இந்திய அரசானது இலங்கையின் மீதான தனது பொருளாதார அரசியல் ஆதிக்கத்திற்காகவும், தமிழீழ மக்களின் இனப்படுகொலையில் இந்திய அரசின் கூட்டும், சதியும் உள்ளது என்ற முழு (பூசணிக்காயை) உண்மையை (சோற்றில்) மறைப்பதற்காகவும், தெற்காசிய வல்லரசான இந்திய அரசு இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருந்த நிலையிலிருந்து, கொஞ்சம் இறங்கி வந்து குறைந்த பட்சம் அமெரிக்க தீர்மானத்தை (திருத்தங்கள் முன்வைக்க இல்லையென்றாலும், தீர்மானத்தை மழுங்கடித்தாலும்) ஏற்றது.
 
 முள்ளிவாய்க்கால் போரின் போது உண்ணாவிரத நாடகமாடி ஏமாற்றிய கபடவேடதாரி கருணாநிதி தலைமையிலான தி.மு.க-கட்சியானது, தமிழீழ சிக்கலுக்காக காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியது, மந்திரி பதவிகளை ராஜினாமா செய்தது.
 
 போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று பேசிய ஜெயலலிதா, தற்போது தமிழ் தேசிய மக்களின் விடிவெள்ளியாக புது அவதாரம் எடுத்திருக்கும் (அரிதாரம் பூசியிருக்கும்) ஜெயலலிதா, சட்டமன்றத்தில்'தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்','சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக நிறுத்த வேண்டும்' என்ற முக்கிய தீர்மானத்தை இயற்றினார். (இது மத்திய அரசை பணியவைக்க உதவாது என்றாலும்) இலை மலர்ந்தால் ஈழம் மலரும் (இலை மலர்ந்துவிட்டது ஈழம்...?) என்று ஈழ ஆதரவு ஓட்டுக்களை ஜெயலலிதாவிற்கு பெற்றுதரவும், ஈழ அரசியல் மூலம் தனது அரசியல் பிழைப்பை நடத்தவும் வாய்வீச்சு அரசியல் நடத்தும் சீமான் மற்றும் தெற்காசிய வல்லரசான இந்தியாவிடம் தமிழீழ பிச்சை கேட்டு அவ்வப்போது ஒன்றிரெண்டு (ஓரளவிற்கு மக்கள் செல்வாக்கிருந்தும்) போராட்டங்கள் நடத்தி ஈழச்சிக்கலை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன், வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் முகத்திரை மக்கள் முன் கிழிந்து தொங்கியது.
 
 தமிழகத்தின் அனைத்து பிரிவு மக்களும் தமிழீழ மக்களுக்காக வீதிக்கு வந்து போராடினர். தமிழீழ மக்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும், சர்வதேச மக்களும் தமிழகத்தை நம்பிக்கையுடன் நோக்கினர்.
 
 மேற்கூறிய அனைத்தையும் சாதித்த மகா ஆற்றல், மாணவர் ஆற்றல் ஆகும். தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சிங்கள இனவெறி அரசின் மனிதநேயமற்ற இனப்படுகொலையின் கொடூர வடிவமாக வெளிவந்த பாலகன் பாலசந்திரன் படுகொலை காட்சிக்கண்டு குமுறி எழுந்த மாணவர்கள் போராட்டம். தன்னெழுச்சியாக லயோலா கல்லூரியில் தொடங்கபட்டு, தமிழகம் முழுவதும் பற்றி பரவியது. இம்மாணவர் போராட்டம்தான் மேற்கூறிய வெற்றிகளை ஈட்டியது.
 
 மாணவர்கள் போராட்டம் குறிப்பிடதகுந்த வெற்றிகளை ஈட்டியுள்ள நிலையில், மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் போராட்டம் குறித்து தொலைகாட்சி, பத்திரிகை, வலைதளம் வாயிலாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன அவற்றை முதலில் பார்ப்போம்.

மாணவர்கள் கோரிக்கைகள் குறித்து...
 
 பேராடுகின்ற மாணவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தில்லை, பொது வாக்கெடுப்பு கோரிக்கை நடைமுறை சாத்தியமற்றது. போரால் பாதித்துள்ள ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராடுவதே மிக சரியானது, நடைமுறை சாத்தியமானது. பொது வாக்கெடுப்பு ஈழசிக்கலுக்கு தீர்வாகாது 13-வது சட்டதிருத்தமே ஈழதமிழர்களுக்கான விடுதலை பெற்று தரக்கூடியது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தமே சரியான தீர்வு. ராஜீவ் படுகொலையின் பின்னணியை கண்டடைவதே ஈழசிக்கலுக்கான தீர்வாக அமையும், இனப்படுகொலை என்பதற்கான சான்றுகள் அளிக்கபடவில்லை, நிரூபிக்கவில்லை. ஈழதமிழர்களின் முக்கிய உடனடிசிக்கலான மறுவாழ்வு பணிகள், இன அழிப்பை தடுத்து நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளுக்கு போராடுவது பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை நீர்த்து போக செய்யும்.
 
 அங்குள்ள ஈழதமிழர்களுக்கு போராடுகிற மாணவர்கள், அங்குள்ள ஈழத்தமிழர்களுக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா அரசு, இங்குள்ள அகதிகளுக்காக ஏன் போராடவில்லை, கச்சத்தீவை மீட்க ஏன் குரல்கொடுக்கவில்லை. என்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கபடுகின்றன. இவற்றில் பல மாணவர்களின் ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தை திசைதிருப்பும் நோக்கோடு, தமிழீழ துரோகிகளாலும் காங்கிரசு கட்சியாலும் முன்வைக்கப்படுகிறது.
 
 மாணவர்களாகிய நாம் மேற்கூறப்பட்ட கருத்துக்களை ஆழ்ந்த அரசியல் அறிவுடன் புரிந்து கொள்வதோடு தமிழீழ மக்களுக்காக நாம் முன்வைக்க வேண்டிய அடிப்படை கோரிக்கைகள் என்ன என்பதையும் அதன் அரசியல் தன்மை பற்றியும் போராட முன்வருகின்ற ஒவ்வொரு இளையோரும், தமிழக மக்களும் புரிந்து கொள்ள வேண்டியது கடமையாகும்.
 
 ஒரு மாணவர் இன்ஜினியரிங் படிக்கிறார் என்றால் அவர் தான் எடுத்துள்ள பாடத்திட்டத்தை முழுமையாக கற்றுணர்ந்தால் மட்டுமே அவர் ஒரு சிறந்த இன்ஜினியராக முடியும். தன் தொழிலை நன்கறிந்த ஒரு குயவனால் மட்டுமே அழகான பானைகளை உருவாக்க முடியும். மற்றவர்கள் பானை செய்ய முயற்சித்தால் பானை எப்படி இருக்கும்? நம் சமூகத்தில் அரசியலுக்கு வருவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை என்ற மிக மோசமான கருத்து உள்ளது. அரசியல் இல்லாத மற்ற துறைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட துறையை பற்றிய அறிவை மட்டுமே கொடுக்கும். அரசியல்...ஒரு சமூகத்தை பற்றி விசாலமான ஆழ்ந்த அறிவுடன் அணுகவேண்டிய ஒன்றாகும். தமிழீழ சிக்கலில் தேர்தல் அரசியல் கட்சிகள் செய்துள்ள துரோகத்தால், மாணவர்களுக்கு தேர்தல் அரசியல் கட்சிகள் மீது வெறுப்பு ஏற்பட்டிருப்பது நியாயமான உணர்வுதான். இதனால் தேர்தல் அரசியல் கட்சிகளை ஈழ ஆதரவு போராட்டத்தில் நுழையவிடக்கூடாது என்ற கருத்தாக்கம் ஆழமாக வேரூன்றி உள்ளது. பின்னர் இதுவே படிபடியாக அரசியலே கூடாது என்று மாறியுள்ளது.

தமிழீழ சிக்கலை புரிந்து கொள்வது என்பதே அரசியல்தான். “பொதுவாக்கெடுப்பு” “சர்வதேச விசாரணை” கோரிக்கைகளும் அரசியல்தான். எனவே மாணவர்கள் தமிழீழ விடுதலை ஆதரவு போராட்ட அரசியலில் இறங்கும்போது அந்த அரசியலை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது மாணவர்களின் கடமையாகும். உணர்ச்சி பூர்வமாக அணுகுவதால், மனிதாபிமான அடிப்படையில் அணுகுவதால் நாம் தமிழீழ மக்களின் விடுதலைக்கான ஆதரவு போராட்டத்தை வெற்றிகரமாக சாதிக்க முடியாது. இதற்கு மாறாக உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் அணுகுவதன் மூலம் மட்டுமே வெற்றியை ஈட்டமுடியும். எனவே மாணவர்கள் அனைவரும் அடுத்து செப்டம்பருக்கான (அய்-நா-பொது பேரவை கூடவுள்ளது) போராட்டத்திற்கு தயாராகும் முன் தங்களை தமிழீழ சிக்கல் குறித்து அரசியல் ரீதியாக வளர்த்து கொள்ள வேண்டும்.
 
 நாம் முன் வைக்கும் கோரிக்கைகள், அதன் மீது வைக்கப்படும் விமர்சன கருத்துக்களை நன்கு படித்தறிந்து தெட்ட தெளிவான அரசியல் அறிவுடன் நமது போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். முதலில் நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் பற்றி பார்ப்போம்.
 
3-அடிப்படை கோரிக்கைகள்

 போராடுகின்ற மாணவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தில்லை என்ற சுட்டிக்காட்டலை மாணவர்கள் ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும். பாலசந்திரனின் படுகொலை காட்சியை கண்டு தன்னெழுச்சியாகவே மாணவர் போராட்டம் முன்னுக்கு வந்தது. எந்த ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ அல்லது மாணவர் தலைவர்களோ ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கோடு மாணவர்களை அணிதிரட்டி ஒருமித்த கருத்துடன் மாணவர் போராட்டத்தை வழி நடத்தி செல்லவில்லை என்பதை நாம் ஏற்றுகொள்ளும் போது மட்டுமே அரசியல் தயாரிப்பின் அவசியத்தை நாம் உணரமுடியும். மாணவர்கள் ஒரே அமைப்பின் (அ) ஒரே கூட்டமைப்பின் தலைமையின் கீழ் அணிதிரண்டு போராடுவது என்பது தற்போது உடனடி நடைமுறை சாத்தியமற்ற ஒன்று, உடனடியாக இதற்கான முயற்சி எடுத்தால் அது தோல்வியையே தழுவும்.

மாணவர் போராட்டத்தின் ஊடாக மாணவர்களுக்குள் ஏற்படும் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஒரே கூட்டமைப்பின் தலைமையில் அனைத்து மாணவர்களும் அணிதிரளுதல் என்ற நிகழ்வு உருவாகும். ஏன் எனில் மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பல்வேறு ஆற்றல்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களாக உள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தலைமைதாங்கும் ஆற்றல்கள் சனநாயக வழிமுறையை சரியாக கையாளவேண்டும். எந்த அமைப்பை சார்ந்தவராக இருந்தாலும் கூட்டமைப்பில் தனது அமைப்பை முன்னிறுத்தாமல், கூட்டமைப்பு சனநாயகத்துடன் அதாவது எந்த கோரிக்கைக்காக நாம் கூட்டமைப்பை உருவாக்குகின்றோமோ அந்த கோரிக்கையை அடிப்படையாக வைத்த நமது ஒற்றுமை சாதிக்கப்பட வேண்டும். அதைவிட்டு தங்கள், தங்கள் கருத்துக்களையோ, அமைப்பையோ முன்னிறுத்தி வேலை செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
 
 நாம் முன்னெடுக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் அதை நடைமுறைக்கு கொண்டு செல்வதற்கான போராட்ட வழிகள் பற்றியும், கூட்டமைப்பில் விவாதித்து சனநாயகபூர்வமாக முடிவெடுக்க வேண்டும். அமைப்புகளை சேர்ந்த மாணவர்களும், தனிநபர்களாக இருக்கும் மாணவர் தலைவர்களும் இக்கூட்டமைப்பின் முடிவுகளுக்கு கட்டுபட்டு செயல்படவேண்டும். இத்தகைய சனநாயக வழிமுறையே மாணவர் போராட்டத்தை சிதறவிடாமல் ஒற்றை நோக்குடன் செயல்படவைக்கும்.
 
 இன்றைய குறிப்பான சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் (தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, நாம்தமிழர்) மாணவர்களின் ஒற்றுமையை குலைப்பதற்கான வேலையில் முழுமூச்சாக இறங்குவார்கள், மாணவர்கள் போராட்டத்தை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி கொள்ள பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஒன்றிய இந்திய அரசு (காங்கிரசு அரசு) உளவுத்துறை, காவல்துறை மற்றும் காங்கிரசு கட்சி தலைவர்கள், இவர்களின் ஏஜெண்டுகள் சேர்ந்து மாணவர் போராட்டத்தை தடுப்பதற்கும், போராட்டம் நடந்தால் அதை குலைப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்வார்கள்.
 
 மாணவர்கள் மேற்கூறியவற்றிற்கு பலியாகாமல் முன்செல்வதற்கான ஒரே தாரக மந்திரம் சனநாயக பூர்வமாக கூட்டமைப்பை உருவாக்குவதும், நமது கோரிக்கைகளை ஆரோக்கியமாக விவாதித்து முடிவெடுத்து முன்கொண்டு செல்வது என்பதுதான்.
 
 மாணவர்கள் மத்தியில் பல்வேறு கருத்தியல்கள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருகுகின்றன. மாணவர்கள் முன்வைத்து போராடிய முக்கிய முழக்கங்களான'பொதுவாக்கெடுப்பு','சர்வதேச விசாரணை' என்பதை பற்றியும் ஆழமான புரிதலின்றி உள்ளனர். மேற்கூறிய இரு முழக்கங்களை பற்றி வரலாற்று பூர்வமான அரசியல் அறிவு அனைத்து மாணவர்கள் மத்தியிலும் ஆழமாகவும், பரவலாகவும் கொண்டு செல்ல வேண்டும்.
 
 மாணவர்கள் போராட்டம் தன்னெழுச்சியாக தொடங்கப்பட்டதால் காங்கிரசு மற்றும் ஈழ துரோகிகளால் மாணவர்களை அடிப்படை கோரிக்கையிலிருந்து எளிதாக திசைதிருப்பமுடிகிறது. எனவே தன்னெழுச்சியாக தொடங்கப்பட்ட மாணவர் போராட்டத்தை, திட்டவட்டமான கோரிக்கைகளுடன் (கோரிக்கை பற்றிய ஆழ்ந்த அரசியல் புரிதலுடன்) திட்டவட்டமான நடைமுறையாக மாற்றப்பட வேண்டும். அப்பொழுது மட்டுமே மாணவர் ஆற்றலை யாராலும் திசைதிருப்ப முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்ள முடியாது.
 
 மாணவர்கள் முன்வைத்த'பொதுவாக்கெடுப்பு''சர்வதேச விசாரணை' மற்றும் தமிழீழ மக்களின் உடனடி முக்கிய கோரிக்கையான 'மறுவாழ்வு' -'இனஅழிப்பை தடுத்தல்' குறித்து விரிவாக பார்ப்போம். அனைத்து மாணவர்களும், இளையோர்களும், தமிழக மக்களும் இந்த அரசியலை ஆழமாக உள்வாங்கி கொள்வதிலும், அதற்காக திட்டமிட்ட போராட்டங்களை முன்னெடுப்பதிலும் தான் வரும் செப்டம்பரில் நமது வெற்றி அடங்கியுள்ளது.

1- வடக்கு-கிழக்கு மாகாண மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு
 
 இலங்கை அரசிலிருந்து தமிழீழ மக்கள் பிரிந்து செல்வதா? சேர்ந்து இருப்பதா? என்பதற்கான பொதுவாக்கெடுப்பு தமிழீழ மக்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும். என்ற நமது கோரிக்கையை நடைமுறை சாத்தியமற்றது என்றும், இந்தியா, சினா, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் தலையீடுள்ள  இலங்கையில்'பொதுவாக்கெடுப்பு' கோரிக்கை வெற்றி பெறுமா? 13-வது சட்டதிருத்தமே ஈழசிக்கலுக்கு ஒரே தீர்வு என்றும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
 
 பொதுவாக்கெடுப்பு உயர்ந்த பட்ச சனநாயக வடிவம்மாகும் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமை, சுயாட்சி, அரசியலமைப்பு மற்றும் முக்கிய கொள்கை முடிவுகளை ஏன் அனைத்தையும், தாங்களே தீர்மானித்து கொள்ளும் உரிமையை பொதுவாக்கெடுப்பு நடைமுறையில் வழங்குகிறது.
 
 1905-ல் லேயே நார்வேயும், சுவீடனும் பொதுவாக்கெடுப்பு நடத்தி பிரிந்தன, இதுதான் உலகிலேயே முதலில் பொதுவாக்கெடுப்பு மூலம் ஒரு தேசம் தனியாக பிரிந்து அதற்கான அரசை அமைத்து கொண்டதற்கான முன்னுதாரணமாகும்.
 
சுவீடன் நாட்டில் அரசின் பல்வேறு முக்கிய கொள்கைகளை தீர்மானிக்க 1978-ஆம் ஆண்டுவரை 296-முறை பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சனநாயக அணுகுமுறைக்கு சுவீடன் மிக சிறந்த உதாரணமாகவுள்ளது.
 
 கனடாவில் உள்ள கியூபெக் பகுதியில் இனப்படுகொலையோ, கடுமையான'ஒடுக்குமுறையோ நடக்காத சூழலிலும், கியூபெக் பிரிந்து தனி அரசு அமைத்து கொள்ள உரிமை வேண்டும்' என்று இரண்டுமுறை கியூபெக் மக்களின் கோரிக்கையாக “கனடாவிலிருந்து ” கோரி முன்வைக்கப்பட்டது. இதற்காக கனடா நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அவ்வரசே பொதுவாக்கெடுப்பிற்கான தேர்தலை இரண்டுமுறை கியூபெக்கில் நடத்துகிறது. இரண்டுமுறையும் கியூபெக் மக்களில் பெரும்பான்மையோர் கனடா நாட்டில் சேர்ந்து வாழவே விருப்பம் தெரிவித்ததால் இன்றும் கனடாவுடன் கியூபெக் சேர்ந்தே உள்ளது.
 
 1990- ஆண்டு ஸ்லேவேனியாவும், 1991-ல் க்ரோசியா, மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிரான்ஸ்னிஸ்பீரியா நாடுகளும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தனியாக பிரிந்து அரசமைத்து கொண்டன. 1992-ல் போஸ்னியா பொதுவாக்கெடுப்பின் மூலம் பிரிந்தது.
 
 எத்தியோப்பியா என்ற ஆப்பிரிக்க நாட்டில் உள்ள எரிட்டீரியாவில் அய்.நா- மேற்பார்வையில் 1993- ஏப்ரலில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு தனியாக பிரிந்து சுதந்திரம் பெற்றது.
 
 அய்.நா. பாதுகாப்பு அவையில் 1994-ல் ஆம் ஆண்டு ஜுன்-11-அன்று தனது ஃ 4013-ஆம் கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
 கிழக்கு திமோர் மக்கள் என்போர் இந்தோனிசியாவின் ஒற்றை குடியரசிற்குள் கிழக்கு திமோருக்காக சிறப்பு சுயாட்சியை வழங்க முன்மொழியப்பட்ட அரசியல் சாசன சட்டத்தை ஏற்றுகொள்கிறார்களா? அல்லது இந்தோனிசியாவிலிருந்து பிரிவினை பெற்ற கிழக்கு திமோர் என்ற வகையில் கிழக்கு திமோருக்காக முன்மொழியப்பட்ட சிறப்பு சுயாட்சியை நிராகரிக்கிறார்களா என்பதை உறுதியாக அறிவதற்கு ஆகஸ்டு 1999- அன்று நேரடியான இரகசியமான, அனைவரும் வாக்களிக்கும் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பை நடத்துவதென......
 
 அய்.நா தீர்மானத்தின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு கிழக்கு திமோர் தனியாக பிரிந்து அரசமைத்து கொண்டது.
 
 2012-ல் தெற்கு சூடான், சூடானிலிருந்து பிரிந்து செல்வதா? சேர்ந்திருப்பதா? என்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று மேற்கத்திய நாடுகள் அய்.நா-வில் முன்மொழிந்து (அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெற்கு சூடான் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சூடானிலிருந்து தெற்கு சூடான் தனியாக பிரிந்து தனக்கான அரசை அமைத்து கொண்டது.
 
 மேற்கூறிய உதாரணங்களிலிருந்து நம்மால் ஓர் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். சிங்கள பேரினவாத இலங்கை அரசிலிருந்து தமிழீழ மக்கள் தனியாக பிரிந்து தனக்கான சுயாட்சியை (தனி தமிழீழத்தை) அமைத்து கொள்ள அய்.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாம் கோருவது புதிய கருத்தல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட வழிமுறையைத்தான் நாம் தமிழீழ மக்களிடமும் நடத்த வேண்டும் என்று கோருகிறோம்.

 1960-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அய்.நா. கையேட்டில் 6-ஆம் கொள்கை கூறுவதாவது
 
 சுய அரசாங்கம் இல்லா நிலப்பகுதியானது
 
 (அ) இறையாண்மை பெற்ற சுதந்திர அரசு என்பதன் மூலமமாக
 
 (ஆ) ஒரு சுதந்திர அரசுடன், சுதந்திர சுகவாழ்வு என்பதன் மூலமாக
 
 (இ) ஒரு சுதந்திர அரசுடன் இணைதல் என்பதன் மூலமாக

 சுயநிர்ணய உரிமை என்ற முழு அளவை எட்டிவிட்டதாக சொல்லலாம்.

 6-ஆம் கொள்கை கூறுவதன் சாராம்சத்தை நாம் நோக்கினால் தமிழீழ மக்கள் தங்களுக்கான சுதந்திர அரசை நிறுவிகொள்வதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற நமது சனநாயக கோரிக்கையின் நியாயத்தை நம்மால் உணரமுடியும்.
 
 இந்தியா தன்னை உலகிலேயே பெரிய சனநாயக நாடு என்று பீற்றி கொள்கிறது. இந்திய நாட்டின் சனநாயக பாரம்பரியம் பற்றி நமக்கு தெரியாதா என்ன? பிரிட்டிசாரிடமிருந்து இந்தியா'சுதந்திரம்'அடைந்ததும் அரசியல்-அமைப்பு சாசனம் இயற்றப்பட்டு இறுதியாக்கப்பட்டது. இந்த அரசியல்-அமைப்பு சாசனத்தை பொதுமக்களிடம் பொதுவாக்கொடுப்பு நடத்தி சனநாயக வழிமுறையில் இறுதி செய்ததா? அரசியல்-அமைப்பு சாசனத்தை தயாரிக்கும் முன் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? அல்லது இந்திய பிராந்திய முதலாளிகள், இவர்கள் கூட்டாளியான ஏகாதிபத்தியங்கள், சாதிய நிலக்கிழார்களின் நலனை (சுரண்டலை) காப்பதற்காக சர்வாதிகாரமாக அரசியல்-அமைப்பு சாசனம் உருவாக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டதா?
 
 இந்திய துணைகண்டத்தில் தெற்கு சூடான் தனியாக பிரிந்து தனக்கான அரசை அமைத்து கொண்டது கஷ்மீர் முதல் தமிழ்நாடுவரை கஷ்மீர், பஞ்சாப், அரியானா, அஸ்ஸாம், மிசோராம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு..... என்று பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளின் தேசங்கள் உள்ளன. ஒவ்வொரு தேசங்களும் சனநாயக வழியில் தனக்கான குடியாட்சியை (அய்-நா-வின் 6ஆம் கொள்கை கூறுவது போல் சுதந்திர அரசை) அமைத்து கொள்வதற்கான சனநாயகம் வழங்கப்பட்டதா? அல்லது அனைத்து உரிமைகளும் பரிக்கப்பட்டு, அனைத்து அதிகாரமும் தன்னகத்தே கொண்ட மைய அரசு சர்வாதிகாரமாக அமைக்கப்பட்டதா?
 
 இந்திய ஒன்றிய (?) அரசை நிறுவுமுன் ஒவ்வொரு தேசமும் இந்திய ஒன்றிய அரசில் இணைவதற்கான விருப்பம் உள்ளதா? அல்லது தனியாக தனக்கான அரசமைத்து கொள்வதா? என்று சனநாயக பூர்வமாக பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்மானித்தார்களா? அல்லது சர்வாதிகாரமாக (பலாத்காரமாக) தேசங்களை இணைத்து (சிறையிலிட்டு) இந்திய ஒன்றிய அரசை அமைத்தார்களா?

 காந்திய பொருளாதாரம் பேசிவந்த காங்கிரசு, இதற்கு நேரெதிரான (இன்று மன்மோகன்சிங் கிராம சுயராஜ்யம் அமைப்பற்கு பதிலாக உழவர்கள் எல்லாம் நிலத்தை ஏகபோக பெருமுதலாளிகள் கையில் ஒப்படைத்துவிட்டு கிராமத்தை விட்டு வெளியேற சொல்கிறோர்) உலக மயமாக்கல் கொள்கையை ஏற்று, உலக வர்த்தக கழகத்தில் (WTO) கையெழுத்திடும்முன் மக்களின் கருத்து கேட்டு (சுவீடன் போல் பொதுவாக்கெடுப்பு நடத்தி) முடிவெடுத்தார்களா?
 
 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு அங்கு வாழும் மக்களின் கருத்துக்கள் சனநாயக பூர்வமாக கேட்கப்பட்டதா? (சி.பொ.ம- எதிர்த்த மக்களின் தொடர்ந்த போராட்டத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் 80மூ மக்களின் ஒப்புதல் கிடைத்தபிறகு சி.பொ.ம அமைக்கப்படும் என்று தற்போது வேறுவழியில்லாமல் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது) அல்லது பெருமுதலாளிகளுக்காக அரசே ரியல் எஸ்டேட் ரௌடி புரோக்கர் போல் இறங்கி மக்களிடமிருந்து சர்வாதிகாரமாக நிலத்தை பிடுங்கியதா?
 
 கூடங்குளம் மீனவ மக்களின் கருத்தை கேட்காமலே அவர்கள் வாழும் பகுதியில் அணுஉலையை சர்வாதிகாரமாக நிறுவினர். கடும் மக்கள் போராட்டத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், மக்கள் போராட்டத்தை சர்வாதிகாரமாக ஒடுக்கி அணுஉலையை இயக்க முயற்சிப்பதே இந்திய சனநாயகத்தின் லட்சணத்தை நமக்கு புரியவைக்கும்.
 
 காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து இருப்பதா, தனியாக அரசமைத்து கொள்வதா என்று தீர்மானிக்க அய்.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேரு கொடுத்த வாக்குறுதி என்னவானது?
 
 இந்திய பிராந்திய பெருமுதலாளிகளின் நலனுக்காக அனைத்து சனநாயக உரிமைகளும் குப்பையில் போட்டுவிட்டு சர்வாதிகாரமாக அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது.
 
 இத்தகைய இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை எப்படி ஏற்கும்? இன்று மத்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசிடம் சனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்திய பிராந்திய பெருமுதலாளிகளின் நலனுக்காக இந்திய துணைகண்டத்தில் உள்ள அனைத்து தேசங்களையும் சிறைபடுத்தியுள்ள (இந்தியா என்ற பெரும் சந்தைக்காக, சுரண்டலுக்காக) இந்திய அரசு தெற்காசியா முழுவதிலும் தனது சந்தையை, சுரண்டலை நிறுவ துடிக்கும் இந்திய பெருமுதலாளிகளின் இந்திய அரசு தெற்காசியாவில் உள்ள தமிழீழ மக்களின் தனி ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை எப்படி ஏற்று கொள்வார்கள்?
 
 அதனால் தான் அதே அதிகார திமிருடன் காங்கிரசு கட்சியின் E.V.K.S. இளங்கோவன் பொதுவாக்கெடுப்பு கோரிக்கையெல்லாம் நடக்காத ஒன்று என்றும், தனி தமிழீழம் சாத்தியமே இல்லையென்றும் ஈழத்தமிழர்களுக்கெதிராக விசத்தை கக்குகிறார்.
 
 இந்தியா மட்டுமல்ல, அய்.நா. மன்றமே கூட அமெரிக்கா போன்ற பெரும் ஏகாதிபத்திய நாடுகளின் நலனை காக்கும் மன்றம்தான். அய்.நா- மன்றத்தில் கொண்டுவரப்படும் சனநாயகத்திற்கு ஆதரவான வரைவுகள், திர்மானங்கள் என அனைத்து உரிமைகளும் உலகளவில் ஆங்காங்கே நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களின் விளைவேயாகும்.

 இந்திய அரசாகட்டும், அய்.நா. மன்றமாகட்டும் மக்கள் போராட்டம் மக்கள் எழுச்சி, உலக மக்களின் அழுத்தம், என்ற ஒன்றின் முன் மட்டும்தான் பணிவார்கள். இதுவரை வரலாற்றில் அய்.நா- மேற்பார்வையில் குறிப்பிட்ட நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்பொதுவாக்கொடுப்பு நடந்த நாடுகளில் உள்ள மக்களின் பெரும் போராட்டம்தான் அய்.நா- மன்றத்தில் பொதுவாக்கெடுப்பிற்கான தீர்மானங்களை நிறைவேற்ற வைத்தது.

 ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டி என்பது தவிர்க்க முடியாது ஒன்று, இப்போட்டியின் விளைவாக குறிப்பிட்ட ஏகாதிபத்திய நாடுகள் அய்.நா- மன்றத்தில் சில நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு தீர்மானத்தை முன்வைத்தது. இதனடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்நாடுகளின் தங்களுக்கான அரசை அமைக்க வைத்தது.

 மக்களின் சக்தியின் ஆற்றலை அறியாதவர்கள்தான், இலங்கையில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற மூன்று பெரும் நாடுகளின் தலையீடு உள்ளது. எனவே மாணவர்கள் போராட்டத்தால் பொதுவாக்கொடுப்பு கோரிக்கையை வெற்றியாக்க முடியாது என்று புலம்புவார்கள். நம்பிக்கையில்லாமலே பேசுவார்கள், இந்த அறிவு ஜீவிகள் சற்றே வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் போராட்டம் என்ற மாபெரும் ஆற்றல் படைத்துள்ள சாதனைகள், புதிய வரலாறுகள் புரியும்.

 தமிழத்தில் உள்ள மாணவர்களும், மக்களும், தமிழகத்தில் இக்கோரிக்கையை முன்வைக்கும் அரசியல் கட்சிகளும் (தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், நெடுமாறன், நாம் தமிழர்), தமிழீழ மக்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும், தெற்காசியாவில் உள்ள அனைத்து போராடும் இயக்கங்களும், மக்களும், உலகத்திலுள்ள மனிதநேய சக்திகளும் ஒருமித்து குரல் கொடுத்தால், தங்களுக்குள் உறவுகளை சீர்படுத்தி, இந்தியா, தெற்காசியா, உலகளவில் நிர்பந்தத்தை ஏற்படுத்தினால் இந்தியா-பணியும், அய்.நா-வில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை, மறுவாழ்வு, இனஅழிப்பை தடுத்தல் ஆகியவற்றிற்கான தீர்மானம் முன்மொழியபட்டு நிறைவேற்றப்படும். இதற்காக இலை மலரவில்லையென்றாலும், சூரியன் உதிக்கவில்லையென்றாலும் இது நடந்தே தீரும்.
 
 நாம் அழுத்தம் திருத்தமாக கூறிகொள்ள விரும்புவது ஒன்றுதான் சிங்கள பேரினவாத அரசின் கீழ் தமிழீழ மக்கள் இணைந்து வாழ்வதற்கான சமூக சூழல் இலங்கையில் இல்லை. எனவே தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழ, வளர, தனிதமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வு. அத்தகைய தமிழீழம் அமைவதற்கான வழிமுறைதான் பொதுவாக்கெடுப்பிற்கான சனநாயக போராட்டமாகும்.
 
13- வது சட்டதிருத்தம்

 ராஜீவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988-ஆம் ஆண்டு ஜெயவர்த்தன அரசு முன்வைத்ததுதான் 13-வது அரசியல் சட்டதிருத்தம், இச்சட்டதிருத்தம் ஒன்றிய இந்திய அரசு இந்திய துணைகண்டத்தில் உள்ள மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமையைவிட (மாநிலங்களின் உரிமையின் இலட்சணம் மாணவர்களாகிய நமக்கு நன்கு தெரிந்த ஒன்றே, ஒன்றிய இந்திய அரசு என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின், பழங்குடி தேசங்களின் சிறைக்கூடமாகவே உள்ளது) மிக குறைந்த உரிமைகளையே தமிழீழ மக்களுக்கு வழங்குகிறது. மிக குறைந்த பட்ச உரிமையையே வழங்கும் 13-வது சட்டதிருத்தத்தையே கூட சிங்கள பேரினவாதி ராஜபக்சே ஏற்க மறுத்து வருகிறான்.
 
 தமிழீழ மக்களுக்கு எந்த உரிமையும் வழங்காத இந்த 13-வது சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தினால் ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கும் என காங்கிரசு கட்சியும், இவர்கள் போன்ற தமிழீழ துரோகிகளும் கூறிவருகின்றனர். எனவே மாணவர்கள் அனைவரும் பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்ப தமிழீழ துரோகிகளால் முன்வைக்கப்படும் 13-வது சட்டதிருத்த கோரிக்கையை புரிந்து 13-வது சட்டதிருத்தத்தை யார் முன்வைத்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து முறியடிக்க வேண்டும்.

 (2) போர் குற்றம் மற்றும் இனப்படுகொலை-க்காக சிங்கள பேரினவாதி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டிக்க  சேனல்-4 மற்றும் பல்வேறு ஆவணபடங்கள் மூலம் சிங்கள பேரினவாதி ராஜபக்சேவின் போர்குற்றமும், இனப்படுகொலையும் சர்வதேச அரங்கத்தில் வெளிக்கொணரப்பட்ட நிலையில் தொலைகாட்சி மற்ற ஊடகங்கள் மூலம் பல்வேறு அறிவுஜீவிகள் மற்றும் காங்கிரசு கட்சியும் அங்கு இனப்படுகொலை, போர் குற்றங்கள் நடந்ததற்காக காரணங்கள் சரியாக முன்வைக்கவில்லை என்று முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்கின்றனர்.
 
 இன்னும் சில அறிவுஜீவிகள் மற்றும் தமிழீழ துரோகிகள் இனப்படுகொலை நடந்தது உண்மையானால் கொழும்பில் இருக்கும் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். போர் நடந்த பகுதியை ஒட்டி நடந்த படுகொலைகளை வைத்து இனப்படுகொலை என்று குற்றம் சாட்ட முடியாது என்கின்றனர்.
 
 ஏற்கனவே அய்.நா- மன்றத்தில் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ஒட்டி இலங்கையில் அமைக்கப்பட்ட LLRC (இது கொலைகாரனை அவன் செய்த கொலையை பற்ற துப்பு துலக்கி, அவனே அவனை தண்டித்து கொள்ள வேண்டும். என்ற துரோக தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் LLRC கமிட்டி) விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பி அய்.நா- மனித உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அய்.நா-வில் துவக்க உரை ஆற்றியதில் சொல்லியிருப்பதாவது.

 சென்ற ஆண்டில் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் ஒரு சுயேச்சையான விசாரணையை அங்கே அய்.நா- நடத்த வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக இலங்கையில் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீது impeachment கொண்டுவரப்பட்டு அவர் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் நீதித்துறை சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையும் அங்கே உருவாகியிருக்கிறது. அதனால் அங்கே ஒரு சனநாயகம் இல்லாத சூழல் நிலவுகிறது.
 
 நவநீத பிள்ளை இலங்கையில் சுயேச்சையான விசாரணை அய்.நா- மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியும், அதை மறுக்கும் ஈழதுரோகிகளுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. இதற்காக மாணவர்கள் இனப்படுகொலை குறித்த அரசியலை தாங்கள் புரிந்து கொள்வதோடு, இக்கருத்தை பரவலாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் முதலில் நாம் அய்.நா- மன்றம் இனப்படுகொலைக்கு எதை அடிப்படையாக குறிப்பிடுகிறது என்று பார்ப்போம்.
 
 9-12-1948- ஆண்டில் அய்.நா- ஏற்றுகொண்ட தீர்மானம் ஒப்பந்த விதி: 260 (III)A  இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது மற்றும் அதற்கான தண்டனை (prevention and funishment of the genoside)  வரைவு : அரசின் மிருகத்தனமான வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு ஒரு இனம் முழுமையாகவோ, பகுதி: அளவிலோ ஒழிக்கபடுவதே உள்நோக்கமாக கொண்டது.
 
 (Article) பிரிவு: 2- ஒரு தேசம்,தேசிய இனம், இனக்குழு மரபின் அதுபோன்ற மக்கள் பிரிவு முழுமையாகவோ, பகுதி அளவிலோ அழிக்கப்படுவதே நோக்கமாக உடைய அகக்கூறுகள் (mental element)

 - உடல் கூறு (physical element) கீழ்வரும் ஐந்து அம்சங்கள் உள்ளடக்கி இருந்தால் அதை (physical element) 1. இனப்படுகொலை 2. சதி 3. தூண்டிவிடுதல் 4. முயற்சி 5. உடந்தை

 பிரிவு: 3- எதெல்லாம் தண்டனைக்குரிய குற்றசெயல்கள் என்பதை விவரிக்கின்றது.

 அய்.நா பாதுகாப்பு அவை தீர்மானம்: 1674

 22-ஏப்ரல் 2006-அன்று ஏற்றுகொண்ட இத்தீர்மானம் “இனப்படுகொலை, போர்குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு குறித்து 2005-ன் உலக உச்சி மாநாட்டு ஆவணத்தின் பத்திகள் 138 மற்றும் 139-ன் சட்டபிரிவுகள் மறு உறுதிசெய்கிறது”
 
 இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் 
 
 * நூரம்பர்க்கில் நடந்த சர்வதேச விசாரணையில் இரண்டாம் உலகபோரில் யூதர்களை இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக இட்லரின் 12-படை தளபதிகளுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.
 
 * டோக்கியோவில் நடந்த விசாரணையில் மேற்கூறிய குற்றத்திற்காக 7-ஜப்பான் இராணுவ தளபதிகள்  தண்டித்து கொல்லப்பட்டார்கள்.
 
 * 1995-ஆம் ஆண்டு போஸ்னியாவை ஆக்கிரமித்த செர்பிய இராணுவம்
 - 7000- க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீகளை கொன்று குவித்தது.
 - உயிர் தப்ப முயன்ற 15,000 முஸ்லீம் போராளிகளை கொன்று குவித்தது.
 
 மேற்கூறிய கொடிய போர்குற்றத்தை விசாரிக்க அய்.நா- விசாரணை குழுவை நியமித்தது. நெதர்லாந்து நாட்டில் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் செர்பியாவின் முன்னாள் அதிபர் ராடோவன் கார்ட்சிக், இராணுவ அதிகாரி பிரோ சேவிக் விசாரிக்கப்பட்டனர். இதில் அதிபர் கார்ட்ரிக் விசாரணையின் போதே மாரடைப்பால் இறந்துவிட்டார். இராணுவ அதிகாரி பிரோ சேவிக் 2008-ல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

 - போஸ்னியா படுகொலைகளை விசாரிக்க யூகோஸ்லேவியாவிலும் (1993-ல்), ருவாண்டாவின் இனப்படுகொலைகளை விசாரிக்க தான்சானியா நாட்டிலும் (1994-ல்) சர்வதேச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.

 மேலே குறிப்பிட்ட வரலாறு, மற்றும் அய்.நா-வின் ஒப்பந்த விதி 260 (111)-ல் உள்ள 2-ம் என் பிரிவு நமக்கு தெட்டதெளிவாக சிங்கள பேரினவாதி ராஜபக்சேவை இனப்படுகொலையாளன் மற்றும் போர்குற்றவாளி என்று தண்டிப்பதற்கான ஆதாரங்கள் தெட்டதெளிவாக உள்ளன.

 260 (111)எ- பிரிவு : 2 - ஒரு இனம் ஃ தேசிய இனம்.... முழுமையாகவோ, பகுதி அளவிலோ (அழுத்தம் எம்முடையது) அழிக்கப்படுவதை நோக்கமாகவுடைய அகக்கூறும் (mentel element) மற்றும் உடல் கூறுகள் (physical element) - ல் சொல்லப்பட்ட கருத்துக்கள் ராஜபக்சே அரசிற்கு மிக சரியாக பொறுந்தும் என்பதற்கு எண்ணற்ற சாட்சியங்கள் ஆவணபடங்களில் உள்ளது.
 
 பாதுகாப்பு வளையத்திலிருந்த சாதாரண குடி மக்கள் மீதும், மருத்துவ முகாம்கள் மீதும் தெரிந்தே குண்டுவீசி தாக்கியதற்கான ஆதாரங்கள் கொட்டிகிடக்கின்றன. இதற்கு முன்பே நெஞ்சை பதறவைத்த செஞ்சோலை படுகொலை, இவைமட்டுமில்லாமல் பாலசந்திரன்.... அந்த சிறுவன் என்ன போர்குற்றம் செய்தான் அவன் சிங்கள இனவெறி இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக, அய்.நா-வின் இனப்படுகொலை சம்மந்தமான சட்ட பிரிவுகள் பகுதி அளவில் அழிக்கப்படுவதும் இனப்படுகொலைதான் என்று தெட்ட தெளிவாக கூறுகின்றன.

 இதைவிட்டு கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படவில்லை, அங்கு இல்லை, இங்கு இல்லை என்று சிங்களவெறியன் ராஜபக்சேவை காப்பாற்ற துடிக்கும் சக்திகளை மாணவர்களாகிய நாம்தான் முறியடிக்க வேண்டும்.

 தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையில் இந்திய அரசின் சதியும், பங்கும் உள்ளது என்பதால்தான் இந்திய அரசு அய்.நா-வில் நமது குரலை எதிரொலிக்க மறுக்கிறது. இதைவிட இன்னுமொரு அடிப்படையான நலன் இந்தியாவிற்கு உள்ளது. அது என்னவென்றால்... இந்திய பிராந்திய பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தை (சந்தையை-சுரண்டலை) இலங்கையில் நிறுவுவதற்கான நலன் தான் அது.
 
 தெற்காசிய வல்லரசான இந்தியாவை விட சீனாவின் பக்கம்தான் இலங்கை அரசு சாய்ந்துவிட்டதாகவும்  அதனால் இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவை கைவிட்டு தமிழீழ மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கையேந்தி பிச்சை கேட்கும் கூட்டம் (நெடுமாறன், வைகோ, சீமான் திருமாவளவன்) கூப்பாடு போடுகிறது. கீழ்வரும் புள்ளிவிவரங்கள் இலங்கையில் இந்திய அரசின் ஆதிக்கத்தை வெளிகொணரும்.

 - இலங்கையில் இந்தியாவின் ஒட்டுமொத்த நேரடி முதலீடு 560 மில்லியன் டாலர், இது இலங்கையில் நேரடி முதலீட்டில் 5-ல் 1-பங்கு ஆகும்.

 இலங்கையில் நேரடி அன்னிய முதலீட்டிற்கான அட்டவணை

 ஆண்டு  நாடு   நேரடி அன்னிய முதலீடு
 2005   இந்தியா   17 மில்லியன் டாலர்
 2012   இந்தியா   98 மில்லியன் டாலர்
 2005   சீனா    1 மில்லியன் டாலர்
 2012   சீனா    3.5 பில்லியன் டாலர்   

 மேற்கூறிய புள்ளிவிவரம் சீனா, இந்தியாவைவிட பல மடங்கு முதலீடு போட்டுள்ளது. (முள்ளிவாய்க்கால் போருக்கு பின்னரும்) நமக்கு தெட்டதெளிவாக விளக்கும்.

 வணிகம் : - இலங்கை- இந்தியாவிடையே இருதரப்பு வணிகத்தை மேம்படுத்த 'சுதந்திர வணிக ஒப்பந்தம்' (free trade agrement (FTA)) 1998-ல் கையெழுத்திடப்பட்டு 2000-த்தில் நடைமுறைக்கு வந்தது.
 
 இந்தியாவின் இறக்குமதி (இலங்கைக்கு) 8-ஆண்டுகளில் 5-மடங்கு அதிகரித்துள்ளது.
 
 ஆண்டிற்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி 4.44 பில்லியன் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி 0.71பில்லியன் டாலர் மட்டுமே 3.72 பில்லியன் உபரியாக உள்ளது.
 
 வணிகத்தில் 2012-புள்ளிக்கு விவரப்படி இந்தியாதான் சீனாவைவிட அதிகம் செய்கிறது.
 
 இந்தியா - 4.08 பிலிலியன் டாலர், சீனா 3.16 பிலிலியன் டாலர் ஆகும்.
 
ஆட்டோ மொபைல்
 
 இலங்கையில் ஆட்டோ மொபைல் துறையில் இந்தியாவின் ஆதிக்கம்தான் உள்ளது. அசோக் லேலண்டு, மாருதி, பஜாஜ் நிறுவனங்களும்-ஆட்டோமொபைல் தொழிலில் ஒட்டுமொத்த இலங்கையில் 50-- கட்டுபடுத்துகின்றன.

 - 2012-ல் மட்டும் இந்தியா ஆட்டோ மொபைல் பொருட்களை 800 மில்லியன் டாலர் ஏற்றுமதி செய்து விற்பனை செய்தது.

 மாருதி சுசுகி கார் விற்பனை 2006-ல் மட்டும் இலங்கையில் 26,500 ஆகும். இலங்கை அரசில் FTA சலுகை மூலம் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 
 - இந்தியாவின் சியட் டயர்ஸ் நிறுவனம் இலங்கையின் டயர் தேவையில் 50மூ தனது பிடியில் வைத்திருக்கிறது.
 
 - ஆதித்ய பிர்லா குழுமம் 120 மில்லியன் டாலர் முதலீட்டில் கார்பன் பிளாங்க் (carbon blank) (டயர் தயாரிப்பின் கச்சாபொருள்) தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கவுள்ளது.

 எண்ணெய் எரிவாயுத்துறை
 
 - இந்திய ஐ.ஒ.சி நிறுவனம் இலங்கையில் 20,000 கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவெடுத்துள்ளது.
 
 - இலங்கையின் பெட்ரோலிய துறையில் ஐ.ஒ.சி-யின் பங்கு 43.5% உள்ளது.
 
 - இலங்கையில் ஐ.ஒ.சி 170 பெட்ரோல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.
 
 தலா 1 கோடி ரூபாய் செலவில் மேலும் 300 பெட்ரோல் விற்பனை நிலையங்களை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. திரிகோணமலை எண்ணெய் வயலையும் ஐ.ஒ.சி நிறுவகித்து வருகின்றது.
 
 - பிப்ரவரி 2006-ல் இந்தியா வந்த மகிந்தா ராஜபக்சே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ்,- பெட்ரோலிய நிறுவனம் இலங்கையில் எண்ணெய்த்துரப்பணம் முதல் பெட்ரோலிய பொருட்கள் சில்லரை வர்த்தகத்திலும் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார்.
 
 தொலை தொடர்பு துறை

 - ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் 1200 கோடி மூலதனத்துடன்'ரிலையன்ஸ் மொபைல் லங்கம்' என்ற நிறுவனத்தை இலங்கையில்' எலெக்ட் ரோடெக்ஸ்' என்ற நிறுவனத்துடன் சேர்ந்து நிறுவியுள்ளது. இலங்கை சந்தையில் 40மூ சந்தையை கைபற்றும் நோக்குடன் செயல்படுகிறது. மேலும்'லங்கா பெல்' நிறுவனத்துடன் 27 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.
 
 இந்தியா, இலங்கை, மொரிசியஸ் இடையே ஆழ்கடல் கேபில் இணைப்பை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது.
 
 - 2009-ல் பாரதி ஏர்டெல் 7500 கோடி முதலீட்டில் இலங்கையில் நுழைந்திருக்கிறது.

 டாடா நிறுவனம்

 டாடாவின் தாஜ் ஓட்டல் நெடுநாளாக இலங்கையில் இயங்குகிறது.
 
 டாடாவின் வாதவாலா தேயிலை நிறுவனம் (தேயிலை, காப்பி, ரப்பர், எண்ணெய்ப்பனை அனைத்தையும் உள்ளடக்கியது) இன்போடெக் போன்றவை அங்கு இயங்குகின்றன.

 (சிலோன் டீ' -யானது இலங்கை முழுவதும் பரவலாக விற்கப்பட்டது. பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களை டாடா வாங்கி விட்டதால் இப்போது 'இந்திய டாடா சிலோன் டீ' மட்டுமே உள்ளது.)

 இந்திய துறைமுகம்:

 வடக்கு மாகாணத்தில் காங்கேசன் துறைமுகத்தில் இந்தியாவும் துறைமுகம் அமைக்கிறது. (இப்பகுதி விடுதலை புலிகள் கட்டுபாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியாகும்)
 
 ஜவுளித்துறை:
 
 2001-லிருந்து 2011-க்குள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கான ஜவுளி ஏற்றுமதி 3-மடங்கு அதிகரித்துள்ளது.

 மூடப்பட்ட ஜவுளி ஆலைகளை நவீனமாக்க இந்தியா முயற்சித்து வருகிறது.
 
 மின்துறை - இந்தியாவின் தேசிய அனல் மின் கழகமும் (NTPC) இலங்கையின் மின்வாரியமும் (CEB) இணைந்து 300 மெகாவாட் அனல்மின் நிலையம் ஒன்றை சம்பூரில் (திரிகோணமலை) 500 மில்லியன் டாலரில் அமைக்கும் திட்டம் இறுதி செய்யும் நிலையில் உள்ளது. புத்தளத்தில் 900- மெகாவாட் அனல்மின் நிலையம் அமைக்க (NTPC) - தேசிய அனல்மின் கழகம் திட்டமிட்டு வருகிறது.

 NTPC - கிழக்கு இலங்கையில் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 500 மெகாவாட்டிற்காக மின்நிலையம் அமைக்க 700 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்படுகிறது. (இதில் 50மூ (350 மில்லியன்) (NTPC) -யும் 200 மில்லியன் இலங்கைக்கு சலுகை அடிப்படையான கடனும் வழற்கப்படுகிறது.
 
 ரயில்வே, சாலை மற்றும் கட்டுமானத் துறையில்:

 கடந்த 4- ஆண்டுகளில், இந்திய அரசு 281 மில்லியன் டாலர் இலங்கைக்கு கடன் வழங்கியுள்ளது. ரயில்வே துறை மேம்பாட்டுக்காக 100 மில்லியன் டாலர் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 இந்திய பொதுதுறை நிறுவனம் மூலம் வடக்கு மாகாணத்தில் 56-கி.மீ ரயில்வே டிராக் அமைக்கிறது.

 உதவி மற்றும் குறைந்த வட்டி கடன்:

 இதில் மட்டும்தான் இந்திய முதலீடு சீனாவைவிட குறைவாக உள்ளது. ஏனெனில் இது லாபமற்றது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்தான், சீனா இதன் மூலம் இலங்கையிடம் நல்லுறவை உருவாக்கி இலங்கையில் தனது ஆதிக்கத்திற்காக முயற்சிக்கின்றது.

 இந்தியா - 298.1 மில்லியன் டாலர் (1மில்லியன் - 10லட்சம்)
 
 சீனா - 2.61 பில்லியன் (1பில்லியன் - 100 கோடி)
 
 - மேற்கூறிய புள்ளிவிவரங்கள் ஓர் உண்மையை நமக்கு புலப்படுத்தும் இன்றுவரை இந்தியாவின் பொருளாதார ஆதிக்கம்தான் இலங்கையில் உள்ளது. இந்திய ஆதிக்கத்திற்கு மேலும் அதிகப்படுத்த விரிவடைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான (comprhensive economic partner ships) பேச்சுவார்த்தை 2005-ல் தொடங்க 8வருடங்களாகியும் முடிவுக்கு வரவில்லை.
 
 இந்தியாவை அதிகம் சார்ந்து இந்தியாவின் அரசியல் தலையீட்டை முழுமையாக ஏற்று கொள்வதற்கான நிற்பந்தம் ஏற்படும் என்பதால் இலங்கை இந்த ஒப்பந்தத்தை தள்ளி போட்டுவருகிறது. இந்த ஒப்பந்தம் ஏற்றுகொள்ளப்பட்டால் இந்தியா இலங்கையை முழுமையாக (பெரும் அளவில்) கட்டுபாட்டில் கொண்டு வந்துவிடும்.

 இந்திரா காந்தி விடுதலை புலிகளுக்கும், மற்ற குழுக்களுக்கும் ஆயுத பயிற்சி அளித்தது, தமிழீழ மக்கள் மீது கொண்ட நேசத்தினால் அல்ல, அன்றைய இலங்கை அரசு திரிகோணமலையில் அமெரிக்க இராணுவத்தளம் அமைப்பதை தடுத்து நிறுத்தி இந்தியாவின், கட்டுபாட்டில் இலங்கையை கொண்டுவருவதற்குத்தான். இலங்கை இந்தியாவின் கட்டுபாட்டில் வந்ததும், ராவை வைத்து தமிழீழ போராளிகளுக்குள் மோதலை உருவாக்கி போராளிகளை அழிக்க முயற்சித்தது. போராளி குழுக்களுக்கு வழங்கிய ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி பெரும் நிர்பந்தத்தை உருவாக்கியது. பின்பு அரக்கர்படையை (அமைதி படையை) இலங்கைக்கு அனுப்பி விடுதலைபுலிகளை முற்றாக ஒழிக்க முயற்சித்தது.

 இலங்கையில் சீனா அல்லது அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கும் பட்சத்தில் இந்தியா கட்டாயம் இலங்கை அரசை மிரட்ட தமிழீழ ஆதரவு நாடகமாடும். தனது மேலாதிக்கத்திற்கு இலங்கை பணியமறுக்கும் நிலை ஏற்பட்டால் கட்டாயம் தனி தமிழீழம் அமைத்து கொடுக்கும். (பாகிஸ்தான் தனது பொருளியல், அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராக செயல்பட்டதால், பங்களாதேசை ஆதரித்ததோடு நில்லாமல் ஏதேதோ காரணத்தை சுட்டிகாட்டி இந்திய இராணுவத்தை அனுப்பி பங்களாதேசை தனியாக பிரித்து கொடுத்தது போல்) இந்திய அரசிற்கு லட்சகணக்கான தமிழீழ மக்களின் உயிர் ஒரு பொருட்டல்ல, தமிழக மக்களின், குறிப்பாக தமிழக மாணவர்களின் போராட்டமும் ஒரு பொருட்டல்ல,
 
 இப்போராட்டத்தை பற்றி அது கவலைக்கொள்ளவுமில்லை. தேவைப்பட்டால் காவல்துறை (அ) இராணுவத்தை வைத்து தமிழக மாணவர் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்ற சர்வாதிகார திமிருடன் இந்திய அரசு உள்ளது. இந்திய அரசிற்கு ஒரே ஒரு அடிப்படை நோக்கம்தான் (காங்கிரசு கட்சி அல்லது வேறு எந்த தேசிய கட்சியானாலும் சரி, மற்றும் மாநில கட்சிகளும் கூட) அது இந்திய பிராந்திய பெருமுதலாளிகளின் நலன் மட்டும்தான் என்பதை நாம் எப்பொழுதும் மறந்துவிட கூடாது.
 
 போhக்குற்றத்திற்காக, இனப்படுகொலைக்காக சிங்கள பேரினவாதி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நமது போராட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஐ.நா- வின் பாத்திரத்தை நாம்மறந்துவிடக்கூடாது. அதே வேலை மக்கள் போராட்டங்கள் உலக வரலாற்றில் படைத்துள்ள வெற்றிகளையும் நாம் மறந்துவிடகூடாது. மேற்கூறிய அடிப்படை புரிதலில் இருந்தே நாம் நமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
 
 சிங்கள பேரினவாதி ராஜபக்சேவை போர் குற்றவாளியாக இனப்படுகொலையாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக முக்கிய நகர்வுகள் உலகில் நடந்துவருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
 - 2010 - ஜனவரி: 14,15,16 - ஆகிய நாட்களில் அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்

 1. இராஜபக்சே ஒரு போர்குற்றவாளி
 
 2. இராஜபக்சே, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தது உண்மை.

 - எனும் இரண்டு திருப்புமுனைத் தீர்ப்புகளை இத்தீர்ப்பாயத்தை சேர்ந்த அமெரிக்கா, அர்ஜென்டினா, பெல்ஜியம், அயர்லாந்து, இத்தாலி, எகிப்து, இந்தியா, தாய்லாந்து, பிரிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த நீதிபதிகள் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கியுள்ளனர். (நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்ககூடிய ஒரு சர்வதேச அமைப்பாகும், இது இத்தாலியில் 1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தீர்ப்பாயம், சர்வதேச மக்கள் உரிமை பிரகடனத்தால் (Universal Declaration of Human Rights - UDHR) உந்துதல் பெற்று, திபெத், மேற்கு சாரா, அர்ஜென்டீனா, எரித்திரியா, பிலிப்பைன்ஸ், எல்சால்வடார், ஆப்கானிஸ்தான், கிழக்கு திமோர், கவுதமாலா, அர்மீனியா, நிகரகுவா போன்ற நாடுகளில் நடைபெற்ற பல்வேறு உரிமை மீரல்கள் தனது ஆய்வுக்கு எடுத்து கொண்டு தீர்ப்புகளை வழங்கியுள்ளது) இத்தீர்ப்புகளை நடைமுறைபடுத்தும் அதிகாரம் இதற்கு இல்லாவிட்டாலும் அவை மிகுந்த நம்பகத்தன்மை உடையவையாக உலகெங்கும் மதிக்கப்படுகின்றன. இத்தீர்ப்புகள் முக்கியமான பன்னாட்டு அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தீர்ப்புகள் பல ஜெனிவாவிலுள்ள அய்.நா- மன்றத்தில் மனித உரிமை குழுமத்தினால் விவாதிக்கப்படுகின்றது.)
 
 “ இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்” (Tamils Against genocide) என்ற அமைப்பு, அமெரிக்காவை இயங்குதளமாக கொண்டுள்ள ஒரு மனித உரிமை அமைப்பு, 'இனப்படுகொலை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் சட்டத்திற்கு புலம்பான படுகொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது நடத்திய, தற்பொழுது இலங்கை அரசில் பணியாற்றும், அமெரிக்க குடியுரிமை பெற்ற மூவரின் மீதும், அமெரிக்க மற்றும் பன்னாட்டு சட்டங்களின் விசாரணை நடத்தி வைப்பதை' தனது முதன்மை நோக்கமாக வெளிப்படையாக அறிவித்துவிட்டு இயங்கும் ஓர் அமைப்பு இது. (அவர் குறிப்பிடும் மூவர் கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் சரத்பொன்சேகா என புரிந்து கொள்ளபடுகிறது.)

இவர்கள்தான் டப்ளின் நடைபெற்ற இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தில், இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான வாதங்களையும், நேரடி சாட்சிகள் உட்பட, அதற்கான சான்றுகளையும், அளித்தனர்.
 
 ஏற்கனவே இக்கட்டுரை குறிப்பிட்டுள்ள நவநீத பிள்ளையின் கூற்றும் கூட ராஜபக்சேவை இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முக்கியமானதாக ஆகும்.
 
 (3) இன அழிப்பை தடுத்து நிறுத்துவது!  மறுவாழ்வு பணிகளை விரைவு படுத்துவது!
 
 முள்ளிவாய்க்கால் படுகொலையை தொடர்ந்து சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு தமிழ் இனமே இலங்கையில் இல்லாமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தமிழீழ மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் சிங்கள இராணுவம் முகாமிட்டுள்ளது. தமிழீழத்தில் இளைஞர்களே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளனர். தமிழீழ பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றபடுகின்றனர். தமிழீழ மக்களின் இந்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், இடித்து தள்ளப்பட்டு புத்த விகாரங்கள் கட்டப்படுகின்றன. முகாம்களில் இருக்கும் தமிழீழ மக்களின் வாழ்நிலை மிக கொடூரமான நிலையில் உள்ளது. மறுவாழ்வுபற்றி காங்கிரசும், இந்திய அரசும் வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் தமிழீழ மக்களின் வாழ்நிலைதான் மலரவில்லை - மேற்கூறிய நிலை நீடித்தால் தமிழீழத்தில் தமிழ்இனமே இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

 எனவே தமிழக மாணவர்களும், மக்களும் 'பொதுவாக்கெடுப்பு' 'சர்வதேச விசாரணை' என்று நிரந்தர தீர்வுக்காக இறுதிவரை போராடும் அதே வேலை தமிழீழ மக்களின் உடனடி சிக்கலான மறுவாழ்வு பணிகள், இன அழிப்பை தடுத்தல் என்ற கோரிக்கையும் நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் நாம் போராடி பெறும் பொதுவாக்கெடுப்பு உரிமையை பெற்று வாக்களிக்க தமிழீழ மக்கள் அம்மண்ணில் இருக்கமாட்டார்கள். தமிழீழமே மயானபூமி ஆகிவிடும் அல்லது சிங்களர்களின் இடமாக மாறிவிடும்.
 
 மறுவாழ்வு மற்றும் இன அழிப்பை தடுத்தல் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடினால், பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணைக்கான நமது போராட்டம் நீர்த்து போகும் என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர். மாணவர்களிடையே சிலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர்.
 
 கோரிக்கைகளை நாம் முன்வைக்கும் போது அதை ஒன்றுக்கொன்று எதிரானதாக கருதக்கூடாது. நாம் முன்வைக்கும் கோரிக்கைகளின் தன்மை, அவற்றிற்கிடையிலான உறவு, ஒவ்வொரு கோரிக்கைக்கும் நாம் கொடுக்க வேண்டிய அழுத்தம், அக்கோரிக்கைகள் இப்போராட்ட காலகட்டத்தில் நம்முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளா? என்பவைகளைத்தான் நாம் காணவேண்டும் எனவே, நாம் உடனடி கோரிக்கைக்கான போராட்டத்தை, தமிழீழ மக்களின் நிரந்தர தீர்விற்கான போராட்டத்தோடு இணைப்பதில் கவனம் செலுத்தி செயல்படவேண்டும்.
 
 உடனடி கோரிக்கைகளில் ஒன்றான மறுவாழ்வு பணிகளை மட்டும் பேசி இன அழிப்பை தடுத்து நிறுத்துதல், பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கைகளை பற்றி பேசாமல் காந்தி குரங்கை போல் இருந்து கொண்டு, நம்மை திசை திருப்ப முயற்சிக்கும் காங்கிரசின் சூழ்ச்சிக்கு நாம் பலியாக கூடாது.

 நமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை

 மாணவர்களின் போராட்டம் என்பது தமிழீழ சிக்கலை முன்வைத்து தொடங்கப்பட்டது. தமிழீழ மக்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்ககூடிய 'பொதுவாக்கெடுப்பு' 'சர்வதேசவிசாரணை' என்ற அடிப்படை போரிக்கைகளை முன்வைத்து தொடங்கப்பட்ட போராட்டமாகும். நமது அடிப்படை கோரிக்கைகளிலிருந்து நம்மை திசைதிருப்புவதற்காக காங்கிரசும், தமிழீழ துரோகிகளும் 13-வது சட்டதிருத்தம், கச்சத்தீவுமீட்பு, தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு போராட வேண்டுமென்று, மறுவாழ்வு பணிமட்டுமேதான் சரியான பணி, மாணவர்களுக்கு அரசியல் கூடாது, என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னுக்கு கொண்டு வருகின்றனர்.
 
 எனவே மாணவர்களும், தமிழீழ ஆதரவாளர்களும், தமிழக மக்களும் நமது மூன்று கோரிக்கைகளை மையமாக வைத்தே மக்களும் நமது மூன்று கோரிக்கைகளை மையமாக வைத்தே நமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நம்மை திசைதிருப்ப வைக்கப்படும் கோரிக்கைகளை தெட்டதெளிவாக விளக்கி வைக்க வேண்டும். இவற்றில் சில கோரிக்கைகள் நாம் முன்னெடுக்க வேண்டியவை என்றாலும், நமது தற்போதைய நோக்கம் அழிப்பாலும், மறுவாழ்வின்றியும் தொடர்ந்து அழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையில்-வாழும் தமிழீழ மக்களுக்காக பாடுபடுவது என்பதை நாம் எந்த நொடியிலும் மறந்துவிடக்கூடாது. தமிழீழ துரோகிகளின் திசைதிருப்பும் முயற்சிக்கு நாம் பலியாகிவிடக்கூடாது.
 
 தமிழகத்தின் வீதிகளெல்லால், நகர்புற பகுதிகளிளெல்லாம் கிராமபுறங்களிலெல்லாம், கல்லூரிகளெல்லாம், மீனவர் வாழும் பகுதிகளிலெல்லாம், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் நமது மூன்று கோரிக்கைகளான
 
 1. இன அழிப்பை தடுத்து நிறுத்துதல், மறுவாழ்வு பணிகள்
 
 2. பொதுவாக்கெடுப்பு
 
 3. சர்வதேச விசாரணை
 
 என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க செய்ய வேண்டும். செப்டம்பரில் கூடும் அய்.நா. பொது பேரவையில் - நமது கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்ற வைப்பதற்கு ஆகஸ்டிலிருந்து தமிழகம் தழுவிய மக்கள் போராட்டத்தை, அரசியல் கட்சிகளை நிர்பந்திக்கும் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

 நமது கோரிக்கையில் வெற்றியடைய நமது வேலை திட்டம்

 குறிப்பிடத்தக்க வெற்றிகளை மாவணவர் போராட்டம் சாதித்த நிலையில் நாம் சில வேலைகளை செய்ய தவறியதன் விளைவாய் நம்மால் முழுவெற்றியை அடையமுடியவில்லை.
 
 தன்னெழுச்சியாக தோன்றிய மாணவர் போராட்டத்தை நாம் திட்டவகைப்பட்டதாக மாற்றியிருக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் நமது போராட்டத்தை நாம் விரிவடைய செய்திருக்க வேண்டும், தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய துணைகண்டம் முழுவதும் மாணவர்களிடம் நாம் தமிழீழ சிக்கலை கொண்டு இந்தியா முழுவதும் மாணவர் போராட்டத்தை கட்டமைத்திருக்க வேண்டும்.
 
 மாணவர்கள் போராட்டத்தின் அழுத்தத்தின் காரணமாக தி.மு.க, காங்கிரசு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியது. அ.இ.அ.தி.மு.க - சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டது. காங்கிரசு அமெரிக்க தீர்மானத்தை (நீர்த்து போக வைத்தாலும்) ஆதரித்தது. இதையே மாணவர் திட்டமிட்டு அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள் முன்னெடுத்திருந்தால், அரசியல் கட்சிகளை ஈழ ஆதரவு போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் பெரும்பங்கை ஆற்ற வைக்க முடியும், மேலும் மாணவர்கள் திட்டமிட்டு மக்களிடம் தமிழீழ சிக்கலை கொண்டு சென்று தமிழீழ சிக்கலுக்கு தீர்வுகான தமிழகம் தழுவிய பெரும் மக்கள் போராட்டத்தை கட்டியமைத்திருந்தால் பெரும் வெற்றிகளை ஈட்டிருக்க முடியும்.

 எனவே வரும் செப்டம்பர் போராட்டத்திலாவது நமது கோரிக்கைகள் வெற்றி அடைய கீழ்வரும் மூன்று வேலைதிட்டத்தை மாணவர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

 1. நமது மூன்று கோரிக்கைகளை தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் எதிரொலிக்க செய்வது (பிரச்சார இயக்கத்தை பல்வேறு வடிவங்களில், பல்வேறு தளங்களில், பல்வேறு தரப்பு மக்களிடம் கொண்டு செல்வது)
 
 2. மாணவர் போராட்டததை - மக்கள் போராட்டமாக மாற்றுவது
 
 3. அரசியல் கட்சிகளை நிர்பந்தித்து போராட்டங்களை முன்னெடுப்பது

 நமது மூன்று வேலைதிட்டத்தை நடைமுறைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை பார்ப்பதற்கு முன், இன்மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தமிழகத்தில் உள்ள நாம் யாரை நிர்பந்திப்பது, இதில் பல குழப்பங்கள் உள்ளன.
 
 தீர்மானத்தை முன்மொழிந்த அமெரிக்காவை நிர்பந்திக்கும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். சர்வதேச சமூகத்திற்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுப்பது என்று சிலர் கூறுகின்றனர்.
 
 நாம் யாரை நிர்பந்திக்க வேண்டுமென்றால் இந்திய அரசு அய்.நா-வில் நமது கோரிக்கைகளை முன்மொழிவதற்கான தயாரிப்பின் அங்கமாக நாடாளுமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற நிர்பந்திப்பது, அய்.நா.வில் நமது தீர்மானம் நிறைவேற இந்திய அரசு உலக நாடுகளின் ஒப்புதலை பெற நிர்பந்திப்பது, அய்.நா-வில் இந்திய அரசு தீர்மானத்தை முன்மொழிந்து நமது மூன்று கோரிக்கைகள் வெற்றியடைய வைக்க நிர்பந்திப்பது.
 
 ஏன் இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்?
 
 இலங்கை தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு, இலங்கையில் சந்தையை பிடிப்பதற்கும் சுரண்டுவதற்கும், இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகள் போட்டி போடுகின்றன. இலங்கையானது இப்போட்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. ஏற்கனவே இக்கட்டுரை குறிப்பது போல், இராணுவ முக்கியத்துவ பகுதியான திரிகோணமலையை அமெரிக்கா தன் கட்டுபாட்டில் வைக்க முயற்சித்த போது, இந்திரா காந்தி தமிழீழ போராளி குழுக்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து இலங்கை மிரட்டி பணிய வைத்ததை பார்த்தோம். இதே நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.
 
 இந்தியா தெற்காசியா முழுவதையும் தனது கட்டுபாட்டில் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக இலங்கையையும் கட்டுபாட்டில் வைக்க தொடர்ந்து போராடி (இந்திய பிராந்திய பெருமுதலாளிகளின் நலனுக்காக) கொண்டிருக்கிறது. சீனாவும் தனது கட்டுபாட்டில் இலங்கையில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தியாதான் இன்றுவரை இலங்கை அரசியலில் ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது. இலங்கையும் தனக்கெதிராக இந்தியா செயல்பட எத்தனித்தால் தான் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடுவோம் என்று பம்மாத்து காட்டி கொண்டிருக்கிறது.
 
 இந்தியா, சீனா, அமெரிக்கா என எந்த நாட்டிற்கும் தமிழீழ மக்கள் மீது நடந்த இனப்படுகொலை பற்றியோ, தமிழீழ மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு குறித்தோ எவ்வித அக்கரையும் கிடையாது. இவர்களின் அக்கரையெல்லாம் தங்கள் நாட்டு முதலாளிகளின் நலனுக்காக இலங்கையை கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். எனவே, உண்மையிலேயே தமிழீழ மக்களின் விடுதலைக்காக முன்னிற்போர் இம்மூன்று நாடுகளின் நாய்சண்டையை கவனித்து அதற்கேற்ப நமது போராட்ட வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.
 
 வருகின்ற செப்டம்பர் மாதம் கூட இருக்கின்ற அய்.நா. பொது பேரவை-யில் தமிழீழ மக்களுக்காக 'பொதுவாக்கெடுப்பு' 'சர்வதேச விசாரணை' 'மறுவாழ்வு மற்றும் இன அழிப்பை தடுப்பது' என்ற மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி யார் தீர்மானத்தை முன்மொழிய நிர்பந்திக்க வேண்டும் என்பது நம்முன்னுள்ள முக்கிய கேள்வி?
 
 ஒன்றிய இந்திய அரசின் கீழ் உள்ள தமிழக மாணவர்கள், இந்திய அரசை நிர்பந்திப்பதே ஒரு சரியான முடிவாக இருக்கும். ஏன் எனில் இந்திய அரசு தெற்காசிய வல்லரசாக உள்ளது. எனவே தெற்காசியாவில் விடுதலைக்காக போராடும் எந்த ஒரு தேசிய இனமும், தங்கள் சொந்த நாட்டு இன ஒடுக்குமுறை அரசை எதிர்ப்பதோடு, தெற்காசிய வல்லரசான இந்தியாவையும் வீழ்த்தும் போதுதான் வெற்றியடைய முடியும். இதே வகையில் இந்திய துணைகண்டத்தில் உள்ள தமிழ்தேசிய மாணவர்களாகிய நாம், இன்னொரு நாட்டில் உள்விவகாரங்களில் தலையிட்டு, அந்நாட்டு மக்களை இந்திய பிராந்திய பெரு முதலாளிகளின் நலனுக்காக சுரண்ட துடிக்கும் இந்திய அரசின் விரிவாதிக்கத்தை எதிர்க்க வேண்டிய கடமை அனைத்து சனநாயக சக்திகளுக்கும் உள்ளது. இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்திற்காக சிங்கள பேரினவாத அரசுடன் கைகோர்த்து தமிழீழ மக்களின் அழிப்பிற்கு துணைநின்ற இந்திய அரசின் விரிவாதிக்க வெறியை எதிர்ப்பது இந்திய துணைகண்டத்தில் உள்ள அனைத்து மக்களின் கடமையாகும்.
 
 தெற்காசிய வல்லரசான இந்தியாவை ஒரு வலுவான மக்கள் போராட்டத்தின் வாயிலாக நிர்பந்திப்பதன் மூலம் நாம் நம் மூன்று கோரிக்கைகளில் வெற்றியடைய முடியும்.
 
 எனவே நாம் நமது மூன்று கோரிக்கைகளை காங்கிரசு கூட்டணி அரசை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரியும், இந்திய அரசின் இலங்கை மீதான செல்வாக்கை, ஆதிக்கத்தை பயன்படுத்தி உடனடியாக இனஅழிப்பை தடுத்து நிறுத்துவதற்கான வேலையை செய்யகோரியும் மறுவாழ்வு பணிகளை துரிதபடுத்த கோரியும், நிர்பந்தித்து உடனடி போராட்டங்களை முன்னெடுத்து, வரும் செப்டம்பரில் அய்.நா- பொதுபேரவையில் நமது மூன்று கோரிக்கையை முன்வைத்து உலக நாடுகளின் ஆதரவை பெற்று தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரசு கட்சியை, ஒன்றிய அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

 நமது கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசை நிர்பந்திப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நமது வேலைதிட்டத்தை பார்ப்போம்.
 
 நமது வேலைத்திட்டம்
 
 1. மாணவர்கள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் நமது மூன்று கோரிக்கைகளை பிரச்சாரமாக கொண்டு செல்ல வேண்டும்.
 
 2. இந்திய அரசு நமது மூன்று கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும், செப்டம்பரில் நடக்கவிருக்கும் அய்.நா- பொதுபேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றவும், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தையும் நாடாளுமன்றத்திலும், தமிழகத்திலும் போராட நிர்பந்திக்க வேண்டும். தமிழக எம்,பிக்கள், தமிழக முதலமைச்சர் இந்தியா உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து நமது மூன்று போரிக்கைகளுக்காக அவர்களிடம் பேசி, ஆதரவு திரட்டி அழுத்த குழுக்களை உருவாக்கி' காங்கிரசு அரசை நிர்ப்பந்திக்கும் வலையில் செயல்பட மாணவர்கள் அரசியல் கட்சிகளை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
 
 3. மாணவர் போராட்டத்தை தமிழகம் தழுவிய பெரும் மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள மாணவர்கள் ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.
 
 மாணவர் ஆற்றல்

 மாணவர் ஆற்றல் வரலாற்று நெடுகிலும் பல்வேறு திருப்பங்களை கொண்டுவந்துள்ளது, நம் தமிழகத்திலும், இந்திய துணைகண்டத்திலும், உலகம் முழுவதும் நடந்துள்ள மாணவர் போராட்டங்கள் பல்வேறு புதிய கொள்கை முடிவுகளையும் எடுக்க அரசை நிர்பந்தித்துள்ளது. அரசியலையும் அதிகாரத்தையும் ஏன! சமூகத்தையும் புரட்டி போட்டுள்ளது.

 - 1965-ல் ஒன்றிய இந்திய அரசு நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை அழித்து, தமிழ் தேசிய அடையாளத்தை அழிக்க நினைத்து இந்தியை திணித்த போது மாணவர்களின் மாபெரும் 'இந்தி எதிர்ப்பு போராட்டம்' தமிழகத்தையே உலுக்கியெடுத்தது. பிப்ரவரி 10-ல் மட்டும் ஒரே நாளில் தமிழகத்தில் ஏழு இடங்களில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் அரசு அறிவிப்பின்படி 25- பேர் மொழிப்போரில் தன் இன்னுயிரை ஈந்தனர், ஆயிரக்கணக்கான கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் அடுக்குமுறைக்கும் அஞ்சாது மாணவர் போராட்டம் வீருகொண்டு முன்சென்றது.

 இப்போராட்டத்தின் விளைவாய் அதுவரை ஆட்சிகட்டிலில் இருந்த காங்கிரசு கட்சி இனி தமிழகத்தில் ஆட்சிக்கே வரமுடியாத நிலையை மாணவர் போராட்டம் ஏற்படுத்தியது. மாணவர் போராட்டத்தை தன் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி கொண்ட தி.மு.க கட்சி மாணவர் போராட்டத்தால் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

 - தனி தெலுங்கானா போராட்டத்தின் உயிர்துடிப்பாய் இருப்பது உஸ்மானியா பல்கலைகழக மாணவர் போராட்டம்தான். மாணவர் போராட்டம்தான் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை போராட்ட களத்தில் இறக்கியது. தொடர்ந்து போராடவும் வலியுறுத்தி வருகிறது.

 - அஸ்ஸாமில் ஏற்பட்ட மாணவர் போராட்டம் பெரும் காட்டு தீயாய் பரவி, அஸ்ஸாம் கன பரிசத் என்ற புதிய கட்சியையே ஆட்சி கட்டிலில் அமரவைத்தது.

 - டில்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் பெண்கள் மீதான பாலியியல் வன்கொடுமைக்கெதிராக பொங்கியெழுந்துள்ள மாணவர்கள் போராட்டம் பெண்களுக்கான புதிய அரசியல் சட்டங்களை கொண்டுவர நிர்பந்தித்துள்ளது.

 - 1969-ல் சனநாயகத்திற்காக நடைபெற்ற பிரெஞ்சு மாணவர் போராட்டம், கடைசி 80- களில் மியான்மரில் நடைபெற்ற இராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து வெகுண்டெழுந்த மாணவர் போராட்டம்.
 
 - 1919- ல் சீனாவில் ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவான மாணவர்களின் மே-நான்கு இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஜப்பான ஏகாதிபத்தியத்தை சீனாவைவிட்டே விரட்டும் பெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்தது.

 - 1989- ல் தியான்மன் சதுகத்தில் நடந்த சீன மாணவர் போராட்டம் அந்நாட்டில் அரசு சர்வாதிகாரத்தை எதிர்த்து நடந்தது.

 இப்படி வரலாற்று நெடுகிலும் மாணவர் போராட்டத்தின் ஆற்றலை சொல்லி கொண்டே போகலாம். இத்தகைய ஆற்றல் மிக்க மாணவர்கள் தமிழகத்தின் அரசியல் களத்திலும் தமிழீழ ஆதரவு போராட்டத்தில் புதிய வரலாற்றை படைப்பார்கள்.... தமிழீழம் மலர செய்வார்கள்.

 தன்னெழுச்சியாக நடந்த மாணவர் போராட்டத்தின் வெற்றிகளை முன்பே பார்த்தோம். அப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பல்வேறு மாணவர்கள் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் 'பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை' என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று உறுதியோடு பேசிய வார்த்தைகள் இன்றும் நம் மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியது. மாணவ தலைவர்கள் தாங்கள் எடுத்து கொண்ட உறுதிமொழியை எந்தவித பிரிதிபலனும் எதிர்பார்க்காமல், அரசியல் கட்சிகளுக்கு பகடைகாயாக மாறாமல், தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதைத அடைய அதற்கான ஆதரவு போராட்டத்தில் எத்தகைய தியாகத்திற்கும் தங்களை உட்படுத்தி கொண்டு உறுதியோடு போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்....

தமிழீழ ஆதரவு போராட்ட களத்தில்.... நமது கோரிக்கைகள் :

 1. உடனடியாக: மறுவாழ்வு பணிகளை நிறைவேற்று! இன அழிப்பை தடுத்து நிறுத்து!

 2. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்து!

 3. போர்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்காக சிங்கள பேரினவாதி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன்நிறுத்தி தூக்கிலிடு!

நமது வேலைதிட்டம்

 1. நமது மூன்று கோரிக்கைகளை தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் எதிரொலிக்க செய்வோம்!

 2. அரசியல் கட்சிகளை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்!

 3. மாணவர்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!

- சுரேஷ்குமார், மைய அமைப்பாளர், மக்கள் சனநாயக மாணவர் பேரவை (9789434804), இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It