பா.ஜ.கட்சி பாராளுமன்ற தேர்தலில் வென்று மோடி பிரதமர் பதவி ஏற்றதும், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ‘எனது அரசு ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரு அடி முன்னேறுவார்கள்’ என்று முழங்கினார்.

மோடி அரசு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஓராண்டு உருண்டோடிவிட்டது. மோடி அரசு எத்தனையோ அடிகளை முன்னெடுத்து வைத்துள்ளது. நம்முன் உள்ள கேள்வி ஒன்றுதான்! மோடி கூறியது போல் மோடி அரசு வைக்கும் ஒவ்வொரு அடியை ஒட்டியும் நாட்டு மக்கள் ஒவ்வொரு அடியாக முன்னேறு கிறார்களா? அல்லது பெருமுதலாளிகள் பாய்ச்சலாக முன்னேறுகிறார்களா என்பது தான்!

உண்மையை கண்டறிய மோடி ஆட்சி இதுவரை போட்டுள்ள திட்டங்களை அலசுவது ஒன்றே ஒரே வழியாகும்.

மோடி ஆட்சி - தொழிலாளர்களுக்கு

தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களான  தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்), சட்டம், 1961 தொழிற்சாலை சட்டம், 1948 மற்றும் தொழிலாளர் சட்டம், 1988 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு.

ஏகாதிபத்திய முதலாளிகளும், இந்திய பிராந்திய பெரு முதலாளிகளும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள 44 -தொழிலாளர் நலச் சட்டங்களில்’ திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும், சில சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மோடி அரசு கீழ்வரும் திருத்தங்களை மேற்கொண்டது.

வாரத்தில் 50- மணி நேரம் பணி நேரம் என்பதை 100- மணி நேரமாக உயர்த்துவதற்கு புதிய சட்டத் திருத்தம் வகை செய்கிறது. அதாவது தினமும் 8 மணி நேர வேலை என்பதை 12-&15-மணி நேர வேலையை கட்டாயமாக்குவதற்கு வகை செய்கிறது.

ஒரு தொழிற்சாலையில் 19 -தொழிலாளர்கள் வேலை செய்தால் தொழிற்சாலை சட்டமும், தொழிலாளர்கள் சட்டமும் செல்லுபடி ஆகும் என்பதை 40- தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.

தொழிற்சாலை ஆய்வாளர்கள் முன்னறி விப்பின்றி தொழிலகங்களை ஆய்வு செய்வது கூடாது என்றும், தொழில் நிறுவன நிர்வாகங்கள் தொழிற்சாலை சட்டங்கள் கடைப்பிடிப்பது குறித்து நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்று (திருடன் கையிலேயே சாவியை கொடுத்துள்ளது) மோடி அரசு அறிவித்துள்ளது. பல்வேறு முதன்மை தொழிற்சாலைகளிலேயே தொழிற்சாலை சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதியை கடைப்பிடிக்கப்படாததால் ஏற்படும் விபத்துகளில் தொழிலாளர்கள் குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கும், உயிரிழப்பிற்கும், உடல் உறுப்பு இழப்பிற்கும் உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இருக்கின்ற கொஞ்ச நஞ்சம் ஆய்வு செய்வதையும் தொழிற்சாலை ஆய்வாளர் ஆய்வு ரத்து அறிவிப்பின் மூலம் மோடி அரசு தடுக்க நினைக்கிறது.

அப்ரண்டீஸ்களுக்கு ‘பழகுநர் தொழிற் பயிற்சி அளிப்பது’  தொழிற்சாலைகளுக்கு சட்டப்படிக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து ‘காண்டிராக்ட் முறையை’ நிரந்தரமாக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அனைவரையும் அப்ரண்டீஸ்களாக்கி ‘தொழிலாளிகளாக நிரந்தரமாக்க’ வேண்டியதில்லை.

ஏற்கனவே “சிறப்பு பொருளாதார மண்டலங்களில்” தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழிற்சாலை சட்டம், தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு அளித்ததன் விளைவை ஸ்ரீபெரும் புதூரில் நோக்கியா தொழிற்சாலையின் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் நிலையில் “மேக் இன் இந்தியா” என்ற மோடியின் ஆரவாரங்களுக்கு பின்னால் மேற்கூறிய தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சனநாயகமற்ற சர்வாதிகார சட்டத் திருத்தங்கள் கார்ப்பரேட் முதலாளிகள் தொழிலாளர் உழைப்பை, இரத்தத்தை உறிஞ்சி கொழுக்க வழிவகை செய்கின்றன.

*மேற்கூறிய சர்வாதிகார நடவடிக் கைகளோடு நின்றுவிடாமல் ‘‘தொழிலாளர் வைப்பு நிதியையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்க வழிவகை செய்கிறார்’’ மோடி, அதாவது தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து 7- லட்சம் கோடி ரூபாயை எடுத்து ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கப் போவதால் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாய்’ அறிவித்துள்ளார் மோடி. இத்திட்டத்தால் ஏழைகளுக்கு வீடு கிடைக்கிறதோ, இல்லையோ ரியல் எஸ்டேட் பகாசுர கார்ப்ரேட் கம்பெனிகள், இரும்பு, சிமெண்ட் உற்பத்தி செய்யும் பெரும் முதலாளிகள் கொழுத்த இலாபம் அடையப் போகிறார்கள் என்பதும் முதலாளிகளிடம் தொழிலாளர் வைப்பு நிதியை வாரி கொடுப்பதன் மூலம் பெருமளவிலான ஊழல் பணத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாரிச் சுருட்டப் போகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மோடி ஆட்சி & விவசாயிகளுக்கு...

பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்திய துணைக் கண்டம் முழுக்க காலனி நாடாக இருந்தபோது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் 117 -ஆண்டு களுக்கு முன் ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம்’ கொண்டுவரப்பட்டு விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டது. காலனி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இக்காலனிய சட்டம் இன்றுவரை தொடர்கிறது.

காங்கிரசு அரசு பெருமளவு ஆட்சியாண்ட 1947- தொடங்கி 2004- முடிய தனியாகவோ அல்லது தனியாருடன் கூட்டு சேர்ந்து நடைமுறைப்படுத்திய திட்டங்களுக்கு ஏறக்குறைய 2.5-கோடி எக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு 6-கோடிக்கும் மேற்பட்ட உழவர்கள், பழங்குடிகள் தமது வழ்விடங்களிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 6 -கோடி பேரில் 40% பேர் பழங்குடிகள், 20% பேர் தலித் மக்கள் ஆவர். 6-கோடி பேரில் 18% பேருக்குத்தான் பெயரளவுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5-கோடி பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக் கப்பட்டுள்ளனர்.

கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு உழவர்கள், பழங்குடிகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கிய காங்கிரசு கட்சிதான் இன்று மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பதாக அரசியல் நாடகமாடுகிறது. தேர்தல் தோல்விகளை சரிசெய்யவே விவசாயிகளின் தோழன் என்ற நாடகமாகும். ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதைதான் காங்கிரசு கட்சியின் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமாகும்.

காங்கிரசு கூட்டணி ஆட்சி 2013-ம் ஆண்டில் நிரைவேற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் அரசு மற்றும் தனியார் இணைந்து செயற்படுத்தும் திட்டங்கள் என்றால் அத்தனியார் நிறுவனங்கள் 70% நில உரிமையாளர்களிடம் சம்மதத்தை பெற வேண்டும்; தனியார் மட்டுமே செயற்படுத்தும் திட்டம் என்றால் 80% நில உரிமையாளர்களின் ஒப்புதலை பெற வேண்டும்; விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் விளைவால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்களை மதிப்பீடு செய்து அறிக்கையை அளிக்க வேண்டும்; நகர்ப்புற நிலமாக இருந்தால் அரசு வழிக்காட்டும் மதிப்பீட்டுக்கு மேல் 2- மடங்கும், கிராமப்புறமாக இருந்தால் 4 -மடங்கும் விலையாக நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றாவது சில கவர்ச்சிகரமாக சலுகைகள் அளிக்கப் பட்டிருந்தன, எனினும் தேசிய நெடுஞ்சாலைகள், இரயில் பாதைகள், அணுசக்தி திட்டங்கள், இராணுவப் பயன்பாடு உள்ளிட்ட 13- வகையான அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால், நில உரிமை யாளர்களின் சம்மதத்தை பெற வேண்டிய தில்லை என்ற உழவர்களுக்கு எதிரான சர்வாதிகாரமான விதிவிலக்குகளையும் அச்சட்டத்திலேலே வைத்திருந்தது.

 விவசாயிகளின் சம்மதத்தைப் பெறுவதும் சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பதும்தான் காங்கிரசு ஆட்சி கொண்டு வந்த நிலம் கையகப் படுத்துவதன் சட்டத்தின் உயிர்நாடியாக கூறப்பட்டது. அந்த உயிர் நாடியையும் திருத்தங்களின் மூலம் ஒழித்துக்கட்டிவிட்டது. மோடி அரசானது பாதுகாப்பு, பெருந்தொழிற் பேட்டைகள், வீட்டு வசதி திட்டங்கள், கிராமப்புற அடிக்கட்டுமான திட்டங்கள் போன்ற இந்த ஐந்து பிரிவுகளின் கீழ் வரும் திட்டங்களுக்கு அது அரசு திட்டமாக இருந்தாலும், முழுக்க முழுக்க தனியார் திட்டமாக இருந்தாலும் நில உரிமையாளர்களின் சம்மதத்தை பெற வேண்டிய அவசியமும் இல்லை; சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்க வேண்டிய தேவையும் இல்லை என மோடி அரசு கொண்டு வந்திருக்கும் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் வரையறுக்கிறது.

எந்த ஒரு திட்டத்தையும் இந்த ஐந்து பிரிவுக்குள் அடக்கிவிட முடியும் என்பதால் இனி, நிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரித்து பெரு முதலாளிகளுக்கு வாரிவழங்குவதற்கு மோடி அரசிற்கு எந்த தடையும் இருக்காது.

தனி நபர்கள் கட்டும் கக்கூசைக்கூட சமூக அடிக்கட்டுமான திட்டம் என வரையறுத்துவிட முடியும் என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக் கொள்ளையை விவசாயிகளால் சட்டப்படி தடுத்து நிறுத்த முடியாது.

பெரிய செலவு எதுவும் இல்லாமல், எதிர்ப்பும் இல்லாமல் சிறு விவசாயிகளை அவர்களின் உயிருக்கு உயிரான  நிலத்தி லிருந்து அப்புறப்படுத்தி அவர்களது நிலங் களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கும் பெரு முதலாளிகளின் அடியாளாக தாதாவாக மோடி அரசு அவதாரம் எடுத்து இருக்கிறது.

விவசாய இடுபொருட்களின் விலையை பெருமுதலாளிகள் அவர்கள் விருப்பம்  போல் விலையேற்ற அனுமதித்துள்ள அரசு, விவசாயி விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பறித்துள்ளது. ஏற்கனவே விலை நிர்ணய உரிமையை பறித்த அரசு இன்று விவசாயிகள் உயிரினும் மேலாக நேசிக்கும் தம் நிலத்தின் மீதே உரிமையற்றவர்களாக மோடி அரசால் மாற்றப்பட்டுளளனர்.

மேலும் விவசாயிகள் பயன்படுத்தும் உரத்திற்கு அளித்து வந்த மானியத்தில் 10% வெட்டியுள்ளது மோடி அரசு.

மோடி ஆட்சியானது விவசாயிகள் மீதான தாக்குதலின் தொடர்ச்சியாக விவசாயத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மானியத்தை வெட்டி சுருக்கிவிட்டது. ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விவசாயக் கடனுக்கான 9% வட்டியில் 2% வட்டி மானியமாக கழிக்கப்பட்டு வந்தது.

ஆனால் மோடி அரசானது விவசாயக் கடனுக்கான வட்டியை 11% உயர்த்தி உள்ளதோடு, முழுக் கடன் மற்றும் 11% வட்டியையும் உரிய காலத்தில் கட்டினால் மட்டுமே 2% மானியம் வட்டித் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் (வட்டியை தள்ளுபடி செய்யாமல்) நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் 11% வட்டியை கண்டிப்பாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மோடி ஆட்சி & ஏழை, நடுத்தர மக்களுக்கு...

பட்ஜெட்டில் மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகளான சேவை வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து 23,383 கோடி ரூபாயை கூடுதலாக வாரிச் சுருட்டத் திட்டமிட்டுள்ளது மோடி ஆட்சி. அதே வேளையில் - பெரு முதலாளிகளுக்கு சுங்க வரிச்சலுகை, கலால் வரிச் சலுகை மற்றும் கார்ப்பரேட் வரிச் சலுகைகளால் 2015-&16 ஆண்டு மைய அரசிற்கு ஏற்படும் வருமான இழப்பு 5,48,451 கோடி ரூபாய் ஆகும்.

* கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு (100 -நாள் வேலை) ஒதுக்கப் பட்டுள்ள நிதி 34,899 கோடி ரூபாய் மட்டுமே. அதே வேளையில் - பெரும் பணக்காரர்கள் தங்க, வைர நகைகளை இறக்குமதி செய்து கொள்ள அளிக்கப்பட்டுள்ள சுங்க வரி சலுகையோ 75,000 கோடி ஆகும்.

*  உணவு, உரம் மற்றும் எரிபொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தில் 10%-வரை வெட்டியுள்ளது மோடி அரசு.

* சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 60,270 கோடி ரூபாய். 30,000 கோடி ரூபாயை ஒரே சொடுக்கில் இந்த பட்ஜெட்டில் வெட்டி இச்சுமையை மக்கள் மீது ஏற்றி வைத்துவிட்டது.

* பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 1,963 கோடியிலிருந்து 1,767 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

* சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கணிசமாக கைவைத்திருக்கிறது மோடி அரசு. பெண்கள் மற்றும் குழந்தை நலத்திட்டங்களுக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18,588 கோடி ரூபாய். இந்த பட்ஜெட்டில் 10,382 கோடி ரூபாயாக குறைத்துள்ள மோடி அரசுதான் & பெண்கள் வளர்ச்சிக்காக பாடுபடுவது எங்கள் ஆட்சிதான், என்று வாய்ச்சவடால் அடிக்கின்றது.

* வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் இரு நூறு ரூபாய் வழங்கும் தேசிய சமூக உதவி திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதெல்லாம் அதன் பலன் மக்களுக்கு கிடைக்காமல் செய்த மோடி ஆட்சி, பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தி கொண்டே வந்தது. பட்ஜெட்டுக்கு முன் சில மாதங்களில் நான்கு முறை அடுத்தடுத்து கலால் வரியை கூட்டியுள்ளது. 2012-ஆம் ஆண்டில் ரூபாய் 9.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான உற்பத்தி வரி இப்பொழுது ரூபாய் 16.096 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் மட்டுமே மோடி அரசிற்கு கிடைத்துள்ள கூடுதல் வருமானம் 18,000 கோடி ரூபாயாகும்.

பட்ஜெட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது நான்கு ரூபாய் அளவிற்கு சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் வெளியான அன்றிரவே ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் & டீசல் விலை உயர்வு, வரி உயர்வு இவற்றின் மூலம் மட்டுமே மக்களிடமிருந்து வாரிச் சுருட்டியதால் மோடி அரசிற்கு கிடைத்துள்ள கூடுதல் வருவாய் 50,000 கோடி ரூபாய் ஆகும்.

மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் 1 லிட்டர் ரூபாய் 58.90க்கு விற்கும் பொழுது, பணக்காரர்கள் பயன்படுத்தும் விமானத்திற்கு உபயோகிக்கப்படும் பெட்ரோல் 1 லிட்டர் ரூபாய் 52.42 ஆக குறைத்து பணக்காரர் களுக்கான தனது விசுவாசத்தை காட்டியுள்ளது மோடி அரசு. பணக்காரர்கள் பயன்படுத்தும் விமான பெட்ரோலுக்கு வழங்கப்படும் இச்சலுகை பல கோடி ஏழை,- நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கு அளிக்கப்படவில்லை.

* சேவை வரியை 12.36% ஆக உயர்த்தி மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிய மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக வருமான வரியை 4 -ஆண்டுகளில் 30% லிருந்து 25% என குறைக்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்து தன் முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப் படுத்தியுள்ளது.

* வீடமைப்பு, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு, பழங்குடியினருக்கான திட்டங்கள், பட்டியல் இனத்தவருக்கான நிதி ஒதுக்கீடு என சமூக நலத் திட்டங்களுக்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் பெரும் அளவில் குறைக்கப் பட்டிருக்கின்றது.

* உழைக்கும் மக்களின், நடுத்தர வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசின் பொறுப்பை தட்டிக் கழித்துள்ள மோடி அரசு, அதனை காப்பீடு நிறுவனங்களின் கையில் ஒப்படைத்து, காப்பீட்டு வருவாயை, இலாபத்தை உத்தரவாதப் படுத்தியுள்ளது-அதே வேளையில்-அடிக் கட்டுமான திட்டங்களை காண்டிராக்ட் எடுத்து செய்யும் முதலாளிகள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை களைவதை அரசின் பொறுப்பில் ஒப்படைத்து மக்களின் சமூகப் பாதுகாப்பை புறக்கணித்துள்ள மோடி அரசு முதலாளிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்து இரயில்வே பட்ஜெட்டை அறிவிப்பதற்கு முன்பே ரயில்வே கட்டணங்களை  10% உயர்த்தி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர வழிவகை செய்துள்ளது.

* இரயில் நிலைய நடைமேடை கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்தி இரயில் பயணிகளை வழியனுப்ப வரும் மக்கள் மனதில் புளியை கரைத்துள்ள மோடி அரசு, கூட்டம் அதிகம் சேரும் நேரங்களில் நடைமேடை கட்டணத்தை அதிகாரிகள் மனம் போன போக்கில் ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கி முடிந்தவரை மக்கள் பணத்தை கொள்ளை யடிக்க வழிவகை செய்துள்ளது. இதே போல் ‘பிரிமியம் ரயில் திட்டம்’ என்ற ஒன்றை அறிவித்து அதன் விளைவாய் பிரிமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க, நெருங்க அதில் பயணிக்க டிக்கட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப (கூட்ட நெரிசலுக்கேற்ப) ரயில்வே கட்டணத்தை பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகும். அதாவது சினிமா தியேட்டரில் கூட்டத்திற்கு ஏற்ப பிளாக் டிக்கட் விற்கும் திருட்டு கும்பல் பிளாக் டிக்கெட்டின் விலையை பன்மடங்கு ஏற்றுவது போல் மோடி திருட்டு கும்பலும் பிரிமியம் ரயில் கட்டணத்தை ஏற்றி மக்களிடம் சட்டரீதியாக திருட வழிவகை செய்துள்ளது.

* ஏழைகளின் அரை வயிற்று கஞ்சியிலும் மண்ணை அள்ளிப் போட உணவு மானியத்தை குறைக்கும் சதியை அரங்கேற்ற தொடங்கி யுள்ளது. உணவு மானியத்தை குறைக்கும் வழிகளை ஆராய்வதற்காக மோடி அரசால் நியமிக்கப்பட்ட குழு (சாந்தகுமார் அறிக்கை) ‘இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைத்து நாட்டின் 67 சதவீத மக்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டப்படி உணவுப் பொருட்களை வழங்குவதற்கு பதிலாக 40 சதவீத பேருக்கு மட்டும் உணவு பொருட்களை வழங்கி உணவு மானியத்தை வெகுவாக குறைத்து விடலாம் என ஏழை மக்களுக்கு எதிராக ஆலோசனை வழங்கியுள்ளது. மோடி அரசும் இந்த ஆலோசனையை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் ரேசன் கடை அரிசியையே நம்பி வாழும் பல கோடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

மோடி ஆட்சி & மீனவர்களுக்கு...

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக மீனவர்களின் வாழ்வா தாரத்தை பறிக்கும் விதமாக மோடி அரசானது நீலப்புரட்சியை அறிவித்துள்ளது. ‘மீனா குமாரி குழு அறிக்கையானது’ இதன்படி கடல் பகுதியில் தனியானதொரு பொருளாதார மண்டலம் ((Exclusive Economic Zone-EEZ))  ) அமைக்கப்படும்; 12 கடல் மைல்கள் தொலைவுக்கு அப்பால் மீனவர்கள் செல்ல முடியாது. 200 முதல் 500 அடி ஆழம் உள்ள ஆழ்க்கடல் மீன் பிடி பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக (Buffer Zone) அறிவிக்கப்படும். இந்த ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமம் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை இருக்கிறது. ஆனால் ஆழ்கடலில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மீன் பிடிக்க தடையின்றி அனுமதிக்கப்படும்.

இந்திய கடலோரப் பகுதி 8042கி.மீ நீளம் கொண்டது. இதில் 5 இலட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் மீன்வளம் நிறைத்து கிடக்கின்றது. பெரு முதலாளிகளுக்கு கடன் வளத்தை தாரை வார்க்கக் கூடாது என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை காலில் போட்டு மிதித்த மோடி அரசு 270 பன்னாட்டு ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதனால் 8 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேச பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் மீன் வர்த்தகத் தொழிலை நம்பி உள்ள ஐந்து கோடி மக்களின் வாழ்வுரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகமயமாக்கல் கொள்கை மூலம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் கடல் வளத்தையும் உலகமயமாக்கி கொள்ளையடிக்க வழிவகை செய்து வருகின்றனர். படிப்படியாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மீன் பிடிப்பதற்கு எந்த எல்லையும் இல்லாமல் போகும். மீனா குமாரி அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது. அடுத்து இதைவிட மோசமான திட்டத்தை நாம் எதிர் பார்க்கலாம்.

 ஆனால் நமது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் கைதாவது தவிர்க்க முடியாதது என்று தமிழக மீனவ பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார் பா.ஜ.க வின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். இதன்மூலம் தமிழக மீனவர்களை இலங்கை சிங்கள வெறி சிறிசேனா அரசு தைரியமாக சுடவும் துன்புறுத்தவும், கைது செய்யவும் வழி கோரியுள்ளார். “தமிழக மீனவர்களை எங்கள் ஆட்சிதான் காப்பாற்றும்” என்று தம்பட்டம் அடித்த பா.ஜ.க-வின் லட்சணம் இதுதான்.

மோடி ஆட்சி & மருத்துவத் துறைக்கு...

மோடி அரசானது மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை 39,238 கோடியிலிருந்து 33,150 கோடி ரூபாயாக குறைத்துள்ளது.

கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களை ஊக்குவிக்கின்ற விதமாக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது மோடி அரசு. இதன் மூலம் சுகாதாரத்தை அரசு பேண வேண்டும் என்கிற பொறுப்பினை அரசு கைகழுவி விட்டது.

“தேசிய மருத்துவ விலை நிர்ணய அமைப்பின்” விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை மோடி அரசு பறித்துவிட்டதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை மிக கடுமையாக 14 மடங்காக உயர்ந்துள்ளது.

புற்று நோய்க்கான ‘கியாவக்’ என்ற மருந்தின் விலை 8,500 ரூபாயிலிருந்து 1,08,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இச்செயல் உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும். ரத்த கொதிப் பிற்கான ‘பிளேவிக்ஸ்’ மாத்திரை 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்ந் துள்ளது. வெறிநாய்க்கடிக்கான மருந்தின் விலை 2,670 ரூபாயிலிருந்து 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மருந்து தயாரிக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதியாக தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த 108 மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

அதிகாரபூர்வ தகவலின்படி இந்திய துணைக்கண்டம் முழுக்க 4.1 கோடி பேர் நீரிழிவு நோயினால் அவதியுறுகின்றனர். 4 கோடியே 7 லட்சம் பேர் இதய நோயினால் துயருறுகின்றனர்.

11 லட்சம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும் மேல் ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

பல கோடி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நோயினால் அவதியுறும் நிலையில் மோடி அரசின் மருத்துவத்துறை கொள்கை அறிவிப்பது என்னவென்றால் ஏழை, நடுத்தர மக்கள் நோய் வந்தால் உயிர் வாழ உரிமையில்லை என்பதுதான்.- அதே வேளையில் பெரும் மருத்துவ நிறுவனங்கள் ஏழை, நடுத்தர மக்களின் உயிரைக் குடித்து கொள்ளையடித்து கொழுக்க வேண்டும் என்பதுதான்.

மோடி ஆட்சி தனது பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான நிதியை ரூ 35,163 கோடியிலிருந்து ரூ29,653 கோடியாக குறைத்துள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிதி ரூ 16,000 கோடியிலிருந்து 8,000 கோடியாக குறைத்துள்ளது.

மருந்து விலைகளின் மீதான கட்டுப்பாட்டை நீக்கியதை தொடர்ந்து, டொரண்டா லூர்ப்பின், சன் பார்மா, ரான் பாக்ஸி போன்ற மருந்து கம்பெனிகளின் லாப விகிதம் 0.7 லிருந்து 1.5 விழுக்காடு கூடியுள்ளது.

மோடி ஆட்சி & கல்வித் துறைக்கு...

மாணவர்களின் கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை அனைத்து மட்டங்களிலும் குறைக்கப் பட்டிருக்கின்றது. குறிப்பாக அனைவருக்கும் கல்வி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை சென்ற ஆண்டு ரூ 28.25 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ 22 கோடியாக குறைக்கப் பட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை ஒப்பிடும்பொழுது 22% நிதி வெட்டப் பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக படித்தவர்களில் 1% பேர்கூட ஆராய்ச்சிக் கல்விக்கு செல்லாத சூழ்நிலையில் ஆராய்ச்சிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை 25% குறைக்கப் பட்டுள்ளது. மோடி அரசு கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3.8% மட்டுமே.

மோடி ஆட்சி & முதலாளிகளுக்கு...

காப்பீடு துறையில் 49-% அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டதிருத்தம், புதிய ரயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனில் தனியார் முதலீட்டை ரயில்வே துறையில் அனுமதிக்க வேண்டும் என்ற முடிவு, நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம், தொழில் பழகுநர் சட்டத் திருத்தம், நிலக்கரி சுரங்கங் களையும் இரும்பு, பாக்சைட் போன்ற அரிய வகை தாதுப் பொருட்களையும் ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தம் என்று அடுத்தடுத்து அவசரச் சட்டங்களை அறிவித்து நாட்டின் கனிம வளங்களை, விவசாய நிலங்களை, வனப்பகுதிகளை, பொதுமக்களின் சேமிப்பை, தொழிலாளர்களின் உழைப்பை இந்தியப் பெரு முதலாளிகளும், ஏகாதிபத்திய முதலாளிகளும் தடையின்றி கொள்ளையடிப் பதற்கான ஏற்பாடுகளை மோடி அரசு வேக வேகமாக செயற்படுத்துகிறது.

எதிர்வரும் மார்ச்சுக்குள் 43,500-கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்று நிதிதிரட்டும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதில் முதலாளிகளுக்கு இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்ப்பது மற்றும் அதில் கிடைக்கும் பணத்தை பொது முதலீட்டுக்கு (முதலாளிகளின் நலனுக்கு) திருப்பி விடுவதற்கான வேலையை மோடி துடிப்புடன் செயற்படுத்த தொடங்கி விட்டார்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெரும் வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் 5, 89,285 கோடிகள் வரிச்சலுகையாக வழங்கப்படுகின்றது. சென்ற ஆண்டு இது 5,49,984 கோடியாகும். 2015-&16 ஆம் நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 5,12,628 கோடியாகும்.

பெரு முதலாளிகளுக்கான வரிச்சலுகை 5,89,285 கோடி. முதலாளிகளுக்கு வரிச்சலுகையை வாரி வழங்கியதால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரூபாய் 5.56,000 கோடிகளை கடன் வாங்க போகிறது மோடி அரசு.

பன்னாட்டு முதலாளிகளுக்காக “பொது வரி தவிர்ப்பு உடன்படிக்கைகள்” மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப்பட்டிருக் கின்றது. அந்நிய நிறுவன முதலீட்டாளர் களுக்கு விதிக்கப்பட்டு கொண்டிருந்த “குறைந்தபட்ச மாற்று வரியும்” விலக்கி கொள்ளப் பட்டிருக்கின்றது.

30% என்று இருந்த பெரு நிறுவனங்கள் மீதான வரி 25% என்று குறைக்கப்படவுள்ளது.

அனைத்து திட்டங்களும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே!

மோடி அரசால் “சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்ட மசோதா-&2015” கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டால் ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ள அனைவரும் புதிய ஓட்டுநர் உரிமங்களை எடுக்க வேண்டும். புதிய ஓட்டுநர் உரிமம் பயோ மெட்ரிக் முறையில் இருக்கும். தற்போது எல்.எல்.ஆர். எடுத்த ஒரு மாதத்தில் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் எல்.எல்.ஆர். எடுத்த 9-மாதங்கள் கழித்துத்தான் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். ஓட்டுநர் தேர்வை தற்போது ஆர்.டி.ஓ. நடத்திவருகிறது. ஆர்.டி.ஓ-வை முற்றிலும் ஒழித்து தனியார் நிறுவனங்கள் (கார்ப்பரேட் முதலாளிகளே) ஓட்டுநர் தேர்வு செய்யும் முறை கொண்டுவரப்படும்.

நடத்துனர் என்ற பணியாளர்களே இனி தேவை இல்லை என்று இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பல லட்சக் கணக்கான நடத்துனர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும்.

போக்குவரத்து வழித்தடங்களுக்கான பெர்மிட்களை எடுக்க உலகளாவிய டெண்டர் விடப்படும், அதிக விலை கேட்பவர்களுக்கே போக்குவரத்து (பஸ்) தடத்திற்கான பெர்மிட் வழங்கும் உரிமை அளிக்கப்படும். தற்போது மாநில அரசுகளே தனியார் பஸ், அரசு பஸ் இரண்டுக்கும் கட்டணங்களை நிர்ணயிக்கிறது. இனி டெண்டர் எடுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளே அரசு பஸ், தனியார் பஸ்சுக்கு கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். இதனால் “பொதுப் போக்குவரத்து” முழுவதும் பெரு முதலாளிகளின் வசம் போய்விடும்.

இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் “மோட்டார் சைக்கிள் உட்பட எந்தவொரு வாகனமாக இருந்தாலும், அதில் சிறிய, சாதாரண பழுது ஏற்பட்டாலும் கம்பெனி (பெரு முதலாளிகளின்) சர்வீஸ் செண்டர்களில் தான் பார்க்க வேண்டும். மேலும் கம்பெனி உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கார்ப்பரேட் கம்பெனியில்லாத மற்ற சிறு, குறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களை பயன்படுத்து வோருக்கும் விற்பனை செய்வோருக்கும் அபரா தமும், சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.

மேற்கூறிய சட்டப் பிரிவால் உதிரி பாகங்களை தயாரிக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்படும்; சிறிய அளவிலான உதிரி பாகக் கடைகள், சர்வீஸ் செண்டர்கள், மெக்கானிக் ஷாப்புகள் சட்டவிரோதமாக்கப்படும். இவையனைத்தையும் விழுங்கி பெரும் பகாசுர கம்பெனிகள் கொழுக்க மோடி ஆட்சி சதிதிட்டம் தீட்டி சட்டம் இயற்றியுள்ளது. இதனால் பல கோடிக் கணக்கான தொழிலாளர்கள், சிறிய வணிகர்கள், தொழில் முனைவோர், பழுது பார்ப்போர் வீதியில் தூக்கியெறியப்படுவார்கள்.

மேலும் இம்மசோதாவால் கொஞ்ச, நஞ்சம் இருக்கும் தேசங்களின் (மாநிலங்களின்) உரிமையும் பறிபோகும் நிலை ஏற்படும். இம்மசோதா தீவிர மக்கள் விரோத நடவடிக்கையால் கடந்த ஏப்ரல் 30ல் மாபெரும் மக்கள் போராட்டம் எழுந்தது.

மோடி எப்படிப்பட்ட தீவிர முதலாளித்துவ விசுவாசி என்பது மேலே கூறப்பட்ட திட்டங்களே வெளிப்படுத்தினாலும் குஜராத் முதலாளி அதானிக்கு மோடி செய்துள்ள வேலையானது மோடி மக்களுக்கானவர் அல்ல; முதலாளிகளின் ஏஜென்ட் என்பதை பட்டவர்த்தனமாக்கும்.

ஆஸ்திரேலியாவில் ஜி&20 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மோடி அங்கே குவின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கி தருவதற்கும், அங்கே வெட்டி எடுக்கப் படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்காக ரயில் வழித்தடம் மற்றும் துறைமுக வசதி களை அந்த மாநில அரசை கொண்டே ஏற்பாடு செய்து தருவதற்கும் அவரது பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக மேற்கொண்டார்.

அச்சுரங்கத்தை வாங்குவதற்காக “பாரத ஸ்டேட் வங்கி” அதானிக்கு 6200 கோடி ரூபாயை கடனாக கொடுப்பதாக அறிவித்தது. இத்தனை பெரிய தொகையை அதுவும் வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்காக வேறு எந்த முதலாளிக்கும் எந்த இந்திய வங்கியும் கொடுத்ததில்லை.

ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, டாயிற் வங்கி, எச்.எஸ்.பி.சி. வங்கி உள்ளிட்ட எந்த பன்னாட்டு வங்கியும் அதானிக்கு கடன் தர மறுத்த நிலையில்தான் பாரத ஸ்டேட் வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக அறிவித்தது. அதாவது அதானிக்கு கடன் கொடுக்குமாறு மோடியால் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறது. அதானி நிறுவனத்தின் தற்போதைய மொத்தக் கடன் 31,122 கோடி ரூபாய். அதானி இந்தக் கடனை அடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்த கடனுக்கு நிகரான சொத்து மதிப்பும் அதானிக்கு இல்லை.

கடன் ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டும் கூட விவரங்களை தர மறுக்கிறது ஸ்டேட் வங்கி. “வங்கிகள் கடன் கொடுப்பதையெல்லாம் பொதுமக்கள் விவாதத்துக்கா உட்படுத்த முடியும்?” என்று திமிராக கேட்டுள்ளார் நிதியமைச்சர் ஜேட்லி.

2002ல் குஜராத்தில் மோடி ஆட்சி துவங்கிய போது அதானி குழுமம் நடத்திய வணிகத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 3741 கோடி. 2014ல் 75,659. கோடி கிட்டத்தட்ட 20 மடங்கு வளர்ச்சி, மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது அதானி குஜராத்தை கொள்ளையடிக்க வழிவகை செய்த மோடி இன்று பிரதமராகி விட்டதால் இந்தியாவை, உலகத்தை கொள்ளையடிக்க வழிவகை செய்து தருகிறார். இதுதான் மோடியின் “குஜராத் மாடல்” வழியாகும்.

மோடி ஆட்சியின் புற நிலை உண்மை

மோடி ஆட்சி இதுவரை நிறைவேற்றியுள்ள திட்டங்கள் நம் முகத்தில் அறைந்தாற் போல் ஓர் உண்மையை நம்முன் வைக்கின்றது. மோடி ஆட்சி பெரு முதலாளிகளின் நலனுக்காக தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுத் துறையினர், சிறு, குறு தொழிற் சாலைகளை வைத்திருக்கும் தொழில் முனைவோர், வணிகர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், மீனவர்கள், மதச்சிறு பான்மையினர் மக்கள் என அனைவரின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பலிகொடுத்து கொண்டே இருக்கிறார் என்பதுதான்.

இக்கட்டுரை அச்சிட்டு வெளிவருவதற்குள் மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக இன்னும் பல புதிய, புதிய சட்டத் திருத்தங்களை அறிவித்திருக்கும். மோடி ஆட்சி ஒவ்வொரு நாளையும் ஏன் ஒவ்வொரு நிமிடத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே செயற்படுகிறது.

மோடி தன் ஆட்சி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு அடியாக இருக்கும் என்று கூறியது மறுக்க முடியாத உண்மை. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது மக்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் என்பதுதான். மோடி மட்டுமல்ல; இதுவரை ஆட்சி செய்த, ஆளுகின்ற மத்திய, மாநில கட்சிகள் அனைத்தும் யாரை மக்கள் என்று கூறுகிறார்கள் என்பதுதான்.

மோடி கூறும் மக்கள் “கார்ப்பரேட் முதலாளிகள்தான்.” மோடி ஆட்சி ஒரு அடி எடுத்து வைத்தால் கார்ப்பரேட் முதலாளிகள் 100-அடி பாய்ச்சலாக முன்னேறுவார்கள் என்பதுதான் மோடி ஆட்சி நமக்கு கூறும் புறவய உண்மையாகும்.

தனது முதலாளித்துவ விசுவாசத்திற்காக மோடி ஆட்சி மக்களை அடக்கி ஒடுக்கு வதற்காக தயங்காது என்பதுதான் இக்கட்டுரையில் கூறியுள்ள புள்ளி விவரங்கள் அனைத்தும் நமக்கு உணர்த்துகின்றன.

மோடி மட்டுமல்ல, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பதாக நாடகமாடும் காங்கிரசுக்கும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற... மாநில கட்சிகளுக்கும், திரிபுவாத சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) கட்சிகளுக்கும் “முதலாளிகள்தான் மக்கள்.” மற்றபடி உழைக்கும் மக்களை, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரை முதலாளிகளின் சுரண்டலுக்காக பலியாக்குவதே இவர்களின் கொள்கையாகும்.

1947 ஆகஸ்டு&15 பிரிட்டிஷாரிடமிருந்த அரசியல் அதிகாரம் இந்தியப் பிராந்திய பெரு முதலாளிகளின் கைகளுக்கே மாறியது. முதலாளிகளுக்கான சுதந்திரத்தை, அரசியல் அதிகாரத்தைதான், மக்களுக்கான சுதந்திரம், அரசியல் அதிகாரம் என்று நம் காதில் பூச்சுற்றுகின்றனர். நடப்பது முதலாளிகளின் ஆட்சி, முதலாளிகளின் எடுபிடிகள்தான் பா.ஜ.க, காங்கிரசு, தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க... கட்சிகள்.

கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைக்கும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கையை கொண்டு வந்ததே காங்கிரசு கட்சிதான். அத்தகைய காங்கிரசு கட்சியின் “இளவரசர் ராகுல்,” மோடி ஆட்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஆட்சி, மக்களுக்கான ஆட்சி அல்ல என்று கபட நாடகம் ஆடுகிறார்.

உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கை மக்களை முன்னேற்றுவதற்கான கொள்கை யல்ல. 90% மக்களை ஓட்டாண்டியாக்கி, அடிமையாக்கி, அகதிகளாக்கி ஏன் பிணமாக்கி பெருமுதலாளிகளை கொழுக்கச் செய்யும் கொள்கையாகும்.

இந்துத்துவா பாசிசம்

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கைக்கு எதிராக ஓரணியில் திரளவேண்டிய தருணமிது. உழைக்கும் மக்கள் அனைவரும் “ஓரணியில் திரள்வதை தடுக்கவும்” அவ்வப்போது கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல் நலனுக்காக கொண்டுவரப்படும் ஒவ்வொரு சட்டத்தின் போதும், அச்சட்டத்திற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை “திசை திருப்பவும்” “இந்துத்துவா பாசிசம்” கட்டியமைக்கப் படுகிறது.

 கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக் கான முக்கியச் சட்டங்கள் கொண்டு வரும் போதெல்லாம், இந்துத்துவா சக்தி களால் இந்துத்துவா கருத்துகள் முன்வைக்கப் பட்டு கார்ப்பரேட் நலன்காக்கும் சட்டத் திருத்தத்திற்கு எதிரான கருத்துக்கள் மக்கள் போராட்டங்கள் முன்னுக்கு வருவதை தடுக்கும் விதமாக மிக திட்டமிட்ட வகையில் திசைதிருப்பப்படுகின்றது.

முதலாளிகளின் சுரண்டலுக்கு அடிப்படையாக உள்ள உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டு விடாமல் தடுக்கத்தான் “கீதையை தேசிய நூலாக்குவது”, “மாட்டுக்கறி உண்ணத்தடை”, “அரசு அலுவலகங்களில் மாட்டுக் கோமியத்தை கிருமி நாசினியாக தெளிக்கச் சொல்வது”, “தாலி குறித்த விவாதத்தில் வன்முறையைக் கையாண்டது”, “பெரியாரின் பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பிற்கெதிராக... என்று இந்துத்துவா நச்சுக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப் படுகின்றன. உழைக்கும் மக்கள் அனைவரும் இந்துத்துவ பாசிசத்திற்கு பலியாகாமல் அதை முறியடிக்க வேண்டும்.

வளரும் இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்து தமிழ்த் தேசத்தை விடுவிப்போம்! விருப்பப்பூர்வ சுதந்திர தேசங்களின் கூட்டரசை படைப்போம்!  

இந்தியப் பெருமுதலாளிகள் கையில் அரசியல் அதிகாரம் இருக்கும் வரை ஆட்சிகள் மாறிப் பயனில்லை என்பதை உணர்ந்து இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஒவ்வொரு தேசமும் இந்தியப் பெரு முதலாளிகளின் சுரண்டலி லிருந்து அரசியல் அதிகாரத்திலிருந்து முழுமையாக விடுபட வளரும் இந்திய  ஏகாதிபத்தியத்திடமிருந்து, இந்திய ஒன்றியச் சிறையிலிருந்து தன்னை விடுவித்து சுதந்திர தேசக் குடியரசை அமைத்துக் கொள்வதோடு, அதாவது தொழிலாளி வர்க்கத் தலைமையில் உழவர்கள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள், பெண்கள், தலித்துகள், மீனவர்கள், மதச் சிறுபான்மையின மக்கள், பழங்குடிகளின் குடியரசை நிறுவிக் கொள்வதோடு, விருப்பப் பூர்வ சுதந்திர தேசங்களின் கூட்டரசை அமைத்து கொள்வதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை ஒழிப்பதற்கான ஒரே வழியாகும்!

அத்தகைய வழியில் தமிழ்த் தேச மக்களும் இந்திய வளரும் ஏகாதிபத்தியத்திடமிருந்து, இந்திய ஒன்றிய சிறையிலிருந்து தமிழ்த் தேசத்தை விடுவித்து “சுதந்திர தமிழ்த் தேசிய குடியரசை” அமைத்துக் கொள்வதோடு, தொழிலாளி வர்க்கத் தலைமையில் அக்குடி யரசை நிறுவி, விருப்பப்பூர்வ சுதந்திர தேசங் களின் கூட்டரசை படைப்பதே லட்சியமாகக் கொள்ளவேண்டும்.

Pin It