தயிரையும் தின்னுட்டு இழுகிட்டும் போகுமோ?

2009, மே 18-வரை இலங்கை நடத்திய சாட்சியமற்ற படுகொலைகள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை“ என்ற கதையாக ஒவ்வொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்“ எனும் தந்திரவலை விரித்து இராசபக்ஷேக்கள் கட்டு மீறி நடத்திய கொலை வியாபாரம், 2009 மே முடிய  அமோக விற்பனையானது. இப்போது விற்பனை அவர்களின் கை மீறிப்போய், மனித உரிமைமீறல், போர்க்குற்றம் என்ற புள்ளிகளையும் தாண்டி இனப்படுகொலை என்ற எல்லையைத் தொட்டுள்ளது.

இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, “பங்கருக்குள்” வைக்கப்பட்ட பாலசந்திரன், இரண்டு மணி நேரத்தின் பின் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் என்பது மட்டுமல்ல, பாலகனுக்கு வயது 12. ஒரு பாலகன் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான பாலசந்திரன்கள் யுத்தம் என்ற பெயரில் உயிர்நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது, புகைப்படம் தந்து கொண்டிருக்கும் “சொல்லாதசேதி.“

செஞ்சிலுவைச் சங்கமும் பணியாற்ற முடியாதபடி வெளியேற்றப்பட்ட முதல் யுத்தகளம், இலங்கையின் கொலைக்களமாகவே இருக்கும். ஐ.நா. பணியாளர்களை வெளியேற்றியது போலவே, செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களையும் 2008-ல் வெளியேற்றியது இலங்கை ராணுவம். செஞ்சிலுவைச் சங்கம் உருவானதின் பிரதான நோக்கம் யுத்தகளத்தில் தொண்டாற்றுவது. அவர்களின் சேவைக்கு இடையூறு நேராதபடி இருதரப்பினரும் அனைத்துப் பாதுகாப்புகளையும் அளிக்க கடமைப்பட்டவர்கள். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சேவை அமைப்பையும் வெளியேற்றிய பின், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (No war zone) என அறிவிக்கப்பட்ட வளையங்களுக்குள் பொதுமக்கள் நுழைந்ததும், கொலையாடல் செய்ய இராணுவத்துக்கு எளிதாயிற்று. வெளியேற்றப்பட்ட செஞ்சிலுவைச் சங்கம், தலைமையிடமான கொழும்பிலிருந்து 2010-ல் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். “ எமக்கு வந்த முறைப்பாடுகளில், இதுவரை காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 15,780. இதில் 1494 பேர் சிறுவர்கள். இது தொடர்பில் அரசிடமும் இராணுவத்திடமும் பலதடவை முறையீடு செய்தும் எங்களுக்கு உரிய பதில் எதுவும் இல்லை“.

அந்தப் பாலகனின் கொலைப்படம் இரு உண்மைகளை கவனப்படுத்துகிறது; ஒன்று கொலைவெறிக்குப் பலியானவா்கள் பாலகர்களையும் உள்ளடக்கிய பெண்கள், கைக்குழந்தைகள், கர்ப்பத்தில் அசைந்த உயிர்கள், முதியோர்கள், ஆண்கள் என்பது; இரண்டாவது “விடுதலைப் புலிகளின் தலைவர்களது குடும்பத்தினர் எமது பாதுகாப்பில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறோம்“ என 2012-ல் ஹெகலிய ரெம்புக்வெல என்ற இலங்கை அமைச்சர் சொன்னது அப்பட்டமான பொய் என்பது.

மானுடப் படுகொலையாளர்கள் முதலில் உண்மைகளைப் படுகொலை செய்வார்கள். முன்னும்பின்னும் இந்தப் பணிகளை வெற்றிகரமாகச் செய்து கொள்பவர்களால் மட்டுமே கொலைகளை மூடி மறைக்க முடியும். பாலசந்திரன் கொலைப் படம், பொய்யை மூட்டை கட்டி விற்பனை செய்வது உலகின் முன் ஒப்பேறாது என்று காட்டிக் கொடுத்துவிட்டது.

சேனல்-4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மெக்ரே “பாதுகாப்பு வளையங்கள் தாம், இலங்கை ராணுவத்தின் கொலைக்களங்களாக ஆக்கப்பட்டன “ என்ற உண்மையை பகிரங்கப்படுத்தியுள்ளார். “இலங்கையின் கொலைக்களங்கள்” (Killing Filds of Sri Lanka) என்று பெயரிட்ட தனது ஆவணப்படத்தின் அடுத்த பகுதிக்கு “பாதுகாக்கப்பட்ட பகுதிகள் – இலங்கையின் கொலைக்களம்“ (No war zones-killing Fields of Sri Lanka) எனப் பெயர் தந்துள்ளார். பாதுகாப்பு வளையம் என்று இராணுவம் அறிவித்த பகுதிகளில் நுழைந்த மக்கள் ரத்தச் சேற்றில் மூழ்கடிக்கப்பட்டார்கள் என்ற உண்மை ரத்தத்துடிப்புள்ள எந்த இதயத்தையும் நிறுத்திவிடப் போதுமானது.

கெலம் மெக்ரே, ஆவணப் படத்தை மார்ச் மாதம் ஐ.நா.வின் மனித உரிமை அவையில் வெளியிடத் தயாரித்திருப்பதாகச் சொன்னார். “மனித உரிமை உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் தருவது மட்டுமல்ல; எங்களது கவனமெல்லாம் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது குறித்துத்தான். அதற்காகத் தான் இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளோம்“ என்கிறார்.

ஆனால் இலங்கையில் தமிழினப் பிரச்சினைகள் என்று வருகிறபோதெல்லாம், இந்தியா நடந்துகொண்ட முறைகள் தவறான முன்னுதாரணங்களாய் வரலாற்றில் நிற்கின்றன.

சிங்களரின் தந்தை என அழைக்கப்பட்ட டி.எஸ். சேனநாயகா 1948-ல் இலங்கையின் முதல் பிரதமரானதும் நிறைவேற்றிய முதல் சட்டம்-இந்திய வம்சாவளித் தமிழர்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கியது; தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு, ஆறு தலைமுறைகளாய் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களை உழைப்பால், வியர்வையால், உயிரால் வளமாக்கியவர்கள் அவர்கள். இலங்கையின் பொருளாதாரம் 75 விழுக்காடு தேயிலையால் உருவானது. நாடற்றவர்களாய் அவர்களை ஆக்கிய போது, இந்தியா எதுவும் செய்யவில்லை. அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை. வேடிக்கை பார்த்தது. மலையகத் தமிழர், ஈழப்பிரதேச  பூர்வீகத் தமிழரின் இணைந்த போராட்டத்தால், நாடற்றவராக்கும் சட்டம் திரும்ப பெறப்பட்டது.

அடுத்து நிகழ்ந்தது 1964-ல் மலையகத் தமிழர்களை இலட்சக்கணக்கில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வெளியேற்றிய சாஸ்திரி-சிரிமாவோ ஒப்பந்தம்.  சம்பந்தப்பட்ட மலையகத்தமிழ் மக்களது கருத்து அறியாமல், மலையகத் தலைவர்களின் ஆலோசனையும் பெறாது இந்தியப் பிரதமரும், இலங்கைப் பிரதமரும் செய்து கொண்ட தன்னிச்சையான உடன்படிக்கை அது. மலையகத்திலிருந்து வலுவந்தமாக வெளியேற்றப் பட்டு இந்தியா கொண்டுவரப் பட்ட தமிழர்கள்  முகவரியும் கால்களுக்குக் கீழ் வேரும் இல்லாது இன்றும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

1983- ல் நடந்தேறின தமிழர்பகுதிகளில் படுகொலைகள்; ஐயாயிரம் தமிழ் மக்களை தார் ஊற்றி எரித்தும், டயர்போட்டுக் கொளுத்தியும், அடித்தும் கொல்லப்பட்ட இனப்படுகொலை நடந்தது.  ஐ.நா.வின் துணைக் குழுக் கூட்டத்தில் இந்த இனப்படுகொலையை இதயமுள்ள தலைவர்கள் பலர் கண்டித்துப் பேசினர். இனி வரலாற்றில் புறமொதுக்க வேண்டிய செயல் என உரையாற்றினர்;உலகமெலாம் அதிர்ந்தது; இந்தியா அதிரவில்லை. “இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா. அவசரப்படடு நடவடிக்கை எடுக்கக் கூடாது“ என ஐ.நா.வில் இந்தியப் பிரதிநிதி சையத் மசூத் பேசினார்.  உலக முக்கியத்துவமுள்ள பலபிரச்சனைகள் பற்றி அப்போது ஐ.நா. அவையில் உரை நிகழ்த்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1983 பற்றிப் பேசவேயில்லை.

2009, மே 28-ல் ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை மீதான மனித உரிமை மீறல், போர்க் குற்ற விவாதம் நடந்தபோது, இந்தியாவின் பிரதிநிதியான கேரளாவைச் சேர்ந்த அச்சங்கரை கோபிநாத் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடந்துள்ளது;பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியதற்காக இலங்கையைப் பாராட்ட வேண்டும்“ என்று பேசினார். மட்டுமல்ல, இலங்கைக்கு ஆதரவான தீா்மானத்தை கியூபாவை முன்மொழியச் செய்து, ருசியா போன்ற நாடுகளை பின்புலமாக இருந்து இயக்கி ஆதரவாக இந்தியா செயல்பட்டது.

2012-மார்ச்சில் மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன்மொழியப் பட்ட தீர்மானம் வந்தது. அடிப்பது போல் அடித்து அனைத்துக் கொள்ளும் அமெரிக்கத் தீர்மானம் அது. தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த சில காத்திரமான அம்சங்களை உருவி எடுத்து, இலங்கையின் ஒப்பதல் பெற்ற பின்பே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீர்த்துப் போகச் செய்தது இந்தியா. இப்படி இப்படியெல்லாம் நான் செய்தேனாக்கும் என்று இராசபக்ஷேக்கு கடிதம் எழுதி பெருமையடித்துக் கொண்டார் பிரதமர் மன்மோகன் சிங்.

இலங்கை போலவே பாகிஸ்தானும் அண்டை நாடு; இலங்கைக்கு நீளுகிற நேசக்கரம் பாகிஸ்தானுக்கு என்று வருகிறபோது சுருங்கிக் கொள்வது ஏன்? இலங்கை தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று இந்தியா எண்ணுகிறது.

ஆனால் பாகிஸ்தான் போலவே சிங்களர்களும் இந்தியாவைப் பகை நாடாகவே கருதுகிறார்கள். “இன்றில்லாவிடினும் நாளை இலங்கையின் தமிழா்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வார்கள்“ என்று சேனநாயகா பிரதமராக ஆவதற்கு முன் 1944-ல் கூறினார். இக்கருத்தில் சிங்களருக்கு எள்முனையளவும் இன்றும் மாறுபாடில்லை. பகைநாடான இந்தியாவைப் பயன்படுத்தி, தமிழர்களை இந்தியாவுடனான நேச உறவிலிருந்து பிரிப்பதும், தனிமைப்படுத்துவதும், அழித்தொழிப்பதும் என்ற பணிகளை இலங்கை குயுக்தியாய் நிறைவேற்றிக் கொள்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பு இலங்கை இல்லை; சிங்களவரும் அல்ல; ஈழத் தமிழ்மக்கள் தான். தாயகத் தமிழரின் தொப்புள்கொடி உறவுகளாக இருக்கிறார்கள் என்பதால் மட்டுமல்ல; புவியியல் ரீதியாகவும், இந்தியாவின் தென்பகுதியை நோக்கியுள்ள நீண்ட கடற்கரையும், கடல் பரப்பும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தினுடையவை. இந்தக் கடற்பகுதி வாழ் தமிழர்கள் தரஇயலாத பாதுகாப்பை தென்னிலங்கைச் சிங்களவரும், மறுதிசை நோக்கித் திரும்பியுள்ள கடற்பரப்பும் தந்து விடுமா?

இலங்கை பற்றிய இந்தியாவின் கடந்தகால, நிகழ்கால அணுகுமுறைகள் மாறுவதற்கான வாய்ப்பு மார்ச் 21-ல் வருகிறது. இனப்படுகொலைக் கொடூரர்களுக்கு எதிராக உலகம் அணிதிரளும் வாய்ப்பை ஐ.நா. மனித உரிமை அவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்தத் தருணத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளவேண்டும்; இலங்கையின் கொலையாடல்களுக்கு கைலாகு கொடுக்கும் அணுகுமுறையை உதறிவிட்டு நீதியின் பக்கம் இந்தியா நிற்கவேண்டுமென்பதற்காகவே இந்த ஆவணப்படத்தின் இரண்டாவது பகுதியைத் தயாரித்ததாக சனல் 4-ன் இயக்குநர் கெலம் மெக்ரே தெரிவிக்கிறார்.

உண்மையில் இலங்கையை கண்டித்து வழிப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருவதற்குப்பதில் இந்தியா கொண்டு வந்திருக்க வேண்டும். தென்னாசியப் பிராந்திய அரசியலைத் தீர்மானிக்கும் முன்னோடும் கிளியாய் அமெரிக்காவை அனுமதித்திருக்க கூடாது. அமெரிக்கா தற்போது கொண்டுவரப் போகும் தீர்மானம் கை நழுவியிருக்கும் இந்துப் பெருங்கடல் அரசியலைத் தனக்குக் கீழ் கொண்டுவரும் குயுக்தியான சூழ்ச்சியாகும். இதில் எதுவும் இருக்கப் போவதில்லை என்பது இப்போதே வெளிப்பட்டுவிட்ட்து. எங்களது முந்திய தேன்தடவிய அறிவுரையை நீ ஏன் செயல்படுத்தவில்லையென்ற கேள்வி மட்டுமே வரவுள்ள தீர்மானத்தில் இருக்கிறது..

இந்துப்பெருங்கடல் புவியியல் அரசியல் கைவசப்பட இந்தியா  எண்ணினால், அதற்கு வடக்கு கிழக்குப் பிரதேச தமிழ்நிலமே பின்தளமாக அமையும். டெல்லிக்கும் இலங்கைக்கும் பாலம் அமைப்பதா, அமெரிக்கா அழைக்கும் திசை நோக்கிச் செல்வதா என குழம்புவதற்குப் பதில் தனக்கெனத் திசையுண்டு, வழியுண்டு என தீர்மானிக்கும் வாய்ப்பை இந்தியா இனி நழுவவிடல் வேண்டாம். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரும் தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிதல் வேண்டும். செய்யும் என்ற எதிர்பார்ப்பு தவிற வேறென்ன மனித உரிமை ஆர்வலா்களுக்கு இருக்கமுடியும்!

ஆனால் கடந்த ஆண்டு ஐ.நா.மனித உரிமை அவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப் பட்ட எதையும் இலங்கை காரியசித்தியாக்கவில்லை. எந்த ஒரு விசாரணையும் இலங்கையின் ஒப்புதலோடுதான் நடத்தப் பெறவெண்டும் என இந்தியா செய்த திருத்தத்தால் இலங்கை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள எமக்கு விருப்பமில்லை என திமிரோடு நிரகரித்துள்ளது எனலாம். எதையும் நடைமுறைப் படுத்தவில்லை என்பதை உலக நாடுகள் பல ஆதாரங்களுடன் கேள்வியெழுப்பி உள்ளன.கேள்வியே எழுப்பாத ஒரு நாடு என்றால் அது இந்தியா. “அது பகை நாடு அல்ல; நமது நட்பு நாடு” என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் பேசுகிறார்.

”நடந்து முடிந்துள்ள அனைத்துக்குமே பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அந்நாட்டுக்குத்தான் உள்ளது.வெளியில் இருந்து எதைச் செய்வதும் சரியாக இருக்காது.அதன் இறையாண்மையில் நாம் தலையிடக் கூடாது” நாடாளுமன்றத்தின் நடுவிலிருந்து நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்கிறார்.

இறையாண்மை என்பதின் பொருள் என்ன? லட்சக்கணக்கில் தமிழ்மக்களைப்  பலியிட்ட்தும்,90 ஆயிரம் விதவைகளை உருவாகியதும் இந்த இறையாண்மை தான். சரணடைந்த மாவீர்ர்களை கொலை செய்ததும் இந்த இறையாண்மை தானே! தமிழ்ப் பெண்களை மானபங்கப் படுத்தி வலுவந்தமாய் பாலியல்வன்முறை செய்வதும் சல்மான் குர்ஷீத் என்ற இந்தியனின் பார்வையில் இறையாண்மை அல்லவா!

இந்தியா எங்கே போகிறது என்பது கேள்வி; மானுட நீதிகாக்க மனித உரிமை அவை நோக்கிக் செல்கிறது என்பது பதிலாக அமையட்டும்.

“மற்றெல்லாவற்றையும் விட, இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறோம்“ என்று 2009, மே 29-ல் சொன்னதை இராஜபக்ஷே மீண்டும் சொல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்களா?  மனித உரிமை ஆர்வலர்கள் நீதிக்கு குரல்கொடுப்போர், நொந்து நொம்பலமான தமிழர் என அனைவரையும் ஏமாற்றுதலுக்கு ஆளாக்க வேண்டாம் ;

“சமத்தன் தயிரைத் தின்னுதும் இல்லாம,

இருக்கிறவன் வாயில் இழுகிட்டுப் போனானாம்“

என்ற கதைக்கு இந்தியா உதாரணமாகிவிடக் கூடாது. உதாரணமாகி விடுவது போலத்தான் முன்கதைச் சுருக்கம்  நடக்கிறது.

அப்படி ஒன்று  நடக்குமாயின், தமிழகத்தை இந்தியாவால் காப்பற்ற முடியாது.

Pin It