இராமர் பாலத்தை இடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய அரசை மீண்டும் பா.ஜ.க. எச்சரித்துள்ளது. பச்சோரி குழு அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டு திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மற்றொரு குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது. இது

குறித்து புதிய மனு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே தான் பா.ஜ.க. தனது ரௌடிச பாணியிலான மிரட்டலை வெளிப்படுத்தியுள்ளது. இந்துக்களின் உணர்வு புண்படும் என்று தனது பழைய காலாவதியாகிப்போன கருத்தை வாந்தி எடுத்திருக்கின்றது.

பார்ப்பன ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும் ராமர் பாலம் இல்லாமல் ராமாயணம் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது; இந்துக்களின் உணர்வு புண்படும் என்று இதே கருத்தையே உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

மார்ச் 9, 2001 அன்று சேது சமுத்திரத்திட்டம் குறித்து ஆய்வுக்கு உத்தரவிட்டவர் அப்போதைய அமைச்சர் அருண் ஜெட்லி ஆவார். அதன்பின் உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பா.ஜ.க அமைச்சர்கள் தற்போதைய கால்வாய்ப் பாதைக்கு ஒப்புதல்

அளித்துள்ளனர். கடலுக்கடியில் பாலம் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்காக சுரங்கத்துறை அமைச்சர் உமாபாரதி நியமித்த ஆய்வுக் குழுவும் அழுத்தம் திருத்தமாக அறிக்கை கொடுத்துவிட்டது. செப் 29, 2003 அன்று நாடாளுமன்ற மேலவையில் "ஆதாம் பாலத்துக்கு குறுக்கே தான் சேதுக்கால்வாய் தோண்ட இருக்கிறோம்" என்று அப்போதைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சத்ருகன் சின்ஹா அறிவித்திருக்கிறார்.

2001-இல் தொடங்கி பாரதிய ஜனதா நடத்திய ஆய்வின் போதும் அவர்களின் கண்ணில் பாலம் தட்டுப்படவில்லை. ஜெயலலிதா தனது 2004 தேர்தல் அறிக்கையில் “இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல் செல்லவேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்லவேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவது தான் சேது சமுத்திரத்திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம். இதனால் ராமநாதபுரம் போன்ற மிகமிகப் பிற்பட்ட தமிழகத் தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்; வேலைவாய்ப்பு பெருகும். தூத்துக்குடித் துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு இரண்டு கட்சிகளும் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவாக இருந்துவிட்டு இப்போது ராமர் பாலம் என்றெல்லாம் கூறுவது ஓட்டு பொறுக்குவதற்காக அன்றி வேறெதற்காக?

வெளிக்கியிருக்கப் போனவனுக்கு விளாம்பழம் கிடைத்த கதையாக பாரதிய ஜனதாவுக்கு அகப்பட்டிருக்கிறது இராமர் சேது பிரச்சினை. எந்திரத்தில் மடக்கி மடக்கி நசுக்கப்பட்ட கரும்புபோல ‘அயோத்தி இராமன்’ சக்கையாகி பொடியும் ஆகி உதிர்ந்து விட்டான். இனி அயோத்தி இராமனைக் காட்டி அந்தக் கோயில் பூசாரியிடமே கூட ஓட்டு வாங்க முடியாத நிலை. மேலும் அரசு அதிகாரத்தை இழந்த நிலையில் பதவிப் போட்டியால் பாரதிய ஜனதாக் கட்சி இன்று கந்தலாகிக் கிடக்கின்றது. எதைச் செய்தாவது எதைப் பேசியாவது வரும் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்றது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம், சட்டமன்றத்தில் நிர்வாணப் படம் பார்த்த அமைச்சர்கள், அதிகாரத்தரகு பேரங்கள், சவப்பெட்டி ஊழல், ரெட்டி சகோதரர்களின் சுரங்க முறைகேடுகள் என ஆளும் வர்க்கமே முகம் சுளிக்குமளவுக்கு மொத்த கட்சியுமே அழுகி நாறுகிறது.

தங்களது சீழ்வடியும் புண்களை மறைப்பதற்கு இராமனை விட வேறுயாரும் இவர்களுக்கு அதிகம் பயன்பட்டதில்லை.

பெரியாரின் பெயரால் ஆட்சி நடத்தும் ஜெயா அரசு, பெரியார் பிறந்த மண்ணில் இது போன்ற மதவெறிக் கருத்துகள் பரவுவதைத் தடுக்காமல் பா.ஜ.கவுடன் சேர்ந்து பக்கமேளம் வாசிப்பது பெரியாருக்கும் அவரது கொள்கைகளுக்கும் செய்யும் துரோகம் ஆகும்.

"ஆதாம் பாலம் என்பது இயற்கையான மணற்திட்டு; அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல" என்று கூறிய இந்திய தொல்லியல் துறை "இராமாயணமும் அதன் பாத்திரங்களும் புனைகதைகளே" என்று கூறியிருக்கின்றது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். பொய்யர்கள் இராமர் பாலம் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்று புளுகுகிறார்கள்.

"இராமர் பாலத்தில் தோரியம் கொட்டிக் கிடக்கின்றது; அதனால் தான் கால்வாய் வேண்டாம் என்று கூறுகிறோம்" என்று இல.கணேசன் கரடி விடுகிறார்.

இது போன்ற வதந்திகளை பரப்புவதற்கு இவர்கள் நாஸாவை கூட விட்டுவைக்கவில்லை. அமெரிக்க விண்வெளி ஆய்வு விண்கலம் எடுத்த பாக்நீரிணையின் படம் ஒன்றை வைஷ்ணவா நெட்வொர்க் என்ற இணையம் 2002 இல் வெளியிட்டு, அங்கு தொன்மையான பாலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் அது மனிதரால் கட்டப்பட்டது போன்றே இருப்பதாகவும் கூறியது.

நாஸாவின் விண்கோளால் எடுக்கப்பட்ட படங்கள் பற்றிய சர்ச்சையையடுத்து அந்நிறுவனத்தின் சார்பில் பேசிய மைக்கேல் பராகா இணையத்தில் வெளியிடப்பட்ட மன்னார் வளைகுடாவின் படம் தம் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட படம் என்றாலும், பரப்பப்படும் விளக்கங்கள் தம் நிறுவனத்துடையவை அல்ல என்று கூறி வதந்திகளை மறுத்தார். மார்க்ரூல் என்ற மற்றொரு நாஸா அதிகாரி மேற்கூறிய இணையதளங்கள் சுட்டிக் காட்டும் பகுதி இயற்கையாக அமைந்த மணற்திட்டுகள் என்று விளக்கினார்.

ஆனால் இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் பா.ஜ.க. என்ற கட்சியே இல்லாமல் அழிந்துவிடும். அவர்கள் அரசியல் செய்வதற்கு பிள்ளையாரையோ, அனுமானையோ தேடிப்போக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதைத் தவிர்ப்பதற்காகவே அத்வானி ஆத்திரத்துடன் சொன்னார்

"இராமன் வாழ்ந்ததை மறுக்கும் ஓர் அரசுக்கு ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை" என்று. இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு பரதேசி வேதாந்தி “தேவதுமூணம் செய்பவனின் நாக்கை அறு; தலையை வெட்டு என்று பகவத் கீதை ஆணையிடுகிறது" என்கிறான்.

இத்தகைய புரட்டுகளை எல்லாம் நாம் தொடர்ந்து அனுமதித்தால், இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தொடர்புபடுத்தி பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் எல்லா கட்டுக்கதைகளையும் வரலாற்று உண்மைகளாக அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

பார்ப்பன பாசிஸ்டுகள் இராமாயணத்தை இதிகாசமாகவும், அதே நேரத்தில் வரலாறாகவும் காட்ட முயற்சிக்கிறார்கள். இராமனை ஒரே நேரத்தில் கடவுளாகவும், வரலாற்று நாயகனாகவும் காட்ட முயற்சிக்கிறார்கள். இதை முறியடிக்க முற்போக்குவாதிகள் ஓரணியில் திரளவேண்டும்.

பார்ப்பன பயங்கரவாதத்திற்கெதிரான கருத்துநிலையை தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை இந்து மத வெறியர்களுக்கு உணர்த்த வேண்டும்.

- செ.கார்கி

Pin It