தமிழீழ விடுதலைப் போராட்டம் பேரழிவுகளையும் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்ததைத் தொடர்ந்து தற்போது கவனம் ராஜபக்ஷேவைப் போர்க்குற்றங்களுக் காகத் தண்டித்தல், இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதித்தல் என்பதாகக் குவிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில் இக்கோரிக்கைகளின் பின்னணிகளையும் அதன் செயல் பாட்டிற்கான சாத்தியக்கூறுகளையும் இது சார்ந்து இந்திய அரசின் அணுகு முறைகளையும் பற்றிய புரிதல் நமக்கு தேவைப்படுகிறது.இந்த நோக்கில் நம் சிந்தனைக்காக சில:

ஐக்கிய நாடுகள் அவை:

இரண்டு உலகப் போர்களின் கொடுமைகளையும் அவலங்களையும் சந்தித்து அதிர்ந்த அனைத்து நாட்டுச் சமூகம், மனித குலத்தில் மீண்டும் இதுபோன்ற ஒரு போர் எழா வண்ணம் சமாதானத்தையும் அமைதியையும் நிலை நாட்டவும், உலக நாடுகளின் பாதுகாப்பையும் அரசியல், பொருளாதார, சமூக நிலையில் அவற்றுக் கிடையே ஒத்து ழைப்பையும் உறுதிப்படுத்தவும் இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு 1945 அக்டோபரில் 50 நாடுகள் ஒன்றுகூடி தோற்றுவித்த அமைப்பே ஐக்கிய நாடுகள் அவை. இது தற்போது புதிதாக உதயமான தெற்கு சூடானையும் உள்ளிட்டு 193 நாடுகளைக் கொண்ட அமைப்பாக இருந்து வருகிறது.இதன் கட்டமைப்பு வடிவம் வருமாறு.

 1. பொது அவை ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் இதன் உறுப்பினர் .ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் ஐந்து உறுப்பினர்களைத் தன் நாட்டின் சார்பாக இந்த அவைக்கு அனுப்பலாம் .ஆனால் வாக்குரிமை மட்டும் ஒரு நாட்டுக்கு ஒன்றுதான் . ஆண்டுக்கு இரு முறை இது கூடும். பாதுகாப்பு அவை கைக்கொள்ளாத பிற எந்தச் சிக்கல் குறித்தும் இது விவாதித்து முடிவெடுக்கலாம்.

2. பாதுகாப்பு அவை உலக அமைதிக்கும் நாடுகளின் பாதுகாப்பிற்கும் உத்திரவாதமளிப் பபதாய்க் கூறப்படும் அவை இது. அமெரிக்கா, ருசியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஆகிய ஐந்து நாடுகளும் இதில் நிரந்தர உறுப்பினர்கள். இதுவன்றி 15 தற்காலிக உறுப்பினர் களும் உண்டு. தற்காலிக உறுப்பினர்களின் காலம் ஓர் ஆண்டு. இந்தியா 5 முறை இதில் தற்காலிக உறுப்பினராக இருந்துள்ளது .நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு, பெரும் பான்மை முடிவை நிராகரிக்கிற மறுப்புரிமை அதிகாரம் veto power உண்டு.

3. பொருளாதார சமுக அவை (Economic and Social Council) பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 நாடுகளின் பேராளர்கள் அடங்கிய அவை இது. இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள். பொருளாதாரம், சமூகம், பண்பாடு, கல்வி, நல வாழ்வு முதலான பணிகளை இது மேற்கொள்கிறது.

4. பொறுப்பாண்மைக் குழு (Trusteeship Council) தன்னாட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலன்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது. பாதுகாப்புக் குழுவின் 5 நாடுகளும் இதன் உறுப்பினர்கள்.

5. அனைத்து நாட்டு நீதிமன்றம் ஒன்பது ஆண்டு பதவிக்காலம் கொண்ட 15 உறுப்பினர்களைக் கொண்ட நீதிமன்றம் இது. ஐ நா உறுப்பு நாடுகள் அனைத்தும் இந்த நீதி மன்றத்திற்குக் கட்டுப்பட்டவை.

6. செயலகம் (Secretariat). மேற்கண்டுள்ள அனைத்தையும் நிர்வகிக்கும் அமைப்பு இந்த செயலகம் பாதுகாப்பு அவையின் பரிந்துரைப் படி நியமிக்கப்படும் பொதுச் செயலாளரே இதன் முதன்மை நிர்வாகி. இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புண்டு. இந்த செயலகத்துக்குத் தற்போது பொதுச் செயலாளராக இருப்பவர்தான் பான்கி மூன்.

இவையே ஐ.நா. கட்டமைப்பின் தூண் போன்ற அமைப்புகள். இவையன்றி ஐ.நா. சார்பில் உலக அளவி லான, கல்வி, அறிவியல், நிதி, குழந்தை நலம், வாணிபம், போக்குவரத்து, நலவாழ்வு, முதலான பல்வேறு துறைகளி லும் தனித்தனி அமைப்புகள், சிறப்புக் கழகங்கள் உண்டு. இவை போக மனித உரிமை அவை (Human Rights Council - HRC) என்பது ஐ.நா.வின் பொருளியல் சமூக அவையின் கீழ் வருகிறது.

அதாவது மனித உரிமை என்பது ஐ.நா.வின் துணை அமைப்பாகவோ சார்பு அமைப்பாகவோ அல்லாமல் நேரடியாக ஐ.நா. கட்டமைப்பின் து£ண்களில் ஒன்றான பொருளியல் சமூக அமைப்பின் கீழ் வருகிறது என்பது கவனத்தில் இருத்தத் தக்கது. இந்த அமைப்பு சார்பில்தான் 1948 டிசம்பர் 10 ஆம் நாள் ஐ.நா பொதுக்குழுவால் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் அறிவிக்கப் பட்டது. இது அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமைகளை அறிவிக்கிறது.

இத்து£ண் அமைப்புகளில் அனைத்து நாட்டு நீதிமன்றம் ஒன்று மட்டும் நெதர்லாந்தைத் தலை நகராகக் கொண்டு இயங்க பிற அனைத்தும் நியூயார்க்கைத் தலை நகராகக் கொண்டு இயங்கி வருகிறது

செயல்பாடுகள்

ஐ.நா. அமைப்பின் செயல்பாடுகளை இரண்டு வகை யாகக் கொள்ளலாம். 1.இது தொடங்கிய நாள் தொட்டு, தென் ஆப்பிரிக்க விடுதலை இயக்கம், வியட்நாம் விடுத லைப் போர், சூயஸ் கால்வாய்ச் சிக்கல், பாலஸ்தீன, கொரிய, நமீபிய, நைஜீரிய விடுதலைப் போராட்டங்கள் முதலான பல்வேறு சிக்கல்களில் தலையிட்டு, அவற்றைத் தீர்த்து வைத்து சமாதானத்தை நிலை நாட்டியிருக்கிறது. 2 அதே வேளை பல்வேறு சிக்கல்களில் அவற்றைத் தீர்த்து வைக்க இயலாமலோ, அல்லது அச்சிக்கல் குறித்த நடவடிக்கை களுக்கு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியும் அவற்றை செயல்படுத்த இயலாமலோ ஆகும் நிலையும் நீடித்திருக்றது.

இவ்விரண்டு விதமான நிலைக்கும் காரணங்கள் உண்டு. ஐ.நா. அமைப்பின் செயல் பாடுகளைப் பொறுத்த மட்டில் பெரும்பாலும் அவை வல்லரசு நாடுகளின் விருப்பம் சார்ந்த தாகவே இருந்து வருகிறது. இவற்றைப் புரிந்து கொள்ள ஐ.நா.வின் செயல்பாடுகளை 1991-க்கு முந்தைய ஐ.நா., அதற்குப் பிந்தைய ஐ.நா. என்று இரண்டு கால கட்டங்களாகப் பிரித்து நோக்கலாம்.

1991 வரை உலக நாடுகள் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் முதலான ஏகாதிபத்திய, முதலாளிய நாடுகள் ஒரு முகாம், ருஷ்யா, சீனா, வியட்நாம், மற்றும் கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட சோசலிச நாடுகள் ஒரு முகாம் என இரண்டு முகாம்களாக இருந்தன. இதற்கு அப்பால் அணி சேரா நாடுகள் என்றும் ஒரு பிரிவு உண்டு.

அச்சந்தர்ப்பங்களில் நாடுகளுக்கிடையேயான சிக்கல்களிலோ, அல்லது அந்தந்த நாட்டெல்லைக்குள் நிகழும் உள்நாட்டுச் சிக்கல்களிலோ ஐ.நா. தலையிடவும் செயல்படவும் சோசலிச நாடுகளிட மிருந்து ஓர் அழுத்தம் இருந்தது. அணி சேரா நாடுகளும் பெரும்பாலும் இதற்குத் துணையாய் நின்றன. இதனால் ஐ.நா.வின் செயல்பாடுகள் என்பவை குறைந்தபட்சம் தார்மீக நெறிமுறைகளின் அடிப்படையில் பிரச்சினைகளின் தகுதி அடிப்படையில் அதற்குரிய நியாயத்தை நிலைநாட்டும் நோக்கில் அமைந்தன.

எனில், 1948இல் சோவியத் -செக் முரண்பாடு, 1959இல் சோவியத் -சீன முரண்பாடு, இத்துடன் சோவியத் ஒன்றியத்துக்குள்ளேயே நிலவிய பல்வேறு முரண்பாடுகளின் உச்சமாக 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என சோசலிச முகாம் என்பது மிகவும் பலவீனமுற்ற நிலையில் , ஏகாதிபத்திய முதலாளிய நாடுகளுக்கு எதிராக ஒரு வலுவான மாற்று அணி இல்லாத சூழல் ஐ.நா. அவை என்பது பெருமளவும் ஏகாதிபத்திய முதலாளிய நாடுகள் நலன் காக்க அவை எடுத்ததே முடிவு என்பதாகச் செயல்படும் நிலைக்கு ஆளாகியது.

இதனால் ஐ நா அமைப்பு என்பது நாடுகளுக் கிடை யேயும் நாட்டெல்லைக்குள்ளேயும் எழும் சிக்கல்களை அச்சிக்கல்களின் தகுதி அடிப்படையில் நோக்கி அதற்குத் தீர்வு காண முற்படாது, உள்ளூர் கட்டைப் பஞ்சாயத்துகளில் வலு மிக்கவன் வல்லாண்மை செலுத்துவது போல் உலக அளவிலான பிரச்சினைகளிலும் அவை தகுதி அடிப்படை யில் நோக்கப்படாமல், நாட்டரசுகளின் வல்லாண்மை நோக்கிலோ வர்க்க நல ஆதிக்க நோக்கிலோ, அணுகப் படுவதாயின. அதனடிப்படை யிலேயே அதற்கான தீர்வும் முன்வைக்கப் படுகின்றன.

காட்டாக, கிழக்கு திமோர், கொசாவா விடுதலையை ருஷ்யா எதிர்த்தது. அமெரிக்கா, பிரட்டன் ஆதரித்தது. திபெத் பிரச்சினையில் சீனா எதிர்க்கிறது, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆதரிக்கிறது. தெற்கு சூடான் தனிப் பிரிவதை ருக்ஷ்யா எதிர்த்தது,மேற்கு நாடுகள் ஆதரிக்கின்றன. சீனாவும் ஆதரிக்கிறது. ஆனால் இவை அனைத்துமே தமிழீழ விடுதலையை ஆதரிக்க மறுக்கின்றன. இவ்வாறு நாட்டரசுகளின் வர்க்க மற்றும் ஆதிக்க நலன் சார்ந்தே நாடுகள் சார்ந்த சிக்கல்கள் அணுகப்படுகின்றன. இதே அடிப்படையிலேயே இந்தியா, தன் அண்டை நாடுகளுடனும், இந்த இந்திய நிலைப்பாட்டையட்டியே பிற வல்லரசு நாடுகளும், இலங்கை சார்ந்த தங்கள் அணுகுமுறைகளைக் கைக்கொள்கின்றன.

தனித்தனி அமைப்புகள்

இப்படிப்பட்ட அணுகு முறைகளை இவை கைக் கொள்வதால்தான், உலக நாடுகள் தங்களுக்குள் இணைந்து உலக அளவிலான பொது அமைப்பை, ஐ.நா. அவையை நிறுவிய அதேவேளை, பல்வேறு நாடுகளும் அதனதன் புவியியல் பரப்பு சார்ந்தோ, அல்லது ஐக்கியம் சார்ந்தோ அவ்வப் பகுதியிலும் தனித் தனியாக பல கூட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டன, இன்றும் உருவாக்கி வருகின்றன,

காட்டாக, உலகப்போர் முடிந்த கையோடு ஏகாதி பத்திய முதலாளிய நாடுகள் ஒன்று சேர்ந்து நேடோ அமைப்பை உருவாக்கிக் கொண்டன. சோசலிச நாடுகள் ஒன்று சேர்ந்து வார்சா உடன்படிக்கையைச் செய்து கொண்டன.ஆப்பிரிக்க நாடுகள் ஒன்று சேர்ந்து ‘ஆப்பிரிக்க யூனியன்’ பிரித்தானிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருந்து விடுதலை பெற்ற நாடுகள் ஒன்று சேர்ந்து ‘காமல் வெல்த்’ பின்னாளில் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து வந்த நாடுகள் ஒன்றிணைந்து ‘சுதந்திர நாடுகளின் காமன்வெல்த்’ அரேபிய நாடுகள் ஒன்றிணைந்து ‘அரேபிய அரசுகளின் லீக்’, தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல ஒன்றிணைந்து Association of South East Asian Nation - ASEAN. ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டன.

இந்த வகையில் இந்தியாவும் தன் அண்டை நாடுகளை ஒன்றிணைத்து 1985இல் மண்டல ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு – South Asian Association for Regional Cooperation - SAARC என்னும் அமைப்பை உருவாக்கியது. இந்தியாவுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலதத்தீவுகள் ஆகிய நாடுகள் இக்கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள், இந்தியா பிற நாடுகளுடன் கொண்டுள்ள அணுகுமுறைக்கும் இலங்கையுடன் கொண்டுள்ள அணுகு முறைக்கும் சில வேறுபாடுகள் உண்டு. காரணம் சார்க் நாடுகளின் கூட்டமைப்பில் தன் மேலாதிக்கத்தை நிறுவ முனையும் இந்தியாவுக்கு பங்களாதேசமோ, நேபாளம், பூட்டான், மாலத்தீவு ஆகிய நாடுகளோ சவால் அல்ல, சவால் பாகிஸ்தானும் இலங்கையும்தான்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை பாகிஸ்தான் - இந்திய நல்லுறவு முயற்சிகள் எனப் புறத்தோற்றத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், உள்ளார்ந்த பகைமையே நிலவி வருவதும், ஒன்றையன்று வீழ்த்தவோ, பலவீனப்படுத்தவோ முயன்று வருவதும் கண்கூடு.இலங்கையைப் பொறுத்தவரை, அது இந்தியாவுக்கு இணையான பலம் பொருந்திய நாடல்ல. அதேவேளை அது சின்னஞ்சிறிய நாடுதானே என்று லேசாய் எடுத்துக் கொள்ளும் நிலையிலும் இல்லை.எனவே அதற்கேற்ப இந்தியா தன் நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகி றது.காரணம், இலங்கையின் புவியியல் இருப்பு அப்படி.

இந்தியாவும் இலங்கையும்

இலங்கை புவிக்கோளின் தெற்குப் பகுதியில் இந்துமாக் கடலில் அமைந்து வங்கக் கடல் ஊடாக கீழ்த்திசை நாடுகளையும் அரபிக் கடல் வழியாக மேற்கு ஆசிய நாடுகளையும் நோக்கும் வகையில் ஆங்கில ‘வி’ வடிவில் அமைந்துள்ளது. இதனால் இதன் புவுயியல் முக்கியத்துவம் கருதி அமெரிக்கா, பிரிட்டன், சீனா, உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இலங்கை மேல் ஒரு கண் உண்டு. இந்த நோக்கிலேயே இவை இலங்கையுடன் நெருக்கமான உறவுக்கு முனைகின்றன. இந்த முனைப்பில் வல்லரசு நாடுகள் எங்கே இலங்கையைத் தன் வசப்படுத்திக் கொள்ளுமோ என்கிற அச்சத்தில் இலங்கை சீனா, அமெரிக்கா பக்கம் அதிகம் சாய்மானம் கொள்ளாமல் தன்னைச் சார்ந்து இயங்க வேண்டும் என்கிற அக்கறையிலேயே இந்தியா இலஙகை சார்ந்து அதிக அக்கறை காட்டுகிறது. இதன் விளைவாகவே இந்தியா இலங்கையைச் செல்லப்பிள்ளை மனோபாவத்தோடு கொஞ்சி அதன் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. வாய்ப்புக் கிட்டும் போது லேசாய் அச்சுறுத் தியும் தன்னைச் சார்ந்து இயங்கப் பார்த்துக் கொள்கிறது.

1971இல் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச விடு தலைக்கு துணை நின்ற இந்தியா அதே 71இல் இலங்கைக்கு ஆதரவாக ஜே.வி.பி. விடுதலை இயக்கத்தை ஒடுக்க அதற்கு உதவியதை, 74இல் கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததை, 80களில் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சி தந்து இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்தியதை , 1987இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட்டு இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பியதை, ஈழப் போராளிகளை அழித்தொழிக்க இந்தியா இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்ததுடன் களத்துக்கே ராணுவ அதிகாரிகளை அனுப்பி பயிற்சியளித்ததை முதலான் அனைத்தையும் நோக்க இந்தியாவின் இலங்கை சார்ந்த அணுகுமுறையைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே, இந்தப் பின்னணியிலேயே நாம் ஐ.நா. அறிக்கையை நோக்கவேண்டும். அதாவது தமிழீழச் சிக்கல் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் என்கிற அதன் தகுதி அடைப்படையிலே அணுகப்படாமல், அது நாட்டரசுகளின் ஆதிக்க நல, வர்க்க நல நோக்கிலேயே அணுகப்படுகின்றன. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இலங்கை சார்ந்து இந்தியாவில் நிலைப்பாடு இப்படி தன் ஆதிக்க நல நோக்கில் இலங்கை அரசுக்கு உதவுவதாக உள்ளதால்தான் உலக நாடுகள் பல இந்திய நிலைப்பாட்டுக்கு எதிராக - அதாவது நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட இந்திய வணிகச் சந்தையுடனான தங்கள் உறவை இழப்புக்குள்ளாக்கிக் கொள்ளவிரும்பாமல், அவையும் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால்தான் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக அவை எந்தவித நடவ டிக்கையும் மேற்கொள்ளாமல், இந்திய அரசின் நிலைப் பாட்டில் நின்று இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன. இவற்றை மீற முயலும் நாடுகளின் முயற்சிகளையும் இவை முறியடித்துவருகின்றன.

2009 மே இறுதிப் போரின் போது, போர் விதிமுறை களை மீறி நடைபெற்ற கொடுமைகளையும், அப்பாவிப் பொது மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட குரூரங்களையும் இலங்கை அரசின் ஊடகத் தடைகளையும், கட்டுப்பாடு களையும் கடந்து, உலக மக்களைச் சென்றடைய அக்கொடு மைகளைக் கண்டு அதிர்ந்த, மனித உரிமை குறித்து அக் கறைப்பட்ட சில நாடுகள், இந்தப் போர்க் குற்றங்களை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டு வந்து, இலங்கை இனவெறி அரசைக் கண்டிக்கவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் முற்பட்டன. இதற்கான முயற்சியில் சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈடுபட்டன.

ஆனால் இலங்கை அந்த முயற்சியை இந்தியாவின் உதவியோடு முறியடித்ததுடன், 27.05.2009 அன்று ஐநா மனித உரிமைக் குழுவில் தனக்கு சாதகமாக தீர்மானமும் நிறைவேற்ற வைத்தது. அதாவது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றுள்ளது எனவே இலங்கை அரசைப் பாராட்ட, ஆதரிக்க வேண்டும், இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும், இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது. தவிர போருக்கு பிந்தைய அழிவிலிருந்து மீள உலக நாடுகள் இலங்கைக்கு நிவாரணம் அளித்து உதவவேண்டும் என்கிற கோரிக்கையை உள்ளடக்கிய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தது. தொடக்கத்தில் இலங்கையின் மனித உரிமைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்த சில நாடுகளும், இந்தியா இலங்கைக்குத் துணை நிற்பதைப் பார்த்து, அந் நிலைப் பாட்டிற்கு எதிராகச் செயல்பட விரும்பாமல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு துணையாக நின்று அத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தன.

 மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 நாடுகளில் 29 நாடுகள் இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகி நின்றன. இதில் கொடுமை என்ன வென்றால் வரலாற்றில் தங்கள் உரிமைகளுக்காகக் கடும் போராடி சுதந்திரம் பெற்ற நாடுகளான ருஷ்யா, சீனா, கியூபா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், அங்கோலா, நிகராகுவா உள்ளிட்ட பல நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததுதான்.

மூவர் குழு அறிக்கை

இதற்குப் பிறகு ஓராண்டு கழிந்துதான் உலக நாடு களின் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புகளது நெருக் கடி தாளாமல் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான்கீமூன், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றி ஆராய மூவர் குழுவை ஜூன் 2010இல் நியமிக்கிறார். இந்தக் குழுவின் நியமனத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அக்குழுவை இழிவு படுத்தியும், அதை நாட்டுக்குள் இயங்கவிடாமலும் முழுமையாகச் செயல்பட விடாமலும் தடுத்ததையும் நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட நெருக்கடி களுக்கு மத்தியில் தான் அம்மூவர் குழு செப்டம்பர் 2010முதல் செயல்படத் தொடங்கி 8 மாதங்கள் ஆய்வு செய்து 12.04.2011இல் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இவற்றின் மையமான சில பகுதிகளையும் சாரமான செய்திகளையும் முதலில் இலங்கை அரசுக்குத் தெரிவித்து அதன் விளக்கம் அறியும் நோக்குடன் மனித உரிமை குழுவால் அனுப்பிவைக்கப்பட்ட அவ்வறிக்கை திட்டமிட்டே இலங்கை அரசால், இலங்கை அரசு ஆதரவு நாளேடுகளுக்குத் தரப்பட்டு வெளியிடப் பட்டது.இதன் நோக்கம், இந்த செய்திகளை வெளியிட்டு இலங்கை இன வெறிச் சக்திகளை ஐ.நா. மனித உரிமை அவைக்கு எதிராகத் தூண்டுவதும், மக்களை உசுப்பேற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஐநா மனித உரிமை அமைப்புக்கு ஒரு நெருக்கடியைத் தருவதும்தான்.

இந்நிலையில்தான் அதன் முழு அறிக்கையையும் 21.04.2011 அன்று உலகுக்கு வெளிப்படுத்த, ஐ.நா. மனித உரிமை அவை முடிவுசெய்தது. ஆனால் அதையும் இலங்கை தன் ஆதரவு நாடுகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுத்தி வைத்து 26.04.2011 அன்று வெளியிட வைத்தது. காரணம் 22 நல்ல வெள்ளி. 23க்கு அடுத்து 24 ஈஸ்டர் பண்டிகை. அதாவது இயேசு சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்ததற்கு இடைப்பட்ட மூன்று நாள்கள். இம் மூன்று நாள்களும் உலகின் பெரும் பகுதியும். இந்த விழாக்காலசடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும் மூழ்கி இருக்க அந்த நேரம், இந்த செய்திகள் வெளிவந்து உலக மக்கள் மத்தியில் எரிச்சலை சினத்தை ஊட்டாமல் இருக்கவே இலங்கை அரசு இந்தத் தாமதத்தைத் திட்டமிட்டு செயல் படுத்தியது..

இத்துடன் குழு அறிக்கை வெளியிடப்பட்ட ஏப்ரல் 26-க்கு அடுத்து வந்த இலங்கை மேதினப் பேரணிகளையும், பொதுக் கூட்டங்களையும் முழுக்க முழுக்க ஐ.நா. மனித உரிமை அவை வல்லுனர் குழுவின் அறிக்கைக்கு எதிராகத் திருப்பியது. பேருந்து நிலையங்கள், கடைத் தெருக்கள், மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளில் ஐ.நா. அறிக்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து இந்த அறிக்கையைக் கண்டித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கோரியும் கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதற்கு தொழிற்சங்கங்களையும் எதிர்க்கட்சிகளையும் வெகுவாகப் பயன்படுத்திக் கொண்டது. எனவே, இந்தப் பின்னணிகளைக் கவனத்தில் கொண்டே ஐ.நா. அறிக்கையின் செயல் விளைவுகளை நாம் நோக்க வேண்டியிருக்கிறது

அறிக்கையின் செயல் விளைவு

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றிய ஆய்வுக்கான வல்லுநர் குழு ஐ.நா. அவையின் அனுமதி பெற்று, அதாவது ஐ.நா.வின் பெரும்பான்மை நாடுகள் முடிவு செய்த தீர்மானத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட குழு அல்ல. இது உலகெங்கிலுமுள்ள மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புகள் எழுப்பிய கோரிக்கைகளின் நிர்ப்பந்தத்தில் பான்கிமூன் தன் அதிகார வரம்புக்குட்பட்டு, ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் என்கிற முறையில் நியமித்த குழு. இந்தக் குழுவை ஐ.நா. ஏற்கலாம். ஏற்காமலும் போக லாம். அதாவது இது ஐ.நா. தீர்மானத்தின் அடிப் படையில் நியமிக்கப்பட்ட குழு அல்ல. ஆகவே அதை ஏற்க முடியாது என்று நிராகரிக்கவும் செய்யலாம்.

2007இன் தொடங்கிய பான்கிமூனின் பதவிக் காலம் 2011 இறுதியாய் முடிவடைய இருக்கிறது. அவர் இரண் டாம் முறையும் இப்பொறுப்புக்கு முயற்சிக்கிறார் எனவும், இதற்கான ஐ.நா. அவை நாடுகளின் ஆதரவை அவர் கோரி வருகிறார் எனவும் பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் அவர் ஐ.நா.வில் தனக்கு ஆதரவு கோரும் நாடுகளின் விருப்பப் படியே நடந்து கொள்வார் என்பதும் பெரும்பான்மை நாடுகளின் விருப்பம் என்னவாக அமையும் என்பதும் நாம் ஊகிக்கக்கூடியதே.இந்த அடிப்படை யிலேயே தற்போது அவர் 2012 சனவரி தொடங்கி அடுத்த பதவிக் காலத்துக் குமான செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட் டிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க மனித உரிமை அமைப்பின் 2009 இலங்கைத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் நிலைப்பாட்டில் தற்போது பெருமளவு எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. இலங்கை தனக்கு நேரும் எந்த நெருக்கடியிலும் இந்தியா முழுமையாக உதவும், அந் நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் என்பதில் முழு நம்பிக் கையோடு இருக்கிறது. இந்தியாவின் நடவடிக்கைகளும் அவ்வாறே இருந்து வருகின்றன. இந்நிலையில் இலங் கைக்கு எந்த நெருக்கடியும் நேர இந்தியா விட்டுவிடாது. தான் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் உலக நாடுகளின் ஆதரவையும் இலங்கைக்கு சாதகமாக திருப்பும்.

மூவர் குழு அறிக்கையையட்டியும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றியும் அனைத்து நாட்டு அளவில் இவவளவு சர்ச்சைகள் நடைபெற்று வரும் நிலை யிலும் இந்தியா இது பற்றி எதுவும் வாய் திறவாது மௌனம் சாதிப்பதை வைத்து இதைப் புரிந்து கொள்ளலாம்

இவற்றுக்கு அப்பால், இலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைளை மாற்றக் கூடிய வகையிலோ, இலங்கைக்கான இந்திய உதவியைத் தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலோ, தமிழகத்தில் வலுவான எழுச்சிமிக்க அமைப்பு களோ கொந்தளிப்பு மிக்க போராட்டங்களோ இல்லாத நிலை, இந்திய அரசு கொள்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

அடிப்படைக் கோரிக்கை

ஆக, ஐ.நா. அறிக்கை செயலுக்கு வர இவ்வளவு பின்ன டைவுகள் இருக்கின்றன. ஒரு வேளை இவ்வளவு பின்னடை வுகளையும் மீறி ஐ.நா. அறிக்கை செயல் விளைவுக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும் அது இலங்கை அரசின் போர்க் குற்றங்களோடு நிற்காது. மாறாக போராளிகளின் போர்க் குற்றங்கள், அதாவது இளம் சிறார்களைப் படையில் சேர்த்தல், அப்பாவிப் பொது மக்களை மனித கேடயங் களாகப் பயன்படுத்தல் என போராளி அமைப்பின் இதுபோன்ற மனித உரிமை மீறல்களை - இதற்கெல்லாம் போதுமான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற போதிலும் இவற்றையும் சேர்த்தே, இதன் மீதும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பதாகவே ஐ.நா. மனித உரிமைக் குழுவின் அறிக்கை அமைவதாக முடியும்.

இப்படி இரு தரப்பு மீதும் நடவடிக்கை எடுத்தாலும், இந்த நடவடிக்கைகள் இலங்கை அரசை, அதன் இனவெறி நோக்கை ஒன்றும் மாற்றிவிடாது. இதனால் தமிழீழ மக்க ளுக்கும் ஒன்றும் நிவாரணம் கிட்டிவிடாது. தமிழீழ விடிய லுக்கும் இது எந்த வகையிலும் துணை புரியாது.

காரணம், முதலாவதாக இந்த அறிக்கை இலங்கை அரசையோ, ராஜபக்சேவையோ குற்றம் சாட்டப் போவ தில்லை . மாறாக ராணுவத் தையும், ராணுவ அதிகாரிகளை யும் அதாவது அரசின் ஆணைகளையும் மீறி ராணுவம் செயல்பட்டதாகவும் அத்து மீறியதாகவும், மனித உரிமை களைப் புறந்தள்ளி வன்கொடுமைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டுவதாகத்தான் அமையுமே தவிர ராஜபக்சேவை ஒன்றும் செய்யாது.

அப்படியே ராஜபக்சேவை குற்றம் சாட்டுவதாக அவருக்குத் தண்டனை வழங்குவதாக அமைவதானாலும், இதனால் இனவெறி அரசின் நிலைப்பாட்டில் மாற்றமோ, தமிழீழத் தாயகக் கோரிக்கைக்கான தீர்வோ கிட்டி விடப் போவதில்லை. இலங்கை இன வெறி அரசு, ஆளும் வர்க்கம், ராஜபக்சேவைப் பலி கொடுத்தேனும் அடுத்து வேறு நபரை உருவாக்கிக் கொண்டு தன் நிலைப்பாட்டைத் தொடரும். தன் இனவெறி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தன் இலக்கை நிறைவேற்றிக் கொள்ள முயலுமே தவிர அதில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முயலாது.

இப்போதே ராஜபக்சே இலங்கையை அந்நிய ஆதிக்கங் களுக்குத் தாரை வார்ப்பதாகக் கூறி அங்குள்ள புத்த பிக்குகள் ராஜபக்சே எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஒரு வேளை ராஜபக்சே உலக அரங்கில் அம்பலப்பட்டால் அவர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டால், அந்த இடத்துக்கு வேறு ஒருவர் வருவாரே தவிர, இலங்கையின் அரசில் அதன் கொள்கையில் மாற்றம் வராது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் சொல்வதை வைத்து ராஜ பக்«க்ஷ மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, தண்டிக்கக் கூடாது என்றோ அதற்காகப் போராடக் கூடாது என்றோ கூறுவதாக இதைக் கொச்சைப் படுத்தக்கூடாது. அல்லது ஐ.நா. அறிக் கையை அதன் செயல் விளைவுகளை அவ நம்பிக்கையோடு நோக்குவதாகவோ கருதக் கூடாது. நம்பிக்கை என்பது புறச் சூழல்களின் அடிப்படையில் இருக்க வேண்டுமே யல்லாது வெறும் கற்பனையில் அக விருப்பங்களை மட்டுமே கொண்டதாக அமைந்துவிடக் கூடாது என்பதே வேண்டுகோள்

ஐ.நா. அமைப்பு அறிக்கையின் அடிப்படையில் ராஜ பக்சே, தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ,இந்தக் கோரிக்கை தமிழீழ விடுதலை ஆதரவு நிலைக்கு அப்பால் பரந்து பட்ட அனைத்து மனித நேய சக்திகளையும் திரட்டும் என்பதிலோ, இது தமிழீழச் சிக்கல் பற்றிய விழிப்புணர்வு தமிழக மக்கள் மத்தியில் தணியாமல் பாது காக்கப் பயன்படும் என்பதிலோ யாருக்கும் மாற் றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்தத் தண் டனை மட்டுமே தமிழீழ மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா, தனித் தமிழீழத்தை மலரச் செய்து விடுமா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இதற்காக தவறு செய்தவர்களைத் தண்டிக்கக் கூடாது என்பது அர்த்தமல்ல. அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்கிற அதே வேளை அத்தோடு நின்று விடாது. அதுவே இலக்காக ஓய்ந்துவிடாது, தமிழீழ மக்களின் கோரிக்கைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆறுதல் மருந்து

இந்த அடிப்படையில் ஐ.நா. அறிக்கை, ராஜபக்சே போர்க் குற்றவாளி, என்ற குற்றச்சாட்டுகள் அது சார்ந்த நடவடிக்கைகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டாலும், அதன் மூலம் தமிழீழ மக்களின் கோரிக்கைகளும் உரிமைகளும் பாதுகாக்கப்பட இவை எந்த அளவு துணை புரியும் என்ப தையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த நோக்கில் சிந்திக்க நமக்கு பல புதிய உண்மைகள் புலப்படும். ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளும் புரிய வரும்.

இரண்டாண்டுகளுக்கு முன் தமிழீழத்தில் இறுதிக் கட்டப் போரில் தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் அத்து மீறல்களால் கடும் காயப்பட்டி ருக்கும் தமிழக, தமிழீழ மக்களுக்கு, மனித உரிமை ஆர்வலர்களுக்கு - அவர்களது மனத்துக்கு இதமாக ஒத்தடம் கொடுப்பது போன்ற நடவடிக்கை இந்த ஐ.நா. அறிக்கை. அதாவது காயங்களுக்கான காரணங்களை நீக்குவதல்ல. மாறாக காயங்களுக்கு ஒத்தடம் கொடுப்பது, மாயையான சுகமளிப்பது போன்றது இந்த அறிக்கை.

தற்போது இந்த அறிக்கை முன் வைக்கப்பட்டு, இதன் மீது நம் கவனம் குவிக்கப்படுவதால், இதன்மீது நடவடிக்கை எடு என நம் செயல்பாடுகள் முடுக்கப்பட்டு, கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், போராட்டம் முதலான வற்றை நடத்த விட்டு, தமிழீழ மக்களின் அடிப்படைக் கோரிக்கை களை மறக்கச் செய்வது, அல்லது பலவீனப் படுத்துவது, பின்னுக்குத் தள்ளுவது.

தொழிற்சங்க, அரசு ஊழிய, ஆசிரிய அமைப்புகள் சில அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து, போராட் டம் தொடங்கும். போராட்டம் போதுமான வலுவோடு இல்லாதிருந்தால் அரசு வன்முறை கொண்டு அதை அடக்க முயலும்.பலரைக் கைது செய்யும். வழக்கு போடும். சிறையி லடைக்கும். பலரை இடைநீக்கம் செய்யும். இப்படி ஒரு நிலை வரும்போது போராடும் இயக்கங்களின் அடிப் படைக் கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்படும். உடன டித் தேவையாக கைது செய்தவர்களை விடுதலை செய், இடைநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் அமர்த்து, வழக்குகளைத் திரும்பப் பெறு என்பதான கோரிக்கைகள் முன்னுக்கு வரும். கிட்டத்தட்ட அதுபோன்ற ஒரு நிலை தான் தற்போது நிலவுவதும்.

 தமிழீழ விடுதலைப் போர் குரூரமாக ஒடுக்கப்பட்ட நிலையில், தமிழீழ மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு, முள் வேலி முகாம்களில் அடைக்கப் பட்டுள்ள மக்களுக்கு மறு வாழ்வு அளி என்பதான கோரிக்கைகள் தற்போது முன் வந்துள்ளன. இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கான ஓர் ஈர்ப்பு மையம்தான் ஐ.நா. அறிக்கை.

எனவே ஆதிக்கச் சக்திகளின் இப்படிப்பட்ட நோக்கங்களைப் புரிந்து இவற்றையும் கவனத்தில் கொண்டு, நாம் மேற்கண்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் அதே வேளை அடிப்படைக் கோரிக்கைகளையும் மறந்து விடாது அது சார்ந்த விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டுவதும் மக்களையும் விழிப்போடு இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டுவதும் மிகவும் முக்கியம்.

இத்துடன் இன்னொன்றையும் இந்தத் தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 1983 ஜூலை இனப் படுகொலை தொடங்கி, இன்று வரையான இந்த 27 ஆண்டுகளில் தமிழீழ விடுதலைக்கும், அம்மக்களுக்கும் ஆதரவாக நாம் நடத்தாத போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள், மறியல்கள், மனித சங்கிலிகள் இல்லை. ஆனால் எதுவுமே கடைசி காலத்தில் அம்மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே ஏன்?உச்சபட்சப் போரின்போது தமிழகத் தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தமிழீழ மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் வெடித்தும், பதினெட்டு பேருக்கு மேல் தீக்குளித்தும் இந்த உணர்வுகளை ஒருங்கு குவித்து, இந்தத் தணலைப் பாதுகாத்து அதை முன் கொண்டு சென்று இந்திய இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி தந்து இலங்கையில் போர் நிறுத்தம் செய்யவோ, போராளிகளைக் காப்பாற்றவோ இயலாமல் போனது ஏன்?

இப்படி பல கேள்விகளை எழுப்பி இது தொடர்பாக சிந்திக்க பலவற்றிற்கும் நமக்கு விடை கிடைக்கும். அந்த விடை அனைத்திற்கும் காரணம் தமிழீழ மக்களுக்கு ஆதர வாக சோதனைகளைச் சந்திக்கும் திராணியோடு போராடு கிற வலிமை மிக்க அமைப்போ தலைவர்களோ தமிழ் நாட்டில் இல்லாமல் போனதுதான் என்பது தெரியவரும்.

தமிழக அரசியல்

தில்லி காங்கிரஸ் சிங்கள அரசுக்கு அனைத்து உதவி களையும் செய்து போரை முன்னின்று நடத்தியது. தமிழக கருணாநிதியின் தன்னலவாத குடும்ப அரசு அதற்குத் துணை போனது. சரி, அதற்கு மாற்றாக நாம் என்ன செய் தோம்? என்ன போராட்டங்கள் நடத்தினோம்? தில்லி, தமிழக அரசுகளுக்கு என்ன நெருக்கடி தந்தோம்? கருணா நிதியால் நடத்தமுடியாத எந்தப் போராட்டத்தை நாம் நடத் தினோம். தமிழீழ மக்களுக்கு ஆதரவாக நாம் நடத்திய அனைத்து விதப் போராட்டங்களையும் அவரும் நடத்தினார். வேண்டு மானால் அவர் போலியாக நடத்தினார். நாம் உண்மையாக நடத்தினோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.சரி, நாம் உண்மையாக நடத்திய போராட்டம் மட்டும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? எதுவுமில்லையே. குஜ்ஜார் மக்கள் போராடுகிறார்கள். தெலுங்கான மக்கள் போராடு கிறார்கள். விளைவு ஏற்படுகிறது. ஆனால் தமிழக மக்கள் போராடுகிறார்கள். எந்த விளைவுமே ஏற்படவில்லை தமிழக மக்கள் போராட்டங்களைப் பற்றி தில்லி ஆட்சியாளர்கள் அக்கறைப் பட்டுக் கொள்வதே இல்லை என்றால் என்ன காரணம்?

நம்முடைய போராட்டம் எந்த செயல் விளைவையும் ஏற்படுத்த வாய்க்காமல் தமிழகத்தையே கொந்தளிக்கச் செய்யவோ தில்லிக்கு நெருக்கடி கொடுக்கவோ இயலாமல் மிகவும் சாதுவாக வெறும் அடையாள பூர்வமான போராட் டங்களாக மட்டுமே இருக்கின்றன. இதனால் இது எந்த செயல் விளைவையும் ஏற்படுத்த வாய்க்காமல் போராடும் மக்களுக்கு வெறும் இதம் சுகம் அளிப்பதாக மட்டுமே அமைகின்றன. அதாவது இவை மன ரீதியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வெறும் பராக்கு காட்டுவதாகவே அமைகின்றன.

தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டங்கள் மட்டு மல்ல, தமிழக உரிமைகள் சார்ந்த போராட்டங்களிலும், இதே நிலைதான் நிலவி வருகின்றன. இதனால்தான் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத் தீவு, கண்ணகி கோட்டம், தமிழக மீனவர் பிரச்சினை, தமிழ்வழிக் கல்வி முதலான எண்ணற்ற பிரச்சினைகளில் 25, 30 ஆண்டுகளுக்கு முன் நாம் என்ன கோரிக்கை வைத்தோமோ, அதில் சிறிதளவும் முன்னேற்றம் இல்லாமல் அதே கோரிக்கை களுக்காகவே இன்னமும் போராடிக்கிற நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

எதிலும் இரண்டிலொன்று பார்த்து விடுவது என்கிற தீவிரம் இல்லை. முனைப்பு இல்லை. வெறும் சடங்கு போல் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு, அந்தந்த நேரத் தேவைக்கு என்று அது அதற்கு ஒரு போராட்டம். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நம் கோரிக்கைகள் நிறைவேறுவது, வெல் வது எப்போது? நம் தமிழ்ச் சமுகம் உய்வடைவதெப்போது? இதே நிலைதான் தமிழீழ ஆதரவுப் போராட்டத்திலும் வெளிப்பட்டு வருகிறது. இது தற்போது ஐ.நா. அறிக்கை சார்ந்து மையம் கொண்டிருக்கிறது. மையம் கொள்ள வைக்கப் பட்டிருக்கிறது.

சரி, ஐ.நா. அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு கோடி கையெழுத்து வாங்கி அனுப்புவதாக, தமிழகம் தழுவி பல ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதாகவே கொள் வோம். இது ஐ.நாவை என்ன செய்துவிடும். இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றாமல், ஐ.நா. அவையில் என்ன மாற்றம் ஏற்பட்டு விடும்? எந்த மாற்றமும் நிகழாது. அப்படியே நிகழவதாலும் அதன் வழி தமிழீழத்துக்கு எநத விடுதலையும் கிட்டியும் விடாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற, அதை நிர்ப்பந்தப் படுத்தி வழிக்குக் கொண்டுவர எனன செய்யலாம் என்பதை யோசித்து அதற்கேற்ப நாம் செயல் திட்டங்களை வகுத்து திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். தமிழகத்தின் அனைத்து சனநாயகச் சக்திகளும் கட்சி வேறுபாடு அமைப்பு வேறுபாடு இன்றி ஒன்றுபட்டு தமிழகமே கொந்தளிக்கும் வகையில் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்த வேண்டும்.

குறிப்பு: தற்போதுதான் பான் கி மூன் மூவர் குழு அறிக்கையை ஐநா அவைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று செய்தி