(எழுத்தாளர் மருதன் தனது இணையத் தளத்திலும் தமிழ் பேப்பர் தளத்திலும் இலங்கை மீதான தடைகள் குறித்து ஒரு விவாதத்தை முன்வைத்துள்ளார். அதற்கு விடையிறுக்கும்படி அழைத்துள்ளார். அவர் அழைப்பை ஏற்று நான் அவருக்கு அளித்துள்ள பதிலைக் கீற்று வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் - நலங்கிள்ளி.

மருதன் விமர்சனக் கட்டுரை வெளியான தளங்கள்: http://www.tamilpaper.net/?p=7575, http://marudhang.blogspot.in/2012/09/blog-post_6.html.)

எழுத்தாளர் மருதன் இலங்கை மீதான தடை குறித்த கட்டுரையில் ஒரு நண்பர் கேள்வி ஒன்றை எழுப்பியதாகக் குறிப்பிடுகிறாரே! அது நலங்கிள்ளியாகிய நான்தான். இந்த அறிமுகத்துடன் அவர் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.

சிங்கள இனவாத அரசு, தமிழர்களை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒடுக்குவது நியாயமல்ல என்றால் சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழக அரசு ஒடுக்குவதும் நியாயமற்றதுதான் என்கிறார் மருதன்.

manmohan_rajapakse_460இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையைச் செய்து முடித்துள்ள ஒரு நாட்டின் செயலையும் அப்பாதகத்தைச் செய்த ஒரு நாட்டின் விளையாட்டர்களுக்குத் தடைவிதிக்கும் செயலையும் ஒரு சேரக் கண்டிக்கிறார் மருதன். அதாவது ஒரு நாட்டின் மீது விளையாட்டுத் தடை விதிப்பது அந்நாட்டு மக்களை ஒடுக்குவது எனப் பார்க்கிறார் மருதன். இது இனவெறுப்பு அரசியல் என்றும் சாடுகிறார். இவர் மட்டுமல்ல, ஒடுக்கும் நாட்டின் மீது பொருளியல், கலை, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் தடை கோருவது தவறு செய்த நாட்டை, நாட்டு மக்களைப் பழிவாங்குவது, ஒடுக்குவது, தண்டிப்பது என்றெல்லாம் பலரும் கருதுகின்றனர். இவ்வகை ஒதுக்கல் தவறு என்றால், ஒரு நாட்டின் இனஒடுக்குமுறையை வேறொரு நாட்டில் இருந்தபடி வெல்வதற்கு மருதன் போன்றோர் முன்வைக்கும் தீர்வுதான் என்ன?

இலங்கை அரசின் இனவாதக் கொள்கையை ஏற்பவர்கள்/அதனால் பலனடைபவர்கள்; இலங்கை அரசின் இனவாதக் கொள்கையை ஏற்காதவர்கள்/அதனை எதிர்ப்பவர்கள்; அரசியல் பார்வை ஏதுமற்றவர்கள் என்று ஒடுக்கும் சிங்கள இனத்தை 3 பிரிவுகளாகப் பிரிக்கிறார் மருதன். இவர்களில் முதல் பிரிவினரை நாம் எதிர்க்கும் அதேபோது இரண்டாம் பிரிவினரை ஒருங்கிணைத்து, மூன்றாம் பிரிவினரை வென்றெடுக்க வேண்டும் என்கிறார். சிங்கள இனத்தின் இந்த இரண்டாம் பிரிவினர் இந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த வேலையைத் தமிழர்களாகிய நாம் எப்படிச் செய்வதாம்? அதற்கு சிங்களவர்களோடு நாம் உரையாட வேண்டுமாம், அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டுமாம். அதாவது இனஒடுக்குமுறைக்கு எதிராக நாம் அவர்களிடம் கருத்துப் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம். நல்லது, இதை எப்படிச் செய்வதாம்? மருதன் கூறும் அந்த இரண்டாம் வகையினர் வேண்டுமானால் இந்தப் பணியைச் செய்யலாம். தமிழகத் தமிழர்கள் இங்கிருந்தபடி சிங்களத் தேச மக்களிடம் எப்படிப் பரப்புரை செய்வது? மாற்றம் கொண்டு வருவது? என்று மருதனோ மற்றவர்களோ குறிப்பிடத் தவறுவது ஏன்? இதற்கான வேலைத் திட்டத்தை அவர்கள் அறிவித்தால்தான் அதன் அடிப்படையில் நாம் விவாதிக்க முடியும்.

இதற்கு நேரடி வழி உண்டு. ஒடுக்கும் நாட்டின் மீது போர்தொடுத்து ஒடுக்குண்ட இனத்தை விடுவிப்பது. இந்தத் திட்டத்தை இங்கு எவரும் முன்வைக்கவில்லை. அவர்களும் இதனை ஏற்கப் போவதில்லை. இதுதான் வன்முறையாயிற்றே!

இப்படி நேரடிப் போர் புரிந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படை ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் ஒரு சூழலில் நம்முன் நிற்கும் கடமை என்ன? ஒடுக்கும் சிங்கள அரசை, அந்த ஒடுக்குமுறைக்குத் துணைநிற்கும் இந்திய அரசைப் பணியச் செய்வது எப்படி? இதற்கு நாம் உலக வரலாற்றிலிருந்து பாடம் படிக்கிறோம். ஒடுக்கும் அரசுகளை வழிக்குக் கொண்டு வருவதற்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட அதே அறவழிகளை நாமும் கையிலெடுக்கத் துணிகிறோம்.

இதற்கு நாம் மிகவும் பழைய வரலாற்றுக்கு எல்லாம் போக வேண்டியதில்லை. அண்மையத் தென்னாப்பிரிக்க வரலாறே நமக்குச் சரியான படிப்பினை. அங்கு பெரும்பான்மைக் கருப்பின மக்களை ஒடுக்கி வந்த வெள்ளைவெறி அரசைப் பணிய வைக்க உலகம் முன் வைத்த தீர்வுதான் என்ன? அந்த வெள்ளையின மக்களிடத்தும் மருதன் குறிப்பிடும் மூவகைப்பட்ட மனிதர்கள் உண்டு. ஆனால் அவர்களிடம் பேசிப் பஞ்சாயத்து செய்யும் வேலையில் எல்லாம் அன்று எவரும் ஈடுபடவில்லை. மாறாக, 1960கள் தொடங்கி 1990கள் வரையிலான காலக் கட்டத்தில் தென்னாப்பிரிக்க வெள்ளைவெறி அரசைத் தனிமைப்படுத்தும் வகையில், அவ்வரசின் மீது பொருளியல், விளையாட்டு, கலை, சுற்றுலா என ஒவ்வொரு துறையிலும் தடைகளை விதித்தன உலக நாடுகள். இத்தகைய தடைகளை ஒவ்வொரு நாடும் மேற்கொள்ள வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது ஐநா.

ஐநா பொதுப்பேரவை 1962இல் இனஒதுக்கலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சிறப்புக் குழு என்னும் அமைப்பை நிறுவியது. பொருளியல் வகையிலும், இன்ன பிற வகையிலும் தென்னாப்பிரிக்கா மீது தடை விதிக்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென அக்குழு கோரியது. இதனை முதலில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஏற்க மறுத்ததுடன் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தன.

இருப்பினும் இங்கிலாந்தை மையமாகக் கொண்ட இனஒதுக்கல் எதிர்ப்பு இயக்கம் என்னும் அமைப்பானது தென்னாப்பிரிக்க இனஒதுக்கலுக்கு எதிரான பொருளியல் தடைகளுக்கான பன்னாட்டு மாநாடு என்னும் பெயரில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இது அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் இந்தத் தடைக்கு இணங்க வைக்கும் வேலைகளில் ஈடுபட முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் பல நாடுகளிலும் தொடர்ச்சியான பரப்புரைகளை மேற்கொண்டது. அமெரிக்கக் குழுமங்கள் எதுவும் தென்னாப்பிரிக்காவில் முதலீடு செய்யக் கூடாதென்னும் பரப்புரை 1970களில் அமெரிக்காவில் தீவிரமாக நடைபெற்றது. இதற்கு ஆதரவாக அமெரிக்கக் கருப்பின மக்கள் களமிறங்கினர். அமெரிக்கா என்றல்ல, ஐரோப்பா, ஆசியா என்று உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பொருளியல் தடை கோரிக்கையை எடுத்துச் சென்றனர்.

முதலில் ஆப்பிரிக்க நாடுகள் இந்தத் தடையை விதித்தன. ஏழை ஆப்பிரிக்கத் தடையால் என்ன கேடு வந்து விடப் போகிறது என்றுதான் முதலில் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு நினைத்தது. ஆனால் 1980களில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் தென்னாப்பிரிக்கா மீது தடை விதிக்க முன்வந்தன.

இது தென்னாப்பிரிக்க அரசுக்குக் கடும் பொருளியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. நீங்கள் எங்கள் மீது விதிக்கும் தடை எங்களைப் பாதிக்காது, உள்ளபடியே ஏழைக் கருப்பின மக்களைத்தான் இன்னும் துயரத்தில் ஆழ்த்தும் என நீலிக் கண்ணீர் வடித்தது தென்னாப்பிரிக்க அரசு. இப்படித்தான் பல இனவெறி ஆதரவாளர்களும் போலிப் பரிதாபம் காட்டினர். எங்கள் மக்கள் அல்லல்படுவது கண்டு எவரும் கவலைப்பட வேண்டாம். இனவெறிக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் இதையும் ஒரு தியாகமாகவே கருதுகிறோம் எனத் துணிவாக அறிவித்தார் நெல்சன் மண்டேலா.

ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசின் துணைத் தலைவராக 14.06.1976 அன்று பீட்ஸ்பர்க் போஸ்ட்-கெசட் என்னும் இதழுக்குப் பொருளியல் தடை குறித்து அளித்த பேட்டியில் (http://news.google.com/newspapers?nid=1129&dat=19910617&id=j9IwAAAAIBAJ&sjid=b24DAAAAIBAJ&pg=6346,4554610) அவர் இவ்வாறு கூறினார்:

"எங்கள் நிலைப்பாடு மிகத் தெளிவானது, முரணற்றது. பொருளியல் தடையின் முதலும் முதன்மையுமான நோக்கம் என்னவென்றால், கருப்பர், வெள்ளையர் உள்ளிட்ட ஒவ்வொரு தென்னாப்பிரிக்கரும் தத்தமது தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை படைத்த மனிதர்களாவதை உறுதிபடுத்துவதாகும். பொருளியல் தடைகளின் இரண்டாவது குறிக்கோள், இனஒதுக்கலை முற்றிலுமாகத் துடைத்தெறிவதாகும். இவ்விரு குறிக்கோள்களுமே இன்னும் நிறைவேறவில்லை என்பதால் பொருளியல் தடைகள் தொடர வேண்டும் என்பதே நமது நிலைப்பாடாகும்."

மண்டேலா 27 ஆண்டுச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு 11.02.1990 ஞாயிறன்று விடுதலை பெற்று வெளிவந்ததும் பேசிய முதல் உரையில் குறிப்பிட்டார் (http://db.nelsonmandela.org/speeches/pub_view.asp?pg=item&ItemID=NMS016):

"புதிய தென்னாப்பிரிக்காவைக் கட்டியெழுப்புவதில் எங்களுடன் கைகோக்குமாறு நமது சக வெள்ளையினத் தோழர்களை அழைக்கிறேன். இந்த விடுதலை இயக்கம் உங்களுக்கான அரசியல் இல்லமுமாகும். இனஒதுக்கல் அரசைத் தனிமைப்படுத்தச் செய்யும் இயக்கத்தைப் பன்னாட்டுச் சமூகம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்."

"இப்போது பொருளியல் தடைகளை நீக்கும் செயல் என்பது இனஒதுக்கலை முற்று முழுதாகத் துடைத்தெறிவதை நோக்கிய நமது பணியைச் சிதைத்து விடக் கூடிய ஆபத்தான விளையாட்டாகும். விடுதலை நோக்கிய நமது பயணத்தை எவராலும் பின்னோக்கிச் செலுத்தவியலாது. நமது வழியில் அச்சம் குறுக்கிட அனுமதியோம்."

இனவெறி அரசுக்கு எதிரான போராட்டத்தில் சக வெள்ளையினத் தோழர்களுக்குள்ள பங்களிப்பை வலியுறுத்தும் மண்டேலா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பொருளியல் தடைகளையும் ஆதரிப்பது நமக்கு எவ்வளவு தெளிவான பார்வையை அளிக்கிறது பாருங்கள். ஓர் ஒடுக்குமுறை அரசைப் புறக்கணிக்கக் கோருவது அந்நாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் தண்டனையல்ல, அவர்களுக்கு எதிரான இனவெறியுமல்ல. அக்கொள்கையை ஆதரிக்கும் மக்கள் திருந்துவதற்கு அளிக்கப்படும் வாய்ப்பாகும். அம்மக்கள் வழியாக ஒடுக்கும் அரசைப் பணிய வைப்பதாகும். சிங்களப் பேரினவாதத்தை ஆதரிக்கும் சிங்களவர்களுக்கும் நாம் இதைத்தான் செய்ய வேண்டும்.

இந்தப் புரிதலின் அடிப்படையில் மருதன் எழுப்பிய கால்பந்துப் பிரச்சினைக்கு வருவோம். சிங்களக் கால்பந்தாட்டர்களை முதலமைச்சர் ஜெயலலிதா 2012 செப்டம்பரில் வெளியேற்றிய செயல் ராஜபட்சேவின் இனவெறிச் செயலுக்கு ஒப்பானது என்கிறார் மருதன். ஜெயலலிதாவின் இந்தச் செயலைக் கண்டித்துக் கலைஞர் விடுத்த அறிக்கையும், இந்து நாளேடு தீட்டிய தலையங்கமும் (ஆபத்தான விளையாட்டு, 04.09.2012), மகஇகவின் வினவு இணையத் தளம் வெளியிட்ட கட்டுரையும் தமக்கும் உடன்பாடானவையே என்கிறார்.

ஜெயலலிதாவின் செயல் வெறும் வெறுப்பு அரசியல் என்கிறார் மருதன். இது போல்தான் பல வட இந்திய ஊடகங்களும் பாரதக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும் விளையாட்டையும் அரசியலையும் கலக்கக் கூடாதென பிரம்மோபதேசம் செய்து வருகின்றன.

கால்பந்து அரசியல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டு அரசியலே தென்னாப்பிரிக்க அரசின் மீது கைவைக்காமல் இல்லை.

எஃப்.ஐ.எஃப்.ஏ. எனப்படும் பன்னாட்டுக் கால்பந்துச் சங்கக் கூட்டமைப்பு தென்னாப்பிரிக்காவுடன் உலக நாடுகள் எதுவும் கால்பந்து விளையாட 1963இல் தடை விதித்தது. தொடர்ந்து உலகக் கால்பந்துப் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவை அனுமதிக்க மறுத்தது.

nelson_mandelaபன்னாட்டு மேசை டென்னிஸ் கூட்டமைப்பு, பன்னாட்டு ரக்பி வாரியம் எனப் பல விளையாட்டு அமைப்புகளும் தென்னாப்பிரிக்காவை ஒதுக்கி வைத்தன. தென்னாப்பிரிக்காவால் எந்நாட்டுக்கும் சென்று கோல்ஃப் விளையாட முடியவில்லை. கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயங்களில் கூட தென்னாப்பிரிக்கா ஒதுக்கி வைக்கப்பட்டது.

இந்த விளையாட்டுப் புறக்கணிப்பு வழிமுறையை மீற நினைத்த நியூசிலாந்து 1985இல் தனது ரக்பி அணியை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்ப முயன்றது. ஆனால் உலக நாடுகளின் கடும் கண்டனத்துக்குள்ளாகி அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கிக் கொண்டது.

1974இல் டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு அரிதிலும் அரிதான நிகழ்வாக இந்திய அணி நுழைந்தாலும், எதிரணி தென்னாப்பிரிக்கா என்பதால் அப்போட்டியில் பங்கேற்கக் கூடாதென விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோருக்கு இந்திய அரசு தடை விதித்தது. இது குறித்து ச.பாலமுருகன் கீற்றில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

ஜோலா பட் என்பவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாபெரும் தடகளப் பெண்மணி. அவர் தமது 17ஆவது வயதில் 1984இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த தடகளப் போட்டி ஒன்றில் 5,000 மீட்டர் மகளிர் ஓட்டப் பந்தயத்தில் 15:01:83 நேரத்தில் ஓடி உலகச் சாதனை புரிந்தார். ஆனால் தடகளப் போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்கா ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததால், அவரது இந்த உலகச் சாதனையை எந்நாடும் அறிந்தேற்கவில்லை. பிற்பாடு அவர் 1985இல் இங்கிலாந்துக்காகப் பங்கேற்று 5,000 மீட்டர் தொலைவை இன்னும் விரைவாக 14:48:07 நேரத்தில் ஓடி தமது உலகச் சாதனைக்குரிய உலக அங்கீரகாரத்தைப் பெற்றார்.

ஒலிம்பிக்கில் இருந்து தென்னாப்பிரிக்காவை ஒதுக்கக் கருப்பின மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தினர். இதற்கெனத் தென்னாப்பிரிக்க விளையாட்டுச் சங்கம் என்னும் அமைப்பை 1959இல் ஏற்படுத்தினர். தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த அமைப்பு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவிடம் தென்னாப்பிரிக்காவை ஒலிம்பிக்கிலிருந்து ஒதுக்கி வைக்கும்படி கோரிக்கைகளை வைத்தது. ஆனால் ஒலிம்பிக் குழு பணியவில்லை. மீறினால் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டது. முடிவில் 1970இல் தென்னாப்பிரிக்காவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து நீக்கியது பன்னாட்டு ஒலிம்பிக் குழு. (1980 மாஸ்கோ ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்ததும், 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை ருஷ்யா புறக்கணித்ததும் தனிக் கதை.)

இவ்வளவு விளையாட்டுப் புறக்கணிப்பையும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகச் செய்தது உலகம். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னைப் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட்டர்கள் கலந்து கொள்ள ஜெயலலிதா தடை விதித்ததை மீண்டும் எதிர்க்கிறது இந்து நாளேடு. இங்கும் அதை ஆமோதிப்பதாகக் கூறுகிறார் மருதன்.

இந்தியர்களின் மதம் எனப் பீற்றிக் கொள்ளப்படும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் பட்ட பாட்டை மருதன் அறிவாரா தெரியவில்லை. 1990கள் வரை நடந்த அந்தக் கிரிக்கெட் அரசியல் சுவாரசியமான கதைகளையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது.

எல்லா விளையாட்டுகளையும் போல்தான், வெள்ளைவெறிக் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட்டும் எட்டிப் பார்க்கவில்லை.

1961இல் காமென்வெல்த் நாடுகள் அமைப்பிலிருந்து தென்னாப்பிரிக்கா வெளியேற்றப்பட்டதும், ஐசிசி எனப்படும் பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்திலிருந்தும் அது விலக்கி வைக்கப்பட்டது. குறிப்பாக 1970இல் இங்கிலாந்து அணி ஒன்று தென்னாப்பிரிக்கா செல்லவிருந்தது. அந்த அணியில் பசில் டி ஒலிவெரியா என்னும் கருப்பினக் கிரிக்கெட்டர் இடம்பெற்றிருந்தார். இதனைத் தென்னாப்பிரிக்கா எதிர்த்தது. உடனே ஐசிசி அமைப்பிலிருந்து தென்னாப்பிரிக்கா காலவரையின்றி விலக்கி வைக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் சமசர முயற்சியாக மாபெரும் கிரிக்கெட்டரான டான் பிராட்மன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் தென்னாப்பிரிக்கத் தலைமை அமைச்சர் ஜான் ஃபாஸ்டரை 1971இல் சந்தித்தார். பிராட்மன் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியினரின் தென்னாப்பிரிக்க வருகைக்கு வழிவகுப்பார் என்ற நப்பாசையில் இருந்தார் ஃபாஸ்டர். ஆனால் பிராட்மனோ கருப்பின மக்கள் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை ஃபாஸ்டரிடம் கேட்டார். அறிவில் பின்தங்கிய கருப்பர்களால் எப்படி வெள்ளையர்கள் போல் அழகாகக் கிரிக்கெட் விளையாட முடியுமெனக் கிண்டலடித்தார் ஃபாஸ்டர். "நீங்கள் கேரி சோபர்ஸ் எனும் மாபெரும் கருப்பினக் கிரிக்கெட்டர் பந்தடித்து ஆடும் ஒயிலையும் மிடுக்கையும் கண்டதில்லையா ஃபாஸ்டர்?" எனக் கேட்டார் பிராட்மன். நிறவெறியில் நீங்கள் முரண்டு பிடிக்கும் வரை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி ஒருபோதும் தென்னாப்பிரிக்கா நுழையாது என்று அறிவித்தார் கிரிக்கெட் மாமேதை டான் பிராட்மன். கிரிக்கெட்டில் மட்டுமல்லாது மாந்தநேயத்திலும் உயர்ந்து நின்றார் பிராட்மன். சிறையிலிருந்து மீண்டு வந்ததும், "அந்த பிராட்மன் உயிருடன் இருக்கிறாரா?" என அன்புடன் விசாரித்தாராம் மண்டேலா!

ஆஸ்திரேலியா மட்டுமன்று, இந்தியா உள்ளிட்ட கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அனைத்தும் தென்னாப்பிரிக்காவை முற்றாக ஒதுக்கி வைத்தன.

ஐபிஎல் என்பது தனியார்க் குழுமங்கள் நடத்தும் போட்டிதானே? இந்திய அரசா நடத்துகிறது? இதில் இலங்கைக் கிரிக்கெட்டர்கள் கலந்து கொள்ளக் கூடாது எனச் சொல்வது தவறில்லையா? என்றுகூட சிலர் மிக நுணுக்கமாக வியாக்கியானம் செய்கின்றனர். இப்படி ஒரு விமர்சனத்தைக் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்திரி கூட என்டிடிவி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார்.

உண்மையில் பார்க்கப் போனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பாரத மாதா பக்தியுடன் போற்றப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கிரிக்கெட்டர்கள் எவரும் இந்தியாவுக்காகப் பங்கேற்பதில்லை. பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்காகத்தான் பங்கேற்று விளையாடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும். ஐபிஎல், தனியார் என்றெல்லாம் கூறிக் கொண்டு நுழைந்து விடும் கதை தென்னாப்பிரிக்க இனஒதுக்கல் காலத்திலும் நடந்தது.

கிரிக்கெட்டில் தனிமைப்படுத்தப்பட்ட தென்னாப்பிரிக்கா ஒரு சூழ்ச்சி செய்தது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் என்னும் அமைப்பை 1976இல் தோற்றுவித்தது. இது அரசு உதவியின்றி முழுக்க முழுக்கத் தனியார் நிதியுதவியுடன் இயங்கும் அமைப்பு என்பதால் இந்த அமைப்புடன் எந்த ஒரு நாட்டின் அணியும் கிரிக்கெட்டரும் விளையாடுவதில் தவறில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை உலகக் கிரிக்கெட் அணியினரும், தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்களும் எடுத்த எடுப்பிலேயே புறக்கணித்தனர்.

ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணி தடையை மீறி தென்னாப்பிரிக்கா செல்லலாம் என 1982இல் முடிவெடுத்தது. இந்தப் பயணம் கலகப் பயணம் என்றும், பயணம் சென்றோர் கலக அணியினர் என்றும் அழைக்கப்பட்டனர். இயான் போதமைத் தவிர முழு வலிமையுடன் தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய இந்த இங்கிலாந்து அணியினரை உலக ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களை "அசிங்கப் பன்னிருவர்" என இங்கிலாந்து நாடாளுமன்றம் வர்ணித்தது. அது மட்டுமல்ல, அந்த அணியினர் பன்னாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து மூன்றாண்டுக் காலத்துக்கு விலக்கி வைக்கப்பட்டனர். இங்கிலாந்தின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி பாய்காட் உள்ளிட்டோரின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.

கதை அத்துடன் முடியவில்லை. 1990இல் மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்து அணி அதே கூத்தை அரங்கேற்ற முடிவெடுத்தது. தென்னாப்பிரிக்கா சென்று கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. அதுவும் இனஒதுக்கல் போராட்டங்கள் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் நுழைந்த இந்த இங்கிலாந்து அணியினரை எதிர்த்து ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் பின்னணியில் மாபெரும் ஊர்வலங்கள் நடைபெற்றன. இங்கிலாந்துக்கே ஓட்டம் பிடித்தார் மைக் கேட்டிங். அந்த அணியும் மூன்றாண்டுப் பன்னாட்டுத் தடையை வாங்கிக் கட்டிக் கொண்டது.

உலகின் கலைத்துறையினர் பலரும் தென்னாப்பிரிக்காவைப் புறக்கணித்ததும் ஓர் அருமையான போராட்ட வரலாறு ஆகும்.

தமிழகத்தில் அனைவரும் அறிந்த பெயர் மார்லான் பிராண்டோ. ஆலிவுட்டின் பெரும் நடிகர் இவர். சிவாஜி கணேசனைத் தமிழகத்தின் மார்லான் பிராண்டோ எனத் தமிழ்த் திரை ரசிகர்கள் போற்றிய காலத்தில், இல்லை, மார்லான் பிராண்டோதான் அமெரிக்காவின் சிவாஜி என அண்ணா புகழ்ந்துரைத்தது பலரும் அறிந்ததே. தமிழின் நாயகன் திரைப்படத்துக்கு அடிப்படையான காட் ஃபாதர் படத்தின் நாயகர் இவர். நடிப்புக்கு ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றவர். இப்படிப்பட்ட நடிகர்தான் உலகத் திரைப்பட நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் 1961இல் ஒரு கோரிக்கை விடுத்தார். ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு அப்படம் தென்னாப்பிரிக்காவில் திரையிடப்படக் கூடாதென ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார். ஆனால் இங்கு நம் தமிழகத்துக் கலை ஞாநிகளோ கலை கலைக்காகவே எனக் கதை அளக்கின்றனர்.

மொத்தம் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட நடிகர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த அமெரிக்க நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமைப்பு அதன் உறுப்பினர்கள் எவரும் தென்னாப்பிரிக்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளக் கூடாதென 1981 அக்டோபரில் அறிவித்தது.

இவ்வகையில் உலகின் கலைத் துறையினர் பலரும் தென்னாப்பிரிக்காவை அலை அலையாகப் புறக்கணிக்கத் தொடங்கினர். இனஒதுக்கல் காலக் கட்டத்தில் தென்னாப்பிரிக்கா சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு வந்த தமிழக பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாசை இந்திய அரசு நேரில் அழைத்துக் கண்டித்தது.

இப்படிப் பொருளியல், விளையாட்டு, கலை, பண்பாடு, சுற்றுலா என ஒவ்வொரு துறையிலும் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து உலக நாடுகள் மேற்கொண்ட நேர்வகை ஒதுக்கல் அரசியல் வெள்ளையர்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளை முதலாளிகள் கடும் பொருளியல் நெருக்கடியைச் சந்தித்தனர். கிரயம் பொல்லாக், பேரி ரிச்சர்ட்ஸ் போன்ற மாபெரும் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட்டர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்வையே இழந்தனர். இளைஞர்களும் சிறுவர்களும் விளையாட்டைத் தங்கள் வாழ் பணியாகத் தேர்ந்தெடுக்கத் தயங்கினர். இனவெறி தொடர்ந்தால் அனைத்துத் துறைகளிலும் நமது தலைமுறை பின்தங்கி விடும் என்ற அச்ச உணர்வு அவர்கள் தலையில் சம்மட்டியாய் அடித்தது. இது ஆதிக்கவெறி பிடித்த பல வெள்ளையரிடமும் முற்போக்கு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. பதிலுக்கு இது ஆப்பிரிக்க இனவெறி அரசின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி இறுதியில் கருப்பின மக்களின் விடுதலைக்கு வழிவகுத்தது. 1994இல் இனவெறிச் சட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்தவுடன்தான் உலக நாடுகள் தென்னாப்பிரிக்காவின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்கின.

இன்றுங்கூட, பாலத்தீன மக்களினத்தை அழித்து வரும் இஸ்ரேலை உலகின் பல கலைஞர்களும் புறக்கணிக்கின்றனர். உலகின் பெரும் இசைக் கலைஞர்களாகிய எல்விஸ் காஸ்டெல்லோ, கில் ஸ்காட் ஹெரான், கார்லோஸ் சாண்டானா ஆகியோர் இஸ்ரேலில் தங்களின் இசை நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளனர். இந்தியாவின் புகழ்வாய்ந்த தபலா கலைஞர் ஜாகிர் உசேனும் இஸ்ரேலுக்கு எதிராக இதே முடிவை எடுத்தார். ஸ்லம் டாக் மில்லியனர் புதினத்தின் ஆசிரியராகிய விகாஸ் ஸ்வரூப் இஸ்ரேலில் நடந்த பன்னாட்டு எழுத்தாளர்கள் விழாவில் கலந்து கொள்ள மறுத்தார். ஆலிவுட்டின் மாபெரும் நட்சத்திரங்களாகிய புரூஸ் வில்லிஸ், வேன் டேம் ஆகியோர் தங்களின் அண்மையப் படமாகிய எக்ஸ்பென்டபிள்ஸ் 2 என்னும் திரைப்படத்தின் அறிமுக விழா இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த போது, அதில் கலந்து கொள்ளாது தவிர்த்தனர். மேற்படிப்பு மற்றும் உயர் கல்விக்கான ஆசிரியர்களின் தேசியச் சங்கம் என்னும் பெயரில் இங்கிலாந்தில் இயங்கி வரும் ஆசிரியத் தொழிற்சங்க அமைப்பு இஸ்ரேலுடன் எவரும் எந்தக் கல்வித் துறைத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என அறிவித்தது.

மொத்தத்தில், ஆதிக்கவெறி பிடித்த ஒரு நாட்டைப் பல நிலைகளிலும் ஒதுக்கி வைப்பது என்பது அந்நாட்டின் வெகுமக்களை ஒதுக்கி வைப்பதாகாது. மாறாக, இந்தப் புறக்கணிப்புகள் அம்மக்களிடம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆதிக்கச் சிந்தனைகளை எரித்துப் பொசுக்கத் துணைசெய்கின்றன.

தென்னாப்பிரிக்கா குறித்த மாபெரும் வரலாற்றுப் பாடம் நமக்கும் பொருந்தும். இந்தியாவில் ஐபிஎல் என்றும், இலங்கையில் கலைநிகழ்ச்சிகள் என்றும் ஆளும் வர்க்கங்கள் அடிக்கும் கூத்துக்கள் அனைத்தும் அவர்களின் இனப்படுகொலைக் குற்றங்களை மறைத்துக் கொள்ளச் செய்யும் முயற்சிகளே. பாருங்கள், எல்லாம் இயல்பாகி விட்டது என ராசபட்சேக்கள் காட்டிக் கொள்ளவே கலை, விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் உதவுகின்றன.

இந்தப் புரிதலுடன்தான் இலங்கைக் கலை நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கும்படி அன்று அமிதாப்பையும் கமல்ஹாசனையும் அறிவுறுத்தினோம். அதே புரிதலுடன்தான் இன்று ஐபிஎல்லில் சிங்களக் கிரிக்கெட்டர்களைப் புறக்கணிக்கக் கோருகிறோம். இது இலங்கை மீதான முழுப் பொருளியல் தடையாக விரிந்து செல்ல வேண்டும் என்பதே ஈழ ஆதரவாளர்களின், தமிழ்த் தேசியர்களின் குறிக்கோள் ஆகும்.

அண்மைய தமிழகச் சட்ட மன்றத் தீர்மானம் கூறுவது போல், தமிழீழத்தில் இயல்பு நிலை ஏற்படும் வரை, இலங்கை மீது பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட்டு இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை, ஈழத் தமிழர்களிடம் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை அனைத்துப் புறக்கணிப்புகளும் ஒதுக்கல்களும் இலங்கையின் மீது தொடர வேண்டும். இதுதான் இலங்கையைப் பணியச் செய்வதற்குள்ள ஒரே வழி.

மன்மோகன் சிங்கின், சோனியாவின், ராஜபட்சர்களின் மோவாய்க்கட்டையை ஆட்டி விட்டு விடுதலை பெற்று விடலாம் என நினைப்போரால் தமிழீழத்தை ஒரு நாளும் தரிசிக்க முடியாது. தாஜா செய்து எதையும் ஈட்டி விடலாம் என நினைக்கும் பேர்வழிகளுக்கும் எல்லாத்தையும் பேசித் தீத்துக்கலாம் எனச் சொல்வோருக்கும் பெரிய வேறுபாடேதும் இல்லை. இரண்டும் போராட்ட அரசியலுக்கு எதிரானவை.

ஆக, பொருளியல், விளையாட்டு, சுற்றுலா, பண்பாடு என அனைத்து நிலைகளிலும் சிங்களப் பேரினவாத அரசை ஒதுக்கி வைப்போம். அதன்வழி சிங்களப் பெரும்பான்மையிடம் நமக்குள்ள அற உரிமையைப் புரிய வைப்போம். இந்த அழுத்தத்தில் ராஜபட்சே கூட்டத்தை மூழ்கடிப்போம்.

இந்த இலங்கைப் புறக்கணிப்பைச் செய்ய மறுக்கும் இந்தியாவை எதிர்த்து அயராது போராடுவோம். இது தில்லித் திமிரைக் கட்டாயம் அடக்கும். இது உலக நாடுகள் அணி அணியாக இலங்கையைப் புறக்கணிக்கும் நிலையை ஏற்படுத்தும். இறுதியில் உறுதியாகக் கொழும்புக் கொழுப்பையும் கரைக்கும். 

- நலங்கிள்ளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It