அரசியல் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே உங்கள் மனதிற்குள் எந்த விதமான நிழற்படம் ஓடுகிறது? லஞ்சம், ஊழல் என்று முடிவில்லாத ஒரு தொடர் பட்டியல்கள். அரசியல் மட்டும் இல்லை அரசியல்வாதிகளையும் நாம் எதிர்மறை கண்ணோட்டத்திலேயே பார்ப்பதால்தான் இந்த கசப்பான நிலைமை. நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இது நாள் வரை மக்களால் அதிகம் பேசப்பட்ட ஊழல்கள் குறைந்தது 90க்கு மேல் இருக்கும். கூடிய சீக்கிரம் சதம் அடித்துவிடுவோம். 1950இல் தொடங்கிய முத்ரா பங்குச்சந்தை ஊழலின் மதிப்பு 1.24 கோடி. பிறகு அதுவே சுதந்திர இந்தியாவில் வளர்ந்து, வளர்ந்து தற்போது 2ஜி அலைக்கற்றை ஊழலில் 176379 கோடி என்றானது. இதனால் அரசியல் என்ற சொல்லிற்குண்டான உண்மையான விளக்கம் இருட்டடிக்கப்பட்டு ஒட்டடையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
 
ஆங்கிலச் சொல்லான "பாலிடிக்ஸ்" என்ற சொல் "பாலிஸ்" என்ற மூலச்சொல்லில் இருந்துதான் வந்திருக்கிறது. பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற மாமேதைகள் அவர்களுடைய குடியுரிமை என்ற கட்டுரையில் இந்த சொல்லை பல முறை கையாண்டிருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் அரசியல் என்றால் ஒரு முன்னுதாரமான பிரதிநிதித்துவமும் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும் மட்டும்தான்.

நல்ல அரசியலைத் தீர்மானிப்பது எது? இந்த எளிய மூன்று வார்த்தை கேள்விக்கு அவ்வளவு சுலபமாக யாராலும் பதில் அளித்துவிடமுடியாது. அந்த காலத்திலேயே அரிஸ்டாட்டலை அரசியல் தத்துவத்தை எழுதத் தூண்டியது அங்கே நிலவிய ஒழுங்கீனமான அரசியலும் தறிகெட்ட அரசியல் தலைமையும்தான்.

ஆதியில் தோன்றியது தாய் வழிச்சமூகம்தான். அனைத்தையும் நிர்வகித்து மனித சமூகத்திற்கு பொதுவுடைமையை அறிமுகப்படுத்தியவள் தாய்தான். அவளின் இயற்கை சார்ந்த உபாதைகளால் தற்காலிகமாக நிர்வாகம் ஆணின் கைகளுக்கு மாறியது. ஆணின் அரசியலால் முதலில் பலியானது பெண்களின் சுதந்திரம். அதன் மூலம் வரையறுக்கப்பட்ட வாழ்வியல் முறைகள் ஆண்களின் தந்திரமான அரசியலால் அவர்களின் மேல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. அந்த நிலையிலும் பெண்களே தங்களின் அறிவை ஆதாரமாகக் கொண்டு விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். அந்த வகையில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியதும் பெண் சமூகம்தான். தந்தைவழிச் சமூகம் தன் ஆளுமையை நிரந்தரப்படுத்தும் முழு முயற்சியில் ஒரு புது வாழ்க்கை முறையை பெண்களுக்காகவே ஏற்படுத்தியது. அதன்மூலம் பெண்ணின் அடிப்படைத் தேவைகளை ஆண் சமூகமே தீர்மானித்தது.

இப்படித் தோன்றிய சமூகத்தில் ஒருவன் தன் உடல் பலத்தால் மற்றவர்களைக் கட்டுப்படுத்த தலைமைகள் உருவானது. இதுபோன்ற கணங்களின் தலைவரை கணபதி என்று அழைத்தார்கள். தலைவன், தொண்டன் என்ற இப்போதைய அரசியலிற்கு ஆரம்ப கர்த்தா இதுபோன்ற கணபதிகள்தான். அவர்களின் அரசியல் தேவைகள் மிகவும் குறைவு. தங்கள் குழுவின் உணவுத் தேவைக்கேற்ப சக குழுவினர்களின் கால்நடைகளை அபகரிப்பது மற்றும் அவர்களின் விளைச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். அதற்காக வலிமையான ஆட்களைத் தேர்ந்தெடுத்து படைப்பிரிவை பாதுகாத்தார்கள். இது போன்று மனிதனின் ஆரம்ப அரசியல் பொதுநிர்வாக, படைசேகரிப்பு என்று ஆரம்பித்து பல கிளைகளாக பிற்காலத்தில் உருப்பெற்றது. இப்படியாகத் தோன்றிய ஒரு குறிப்பிட்ட மக்களின் மேலாண்மையும் அவர்களின் பரம்பரைத் தொடர்ச்சியும் ரோமானியர்கள் காலத்திலேயே பழக்கத்திலிருந்தது. ஆண்களின் அரசியல் தலமை தலைமுறை தலைமுறையாக குடும்ப வம்சாவளிகளுக்கே போய்ச் சேர்ந்தது. இது போன்ற தலைமுறை அரசியல் திராவிடர்கள், ஆரியர்கள், யூதர்கள் மற்றும் அராபியர்களிடம் மிகவும் பரவலாக அந்தக் காலத்திலேயே இருந்தது

அரசியலும் அதன் நிர்வாகம் என்ற மையப்புள்ளியிலிருந்து விலகி விரிந்து சமூகத்தின் பல எல்லைகளைத் தீண்டியது. அரசாங்கம் சொத்துக்களை வாங்கவும், பரமரிக்கவும் பொதுக்கருவூலம் தோன்றியது. இது போன்ற அரசுக்கருவூலங்களின் வரவு செலவுக் கணக்குகளின் நிர்வாகத்தில்தான் முதலில் ஊழல்கள் தோன்ற ஆரம்பித்தது. மக்களின் நலம், பணப்பட்டுவாடா, எல்லைக்காவல் என்று வந்த பிறகு சிக்கல்களும் உடன் தோன்ற ஆரம்பித்தது. அரசியல் துஷ்பிரயோகங்கள் மன்னரின் கீழ் வேலை பார்த்த ஆளுமைகளாலேயே முதலில் தொடங்கி வைக்கப்பட்டது. அதுவே பிற்காலங்களில் ஊழல், தனிமனிதர் சொத்துக்குவிப்பு, உறவினர்களுக்கு முதல் சலுகை, கையாடல் என கணக்கற்று நீண்டுகொண்டே போனது.

எந்த ஒரு அரசியலையும் வரும் சந்ததியர்களுக்கு மேற்கோள் காட்டி வகைப்படுத்தி விட முடியாது. அந்தக்கால மக்களின் கல்வி, ஆள்பவர்களின் திறமை, மக்களின் தேவை போன்ற பொதுவான விஷயங்களை அது தன்னுள் கொண்டிருப்பதால், இதுதான் மிகச்சிறந்த அனைவராலும் கடைபிடிக்க வேண்டிய அரசியல் என்று யாராலும் மேற்கோள் காட்ட முடியாது.
 
அரசியல் சரித்திரத்தில் வலது, இடது சாரி அரசியல் அதிகமாகப் பேசப்பட்டது பிரெஞ்சு புரட்சிக் காலங்களில்தான். அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டு அவதியுறும் மக்கள் ஒரு புறம்; எந்தவித கவலையும் இல்லாமல் வாழும் பிரபுக்கள் மறு புறம். மக்களின் அறிவுக்கண்களை மழுங்கடிக்கும் மத நிருவனங்களும், மக்களை சுர‌ண்டி சல்லாப வாழ்க்கை வாழும் பிரபுக்களும் வலது சாரி அரசியலை ஆதரித்தார்கள். ஜாதி மதமற்ற சமச்சீர் பங்கீட்டை வலியுறுத்தியது இடது சாரி அரசியல். பிரபுக்களின் பக்கம் வலது சாரி என்றால் திண்டாடும் அப்பாவி ஏழை மக்களுக்கு நேசக்கரம் கொடுத்தது இடதுசாரி அரசியல். 1848 ஆம் ஆண்டு கார்ல் மார்க்சும் , பிரடரிக் ஏங்கெல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அரசியல் அறிக்கைகு மூல காரணமே இதுபோன்ற ஏற்ற இறக்கமான தடுமாறும் அரசியலை சமன்படுத்தி, உரிமைகள் பறிக்கப்பட்ட கீழ்தட்டு மக்களின் வாழ்வியலை நேர்படுத்துவதுதான். எல்லா நாட்டு அரசியலிலும் இது போன்ற இரு வகை அமைப்புகள் இருந்தாலும், அரசியல் கொள்கைகளின் பங்கீட்டு முறையில் ஏற்பட்ட விகிதாச்சார வித்தியாசத்தால்தான் முதலாளித்துவமோ, தொழிலாளித்துவமோ ஒரு குறிப்பிட்ட தேசத்தை ஆண்டது.
 
இது போன்று தேவைகள் குறைந்த ஆரம்ப கால அரசியலிலிருந்து மக்களின் தேவைகள் பல மடங்கு பெருகிய தற்போதிய அரசியல் வரை மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தியே நல்லாட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் அரசியலில் இருந்திருக்கிறது. என்றாலும் சமீபத்திய கணக்கெடுப்பின்படி நாற்பது லட்சம் ஏழைமக்கள் தங்களின் அடிப்படை தேவைக்காக மட்டுமே அரசு அலுவலர்களுக்கு கையூட்டு கொடுக்க வேண்டிய அவல நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
நீதித்துறை, தற்காப்புத்துறை, காவல் துறை, மற்றும் மத நிறுவனங்களின் ஊழலிற்கு யார் காரணமாக இருந்தாலும், ஊழல் அரசியல்வாதிகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்க உதவும் பொதுமக்களையும் இதற்குக் காரணம் கூறவேண்டும். நூறு சதவிகித வாக்குப்பதிவு இது நாள் வரை நிறைவேறாத ஒரு பகல் கனவாகவே இருக்கிறது.
 
வெகு சமீபத்தில் என் பால்ய நண்பர் ஒருவரை ரயில் நிலையத்தில் சந்தித்தேன். பள்ளி நாட்களில் இருந்தே நாங்கள் இருவரும் பல அரசியல் தலைவர்களின் மேடைப்பேச்சைக் கேட்டிருக்கிறோம். என் நண்பர் அரசியல் குறித்து பல விஷயங்களை நினைவில் வைத்திருப்பார். சில சமயம் மேற்கோள்களும் காட்டுவார். கல்லூரி, திருமணம் என்று பல விஷயங்களை நாங்கள் பகிர்ந்து கொண்ட பிறகு, அவருக்கு மிகவும் பிடித்த பொதுவான நடைமுறை அரசியலைப் பற்றி பேசினார். அவர் தன் நீண்ட பேச்சை முடிக்கும் நேரம் மிகவும் கோபத்துடன் " its all about growing cleptocracy" என்றார். ஒரு மரியாதையாக நானும் ஏதோ புரிந்தது போல் தலையாட்டிவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் ஆங்கில் அகராதியை புரட்டினேன். கட்டுப்படுத்த முடியாத அரசியல் ஊழல் அல்லது திருடர்களின் ஆட்சி என்றிருந்தது.

- பிரேம பிரபா

Pin It