந்தக் கள்ளத்தனத்தாலும் தமிழர்களைப் பிரிக்க முடியாது என்கிறார்.

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்

வீரங்கொள் கூட்டம் அன்னார்

உள்ளத்தால் ஒருவரே மற்(று)

உடலினால் பலராய்க் காண்பார்

(பாரதிதாசன் கவிதைகள்: முதல் தொகுதி)

சாதி, வர்ணாசிரமம், தீண்டாமை ஆகியவற்றின் காப்புக் கோட்டைகளாய்க் கோயில்களும், பிற வழிபாட்டு இடங்களும் திகழ்கின்றன. கோயில் நுழைவுப் பேராட்டங்களை மிக வீச்சோடு மக்களிடையே கொண்டு சென்றவர் பெரியார். அன்று நந்தனை எரித்துக் கொன்ற சிதம்பரங்கள் இன்றளவும் தொடர்கின்றன. கண்டதேவிக் கோயில் தேரை வடம்பிடித்து இழுக்கும் முறை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கனவாகவே இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இதற்கான சண்டை ஓயவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு வகை வன்கொடுமைகளில் கோயில்வழிபாட்டு உரிமை மறுப்பு முதன்மையான இடத்தைப் பெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறீ அபூர்வமாயா பெருமாள் கோயில் திருவிழாவில் தலித்மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுமதிக்கப்படாததைத் தட்டிக் கேட்க, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கோயில் பகுதிக்குள் தலித்துகள் நுழைந்தனர். இந்நிலையில் அங்கிருந்த தேர் எரிக்கப்பட்டுள்ளது. இதைத் தலித்துகள்தான் செய்திருப்பார்கள் என்று கருதிய சாதி இந்துக்கள், சேரிக்குள் நுழைந்து 13 தலித் வீடுகளைத் தாக்கினர்.(தி இந்து 26.01.2010)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உளுத்திமடை கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முற்பட்ட ஏழு தலித்துகள் சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்

(தி இந்து 19.01.2010)

(தகவல் : தலித் முரசு, சனவரி 2010 , பக்.40)

இப்படி தலித்துகள் மீது ஏவிவிடப்படும் வன்முறைகளை ஏராளமாக எழுதிக்கொண்டே போகலாம்.

காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு, பின்னர் சமூகச் சீர்திருத்தவாதியாய்த் தன் பொதுவாழ்வைத் தொடங்கிய தந்தை பெரியார் வாழ்நாள் இறுதிக் காலம்வரை கடவுள், மதம், புராணப் பொய்ப்புரட்டுகளைக் கடுமையாகத் தாக்கினார். அனைத்து உயிர்களுமே ஆண்டவனின் படைப்புகள் என்று சொல்கிறோம்.ஆனால் அந்த ஆண்டவன் முன்னிலையிலே இத்தகைய அநீதிகள் நடைபெற்றால் அந்த ஆண்டவனை ஒழிப்பதே நம் பெரும்பணி என்று ஆர்ப்பரித்தார்.

“கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார். சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார், என்று கடவுள்மேல் பழிபோட்டு, கொடுமைகள் நிலைக்கச் செய்வதை, விட்டுக்கொடுத்துக் கொண்டு, அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும், அக்கிரமங்களுக்கு அனுகூலமாயும் இருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டும் என்கிறோம்”.

(03.08.1929 இல் கண்ணப்பர் வாசகசாலை திறப்பு விழாவில்)

பிச்சையயடுத்துத்தான் ஒருவன் உலகில் உயிர்வாழ வேண்டுமெனில் அந்த உலகைப் படைத்ததாய்ச் சொல்லப்படும் இறைவனே அழிவானாக என்று சினந்து கூறினார் நம் திருவள்ளுவர்.

நாயும், நரகல் எச்சிலைத் தின்னும் காக்கையும் கூடக் கோயிலில் நுழையத் தடையில்லை என்றால் மனிதர் நுழையத்தடையா? தாழ்ந்தவர் வந்து தீண்டினால் தன்னுயிரே போய்விடும் என்று ஒரு சாமி சொல்லுமானால் அஃது சக்தியுள்ள சாமியோ? உயர்ந்ததாகச் சொல்லப்படும் அந்தக் கோயிலில் கூட உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று சொல்லி வைத்தால், இந்தக் கொடுமைக்காகக் கொதித்தெழுந்து காறித் துப்ப வேண்டாமா என அடுக்கடுக்காகக் கேட்கிறார் பாவேந்தர்.

குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்

கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு

மக்களிலே சிலர் மாத்திரம் அந்த

வகையிலும் கூட்டிலையோ?

தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்

சாமிக்குச் சத்திலையோ? - எனில்

வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட

மேலும் சமத்திலையோ?

கூறும் ‘உயர்ந்தவர்’ ‘தாழ்ந்தவர்’ என்பவர்

கோயிலில் செய்துவிட்டுப் - புவி

காறியுமிழ்ந்தது யார்முகத்தே யில்லை

காட்டுவீர் ஒன்றுபட்டு!

(‘ஆலய நுழைவு’ - பன்மணித்திரள் )

சாதிச் சழக்கர்களைக் காறி உமிழ்வது மட்டுமல்ல, சாதி கடந்த தமிழர்களாய் ஒன்றுபட்டுக் காட்ட வேண்டுவதும் நம் கடமையல்லவா?

- தமிழேந்தி