உலகிற்கே பண்பாட்டையும் நாகரிகத்தையும் உருவாக்கித் தந்த தமிழினம், இன்று தன்னுடைய பண்பாட்டையும் நாகரிகத்தையும் இழந்துவருகிறது.பண்பாட்டுச்சீர்குலைவுக்கும் நாகரிகப் பின்னடைவுக்கும் முழுமுதற்கரணியம், தமிழர்தம் மொழியை மறந்து வருவதே - மொழிக் கொலை புரிந்து வருவதே !

என் பாட்டன் - முப்பாட்டனாரும், பாட்டி - முப்பாட்டியரும் என் தாத்தனும் பாட்டியும்தம்வீடுகளில்-வயல்வெளிப்பணியிடங்களில் சுற்றுப்புறங்களில் - அக்கம்பக்கத்தில் தாய்த்தமிழிலேயே பேசினர்.

ஆரியக்கலப்பு - வடமொழிக்கலப்பு - கோயில்களில், வழிபாட்டுத் தலங்களில் கலந்திருந்தாலும் மக்கள்தம் உரையாடற் பழக்கங்களில் செந்தமிழே பெரும்பான்மை பெற்றிருந்தது.  அதனால் தான் நம் பைந்தமிழ் பன்னெடுங் காலங்களாய் மாறாது, மறையாது, ஒளிர்ந்து, திகழ்ந்து வருகிறது.

எனக்குத் தெரிந்து என் அப்பாயி ( அப்பாவின் ஆயி = அப்பாவின் அம்மா ), என் அம்மாயி ( அம்மாவின் ஆயி ) ஆகியோருடன் 20 - 25 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன்.  அவர்களின் பேச்சு வழக்குச் சொற்கள் எல்லாம் செந்தமிழில்தான் இருந்தன. ( ஏதோ இன்றுதான் நாம் ( நாம் மட்டும் ) தூய தமிழில் பேச முயல்கிறோம் என்று எண்ணி, மற்றவர்களைப் போல் இயல்பாகப் பேசுங்களே, தனித்தமிழிலேயே பேசாவிட்டால் என்ன... என்று கிண்டல் செய்கின்றனர் மொழியுணரா மாக்கள் சிலர். )

என் தாத்தாவும் பாட்டியும் தைப்பொங்கலைப் புத்தாண்டு என்று சொல்லித் தந்தனர்.  அவர்கள் ஒன்றும் கருணாநிதி சொன்னாரென்ற ஜெயலலிதா சொன்னாரென்றோ தமிழ்ப்புத்தாண்டு தை எனக்குறிக்கவில்லை.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னவர்களும் அவர்களே.  ஆனால் இன்றுள்ள தமிழ்ப் பகைவர் சிலர் தமிழ்ப்புத்தாண்டை மாற்றி மாற்றிக் குழப்பி, மக்களை மூடர்களாக்கப் பார்க்கின்றனர்.  தமிழரின் பண்பாட்டை மறைக்க - அழிக்க முயலும் ஆற்றல்களில் இதுவும் ஒன்று.அதே போல், பண்டுவம் எனும் சொல்.

இப்பொழுது எந்த மகன் - மகள், எந்தப் பெயரன் - பெயர்த்தி இதைப் பயன்படுத்துகின்றனர், சொல்லுங்கள் !  இது தூயதமிழ்ச் சொல் என்று அறிந்த தமிழுணர்வாளர்களே - தமிழறிஞர்களே இதனை இன்றும் பயன்படுத்துகின்றனர்.  ஆனால், என் தாத்தா பாட்டி - அவர்கள் பிறந்தது முதல் இப்போது வரை ( ஏறத்தாழ90 - 95 ஆண்டுகள் இதனை ( இதுபோன்ற பெருமளவு சொற்களை )ப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலுக்கு நல்லால்லையா...?, பண்டுவம் பார்த்தயா...? ”என்று, இதுதான் அவர்களின் பேச்சுத்தமிழ். (உடலைமேனி - மேல் என்று கூறுவது நம் முன்னோர் மரபு. )  ஆனால், இன்று நம் தமிழ்ப் பிள்ளைகளின் வாயில் வடமொழி வந்து, ஆங்கிலம் வந்து, இன்னும் என்னென்னவோ இறந்துபோன மொழிகளெல்லாம் வந்து தாய்த்தமிழைக் கொலையே செய்கின்றனர்.

“Fever ?”  ஆ?”  “ “Cold ஆ?”

““ Treatment  எடுக்கலையா ? ”  என்று.

இன்னும் சிலர், தமிழாக்குகிறேன் என்று எண்ணி,

“ ஜூரமா...?, ஜலதோசமா...?, டாக்டர்ட்ட போகல...? ”

“ Back Painஆக இருக்கு. Stomach Pain வேற...”

“ அறுவை சிகிச்சை பண்ணலையா...?”

என்று தமிழையும் முழுமையின்றி, ஆங்கிலத்தையும் தெளிவின்றி மென்று துப்புகின்றனர்.(ஏன்முடிந்தால் -திறமை இருந்தால் முழுவதையும் ஆங்கிலத்திலேயே சொல்லுங்களேன்... அதென்ன நுனிநாக்கு ஆங்கிலம் ? தாய்மொழியையும்சிதைத்து,ஆங்கிலத்தையுமல்லவாசிதைக்கிறீர்கள்..)

ஒரு பேருந்து நிறுத்தத்திலோ – “உணவகத்திலோ - திருமண வீட்டிலோ , தண்ணீர் கொடுங்க...!” என்று கேட்பதில் என்ன கேடு வந்திடப் போகிறது...?  “ Water கொடுங்க... Water ஊத்துங்க...”  என்று சொன்னால் தான் நம் நீர்வேட்கை தீருமா..?  அப்பொழுதுதான் ஆங்கிலப் பெருமை பற்றி தெரிய முடியுமா ?  அங்கு வேலைசெய்யும் மாந்தர்களுக்குத் தமிழில் கேட்டால் புரியாதா... அல்லது தமிழில் கேட்டால் தண்ணீர்தான் தர மாட்டார்களா?

எங்கள் குடியிருப்பு அருகில் உள்ள பெண், இளநீர் வணிகரிடம் இளநீரை வாங்கும்போது, “Cut பண்ணிக் கொடுங்க...” என்கிறார்.  ஏன் வெட்டிக் கொடுக்கச் சொன்னால் அவருக்குப்புரியாதா...?  அவர் ஓர் அன்றாடத் தமிழர் தானே...? அவருடைய தாய்மொழியும் தமிழ் தானே...?  இயல்பாகப் பேசுங்கள்... என்று சொல்வோரே...!  இது இயல்புத் தமிழ் தானே... ஏன் இதைச் செய்ய மறுக்கிறீர்கள்...?

பீட்ரூட் என்று இன்றும் நம்மில் பெரும்பாலானோர் சொல்லிக் கொண்டு திரியும் ஒருவகைக் கிழங்கு உணவை என் பாட்டி, இன்றும் “ சிவப்புக் கிழங்கு ” என்றுதான் சொல்கிறார்கள்.  நம்மில் ( இத்தலைமுறையில் ) எத்தனைபேர் இப்படி மொழியைச் சிதைவின்றிப் பேசுகிறோம்..?

தமிழர்களே! இப்படிச் சின்னச் சின்ன அன்றாட நிகழ்வுகளிலெல்லாம் அயல்மொழிக்கலப்பால் நாம் நம் தமிழை மறந்து - இழந்து போய்க்கொண்டிருக்கிறோம், அதன்மூலம் நாம் இறந்துபோய்க் கொண்டிருக்கிறோம்.

மொழியை முறையாகப் பயிற்றுவிக்க வேண்டிய பெருங்கடமை கொண்டுள்ள பள்ளிகளில் - அரசுப் பள்ளிகளில் இன்றைய நிலை என்ன...?

 (ஆங்கில-பதின்மப் பள்ளிகளில் தான் பள்ளி வளாகத்தினுள் கூட ஆங்கிலமின்றித் தமிழில் பேசினால் தண்டத்தொகையும் தண்டனையும் விதிக்கின்ற வெட்கக்கேடான - இழிவான செயல்கள் நடக்கின்றன... ) ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாகச் சொல்லித் தருகிறேன் என்று கூறித் தமிழ்வழி அரசுப் பள்ளிகளிலும் அதன் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் இத்தகையமொழிக்கலப்பைதமிழ்மொழிக்கொலையைப்புரிகின்றனர்.  

நாங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தபோது இதே அரசுப் பள்ளியில் பயிலும்போது “பள்ளிக்கூடம் போகிறோம், பள்ளிக் கூடம் விட்டாச்சு...” என்றுதான் சொல்லிப் பழக்கம்.  இன்றோ “ School ”தான் வருகிறது... எல்லா ஆசிரியர்களின் வாய்களிலும்.  

“Sir ” உம் “ Teacher  ” அல்லது “ Madam உம் தான் வருகின்றன, ஒருவர் கூட ஐயா என்றோ அம்மா என்றோ சொல்வதில்லை (பெரும்பான்மைத் தமிழாசிரியர்கள் உட்பட).  தம் தாய்மொழியைத் தாமறியாமலேயே கொலை செய்கிறோம் என்பதை இவர்கள் உணர்வதே இல்லை.

எங்கள் ( கொழுமம் ) ஊரில் ஓடும் ஆற்றுக்கு அந்தப் பக்கம் ஓர் ஊர், இந்தப் பக்கம் எங்கள் ஊர்.  இரு ஊர்களுக்கும் நடுவே தான் அந்த ஆறு ஓடுகிறது.  இன்றும் நான் வெளியில்-ஊருக்குப் பேருந்தில் சென்றுவந்தால் என் பாட்டி கேட்பார், “அக்கரைக்குப் போய் வந்தாயா...? ” என்று.  அதாவது, அவர்கள் காலத்திலிருந்து அந்த ஊரை அவர்கள் அக்கரை ( அந்தக் கரை = ஆற்றின் அந்தக் கரை ) என்றும் எங்கள் ஊர் இருப்பது இக்கரை என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள்.  ஆனால், ( எங்கள் ஊர் - குழுமம் - கொழுமம் ஆகிவிட்டது, இதுகூடத் தாழ்வில்லை.)  

அந்த ஊரின் பெயரை இன்று என்னென்ன சொற்களில் திரிக்க முடியுமோ அந்தளவு திரித்து, மாற்றிக், கெடுத்து, அழைத்து வருகின்றனர் என்பது தான் வெட்கக்கேடான செய்தி.  ஆற்றின் அக்கரையிலுள்ள குமணனூர் ( குமணன் ஆண்ட பகுதி ) என்னும் அவ்வூர் குமணலிங்கம் ஆகி - குமரலிங்கம் ஆகி - இப்போது கொமரலிங்கம் என்றாகிவிட்டது.    லிங்கம் என்பதன் இழிபொருள் என்ன என்பது தமிழ் கற்றோருக்குப் புரியும்.  இப்படிக் கெடுத்துத் திரித்து தமிழ்க் கொலை புரிவதற்கு, அக்கரை என்னும்சொல்(பெயர்)எவ்வளவோசரியான தமிழில்லையா...?இதேபோல், ரவ்வுல கண்ண முழிச்சுப் படிக்காத, விடியக் காலைல எழுந்து படி...! ” என்பார் என் பாட்டி.

இரவைத் தான் பேச்சு வழக்கில் பேசும்போது இ மறைந்து ரவ்வாகத் தெரிகிறது.  ஆனால், இன்று நம் பிள்ளை குட்டிகள்...? நைட்ல பிலிம் பார்த்துட்டு, லேட் நைட்டா வந்து, மார்னிங்ல தூங்கறயா...?” என்று சரமாரியாகக் கொல்கின்றனர். (இவர்களுக்கெல்லாம் காசி ஆனந்தன் ஐயா சொன்னது போல், இரவை நைட் என்றாய், விடியாது உன் வாழ்க்கை... என்று தான் சொல்ல வேண்டும்.)

விரைவா வா...விரைசலா வா...என்பர் நம் தாய் தந்தை., நாம் அதைக் கொலைசெய்து,இன்று“Quick”ஆக்கி விட்டோம்.சோறு ஆக்கியாச்சா?”,  

பருப்புஞ்சோறும் செய்யவா,  கூட்டாஞ்சோறு உண்ணலாமா...?” என்று பாட்டி சொன்ன தமிழெல்லாம் போய் ( இப்போது சோறு என்றாலே தமிழ்நாட்டில் இழிவென்று ஆக்கி விட்டனர்.  ஆனால் சோற்றை மலையாளத்தான் மறவாமல் சொல்லுகின்றான். அவன் தின்பது சோறு, நாம் தின்பது வேறோ...? ) இப்போது “பருப்பு சாதம் ” வந்து, “ லெமன் சாதம், புளிசாதம், தயிர்சாதம்” என்றெல்லாம் பல்கிப்பெருகி விட்டது.  உணவகத்தில் போய் நின்றால் ஒரு “வாய்” கூடச் சோறு கேட்பதில்லை, எல்லாப் புடுங்கிகளும் “சாதம்” தான்.  அதிலும் “White Rice” கேட்கின்ற நாறைவாய்கள்  இங்கு மிக அதிகம்.  அது என்ன “White Rice” ? வெள்ளை அரிசி என்றுதானே பொருள்... சோற்றுக்கு மாற்றாக அரிசியையேகொண்டுவந்துகொடுக்கச்சொல்கின்றனரா...?  அப்படித்தானே பொருளாகிறது.  அரிசிக்கும்  Rice, சோற்றுக்கும் யூஷ் ஆ?

ராஜ் என்றும் ராஜூ என்றும் பெயர் வைத்துக் கொண்டு பெருமை என்கின்றனர்.  ராசா என்று கூப்பிட்டால் மானக்கேடாம்.  ஆனால், என் தாத்தா - பாட்டி என்னை ராசா என்றுதான் அழைத்தனர்.  பெயர் வேறாக இருந்தாலும் அழைக்கும்போது “ ராசா ” என்றுதான் அழைத்தனர்.  “ராசா ” என்றால்....? அரசன்... ராசன் ஆகின்றது... அரசா என்று அவர்கள் அழைப்பது ராசா என்று நமக்குக் கேட்கிறது.  (இங்கு ஒலிப்பில் அ மறைந்து வருகிறது. ) உடனே இதை ஆரியர்களும் - வடமொழிப் பண்டிதர்களும் ( ? ) ராசாவை ராஜாவாக்கி, ராஜ் என்று வைத்துவிட,அதை நம்மூர்த் தமிழன்களும் அப்படியே சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.  இது தாய்மொழியைக் கொலைசெய்யும் கேடுதானே...?

(யார் யார் வீடுகளில் தாத்தாமார் - பாட்டிமார் இல்லையோ அவர்களும் மொழிக்கொலை புரிகின்ற கொடுஞ்செயலைச் செய்கின்றனர். )

புதுமனை புகுவிழாவை - இன்றும் நம் தமிழர்களின் வாய்கள் “ கிரகப் பிரவேசம் ” என்றுதானே பலுக்குகின்றன.

பேசுவதில் மட்டுமா...?  பெயர்களில் - பலகைகளில் - சுவர்களில் - அழைப்பிதழ்களில் - செய்தித்தாள்களில் - ஏடுகளில் எழுதுவதிலும் தமிழைத் தாறுமாறாகக் கொலைபுரிகின்றனரே...?

“ இங்கு மீன் வறுவல் கிடைக்கும் ” என்னுமிடத்தில் வறுவலுக்கு மாறாக “வருவல்” இருக்கிறது.

“மணப்பாறை முறுக்கு” என்றெழுதப்பட வேண்டிய உறையில் முறுக்குக்கு மாறாக “முருக்கு” என்று இருக்கிறது.

“சரியான சில்லறை தரவேண்டும் ” எனக்கேட்கும் பேருந்துகளில் சில்லறைக்கு மாறாக “ சில்லரை ” தான் எழுதிக் கேட்கின்றனர்.

“கம்பங்கூழ்” விற்கும் தள்ளுவண்டியில் “கம்பங் கூல் ” தான் எழுதப்பட்டிருக்கிறது.

இவையனைத்தும் வேறு மாநிலங்களிலோ வேறு நாட்டிலோ வேற்றுக் கண்டத்திலோ இருக்கவில்லை.  தமிழ் பிறந்து வளர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட - நம் தமிழர்நாட்டிலே - நம் தமிழர்கள் நடுவே தான் இத்தனை தமிழ்க்கொலையும்.  சற்றேனும் இதைப் பற்றி யாரும் சிந்திக்கின்றனரா...?  இதை எப்படி எழுதலாமா என்று யாரிடமாவது கேட்டு எழுதுகின்றனரா ? ( ஆங்கிலச் சொல் அல்லது சொற்றொடர் ஒன்றை எழுதும்முன் ஆயிரம் முறை கேட்கின்றனர், இதை இப்படி எழுதலாமா... இந்த இடத்தில் “E” வருமா... “C” வருமா...? என்று.ஆனால், தமிழில் எழுதும்போது மட்டும் ஏன் இதுபற்றிச் சிந்திப்பதில்லை...?  தமிழ்த்தாய் மன்னித்துவிடுவாள் என்ற எண்ணமா ?  அல்லது அவள் எதையும் கேட்காமல் பெருமிதமாய் விட்டுவிடுவாள் என்ற குருட்டாம்போக்கா...?

தமிழர்களே ! மொழித் தூய்மை காக்காமல் வழிவழி வந்த பண்பாட்டையும் மரபையும் காப்பதென்பது என்றும் இயலாதது.  மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்னும் நன்மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம்.  நம் மூத்தோர் - முன்னோர் நம்முடன் வாழ்ந்த வரை - வாழும் வரை நம்முடைய பல்வகைச் செல்வங்களுள் மொழிச் செல்வமும் காக்கப்பட்டது.  அவர்களைப் பிரிந்தபின்பு அச்செல்வம் சிறுகச் சிறுகத் தேய்ந்து, குறைந்து வருகிறது.  இப்படியே மொழிக்கொலை புரிந்தோமானால் அச்செல்வம் நம்மிடம் இல்லாமலே போய்விடும் சூழல் உருவாகிவிடும்.  பிறகு, நம் பிறங்கடைகளுக்கு, நம் பெயரன் - பெயர்த்திகளுக்கு நாம் யாரென்ற அடையாளமோ நம் மொழி - இன அடையாளமோ இல்லாமல் (60 வடமொழி ஆண்டுகளுள் இன்னமும் ஆரியன் கூறிக்கொண்டுள்ளதுபோல்) நம் வரலாற்றின் சுவடே நம் பின்னவர்க்குத் தெரியாமல், மறைந்தழிந்து விடும்.

எனவே, தமிழர்களே! புதிதாக நாமொன்றும் செய்யச் சொல்லவில்லை.  இதுவரை இருந்ததை, நம் தாத்தன்-பாட்டி பயன்படுத்தியதைத் தான் தொடரச் சொல்கிறோம்.

பேசும் தாய்மொழியைத் தவறின்றிப் பேசுவோம், மொழிக்கொலை புரியாமல் காப்போம்!  எதிர்காலத் தமிழினத்திற்கு நம் மொழிச் செல்வத்தைக் கொடுத்துச் செல்வோம்...!

-       கொழுமம் ஆதி, அமைப்பாளர், பாவலரேறு தேன்தமிழ்ப்பாசறை,  உடுமலைப்பேட்டை.

( புகழ்ச்செல்வி - மாத இதழில் ஏப்ரல் 2012 வெளிவந்த கட்டுரை.)

Pin It