மே 07 2011 அன்று சென்னை லயோலா கல்லூரியில் Save Tamils அமைப்பு நடத்திய “ஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புவிசார் அரசியல் நெருப்பாற்றில் ஈழ விடுதலைப் போராட்டம்” கருத்தரங்கில் கலந்து கொண்ட திரு.பால் நியூமென் (விரிவுரையாளர், அரசியல் துறை பெங்களூரு பல்கலைக்கழகம்) ஆற்றிய உரையின் வரிவடிவம்.
மே 2009 அன்று முடிந்த போரில் மொத்தம் 1,300 பேர் இறந்தார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் இலங்கை அரசால் கூறப்பட்டது. மேலும் இந்தப் போரில் பொதுமக்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத ”Zero Tolerance Method”-ஐ உபயோகப்படுத்தியதாகவும் கூறியது. ஆனால் ஐ.நாவின் அப்போதைய அறிக்கை 7,000 பொதுமக்கள் இறந்ததாகக் கூறியது. பிரிட்டன், பிரெஞ்ச் ஊடகங்கள் 20,000 பொதுமக்கள் இறந்ததாகக் கூறின. போர்க் காலகட்டத்தில் ஐ.நாவின் பிரதிநிதியாக இலங்கையில் இருந்த கார்டன் வைசு 40,000 பொது மக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டதாக கூறினார். 70,000 பொதுமக்கள் இறந்ததாக அல்ஜசீரா தொலைக்காட்சி கூறியது.
இந்தப் போர் எந்தவித சாட்சியமும் இன்றி நடைபெற்ற ஒரு போராகும். பன்னாட்டு அழுத்தத்தின் காரணமாக 23 மே 2009 அன்று இலங்கை சென்ற ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இலங்கை அதிபருடன் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் போரில் ஈடுபட்ட இரு பிரிவுகளும் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க ஒரு குழு நிறுவப்படும் என்று கூறியிருந்தார். இலங்கை அதிபர் இராசபக்சேவின் ஒப்பதலுடனே இந்த போர் விசாரணைக் குழு அமைப்பது பற்றிய அறிக்கை பான்.கீ.மூனால் வெளியிடப்பட்டது. இப்பொழுது இந்தக் குழு ஒரு நேர்மையற்ற குழு என்று இராசபக்சே கூறுவது வேடிக்கையான ஒன்றாகும்.
15 சனவரி 2010 அன்று டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும் இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவை என்றும் மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை கூறியது.
2010 மார்ச் மாதம் லூயிசு ஆர்ப்பர் தலைமையிலான பன்னாட்டு நெருக்கடி நிலைக்குழுமம்(Internation Crisis Group) தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் போர்க்குற்றம் தொடர்பான ஒரு விசாரணை தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மனித உரிமை கண்காணிப்பகம், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், பன்னாட்டு மன்னிப்பு சபை (Amnesty International) எல்லாம் தங்களிடம் உள்ள போர்க்குற்றம் தொடர்பான சாட்சியங்களை ஒவ்வொன்றாக வெளியிட மீண்டும் ஐ.நாவின் மேல் அழுத்தம் அதிகமானது. இதனால் சூன் 3, 2010 அன்று மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா பொதுச்செயலர் பான்.கி.மூன் நியமித்தார். இதை அடுத்து இலங்கையில் அமைச்சர் பதவியில் இருக்கும் விமல் வீரவன்சா கொழும்பில் உள்ள ஐ.நா தூதரகத்தைச் சுற்றிவளைத்து உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கினார். இதனால் மீண்டும் ஒரு தேக்க நிலை உருவானது.
செப்டம்பர் மாதத்தில் மீண்டும் தன் மீதான அழுத்தம் அதிகரிக்கவே அந்த மூன்று நபர் குழுவிற்கான பணிப்பாணையை வெளியிட்டு குழு தன் வேலையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார் பான் கீ மூன்.
இந்தக்குழுவில் இந்தோனிசியாவைச் சேர்ந்த மார்சுகி தாருசுமேன் என்பவரும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யேசுமின் சூக்கா என்பவரும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிக்சிகன் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் சிடீபன் என்பவரும் இருந்தார்கள். இதில் மார்சுகி தாருசுமேன் ஏற்கனவே இந்தோனேசிய அதிபர் சுகர்த்தோ ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த படுகொலைகளை விசாரிக்கும் குழுவில் பணியாற்றியவர். மேலும் இந்தோனேசிய தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவருமாவார். யேசுமின் சூக்கா என்பவர் மனித உரிமை ஆணைய அறக்கட்டளையில் தலைமை அதிகாரி. மேலும் இவர் தென்னாப்பிரிக்க உண்மை அறியும் குழுவிலும், நல்லிணக்க ஆணையத்திலும் பணியாற்றியவர். சிடீபன் என்பவர் சட்ட நிபுணர் ஆவார். இந்தக் குழு முறைப்படி ஆசிய கண்டத்திலிருந்து ஒருவரையும், ஆப்பிரிக்க கணடத்திலிருந்து ஒருவரையும், அமெரிக்க கணடத்திலிருந்து ஒருவரையும் கொண்டது. மேலும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் முன்னர் கூறியுள்ளது போலவே இதற்கு முன்னர் இது போன்ற விசாரணைக்குழுக்களில் பங்காற்றியவர்கள்.
இந்தக் குழுவிற்கான பணியாணை:
செப்டம்பர் 2008லிருந்து மே 2009 வரை நடைபெற்ற போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல், போர்க்குற்றம் போன்றவற்றை விசாரித்து ஐ.நா பொதுச்செயலருக்கு அறிவுரை கூறுவது. இதன் அடிப்படையில் 16 செப்டம்பர் 2010 அன்று தனது பணியைத் தொடங்கிய இந்தக் குழு 31 மார்ச் 2011 அன்று 196 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை தயாரித்தது.
இந்த விசாரணையில் பயன்படுத்திய முறையில் (Methodology)
1)சாட்சியங்களின் நேரடியான கையெழுத்துப் பிரதிகள்.
2)சாட்சிகளின் செவ்விகள் (Interview’s)
3)பல்வேறு மனித உரிமைக் குழுக்கள் அளித்த அறிக்கைகள்
4)போர்க்குற்றம் தொடர்பான காணொளி காட்சிகள் (Videos)
5) செய்மதிப் புகைப்படங்கள் (Satelite photos)
6) நாளிதழ்களில் வெளியாகி இருந்த ஆதாரப்பூர்வமான தகவல்கள்.
இதனடிப்படையிலேயே இந்த மூவர் குழு விசாரணை நடத்தியது.
இந்தக் குழு போரில் இரண்டு முக்கிய திருப்புமுனை நிகழ்வுகள் ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றது.
1) இந்தியாவின் தலையீடும், இந்திய கடல்பகுதியில் இந்தியா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி புலிகளைக் கண்காணித்து வந்ததும், செய்மதி மூலம் கிடைக்கும் தகவல்களை இலங்கைக்கு கொடுத்து உதவியது மிக முக்கியமான ஒன்றாகும்.
2) பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கை இந்த போரைச் செய்ததால் உலக நாடுகளின் தலையீடுகள் இல்லாமல் இருந்தது.
இலங்கை அரசின் இறுதிகட்டப்போருக்கான தயாரிப்பு:
1) தீவிரவாதத்தை தடுக்கும் சட்டம் (Prevention of terror act)
2) அவசரகாலச் சட்டம் (emergency terror act).இவ்விரு சட்டங்களின் மூலமாகவும் எவர் ஒருவரையில் கைது செய்து 36 மாதங்கள் எந்த ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலும் சிறையில் அடைக்க முடியும்.
3) அரச அதிபரின் அதிகாரத்தின் மூலமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த 300 குடும்ப உறுப்பினர்கள் முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள் (உதாரணம். கோத்தபயா இராசபக்சே பாதுகாப்பு படை செயலராகவும், பசில் இராசபக்சே அதிபரின் ஆலோசகராவும் நியமிக்கப்பட்டது).
4) போர் நிறுத்த கால கட்டத்தில் 66 மனித உரிமை உறுப்பினர்கள் அரச படையால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
5) செப் 8, 2008 அன்று நாங்கள் யாருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத காரணத்தினால் போர் நடைபெறும் பகுதியில் இருந்த அனைத்து மனித உரிமை அமைப்புகளும் வன்னிப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அரசு அறிக்கை வெளியிட்டது.
……….
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசு மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. அவை
1)அப்பாவி பொதுமக்களைக் கொன்றது
2)வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்தவர்களை கொன்றது.
3)கைது செய்த போர்க்குற்றவாளிகளைக் கொன்றது.
4)உணவு, மருத்துவ வசதிகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி மக்களைக் கொன்றது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
……………………
மேலும் இலங்கை அரசு பன்னாட்டு போர் விதிகளை மீறியுள்ளதாகவும் ஐ.நா நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது. அவை
1)இலங்கை அரசு பன்னாட்டு மனித உரிமை விதிகளையும் மீறியுள்ளது. சனவரி 29 வரை ஐ.நா அதிகாரிகள் இருவர் போர்ப்பகுதியில் இருந்தார்கள். அவர்கள் இறுதியாக போர்ப்பகுதியை விட்டு வெளியேறும் பொழுது நிலமெங்கும் மக்களின் பிணங்கள் இருந்ததால் வான் நோக்கி பார்த்தவாறே நடந்து வந்ததாகவும், ஆனால் மரங்களில் எல்லாம் வெடித்துச் சிதறிய குழந்தைகளின் உடல் பாகங்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.
2) போரில்லாப் பகுதி என்று கூறிய இடத்தில் வந்து குவிந்த மக்களைக் கொன்றது
3) பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்கள் பாவித்தது.
4) மருத்துவமனையின் கழிவறை வாயில் முதற்கொண்டு நோயாளிகளால் நிரம்பிய மருத்துவமனைகளின் மீது குண்டுவீசியது. இறுதிக் காலங்களில் மயக்கமருந்து கொடுக்கப்படாமல் 40,000 அறுவை சிகிச்சைகள் அங்கு நடைபெற்றதாகவும், கையுறைகள் இல்லாததால் மருத்துவர்கள் வெறும் கைகளினாலேயே அறுவை சிகிச்சைகளை செய்ததாகவும், மேலும் “blade” இல்லாததால் ஒருமுறை பயன்படுத்திய “blade”ஐயே மறுமுறை அவர்கள் உபயோகப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவர்கள் தங்களுக்கு மயக்க மருந்துகளும், சில முக்கியமான மருந்துகளும் தேவை என அரசிடம் கோரிக்கை வைக்க அரசோ இவர்களுக்கு தலைவலிக்கு கொடுக்கப்படும் சில மாத்திரைகளை மட்டுமே கொடுத்தது. மேலும் மனிதநேய அடிப்படையில் பணிபுரிந்த மூன்று மருத்துவர்களையும் இலங்கை அரசு கைது செய்தது. இவை எல்லாம் பன்னாட்டு மனித உரிமைகளை மீறிய செயல்களாகும் என கூறுகின்றது.
மே 13, 2009 அன்று ஐ.நா போர்ப் பகுதியில் 1,00,000 மக்கள் மட்டுமே இருப்பதாக கூறியது. இந்திய பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்சி வெறும் 70,000 மக்கள் மட்டுமே போர்ப்பகுதியில் இருப்பதாக கூறினார். இன்னும் ஒரு படி மேலே போய் இலங்கை அரசோ வெறும் 10,000 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறியது. ஆனால் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கமோ காயமடைந்து இருந்த 14,000 பொதுமக்களை தனது கப்பல் மூலம் இலங்கையின் மற்றொரு பகுதிக்கு சிகிச்சைக்காக கூட்டிச்சென்றதாகக் கூறியது. இவர்களில் 5,000 பொதுமக்கள் காலையோ, கையையோ இழந்தவர்களாவர். மேலும் இவர்களை எல்லாம் “போரில்லாப்பகுதி” என்று அரசு அறிவித்த பகுதியில் இருந்தே கொண்டு சென்றோம் என செஞ்சிலுவைச் சங்கம் கூறியது. உலக உணவு திட்ட அலுவலகம் போர்ப்பகுதியில் 4,20,000 பொதுமக்கள் இருக்கின்றார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்லவும் அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் அரசு 1,00,000 மக்களுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்வதற்கு மட்டுமே அனுமதி அளித்தது. அதாவது ஒருவருக்கு தேவையான உணவு நான்கு பேருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பசியால் இறந்தார்கள்.
……
இலங்கை அரசு இறையாண்மைக் கொண்ட ஒரு அரசாக இருந்தாலும் தீவிரவாதிகளை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பது அவர்களது நோக்கத்தை கூறுகின்றது என நிபுணர் குழு கூறுகின்றது. பன்னாட்டு மனித உரிமை விதிகளில் கையெழுத்திட்டுள்ள அரசு அதை மீறுவது சட்டப்படி தவறு. இது போன்ற விதிகளில் கையெழுத்திடவில்லை எனும்போதிலும் விடுதலைப்புலிகள் மனித உரிமை விதிகளை மதித்து நடந்திருக்கவேண்டும் என்றும் அந்த அறிக்கை கோருகின்றது. பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை அரசு உருவாக்கத் தவறிவிட்டது என அவ்வறிக்கை கூறுகின்றது.
ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்பட்ட பின்பு கண்துடைப்புக்காக அமைக்கப்பட்ட இலங்கையின் போர்க்குற்ற விசாரணை, நல்லிணக்க ஆணையத்தைப் பற்றியும் ஐ.நா நிபுணர் குழு கூறியுள்ளது.
1)10 நபர்கள் கொண்ட இந்தக் குழுவில் பகுதி பேர் முன்னாள் இராணுவத்தினர். இதில் ஒரு பெண் கூட இல்லை.
2) உண்மை நிலை என்ன என்பதை அவர்கள் சரியாக விசாரணை செய்யவே இல்லை.
3) சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவே இல்லை.
4) போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆணையத்தை நோக்கி வரவில்லை.
5) உணர்வுப்பூர்வமான, பாலின, உளவியல் அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்படவில்லை. (எப்படி ஒரு பெண் 10 ஆண்கள் இருக்கும் அறையில் வந்து தான் கற்பழிக்கப்பட்டதைக் கூற முடியும்?)
6) இந்தக் குழுவிற்கென்று நிரந்தரமாக அலுவலகம் எதுவும் கிடையாது. இவர்கள் இந்த போர் நடைபெறாத கொழும்பில் இருந்து இயங்கினார்கள். போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு 3,00,000 மக்கள் அடைக்கப்பட்டிருந்த இடப்பெயர்வு முகாம் பகுதியான மன்னாரில் கூட இவர்கள் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தினார்கள்.
7) இந்த விசாரணைக் குழுவை மேற்பார்வையிடுவதற்கோ, கண்காணிப்பதற்கோ எந்த ஒரு பன்னாட்டு ஊடகத்திற்கும் அனுமதி வழங்கப்படவே இல்லை.
குழுவின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியதே (இந்த போரில் பங்கு கொண்ட இராணுவத்தினரே இந்தக் குழுக்களிலும் இருந்தார்கள். இவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள்?)
…..
மேலும் ஐ.நா நிபுணர் குழு இலங்கையில் உள்ள நீதித்துறையின் கட்டமைப்பு பற்றியும் கூறியுள்ளது.
1)சரியான கட்டமைப்பு இல்லாமல் பெயருக்கு இயங்கும் நீதித்துறை (தீவிரவாத தடுப்பு சட்டம், அவசர காலச் சட்டம் போன்ற அரசு ஆதிக்க சட்டங்களைக் கொண்டதே அந்த நீதித்துறை)
2) இது போன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு நீதிமன்றத்திற்கு சென்று முறையிட முடியும்?
சிங்கள பொதுமக்களிடம் நாம் இந்தப் போரை வெற்றிக்கொண்டு விட்டோம் என்ற நிலை இருக்கிறது. அவர்கள் போர் நடைபெற்ற இடங்களை ஒரு சுற்றுலா போல சென்று பார்த்து வருகின்றார்கள். போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊடகத்தடையும், அவசர காலச் சட்டமும் இன்னும் அமலில் இருக்கின்றன. தமிழர்கள் அங்கு போரில் தோல்வி அடைந்த மனிதர்களாகவே இலங்கையில் பார்க்கப்படுகின்றார்கள்.
………….
ஐ.நா நிபுணர் குழுவின் கோரிக்கைகள்:
1) போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் இவை பற்றி ஒரு சுயேட்சையான பன்னாட்டு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும்.
2) தற்பொழுதும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும்.
3) விசாரணை பன்னாட்டு சட்ட விதிகளின்படி நடைபெற வேண்டும்.
4) ஐ.நாவும் இந்த பிரச்சனையில் சில தவறுகளைச் செய்துள்ளது.
………………………
வரிவடிவம்: ப.நற்றமிழன்