கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்களை இழிவு படுத்துவதற்கும்,போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மத்திய அரசு எந்த எல்லைக்கும் செல்லும்போல் தெரிகிறது.

அணு உலை எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு வரும் குமார், கூடங்குளம் பஞ்சாயத்தின் 14 வது வார்டு உறுப்பினராக உள்ளார். அவரது மனைவி அம்பிகாவின் வங்கிக் கணக்கிற்கு லண்டனில் இருந்து சில நாட்களுக்கு முன் 30 லட்சம் ரூபாய் வந்துள்ளது. குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், நிலம் வாங்குவதற்காக அவரது நண்பர் ஆனந்த் என்பவர் அனுப்பிய பணம் அது. எனினும், வங்கி அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், உள்துறை அமைச்சக அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையத்தினர் என பலரும் வரிசைகட்டி நின்று விசாரணையில் இறங்கியுள்ளனர். பணத்தை அம்பிகா எடுக்க முடியாத அளவுக்கு முடக்கியும் வைத்து விட்டனர். அரசின் இந்த நடவடிக்கையை குமாரும், உதயகுமாரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கூடங்குளம் போராட்டத்திற்கு அங்கிருந்து பணம் வருகிறது; இங்கிருந்து பணம் வருகிறது; அந்த நாட்டின் கைக்கூலி; இந்த நாட்டின் அடிவருடி என்றெல்லாம் என்னென்னவோ சொல்லிப் பார்த்த பின்னரும், எத்தனை அவதூறுகளை அள்ளி வீசிய பிறகும், இடிந்தகரையின் வீச்சில் எந்த மாற்றமும் இல்லை. மக்களின் அறப்போர் ஆண்டுக்கணக்கில் நீடிப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும்  காங்கிரஸ் அரசு, இத்தகைய மலிவான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

தென்மாவட்ட மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிக அளவில் அயல்நாடுகளுக்குச் சென்றே பொருளீட்டி வருகின்றனர். அவர்கள் பாடுபட்டுச் சேர்த்த பொருளாதாரத்தை சொந்த ஊரில் முதலீடு செய்து, இந்தியாவுக்கு அந்நிய செலாவணியின் மூலம் பெரும் நன்மை புரிகின்றனர். அப்படி நாட்டுக்கு நன்மை செய்பவர்களைத்தான் இப்படி இழிவு படுத்துகிறது இந்திய அரசு.

நாட்டுக்கு நன்மை செய்யும் அப்பாவிகளை சோதிப்பதில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ் அரசு, நாட்டில் வகுப்பு வெறியை விதைப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டும் கண்டு கொள்வதே இல்லை.

இந்தியாவில் செயல்படும் அமைப்புகளில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறுபவை இந்துத்துவ அமைப்புகள்தான் என்று, பல புள்ளிவிபரச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. 1973 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் மட்டும்அமெரிக்காவில் செயல்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் 5300 கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு அனுப்பியதாக அமிர்தா பாசு என்கிற அமெரிக்க ஆய்வாளர் அம்பலப்படுத்தி உள்ளார். இந்தக் காலகட்டத்தில்தான் ராமர் கோவிலை முன்னிறுத்தி இந்தியாவில் விஹெச்பி கோரத்தாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

விஹெச்பி மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு வரும் பணம் குறித்து இந்தியாவில் சரியான தணிக்கை நடைபெறுவதில்லை. தணிக்கைத் துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் பார்ப்பனர்களாக இருப்பதும், அமெரிக்காவில் செட்டிலானவர்கள் ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்து விட்டுச் சென்ற பார்ப்பனக் குஞ்சுகள் என்பதும் தான், இந்துத்துவ சக்திகளின் கட்டற்ற பொருளாதார பலத்திற்கு காரணமாகும்.

கூடங்குளம் போராட்டத்தைக் காரணம் காட்டி, ஏராளமான கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை செய்தும், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்தும் நெருக்கடி கொடுத்துவரும் மத்திய அரசு, முடிந்தால் ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலகத்தை சோதனை செய்து பார்க்கட்டும்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் என்று பகிரங்கமாக கருத்துச் சொல்லிவிட்டு, பின்னர் அவாள்கள் எதிர்த்தார்கள் என்பதற்காக பம்மிப் பதுங்கிய காங்கிரசுக்கு அத்தகைய துணிவு நிச்சயம் இருக்காது. எளிய மக்களிடம் வீரம் காட்டுவதுதானே காங்கிரசின் வரலாறு.

Pin It