கொண்டாட்டங்கள் - மற்றொரு பிரச்சினை

வளாகத்தில் உள்ள தோட்டத்தில்,ஒருவர் பிறந்த நாள் கொண்டாடினார். ஒலிபெருக்கி வைத்து சத்தமாகப் பாட்டுப் போட்டுக்கொண்டு,கையில் மதுப்புட்டிகளுடன் இரவு 12 மணிக்கு மேலும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். காவலர் அதைத் தடுக்கச் சென்றார். அவரை அடிக்கப் பாய்ந்தார்கள். அவர் என்னிடம் வந்தார்.நான் போனேன். அந்தப் பையன் நன்றாகக் குடித்து இருக்கின்றார்.பெற்றோரிடம் சொல்வதற்காக அவர்கள் வீட்டுக்குப் போனோம்.கதவு பூட்டி இருந்தது.அழைப்பு மணியை அழுத்தினோம்.பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த அந்தப் பையன்,தன்னிடம் இருந்த சாவியைப் போட்டுத் திறக்கிறார்.

அதாவது, அப்பா, அம்மாவிடம், ‘நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிப் படுக்க வைத்துவிட்டார்கள். முதலில் இவர்கள் வீட்டுக்கு உள்ளேயே அமர்ந்து குடித்துக் கொண்டு இருந்தார்கள்.அதற்குப் பிறகு,பெற்றோர் படுத்து இருந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு,வீட்டையும் பூட்டிவிட்டு,தோட்டத்தில் வந்து கொண்டாட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.அப்போது,வெளியில் இருந்து நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பெண்களும் வந்து இருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரும், அன்று அந்த வீட்டிலேயே தங்குவதாகத் திட்டம். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

பெற்றோரை எழுப்பி நடந்ததைச் சொன்னோம். அந்தப் பெண்களை வீட்டுக்கு அனுப்பும்படி சொன்னோம். அந்தப் பையன், நானே பைக்கில் கொண்டு போய் விடுகிறேன் என்கிறார். அவரோ நன்றாகக் குடித்து இருக்கின்றார். எனவே, ஒரு வாடகைக் காரை வரவழைத்து, அந்தப் பெண்களை அனுப்பி வைத்தோம். அவர்களது பெற்றோர்களைத் தொடர்புகொண்டு, வந்து சேர்ந்தார்களா? என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

மொட்டை மாடி பொது இடமா?

நான்காவது மாடியில் வசிக்கின்ற ஒருவர் தன்னுடைய அறையில் படுத்து இருக்கின்றார். அவரது வீட்டுக்கு மேலே வேறு வீடுகள் கிடையாது. மொட்டை மாடிதான். திடீரென்று, அவரது அறையின் மேற்கூரையில் இருந்து ஓட்டைபோடுகின்ற சத்தம். துளை போடுகின்ற கருவி, சுவரைப் பெயர்த்துக்கொண்டு வெளியே வருகிறது. இவர் பதறிப்போய் மேலே ஓடிப்போய்ப் பார்க்கிறார். அங்கே ஒருவர், தன்னுடைய குளிர் பதனக் கருவியை, மொட்டை மாடிக்கு வந்து பொருத்திக் கொண்டு இருக்கின்றார். அதுவும், சுவரில் பொருத்தவில்லை. பாதுகாப்பாகத் தரையில் வைத்து, தரையைத் துளை போட்டுக்கொண்டு இருக்கின்றார்.

கேட்டால்,‘எங்கள் ஏசியை சுவரில் மாட்ட முடியாது.பளு தாங்காது.சன்னலில் ஏசி வைத்தால்,தூங்க முடியவில்லை.சத்தமாக இருக்கின்றது.மொட்டை மாடிபொது இடம்தானே?’ என்று வாதம் செய்கிறார்.

கீழ் வீட்டுக்காரரோ,‘மழை பெய்தால்,அந்த ஓட்டை வழியாக என் படுக்கை அறைக்கு உள்ளே தண்ணீர் உள்ளே வரும்’ என்கிறார்.

நான் சொன்னேன்:‘இந்த வளாகத்தில் உங்கள் வீடு என்பது,உங்களுடைய நான்கு சுவர்களுக்கு உட்பட்ட பகுதிதான். அதற்கு உள்ளேதான் நீங்கள் வைத்துக் கொள்ள முடியும். மொட்டை மாடி என்பது பொது இடம் என்று சொல்லி, அவர்களை ஏ.சி.யை அகற்றும்படிச் செய்தோம். அவர்கள் போட்ட ஓட்டையை, காங்கிரீட் ஊற்றி அடைக்கச் செய்தோம்.

சில வீடுகளில்,ஏ.சி.யை இரும்புக் கம்பி வைத்துச் சுவரில் பொருத்தி வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும்படி மாட்டி வைத்து இருக்கின்றார்கள்.இது மிகமிக ஆபத்தானது. அந்தக் கம்பிகள் துருப்பிடித்தால்,உடைந்து கீழே விழும்.அந்தநேரம் யாராவது அந்த வழியாக நடந்து சென்றால் அவர்கள் தலையில்தான் விழும். இதை அவரிடம் சொன்னால், அகற்ற மறுக்கிறார்.அவர்மிகப்பெரும் செல்வந்தர்.மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.யார் தலையில் விழுந்தால் எனக்கு என்ன? நான் சுகமாகத் தூங்க வேண்டும் என்கிற மனப்போக்கு. அது இன்னமும் அப்படியே இருக்கின்றது.

மற்றொருவர், கார் நிறுத்தத்துக்கு அருகில் உள்ள உள்ள பொது இடத்தில் கொண்டு வந்து ஏசியை மாட்டி வைத்து இருக்கின்றார். அதற்குக் கீழே, குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். அவரும் அகற்ற மறுத்து வாதம் செய்கிறார்.

செருப்பு வைக்கலாமா?

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள பொது நடைவழியில் செருப்புகளை வைக்கவே கூடாது. அதுவும், செருப்பு வைக்கும் பெட்டிகளுக்கு இடமே கிடையாது. சிலர் அப்படி வைப்பது மட்டும் அல்ல,அங்கே உள்ள சுவரில் ஆணி போட்டு மாட்டி வைத்து விடுகிறார்கள். இப்படி நிலையாகப் பொருத்தி வைப்பதால் என்ன பிரச்சினை?

திடீரென ஒருவருக்கு உடல் நலம் இல்லை.அவரைப் படுக்கையில் வைத்து வெளியே எடுத்து வர வேண்டும். மருத்துவப் படுக்கையில் நோயாளியை வைத்துக் கொண்டு நேராகப் போக முடியாது. அங்கேதான், இப்படிப்பட்ட சிக்கல் வருகின்றது. எனவே, நடைவழியில், தடைகளை ஏற்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது.

சிலர் தங்களுக்குத் தேவைஇல்லாத பொருள்களைக் கொண்டு வந்து, மாடிப்படிகளுக்குக் கீழே வைத்து விடுவார்கள்.நான்அவர்களை அழைத்தேன்.‘உங்கள் பொருளை உங்கள் வீட்டுக்கு உள்ளேயே வைத்துக் கொள்ள உங்களுக்குப் பிடிக்கவில்லை.அதைபொது இடத்தில் வைத்தால்,மற்றவர்கள் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?’என்று கேட்டேன்.

இலவச போக்குவரத்து வசதி

எங்கள் குடியிருப்பு,பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. போக்குவரத்துக்கு வழியே கிடையாது. வழிநெடுக முள்ளுக்காடு. தனியாக நடக்க அச்சமாக இருக்கும்.

எங்கள் குடியிருப்பில், முதன்முதலாக சொந்த வீடு வாங்கியவர்கள் 30 விழுக்காடுதான். மற்ற 70 விழுக்காட்டினர், வாங்கி இருப்பது இரண்டாவது வீடு. அதாவது முதலீடு. எனவே, அந்த 30விழுக்காட்டினர்தாம் முதலில் குடியேறுவார்கள்.தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகள் வரையிலும்,நிறைய குடியிருப்புகள் காலியாகக் கிடந்தன.காரணம்,போக்குவரத்து வசதி இல்லாத எங்கள் குடியிருப்புக்கு, வாடகைக்கு வரத் தயங்கினார்கள்.

எனவே, சங்கத்தினர் கூடிப்பேசி ஒரு இலவச வேன் விடுவது என்று தீர்மானித்தோம். இப்படி ஒரு திட்டம் அப்போது வேறு எந்தக் குடியிருப்பிலும் கிடையாது.வேன் வாங்கினோம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மற்ற வேன்காரர்கள் மாதம் ரூ.750 வாங்கினால், நாங்கள் 500 வாங்கினோம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு இலவச அட்டை கொடுத்தோம். வீட்டுக்கு ஒருவர் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம்.

அதுவரையிலும், எங்கள் வளாகத்துக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர்கள், இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு, ஐம்பது அறுபது என்று வாங்கிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் பத்து ரூபாய்க்கு டிக்கட் போட்டோம்.குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் பேருந்து நிலையத்துக்குக் கொண்டு போய் விட்டோம்.பக்கத்துக் குடியிருப்புக்காரர்களும் வந்து பயணிக்கத் தொடங்கினார்கள். அதில் கொஞ்சம் வருவாய் கிடைத்தது. ஆட்டோக்காரர்கள் எதிர்ப்பையும் சமாளித்தோம்.இப்படி ஒரு திட்டத்தை நாங்கள்தான் முதலில் அறிமுகப்படுத்தினோம்.படிப்படியாக அதைத் தெரிந்து கொண்டு,இன்றைக்குப் பல குடியிருப்புகளில் சொந்தமாக வேன் விடுகிறார்கள்.

வேனில் என்ன பிரச்சினை என்றால்,சிலர் டிக்கட் எடுக்க மாட்டார்கள்.ஓட்டுநர் பயணச்சீட்டு கொடுக்காமல் பணத்தைப் பையில் போட்டுக்கொள்வார்.பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் இலவச பாசை வாங்கிக்கொண்டு,ஒரு குடும்பமே சேர்ந்து பயணிக்கும்.ஒருமுறை வேன் ஓட்டுநர் குடித்து விட்டு வந்து,ஒரு மரத்தில் மோதி விட்டான். நல்லவேளையாக யாருக்கும் காயம் இல்லை.

எல்லா நாள்களிலும் வேனை இயக்க முடியாது.ரிப்பேர் என்றால்,அன்றைக்கு வேன் வரவில்லை என்றால்,அதைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பவர்கள்,உடனே சங்கத்தினரைக் குறை சொல்லுவார்கள்.

உங்கள் குடியிருப்புக்கு அருகில் அரசுப் பேருந்து வராதவரையிலும்தான் நீங்கள் வேன் ஓட்டமுடியும்.அவர்கள் பேருந்து வந்துவிட்டால்,அதற்குப்பிறகு,நீங்கள்வேன் ஓட்டமுடியாது. அதற்கு போக்குவரத்து அலவலகத்தில் எழுதி அனுமதி வாங்க வேண்டும்.

கடந்த ஆண்டு எங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே அரசுப்பேருந்து வரத் தொடங்கியபோது, வேனை நிறுத்தி விட்டோம். அப்போது, வேனுக்காக உறுப்பினர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு இருந்த மாதாந்திர பராமரிப்புத் தொகையில், மாதம் ரூ 50 குறைத்து வாங்கத் தொடங்கினோம். இதனால்,உறுப்பினர்கள், சங்கப் பொறுப்பாளர்கள் சரியாகச் செயல்படுவதை உணர்ந்து கொள்வார்கள். அப்படிக் குறைக்காவிட்டால், பிறகு அதை உறுப்பினர்கள் சுட்டிக் காட்டும்படி நடந்துகொள்ளக் கூடாது.

குழந்தைகள் குறும்பு

குடியிருப்புவாசிகள் மாலை வேளைகளில் குழந்தைகளை விளையாடுவதற்காக தரைத்தளத்துக்கு அனுப்பி விடுவார்கள்.வளாகத்துக்கு வெளியே குழந்தைகள் செல்ல முடியாது.காவலர்கள் பார்த்துக் கொள்வார்கள்.ஆனால்,ஒரு பெரிய வளாகத்தில் குழந்தைகள் எங்கே இருக்கின்றன?என்பதைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதாவது ஒரு வீட்டுக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளும்.ஒவ்வொரு தாய்மாரும் தங்கள் குழந்தையைத் தேடி அலைந்துகொண்டு இருந்தார்கள்.அது ஒரு பிரச்சினையாக இருந்தது. அதற்காக ஒலிபெருக்கி பொருத்தினோம்.‘யுவன் எங்கே இருந்தாலும் வரவும்; உன் தாயார் தேடுகிறார்’ என்று அறிவிப்போம்.

குறும்புக்காரக் குழந்தைகள், கார்களில் கல்லை வைத்துப் படம் வரைந்து விடுவார்கள். சைக்கிள் ஓட்டி,இடித்து விடுவார்கள்.பென்ஸ் கார்களில் முன்புறம் உள்ள அடையாளத்தைச் சுழற்றி விட்டால் சுழலும்.அதனால்,ஒவ்வொரு குழந்தையும் அதைச் சுற்றி விட்டுப் போகும்.அப்படிஒரு குழந்தை சுற்றும்போது உடைந்து விட்டது.அந்தக் குழந்தை ஓடிப்போய்விட்டது.உரிமையாளர் குழந்தைகளை அழைத்து,உடைந்ததையாவது எங்கே போட்டேன் என்று சொல்லுங்கள். அதன் விலை 2000 ரூபாய். நான் பற்ற வைத்துக் கொள்கிறேன்’ என்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு பிரச்சினை.

குழந்தைகள் மொத்தமாகக் கூடி விளையாடும்போது சத்தம் வரும்.அதை ஒட்டிய வீட்டுக்காரர்கள் இங்கே விளையாடாதீர்கள் என்று விரட்டுவார்கள்.அப்போது,அந்தக் குழந்தைகள் எங்களைப் பார்த்து, ‘அங்கிள் எல்லோரும் இப்படி விரட்டி அடித்தால், நாங்கள் எங்கே போய் விளையாடுவது?’ என்று கேட்கின்றன.

தொலைந்த பொருள்கள்

வளாகத்தில் குழந்தைகள் தொலைத்த செருப்புகளைச் சேகரித்து, கேட்டுக்கு அருகில் ஒரு பெட்டியை வைத்து அதில் போட்டோம். ஆனால், அதை யாரும் வந்து கேட்பது இல்லை. ஒருமுறை ஐ பாட் ஒன்று கிடைத்தது. அதைக்கூட யாரும் கேட்கவில்லை. ஒரு தங்க மோதிரம் கிடைத்தது. எத்தனையோ அலைபேசிகள், பணப்பைகள்,வங்கிக் கடன் அட்டைகளை எடுத்து உரிமையாளர்களிடம் கொடுத்து இருக்கின்றோம்.

ஒருமுறை வங்கிக் கடன் அட்டை ஒன்று கிடைத்தது.உரிமையாளருக்குத் தொடர்புகொண்டு பேசினோம். ‘அது தேவை இல்லை சார். விளையாடுவதற்காகத்தான் என் மகனிடம் கொடுத்தேன். அவன் அதைத் தேடி அழுவான். அவனிடம் கொடுங்கள்’ என்கிறார்.

வங்கிக் கடன் அட்டைகள் தேவை இல்லை என்று ரத்து செய்தால்,உடனே அதை உடைத்துப் போட்டு விடவேண்டும். இல்லையேல், அதில் வேறு பிரச்சினைகள் வரக்கூடும். நீங்கள் தேவை இல்லை என்று கொடுத்த அறிவிப்பை, வங்கி முறையாக ஏற்றுக்கொண்டு செயல்படவில்லை என்றால்,அதைவைத்து,வேறுயாரும்பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்றது. எனவே, எச்சரிக்கை தேவை.

ஒருவர் கடைக்குப் போய் புதுத்துணி வாங்கிக்கொண்டு வந்து இருக்கின்றார். அந்தப் பை வளாகத்துக்கு உள்ளே கிடந்தது. அதையும்அவர்கள் தேடிக்கொண்டு வரவில்லை. எங்கோ வழியில் விழுந்து விட்டது என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தொலைந்த பெண்மணி

ஒருநகைச்சுவை.எங்கள் குடியிருப்பில் எல்லா வீடுகளும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றது. கிராமத்தில் இருந்து வந்த ஒரு வயதான பெண்மணி,வளாகத்துக்கு அருகில் உள்ள கடைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தார்.அவருக்கு அவரது மகள் வீட்டைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எல்லா வீடுகளும் ஒன்றுபோலத் தெரிகிறது.

அப்போது இரவு ஏழு மணி. ‘பட்டணத்துக்குப் போகாதே தொலைந்து போய்விடுவாய் என்று ஊரில் சொன்னார்கள். நான் கேட்கவில்லை. இப்போது நான் தொலைந்து போய்விட்டேன். கழுத்தை அறுத்துக் கொண்டு போய்விடுவார்களே’ என்றெல்லாம் கவலைப்பட்டு அழுதார். இத்தனைக்கும் அந்தப்பெண்மணி,வளாக வாயிலில்தான் இருக்கின்றார்.அதையே தெரு என்று நினைத்துக் கொண்டு அழுகிறார். சமாதானப்படுத்த முடியவில்லை.

நாங்கள் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வந்து ஒவ்வொரு பகுதியாகக் காண்பித்தோம். அப்படியும் அவரால் அடையாளம் காண முடியவில்லை. ‘சரியம்மா, உங்கள் மகள் கார் வைத்து இருக்கிறாரா?’ என்று கேட்டோம். ‘ஆமாம்’ என்றார். ‘என்ன கலர்? சிவப்பு. சரி சிவப்பு நிறக்கார்களை எல்லாம் பார்த்து அதன் உரிமையாளர் என்று பார்த்தோம்.

இதற்கு இடையில் மருமகன் கீழே வந்தார்.பக்கத்துக் கடையில் போய் தயிர் பாக்கெட் வாங்கி வர மாமியாரை அனுப்பினோமே;ஒன்றரை மணி நேரமாக ஆளைக் காணவில்லையே என்று அவர் தேடிக்கொண்டு வந்தார். பிரச்சினை தீர்ந்தது.

ஒருநாள் இரவு இரண்டு மணி இருக்கும். காவலர் அழைத்தார். நானும், துணைத்தலைவரும் போனோம். ஒரு கார் நிறுத்தத்தில் இருந்த கார் என்ஜின் ஒடிக்கொண்டே இருக்கின்றது. ஏசி ஓடுகிறது. உள்ளே ஒருவர் மயக்க நிலையில் இருந்தார்.தட்டியும் எழும்பவில்லை. பலமாகத் தட்டி எழுப்பினோம்.அவர் குடித்து இருக்கின்றார்.வீட்டில் ஏசி வேலை செய்யவில்லை என்பதற்காக,காரில் ஏசியைப் போட்டுப் படுத்துத் தூங்கிக்கொண்டு இருக்கின்றார்.அவரை எழுப்பியதற்காக எங்களைத் திட்டுகிறார்.

பால் அட்டை

நமது மக்கள் வசதிகளை மிகவும் எதிர்பார்க்கின்றார்கள். முன்பு, 4 மணிக்கு எழுந்து போய், ஆவின் பால் வரிசையில் நிற்க வேண்டும்.பின்னர்,அந்த நிறுவனத்தாரே நிறைய இடங்களில் கடைகளைத் திறந்தார்கள். ஆள்களை அமர்த்தி வீட்டுக்கு வீடு கொண்டு வந்து கொடுக்கச் செய்தார்கள். அவர்கள் அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, பால் கொண்டு வந்து போடுவார்கள். அதற்குக் கூலி. அந்த அட்டையை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க வேண்டும். பால் கொண்டு வந்து கொடுக்கின்ற பையனிடம், ‘நீயே அட்டையை வைத்துக் கொள்’ என்று சொல்லுவார்கள்.

எங்கள் குடியிருப்பில், ஒருவர் 500 பால் அட்டைகளைப் பராமரித்துக் கொண்டு இருந்தார். ஒவ்வொரு நாளும் சில வீடுகளுக்குப் போட மாட்டார்.சில வீடுகளில் கதவு பூட்டி இருக்கும்.சிலர் வெளியூர் சென்று இருப்பார்கள்.அந்தப் பாலை வெளியில் விற்று விடுவார்கள்.

ஒருமுறை பணம் கட்டவேண்டி இருந்தபோது, ஒவ்வொரு வீட்டிலும், 1000, 2000 என்று வாங்கிக்கொண்டு ஓடி விட்டான்.மூன்று ஆண்டுகளாக பால் கொண்டு வந்து போட்டவன்தான். ஆனால், அவன் யார்? எந்தப் பகுதிக்காரன்?என்று எவருக்குமே தெரியவில்லை.

சங்கம் சில வசதிகளைச் செய்து கொடுக்கலாம்.அதற்காக, குடியிருப்புவாசிகள் வாழைப்பழச் சோம்பேறிகள் ஆகி விடக் கூடாது. தோலை உரித்துத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெட்ரோல் திருட்டு

இது எல்லாக் குடியிருப்புகளிலும் உள்ள பிரச்சினை.பெட்ரோலை வெளியில் இருந்தும் வந்து திருடுவார்கள். உள்ளே இருப்பவர்களும் திருடுவார்கள்.

ஒருநாள் எங்கள் காவலர் ஒருவர், வளாகத்தைச் சுற்றி வரும்போது, பெட்ரோல் வாசனை வந்தது. என்னவென்று பார்த்தார். ஒரு வண்டியில் இருந்த பெட்ரோல் டாங்க் இணைப்பு வயர் கழற்றப்பட்டு இருந்தது. கீழே ஒரு பாட்டில். அதில் சொட்டுச் சொட்டாக பெட்ரோல் நிரம்பிக் கொண்டு இருந்தது.யார் அந்தப் பாட்டிலை எடுக்க வருகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டே இருந்தோம்.

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு மாணவர் வந்து எடுத்தார். கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டோம். ஒயரைக் கழற்றி பாட்டிலை வைத்து விட்டுப் போய் விடுவார். ஒவ்வொரு சொட்டாக நிரம்பும். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்து, பாட்டிலை எடுத்துக் கொண்டு போவார். இதுதான் அவரது வழக்கம்.கேட்டால், “அங்கிள். இராத்திரி அவசரமாக வெளியில் போக வேண்டி இருந்தது. என்னிடம் பெட்ரோல் இல்லை. எனவே, கொஞ்சமாக எடுத்தேன்” என்றார்.

ஆனால், உற்றுக் கவனித்ததில், அன்றைக்கு மட்டும் அவர் ஆறு பைக்குகளில் பாட்டில் வைத்து இருந்ததைக் கண்டுபிடித்தோம்.பெற்றோரை அழைத்துக் கொண்டு வந்து காண்பித்து எச்சரித்தோம்.

அடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பெட்ரோல் திருட்டு நடைபெற்றது. விடுமுறை என்பதால், அன்று காலையில், குடியிருப்புகளின் தரைத்தளத்தில் நடமாட்டம் குறைவாக இருக்கும்.வெளியில் இருந்து பேப்பர் கொண்டு வந்து போடுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள், உள்ளே நுழையும்போது பாட்டிலை வைத்துவிடுவார்கள்.எல்லா வீடுகளுக்கும் பேப்பர் போட்டுவிட்டுப் புறப்படும்போது,பாட்டிலை எடுத்துக் கொண்டு போவார்கள்.இதையும் கண்டுபிடித்துத் தடுத்தோம்.

இளைஞர்களுக்காக...

கிராமங்களில் ஒரு இடத்தில் இளைஞர்கள் கூடி உட்கார்ந்து இருப்பார்கள். அதுபோல, வளாகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம், ஒரு இடத்தில் சுவரில் வரிசையாக உட்கார்ந்து இருப்பார்கள். இது ஒரு குறையாக வந்தது. எனவே, அந்தச் சுவரில் கற்களைப் பதித்தோம். இனி உட்கார மாட்டார்கள் என்று நினைத்தோம். மறுநாளும் உட்கார்ந்து இருந்தார்கள். அருகில் போய்ப் பார்த்தால், ஒரே நாளில் அந்தக் கற்களை எல்லாம் பெயர்த்து எடுத்துப் போட்டு விட்டார்கள். ‘யார் செய்தது?’ என்று கேட்டால், ‘ஐயயோ நாங்கள் தொடவே இல்லை அங்கிள். நாங்கள் வரும்போதே இப்படித்தான் இருந்தது’ என்றார்கள்.

எனவே, என்ன செய்வது என்று யோசித்தோம். ‘எங்களுக்கு விளையாட இடம் இல்லை’ என்றார்கள். அவர்களுக்காக வளாகத்தில் ஒரு இடத்தில் கைப்பந்து விளையாட்டுக் களம் அமைத்து, மின் விளக்கு அமைத்துக் கொடுத்தோம். அவர்களுக்கு மகிழ்ச்சியாகி விட்டது. பின்னர் அவர்களை அழைத்து, வீடுவீடாகச் சென்று, ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பி விட்டேன். எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாக 1000புத்தகங்கள் வரையிலும் சேர்ந்து விட்டது.சங்க அலுவலகத்தின் ஒரு பகுதியிலேயே, ஒரு நூலகத்தை அமைத்து விட்டோம்.

வார இதழ்கள், மாத இதழ்கள் வாங்குபவர்களை, படித்து முடித்த பழைய புத்தகங்களை, சங்க நூலகத்தில் கொண்டு வந்து போடுமாறு கூறினோம். இன்றைக்கு அந்த வளாகத்தில், கிராமங்களில் டீக்கடைகளில் காலை நேரக் காட்சி போல, நூலகம் ஜேஜே என்று இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

இப்போது, புதிய குடியிருப்புகளில், கட்டுமான நிறுவனத்தாரே, நூலகம், உடற்பயிற்சிக் கூடங்களை அமைத்துக் கொடுத்து விடுகின்றார்கள்.ஏறி உட்கார முடியாத அளவுக்கு, சுவர்களையும் உயரமாகக் கட்டி விடுகின்றார்கள்.

(தொடரும்)

Pin It