காவிரி நதியின் தொன்மையும் பெருமையும்:

“ .....................................................கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைபரந் தோண்டாது

புகாஅர் புகுந்த பெருங்கலத் தகாஅர்

இடைப்புலப் பெருவழிச் சொரியும்” (புறம்-30)

‘பெருங்கப்பல்கள் தனது கூம்புடன்கூடிய விரிந்த பாய்களை தளர்த்தாமலும், அதில் ஏற்றப்பட்டிருந்த பண்டங்களை இறக்காமலும், காவிரிநதியின் முகத்துவாரத்தில் உள்ள பூம்புகார்த்துறையில் பண்டங்களைச் சிதறியவாறு நுழைந்தன’ என்கிறார் சோழன் நலங்கிள்ளி குறித்துப் பாடிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவர்கள்.

cauvery_413

இதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு ஆகும். கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பட்டினப்பாலையும், கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரமும், இன்னபிற சங்க இலக்கியங்களும், அதன் பிந்தைய தமிழ் இலக்கியங்களும் காவிரி நதி குறித்தும் அதன் முகத்துவாரத்தில் உள்ள பூம்புகார்த் துறை குறித்தும் அவைகளின் பெருமைகள் மற்றும் சிறப்புகள் குறித்தும், அவைகளின் தொன்மை குறித்தும் பலபடப் பேசுகின்றன.

இந்தியக் கப்பலியல்(INDIAN SHIPPING) என்ற நூலை எழுதிய வரலாற்று ஆராய்ச்சியாளர் திரு இராதா குமுத் முகர்ஜி அவர்கள், “சங்க இலக்கியங்களில் இருந்து புகார்த்துறையின் பெருமையை தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் வாயிலாகத் துறைமுகத்தின் நீள அகலங்களும் நமக்குத் தெளிவாகின்றன.பெரிய பாய்மரக்கப்பல்கள் இத்துறைமுகத்தில் தமது பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைந்தன” எனக் குறிப்பிடுவதாகச் சொல்கிறார். இந்தியக் கடற்படை முதன்மைப் பொறியாளர்களில் ஒருவரான திரு நரசய்யா அவர்கள்.

மேலும் நரசய்யா அவர்கள் “பாய்களைத் தளர்த்தாமல் வரும்பொழுது கப்பலின் வேகம் அதிகமாக இருக்கும். சரக்குகளுடன் கப்பல்கள் பளுவாகவும் ஆழமாகவும் மிதக்கும். அதனால் பூம்புகார்த்துறைமுகம் நல்ல ஆழமும் பெரிய பரப்பளவும் கொண்ட மிகப்பெரியதொரு துறைமுகமாகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்கிறார்.(கடல்வழி வணிகம்-நரசிய்யா, பக்: 48,49).

பூம்புகார்த் துறையும் அது இருந்த காவிரி நதியும் மிகப்பெரிய நீள அகலங்களைக் கொண்டதாகவும் மிக ஆழமானதாகவும் இருந்தன என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி செய்கின்றன. இச்செய்தியோடு வணிகக் கப்பல்கள் பூம்புகார்த்துறைமுகம் முதல் உறையூர்(இன்றைய திருச்சி வரை) வரை சென்று வந்தன என்ற செய்தியையும் பொருத்திப் பார்க்கும்பொழுது, காவிரி நதியில் வருடம் முழுவதும் மிகப்பெரிய அளவு நீர் ஓடிச் சென்று கடலில் கலந்து கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது. பெரிய கப்பல்கள் செல்லும் அளவு இருந்த அன்றைய காவிரி நதி, இன்று சிறுத்து வறண்டு கிடப்பது நம் நெஞ்சைக் கனக்க வைக்கிறது.

பழைய ஒப்பந்தங்களும் பேச்சு வார்த்தைகளும்:

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே 1892 இல் காவிரி நதி நீர் சம்பந்தமாக ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1924 இல் மற்றொரு ஒப்பந்தம் உருவானது. இரண்டாவது ஒப்பந்தம் 50 வருடங்களுக்குப் பிறகு அதாவது 1974 இல் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆனால் கர்நாடக அரசு 1974 uஉடன் அந்த ஒப்பந்தம் காலாவதி ஆவதாகக் கருதி, 1924 ஒப்பந்தத்தில் உள்ள ஒப்பந்த விதிகளை மீறி பல்வேறு பாசனத் திட்டங்களை 1974 க்கு முன்பே நிறைவேற்றத் தொடங்கியது.

அதனால் கவலை அடைந்த தமிழக அரசு 1970 இல் காவிரி நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்திக் கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.

காவிரி உண்மை அறியும் குழு:

பின் 1972 இல் மூன்று மாநில முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர் முன்னிலையில் நடத்திய பேச்சு வார்த்தையின் படி காவிரி உண்மை அறியும் குழு (Cauveri Fact Finding Committee – CFFC) அமைக்கப்பட்டது. அது மாநில அரசு வாரியாகக் காவிரி நதியின் பயன்பாடு பற்றி ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின்படி, தமிழ் நாட்டிற்குக் கிடைத்த மொத்த நீரின் அளவு 567 டி.எம்.சி எனவும், ஆனால் தமிழகத்தின் பயன்பாடு 489 டி.எம்.சி. எனவும், கர்நாடகாவின் நீர்ப் பயன்பாடு 177 டி.எம்.சி எனவும், கேரளாவின் பயன்பாடு 5 டிஎம்.சி எனவும் தெரிவித்தது. இந்த உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது. மேலும் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்போது பயன்படுத்தி வரும் நீர் அளவை மட்டுமே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது கருத்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம்:

அதன்பின் மாநில அரசுகளுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்துப் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 1983 இல் ‘தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விலைபொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கம்' என்ற ஒரு விவசாய அமைப்பு, மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிட வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டு வழக்குத் தொடுத்திருந்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் 1990 ம் ஆண்டு மே 4 ல் உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அதே ஆண்டில் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. தமிழக அரசு 1970 முதல் நடுவர்மன்றத்தை அமைக்கச் சொல்லிக் கேட்டுவந்தபோதிலும் மத்திய அரசு 20 ஆண்டுகளுக்குப் பின் 1990 ல் உச்ச நீதிமன்ற உத்தரவு தந்த பின்னரே காவிரி நடுவர்மன்றத்தை அமைத்தது.
இடைக்காலத் தீர்ப்பு:

தமிழக அரசு நடுவர் மன்றத்திடம் உண்மை அறியும் குழு கண்டறிந்த கர்நாடகத்தின் பயன்பாடான 177 டி.எம்.சி. நீரை மட்டும் கர்நாடக அரசு பயன்படுத்தத் தக்க வகையில், இடைக்கால உத்தரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. ஆனால் உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பின் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதால் மாநில அரசுகள் அப்பொழுது (1990) பயன்படுத்தி வந்த நீர்ப் பயன்பாட்டின் அடிப்படையில் தான் இடைக்கால உத்தரவை வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் தெரிவித்தது.

பின் நடுவர் மன்றம், 1980-81 முதல் 1989-90 வரை கடந்த 10 வருடங்களாக மேட்டூர் அணைக்கு வந்த வருட சராசரி நீர் வரத்தாக தமிழக அரசு தந்த தரவுகளின் அடிப்படையில், 205 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கர்நாடக அரசு 1990 இல் பாசனம் செய்து வந்த பரப்பான 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல், அது தனது பாசனப் பரப்பை எக்காரணத்தைக் கொண்டும் அதிகரிக்கக் கூடாது எனவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

1990 இல் கர்நாடக அரசின் நீர்ப் பயன்பாடு:

கர்நாடக அரசு 1980-81 முதல் 1989-90 வரையான 10 ஆண்டுகளில் பில்லிகுண்டு என்ற இடத்தில் தமிழகத்திற்கு வழங்கி வந்த வருட சராசரி நீரளவு 227 டி.எம்.சி ஆகும். இந்த நீரளவு மத்திய நீர்வள வாரியத்தால் அளக்கப்பட்டு, கர்நாடக அரசால் நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட நீரளவு ஆகும். பில்லிகுண்டு என்ற இடத்தில் இருந்து மேட்டூர் அணை வரையான வருட சராசரி நீர்வளம் என்பது 25 டி.எம்.சி ஆகும். எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கிய நீரளவு என்பது, 227 + 25 = 252 டி.எம்.சி ஆகும். [ பார்வை : தொகுதி-1, பக்கம் : 101 ]

மேட்டூர் அணை வரையான வருட சராசரி நீர்வளம் 500 டி.எம்.சி என்பதால், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கிய 252 டி.எம்.சி போக மீதி உள்ள 248 டி.எம்.சி நீர் என்பதுதான் கர்நாடகத்தின் பயன்பாடாகும். 1972 வாக்கில் 177 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தி வந்த கர்நாடகம் 1990 வாக்கில் 248 டி.எம்.சி நீரைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்திற்கு 252 டி.எம்.சி. நீரை வழங்கி வந்துள்ளது.

எனவே நடுவர் மன்றம், தமிழகத்திற்குக் கர்நாடகம் 252 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அதனைச் செய்யாது, 205 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதன்மூலம் 248 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்தி வந்த கர்நாடகம், 295 டி.எம்.சி நீரை (500 – 205) பயன்படுத்த வழிவகை செய்தது.

காவிரி நதியின் நீர்வளம் :

தமிழக அரசு 75% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 670 டி.எம்.சி நீரை கணக்கில் கொள்ள வேண்டுமென நடுவர் மன்றத்தை வலியுறுத்தியது. ஆனால் கர்நாடக அரசு 50% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 740 டி.எம்.சி நீரை கணக்கில் கொள்ள வேண்டுமென நடுவர் மன்றத்தை வலியுறுத்தியது. நடுவர் மன்றம் கர்நாடகம் வலியுறுத்திய 50% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 740 டி.எம்.சி நீரை கணக்கில் எடுத்துக் கொண்டது.

சர்வதேச விதிகள் :

பல நாடுகளுக்கு உரிய ஒரு பொது நதியில் இருந்து ஒவ்வொரு நாடும் தனக்குரிய சமபங்கு உரிமையைப் பெற 1966 இல் ஹெல்சிங்கி (Helsinki) என்ற இடத்தில் பல விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. அவை ஹெல்சிங்கி விதிகள் என அழைக்கப்படுகின்றன. அவ்விதிகளில் பிரிவு IV , V (Article IV &V ) ஆகியன, ஒவ்வொரு வடிநில அரசும் அதற்குரிய சமபங்கு நீரை பொது வடிநில ஆற்றிலிருந்து பெறுவதற்கான உரிமைகள் குறித்துப் பேசுகின்றன. (பார்வை: தொகுதி-4 , பக்: 20, 21)

ஒரு பொது நதியில் இருந்து ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய நியாயமான சமத்துவமான நீர்ப் பங்கீட்டைப் பிரித்து வழங்கச் சொல்லப்பட்டுள்ள காரணிகள் பதினொன்று ஆகும். [ (Article V –(II) ] அவை களில் ஒரு சிலவற்றை காவெரி நடுவர்மன்றம் கணக்கில் கொள்ளவில்லை எனலாம். அவை வருமாறு,

(i) தற்பொழுது இருந்து வரும் குறிப்பிட்ட பயன்பாடுகள் உட்பட பண்டைய பயன்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(ii) ஒவ்வொரு அரசினுடைய பிற நீர்வள ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(iii) ஒரு வடிநில அரசின் குறைந்த பட்சத் தேவைகளை, பிற வடிநில அரசை அதிக அளவு பாதிக்காமல் பூர்த்தி செய்ய வேண்டும்.

நடுவர் மன்றம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய நீர்த் தேவைகளை கண்டறிய கீழ்க்கண்ட 6 கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டது.(பார்வை: நடுவர்மன்றத் தீர்ப்பு தொகுதி-4, பக்கம்: 94)

(i) 1924 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத இரு போகம் நெல் மற்றும் வருடப் பயிர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
(ii) கோடைக்கால நெற்பயிர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
(iii) 1924 க்கு முன்புள்ள கோடைக்கால நெற்பயிர் புன்செய்ப் பயிராக மற்றப்படும்.

(iv) வருடாந்திரப் பாசனப் பயிரளவு (Annul Crop Intensity of Irrigation) 100% மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது வருடம் ஒருபோகப் பாசனப் பயிர் மட்டுமே ஒரு பகுதிக்கு அனுமதிக்கப்படும்.
(v) பயிர்க்காலம் என்பது பாசனக் காலமான ‘ஜூன் 1 முதல் ஜனவரி 31 வரை’ மட்டுமே அனுமதிக்கப்படும்.

(vi) நீரேற்றுப் பாசனங்கள் (Lift Irrigation) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

நடுவர் மன்றத் தீர்ப்பு : [ பார்வை : தொகுதி-5 , பக்கம் : 20 ]

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் வழங்கப்பட்ட நீரின் அளவும், பாசனப்பரப்பும் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அவைகளின் பரப்பு இலட்சம் ஏக்கரிலும், அவைகளின் நீர்ப்பயன்பாடுகள் டி.எம்.சியிலும் வழங்கப்பட்டுள்ளன.

விவரம்    தமிழ்நாடு  பாண்டி கர்நாடகா  கேரளா மொத்தம்

பாசனப் பரப்பு  24.71    0.43    18.85    1.93    5.92

நீர்ப்பயன்பாடு 419.0    7.0   270.0    30.0    726.0

சுற்றுப்புறச் சூழ்நிலைக்கான நீர்த்தேவை  10.0

கடலில் வீணாகும் நீரளவு       4.0

மொத்த நீர்ப் பயன்பாடு 740.0

நடுவர் மன்றத் தீர்ப்பும் பாசனப்பரப்பும்:

நடுவர்மன்றம் 1924 ஒப்பந்தப்படியும், சர்வதேச விதிகளின் படியும், தானே வகுத்துக்கொண்ட கோட்பாடுகளின்படியும் ஆய்வு செய்து ஒவ்வொரு மாநில அரசுக்கும் உரிய பாசனப்பரப்பை மூன்று பிரிவுகளின் கீழ் முதலில் நிர்ணயம் செய்தது. பின் அப்பாசனப் பரப்புகளுக்கு உரிய நீர்த்தேவைகளையும் நிர்ணயம் செய்தது. அந்த மூன்று பிரிவுகள் வருமாறு,

1. 1924க்கு முந்தைய பாசனப்பயிர்பரப்பு.

2. 1924 ஒப்பந்தப்படியான பாசனப்பயிர்பரப்பு.

3. தகுதி அடிபடையில் அங்கீகரிக்கப்பட்ட பாசனப்பயிர்பரப்பு.

1924க்கு முந்தைய பாசனப்பயிர் பரப்பு:

பாரம்பரியமாக, மிக நீண்டகாலமாக பாசனம் செய்து வந்த பாசனப்பரப்புகள் இதில் அடங்கும். இந்த முதல் பிரிவில் தமிழகம் 15.19 இலட்சம் ஏக்கரும், கர்னாடகம் 3.44 இலட்சம் ஏக்கரும் பாசனம் செய்து வந்ததாக காவிரி நடுவர்மன்றம் அங்கீகரித்துள்ளது.

1924 ஒப்பந்தப்படியான பாசனப்பயிர் பரப்பு:

1924 ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பாசனப் பரப்புகளை நடுவர்மன்றம் நிர்ணயம் செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழகத்தின் பாசனப் பயிர்பரப்புகளை விரிவாக்கம் செய்ய 1924ல் உள்ள மூன்று விதிகள் வழிவகை செய்கின்றன. அந்த மூன்று விதிகளின் கீழ் தமிழகத்திற்கு 6.195 இலட்சம் ஏக்கர் பரப்பும், கர்னாடகத்தின் பாசனப் பரப்புகளை விரிவாக்கம் செய்ய 1924ல் உள்ள நான்கு விதிகளின் கீழ் கர்னாடகத்திற்கு 7.24 இலட்சம் ஏக்கர் பரப்பும் நடுவர்மன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1924 ஒப்பந்தப்படி தமிழகத்திற்கான மூன்று விதிகளில் இரண்டு விதிகளின் கீழ் மட்டுமே 6.186 இலட்சம் ஏக்கர் பரப்பு அங்கீகரிக்கப் பட்டுள்ளது. விதி எண் 10(xii) ன், கீழ் தமிழக அரசு கேட்ட 4.937 இலட்சம் ஏக்கர் பரப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதே சமயம் கர்னாடகா அரசு கேட்காமலேயே அவ்விதியின் கீழ் 2.72 இலட்சம் ஏக்கரை நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளது. விதி எண் 10(xii) என்பது 1924க்கு முந்தைய பாசனப்பகுதிகளில் நீரைச் சேமிப்பதற்குத்தான் பொருந்துமே ஒழிய பிந்தைய திட்டங்களுக்குப் பொருந்தாது. ஆகவே காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசுக்கு விதி எண் 10(xii) இன் கீழ் அங்கீகாரம் வழங்கிய 2.72 இலட்சம் ஏக்கர் பரப்பையும், அதற்குரிய 23.19 டி.எம்.சி நீரையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் நீர் சேமிப்பு:

தமிழகம் 1924க்கு முன்பிருந்தே 15.2 இலட்சம் ஏக்கர் பரப்பு பாசனம் பெற்று வந்துள்ளது என்பதை நடுவர்மன்றம் தனது தீர்ப்பில் ஏற்றுக் கொண்டுள்ளது. 1972ல் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு(CCFFC), 1928வாக்கில் இந்தப் பழைய பாசனங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் உயரம்(டெல்டா) முதல் 1972 வாக்கில் பயன்படுத்தப்பட்ட நீர் உயரம்(டெல்டா) வரை ஆய்வு செய்து தரவுகளை வழங்கியுள்ளது (பார்வை: தொகுதி-5, பக்: 33)

அத்தரவுகளின்படி காவிரி டெல்டா பகுதியிலும், கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டுப் பகுதியிலும் சேர்ந்து சுமார் 10.7 இலட்சம் ஏக்கரில், 1928க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 55 டி.எம்.சி நீரை தமிழகம் மிச்சப்படுத்தி உள்ளது. இவை டியூட்டியை மேம்படுத்தி, டெல்டா உயரத்தைக் குறைத்து மிச்சப்படுத்தப்பட்டதாகும். மீதி உள்ள சுமார் 4.5 இலட்சம் ஏக்கரில் குறைந்த பட்சம் 25 டி.எம்.சி நீர் மிச்சப் படுத்தப்பட்டிருக்கும். எனவே தமிழகம் 1928 முதல் 1972க்குள், டியூட்டியை மேம்படுத்தி பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து, மொத்தமாக 80டி.எம்.சி பாசன நீரை மிச்சப்படுத்தி இருக்கிறது எனலாம்.

இந்த நீரை மட்டும் கொண்டு விரிவாக்கப்படும் பாசனப் பரப்புகள் அனைத்தும் விதி எண் 10(xii) இன் கீழ் வருகிறது. நாம் இந்த மிச்சப்படுத்தப் பட்ட பாசன நீரைக் கொண்டு 1,28,000 ஏக்கரில் நெற்பயிரும், 78,500 ஏக்கரில் புன்செய்ப்பயிரும், ஆக மொத்தம் 2,06500 ஏக்கர் பரப்பில் பாசனம் செய்துள்ளோம். இவை அனைத்துமே தகுதி அடிப்படையில் மூன்றாம் பிரிவின் கீழ் நடுவர் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவைகளுக்கு மொத்தம் தேவைப்படும் பாசன நீரின் அளவு என்பது கிட்டத்தட்ட 22+7 = 29 டி.எம்.சி. ஆகும்.    இவை மூன்றாம் பிரிவில் இருந்து, 1924 ஒப்பந்தத்தில் உள்ள விதிஎண் 10(xii) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு இரண்டாம் பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும்.

மூன்றாம் பிரிவில் உள்ள சிறு பாசனத்திட்டம் என்பது 1924 ஒப்பந்தத்தில் இல்லை என்பதால், தமிழகம், கர்னாடகம் ஆகியவற்றின் சிறுபாசனத் திட்டங்கள் மட்டும் தகுதி அடிப்படையில் முன்புபோல் மூன்றாம் பிரிவில் இருக்கும். மூன்றாம் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பிற பரப்புகள் அனைத்தும் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தமிழகத்தின் மொத்தப்பரப்பு 24.71 இலட்சம் ஏக்கரும், கர்நாடகத்தின் மொத்தப் பரப்பு 9.22 இலட்சம் ஏக்கரும் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.
இதர நீர் வளங்கள்:

நதி நீர் கோட்பாடுகளை வழங்கிய 1966ஆம் ஆண்டைய ஹெல்சிங்கி விதியில், ஒவ்வொரு வடிநில அரசினுடைய இதர நீர்வள ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்பது ஒரு முக்கியக் கோட்பாடாகும். காவிரி நீரை மாநிலங்களுக்கு இடையே பிரித்து வழங்கும்போது இந்த விதியை கணக்கில் கொள்ள வேண்டியது மிக முக்கியம் ஆகும். தமிழகத்தின் மொத்த நீர்வளம் என்பது காவிரியின் மூலம் கர்னாடகம் வழங்குவதையும் சேர்த்து மொத்தம் 1500 டி.எம்.சி க்கும் குறைவாகவே உள்ளது.

அதே சமயத்தில் கர்னாடகத்தின் நீர்வளமோ 3400 டி.எம்.சி க்கும் மேலாக உள்ளது. கர்னாடகத்தின் மக்கள்தொகை தமிழகத்தின் மக்கள் தொகையைவிடக் குறைவு ஆகும். அதனால் வருடா வருடம் கிடைக்கும் தனிநபர் நீர் அளவு என்பது தமிழகத்தைவிட 2.5 மடங்குக்கும் அதிகமாகும். அதன் தரவுகள் வருமாறு,

பொருள்           தமிழகம்   கர்னாடகம்  குறிப்பு

மொத்த நீர்வளம் (டி.எம்.சி)   1500     3400

மக்கள்தொகை(கோடியில்)    6.24     5.3    2001(census)

தனிநபர் நீர் அளவு(கனஅடி)  24000     64000   2.67மடங்கு

எனவே கர்னாடகா தனது காவிரி வடிநிலத் தேவையை பிற நீர் வள ஆதாரங்களின் மூலம் மிக எளிதாகப் பூர்த்தி செய்து கொள்ளமுடியும். ஆனால் தமிழகம் ஒரு பற்றாக்குறை மாநிலம் ஆகும். அது தனது குறைந்தபட்ச தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் தமிழகம் மிக மிகப் பற்றாக்குறையோடு தான் உள்ளது. உலக மக்கள் தொகை இன்று சுமார் 700கோடி. உலக நீர்வளம் சுமார் 48000 கன கி.மீ. தமிழகத்தின் மக்கள் தொகையோ இன்று சுமார் 7கோடி. தமிழகத்தின் நீர்வளமோ சுமார் 43 கன கி.மீ. தான். அதாவது உலக மக்கள் தொகையில் 100ல் ஒருபங்கு உள்ள தமிழகம், உலக நீர்வளத்தில் 1100ல் ஒரு பங்குக்கும் குறைவாகவே கொண்டுள்ளது.

அதாவது சராசரி உலக மனிதனை விட 11ல் ஒரு பங்குக்கும் குறைவான நீர்வளம் கொண்டவனாக ஒரு சராசரித் தமிழன் உள்ளான். ஆகத் தமிழகம் இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒரு பற்றாக்குறை மாநிலம் ஆகும். எனவே இவைகளைக் கணக்கில்கொண்டே காவிரி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

பாசனம் பெறாத வறட்சிப் பகுதிகள்:

தமிழகத்தில் உள்ள காவிரி வடிநிலப்பரப்பு 44000 ச.கி.மீ. எனில் கர்னாடகத்தின் வடிநிலப்பரப்பு 34000 ச.கி.மீ. ஆகும். தமிழகத்தில் உள்ள காவிரி வடிநிலப்பரப்பில் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது சுமார் 51 இலட்சம் ஏக்கர் ஆகும். கர்னாடகத்தில் உள்ள காவிரி வடிநிலப்பரப்பில் அதன் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது சுமார் 42 இலட்சம் ஏக்கர் ஆகும். நடுவர் மன்றத் தீர்ப்புப் படி தமிழகத்தில் சுமார் 22 இலட்சம் ஏக்கரும் கர்னாடகத்தில் 19 இலட்சம் ஏக்கரும் பயன்பெறுகிறது.

காவிரி வடிநிலப் பரப்பில் தமிழகத்தில் மீதியுள்ள சுமார் 29 இலட்சம் ஏக்கரும், கர்னாடகத்தில் மீதியுள்ள சுமார் 23 இலட்சம் ஏக்கரும் மழையை நம்பியுள்ள, பாசனம் பெறாத மிகவும் வறண்ட பகுதியாகவே உள்ளது. ஆனால் தமிழகத்தின் காவிரி வடிநிலப்பரப்பின் அனைத்துப்பகுதிகளும் பாசனம் பெற்று விட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாசனம் பெறாத பயிரிடும் நிலப்பரப்பான 29 இலட்சம் ஏக்கர் பரப்பில் பெரும்பகுதி மிக மிக வறட்சியான தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்புர், கருர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

இந்த 29 இலட்சம் ஏக்கரில், சுமார் ஒரு 10 இலட்சம் ஏக்கர் பரப்பு மிக மிக வறட்சிப் பகுதியாக உள்ளது. அந்த 10 இலட்சம் ஏக்கர் பரப்புக்காவது வருடம் ஒரு புன்செய்பயிர் பாசனம் செய்யத்தக்க வகையில் பாசனத் திட்டங்களை செயல்படுத்தி ஆகவேண்டும். கர்னாடகம் தனது காவிரி வடிநிலப்பரப்பில் உள்ள பாசனம்பெறாத பகுதிகளின் நீர்த்தேவையை தன்னிடம் உள்ள இதர நீர் வளங்களிலிருந்து பூர்த்தி செய்து கொள்ளமுடியும். ஆனால் தமிழகத்தால் அப்படி பூர்த்தி செய்து கொள்ள இயலாது. எனவே இவைகள் அனைத்தையும் கணக்கில் கொண்டே காவிரி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

வாழ்வாதாரம்- வருடம் ஒரு பயிர்:

நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் வருடம் ஒருமுறை ஒரு விவசாயி ஒருபுன்செய் பயிராவது பயிரிட வாய்ப்புத் தரவேண்டும் என்பதை பல முறை சொல்லி உள்ளது. இதைக் காரணம்காட்டித்தான் தமிழகத்தின் இருபோக நெல் சாகுபடியை அது அனுமதிக்கவில்லை. வருடம் ஒரு புன்செய் பயிர் என்பதை காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள அனைத்து வறட்சிப் பகுதிகளின் விவசாயிகளுக்கும் வழங்குவதை நடுவர் மன்றம் கருத்தில் கொண்டிருக்கவேண்டும். அனைவருக்கும் வழங்க இயலாது எனும்பொழுது மாநிலவாரியாக பாசனம் பெறாத பரப்பின் அடிப்படையில், விகிதாரச்சார முறையில் நீரைப் பிரித்து வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் கர்நாடகம் விதிகளை மீறி கட்டிய பாசனத்திட்டங்களை தகுதி அடிப்படையில் (அதாவது வருடம் ஒருமுறை ஒரு விவசாயி ஒருபுன்செய் பயிர் பயிரிட வாய்ப்புத் தரவேண்டும் என்ற அடிப்படையில்) ஏற்பதாகக் குறிப்பிட்டு 7 இலட்சம் ஏக்கருக்கு மேல் அங்கீகரித்துள்ளது. மேலும் 2.72 இலட்சம் ஏக்கரை டியூட்டியை மேம்படுத்தி நீரை மிச்சப்படுத்தி பாசனம் செய்ததாக அங்கீகரித்துள்ளது. இவைகளை ஏற்றுக் கொள்ள இயலாது.

எனவே அனைவருக்கும் சம பங்கு வழங்கும் விதத்தில், 1924க்கு முந்தைய பரப்பு, 1924 ஒப்பந்தப்படியான பரப்பு ஆகிய இரண்டைத் தவிர பிறவற்றை மாநிலவாரியாக மீதியுள்ள பாசனம்பெறாத பரப்பின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் பிரித்து, வருடம் ஒருமுறை ஒரு புன்செய் பயிர் செய்வதற்கான பரப்பையும் அதற்குரிய பாசன நீரையும் வழங்கவேண்டும். அதன்படி கணக்கிட்டால் தமிழகத்திற்கு சுமார் 5 இலட்சம் ஏக்கர் புன்செய் பரப்பும், 43 டி.எம்.சி நீரும் அதிகம் கிடைக்கும். கர்நாடகாவிற்கு 34 டி.எம்.சியும் கேரளாவிற்கு 15 டி.எம்.சியும் குறையும்

1924க்கு முந்தைய கோடைகால நெற்பயிர்:

1924க்கு முந்தைய பாசனத்தில் இரு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் கோடைகால நெற்பயிர் பயிரிடும் பரப்பு 56000 ஏக்கர் ஆகும். இவை அனைத்தையும் நடுவர்மன்றம் புன்செய் பயிராக மாற்றியுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் 40,000 ஏக்கர் பரப்புக்கு வருடம் முழுவதும் கரும்பு பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பல நூற்றாண்டுகளாக இருபோக நெற்பயிர் செய்து வந்த அவர்களது பாரம்பரிய உரிமை பாதுகாக்கப் படவேண்டும். அவர்களது பயிர்க்காலத்தை ஜுன்-1 முதல் ஜன-31 வரை என மாற்றியமைத்து அவர்கள் இருபோகம் நெற்பயிர் செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு 4.862 டி.எம்.சி. நீர் தேவைப்படும்.

சேத்தியாத்தோப்பு:

1924க்கு முன்பிருந்தே மிக நீண்டகாலமாக சேத்தியாத் தோப்பு அணைகட்டு பாசனத்துக்கு, 37,900ஏக்கருக்கு உதவியாக (supplementation) 2அடி நீர் உயரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதி காவிரி வடிநிலப் பரப்புக்கு வெளியே உள்ளது என்பதற்காக அதன் பாரம்பரிய உரிமையை நீக்க முடியாது. பல நாடுகளில் பல இடங்களில் வடிநிலப் பரப்புக்கு வெளியே உள்ள பாரம்பரிய உரிமை பாதுகாக்கப்படுகிறது. மேலும் தமிழகம் நீர்பற்றாக்குறை மாநிலம் என்பதால் அந்த 37900 ஏக்கருக்கும் உரிய நீர் திரும்பத் தரப்பட வேண்டும். அதற்கு 3.29 டி.எம்.சி நீர் தேவை.

தமிழகத்தின் மொத்தத் தேவை:

காவிரி நடுவர் மன்றம் முன்பே ஒப்புதல் வழங்கிய 24.71 இலட்சம் ஏக்கர் பயிர்பரப்புக்கு 419 டி.எம்.சி. நீர் தேவை. சமபங்கு உரிமை அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்கப்படும் சுமார் 5 இலட்சம் ஏக்கர் புன்செய் பயிர் பரப்புக்கு 43 டி.எம்.சி. நீர் தேவை. கோடைகால நெற்பயிருக்கு 4.86 டி.எம்.சி. நீரும், சேத்தியாத் தோப்புக்கு 3.29 டி.எம்.சி. நீரும் தேவை. எனவே மொத்தமாக 419+43 +4.86+3.29= 470.15 (அ) 470 டி.எம்.சி. நீர் தேவை.

தமிழகத்திற்கு புதிதாக 51 டி.எம்.சி. நீர் தேவைப் படுகிறது. கர்னாடகா 34 டி.எம்.சி. நீரும், கேரளா 15 டி.எம்.சி. நீரும் தந்தால் 49 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பொதுப்பங்கில் இருந்து 2 டி.எம்.சி. நீர் எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் தேவையான 51 டி.எம்.சி. நீர் பெறப்பட்டுவிடும். பொதுப்பங்கில் இருந்து எடுக்கும்பொழுது தமிழகம், கர்னாடகம் ஆகியவற்றுக்கு தலா 1 டி.எம்.சி. நீர் குறையும். அப்பொழுது ஒட்டுமொத்தத்தில் தமிழகத்திற்கு 50 டி.எம்.சி. நீர் அதிகமாகவும், கர்னாடகத்திற்கு 35 டி.எம்.சி. நீர் குறைவாகவும் கிடைக்கும். அப்பொழுது நமது கணக்குப்படி தமிழகத்துக்கு 469 டி.எம்.சி. நீரும், கர்னாடகத்துக்கு (270-35) 235 டி.எம்.சி. நீரும், கேரளாவுக்கு 15 டி.எம்.சி. நீரும், பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் கிடைக்கும். இதுவே நியாயமான முறையான பகிர்வு ஆகும்

தமிழகம் டியூட்டியை மேம்படுத்தி, நீர் உயரத்தை(டெல்டா) மிச்சப் படுத்தி சேமித்த சுமார் 80டி.எம்.சி. நீரில், 29 டி.எம்.சி. நீர் மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது. மீதி 51 டி.எம்.சி. நீர் பயன்படுத்தப் படவில்லை. அதுதான் நமக்குத் திருப்பித் தரப்படுகிறது.

மத்திய அரசின் நிலைபாடு:

மத்திய அரசு ஆரம்பம் முதல் காவிரி பிரச்சினையை நியாயமான முறையில்தீர்த்து வைக்கும் நோக்கத்தோடு செயல்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. தமிழகம் 1970 ஆம் ஆண்டு முதல் பலமுறை காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கச் சொல்லி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. ஆனால் நடுவர்மன்றத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 1990ல் நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே மத்திய அரசு நடுவர்மன்றத்தை அமைத்தது.

நடுவர்மன்றம் 1990ல் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியது. அதனை எதிர்த்து கர்னாடக அரசு தனது சட்டமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றியது. இந்திய இறையாண்மையை மீறும் இச்செயலை கூட மத்திய அரசு கண்டிக்கவோ, அதற்குரிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை. பின் 2007ல் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால் அதனை முறைப்படி உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட வேண்டிய மத்திய அரசு, தமிழக அரசு பலமுறை கேட்டும் வெளியிட வில்லை.

2013 இல் உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரே மத்திய அரசு நடுவர்மன்றத் தீர்ப்பை வெளியிட்டது. மத்திய அரசு செய்யவேண்டிய சிறிய விசயத்திற்குக் கூட வழக்கு மூலமே உத்தரவு வாங்கவேண்டியதுள்ளது. எனவே ஆரம்பம் முதல் மத்திய அரசு கர்னாடக மக்களுக்கு ஆதரவாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது எனலாம்.

காவிரி நடுவர் மன்றத்தின் நிலைபாடு:

காவிரி நடுவர்மன்றம் மாநில அரசுகளுக்கிடையே ஒரு சமரச முடிவை எட்டவே விரும்பியுள்ளது. கலகக் கண்ணோட்டத்தில் செயல்படும் கர்னாடக அரசுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டதன் காரணமாக, கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருந்த தமிழகத்துக்கு உரிய நியாயம் வழங்கப் படவில்லை.

பொதுவாக பலவிதங்களிலும் நீரை மிச்சப்படுத்தி கர்னாடகமும் கேரளமும் கேட்டிருந்த அதிக அளவான புதிய பாசனத் திட்டங்களுக்கு நீர் வழங்கி அவைகளைத் திருப்திப் படுத்தவே நடுவர்மன்றம் முயன்றுள்ளது. இருக்கிற பாசனத்திட்டங்களுக்கு உரிய நீரை வழங்கவோ, அவைகளுக்கான நீரை உறுதிப்படுத்தவோ அது முயலவில்லை. உரிய நீரை வழங்குவதும், நீரை உறுதிப்படுத்துவதும் மிகமிக முக்கியம் என்பதையும் அது உணரவில்லை. கர்னாடகம் 3400 டி.எம்.சி நீர்வளம் கொண்டிருப்பதையோ, தமிழகம் ஒரு பற்றாக்குறை மாநிலமாக இருப்பதையோ, தமிழகத்தில் 29 இலட்சம் ஏக்கர் பயிரிடும் நிலப்பரப்பு பாசனம் பெறாது வறட்சி நிலையில் இருப்பதையோ, அதில் 10 இலட்சம் ஏக்கர் மிக மிக வறட்சியான பகுதியாக இருப்பதையோ, 1990ல் 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் பாசனப்பரப்பை அதிகரிக்கக் கூடாது என தான் சொல்லி இருந்ததையோ கருத்தில் கொள்ளமல், கர்னாடகாவின் சுமார் 7 இலட்சம் ஏக்கர் பரப்புக்கான புதிய பாசனத் திட்டங்களுக்கு நடுவர் மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

விதி எண் 10(xii) இன் கீழ், டியூட்டியை அதிகப்படுத்தி, பாசன நீர் உயரத்தைக் குறைத்து, நீரை மிச்சப்படுத்தி பாசனப்பரப்பை விரிவாக்குவதில் தமிழகமே உரிமை கொண்டாட முடியும். ஆனால் நடுவர் மன்றம் தமிழகத்தின் உரிமைகளை மறுத்துவிட்டு, கர்னாடகம் கேட்காமலேயே 2.72 இலட்சம் ஏக்கர் பரப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது. பலவிதங்களிலும் கர்னாடகாவைத் திருப்திப் படுத்தவே நடுவர்மன்றம் முயன்றுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் நியாயமான சில உரிமைகள் பறிபோக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.

இறுதியுரை:

1924 ஒப்பந்தத்தில் இருந்த சில முக்கிய உரிமைகள் பறி போயுள்ளன. அவை அனைத்தையும் திரும்பப்பெற முடியாது எனினும், ஓரளவாவது நமது உரிமைகள் மீட்கப்பட்டாக வேண்டும். இன்றைய நடுவர் மன்றத்தீர்ப்பில் நாம் குறைந்தபட்சம் 50 டி.எம்.சி நீரை இழந்துள்ளோம். அதையாவது நாம் மீட்டாக வேண்டும். நியாயப்படியும், நீதிப்படியும், நடுவர்மன்றக் கோட்பாடுகளின்படியும் அவை நமக்கு வழங்கப்பட்டாக வேண்டும். ஆனால் இவைகளை நமது ஒற்றுமையின் மூலமும் வலிமையான போராட்டங்களின் மூலமும் மட்டுமே பெற முடியும். ஒப்பந்தங்கள் மூலமும், தீர்ப்புகள் மூலமும் இவைகளைப் பெறுவது போலவே, அவைகளை நடைமுறைப்படுத்தி கர்னாடகத்திடமிருந்து உரிய காலத்தில் உரிய அளவு நீரைப் பெறுவது என்பது மிக முக்கியம்.

நீர்பிரச்சினை குறித்த சர்வதேச ஹெல்சிங்கி விதிகளில் உள்ள இதர நீர்வள ஆதாரங்களையும், பண்டைய பயன்பாடுகளையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்பதும், ஒரு மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் பொழுது மற்றொரு மாநிலம் அதிகம் பாதிக்கப்படக்கூடாது என்பதும் மிகமிக முக்கியமான, தமிழகத்திற்கு இன்று தேவைப்படுகிற விதிகளாகும். 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் பாசனம் மட்டும் செய்யவில்லை, காவிரி நதியில் வணிகக் கப்பல்களை ஓட்டி வணிகம் செய்தோம், உள்நாட்டு மீன் வளத்துக்கு ஒரு ஆதாரமாகக் காவிரி நதி இருந்தது. வருடம் முழுவதும் நீர் ஓடி நமது குடிநீர் தேவைகளையும், இதர குடும்பத், தொழில் தேவைகளையும் அது பூர்த்தி செய்து வந்தது.

இவையெல்லாம் பண்டையகாலம் முதல் இருந்த வந்த நமது பயன்பாடுகள் என்பதையும், தமிழகத்துக்கு அதிக பாதகம் செய்து கர்னாடகம், கேரளம் ஆகியவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடாது என்பதையும் ஹெல்சிங்கி விதி மூலம் அறிய முடிகிறது. எனவே நாம் இதுபோன்ற சர்வதேச விதிகளை நமக்கு ஆதாரமாகக் கொள்ளவேண்டியது அவசியத் தேவை ஆகும்.

விவசாய அமைப்புகள் ஒன்றுசேர்வதும், தங்களது சுயநலங்களை மறந்து ஒட்டுமொத்த தமிழக உரிமைக்காகப் போராடுவதும், பிற வணிக, தொழில்துறை அமைப்புகளை ஒன்றினைத்துக் கொள்வதும், பல்வேறு பொதுநல அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பெறுவதும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் அமைப்புகளையும் இணைத்துக் கொள்வதும் அவசியம். நமது ஒன்று திரண்ட போராட்டம் தான் வெற்றியைத் தேடித்தரும். ஆகவே ஒன்று திரள்வோம்! போராடுவோம்! காவிரியை மீட்டெடுப்போம்! தமிழர்களின் உரிமையைப் பாதுகாப்போம்!

குறிப்பு: இணைப்பு-1, 2, 3ல் முறையே விதிஎண் 10(xii) , சமபங்குநீர்,kaa காவிரி நதிநீர் தரவுகள் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன.

- கணியன் பாலன்

காவிரி நடுவர் மன்றம் இணைப்பு-1

விதி 10(xii) ன் கீழ் மாற்றங்கள்-விளக்கம்:

1924 ஒப்பந்தப்படி தமிழகத்திற்கான மூன்று விதிகளில் இரண்டு விதிகளின் கீழ் மட்டுமே 6.186 இலட்சம் ஏக்கர் பரப்பு அங்கீகரிக்கப் பட்டுள்ளது. விதி 10(xii) ன், கீழ் தமிழக அரசு கேட்ட 4.937 இலட்சம் ஏக்கர் பரப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதே சமயம் கர்னாடகா அரசு கேட்காமலேயே அவ்விதியின் கீழ் 2.72 இலட்சம் ஏக்கரை நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளது. விதி எண் 10(xii) என்பது,

“பாசனத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ள நீரைச் சிறிதுகூட அதிகரிக்காது, பாசன எண்ணை(டியுட்டி) அதிகரிப்பதின் மூலம் மட்டும் சேமிக்கப்படும் நீரைக்கொண்டு, சென்னை மாகாண அரசும், மைசூர் அரசும் பாசனப் பகுதியை விரிவாக்கம் செய்வதை, பிரிவு எண் IV, V ஆகியவற்றில் சொல்லப் பட்டுள்ள பாசனப்பகுதியை விரிவு படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தடுக்காது என்பதை இரு அரசுகளும் ஒப்புக் கொள்கின்றன”

எனச் சொல்கிறது. பிரிவு எண் IV என்பது மைசூர் அரசு கிருஸ்ணசாகர் அணையைக் கட்டி பாசனப் பரப்பை அதிகரிப்பது குறித்தும், பிரிவு எண் V என்பது தமிழக அரசு மேட்டுர் அணையைக் கட்டி பாசனப் பரப்பை அதிகரிப்பது குறித்தும் பேசுகிறது. அவ்விதிகளில் இவ்வணைகளைக் கட்டி பாசனப்பரப்பை அதிகரிப்பதற்குச் சில எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாசன எண்(டியூட்டி):

இங்கு “பாசன எண்(டியூட்டி) என்பது, ஒரு பயிரின் தொடக்க காலம் முதல் அதன் அறுவடைக்காலம் வரை வினாடிக்கு ஒரு கனஅடி நீர் தொடர்ந்து வரும்பொழுது அந்த நீரைக்கொண்டு எவ்வளவு ஏக்கர்பரப்பு பாசனம் செய்யப்படுகிறதோ அந்த ஏக்கர்பரப்பின் எண்ணிக்கையே ஆகும்”. ஒவ்வொரு பாசனத்திட்டத்திற்கும் பாசன எண்(டியூட்டி) இருக்கும். அதன்படியே நீர் பிரித்து வழங்கப்பட்டு பாசனம் செய்யப்படும்.

உதாரணமாக கீழ்பவானி பாசனத்திட்டத்தின் பாசன எண் 60 ஆகும். ஆகவே கீழ்பவானி பாசனத்திட்டத்தில் வினாடிக்கு ஒரு கனஅடி நீர் தொடர்ந்து விடப்படும்பொழுது, 60 ஏக்கர் பாசனம் செய்யப்படும். ஒரு பாசனத்திட்டத்தின் பாசன எண் 40 ஆக இருக்கும் எனில், அங்கு வினாடிக்கு ஒரு கனஅடி நீர் தொடர்ந்து விடப்படும்பொழுது, 40 ஏக்கர் மட்டுமே பாசனம் செய்யப்படும்.

பாசன எண்(டியூட்டி)= பயிரின் பாசன காலம் x 60/ பயிரின் நீர் உயரம்

பயிரின் பாசன காலம் என்பதை நாட்களிலும், பயிரின் நீர் உயரம் என்பதை செ.மீ. உம் தரவேண்டும். 60 என்பது நிரந்தர எண் ஆகும். இந்தச் சூத்திரத்தின் படி பயிரின் பாசன காலத்தில் மாற்றம் இல்லாத பொழுது பாசன எண்ணை அதிகரித்தால் பாசன நீர் உயரம்(டெல்டா) குறையும். பாசனத்திற்கான பாசன நீர் உயரம்(டெல்டா) குறையும்பொழுது நீர் மிச்சமாகும். வேறு நீரைப் பயன்படுத்தாமல், இவ்வாறு மிச்சமாகும் நீரை மட்டும் பயன்படுத்தி பாசனப்பரப்பை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே விதி எண் 10(xii) இன் பொருளாகும்.

1924க்கு முந்தைய பழைய பாசனத்திட்டங்களுக்கான பாசனஎண்ணை(டியூட்டி) அதிகரித்து, அல்லது அவைகளின் பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து அதனால் மிச்சமாகும் நீரைக்கொண்டு பாசனப்பரப்பை அதிகரித்துக் கொள்ளலாம். இதற்கு விதிகள் IV, V இல் உள்ள கட்டுப்பாடுகள் தடையாக இருக்காது என்பதே விதி எண் 10(xii) இன் பொருளாகும்.

விதி எண் 10(xii) என்பது முன்பே இருந்து வரும் பாசனத்திட்டங்கள் குறித்துத்தான் பேசுகிறதே ஒழிய புதிய திட்டங்கள் குறித்துப் பேச வில்லை. அதன் கடைசி வரிகளான, “without any increase of the quanity of water used” என்பது அதனைத் தெளிவு படுத்துகிறது. “பயன்படுத்தப் படும் நீரை சிறிது கூட அதிகப்படுத்தாமல்” என்பதே அதன் பொருளாகும். ஆகவே தர்க்க அடிப்படையில் பார்த்தாலும், பொதுக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் நீரைச் சேமிப்பது என்பது முன்பே நீரைப் பயன்படுத்தி வரும் பாசனங்களுக்கே பொருந்துமே ஒழிய, புதிய பாசனத்திட்டங்களுக்குப் பொருந்தாது.

எனவே இந்த விதி இந்த ஒப்பந்தத்துக்கு முந்தைய, அதாவது 1924க்கு முந்தைய பாசனப்பகுதிகளில் நீரைச் சேமிப்பதற்குத்தான் பொருந்துமே ஒழிய பிந்தைய திட்டங்களுக்குப் பொருந்தாது. இந்நிலையில் விதி எண் 10(xii) இன் கீழ், கிருஸ்ணசாகர், ஹேமாவதி அணைத்திட்டங்களின் மூலம் பாசனம் பெரும் 2.72 இலட்சம் ஏக்கர்களுக்கு, 23.19 டி.எம்.சி நீர் தரப்பட்டிருப்பது என்பது எவ்விதத்திலும் பொருந்தாது.

காவிரி நடுவர்மன்றம் தொகுதி-4, பக்: 131,135 ஆகிய பக்கங்களில் கிருஸ்ணசாகரில் 0.71 இலட்சம் ஏக்கரும், ஹேமாவதி திட்டத்தில் 2.01 இலட்சம் ஏக்கரும், விதி எண் 10(xii) இன் கீழ் எப்படிப் பொருந்தும் என்பது குறித்துப் பேசுகிறது. ஆனால் அதில் தரப்பட்ட விளக்கங்களும் இன்னபிற காரணங்களும் இவ்விதியின் அடிப்படை நோக்கத்தின்படி இருக்கவில்லை. கர்னாடக அரசே இத்திட்டங்களை இவ்விதியின் கீழ் கொண்டுவரவில்லை.

தொகுதி-4, பக்: 59,60,61 ஆகிய பக்கங்களில் இவ்விதி குறித்தும் டியுட்டி மூலம் பாசனப் பரப்பை அதிகரித்தல் குறித்தும் நடுவர்மன்றம் விவாதிக்கிறது. அதில் 1923ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதியில் மைசூர் அரசின் திவான் அவர்களும், சென்னை அரசின் 3வது கவுன்சில் உறுப்பினர் அவர்களும் டியுட்டி மூலம் பாசனப் பரப்பை அதிகரித்தல் குறித்து விவாதித்தது பற்றிய குறிப்பு ஒன்றைத் தந்துள்ளது. அதன் விபரம் வருமாறு,

“டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் பாசனப்பரப்பு ஏக்கரில் செய்யப்படும் எந்த அதிகரிப்பையும்(நிர்ணயிக்கப்பட்டிருக்கிற விகிதாசாரத்தில்), விருப்பப்பட்டால் உரியவகையில், தேவையான பாதுகாப்புடன் உடன்படிக்கையில் வழங்கலாம். ஆனால் இது தொழில்நுட்பக் கூறாக இருப்பதால், இரு அரசுகளின் தொழில்நுட்ப அலுவலர்களால் இது விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு, அவர்கள் அவ்வப்போது அந்தந்த அரசுகளுக்கு இதுகுறித்து ஆலோசனையும் வழங்கவேண்டும்.

மேட்டூரின் கீழ் உள்ள 3.01 இலட்சம் ஏக்கர் பாசனத்தைப் பொருத்தவரையில், மேற்கண்ட டியூட்டி வகையில் எந்த அதிகரிப்பும் வழங்கப்படுமானால், புதிய 1.10 இலட்சம் ஏக்கர் பாசனப்பரப்புக்கும் அதே அளவுக்கு அதே முறையில் அதிகரிப்பு வழங்கப் படவேண்டும்” 1923ல் நடைபெற்ற இந்த விவாதக் குறிப்பைக் காரணம்காட்டி விதி எண் 10(xii) என்பது காவிரி மேட்டூர் திட்டத்தில் உள்ள புதிய பாசனத் திட்டங்களில் நீரைச் சேமிப்பதற்கே இவ்விதி பொருந்தும் என நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் நடுவர்மன்றம் அந்த முடிவிற்கு வருவதற்கான தரவுகள் எதுவும் மேற்கண்ட விவாதக் குறிப்பில் இல்லை. மேலே உள்ள விவாதக் குறிப்பில் டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாசனப்பரப்பு அதிகரிப்பை தேவையானால் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற கருத்து பொதுப்படையாகத்தான் சொல்லப் பட்டுள்ளதே ஒழிய புதிய பாசனத்திட்டங்களுக்குத்தான் அது பொருந்தும் என்று சொல்லப்படவில்லை.

ஆனால் இது தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டது என்பதால் தொழில்நுட்ப அலுவலர்களைக் கொண்டே முடிவு செய்யப்படவேண்டும் என்பது சொல்லப்பட்டுள்ளது. மேட்டூர் பாசனத்திட்டத்தில் உள்ள 3.01 இலட்சம் ஏக்கருக்கு இந்த முறையின் கீழ் பாசனப்பரப்பில் அதிகரிப்பு வழங்கப் பட்டால், 1.10 இலட்சம் ஏக்கருக்கும் அதே அளவு அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே மேட்டூர் பாசனத்திட்டத்தின் 3.01 இலட்சம் ஏக்கருக்கு இந்த முறையின் கீழ் பாசனப்பரப்பில் அதிகரிப்பு பொதுவாக வழங்கப் படாது என்ற மறைமுகக் கருத்தும் அப்படி மீறி வழங்கினால் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கருத்தும் அதில் அடங்கி உள்ளது. மேலும் தொழிநுட்ப அலுவலர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னர் மேட்டூர் போன்ற புதிய பாசனத் திட்டங்களுக்கு இந்த டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாசனப்பரப்பு அதிகரிப்பை வழங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல, என்ற முடிவு ஏற்பட்டிருக்கவேண்டும் எனத்தெரிகிறது.

அதனை ‘முன்பே பயன்படுத்தப்படும் நீர்’ என்ற விதி எண் 10(xii) இல் உள்ள இறுதி வரிகள் தெளிவு படுத்துகின்றது எனலாம். மேலும் பொதுவாக முந்தைய பாசனத் திட்டங்களில் மட்டுமே டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் மிச்சமாகும் நீரைக்கொண்டு பாசனப்பரப்பு அதிகரிப்பைச் செய்ய முடியும். இனி செயல்படுத்தப்போகும் பாசனத்திட்டத்திற்கு அது பொருந்தாது. எனவே தர்க்க அடிப்படையிலோ, பொதுக் கண்ணோட்டத்திலோ புதிய பாசனத்திட்டங்களுக்கு விதி எண் 10(xii) என்பது பொருந்தவே பொருந்தாது என்பதே உண்மை. விதிஎண் 10(xii) இன்கீழ் கர்னாடகம் பெற்ற பரப்பும் நீரும்

பாசனத்திட்டம் முதல்பருவம்  இரண்டாம்பருவம்  நீரின்அளவு

பரப்பு நீர் உயரம்  பரப்பு நீர் உயரம் டி.எம்.சியில்

(ஏக்கர்) (இன்ச்) (ஏக்கர்) (இன்ச்)

கிருஸ்ணசாகர் 30,972 55” 20,000  24” 6.17+1.74= 7.91 20,000 15” -    -    1.09

ஹேமாவதி  1,01,000 15” 1,00,000  24” 5.49+8.70=14.19

மொத்தம்   1,51,972   +   1,20,000 =2,71,972     23.19

பார்வை: தொகுதி-4, பக்: 139 & தொகுதி-5, பக்: 94.

ஆகமொத்தம் 2.72 இலட்சம் ஏக்கர் பரப்பும், 23.19 டி.எம்.சி நீரும் நடுவர் மன்றத்தால் கர்னாடகத்துக்கு விதி எண் 10(xii) கீழ் வழங்கப்பட்டுள்ளது. எந்தவகையில் டியூட்டியை மேம்படுத்தி 23.19 டி.எம்.சி. நீர் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது என்பது தீர்ப்பில் சொல்லப்படவில்லை. எனவே அந்த வகையிலும் இந்த 23.19 டி.எம்.சி. நீரை ஒதுக்கியது ஏற்கப்படத்தக்கதல்ல.

தமிழகத்தின் நீர் சேமிப்பு: (பார்வை: தொகுதி-5, பக்: 33)

cauvery_farmer_376தமிழகத்தில் 1924க்கு முன்பிருந்தே பாசனம் பெற்று வந்துள்ள 15.193 இலட்சம் ஏக்கர் பரப்பில், காவிரி டெல்டா பகுதியில் மட்டும் 9.5 இலட்சம் ஏக்கர் பரப்பு உள்ளது. காவிரி உண்மை அறியும் குழுவின் அறிக்கைப்படி, 1928ல் அப்பாசனப் பரப்பின் பாசன நீர் உயரம்(டெல்டா) என்பது 5.3 அடி ஆகும். 1971ல் அதன் பாசன நீர் உயரம்(டெல்டா) என்பது 4.2 அடி ஆகும். பயிரின் பாசனகாலம் என்பதை சராசரியாக 135 நாட்கள் என எடுத்துக் கொண்டால், 1928ல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் பாசன எண்(டியூட்டி) என்பது 50 ஆகும். அதே சமயம் 1971ல் அதன் பாசன எண்(டியூட்டி) என்பது 63.3(அ) 64 ஆகும். ஆகவே 1924க்குப்பின் அந்த 9.5 இலட்சம் ஏக்கரிலும் பாசனஎண்ண (டியூட்டி) அதிகரித்து, பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து மிச்சப் படுத்திய நீரின் உயரம்(டெல்டா) என்பது சுமார் 1.1 அடி(5.3-4.2) ஆகும்.

எனவே மிச்சப்படுத்தப்பட்ட நீரின் அளவு= 9.5 இலட்சம் ஏக்கர் x 1.1 அடி = 45 டி.எம்.சி.

எனவே காவிரி டெல்டா பகுதியில் மட்டும் 1928க்கும் 1971க்கும் இடையே 45 டி.எம்.சி நீர் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்றே கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டுப் பகுதியில் 1.196 இலட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. 1928ல் அப்பகுதியில் பாசன் நீரின் உயரம்(டெல்டா) என்பது 7.4 அடி . ஆனால் 1971ல், அப்பகுதியில் பாசன் நீரின் உயரம்(டெல்டா) என்பது 5.4 அடி. ஆக 7.4-5.4= 2 அடி(டெல்டா) நீர் மிச்சமாகியுள்ளது. ஆக மிச்சப்படுத்தப்பட்ட நீரின் அளவு = 1.196 இலட்சம் ஏக்கர் x 2 அடி = 10 டி.எம்.சி.

ஆகவே காவிரி டெல்டா பகுதியிலும், கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டுப் பகுதியிலும் சேர்ந்து 1928க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 55 டி.எம்.சி நீர், டியூட்டியை மேம்படுத்தி பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து மிச்சப்படுத்தப் பட்டுள்ளது. 15.2 இலட்சம் ஏக்கரில் மீதி உள்ள பழைய பாசனப் பரப்பான சுமார் 4.5 இலட்சம் ஏக்கரில் குறைந்த பட்சம் 25 டி.எம்.சி நீர் மிச்சமாகியிருக்கும்.

எனவே தமிழகம் 1928 முதல் 1972க்குள், டியூட்டியை மேம்படுத்தி பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து, மொத்தமாக 80டி.எம்.சி பாசன நீரை மிச்சப்படுத்தி இருக்kiRathuகிறது எனலாம். இவை அனைத்துமே விதி எண் 10(xii) இன் கீழ் வருகிறது. நாம் 1924க்கு முந்தைய பாசனப் பரப்பை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளோம். டியூட்டியை மேம்படுத்தி, டெல்டா உயரத்தைக் குறைத்து பாசன நீரை மிச்சப்படுத்தி உள்ளோம். நாம் இந்த மிச்சப்படுத்தப் பட்ட பாசன நீரைக் கொண்டு மட்டும் 2,06500 ஏக்கர் பாசனப் பரப்பை விரிவாக்கம் செய்துள்ளோம். அதற்குத் தேவைப்படும் பாசன நீரின் அளவு என்பது 22+7 = 29 டி.எம்.சி. ஆகும்.

பாசனப்பகுதி        பரப்பு  நீர்உயரம்   நீர்தேவை

(ஏக்கர்)  (டெல்டா)  (டி.எம்.சி.)

1.காவிரி டெல்டா பாசனம்    8000    3.4      1.17

2.கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டு 20,300   3.2      2.8

3.சேலம் திருச்சிக் கால்வாய்   15,600   4.2      2.82

4.கட்டளைத்திட்டம்        32,400   4.2      5.86

5.புதியகட்டளை உயர்மட்டபாசனம் 20600   4.1        &

புல்லம்பாடி பாசனக் கால்வாய்  22100   4.1      7.63

6. கொடிவேரி அணைக்கட்டு    4800   4.2      0.87

7. காளிங்கராயன் அணைக்கட்டு  2000   4.2      0.36

8.பழைய அமராவதி        2200   4.6      0.44

மொத்தப் பாசனம்   1,28,000   -      21.95= 22

பிற பகுதிகளில் நிறைவேட்டப்பட்ட புன்செய் பாசனத்திட்டங்கள்

1.தொப்பையார் பாசனப்பகுதி       5300    1.5     0.35

2.பவானி பாசனப்பகுதி          8000    2.0      0.7

3.பாலார் பொரந்தர் பாசனப்பகுதி     9700    2.1     0.89

4.வட்டமலைக்கரை பாசனப்பகுதி     2500    2.1     0.23

5.கொடங்கார் பாசனப்பகுதி        9000    2.1     0.82

6.நங்கஞ்சார் பாசனப்பகுதி        6200    2.1     0.57

7.பிற சிறுபாசன திட்டங்கள்       4000    2.1     0.36

8.நொய்யல் பாசனம்(ஆத்துப்பாளையம்   9600   2.1     0.88

9.ஒரத்துப்பாளையம்           10,400   2.1     0.95

10.பிற சிறுதிட்டங்கள் மேட்டூருக்கு மேல்  6000  1.5     0.39

கீழ்   7800   2.0     0.68

மொத்தம்     78,500    -   6.82(அ) 7

எனவே மொத்தம் 1,26000 + 78,500 =2.065 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பும், 22 +7 = 29 டி.எம்.சி நீரும் ஆகிறது. இவை தற்போதுள்ள மூன்றாம் பிரிவில் இருந்து, 1924 ஒப்பந்தத்தில் உள்ள விதிஎண் 10(xii) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு இரண்டாம் பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும். இந்த 2.065 ஏக்கருக்குரிய 29 டி.எம்.சி நீர் போக, டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் தமிழகம் மொத்தம் சேமித்த 80 டி.எம்.சி. நீரில் 51 டி.எம்.சி. நீர் மீதி உள்ளது.

எனவே தமிழகத்திற்கு 1924க்கு முந்தைய பாசனத்தில் 15.19 இலட்சம் ஏக்கரும், 1924 ஒப்பந்தப்படி 6.195 + 2.065 = 8.260 இலட்சம் ஏக்கரும் இருக்கும். சிறு பாசனத்திட்டம் என்பது 1924 ஒப்பந்தத்தில் இல்லை என்பதால், தமிழகத்தின் சிறுபாசனத்திட்டப் பரப்பான 1.255 இலட்சம் ஏக்கர் பரப்பு தகுதி அடிப்படையில் முன்புபோல் மூன்றாம் பிரிவில் இருக்கும். ஆகவே தமிழகத்தின் மொத்தப்பாசனப்பயிர் பரப்பு 24.71 இலட்சம் ஏக்கர் அங்கீகரிக்கப்படும் .

கர்நாடகத்தின் 1924க்கு முந்தைய பாசனத்தில் 3.439 இலட்சம் ஏக்கரும், 1924 ஒப்பந்தப்படியான பரப்பில் 7.239 – 2.72 = 4.519 (அ) 4.52 இலட்சம் ஏக்கரும், மூன்றாவது பிரிவில் தகுதி அடிப்படையில் சிறுபாசனத்திட்டமான 1.261 இலட்சம் ஏக்கரும் இருக்கும். ஆகவே கர்நாடகத்தின் மொத்தப்பாசனப்பயிர் பரப்பு 9.22 இலட்சம் ஏக்கர் மட்டுமே அங்கீகரிக்கப்படும். கேரளத்தில் 1924க்கு முந்தைய பாசனமோ, 1924 ஒப்பந்தப்படியான பாசனமோ இல்லை என்பதால், அதன் 1924க்குப் பின் உள்ள பாசனமான 0.53 இலட்சம் ஏக்கர் மட்டும் அங்கீகரிக்கப்படும். பாண்டிச்சேரியில் 0.45 இலட்சம் ஏக்கர் அங்கீகரிக்கப்படும். 

காவிரி நடுவர் மன்றம் இணைப்பு-2

சமபங்கு அடிப்படையில் பாசனப்பரப்பும் நீரும்:

நமது கணக்குப்படி(இணைப்பு-1), 1924க்கு முந்தைய பயிர்பரப்பும், 1924 ஒப்பந்தப்படியான பயிர்பரப்பும், சிறுபாசனப்பரப்பும் சேர்ந்து மொத்தப் பாசனப் பயிர்பரப்புகள் தமிழகத்தில் 24.71 இலட்சம் ஏக்கரும், கர்னாடகத்தில் 9.22 இலட்சம் ஏக்கரும் இருப்பதாகக் கொண்டோம். நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்னாடகத்தின் 18.85 இலட்சம் ஏக்கரில், 9.63(18.85-9.22) இலட்சம் ஏக்கரும், கேரளாவின் 1.93 இலட்சம் ஏக்கரில், 1.40(1.93-0.53) இலட்சம் ஏக்கரும் குறைகிறது. பாசனப் பயிர் பரப்பில், மொத்தம் குறைவது 9.63+1.40=11.03 (அ) 11 இலட்சம் ஏக்கர் ஆகும்.

மொத்தம் உண்மைப்பயிரிடும் நிலப்பரப்பு, நமது கணக்குப்படி அதில் பயிரிடும் பாசன நிலப்பரப்பு, மீதியுள்ள பாசனம் இல்லாத நிலப்பரப்பு, முதலியவற்றை இலட்சம் ஏக்கரில் கணக்கிடுவோம்.

உண்மைப்பயிரிடும் பரப்பு   அதில் பாசனநிலப்பரப்பு  மீதியுள்ள பாசனமில்லாதது

தமிழகம் -   50.88         22.30          28.58

கர்னாடகம்-   41.61         9.22          32.39

கேரளா  -   2.79         0.53 2.26
பாண்டிச்சேரி- 0.27 0.27 -

மொத்தம்    95.35         32.32         63.23

நடுவர் மன்றத்தீர்ப்புக்கும் நமது கணக்குக்கும் இடையே பாசனப் பயிர்பரப்பில் குறைகிற 11 இலட்சம் ஏக்கர் பரப்புக்கு மட்டும் புதிதாக புன்செய் பாசனம் வழங்க முடியும். பாசனம் பெறாத நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்த 11 இலட்சம் ஏக்கரை விகிதாச்சாரமுறையில், மாநிலம் வாரியாகப் பிரிக்கும்பொழுது தமிழகத்துக்கு 4.972 இலட்சம் ஏக்கரும், கர்னாடகத்துக்கு 5.635 இலட்சம் ஏக்கரும், கேரளாவிற்கு 0.393 இலட்சம் ஏக்கரும் கிடைக்கும். பாண்டிச்சேரியில் முன்பே அனைத்தும் பாசனம் பெறுகிறது.

இந்த கணக்குப்படி தமிழகத்தில் 22.3+ 4.97= 27.27 இலட்சம் ஏக்கர் பயிரிடும் நிலப்பரப்பு பாசனம்பெறும். கர்னாடகத்தில் 9.22+5.64=14.86 இலட்சம் ஏக்கர் பயிரிடும் நிலப்பரப்பு பாசனம்பெறும். கேரளாவில் 0.53+0.393= 0.923 (அ) 1.0 இலட்சம் ஏக்கர் பயிரிடும் நிலப்பரப்பு பாசனம்பெறும்.

தமிழகம்:

தமிழகத்தில் இந்த கணக்குப்படி பயிரிடும் பாசனநிலப்பரப்பு என்பது 27.27 இலட்சம் ஏக்கர். ஆனால் பயிரிடும் பாசனபயிர்ப்பரப்பு என்பது 24.71+4.97= 29.68இலட்சம் ஏக்கர் ஏக்கர் ஆகும். சுமார் 2.40 இலட்சம் ஏக்கர் இருபோகப்பயிர் என்பதால் பயிரிடும் பாசனநிலப்பரப்பும், பயிரிடும் பாசனப் பயிர்ப்பரப்பும் வேறுபடுகிறது. புதிய பாசனபயிர்ப்பரப்பான 4.97 இலட்சம் ஏக்கர் பரப்புக்கும் நீர் உயரம்(டெல்டா) 2அடி எனக்கொண்டால், அதற்கென சுமார் 43 டி.எம்.சி நீர் தேவைப்படும்.

கர்னாடகம்:

மூன்று மாநிலங்களிலும் உள்ள பாசனம் பெறாத வறட்சிப் பகுதிகள், இதர நீர்வள ஆதாரங்கள், வாழ்வாதாரத்திற்காக வருடம் ஒரு பயிர், அனைவருக்கும் சமத்துவப் பங்கீடு, நடுவர் மன்றத்தீர்ப்பு ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு நமது கணக்கீடு ஒரு உதாரணத்திற்காக செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இதர நீர்வள ஆதாரங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளதே ஒழிய கணக்கில் கொள்ளவில்லை.

கர்னாடகத்தின் நடுவர் மன்றத்தீர்ப்பின் பரப்புக்கும் நமது கணக்கிற்கும் இடையே 18.85-14.86=4.01(அ)4.0 இலட்சம் ஏக்கர் இடைவெளி உள்ளது. டியூட்டி மூலம் பாசனப்பரப்பை அதிகரித்தல் என்பதில் கர்னாடகத்தில் இருந்து 2.72 இலட்சம் ஏக்கர் பரப்பும், 23.19 டி.எம்.சி. நீரும் திரும்பப் பெற வேண்டும். 4.01 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பில் 2.72 போக 1.29 இலட்சம் ஏக்கர் பரப்பும் அதற்குரிய 11 டி.எம்.சி.(2அடி, டெல்டா) நீரும் திரும்பப் பெற வேண்டும். ஆகவே மொத்தம் கிட்டத்தட்ட 34 டி.எம்.சி. நீர் கர்னாடகத்தில் இருந்து திரும்பப் பெறவேண்டும்.

கேரளா:

நடுவர் மன்றத்தீர்ப்பிற்கும் நமது கணக்கிற்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஏக்கர்(1.93-0.923=1.07) உள்ளது. கேரளாவிற்கு இருபோக சாகுபடிக்கு, கிட்டத்தட்ட 2 இலட்சம் ஏக்கர் பயிர்பரப்புக்கு 30 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டுள்ளது. அதில் 1 இலட்சம் ஏக்கர் பயிர்பரப்பு திரும்பப் பெறப்படுவதால் அதற்குறிய 15 டி.எம்.சி. நீர் கேரளாவிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். கேரளா மிகுந்த நீர்வளம் மிக்க மாநிலம் ஆகும்.

ஆகவே மீதி உள்ள பரப்பை பாசனம் செய்ய கேரளா தனது இதர நீர்வளங்களில் இருந்து நீரைப்பெற்று பாசனம் செய்து கொள்ள முடியும் என்பதாலும், நீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு அதிக பாதகம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதாலும் இந்த 15 டி.எம்.சி. நீர் என்பது நியாயமான, போதுமான நீரளவு என்பதாலும் கணக்கீட்டின்படி 15 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 726 டி.எம்.சி. நீரை உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பின் அடிப்படையில் விகிதாச்சாரக் கணக்கில் பிரிக்கும்பொழுது கேரளாவிற்கு அதிகபட்சம் 21 டி.எம்.சி தான் வருகிறது. எனவே பாரம்பரியப்பரப்போ அல்லது 1924 ஒப்பந்தப்படியான பரப்போ இல்லாத, அதிக நீர்வளமுடைய கேரளாவிற்கு இந்த 15 டி.எம்.சி. நீர் என்பது போதுமானதாகும்.

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியின் மொத்தப் பயிரிடும் நிலப்பரப்பு 27000 ஏக்கர் ஆகும். அதில் 16000 ஏக்கர் இருபோகப்பாசனம் பெறுகிறது. ஆக மொத்தம் 27000+16000=45000 ஏக்கர் பயிர்ப்பாசனம் உள்ளது. இவை அனைத்தும் 1924 க்கு முன் பாசனம் பெற்று வருவதால், பாரம்பரிய உரிமைப்படி எதனையும் குறைக்க இயலாது. இந்த 46000 ஏக்கருக்கான நீர்த்தேவை என்பது 6.84 டி.எம்.சி ஆகும். enavaeஎனவே பாண்டிச்சேரிக்கு மொத்தம் 7 டி.எம்.சி நீர் தேவை.

நியாயமான பகிர்வின் அளவு:

காவிரி நடுவர் மன்றம் முன்பே ஒப்புதல் வழங்கிய 24.71 இலட்சம் ஏக்கர் பயிர்பரப்புக்கு 419 டி.எம்.சி. நீர் தேவை. சமபங்கு உரிமை அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்கப்படும் 4.97 இலட்சம் ஏக்கர் புன்செய் பரப்புக்கு, 43 டி.எம்.சி. நீர் தேவை. 1924க்கு முந்தைய கோடைகால நெற்பயிருக்கு என 4.86 டி.எம்.சி. நீரும், சேத்தியாத் தோப்புக்கு 3.29 டி.எம்.சி. நீரும் தேவை. எனவே மொத்தமாக 419+43+4.86+3.29= 470.15 (அ) 470 டி.எம்.சி. நீர் தேவை.

தமிழகத்திற்கு புதிதாக 51 டி.எம்.சி. நீர் தேவை. கர்னாடகா 34 டி.எம்.சி. நீரும், கேரளா 15 டி.எம்.சி. நீரும் தந்தால் 49 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பொதுப்பங்கில் இருந்து 2 டி.எம்.சி. நீர் எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் தேவையான 51 டி.எம்.சி. நீர் பெறப்பட்டுவிடும். பொதுப்பங்கில் இருந்து எடுக்கும்பொழுது தமிழகம், கர்னாடகம் ஆகியவற்றுக்கு தலா 1 டி.எம்.சி. நீர் குறையும். அப்பொழுது தமிழகத்திற்கு 50 டி.எம்.சி. நீர் அதிகமாகவும், கர்னாடகத்திற்கு 35 டி.எம்.சி. நீர் குறைவாகவும் கிடைக்கும்.

அப்பொழுது. நமது கணக்குப்படி தமிழகத்துக்கு 469 டி.எம்.சி. நீரும், கர்னாடகத்துக்கு(270-35) 235 டி.எம்.சி. நீரும், கேரளாவுக்கு 15 டி.எம்.சி. நீரும், பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் கிடைக்கும். இதுவே நியாயமான முறையான பகிர்வு ஆகும்.

காவிரி நடுவர் மன்றம் இணைப்பு-3

காவிரி நதிநீர்த்தரவுகள்:

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பான 1.30 இலட்சம் சதுர கி.மீ இல், தமிழகத்தின் காவிரி வடிநிலப் பரப்பு என்பது 44,016 ச.கி.மீ. ஆகும். இது தமிழகப் பரப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். கர்னாடக அரசின் காவிரி வடிநிலப் பரப்பு என்பது 34,273 ச.கி.மீ. ஆகும். கேரள அரசின் காவிரி வடிநிலப் பரப்பு என்பது 2,866 ச.கி.மீ. ஆகும். மொத்தக் காவிரி வடிநிலப் பரப்பு என்பது 81,155 ச.கி.மீ. ஆகும்.

காவிரி வடிநிலப் பரப்பின் மொத்த உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு (NET SOWN AREA) என்பது 95.55 இலட்சம் ஏக்கர் ஆகும். அதில் தமிழகத்தின் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது 20,59,000 EKTARஎக்டர்(50.88 இலட்சம் ஏக்கர்) ஆகும். பாண்டிச்சேரியின் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது 0.27 இலட்சம் ஏக்கர் ஆகும்.

காவிரி வடிநிலப் பரப்பில் கர்னாடகத்தின் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது 16,84,000 எக்டர்(41.61 இலட்சம் ஏக்கர்) ஆகும். கேரளாவின் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது 1,13,000 எக்டர்(2.79 இலட்சம் ஏக்கர்) ஆகும். காவிரி நதி தமிழகத்தில் 416 கி.மீ தூரமும், கர்நாடகத்தில் 320 கி.மீ தூரமும், இரு மாநில எல்லைகளிலும் 64 கி.மீ தூரமும் ஆக மொத்தம் 800 கி.மீ தூரம் ஓடிக் கடலில் கலக்கிறது. (பார்வை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொகுதி-1, பக்: 28,29.& தொகுதி-5, பக்: 20)

காவிரி நதியின் நீர்வளம், அணைகள்:(பார்வை: தொகுதி-3, பக்:77,79)

1900-01 முதல் 1971-72 வரை 72 வருடங்களுக்கு காவிரி நதியின் வருட சராசரி நீர்வளம் 792.3 டி.எம்.சி. 1900-01 முதல் 1933-34வரை 34 வருடங்களுக்கு காவிரி நதியின் வருட சராசரி நீர்வளம் 830 டி.எம்.சி. 1934-35 முதல் 1971-72வரை 38 வருடங்களுக்கு காவிரி நதியின் வருட சராசரி நீர்வளம் 767 டி.எம்.சி. 1934-35 முதல் 1971-72வரை 38 வருடங் களுக்கு மேட்டூர் அணைவரை வருட சராசரி நீர்வளம் 527 டி.எம்.சி.

1934-35 முதல் 1971-72வரை 38 வருடங்களுக்கு மேட்டூர் அணைக்கு வந்த வருட சராசரி நீர் அளவு 377 டி.எம்.சி. இந்த 38 வருடங்களில் கர்னாடகாவின் வருட சராசரி நீர்ப்பயன்பாடு 150 டி.எம்.சி.

அணைகள்: கொள்ளளவு டி.எம்.சி யில்(தொகுதி-3, பக்:97-100)

மாநிலம்     1972 வரை   பின்இன்றுவரை   மொத்தம்

தமிழகம்       149       1        150

கர்னாடகம்      57        78       135

கேரளா        11        21        32

இதர சிறு அணைகள் -        -        13

மொத்தம்      217        -        330

1900முதல்1934வரை 830 டி.எம்.சி. நீர்வளம் கொண்டிருந்த காவிரி 1934க்குப்பின் 767 டி.எம்.சி. என குறைந்து போனது. இன்று மேலும் குறைந்து போயிருக்கவேண்டும். 1972க்குப் பின் நாம் அணை எதையும் கட்டவில்லை. ஆனால் கர்னாடகம் 78 டி.எம்.சி.யும் கேரளம் 21 டி.எம்.சி.யும் கொள்ளளவு கொண்ட அணைகளைக் கட்டியுள்ளன, கட்டப்போகின்றன. இவ்வாறு தொடர்ந்து அணை கட்டப்பட்டு வந்தால் காவிரியின் நீர் வரத்து இல்லாது போய்விடும். அணை கட்டுவதற்கும், காவிரியின் நீர் வரத்து குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கேரளத்திற்கு 32 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணைகள் தேவை இல்லை.

1924 ஒப்பந்தமும் தீர்ப்பும்-நீர் வரத்து: (பார்வை: தொகுதி-1, பக்:44,45 & தொகுதி-5, பக்:240)

1924 ஒப்பந்தத்தில் கல்லணையில் வழங்கவேண்டிய நீரளவு சொல்லப்பட்டு அது 1929ல் வினாடிக்கு இவ்வளவு கன அடி என மாற்றப்பட்டது. அதனை நடுவர் மன்றம் சாத்திய மற்றதாகக் கருதி நிராகரித்து விட்டது. 1924 ஒப்பந்தப் படியும், நடுவர்மன்றத் தீர்ப்புப்படியும் வழங்கவேண்டிய நீர்அளவு

1924ஒப்பந்தப்படி கனஅடி/வினாடி (டி.எம்.சி.)   தீர்ப்புப்படி(டி.எம்.சி.)

ஜுன்   6.5’ 29,800      75           10

ஜுலை  7.5’ 40,100      103           34

ஆகஸ்ட் 7.7’ 40,100      103           50

செப்   7.0’ 35,000      87.5           40

அக்   6.5’ 29,800      75            22

நவம்   6.0’ 25,033      62.5           15

டிசம்  3.5     8013      22.5           8

ஜன   3.0’ 6170      15            3

பிப்-மே -      -       -           4 x 2.5

வழங்கவேண்டிய மொத்த நீரளவு 543.5           192.0

1924ல் நமக்குக் கிடைப்பதில் மூன்றில் ஒருபங்குதான் இன்று நமக்குக் கிடைக்கிறது. அன்று சுமார் 850 டி.எம்.சி நீர் வளம் இருந்தது, 540 டி.எம்.சி நீர் கல்லணையில் வழங்கப்பட்டது. 1934-35முதல் 1971-72வரை மேட்டுர் அணைக்கு 377 டி.எம்.சி நீர் தரப்பட்டது எனில் பில்லிகுண்டுவில் சுமார் 350 டி.எம்.சி நீர் எனவும், தமிழகத்தில் கல்லணையில் 540 டி.எம்.சி நீர் எனவும் ஆகிறது. தமிழகப் பயன்பாடு போக மீதி 190 டி.எம்.சி நீர்வளம் தமிழகத்தில் சேர்ந்துள்ளது என ஆகிறது. இன்று 750 டி.எம்.சி நீர் வளம் இருக்கிறது, ஆனால் 192 டி.எம்.சி நீர் மட்டுமே தீர்ப்புப்படி வழங்கப்படவேண்டும். அதையும் வழங்கக் கர்னாடகம் தயாராக இல்லை. நமது கணக்குப்படி 35 டி.எம்.சி நீர் அதிகமாக, அதாவது 227 டி.எம்.சி நீர் வழங்கவேண்டும். இது 1990 வாக்கில் கர்னாடகம் தமிழகத்திற்கு பில்லிகுண்டுவில் வழங்கிவந்தது ஆகும். மழை அளவு குறைய வில்லை. ஆனால் நீரைத்தடுத்து நிறுத்தும் கட்டுமானங்கள் பல மேல் பகுதியில் பெருகிவிட்டன. அதனால் நீர்வளம் 100 டி.எம்.சி குறைந்துள்ளது போல் தெரிகிறது. அதைக்காரணம் காட்டி கர்னாடகா, கேரளா அரசுகள் நமக்கான நீர் அளவைக் குறைக்கின்றன.

தீர்ப்பு நடைமுறை :

நடுவர் மன்றம் மேட்டூர் அணை வரையான நீர்வளத்தை 508 டி.எம்.சி எனவும், அதன் கீழ் தமிழகத்தில் உள்ள நீர் வளத்தை 232 டி.எம்.சி எனவும் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட உத்தரவுகளை வழங்கியது. பில்லிகுண்டுவில் கர்நாடக அரசு 192 டி.எம்.சி (182 + 10) நீர் விட வேண்டும். அதில் 10 டி.எம்.சி நீர் சுற்றுப்புறச் சூழ்நிலைக்காகத் தரப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 232 டி.எம்.சி நீரில், கேரளாவிற்கு பவானி நதியில் 6 டி.எம்.சி உம் பாம்பார் நதியில் 3 டி.எம்.சி உம் ஆக மொத்தம் 9 டி.எம்.சி நீரும் (6 + 3), பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி நீரும், கடலில் வீணாக 4 டி.எம்.சி.நீரும் ஆக மொத்தம் 20 டி.எம்.சி போக, தமிழகத்திற்கு 212 டி.எம்.சி மட்டுமே கிடைக்கும். பில்லிகுண்டுவில் 182 டி.எம்.சி நீரும், பில்லிகுண்டு முதல் மேட்டூர் அணை வரை 25 டி.எம்.சி நீரும் மேட்டூர் அனைக்குக் கீழ் 212 டி.எம்.சி நீரும் சேர்ந்து ஆக மொத்தம் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி நீர் (182 + 25 + 212 ) கிடைக்கும்.

மேட்டுர் அணை வரை நீர்வளம் 508 டி.எம்.சி என்பதால் தமிழகத்துக்கு வழங்கப்படும் 217 டி.எம்.சி(192+25) நீரும், கர்னாடகத்தில் இருந்து கேரளாவிற்கு வழங்கப்படும் 21 டி.எம்.சி நீரும் போக மீதி உள்ள 270 டி.எம்.சி ( 508-(217+21) ) நீர் கர்னாடகத்திற்குக் கிடைக்கும். கேரளாவிற்கு கர்னாடகாவில் இருந்து 21 டி.எம்.சி நீரும், தமிழகத்தில் இருந்து 9 டி.எம்.சி. நீரும் ஆகமொத்தம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. நீர் கிடைக்கும். இவ்விதமாக நடுவர்மன்றத் தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்படும்.[ பார்வை : காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, தொகுதி-5, பக்: 205, 206 ]

- கணியன்பாலன்

Pin It