எந்த ஒரு போராட்டமும் நேர்கோட்டில் நகர்வதில்லை. முரண்பாடுகள், விவாதங்கள், குற்றச்சாட்டுகள், வெற்றிகள், தோல்விகள் என்று பல்வேறு கட்டங்கள் தாண்டித்தான் எந்தப் போராட்டமும் நகர வேண்டியிருக்கிறது.  போராட்டத்தைப் பலப்படுத்தவும் அதை முடக்கவும் என்று பல்வேறு கருத்தலைகள் எழும்புவது சகஜமே. போராட்டம் முடக்கப்படுவதற்கு எதிராக இயங்க வேண்டுமென்றால் போராட்டத்துக்கான துணிவு மட்டும் போதாது; நாம் முன்னெடுக்கும் போராட்டம் பற்றிய தெளிவு, நாம் வாழும் சமூகம் பற்றிய சரியான புரிதல், அந்த அறிதலில் இருந்து நாம் முன்னெடுக்க வேண்டிய கோரிக்கைகள், போராட்டத்தைப் பலப்பபடுத்த நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய நட்பு சக்திகள் - என போராட்டத்தை வெற்றிப் பாதையில் நகர்த்துவதற்கான பல விசயங்களை நாம் கவன‌த்திற் கொள்ள வேண்டும்.

இதனாற்தான் தமிழ்நாட்டு மாணவர்கள் கோரிக்கைகள் மற்றும் அவர்கள் முன்வைத்துள்ள 'அடுத்தகட்ட படிகளை நோக்கி முன்னேறுதல்' என்ற முனைப்பையும் நாம் ஆர்வத்துடன் வரவேற்கிறோம். கோரிக்கைகள் பற்றிய விமர்சனப்பூர்வமான பல கருத்துக்களை நாம் முன்பு பகிர்ந்துகொண்டோம். இங்கு அடுத்த கட்டம் சார்ந்து சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

'மாணவர்கள் மட்டும் போராடி எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை"

"எத்தனை நாளைக்குத்தான் இவர்கள் காலேஜ் போகாமல் நிற்கப் போகிறார்கள், பார்க்கலாம்"

"தொடர்ந்து காலேஜ் படிப்பை வைத்து ஒரு படிப்பற்ற சமூகத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள் இவர்கள்".

"இந்திய மேற்கத்தேய அரசுகளின் ஆதரவு இன்றி இவர்கள் என்ன சாதித்துவிட முடியும்".

என்று பல்வேறு விமர்சனங்கள் அதிகாரம் சார் சக்திகள் பக்கம் இருந்து வருவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. எப்படியாவது இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆதங்கம் இத்தகைய விமர்சனங்களுக்குப் பின்னால் இருப்பதை நாம் பார்க்கலாம்.

மாணவர் போராட்டம் ஏற்கனவே பல வெற்றிகளைச் சாதித்துள்ளது. மதில்மேற் பூனையாக இருந்தவர்களைத் தள்ளி இறக்கியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் போராட்டம் பெரும் வரலாற்றுப் பதிவு என்பதில் ஜயமில்லை. கொடிய யுத்தத்தின் பின்னணியில் புரட்சியைப் பிரசவிக்கும் வல்லமை உண்டு என்பர். கொடூரக் கொலைகளின் சாம்பலில் இருந்து மேலும் தெளிவான போராட்டம் எழும் என்ற ஆயிரக்கணக்கான போராளிகளின் நப்பாசையில் இந்தப் போராட்டம் நம்பிக்கையொளி ஊற்றியுள்ளது என்பதில் ஜயமில்லை. ஆனால் நாம் போராட்டக் கதையாடலைப் பலப்படுத்தி தெளிவாக நகராவிட்டால் அனைத்தும் வீணாகிப்போகும் அபாயமுண்டு.

இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதன் முக்கிய புள்ளியாக நாம் நமது நட்புச் சக்திகளை அடையாளம் கண்டு இணைவது அவசியமாக இருக்கிறது. ஆமாம் பல்வேறு போராட்டச் சக்திகள் இணைந்து பலப்படவேண்டிய தேவையுள்ளது. தொழில் செய்பவர்கள், வேலையற்றவர்கள், விவசாயிகள், வறிய ஏழைகள், மாணவர்கள், சுரண்டும் முதலாளிகள் என்று சமூகம் பல்வேறு பிரிவினர்களைக் கொண்டதாக இருக்கிறது. இதில் ஒடுக்கப்படுவோர் சார்ந்த போராட்டத்திற்கு தமது உடலையும் உயிரையும் கொடுக்க முன்வரும் பிரிவினர் யார்? மாணவர்கள் தாம் தயார் என்பதை நிரூபித்துள்ளார்கள். ஏழைகள், ஒடுக்கப்படும் தலித்துகள் மற்றும் முற்போக்குத் தொழிலாளர்கள் என்று எமது இயற்கையான நட்புச் சக்திகளை இணைத்துக்கொள்ள நாம் ஒரு திட்டமிடலை முன்வைக்கவேண்டும்.

இந்த நேரடி அணுகல் முறையின்றி மாணவர் போராட்டம் 'மக்கள்' போராட்டமாக மலர்வது சாத்தியமில்லை. மக்கள் என்ற மொத்தச் சொல், போராட்டத்துக்கு எதிரான கனமான சக்திகளையும் இணைக்கிறது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இயற்கையான இந்த நட்புச் சக்திகளை வென்றெடுக்க முடியாத முறையில் பல்வேறு சிக்கல்கள் -முட்டுக்கட்டைகள் எம்முன் பரவிக்கிடக்கின்றன. சாதிச் சங்கங்கள், கட்சிகள், கட்சிசார் தொழிற் சங்கங்கள் என்று 'அமைப்பு' மயப்பட்ட பல தடைகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். தலித் கட்சி என்ற பெயரில் தலித்துகளின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிறுத்துபவர்களும், அவர்தம் கட்சிகளும் தலித்துக்களின் உண்மை நலன்களைப் பிரதிநிதிப்படுத்துவதில்லை. மாறாக தாம் சார் சொந்த வர்க்க குடும்ப நலன்களை மட்டும் பிரதிநிதிப்படுத்தும் மோசமான நிலை இன்று வளர்ந்து வருகிறது. இதேபோல் இந்தியாவில் தொழிற் சங்கங்கள் கட்சி சார் தொழிற் சங்கங்களாகவே இருக்கின்றன.

மார்க்சியத்தின் பெயரால் மக்கள் ஆதரவைத் திரட்டிக்கொண்டு இந்திய அரசின் பாதுகாவலராக இயங்கும் இந்திய கம்யூனிச கட்சிகளின் அடிமை அமைப்புகளாக இந்த தொழிற் சங்கங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றைத் தாண்டி நாம் இந்த நட்புச் சக்திகளை வென்றெடுப்பது எவ்வாறு என்பது இன்று போராட்டத்தின் முன்னுள்ள முக்கிய கேள்விகளில் ஒன்று.

இந்தச் சிக்கலை எதிர்கொள்ள 'அமைப்பை' மறுத்து தன்னிச்சை இயங்குதலை முன்வைக்கும் போக்குகளையும் நாம் காண‌லாம். அது தவறு. எதிர்ப்புச் சக்திகள் பலப்படுவதற்கும், ஏற்கனவே இருக்கும் பிற்போக்கான அமைப்புகள், கட்சிகள் தங்களின் இருத்தலை மேலும் உறுதிப்படுத்தவுமே இது பயன்படுகிறது. அதற்கு மாறாக நாம் இந்த பிற்போக்குத்தனத்தை எடுத்துக்காட்டி மாற்று அமைப்பை முன்மொழிய வேண்டிய தேவையுள்ளது.

தலித் கட்சிகளையோ தொழிற்சங்கங்களையோ உடைப்பதல்ல நோக்கம். மாறாக அந்த அமைப்புக்களில் இருக்கும் தலைமைத்துவத்தின் அரசியல் என்ன – அடிமட்ட உறுப்பினர்களின் அரசியல் என்ன என்று பிரித்துப் பார்த்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறோம். மக்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கிறோம் என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களின் நேர்மையை இங்கு கேள்வி கேட்கவில்லை. ஆனால் அத்தகைய வாதங்கள் மூலம் அவர்கள் எவ்வாறு யுத்தத்தை ஆதரித்த அரசியலை புதைக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது.

புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்குமிடையிலான யுத்தம் இது என்று தமது செயலின்மைக்கு அவர்கள் நியாயம் தேடுகிறார்கள். இன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதித்தீர்வு, புன‌ரமைப்பு என்ற கருத்துக்களைத் தாண்டிச் சிந்திப்பது 'கறம்' என்பது போலவே அவர்கள் அரசியல் நகர்கிறது.

இந்தக் கம்யூனிச கட்சித் தலைமைகளுக்கும் மார்க்சியத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்பது நியாயமான கேள்விதானே. அவர்களையும் மீறி போராட்டத்தில் அக்கட்சிகளின் உறுப்பினர்கள் -மற்றும் தொழிற் சங்க உறுப்பினர்கள் இணையவேண்டும்  என்று நாம் அழைப்பு விடவேண்டியிருப்பது இதனாற்தான். எமது போராட்டம் ஒரு நீண்ட போராட்டம் என்பதையும் நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

நாம் நினைப்பது உடனுக்குடன் நடந்து விடப்போவதில்லை. எப்போது பின்வாங்குவது, எப்போது முன்னோக்கிச் செல்வது என்பதை எமது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தொடர் போராட்டங்கள் - தொடர் முற்றுகை என்பன தொடர் வெற்றி சார்ந்து செல்லாதவரை போராட்டச் சக்திகளின் பல பகுதியினரைப் பலவீனப்படுத்தும். அடுத்தகட்டத் திட்டமிடலின் உச்சம் ஜந்து மாதங்கள் கழிந்துதான் நிகழும் என்றால் சில மாதங்களுக்கு போராட்டத்தை நிறுத்திப் பின்வாங்குவதில் தவறில்லை.

இது உரையாடலுக்கும் மாணவர்கள் தமது சக்தியை மீண்டும் திரட்டுவதற்கும் பயன்படும். போராட்டம் நிறுத்தப்பட்டால் அதை நிரந்தரமாக்கிவிட துடிக்கும் சக்திகள் பல. அவை பலமானவையும் கூட. ஆகையாற்தான் போராட்டம் தொடரவேண்டும் என்பதை மந்திரம்போல் நாம் உச்சரித்து வருகிறோம். அதே சமயம் போராட்டம் தோல்வியை நோக்கியோ அல்லது சோர்வை நோக்கியோ நகர்தலாக இருக்கக் கூடாதல்லவா. அதனால் எப்போது பின்வாங்குவது என்று தெரிந்திருத்தலும், போராட்டத்தை முன்வைப்பதன் வகைப்பட்டதே.

அடுத்தகட்டமாக நாம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறோம் -யாரை நோக்கி முன்வைக்கிறோம் என்ற குழப்ப நிலையில் இருந்து மீள்வது அவசியம். ஈழத்தில் நடந்த படுகொலைகள் மட்டும் சார்ந்ததா இந்த மாணவர் போராட்டம்? அது ஒரு இலக்கு மட்டுமே. ஏற்கனவே மாணவர் போராட்டம் 'தன்னிச்சையாக' பல இலக்குகளை வெளிக்காட்டியுள்ளது.

ஈழத்து மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கை என்பது சமூக மாற்றம் சார்ந்த கோரிக்கையுமே. ஒடுக்கப்படும் சமூகம் கொண்ட இன்னுமொரு நாட்டை உருவாக்குவது நமது நோக்கில்லை தானே. எமது விடுதலை மனித குல விடுதலையுடன் இணைந்ததே. தனிநாட்டுக் கோரிக்கை என்பது மக்கள் எந்தச் சிறைக்குள் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் கோரிக்கையாக முன்வைக்கப்படுவது தவறு. மாறாக ஒட்டுமொத்த ஒடுக்குதல்களையும் எதிர்த்த ஆரோக்கியமான ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே எமது நோக்காக இருக்கவேண்டும். அப்படி ஒரு சமூகம் ஈழத்தில் உருவாவதால் தமிழக ஒடுக்கப்பட்டோருக்கு என்ன லாபம் என்பது சின்னத்தனமான கேள்வி. தமிழகத்தில் மட்டுமின்றி -இந்தியா முழுவதும் - தெற்காசியா முழுவதுமே தாக்கத்தை உண்டு பண்ணக்கூடய மாற்றமாக இருக்கும் அது. அது எவ்வாறு தமிழகத்தில் காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  மக்களின் எழுச்சிக்கு வித்திடும் என்பதை வரலாறு ஏற்கனவே நிரூபிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் இருக்கும் ஒடுக்குதலுக்கு எதிராகவும் குரல் கொடுக்காமல் இந்த எழுதல் நிகழ முடியாது.

இதை வெற்று ஈழக் கோரிக்கையாக குறுக்கிவிட்டு இளைப்பாறப் போகத் தவிக்கிறார்கள் பல 'இந்திய' அரசியல்வாதிகள். அதனாற்தான் ஈழக்கோரிக்கை தமிழ்நாட்டுக் கோரிக்கையுடன் இணைய வேண்டியதாகிறது. இது இந்திய அரசுக்கு கிலியை உண்டு பண்ணும் என்பதாலும் அதனால் இந்திய அரசின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்ற காரணத்ததாலும், ஈழப்பிரச்சினையோடு உரையாடலை நிறுத்திவிட முயற்சிப்பாரும் உண்டு.

தமிழ் நாட்டு மக்களை இந்திய அரசுச் சிறையில் இருந்து விடுவிக்காமல் மக்கள் திரட்சி உருப்படியான வெற்றிகளைச் சாதிக்க முடியாது. இது எமது போராட்டத்தை இந்திய அளவில் நகர்த்த வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது. இந்தியா பல நாடுகளின் - பல் தேசிய இனங்களின் சிறைக்கூடம். இந்தச் சிறைக் காப்பாளர்களுக்கு எதிராக நாடெங்கும் நாம் நட்புச் சக்திகளைத் திரட்ட வேண்டியிருப்பது அவசியமான வேலைகளில் ஒன்று. இந்திய அரசை உடைக்காமல் தெற்காசிய மக்களுக்கு விடிவு பிறக்க முடியுமா?

தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பாக தோழர் அருண்சோரி போன்றோர் முன்வைக்கும் இந்திய எதிர்ப்பு எல்லா வகையிலும் நியாயமானதே. இதை தமிழகத்தில் இன்று அனைத்துப் போராட்டச் சக்திகளும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மே17 இயக்கமும் இதில் தெளிவாகத்ததான் இருக்கிறது. ஆனால் மே17 இயக்கம் கவனத்திற்கு கொண்டுவரும் இன்னுமொரு முக்கிய புள்ளியையும் மற்றைய தோழர்கள் அவசியமாக கவன‌த்தில் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். இந்தியா என்பது தனி உலகு அல்ல. தெற்காசிய பூகோள அரசியல் மற்றும் உலகப் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய உலக அரசியலுக்குள் -சிக்கித் திணறி நிற்கிறது இந்திய அரசு. இது சிக்கல்கள் நிறைந்த நாடுகளுக்கிடையிலான உறவுகளை முன் தள்ளுகிறது. இருப்பினும் இதற்குள் நாம் தெளிவான போக்குகளையும் அடையாளம் காணலாம். உதாரண‌மாக அமெரிக்க, மேற்கத்தேய அரசியற் பொருளாதார நலன்கள் எங்கு நிற்கின்றன என்பது சிதம்பர ரகசியமல்ல. "ஏகாதிபத்தியங்களுக்கு" நாம் எதிர் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றுக்கூவல் சார்ந்து இந்தப் புள்ளியை நாம் புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக இன்றய பூகோள அரசியலின் அடிப்படை மாற்றங்களின் அடிப்படையில் வைத்து இதை நாம் அணுக வேண்டும்.

ஒரு போராட்ட சக்தி இந்திய அரசுக்கு சவால் விடுமென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றனவா மேற்கத்தேய அரசுகள்? இங்கிலாந்து இன்றும் இலங்கைக்கு இராணுவ உதவியைச் செய்து வருகிறது. சமீபத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பொது வேலை நிறுத்தத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் இங்கிலாந்துப் பிரதமர் இந்தியாவுக்கு வந்து கிரிக்கட் விளையாடி விட்டுப் போனவர். அவர் தம்முடன் இங்கிலாந்து பெரு முதலாளிகளை அழைத்து வந்து இந்திய வளங்களைச் சுரண்ட ஒப்பந்தங்கள் போட்டது சமீபத்திய வரலாறுதானே.

பத்துப் பதினைஞ்சு கோடி தொழிலாளர்கள் அதற்கு தெருவில் இறங்கி மறுப்பு தெரிவித்ததை அவர்கள் கணக்கில் எடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? லட்சக்கணக்கான இங்கிலாந்து மக்கள் தெருவில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்தும் ஈராக்குக்கு எதிராக படையெடுத்து அங்கு மக்களைக் கொல்வதை தடுக்க முடிந்ததா? இந்திய அரசு அவர்களின் நட்புச் சக்தி–இந்திய மக்கள்அல்ல.

ஆக அமெரிக்க அரசை எதிர்ப்பது இந்திய அரசுக்கு ஆதரவாக மாறுகிறது என்ற தர்க்கவாதம் தவறானது. அதிகாரங்கள் அனைத்தும் எதிர்க்கப்பட வேண்டியவையே. அதிகார சக்திகளுக்கிடையே இருக்கும் முரண்களை எமது நலன்களுக்குச் சார்பாக பாவித்துக் கொள்ள வேண்டும் என்ற 'கெட்டிக்காரத்தனமான' வாதமும் அடிக்கடி வைக்கப்பட்டு வருகிறது. அதன் இயங்கு தன்மையை நாம் கேள்வி கேட்டாக வேண்டியுள்ளது. முரண்களுக்குள்ளால் நகர்வது அவரவர் நலன் சார்ந்தது. இதற்குள் சக்தியற்ற எமது நலன்கள் அடிபடும் - விலை பேசப்படும் - விற்கப்படும் - சுரண்டப்படும் -முடக்கப்படும். இதுதான் உலக வரலாறு.

நாம் ஒரு பலமான சக்தியாக உருவாகாமல் இந்த முரண்களை எதிர்த்தலோ அல்லது சாதகமாக பாவித்தலோ எவ்வாறு சாத்தியம். அவர்களின் கதவுக்கு வெளியே ஆதரவுக்காகவோ, எதிர்ப்புக்காகவோ நாம் நிற்கிறோம் என்ற செயற்பாடு மட்டும் அவர்தம் கொள்கைகளை மாற்றப் போதுமானதல்ல. எமது கையில் வைரக்குகை இருக்கிறது – எண்ணைக் கிணறுகள் இருக்கின்றன- யுரேனியக் கிடங்கு இருக்கிறது  என்றால் கதை வேறு. அவர்கள் உடனடியாக கதவைத் திறந்து பேசத் தயாராவார்கள்.

'ஜந்து நட்சத்திர விடுதிகளில்' அவர்களுக்கு நாம் தினமும் விருந்துவைத்து அவர்களோடு சேர்ந்து தினமும் சம்பயின் அருந்தினாலும் அவர்கள் மசியப்போவதில்லை. எமது பலத்தைக் காட்டிய பிறகு எம்மிடம் கையெழுத்து வாங்க நுளம்புக்கடி என்றும் பார்க்காமல் காட்டுக்குள் வருவார்கள் அவர்கள் என தோழர் ஒருவர் சொன்னதில் ஆயிரம் உண்மையுண்டு. இதனாற்தான் பெரும் சக்தியாக நாம் திரள்வதும் அவ்வாறு திரள்கையில் வளங்களைத் தேசியமயப்படுத்தல் என்ற கோரிக்கை வைக்கப்படுதலும் அவசியமாக இருக்கிறது. தேசிய மயப்படுத்தல் என்பதன் மூலம் வளங்களை அரச கட்டுப்பாட்டின் கீழ் வாரிக் கொடுத்து விடுதல் என்று நாம் குறிப்பதாக தவறாக நினைத்துவிட வேண்டாம். எவ்வாறு சனநாயக முறைப்படி மக்கள் திரட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வளங்களைக் கொண்டுவருதல் என்பது பற்றி பேசுகிறோம் நாம்.

 இந்தக் கட்டத்தை நாம் அடையும் வரையும் ஏகாதிபத்திய அரசின் திசைகளை நாம் மாற்றுவோம் என்று வீணாய்க் கங்கணம் கட்டித் திரிவதில் அர்த்தமில்லை. அதிகாரம் சார்ந்தவர்களும் மனிதர்கள்தானே. சனநாயகம் வளர்ந்த நாட்டில் குறைந்த பட்ச மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்காவது ஆதரவிருக்கும்தானே – என்பதுபோன்ற கனவுகளைக் கண்டுவிடாதீர்கள். மனித உரிமைக் கலாச்சாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரப் போகிறேன் என்று சபதமெடுத்து அலைகிறார் இங்கிலாந்து பிரதமர். இந்த அரசுகள் சனநாயகம் வளர்ப்பன அல்ல. அங்கும் போராட்டங்களால்தான் சனநாயம் நிறுவப்பட்டது. இருக்கும் சனநாயகத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த நாடுகளிலும் மீண்டும் மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

ஆம்! அவர்கள் மனித உரிமை எதிரிகளாக காட்டிக்கொண்டால் உள்நாட்டில் மக்கள் அவர்கள் கதையை முடிக்க தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மையே – அதுபோல் அவர்கள் சுலபான சுரண்டலை ஏற்படுத்தும் அமைதிச் சூழலை ஊக்குவிப்பார்கள் என்பதும் உண்மையே. இருப்பினும் அதற்காக தமது வர்க்க நலனை விட்டு விடுவார்கள் என்று கருதுவது தவறு என்பது அடிப்படை அரசிய‌ற் பொருளாதாரம். மனித உறவுகள் - உணர்வுகள் மனம் சார்ந்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக பல்வேறு புறவய அகவயக் காரணிகள் இணைந்து இதைத் தீர்மானிக்கின்றன. இந்தக் காரணிய விலங்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வேற்றுக்கிரக வாசிகள் அல்ல அதிகார அரசுகளின் தூண்களாக இயங்குபவர்கள்.

அதிகார இயந்திரத்தின் பாகங்களாக இயங்குபவர்கள் தமது சொந்த நலன்களை- அபிப்பிராயங்களைத் தாண்டி அந்த இயந்திரத்தின் விசையைப் பிரதிபலிக்கிறார்கள். இத்தகைய அறிதலோடுதான் நாம் ஜக்கிய நாடுகள் சபை, ஜரோப்பிய ஒன்றியம், ஜரோப்பிய ஆசிய அரசுகள் என்பவற்றை அணுகவேண்டியுள்ளது. இந்த அடிப்படைகளைக் கருத்திற் கொண்டுதான் எமது திட்டமிடல்களை நாம் வடிவமைக்க வேண்டியுள்ளது. எமது அழுத்தங்கள் சில வெற்றிகளைத் தரலாம். தம்மைத் தற்காத்துக் கொள்ள அல்லது எம்மைக் கட்டுப்படுத்த அவர்கள் சிறு சிறு சலுகைத் துண்டுகளை எம்மை நோக்கி எறிவர். வெற்றிகளாக அவற்றை நாம் வரவேற்றுக் கொள்வோம்.

அதேவேளை போராட்டத்தை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டியது எமது அவசியம். அவர்கள் எம்மை நோக்கி எறியும் துண்டுகளின் பின் இருக்கும் ஏமாற்று வித்தை அரசியலையும் நாம் அம்பலப்படுத்தியாக வேண்டும். நிர்ப்பந்தம் அல்லது அழுத்த அரசியல் என்பது போராட்டச் சக்திகளின் முதன்மைத் திட்டமிடல்கள் அல்ல. அது அரசுகளை அண்டி எறிவதைப் பொறுக்க நிற்கும் அரசியல். அத்தகைய நடவடிக்கைகளில் வரும் வெற்றிகளையும் நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் போராட்டம் என்பது எமது அடிப்படைத் தேவைகள் சார்ந்து நிரந்தரத் தீர்வைக் கோரி நிற்பது.

சாதாரண‌ சீர்திருத்தக் கோரிக்கைகளுக்காக நாம் பாடுபட்டு பெரும் போராட்டத்தை கட்ட வேண்டியதில்லை. நாம் போராட்டத்தைக் கட்டுவதே எமது அடிப்படை உரிமைகளைத் தர மறுக்கும் சக்திகளை முறியடித்து அந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்குத்தானே. அதனாற்தான் ஒரு போராட்டத்தின் கோரிக்கை அடிப்படையிற் புரட்சிகரமானதாகவும் அடிப்படை உரிமைகள் சார்ந்ததாகவும் -ஒட்டுமொத்த சமூக நலன் சார்ந்ததாகவும் இருக்கிறது. அழுத்த அரசியல் அல்லது அதிகாரம் சார் சக்திகள் வைக்கக்கூடிய வேண்டுதல்களில் இருந்து போராட்டம் வைக்கும் கோரிக்கைகள் வேறுபட்டதாக இருக்கிறது. இங்கு கோரிக்கைகள் பலத்தில் இருந்து எழுகின்றன; பலவீனத்தில் இருந்தல்ல.

அனைத்து அதிகாரச் சக்திகளையும் எதிர்ப்போம்.

எமது அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம்.

- சேனன், தமிழ் தோழமை இயக்கம்

Pin It