இன்றைய நமது நிலைப்பாடுகள்:

தனித் தமிழீழம் என்பது மட்டுமே ஈழத் தமிழ் மக்களின் துயரற்ற, கண்ணியமான‌ எதிர்கால வாழ்விற்கான நிரந்தரத் தீர்வு. இந்த கருத்தைப் பரந்த அளவில் அனைத்து மக்களிடமும் கடந்த சில நாட்களில் நாம் கொண்டு சென்றிருக்கிறோம் – வெற்றிகரமாக.

ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனின் முன்பாக மார்ச் 21 ஆம் தேதியன்று ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வுரிமை குறித்து அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவரவுள்ளது. இந்தத் தீர்மானம் ஒன்றுபட்ட இலங்கை என்ற நியாயமற்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே அதனை நாம் நிராகரித்துள்ளோம்.

அமெரிக்க அரசினைப் போலவே இந்திய அரசும், தமிழக அரசும், தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளும், பல்வேறு ஊடகங்களும் ஒன்றுபட்ட இலங்கை என்பதன் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றன. எனவே அவற்றையும் தவறானவை என்று நாம் நிராகரித்துள்ளோம்.

நான்காம் ஈழப்போரின் போதும், அதன் முன்னரும், பின்பும் இலங்கையின் சிங்கள அரசால் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனை விசாரிக்கக் கால வரம்பிற்குட்பட்ட சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம் என்பது நமது கோரிக்கை. நமது இந்தக் கோரிக்கையை இன்று தமிழக அரசும், தி.மு.க போன்ற அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஐ.நா.மனித உரிமைக் கமிஷன் முன்பாகக் கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க அரசின் தீர்மானமும், மத்திய அரசின் நிலைப்பாடும் சர்வதேச விசாரணை தேவையில்லை என்கின்றன. இனப்படுகொலை குறித்த விசாரணையை இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசே நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று அவை கூறி வருகின்றன. 2009 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த திரு.சரத் டி சில்வா அவர்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட முள்வேலி முகாமைப் பார்வையிட்ட போது கூறிய உண்மையை அவர்கள் ஏனோ மறந்து போய்விட்டார்கள். “இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம்; இந்த நாட்டின் நீதி அமைப்பில் அவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை” என்பதுவே திரு.சில்வாவின் கூற்று.

ஐ.நா.சபை மற்றும் அமெரிக்க அரசின் மேற்பார்வையில் 2011 ஜனவரி 9-15 தேதிகளில் சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து செல்வதனைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தெற்கு சூடானைச் சேர்ந்த 98.83% மக்கள் பிரிந்து செல்வதுதான் தீர்வு என்று வாக்களித்தனர். 2011 ஜூலை 9 ஆம் தேதியன்று தெற்கு சூடான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதுபோலவே 1993 ஏப்ரலில் எத்தியோப்பியாவில் இருந்து எரிட்ரியா தனி நாடாகப் பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து சென்றது. இந்த முன்னுதாரணங்களின் அடிப்படையிலேயே இலங்கையில் இருந்து தமிழ் ஈழம் பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பை ஈழத் தமிழ் மக்களிடம் சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கையின் மீதான தமது கருத்துக்களை இன்றுவரை தமிழக அரசும், தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக முன்வைக்க மறுத்து வருகின்றன.

இன்றைய சூழ்நிலை:

கல்லூரிகளுக்கும், விடுதிகளுக்கும் விடுமுறை அறிவித்து விட்டால் நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்ற தமிழக அரசின் கணக்கு தவறாகியுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்ட பின்னரே நமது போராட்டம் பரந்து விரிந்துள்ளது.

ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனில் மார்ச் 21 ஆம் தேதியன்று அமெரிக்க அரசின் தீர்மானத்தின் மீது நடக்க உள்ள வாக்கெடுப்பிற்குப் பிறகு நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்பதே அரசு மற்றும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நமது போராட்டத்தினைக் கண்டு தமிழக அரசியல் கட்சிகள் பொதுவான அச்சத்தைக் கொண்டிருக்கின்றன. நமது கோரிக்கைகளுக்கு உடன்படாது போனால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமக்குப் பின்னடைவுகள் ஏற்படலாமோ என்ற அடிப்படை அச்சம் அவற்றிற்கு இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் கூட, அவை தனி ஈழம் தொடர்பான பொது வாக்கெடுப்பு குறித்த தமது நிலைப்பாட்டை இன்றளவும் மாற்றத் தயாராயில்லை. என்ன காரணத்திற்காகவோ, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினை முதலில் ஆதரித்ததைப் போலவே நமது போராட்டத்திற்கும் தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. மார்ச் 21-ற்குப் பிறகு இந்த நிலைப்பாடு தொடருமா என்பது தெரியாது.

காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் இடது கம்யூனிஸ்டு போன்ற தேசியக் கட்சிகளும் நமது கோரிக்கைகளை இன்றளவும் உதாசீனப்படுத்தி வருகின்றன. இந்து பத்திரிகையோ நமது நிலைப்பாடு தவறானது என்று தலையங்கம் எழுதியுள்ளது.

ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்க அரசிற்கு இன்றளவும் நாம் ஒரு பொருட்டாக இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை.

இனப்படுகொலைக்கான விசாரணை குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலேயே இலங்கைக் கடற்படையானது தமிழக மீனவர்களை அடித்து இழுத்து சென்றிருக்கிறது. இது குறித்து மத்திய அரசானது வழக்கம் போலவே எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை.

எனவே, சில அடிப்படைக் கேள்விகளை நாம் இங்கு நம்மிடமே எழுப்ப வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
லட்சக் கணக்கில் பெருந்திரளாக இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தினை நம்மால் எவ்வளவு காலத்திற்குத் தொடர முடியும்?

நாம் முன் வைத்துள்ள கோரிக்கைகளை பரந்த அளவில் பிறருக்குத் தெரிவிப்பதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். ஆனால், அவற்றை நம்மால் நிறைவேற்றிட முடியுமா? போராடுவதற்கான சூழ்நிலையை அரசும், கல்வி நிறுவனங்களும் அடைத்திடும் பட்சத்தில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிட நாம் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச நடவடிக்கைகள் யாவை?

அரசுகளின் செயல்பாடுகளும், நாமும்

இலங்கையின் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மத்திய அரசு துரிதமாகப் பெற்றுத் தரவேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழக சட்டசபை 2011 ஜூன் 8 ஆம் தேதியன்று இயற்றியது. மேலும், போர்க் குற்றங்களை செய்த குற்றவாளிகளின் பெயர்களை ஐ.நா.சபையை வெளியிட வைக்க வேண்டும் என்றும் அது மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு இன்றளவும் கண்டு கொள்ளவேயில்லை. மாறாக, இலங்கை அரசுக்கு உதவிடும் பல்வேறு நடவடிக்கைகளை அது பின்னர் மேற்கொண்டது.

மாநில மக்களவையின் தீர்மானத்திற்கே செவி சாய்க்காத மத்திய அரசு மாணவர்களான நமது (கால வரம்பிற்குட்பட்ட) போராட்டத்திற்கு எவ்வாறு செவி சாய்க்கும்?

2009 ஜனவரி 29 அன்று நெருப்பிட்டு வீர மரணமடைந்த முத்துக்குமாருக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியானது அரசு, கட்சிகள் மற்றும் ஊடகங்களின் தந்திரத்தால் நீர்த்துப்போன நிலையை அடைய நேரிட்டதைப் போல நமது போராட்டமும் நீர்த்துப் போகும் நிலையை எட்டாது என்பதற்கு உத்திரவாதம் உண்டா?

இதுபோன்ற தடைகளையும், இடர்பாடுகளையும் மீறி நம்மால் நமது கோரிக்கைகளை வெற்றி பெறச் செய்ய முடியுமா?

முடியும் என்றுதான் நம்மால் கருத முடிகிறது.

வெற்றிக்கான வழி என்ன?

அமெரிக்க அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையில் உள்ள இன்றைய உறவைப் புரிந்து கொண்டால்தான் இதற்கான வழியினைக் கண்டறிய முடியும்.

2005 ஜூலை 18 ஆம் தேதியன்று இந்தியாவும் அமெரிக்காவும் 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை முன் வைத்தன. இந்தியாவில் இயங்கிவந்த அணு மின் நிலையங்களை ராணுவ மற்றும் மின்சார மின் நிலையங்களாக வகைப்படுத்த இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதன் பிறகு வந்த காலகட்டத்தில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்துமே அமெரிக்க அரசால் இயக்கப்படுபவையோ என்ற அளவிற்கு சந்தேகத்தை எழுப்பின. 1987 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கையின் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் இந்திய அரசின் அனுமதியின்றி பிற நாடுகளின் இராணுவங்கள் உபயோகிக்க இலங்கை அரசு அனுமதி வழங்க முடியாது. ஆனால் 2007 மார்ச் 5 ஆம் தேதியன்று இலங்கை அரசும் அமெரிக்க அரசும் இதற்காக ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதுகுறித்து இந்திய இராணுவ நிபுணர்கள் கவலை தெரிவித்தும் கூட ராஜீவ் வழி வந்த காங்கிரஸ் அரசு இதனைக் கண்டு கொள்ளவேயில்லை. இலங்கையின் மீது தனக்கிருந்த ஆளுமையை அமெரிக்க அரசிடம் முழுமையாக விட்டுக் கொடுப்பதில் அதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. இதுவே இலங்கையில் இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையில் ஏற்பட்ட கூட்டின் துவக்கம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பாராளுமன்ற ஒப்புதலை வாங்க 2008 ஜுலை 10 ஆம் தேதியன்று காங்கிரஸ் அரசு மேற்கொண்ட வரலாறு காணாத கேலிக்கூத்துகள் அமெரிக்க அரசினை மத்திய அரசு எவ்வாறு கருதுகிறது என்பதனைத் தெளிவு படுத்தியது. இந்திய மக்களின் நலனைக் காப்பதை விட அமெரிக்க அரசின் நலன்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுவே தனது கடமை என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்பதுபோல இதன்பின்னர் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஆக, அமெரிக்க அரசின் ஆளுமையின் கீழ் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இயங்குகிறதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.

2009 மே 13 ஆம் தேதியன்று பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடந்தது. மத்தியில் காங்கிரசுக்குப் பதில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திடும் பட்சத்தில் இதுகாறும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் காங்கிரஸ் அரசால் விட்டுக் கொடுக்கப்பட்ட இலங்கையின் மீதான தனது ஆளுமையை பா.ஜ.க. ஒருவேளை கோரினால் என்ன செய்வது? அப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக பா.ஜ.க.வை முன்கூட்டியே எச்சரிப்பதற்காக மே 15 ஆம் தேதியன்று அமெரிக்கக் கப்பற்படைத் தளபதி அட்மிரல் கீட்டிங் இந்தியா வந்தார். “இலங்கைக்குள் எவரும் வரலாம்; போகலாம். சீனா வரக் கூடாது என்று இந்தியா சொல்லக்கூடாது. அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகளை அது தனியாகவே சமாளித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் உதவி கிடைக்காது” என்று எச்சரித்தார். மே 17 ஆம் தேதியன்று மீண்டும் காங்கிரசே ஆட்சியைப் பிடித்ததனால் அந்த எச்சரிக்கைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

எனவேதான் அமெரிக்க அரசின் முழு ஆளுமையின் கீழ்தான் மத்திய அரசு இயங்கி வருகிறது என்று நாம் கருத வேண்டியுள்ளது.

அப்படிப்பட்ட மத்திய அரசிடம்தான் அமெரிக்க அரசின் தீர்மானத்தை மாற்றி அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவரும் மனு கொடுத்துள்ளார்கள். இந்த மனு வழக்கம்போல கண்டு கொள்ளப்பட மாட்டாது என்பது உறுதி.

எனவே, இப்படிப்பட்ட மத்திய அரசிடம் நமது கோரிக்கைகளை முன் வைப்பது என்பது நமது நேரத்தை விரையமாக்கும் செயலாக இருக்குமேயொழிய பயனுள்ள ஒன்றாக இருக்க முடியாது.

எனவே, நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசிடம் வைப்பது மட்டுமே நமக்குள்ள ஒரே வழியாக உள்ளது.

மத்திய அரசே நம்மைக் கண்டுகொள்ளாதபோது அமெரிக்க அரசா நம்மைக் கண்டுகொள்ளப் போகிறது என்ற கேள்வி எழும்.

மத்திய அரசையாவது தேர்தலின்போது மாற்றிட முடியும். அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை நமது பெருந்திரள் போராட்டங்களாலும், அர்ப்பணிப்புகளாலும் எவ்வாறு மாற்ற முடியும்? ஈராக் மீதான படையெடுப்பைக் கண்டித்து அமெரிக்காவில் நடந்த பெருந்திரள் மக்கள் போராட்டங்களையே கண்டு கொள்ளாத அமெரிக்க அரசா நமது போராட்டங்களைக் கண்டு கொள்ளப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கானது; அது தொடர்பான அமெரிக்க தீர்மானம் பற்றியது. எனவே அதனை எரிக்கின்ற, பாடையில் ஏற்றி புதைக்கின்ற சிம்பாலிக் போராட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். ஆனால், எரிக்கப்படுவது ஈழ மக்களின் வாழ்வுரிமைக்கான அமெரிக்கத் தீர்மானமாக இருக்கும்போது அதனை அமெரிக்கா கண்டுகொள்ளப் போவதில்லை. ஏனென்றால் இதில் அமெரிக்காவிற்கு இழக்க ஒன்றுமில்லை.

இந்தத் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக இந்தியாவைக் கட்டிப் போட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தக நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை நாம் எதிர்க்கும் பட்சத்தில் அமெரிக்காவிற்கு அது இழப்புகளை – அதாவது சந்தை இழப்புகளை – கொண்டு வருவதாக அமையும்.

“தெற்கு சூடானை சூடானில் இருந்து பிரிப்பதற்கான பொது வாக்கெடுப்பினை நடத்தியதைப் போல தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவோம்; தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரித்து தண்டனை அளிப்போம்” என்ற நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தனது பழைய தீர்மானத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றி அமைக்காவிட்டால் மாற்றி அமைக்கும் வரை நமது வாழ்விலிருந்து அமெரிக்க நிறுவனங்களைத் துடைத்து எறிவோம்.

கின்லே, அக்குவாபினா, ஸ்ப்ரைட், பெப்சி, கோக்கோ-கோலா, லேஸ் சிப்ஸ், ஃபோர்ட், செவர்லே கார்கள், வால்மார்ட் போன்றவற்றைப் புறக்கணிப்போம்.

அதுபோலவே நமது நாட்டையும், நமது வளங்களையும் கட்டிப்போட முனையும் அனைத்து அமெரிக்க ஒப்பந்தங்களுக்கும் பாடை கட்டுவோம்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான தீர்வு என்ற தீர்மானத்திற்குப் பாடை கட்டும்போது கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்க அரசானது இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தங்கள். கின் லே தண்ணீர் போன்ற பொருட்கள் ஆகியவற்றிற்குப் பாடை கட்டும்போது அதிர்ச்சி அடையும்.

இந்தப் போராட்டங்கள் அனைத்தையும் நாம் நம் கல்லூரிகளுக்குச் சென்றுகொண்டே மேற்கொள்ள முடியும் என்பதால், இவ்வகைப் போராட்டத்தினை மார்ச் 21 –ற்குப் பிறகும் கூட நம்மால் செவ்வனே நடத்திட முடியும்.

இந்த நடவடிக்கைகளே நம்மைச் சுற்றிப் படர்ந்துள்ள இருளை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ள முதல் நடவடிக்கைகளாம்.

இந்த நடவடிக்கைகளையே இனி நாம் கை கொள்வோம்.

நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

- கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள்

Pin It